ர்ஜிக்கும் சிங்கம் போல் உலவிவருகின்ற பிசாசு கிறிஸ்தவத்தை மாசுபடுத்தி, இயேசுவின் பெயருக்கு களங்கத்தை உண்டாக்க எந்த நடவடிக்கையையும் எடுக்கத் தயங்க மாட்டான் என்பதை இவர்களுடைய செயல்கள் உணர்த்துகின்றன. ராஜீவ் மல்கோத்திரா, அரவிந்தன் நீலகண்டன் போன்றவர்களை கிறிஸ்தவத்தின் பெயரில் இந்த மனிதர்கள் செய்து வருவது கொதிப்படையச் செய்வதில் ஆச்சரியமில்லை. அந்தக் கொதிப்பின் விளைவாகவே இந்த நூலை அவர்கள் எழுதியிருக்கிறார்கள் என்பதும் எனக்குப் புரிகின்றது.
கத்தோலிக்க மதத்துக்கும் கிறிஸ்தவத்திற்கும் எந்தத் தொடர்பும் இல்லை. இந்தியாவில் கத்தோலிக்கர்கள் தங்களைக் கிறிஸ்தவர்களாக அழைத்துக்கொள்கிறார்கள். ஆனால் அது முழுத் தவறு. கிறிஸ்தவ வேதத்தை அவர்கள் நம்பிப் பின்பற்றுவதில்லை.
தாராளவாத கோட்பாடுகளைப் பின்பற்றும் World Council of Churches, அரசரடி இறையியல் கல்லூரி, லூதரன் குருக்குல் அமைப்பு போன்றவை கிறிஸ்தவ வேதத்தின் அதிகாரத்தை எப்போதோ நிராகரித்து லிபரலிசம், ஹியூமனிசம், புளூரலிசம் போன்ற கோட்பாடுகளை நம்ப ஆரம்பித்து அவற்றின் வழியில் போய்க்கொண்டிருப்பதால் அத்தகைய அமைப்புகளையும் மெய்க்கிறிஸ்தவ அமைப்புகளாகக் கருத முடியாது. இயற்கையைத் தாயாக வணங்கி மரத்தையும், செடியையும் கட்டி அழுதுகொண்டிருப்பது மெய்க்கிறிஸ்தவமல்ல. அத்தோடு ‘தலித் கிறிஸ்தவம்’ என்று பிரித்து அவர்களுக்கென ஒரு கிறிஸ்தவத்தை உருவாக்குவதும் கிறிஸ்தவ வேதபோதனைகளுக்கு அடிப்படையிலேயே முரணானது. இன அடிப்படையில் கிறிஸ்தவர்களைப் பிரித்து எந்த இனத்துக்கும் சலுகை காட்டுவதை கிறிஸ்தவ வேதம் அனுமதிக்கவில்லை. கிறிஸ்தவம் இனங்களை ஒன்று சேர்ப்பது; எல்லா இனத்தையும் ஓரினமாகப் பார்ப்பது. கிறிஸ்தவப் போர்வையில் இருக்கும் ஓநாய்களான சில கிறிஸ்தவப் பிரிவுகளும், அமைப்புகளும் சாதி அடிப்படையில் தமிழகத்தில் சபை அமைத்து வந்திருக்கின்றன.
அது நமக்குத் தெரியும். அவைகளுக்கும் கிறிஸ்தவத்திற்கும் எந்த உறவும் இல்லை என்பதை அவர்களுடைய செயல்களே காட்டுகின்றன என்பதை நாம் மறந்துவிடக்கூடாது. குருக்குல் லூதரன் அமைப்பு தலித் அரசியல் தலைவரான திருமாவளவனுக்கு இறையியல் முனைவர் (டாக்டர்) கௌரவப்பட்டம் கொடுத்திருப்பதில் இருந்தே அவர்களுடைய ‘கிறிஸ்தவம்’ எத்தகைய கிறிஸ்தவம் என்பதை இனங்காட்டி விடுகிறார்கள்.
தெய்வநாயகத்துக்கும், அவரது மகள் தேவகலாவுக்கும் நூலில் அதிகமாக இடம் கொடுக்கப்பட்டிருக்கிறது. இவர்கள் இருவரும் தமிழகத்து பாரம்பரிய சி.எஸ்.ஐ திருச்சபையை ஆரம்பத்தில் சேர்ந்திருந்தவர்கள். அந்தத் திருச்சபை வேத நம்பிக்கைகளைத் துறந்துவிட்டு தாராளவாத கோட்பாடுகளைப் பின்பற்றுகிற அமைப்பாக என்றோ மாறிவிட்டது. தெய்வநாயகத்துக்கு கிறிஸ்தவத்தில் பெரிய ஈடுபாடு எதுவும் இருப்பதாகத் தெரியவில்லை.
இந்தத் திராவிட தமிழ் சமயக் கோட்பாட்டிற்கு தெய்வநாயகத்துக்கு துணைபோகிற ஒரே விஷயம் அப்போஸ்தலன் தோமா மேற்கிந்திய கரையோரத்திற்கு வந்திருந்தார் என்ற வெறும் ஐதீகம் மட்டுமே. இந்த வரலாற்றால் நிரூபிக்கப்படாத, நம்பக்கூடிய எந்த ஆதாரமும் இல்லாத, வாய்வழிவந்த ‘கர்ணபரம்பரைக்’ கட்டுக்கதையை வைத்தே திராவிட தமிழ் சமயம், திராவிட கிறிஸ்தவம் என்பதெல்லாம் உருவாக்கப்பட்டது. இந்தக் கதையை ஆரம்பித்து வைத்தவர்கள் கத்தோலிக்க மதத்தைச் சேர்ந்தவர்களே. இந்தியாவில் மேற்குக் கீழ்க்கரைப் பகுதியில் ஆரம்பித்த ‘சீரியக் கிறிஸ்தவம்’ கத்தோலிக்க மதக் கோட்பாட்டையும், சிலை வணக்கத்தையும் பின்பற்றிய ஒரு மதம். அவர்களை அடிப்படையாக வைத்தே தோமா கட்டுக்கதை ஆரம்பித்தது. இதுபற்றி எழுதும் வரலாற்றாசிரியரான ஸ்டீபன் நீல், ‘பதினெட்டாம் நூற்றாண்டில் எழுந்த இந்த தோமா கதை இருண்ட, குழப்பமான, அநேக விஷயங்களில் அறிவுக்குப் புறம்பானதுமான ஒன்று’ என்று குறிப்பிட்டிருக்கிறார். ஸ்டீபன் நீல் பிஷப் பிரவுனின் கருத்தையும் சுட்டிக்காட்டத் தவறவில்லை. ‘ஜெக்கொபைட் சபையிடம் எந்த ஆதாரக்குறிப்பும் காணப்படாததால் ஒன்றுக்கொன்று முரணான தோமா கதைகளை ஆராய்ந்து ஒரு முடிவுக்கு வருவதும் இலகுவானதல்ல’ என்று பிரவுன் குறிப்பிட்டிருக்கிறார்.
கர்ணபரம்பரைக் கதைகளை & விக்கிரமாதித்தன் கதைகளைப்போல ஆராயாமல் அப்படியே நம்பிவிடுவது நம்மினத்தில் காலாகாலமாக இருந்துவரும் வழக்கமாதலால் தோமா கதையும் நிலைத்து நின்றுவிட்டது. இது தெய்வநாயகத்துக்கு உள்ளுக்குள் தெரியாமலிருந்திருக்காது. மேலை நாட்டவர்கள் எந்தளவுக்கு கீழைத்தேய மாயவலைகளுக்குள் சிந்தனையின்றி விழுந்துவிடுகிறார்கள் என்பதையே வேர்ல்ட் மெகசின் ஆசிரியர் மேர்வின் ஒலாஸ்கி தெய்வநாயகத்தின் கோட்பாட்டிற்கு ஆதரவளித்து அதை பத்திரிகையில் வெளியிட்டது சுட்டிக்காட்டுகிறது.
கிறிஸ்துவின் எந்த அப்போஸ்தலனும் வேதத்தைத் திரித்து ஒரு நாட்டுக்கும், இனத்துக்கும், கலாச்சாரத்துக்கும் ஏற்றவகையில் அந்தந்த பிரதேசத்திற்கேற்ற கிறிஸ்தவத்தை (தமிழ் சமயம்) உருவாக்க மாட்டான். இப்படிச் செய்தவராக தோமாவை சித்தரிப்பது அவரை இழிவுபடுத்தும் செயல்.
இதைப்போலத்தான் இந்துமதக் கலப்புள்ள ‘சதிர்’ என்ற பெயருடன் தேவதாசிகளிடம் இருந்து ஆரம்பித்த தென்னிந்திய பரத நாட்டியம் போன்ற கலைகளைக் கிறிஸ்தவ மயப்படுத்தி கிறிஸ்தவ விளக்கங்கொடுக்கின்ற அநியாயங்களும். நூலில் அடையாளங் காட்டப்பட்டுள்ள பரத நாட்டியத்தைக் கிறிஸ்தவ மயமாக்கும் பாதிரியார் பர்போஸா கத்தோலிக்கர். பிரபல நர்த்தகரான சாஜு ஜார்ஜும் கத்தோலிக்கர். இவர் பாதிரியாராக இருக்கும் இயேசு சபை ஒரு கத்தோலிக்க மதப்பிரிவு. அது நடத்துவதுதான் கலைக்காவேரி கலைக்கல்லூரி. கிறிஸ்துவை அறியாத, இந்துவான கண்ணதாசன் எழுதிய ‘இயேசு காவியத்தை’ கலைக்கல்லூரி பதிப்பகம் எல்லோரும் வாசிக்கும்படி வெளியிட்டிருக்கிறது. மெய்க்கிறிஸ்தவர்கள் கிட்டேயும் போகமாட்டார்கள் கண்ணதாசனின் இயேசு காவியத்திடம். அவர்களுக்குத் தெரியும் கண்ணதாசன் உண்மையில் யாரென்று. கிறிஸ்தவ வேதத்தைத் தெளிவாகப் படித்து ஆராய்ந்து பார்க்கிறவர்களுக்கு இந்தப் பாவகரமான செயல்களையெல்லாம் வேதம் அருவருப்போடு வெறுக்கிறது என்பது தெரியவரும். இந்தப் போக்கெல்லாம் கிறிஸ்தவத்தைப் பொறுத்தவரையில் பிசாசின் சித்துவேலைகளில் ஒன்று மட்டுமே.
சாது செல்லப்பாவும் அவருடைய ‘அக்னி மினிஸ்டிரிஸும்’, ‘பிரஜாபதி பிராமணர்கள்’ என்ற குழுவினரும் தமிழகத்தில் இயங்கி வருகிறார்கள். ‘பிரஜாபதி பிராமணர்கள்’ என்ற பெயரே இது மெய்க்கிறிஸ்தவத்தோடு தொடர்பில்லாதது என்பதை அப்பட்டமாகத் தெரிவிக்கிறது.
தெய்வநாயகம் சமூக, அரசியல் காரணங்களுக்காக திராவிட இனப் பாதுகாப்பை நோக்கமாகக் கொண்டு அந்த இனத்தை மற்ற இனங்களில் இருந்து வேறுபடுத்திக் காட்டி அதை நிலைநாட்ட கிறிஸ்தவத்தை ஒரு கருவியாகப் பயன்படுத்த, இவர்கள் இந்து வேதங்களில் காணப்படும் ‘பிரஜாபதி’ இயேசுதான் என்று கூறி இயேசுவை இந்துக்கள் கிறிஸ்தவ வேதத்தை படிக்கவேண்டிய அவசியமில்லாமல் இந்துவேதங்களில் இருந்தும், பகவத்கீதையைப் படித்தும் கண்டுகொள்ளலாம் என்று விளக்கி தீவிர மதமாற்றத்தில் ஈடுபட்டிருக்கிறார்கள்.
இந்து சாமியார்களைப்போல உடைதரிப்பதும், பூணூல் அணிவது போன்றவையெல்லாம் ஏற்கனவே கத்தோலிக்கரான டீ நொபிளி செய்திருந்ததுதான். அம்மதமாற்ற முறைகளுக்கு மறுபடியும் உயிர்கொடுத்து கிறிஸ்தவ வேதத்தையும் அதன் அடிப்படைப் போதனைகளையும் ஒதுக்கி வைத்துவிட்டுவிட்டு இந்து வேதங்களிலும், சைவ சிந்தாந்த நூல்கள், திருக்குறள் போன்றவற்றில் இருந்தெல்லாம் தேடித்தேடி கிறிஸ்தவ விளக்கத்தை இவர்கள் கொடுத்து வருகிறார்கள் சாது செல்லப்பா போன்றவர்கள்.
சாதியை இகழ்ந்து வெறுத்து அதற்கெதிராக அதிகமாகப் பாடியது மேல்நாட்டானா, இந்தியாவில் பிறந்து வாழ்ந்த தமிழ் பார்ப்பனரான பாரதியா? மேல்நாட்டான் நம்மைப் பண்பாடில்லாதவர்கள் என்று சொல்லுகிறான் என்று கூப்பாடு போடும் நூலாசிரியர்கள் நம் பண்பாட்டை இழிவுபடுத்தி நம்மைத் தலைகுனியவைக்கும் வகையில் பாரதி பாடியிருப்பதை வாசித்துப் பார்க்க வேண்டும்
‘சாத்திரங்கள் ஒன்றும் காணார் – பொய்ச் சாத்திரப் பேய்கள் சொல்லும் வார்த்தை நம்பியே கோத்திரம் ஒன்றாயிருந்தாலும் – ஒரு கொள்கையிற் பிரிந்தவனைக் குலைத் திகழ்வார்; தோத்திரங்கள் சொல்லி அவர்தாம் – தமைச் சூதுசெய்யும் நீசர்களைப் பணிந்திடுவார் ஆத்திரங் கொண்டே இவன் சைவன் – இவன் அரிபக்தன் என்று பெருஞ் சண்டையிடுவார் நெஞ்சு பொறுக்கு திலையே – இந்த நிலைகெட்ட மனிதரை நினைத்துவிட்டால்’
என்று பாடினார் பாரதி. நம் நாட்டான் நம்மை இகழந்தால் பரவாயில்லை, நம் பக்கம் தவறிருந்தாலும் அதை மேல்நாட்டான் சுட்டிக்காட்டக்கூடாது என்று மேல்நாட்டு பிரின்ஸ்டன் நகரில் சொகுசாக வாழ்ந்துகொண்டு மல்கோத்திரா எழுதுகிறார்.
சாதியை இந்தியனின் சுய அடையாளமாக, சமுதாய அடையாளமாக இருக்கவைக்க முயல்கிறது இந்துத்துவப் பார்வை. சாதியை அவசியமானதொன்றாகப் பார்க்கிறவரை இந்துப் பண்பாட்டு அவலங்களில் இருந்து ஓர் இந்தியனால் தன்னைப் பாதுகாத்துக்கொள்ள முடியாது. சாதி இருக்கும்வரை சாதி வேறுபாட்டின் அடிப்படையில் இந்திய சமூகம் நடைபோடுவதும், சாதிச் சண்டைகள் பெருகுவதும், இனங்கள் தாழ்த்தப்படுவதும் தொடரும். திராவிட அமைப்பால் சாதியை இல்லாமல் ஆக்க முடியவில்லை. தாழ்ந்த சாதியை அரசியலாலும், பொருளாதாரத்தாலும் உயர்த்த மட்டுமே அவர்களால் முடிந்தது. இந்து மதம் சாதியை அடிப்படை சமூக அடையாளமாகப் பார்க்கிறது. சாதி இல்லாத இந்திய சமூகம் தேவை. இது மேல்நாட்டுத் தத்துவமல்ல. நம்மிலக்கியங்களை எழுதியிருப்பவர்கள் கண்ட கனவு. சாதி அடையாளம் இல்லாத இந்தியன் உருவாகிறபோதுதான் உண்மையான மத சுதந்திரத்துக்கும், தனிமனித உரிமைக்கும் வழியேற்படுகிறது. இந்தியப் பண்பாடு என்ற பெயரில் வருணாச்சிரம மனுநீதி தர்மத்திற்கு வக்காலத்து வாங்குகிறார்கள் நூலாசிரியர்கள். இந்த 21ம் நூற்றாண்டில் வாழ்கின்ற மானமுள்ள எந்த இந்தியனும் எதிர்வினையில்லாமல் இவர்களுடைய கருத்தை ஏற்றுக்கொள்ளுவான் என்று நினைப்பது நிச்சயம் தவறு.
நூலாசிரியர்கள் அதிகமாகவே வேலை செய்து கிறிஸ்தவ நிறுவனங்களின் பட்டியல்களைச் சேகரித்து அவர்கள் செய்து வரும் பணிகளை ஆராய்ந்திருக்கிறார்கள். ஆனால், அவர்களுடைய பட்டியலில் இருப்பவை எல்லாமே இவெஞ்சலிக்கள் கிறிஸ்தவ நிறுவனங்கள் என்று சொல்ல முடியாது. அநேக சமூக சேவையில் ஈடுபட்டிருக்கும் செக்யூலர் லிபரல் நிறுவனங்களும், வேர்ல்ட் விஷன் போன்ற சமூக சேவை செய்யும் நிறுவனங்களும் அவர்களுடைய பட்டியலில் அடங்குகின்றன.
கிறிஸ்தவ நிறுவனங்கள் என்ற பெயரைச் சூட்டிக்கொண்டு மதமாற்றத்தில் ஈடுபட்டு வருகின்ற நிறுவனங்கள் நிச்சயம் உண்டு. இந்தியாவில் இயங்கும் அத்தகைய நிறுவனங்கள் பற்றி நான் கேள்விப்பட்டிருக்கிறேன். சுலபமாக பணத்தைச் சேர்த்துக்கொள்ளும் சுயலாபத்துக்காக நிறுவனங்களை ஆரம்பித்து மேல்நாட்டாரிடம் பணம் கேட்டு வருகிறவர்கள் நிச்சயம் இருக்கிறார்கள். எந்தத் தகுதியும், ஆத்மீக பாரமும், வசதிகளும் இல்லாமல் அநாதைப்பிள்ளைகளுக்கு இல்லங்கள் நடத்தப் பணம் கேட்டு எனக்குக் கடிதம் அனுப்புகிறவர்கள் இருக்கிறார்கள். இதையெல்லாம் அடியோடு மறுத்துவிட முடியாது.
கோவில்களை உடைப்பதும், இந்துக்களின் மனம் நோகுமாறு நடந்துகொள்வதும், கன்னியாகுமாரியை ‘கன்னிமேரி’ என்று பெயர் மாற்றம் செய்ய முயல்வதும் கிறிஸ்தவ அன்பைப் பகிர்ந்துகொள்வதற்கு எதிரானது. அத்தகைய செயல்களில் ஈடுபடுகிறவர்களின் கிறிஸ்தவ விசுவாசம் கேள்விக்குரியது. உண்மையில் அவர்கள் கிறிஸ்தவர்களாக இருக்க முடியாது. மெய்க்கிறிஸ்தவர்கள் அத்தகைய செயல்களில் ஈடுபட மாட்டார்கள். நூலாசிரியர்கள், சிலர் செய்யும் தவறுக்காக எல்லோரையும் தவறாகப் பார்த்து தங்களுடைய அரசியல், சமூக மத நோக்கங்களுக்கு ஒத்துப்போகும் விதமாக கிறிஸ்தவத்தைப் பற்றிக் கருத்துத் தெரிவித்திருக்கிறார்கள். அவர்களுடைய உள் நோக்கங்களுக்கு இது துணைபோகலாம். அதற்காக அவர்கள் உண்மையை எழுதுகிறார்கள் என்று அர்த்தமில்லை.
அமெரிக்கா அடிப்படையில் ஒரு கிறிஸ்தவ நாடல்ல. அங்கு ஒரு காலத்தில் கிறிஸ்தவ செல்வாக்கு அதிகம் இருந்தது உண்மைதான். அந்தச் செல்வாக்கால் அந்த நாட்டுக்குப் பல நன்மைகள் ஏற்பட்டதும் உண்மைதான். அதுவல்ல இன்றைய நிலைமை. கிளின்டன், ஒபாமா போன்றவர்களெல்லாம் தங்களை ஒருபோதும் கிறிஸ்தவர்களாக இனங்காட்டிக் கொண்டதில்லை. ஓரினச் சேர்க்கைக்கு திருமண அந்தஸ்து வழங்கிய முதல் அமெரிக்க அதிபர் ஒபாமா. ஆசிரியர்களின் அடிப்படைத் தவறே அமெரிக்கா, கனடா போன்ற நாடுகளையும், ஐரோப்பாவையும் கிறிஸ்தவ நாடுகளாகக் கருதுவதுதான். அமெரிக்காவிலாவது ஓரளவுக்கு கிறிஸ்தவம் இன்னும் முற்றும் அழியாமல் இருக்கின்றபோதும், கனடாவும் ஐரோப்பாவும் முழு லிபரல் நாடுகளாக இருக்கின்றன. அங்கே கிறிஸ்தவத்திற்கு எந்த மதிப்புமில்லை. இதை கிறிஸ்தவ வரலாற்றை வாசித்தாலே அறிந்துகொள்ள முடியும். 15, 16ம் நூற்றாண்டில் ஐரோப்பாவில் கத்தோலிக்க மதம் கிறிஸ்தவர்களைத் தேடித் தேடி வெட்டிச் சாய்த்திருக்கிறது. கிறிஸ்தவர்கள் அதை எதிர்த்துப் போராடவில்லை. மேலைநாட்டில் கிறிஸ்தவர்கள் இருக்கிறார்கள் என்பது மட்டுமே உண்மை; அந்நாடுகளில் எதுவும் கிறிஸ்தவ வேதத்தின் அடிப்படையில் இயங்கும் நாடுகளல்ல. அவை கிறிஸ்தவத்தை வளர்த்துக்கொண்டிருக்கும் நாடுகளுமல்ல. அவற்றை கிறிஸ்தவ நாடுகளாகப் பார்ப்பது தவறான கணிப்பின் விளைவு.
Breaking India கிறிஸ்தவர்களை சிந்திக்க வைக்க வேண்டும். கிறிஸ்துவின் அன்பைக் கொச்சைப்படுத்தாமல் அர்ப்பணிப்போடு நாம் எதிர்ப்புகளுக்கு மத்தியில் தொடர்ந்தும் வெளிப்படுத்த நமக்கு உதவவேண்டும். கிறிஸ்தவத்தை இந்தளவுக்கு வெறுப்போடு பார்த்து எழுதுகிறவர்களையும் இயேசு மன்னிக்கிறார்.