உடன்படிக்கை -ஏற்பாடு எனில் தொடைச்ந்தில் கைவைத்து சத்தியம்
ஆதியாகமம்24:1-10
ஈசாக்கு - ரெபேக்கா திருமணம்
1 ஆபிரகாம் வயது மிகுந்தவராய் முதுமை அடைந்தார். ஆண்டவர் அவருக்கு அனைத்திலும் ஆசி வழங்கியிருந்தார். 2 ஒருநாள் அவர் தம் வீட்டின் வேலைக்காரர்களில் மூத்தவரும், தமக்குரிய அனைத்திற்கும் அதிகாரியுமானவரை நோக்கி, ″உன் கையை என் தொடையின் கீழ் வைத்து, 3 விண்ணுலகிற்கும் மண்ணுலகிற்கும் கடவுளாகிய ஆண்டவர் மேல் ஆணையிட்டுச் சொல்: நான் வாழ்ந்துவரும் இக் கானான் நாட்டுப் பெண்களிடையே என் மகனுக்குப் பெண் கொள்ளமாட்டாய் என்றும் 4 சொந்த நாட்டிற்குப் போய், என் உறவினரிடம் என் மகன் ஈசாக்கிற்குப் பெண்கொள்வாய் என்றும் சொல்″ என்றார். 5 அதற்கு அவர், ″ஒரு வேளை பெண் என்னோடு இந்நாட்டிற்கு வர மறுத்து விட்டால் தாங்கள் விட்டுவந்த அந்நாட்டிற்குத் தங்கள் மகனைக் கூட்டிக் கொண்டு போகலாமா?″ என்று கேட்டார். 6 அதற்கு ஆபிரகாம், ″அங்கே என் மகனை ஒருக்காலும் கூட்டிக்கொண்டு போகாதே. கவனமாயிரு. 7 தந்தை வீட்டினின்றும் நான் பிறந்த நாட்டினின்றும் என்னை அழைத்து வந்து என்னோடு பேசி, 'இந்த நாட்டை உன் வழிமரபினருக்குத் தருவேன்' என்று ஆணையிட்டுக் கூறிய அந்த விண்ணுலகின் கடவுளாகிய ஆண்டவரே உனக்கு முன் தம் தூதரை அனுப்பி வைப்பார். நீ போய், அங்கே என் மகனுக்குப் பெண்கொள். 8 உன்னோடு வர அப்பெண் விரும்பாவிடில் எனக்கு நீ அளித்த வாக்குறுதியினின்று விடுதலை பெறுவாய். என் மகனை மட்டும் அங்கே கூட்டிக் கொண்டு போகாதே″ என்றார். 9 அவ்வாறே அவ்வேலைக்காரரும் தம் தலைவர் ஆபிரகாமின் தொடையின் கீழ் கையை வைத்து அக்காரியத்தைக் குறித்து வாக்குறுதியளித்தார். 10 பின் தம் தலைவரின் ஒட்டகங்களிலிருந்து பத்து ஒட்டகங்களை அவிழ்த்துக் கொண்டு, அவருக்குரிய எல்லாவற்றிலும் சிறந்தவற்றைத் தம் கையோடு எடுத்துக்கொண்டு மெசபொத்தாமியாவிலிருந்த நாகோர் நகர் நோக்கிப் புறப்பட்டுச் சென்றார்.