முன்னரே குறிப்பிட்டவாறு, இச்செப்பேடு சிம்மவர்மனால் அவனது 5-ஆம் ஆட்சியாண்டில் வெளியிடப்பெற்றது. இது வெளிப்பட்ட வழி சுவையானது. வயிராகிகள் என்போர் சிவன் கோயிலில் ஊழியம் செய்யும் துறவிகள் ஆவர். அவ்வாறான ஒரு துறவி, கிராமத்தில் இறந்துபட்ட நிலையில் அவருடைய உடைமைகளில் ஒன்றாக இந்தச் செப்பேடு கண்டறியப்பட்டது. ஓங்கோல் வட்டம் நெலத்தூர் கிராம முனிசிஃப் அதைக் கைப்பற்றி அத்3த3ங்கி துணைத் தாசில்தாருக்கு அனுப்ப, அவர் நெல்லூர் மாவட்ட ஆட்சியாளரிடம் ஒப்படைக்க, அவர் அதை மெட்ராஸ் (இன்றைய சென்னை) அருங்காட்சியகத்துக்கு அனுப்பிவைத்தார். அருங்காட்சியகத்திலிருந்து கடனாகப் பெற்று, தொல்லியல் அறிஞர் வெங்கையா அவர்கள் மைப்படி எடுத்துப் பேராசிரியர் ஹுல்ட்ஸ் (PROF. E. HULTZSCH) அவர்களுக்கு அனுப்பியுள்ளார். இது பற்றி 1905-06 ஆண்டின் எபிகிராபியா இண்டிகா (Epigraphia Indica) என்னும் நூலின் எட்டாம் தொகுதியில் ஹுல்ட்ஸ் அவர்கள் கட்டுரையாக எழுதியுள்ளார். முதன் முதலில் ஆராய்ந்த வெங்கய்யாவின் குறிப்பு: செப்பேடு ஐந்து எடுகள் கொண்டது. முதல் ஏட்டின் முதல் பக்கத்திலும், ஐந்தாம் ஏட்டின் இரண்டாம் பக்கத்திலும் எழுத்துப்பொறிப்பு இல்லை. மொத்தம் இருபத்து நான்கு வரிகள் கொண்ட எழுத்துப்பொறிப்பு. ஏடுகளை இணைக்கும் வளையத்தில் உள்ள வட்ட வடிவ முத்திரையில் புடைப்புருவம் மிகவும் தேய்மானம் கண்டிருந்தது. இவ்வுருவம் நந்தியாகலாம்.
செப்பேட்டின் மொழி சமற்கிருதம். எழுத்தமைதி உருவுபள்ளி, மாங்க(ளூ)டூர் செப்பேடுகளை ஒத்துள்ளது. கொடைக் கிராமம் பிகிரா, பிரமதேயமாக மாற்றப்பட்டு விலாச சர்மனுக்குக் கொடையாக அளிக்கப்பட்டது. பிகிரா கிராமம் முண்டா ராஷ்டிரத்தில் இருந்தது. செப்பேடு, பல்லவ மஹாராஜா சிம்மவர்மனின் ஐந்தாம் ஆட்சியாண்டில் வழங்கப்பட்டது. இவன், யுவமஹாராஜா விஷ்ணுகோபனின் மகன் என்றும், மஹாராஜா இரண்டாம் ஸ்கந்தவர்மனின் பேரன் என்றும் குறிப்பிடுகிறது. இந்த இரண்டாம் ஸ்கந்த வர்மன், மஹாராஜா வீரவர்மனின் மகன் என்றும் செப்பேடு குறிக்கிறது. அறிஞர் டாக்டர் ஃப்ளீட் (Dr. FLEET) அவர்கள் இச்செப்பேட்டை ஆய்வு செய்து, யுவமஹாராஜா விஷ்ணு கோபன் சிம்மவர்மனின் தம்பி என்றும் இவ்விருவரும் இரண்டாம் ஸ்கந்தவர்மனின் மக்கள் என்றும் கூறியுள்ளார். இரண்டாம் ஸ்கந்தவர்மனிடமிருந்து அரசுரிமை சிம்மவர்மனுக்கே சென்றது என்றும், விஷ்ணுகோபன் அரச பதவியில் அமரவேயில்லை என்றும், இதன் காரணமாகவே அவன் செப்பேடுகளில் யுவ மஹாராஜா விஷ்ணுகோபன் என்று குறிக்கப்பெறுகிறான் என்றும் கூறுகிறார். ஹுல்ட்ஸ் அவர்கள், விஷ்ணுகோபன் அரசபதவியில் அமரவில்லை என்றும், ஆட்சி, நேரடியாக விஷ்ணுகோபனின் தந்தை இரண்டாம் ஸ்கந்த வர்மனிடமிருந்து விஷ்ணுகோபனின் மகனாகிய சிம்மவர்மனுக்குச் சென்றது என்றும் குறிப்பிடுகிறார். செப்பேடு, மேன்மாதுர(ம்) என்னும் இடத்திலிருந்து வழங்கப்பட்டது. இவ்வூர், நெல்லூர் மாவட்டத்தில் அமைந்திருக்கலாம் என்பதாக வெங்கய்யா குறிப்பிடுகிறார். பிகிரா செப்பேடு