Devapriyaji - True History Analaysed

Members Login
Username 
 
Password 
    Remember Me  
Post Info TOPIC: அரேபியர் வணிகமும் இந்திய மேலைக் கடற்கரையும்


Guru

Status: Offline
Posts: 7468
Date:
அரேபியர் வணிகமும் இந்திய மேலைக் கடற்கரையும்
Permalink  
 


  அரேபியர் வணிகமும் இந்திய மேலைக் கடற்கரையும்
 
 
முன்னுரை
அண்மையில், தஞ்சைத் தமிழ்ப் பல்கலையின் வெளியீடான “நிகமம்”  என்னும் நூலைப் படித்துக்கொண்டிருந்தபோது, அந்நூலில் மேற்படிப் பல்கலையைச் சேர்ந்த பேராசிரியர் முனைவர் வீ.செல்வகுமார் என்பவர் எழுதிய கெனிசா தாள் ஆவணங்கள் என்னும் ஆய்வுக்கட்டுரை ஈர்த்தது. வணிக வரலாற்று ஆய்வுகளை உள்ளடக்கிய பல கட்டுரைகளின் தொகுப்பு நூலே “நிகமம்”.  அது பற்றிய ஒரு பகிர்வு இங்கே.  ”நிகமம் என்னும் சொல் வணிகக் குழுவினரைக் குறிப்பதாகும். தமிழ் நாட்டில் பல இடங்களின் பெயர்கள் நெகமம் என்றிருப்பதைக் காணலாம். நிகமம் என்பதே நெகமம் என் மருவியுள்ளது. தமிழகத்தில், சமணக்குகைத்தளங்களில் காணப்பெறும் தமிழ்த் தொல்லெழுத்தான தமிழியில் (தமிழ் பிராமி) பொறிக்கப்பட்ட, மாங்குளம் கல்வெட்டில் “வெள் அறை நிகம(த்)தோர்  என்னும் தொடர் உள்ளது. தமிழகத்தின் கடல்சார் வணிகம் பற்றிய செய்திகளுக்கு அயல்நாடுகளில் சான்றுகள் கி.மு. முதல் நூற்றாண்டளவிலேயே கிடைத்துள்ளன. மேற்படிகெனிசா தாள் ஆவணங்கள் என்னும் ஆய்வுக்கட்டுரை, இடைக்காலத் தென்னிந்திய வரலாற்றை (வணிக வரலாற்றை) அறிய உதவும் அரேபிய ஆவணங்களைப் பற்றிக் கூறுகிறது.
 
கெனிசா தாள் ஆவணங்கள்-Genizah manuscripts
எகிப்து நாட்டின் பழைய கெய்ரோ நகரில், பென் எஸ்ரா (Ben Ezra) என்னும் பெயரில் யூதர்களின் வழிபாட்டிடம் (யூதப்பள்ளி) (Synagogue) ஒன்றுள்ளது. அங்கு, 1890-இல் இலட்சக் கணக்கான துண்டுத் தாள் ஆவணங்கள் கண்டுபிடிக்கப்பட்டன. இவை கடித ஆவணங்கள். ஹீப்ரு, அரபு ஆகிய மொழிகளில் எழுதப்பட்டவை. கெனிசா (Genizah) என்பது யூதப்பள்ளிகளில் பழைய ஆவணங்களைச் சேர்த்துவைக்கும் அறையைக் குறிக்கும். இந்த கெனிசா ஆவணங்களில் இந்தியாவுடன் தொடர்புடைய வணிகர்கள் பற்றிய குறிப்புகள் உள்ளன. அவர்களில், ஆபிரகாம் பென் ஈஜு (Abraham Ben Yiju),மட்முன் பி. ஹசன் பந்தர் (Madmun B. Hassan Bundar) ஆகியோர் குறிப்பிடத் தக்கவராவர். இவர்களின் கடிதங்கள் ஹீப்ரு மொழியில் உள்ளன. இவைகளில், இந்தியாவைச் சேர்ந்த நகோடா இரமிஷ்ட் (Nakhodah Ramisht), நம்பியார் என்பவர்களைப் பற்றிய குறிப்புகள் உள்ளன. மேலும், மேற்குக் கடற்கரை, குஜராத், கர்நாடகக் கல்வெட்டுகளில் சுட்டப்பெறும்பட்டணஸ்வாமி எனப்படும் நகரத்தலைவர் பற்றிய குறிப்புகளும் இந்த ஆவணங்களில் உள்ளன.
 
அமெரிக்க எழுத்தாளரான அமிதவ் கோஷ், தம் பயண நூலில் அரேபியரான பென் ஈஜு என்னும் கடல் வணிகரைப்பற்றி எழுதியுள்ளார். பென் ஈஜு சில காலம் இந்தியாவில் தங்கியிருந்துள்ளார். மேலைக்கடற்கரையில் இவருக்கு ஒரு தொழிற்சாலை இருந்துள்ளது. அஷு என்ற ஒரு நாயர் பெண்ணை மணந்துள்ளார். பொம்மா (Bomma)  என்னும் ஓர் அடிமை அவருக்கு இருந்தார். இந்த அடிமை, துளு நாட்டைச் சேர்ந்தவர் எனக்கருதப்படுகிறது. இவ்வணிகருடைய கடிதங்கள் கி.பி. 1132 முதல் கி.பி. 1149 வரை நடந்த நிகழ்வுகளைக் கூறுகின்றன. ஹசன் பந்தர், ஏடன் துறைமுகத்தில் பென் ஈஜுவின் வணிகப்பிரதிநிதியாக இருந்தார்.
 
இந்திய வணிகர்கள் யார்?
 
1) நம்பியார்
செல்வகுமார் அவர்களின் கட்டுரையில், மேற்படி இந்திய வணிகர்களைப் பற்றிய செய்திகள் இல்லை. இந்திய வணிகர்களைப் பற்றிய தேடலில் சில கூடுதல் செய்திகள் கிடைத்தன. பென் ஈஜு, ஹசன் பந்தருக்கு எழுதிய கடிதம் ஒன்றில், ஒரு பொதி (வணிகப் பொருள் பொதி?)யினை நகோடா ரமிஷ்ட்டின் கப்பலிலும், மற்றொரு பொதியினை நம்பியார் கப்பலிலும் அனுப்பியதாகக் குறிப்பிடுகிறார். நம்பியார் என்னும் குடியினர், நாயர் குடியினரைப்போன்றவர். மலபார் பகுதியில், இடைக்காலத்தில், இக்குடியினர் இருவரும் வைசியரைப்போல் வணிகத்தில் ஒருபோதும் ஈடுபட்டவரல்லர். இவர்கள், தற்காப்புக் கலையில் ஈடுபட்டவராவர். எனவே, நம்பியார் என்பவர், மலபார்ப் பகுதியிலிருந்துகொண்டு கப்பல் உடைமையாளராய் பென் ஈஜுவின் வணிகச் செயல்களில் பங்கு கொண்டிருக்க வாய்ப்பில்லை. மாறாக, நம்பியார் மங்களூர்ப் பகுதியில் இருந்துகொண்டு பென் ஈஜுவுக்காக அவர் சார்பில் இயங்கியவர் எனலாம். தற்போதைய “பினாமி”  என்பதுபோல. நம்பியார், நாயர் வகுப்பினர் கடல் பயணம் மேற்கொள்ளாதவர் என்பதும், அவர்களுக்கு சமற்கிருதம் அல்லாது அரபு மொழி தெரிந்திருக்க வாய்ப்பில்லை என்பதும் இந்தக் கருதுகோளுக்கு வலு சேர்க்கும். கூடுதலாக, நகோடா என்னும் சொல்லொட்டு இவர் பெயரில் இல்லை என்பதும், இரமிஷ்ட் என்பார் பெயரில் மட்டுமே நகோடா இணைந்துள்ளதையும் நோக்கவேண்டும். இரண்பீர் சக்கரவர்த்தி என்னும் வரலாற்றாளர், நகோடா என்னும் சொல் “நகூடா”, “நாவித்தகா”   என்னும் சொற்களோடு தொடர்புடையது என்றும், இவை (நகூடர், நாவித்தகர்)  கப்பல் உடைமையாளராய் வணிகம் செய்தவர்களைக் குறிப்பன என்றும் தம் ஆய்வில் நிறுவுகிறார். (கட்டுரை ஆசிரியர் குறிப்பு:  நாவித்தகர் என்பது கப்பலை (மரக்கலத்தை)க் குறிக்கும் “நாவாய்”  என்னும் சொல்லோடு பொருந்துவதாக உள்ளது கருதற்பாலது.)

2) நகோடா இரமிஷ்ட்
நகோடா என்பது கப்பல் உடைமையாளராய் வணிகம் செய்தவரைக் குறிப்பதால், நகோடா இரமிஷ்ட் குஜராத் பகுதியைச் சேர்ந்த இந்திய வணிகர் எனக் கருதப்படுகிறது. ஒரு சில தாள் ஆவணங்கள் குஜராத்திய எழுத்துகளைக் கொண்டுள்ளன என்றும் கருதப்படுகிறது. 
 
2) பட்டணஸ்வாமி
பட்டணஸ்வாமி என்னும் பெயர் துறைமுகத் தலைவர் என்னும் ஒரு பதவிப் பெயராகலாம் என்று கருதப்படுகிறது. கருநாடகக் கல்வெட்டுகளில் இச்சொல் பயில்கிறது என்னும் செய்தியின் அடிப்படையில் கட்டுரை ஆசிரியர் சில கன்னடக் கல்வெட்டுகளிலும், வேறு நூலாதாரங்களிலும் தேடுதலை மேற்கொண்டபோது சில செய்திகள் கிடைக்கப்பெற்றன. போசளர்கள் (ஹொய்சளர்கள்) கருநாடகத்தில் இடைக்காலத்தில் கி.பி. 1346 வரை ஆட்சி செய்தவர்கள். அவர்களது ஆட்சிக்காலத்தில் பட்டணஸ்வாமி என்னும் பதவி இருந்துள்ளது. இப்பதவியில் இருந்தோர், நகரத் தலைவர்களாய் (இன்றைய “மேயர்”  பதவி போன்றது) இருந்துள்ளனர். இக்காலகட்டத்தில், நகரம் என்பது வணிக நகரம் ஆகும். வணிகச் சந்தைகள் கொண்டது.  நானாதேசிகள், ஐந்நூற்றுவர் போன்ற வணிகக் குழுக்கள் தங்கி வணிகத்தில் ஈடுபட்ட இடங்கள். துறைமுக நகரங்களும் இவற்றில் அடங்கும் எனலாம். வணிகத்தொடர்புள்ள இந்த நகரங்களின் தலைவர்கள் பட்டணஸ்வாமி என அழைக்கப்பட்டனர். இவர்கள் அரசுக்கும் வணிகர் குழுக்களுக்கும் பாலமாய் இயங்கியவர்கள் எனலாம். வணிகத்தின் மூலம் கிடைக்கப்பெறும் வரி வருவாய், வணிகச் சந்தைகள் ஆகியவற்றை மேற்பார்வையிட்டனர் என்றும் கருதப்படுகிறது.
 
கன்னடக் கல்வெட்டுகளில் பட்டணஸ்வாமிகள்
1 சாமராஜநகரம் வட்டம்-பசவாபுரம் கல்வெட்டு எண் : 236
                                                        காலம்-போசளர் : கி.பி 1316
கல்வெட்டு வரி 19,20  ..பட்டணசாமி கெம்பசெட்டிய
                   மக மாத செட்டி ......
                      (கெம்பசெட்டியின் மகன் மாத செட்டி)

2 சாமராஜநகரம் வட்டம்-அரகலவாடி கல்வெட்டு எண் : 301 காலம்: கி.பி 1555
கல்வெட்டு வரி 4,5,6   வீரநஞ்சராய மஹாராயர குமாரராத சிக்கராயரு
                   தெரக்கணாம்பிய பட்டணஸ்வாமி பைர செட்டிய
                   மக திருமலெசெட்டியரிகே கொட்ட கிராம...
                      (உம்மத்தூர் அரசர் சிக்கராயர் தெரக்கணாம்பி
                      நகரத்தின் பட்டணசாமி பைரசெட்டியின் மகன்
                      திருமலை செட்டிக்குக் கொடுத்த கிராமம்)

3 யளந்தூர் வட்டம்-யளந்தூர் கல்வெட்டு எண்: 5 காலம்: கி.பி. 1244
இது தமிழ்க் கல்வெட்டு.
கல்வெட்டு வரி 6    ....பட்டணசாமி மகன் சாங்கண்...

4 யளந்தூர் வட்டம்-யளந்தூர் கல்வெட்டு எண்: 62 காலம் போசளர் கி.பி. 1328
கல்வெட்டு வரி 43   மான்யவாகி பட்டணஸ்வாமிகளு......

5 யளந்தூர் வட்டம்-கணிகனூ கல்வெட்டு எண்: 172 காலம்: கி.பி. 13-ஆம் நூ.ஆ.  இது தமிழ்க் கல்வெட்டு
கல்வெட்டு வரி 4     .......பட்டணசாமி திருவிளக்கால் பொன் மூன்றும்
                      வைத்தார்

6 யளந்தூர் வட்டம்-அம்பளி கல்வெட்டு எண்: 210 காலம் போசளர்: கி.பி. 1244            
இது தமிழ்க்கல்வெட்டு
கல்வெட்டு வரி 6      பட்டணசாமி மகன் .....

கொள்ளேகாலம் வட்டம்-காமகெரெ கல்வெட்டு எண்: 57  விஜயநகரர் காலம் : கி.பி. 1366
கல்வெட்டு வரி 10,11,12      .....மாம்பள்ளி மொடஹள்ளி, கொங்க
                           பட்டணத சமஸ்த நானாதேசிகளு ...
                           பட்டணஸ்வாமி ...
மாம்பள்ளி, மொடஹள்ளி, கொங்கபட்டணம் ஆகிய நகரங்களின் நானாதேசி
வணிகரும் பட்டணசாமிகளும்

8 கொள்ளேகாலம் வட்டம்-காமகெரெ கல்வெட்டு எண்: 62  விஜயநகரர் காலம் : கி.பி. 1354
கல்வெட்டு வரி 10,11,12   ...மோடிஹள்ளி சிங்கண நல்லூர
                       பட்டணஸ்வாமி ராக்கண்ண
சிங்கண நல்லூரின் பட்டணசாமி ராக்கண்ண(ன்) என்பவர்

9 கொள்ளேகாலம் வட்டம்-குரஹட்டி ஹொசூர் கல்வெட்டு எண்: 76  காலம் : கி.பி. 16-ஆம் நூ.ஆ.
கல்வெட்டு வரி 4,5       ....ஆலம்பாடி பட்டணஸ்வாமி நஞ்ச...
ஆலம்பாடி என்னும் நகரத்தின் பட்டணசாமி. அவரது பெயர் “நஞ்ச”  எனத் தொடங்குகிறது.

10 ஹுணசூர் வட்டம்-மரதூர் கல்வெட்டு எண்: 14 காலம்: கி.பி. 15-ஆம் நூ.ஆ.
கல்வெட்டு வரி 1       .... பட்டணசாமி நாகி செட்டி....
 
மேற்படி கல்வெட்டுகளின் செய்திகள்
மேற்படி கல்வெட்டுகளிலிருந்து நகரங்களின் தலைவர்களாயிருந்த பட்டணஸ்வாமிகளில் பலர் செட்டிகள் என்னும் வணிகர்கள் என்பது புலனாகிறது. ஒரு கல்வெட்டில், பட்டணஸ்வாமி ஒருவர் நானாதேசி வணிகருடன் சேர்த்துக் குறிப்பிடப்படுகிறார் என்பதையும் காண்கிறோம். எனவே, பட்டணஸ்வாமி என்னும் பதவியிலிருந்தோர் வணிகக் குழுவினரைச் சார்ந்தோரே என்பதாகக் கருதலாம். வணிகராயிருப்பதனால், அவர் அரசுடன் இயைந்து வணிக நடவடிக்கைகளைச் சிறப்புறக் கண்காணித்திருக்கக் கூடும் என்பதும் புலனாகிறது. அரபு நாட்டைச் சேர்ந்த கப்பல் உடைமையாளரான வணிகர்கள், கருநாடகப்பகுதியில் தங்கள் வணிக நடவடிக்கைகளை நகரத்தலைவர்களான பட்டணஸ்வாமிகளின் தொடர்போடு மேற்கொண்டிருக்கவேண்டும் எனக் கருதலாம்.
 
நன்றி.  துணை நின்றவை:
1. The Mystery of Nambiyar Nakhuda  (from website "Historic Alleys" by Maddy)
2. Sri Kshetra Hombuja (blog)
3  Epigraphia Karnatica


__________________
Page 1 of 1  sorted by
 
Quick Reply

Please log in to post quick replies.



Create your own FREE Forum
Report Abuse
Powered by ActiveBoard