Devapriyaji - True History Analaysed

Members Login
Username 
 
Password 
    Remember Me  
Post Info TOPIC: கல்லாபுரம் பாறை ஓவியங்கள்


Guru

Status: Offline
Posts: 7468
Date:
கல்லாபுரம் பாறை ஓவியங்கள்
Permalink  
 


கல்லாபுரம் பாறை ஓவியங்கள்
 
வாணவராயர் அறக்கட்டளை வரலாற்று உலா
கோவை-வாணவராயர் அறக்கட்டளை சார்பாக மாதந்தோறும் ஒரு வரலாற்று உலா நிகழ்வு நடைபெற்றுவருகிறது. அவ்வகையில், சென்ற 22-10-2017 ஞாயிறன்று உடுமலைப் பகுதியில் கல்லாபுரம் அருகில் பாறை ஓவியங்களைக் காணச் சென்றிருந்தோம். அண்மையில், பழநியைச் சேர்ந்த நாராயணமூர்த்தி என்னும் ஆய்வாளர் உடுமலைப் பகுதியில் தொன்மையான பாறை ஓவியங்களைக் கண்டறிந்து செய்தி வெளியிட்டிருந்தார். அந்த வரலாற்றுத் தொன்மையை நேரில் பார்த்த பயணம் குறித்த பதிவு இங்கே பகிர்ந்துகொள்ளப்படுகிறது.
 
பயணம் தொடங்கியது
எங்கள் பயணம் காலையில், கோவையிலிருந்து தொடங்கியது. வெவ்வேறு பணியிலும் தொழிலிலும் இருப்பவர்கள், பணியை நிறைவு செய்தவர்கள், கல்லூரி மாணவர்கள், இல்லத்தரசிகள் எனப் பல்வகை மக்களும் வரலாற்று ஆர்வம் காரணமாகக் கலந்துகொண்டனர். ஏறத்தாழ நாற்பது பேர். கோவையிலிருந்து உடுமலை சென்றதும் அங்கு உடுமலைப்பகுதி ஆய்வாளர் உடுமலை இரவி என்பார் எங்களுடன் இணைந்துகொண்டார். உடுமலையிலிருந்து கல்லாபுரம் செல்லும் சாலையில் பயணம்.
 
கல்லாபுரம்-வரலாற்றுப் பின்னணி கொண்ட ஊர்
உடுமலைப்பகுதி, பழங் கொங்குநாட்டின் இருபத்து நான்கு நாட்டுப்பிரிவுகளுள் ஒன்றான கரைவழி நாட்டில் அமைந்திருந்தது. உடுமலைக்கு மிக அருகில் இருக்கும் பழநி, கொங்குநாட்டின் வைகாவி நாட்டில் இருந்தது. கரைவழி நாட்டில் கல்லாபுரம் அமைந்திருந்தது. கி.பி. 13-ஆம் நூற்றாண்டைச் சேர்ந்த கொங்குச் சோழன் விக்கிரம சோழனின் கல்வெட்டில் கரைவழி நாட்டுக் கல்லாபுரமான விக்கிரம சோழ நல்லூர் என்னும் குறிப்பு காணப்பெறுகிறது.
 
சங்கிராம நல்லூர் சோழேசுவரர் கோயில் கல்வெட்டு (A.R. No.145/1909)
 
1 ஸ்வஸ்திஸ்ரீ த்ரிபுவநச்சக்ரவத்தி கோநேரிந்
2 மை கொண்டாந் கண்டந் காவநாந சிவபத்த
3 னுக்கு  நம் ஓலை குடுத்தபடியாவது கரைவழி
4 நாட்டுக் கல்லாபுரமான விக்ரமசோழ நல்லூ
5 ரில் நாம் இவனுக்கு இட்ட ..... ஒந்றுக்கு நி
6 லமாவது
 
13-ஆம் நூற்றாண்டுக்கு முன்பிருந்து இன்று வரை கல்லாபுரம் என்னும் இயற்பெயரைக் கொண்டிருந்த இவ்வூர் 13-ஆம் நூற்றாண்டில் விக்கிரமசோழனின் ஆட்சிக்காலத்தில் அவன் பெயரால் விக்கிரமசோழ நல்லூர் என்னும் சிறப்புப் பெயர் கொண்டிருந்தது என்பதைக் கல்வெட்டு வாயிலாக அறிகிறோம்.
 
மதகடிப்புதூர்
கல்லாபுரம் சாலையில், தமிழக நீர்வள ஆதாரத்துறை, உலக வங்கி நல்கையின் உதவியுடன் மேற்கொண்ட நீர்வள நிலவளத் திட்டத்தின் கீழ் வடிநிலப்பணியாகப் பழைய வாய்க்காலைச் சீரமைத்த இராம குளம் வாய்க்கால் குறுக்கிட்ட இடத்தில் பேருந்துப் பயணத்தை நிறுத்தினோம். அது மதகடிப்புதூர் என்னும் பெயருடைய பகுதி. பெயருக்கேற்றவாறு, அந்த இடத்தில் வாய்க்காலில் ஒரு மதகு கட்டியிருந்தார்கள். அருகே, வயலில் ஒரு பகுதியில் நெற்பயிரின் நாற்றங்காலில் சிலர் வேலை செய்துகொண்டிருந்தனர். மதகுக்கு அருகில் இரண்டு சிறுமிகளும் ஒரு சிறுவனும் வயல் நீரில் நண்டு பிடிக்கும் விளையாட்டில் களிப்புற்று ஈடுபட்டிருந்தனர். ஆவல் மேலிட அவர்களை அழைத்து நண்டைக் காட்டச் சொல்லி, அவர்கள் காட்ட, அதைப்பார்த்து அச்சிறார்களின் களிப்பில் நானும் பங்கு கொண்டேன். பசுமை வயல்களின் பக்கம் சென்று பல நாளாயின. பள்ளிப் பருவத்தில், புக்கொளியூர் அவிநாசியில் சுந்தரர் முதலைவாய்ப் பிள்ளையை மீட்ட தாமரைக்குளத்தில் மீன் பிடித்த நிகழ்வு, நினைவுக் களத்தில் (நினைவுக்குளத்தில் என்றும் சொல்லலாம்) மேலெழுந்ததைத் தடுக்க இயலவில்லை. அங்கிருந்த முதிய உழவர் ஒருவர், இங்கு காணும் மதகு நடுமதகு என்றும் இன்னும் இரு மதகுகள்  இப்பகுதியில் இருப்பதாகவும் சொன்னார். வாய்க்காலும், மதகுகளும் சேர்ந்து மதகடிப்புதூர் என்னும் பெயருக்குச் சான்று பகர்ந்தன. பகலுணவை இந்த வாய்க்கால் கரையில் அமர்ந்து உண்டுவிட்டு, ஓவியங்கள் இருக்கும் மலைப்பாறை நோக்கிப் பயணமானோம்.
                           இராம குளம் வாய்க்கால்
Copy%2Bof%2BP1150335.JPG
 
Copy%2Bof%2BP1150334.JPG
 
                            நாற்றங்கால்
Copy%2Bof%2BP1150391.JPG
 
                          நண்டு பிடிக்கும் சிறார்கள்
Copy%2Bof%2BP1150392.JPG
 
குகைத்தளம் நோக்கி
மதகடிப்புதூர் வாய்க்காலிலிருந்து கிளைத்துச் செல்லும் மண்பாதையில் (இட்டேரிப் பாதை என்றும் கூறுவதுண்டு) சிறிது நேரம் நடந்து சென்றோம். வழியில், ஆங்காங்கே அவரைச் செடிகள் பயிரிட்டிருந்தார்கள். இட்டேரியின் முடிவில், கருவேல மரங்கள் அடர்ந்த ஒரு தொகுப்பு காணப்பட்டது. வனச் சூழ்நிலையை நினைவூட்டியது. அதைக்கடந்ததும் பாதை ஒற்றையடிப்பாதையாக மாற்றம் பெற்றது. அதனூடே சற்று நேரம் நடந்த பின்னர் பாதையின் வடிவம் மறைந்து, காலடியில் பாறைக்கற்களும், பக்கப் பகுதிகளில் கள்ளி போன்ற சிறு மரங்களும் காணப்பட்டன. ஆங்காங்கே, சரிந்த பாறைப்பரப்புகள். கால்கள் இடறி விடாமல் கண்ணும் கருத்துமாக அடியெடுத்து வைக்கவேண்டிய சூழ்நிலை. சில இடங்களில் நம்மைக் குனிந்து கையூன்ற வைக்கும் பாறைச் சரிவுகள்; பாறை இடுக்குகள். அரை மணிக்கூறு இவ்வாறான பயணம். முடிவில் குகைத் தளத்தை அடைந்தோம்.
               
                   குகைத் தளம் நோக்கி -  பயணக்காட்சிகள்
Copy%2Bof%2BP1150337.JPG


Copy%2Bof%2BP1150342.JPG
 
Copy%2Bof%2BP1150346.JPG
 
Copy%2Bof%2BMathakadippudur%2BRock%2BArt
 
Copy%2Bof%2BP1150354.JPG
 
குகைத்தளமும் ஓவியங்களும்
குகை, ஒரு விரிந்த குடையின் பாதி வடிவத்தில், கடல் பரப்பில் ஒரு நீண்ட அலை தலை உயர்த்திக் கரைநோக்கிக் கவிந்து வரும் தோற்றத்தில் காணப்பட்டது. நீண்ட குகை. மேற்பரப்பில் ஆங்காங்கே சில தேன் கூடுகளும், குருவிக்கூடுகளும். குருவிக்கூட்டினுள் குருவிக்குஞ்சுகளை உண்ணும் நோக்கத்தில் பாம்புகள் வந்துபோனதன் அடையாளமாகப் பாம்புகள் உரித்த சட்டைகள் பறவைக்கூடுகளை ஒட்டித் தொங்கிக்கொண்டிருந்தன. குகையின் கூரைப் பகுதியில் பாறையில் வெள்ளை நிறத்தில் (WHITE OCHRE) வரையப்பட்ட சிறு சிறு ஓவியங்கள் நிறைய இருந்தன.
 
                         குகைக் காட்சிகள்
Copy%2Bof%2BP1150355.JPG
 
Copy%2Bof%2BP1150357.JPG
 
Copy%2Bof%2BP1150378.JPG


ஓவியம்-1  குழு நடனம்
சிறு வடிவங்களைக் கொண்ட ஓவியங்களுக்கிடையில், அனைத்து ஓவியங்களுக்கும் தலையாகக் காணப்பட்டது ஒரு பேரோவியம். மற்ற சிறு ஓவியங்களில் இல்லாத ஒரு அழகும் நேர்த்தியும் இந்த ஓவியத்தில் இருந்தன. ஓவியத்தில் பதினேழு மனித உருவங்கள். ஒரு விலங்குருவம். நமது பார்வையில், வலப்பக்கம் காணப்படும் மனித உருவங்கள் பதினொன்று. அவற்றில் எட்டு உருவங்கள் பெரியவர்கள்; மூவர் சிறார்கள்; இடப்பக்கம் காணப்படும் மனித உருவங்கள் ஆறு. இவர்கள் அனைவர்க்கும் நடுவில் ஓர் ஆட்டின் உருவம் வரையப்பட்டுள்ளது. ஆணும் பெண்ணுமாகக் கலந்திருக்கும் இவ்வுருவங்கள் கைகோத்து ஆடிக்கொண்டிருக்கின்றன. பயண ஏற்பாட்டாளரான தொல்லியல் ஆய்வாளர் இரா.ஜெகதீசன் அவர்கள், இந்த ஓவியம் ஒரு வழிபாட்டு நிகழ்வைக் குறிக்கிறது என்றார். வழிபாட்டுக்கான சடங்கில் ஆடு பலியிடப்பெறுகிறது. மக்கள் குழுவாக நடனமாடுகிறார்கள். அருமையானதோர் ஓவியம். இரா.ஜெகதீசன் அவர்கள் குறிப்பிடும்போது, "சங்க இலக்கியங்களில் வேலன் வெறியாடல் போன்ற வழிபாடு கூறப்பட்டுள்ளது. வெற்றியின் காரணமாக எல்லாரும் சேர்ந்து ஆடுகின்ற ஆட்டம் இங்கே குகை ஓவியமாகியுள்ளது. கரூரில் கொங்கர்கள் ஆடும் ஆட்டம் பற்றிய குறிப்பு சங்க இலக்கியத்தில் உள்ளது. அது போலவே, இறை வழிபாட்டு மரபில் மனிதரைப் பலியிட்டு வழிபடும் மரபும், பகைவரைப் பலியிட்டு வழிபடும் மரபும் இருந்துள்ளன. பின்னாளில், மனிதரின் இடத்தில் தாம் வளர்க்கும் கால்நடைகளைப் பலியிட்டுள்ளார்கள். இது காட்டுபகுதியாக இருந்தபோது, கால்நடை தொடர்பான போர் அல்லது வேட்டை ஆகிய நிகழ்வுகளில் தமக்குத் தேவையானவை கிடைக்கவேண்டும் என்னும் வேண்டுதலுக்காகப் பலி கொடுத்தல் நடைபெற்றிருக்ககூடும். அந்த வகையில், இங்கே குழு நடன ஓவியத்தில் ஆடு காட்டப்பட்டுள்ளது” என்று குறிப்பிட்டார்.. 

                                                 ஓவியம்-1  குழு நடனம்
Copy%2Bof%2BP1150367.JPG

                                      குழு நடனம் - ஓவியத்தின் இடப்புறம்
Copy%2Bof%2BP1150371.JPG

                                       குழு நடனம் -   ஓவியத்தின் வலப்புறம்          
Copy%2Bof%2BP1150369.JPG

                                           குழு நடனம் - மையத்தில் ஆடு
Copy%2Bof%2BP1150370.JPG

ஓவியம்-2 சதிக்கை
மற்றொரு ஓவியத்தில், பெரியதாக ஒரு கை மட்டும் வரையப்பட்டுள்ளது. கை, பெண்ணின் கையைக்  குறிப்பாக வளைக்கை  குறிப்பதாகும். கை என்பது சதிக்கல் வகையைச் சார்ந்த நடுகற்களில் காணப்படும் ஒன்று. வீரக்கை என்று தொல்லியலில் குறிப்பிடுகிறார்கள். உடன் கட்டை ஏறிய பெண்டிரை வழிபடும் செயலைக் குறிக்க காட்டப்படுவது கையாகும்.  இங்குள்ள சதிக்கை உருவம் உடன்கட்டை ஏறிய பெண்ணின் வழிபாட்டிடதைக் குறிக்கலாம். குழு நடன ஓவியத்தை இந்தப் பெண்ணைத் தெய்வமாக வழிபடும் காட்சியாகக் கருதலாம்.

                                                       சதிக்கை ஓவியம் 
Sathikkai-mathakadippudur-Athirai%2BChin
                                              படம்-உதவி ஆதிரை சின்னசாமி (முக நூல்)

ஓவியம்-3 போர்க்காட்சி
போர் வீரன் ஒருவன் வில்லெடுத்து வேறொருவன் மீது அம்பு எய்வதுபோல் ஓர் ஓவியம் காணப்படுகிறது. மற்றவன் குதிரைமீது இருப்பதாகக் கருதலாம். முதல் வீரனின் உருவத்துக்குக் கீழே இன்னொரு வீரனும் வில் கொண்டு தாக்குவது போல் வரையப்பட்டுள்ளது.


Copy%2Bof%2BP1150373.JPG



Copy%2Bof%2BP1150372.JPG

ஓவியம்-4 வழிபாடு
ஓர் ஓவியத்தில், ஒரு கட்டம் வரையப்பட்டு அதனுள் குதிரை மீதமர்ந்த வீரனின் உருவம் காட்டப்பட்டுள்ளது. இக்கட்டத்துக்கு மேற்புறம், பெரிய உருவம் ஒன்று வரையப்பட்டுள்ளது. இது கடவுள் வழிபாட்டைக் குறிப்பதாகலாம். மனித உருவத்தைவிடப் பெரிதாக ஓர் உருவம் வரையப்படுவது தெய்வ உருவத்தைக் குறிக்கவே. பெரிதாக இருக்கும் உருவங்களில் யானையின் உருவமும் காணப்படுகிறது. இப்பகுதி ஆனை மலையின் அருகில் இருப்பதைக் கருதிப்பார்க்கலாம். இக்குகை ஓவியங்களைக் கண்டறிந்த நாராயணமூர்த்தி அவர்கள் பழநிக்கருகில் உள்ள ஆண்டிப்பட்டி மலை என்று குறிப்பிட்டதால், பலரும் இக்குகையின் இருப்பிடத்தைச் சரியாகக் கண்டறிந்து ஓவியங்களைக் காண இயலவில்லை. 

                            ஓவியம்-4 வழிபாடு
Copy%2Bof%2BP1150375.JPG

உடுமலையைச் சேர்ந்த தென்கொங்கு சதாசிவம் என்னும் ஆய்வாளர், பெரிதும் முயன்று இக்குகையின் இருப்பிடத்தைக் கண்டதால், கோவைக் குழுவினர் மேற்படி பாறை ஓவியங்களைக் கண்டு மகிழும் வாய்ப்பு ஏற்பட்டது.
 
சில ஓவியங்களை இனம் காண இயலவில்லை. இவ்வோவியங்களைத் தொல்லியல் துறையினர் முறையாக ஆய்ந்து இவற்றின் விளக்கங்களையும், இவற்றின் காலத்தையும் வெளிக்கொணரும் வரலாற்றுச் செய்திகளை எதிர்பார்த்து நிற்போம்.
 
 


__________________


Guru

Status: Offline
Posts: 7468
Date:
Permalink  
 

நாயக்கர் கால வாய்க்கால் பாலம்
பாறை ஓவியங்களைப் பார்த்து முடிந்ததும் கல்லாபுரத்தைக் கடந்து திருமூர்த்திமலை அணைப்பகுதியில் காட்சிக்கு வைத்திருக்கும் தளி பாளையக்காரர்களின் நினைவுக் கற்சிற்பங்களைக் காணப்புறப்பட்டோம். கல்லாபுரம் இந்தப்பகுதியிலேயே மிகச் செழிப்பான பகுதி. நீர்வளத்தால் நெல்வளம் பெருகும் நிலங்கள். வழியில் உழவோட்டும் அழகான காட்சிகள். அருகிலேயே, நீண்ட பாலம் போன்ற கட்டுமானம் ஒன்று காணப்பட்டது. ஆனால் அது பாலம் அன்று. நீரை எடுத்துச் செல்லும் ஒரு வாய்க்கால் தரைமட்டத்திலிருந்து உயர்த்தப்பட்டு அமைக்கப்பட்டிருந்தது. கல்லாபுரத்தின் அந்த இடத்தில் தரைவழிச் செல்லும் வாய்க்கால், தாழ்வான பகுதியைக் கடந்து செல்வதற்காகத் தரை மட்டத்திலிருந்து உயர்த்தி எழுப்பப்பட்டு மீண்டும் கிடை மட்டத்தில் செல்லும் வகையில் அமைக்கப்பட்டுள்ளது. உடுமலை ஆய்வாளர் இரவி அவர்கள், இந்த வாய்க்கால் கட்டுமானம் முந்நூறு ஆண்டுகளுக்கு முன்னர் நாயக்கர் காலத்தில் கட்டப்பெற்றது என்னும் செய்தியைச் சொன்னார்.

                                              நாயக்கர் கால வாய்க்கால் பாலம்
Copy%2Bof%2BP1150400.JPG

தளி பாளையப்பட்டு-நினைவுச் சிற்பங்கள்
அடுத்து நாங்கள் திருமூர்த்திமலை அணைக்குச் சென்றோம். அணை கட்டியபோது சுற்றும் இருந்த சில கிராமங்களில் தளி பாளையக்காரர்களின் வரலாற்று எச்சங்களாகத் திகழ்ந்த நினைவுச் சிற்பங்களை இங்கே பாதுகாப்பாக ஒரு மேடையில் பதித்து வைத்துள்ளனர். காண்பதற்கு அருமையானவை. 


Dhali%2BMemory%2Bstones.jpg
              படம் உதவி: ”தி இந்து” நாளிதழ்-3-1-2015 (எம்.நாகராஜன்)        


Copy%2Bof%2BP1150430.JPG

Copy%2Bof%2B%25E0%25AE%258E%25E0%25AE%25

Copy%2Bof%2B%25E0%25AE%2595%25E0%25AF%25

 

Copy%2Bof%2B%25E0%25AE%25AA%25E0%25AF%25


Raja%2Bramaswamy-Nayakkar%2Bkaala%2Bvazh
                                              படம் உதவி ராஜா ராமசாமி (முகநூல்)

தூக்குமரத்தோட்டக் கல்வெட்டும் எத்தலப்ப நாயக்கரும்
அடுத்து நாங்கள் சென்ற இடம் தளியில் இருக்கும் தூக்குமரத்தோட்டம். ஜல்லிப்பட்டிக்கும் தளிக்கும் இடையில் அமைந்துள்ளது இந்தத் தூக்குமரத்தோட்டம். இங்குள்ள ஒரு கல்வெட்டு தனிச் சிறப்புப் பெற்றது. ஆங்கிலேயன் ஒருவனைத் தளி பாளையப்பட்டின் எத்தலப்ப நாயக்கர் தூக்கிலிட்ட இடம் என்று கருதப்படுகிற இடத்தில் இருக்கும் கல்வெட்டு. தளி என்னும் ஊர், வரலாற்றுச் சிறப்புடைய ஓர் ஊராகும். பதினெட்டாம் நூற்றாண்டின் பிற்பகுதியில், ஆங்கிலேயருக்கு எதிராக அப்போதிருந்த பாளையக்காரர்கள் போரிட்டார்கள். பாஞ்சாலங்குறிச்சியை ஆண்டுவந்த கட்டபொம்மன், வஞ்சனையால் ஆங்கிலேயரால் 16-10-1799 அன்று தூக்கிலிடப்பட்டான். அவன் தம்பி ஊமைத்துரை மற்ற பாளையக்காரர்களோடு சேர்ந்து வெள்ளையரை எதிர்த்துப் போரிட்டபோது தளி பாளையக்காரர் மலையாண்டி வெங்கிடுபதி எத்தலப்ப நாயக்கரும் சேர்ந்துகொண்டார். 1801-ஆம் ஆண்டு பிப்ரவரி 2-ஆம் நாள் தொடங்கி நூற்று நான்கு நாள்கள் நடைபெற்ற போரில் ஊமைத்துரைக்கு ஆதரவாக 14 பாளையக்காரர்களை ஒன்றிணைத்து அதற்குத் தலைமையேற்றவர் இந்த எத்தலப்ப நாயக்கர்எத்தலப்ப நாயக்கரை அடக்குவதற்காக அப்போதைய ஆங்கிலேய அரசு தந்திரமாக ஒரு தூதுக்குழுவை அவரை சந்திக்க அனுப்பிவைத்தது. கட்டபொம்மனின் நண்பரான எத்தலப்ப நாயக்கர், கட்டபொம்மனைச் சதியால் தூக்கிலிட்டதற்கு எதிர்வினையாகத் தனது படை வீரர்களை அனுப்பி ஆங்கிலத் தூதுக்குழுத் தலைவனை மட்டும் தனியே கைது செய்து அவனைத் தூக்கிலிட்டார்.
வெள்ளையர் இந்தியரைத் தூக்கிலிடும் செயலுக்கிடையில், இந்தியர் ஒருவர் வெள்ளையனைத் தூக்கிலிட்ட துணிவான அருஞ்செயல புரிந்தவர் என்னும் பெருமை எத்தலப்ப நாயக்கருக்கு உண்டு.  


Copy%2Bof%2BP1150407.JPG


Thookkumaraththottam%2Bkalvettu-1.JPG

கல்வெட்டுச் செய்தி
கல்வெட்டு தனியார் ஒருவரின் தோட்டத்தில் அமைந்துள்ளது. சிலுவைக்கல் ஒன்று நின்ற நிலையிலும், அதன்கீழ், கல்வெட்டு பொறிக்கப்பெற்ற ஒரு கற்பலகை தரையில் கிடத்தப்பெற்ற நிலையிலும் காணப்படுகின்றன. கோவை பூ.சா.கோ கலை மற்றும் அறிவியல் கல்லூரியில் கல்வெட்டியல் பட்டயப்படிப்புப் பொறுப்பாசிரியர் மற்றும் இணைப்பேராசிரியர் ச.இரவி அவர்கள் இக்கல்வெட்டைப் படித்துச் செய்தி வெளியிட்டுள்ளார். அவர் கூற்றிலிருந்து :
 
“திருப்பூர் மாவட்டம்உடுமலை வட்டத்திற்குட்பட்ட கிராமம் தளியில் ஆங்கிலேயர் ஒருவரைத் தூக்கிலிட்டதற்கு ஆதாரமாகக் கல்வெட்டு கண்டறியப்பட்டுள்ளது. அதனைப் படிக்க முயற்சித்த போது அது அந்திரை கெதி’ அல்லது எங்கிரை கெதி’ என்னும் ஆங்கிலேயரின் அடக்கம் செய்யப்பட்ட சமாதி எனக் கண்டறியப்பட்டது.
 
நாங்கள் நேரில் பார்த்தபோது கல்வெட்டின் பாடம் பின்வருமாறு காணப்பட்டது.
 
கல்வெட்டின் பாடம்:
 
                                I N ( R I ) 
1         1801 வரு. (ஆபுரி)ல் மீ 23
2         உ வியாழ கிழமை வரை
3         க்கும் செல்லா நென்ற
4         துன்முகி வரு. சித்திரை மீ (..)
5         3 உ தஞ்சை நகரத்தி
6         லிருந்த அந்திரை கெதிஷ்
7         பறங்கி யிருபத்தேழு வ
8         யதில் தெய்விகமாகி அ
9         டங்கின சமாது + I H S
 
கல்வெட்டின் உச்சியில் I N R I  என்று எழுதப்பட்டுள்ளது.  இது Jesus Nazarenus Rex Judaeorum என்னும் இலத்தீன் மொழித் தொடரின் குறுக்க வடிவம். ஆங்கிலத்தில் “J” என்பது இலத்தீனில் “I”  என்பதாக அமையும். இதன் பொருள் நாசரேத்தின் இயேசு யூதர்களின் அரசர் என்பதாகும். வட சொல்லின் “ஜ”  ஒலிப்பு, தமிழ் மொழியில் ”  என்பதாக ஒலிப்பதைக் கருதிப்பார்க்க. தமிழுக்கும் இலத்தீனுக்கும் இடையில் ஓர் ஒற்றுமை. அரசு என்னும் தமிழ்ச் சொல் அரைசு என்று திரிதலை விளக்கும் தமிழறிஞர் தேவநேயப்பாவாணர், இந்தச் சொல்தான் இலத்தீன் மொழிக்குச் சென்று “ரெக்ஸ்”  எனத்திரிந்து வழங்குவதாகக் குறிப்பிடுவார்.
கல்வெட்டின் இறுதியில் ஒரு சிலுவைக்குறியும் அதைத் தொடர்ந்து I H Sஎன்னும் எழுத்துகளும் காணப்படுகின்றன. இது Iesus Hominum Salvatorஎன்னும் இலத்தீன் மொழித் தொடரின் குறுக்க வடிவம். ஆங்கிலத்தில் “J”  என்பது இலத்தீனில் “I”  என்பதாக அமையும் என்பதை முன்னரே கண்டோம். இதன் பொருள் மாந்த இனத்தைக் காக்கும் இயேசு”  என்பதாகும்.
 
கல்வெட்டு கூறும் செய்திகள்.
கி.பி. 1801-ஆம் ஆண்டு ஏப்ரல் மாதம் 23-ஆம் நாள் (தமிழாண்டு துன்முகி, சித்திரை மாதம்) தஞ்சையைச் சேர்ந்த பறங்கி அந்திரை கெதிஷ் என்பவன் (இருபத்தேழு வயதினன்) இறந்துபட்ட (தெய்விகமாகி அடங்கின) சமாதி இது என்னும் செய்தி கல்வெட்டு வாயிலாக அறியப்படுகிறது. கல்வெட்டில் தூக்கிலடப்பட்டதாகவோ, தூக்கிலிட்டவர் எத்தலப்ப நாயக்கர் என்ற குறிப்போ இல்லை. எனவே, ஆங்கிலேயரைத் தூக்கிலிட்டதற்கு இக்கல்வெட்டு ஆதாரம் என்று கூறவியலாது. செவி வழிச் செய்திகள், ஆங்கிலேயன் தூக்கிலிடப்பட்டான் என்பதாகவும், தூக்கிலிட்டவர் எத்தலப்ப நாயக்கர் என்பதாகவும் அமைகின்றன. இதை உறுதிப்படுத்த வேறு சான்றுகள் எடுத்துக்காட்டாக, மெக்கன்சி ஆவணங்கள் போன்றவை -  தேவைப்படுகின்றன. இந்த நிலையில், ஆய்வாளர் உடுமலை இரவி அவர்கள், கல்வெட்டுள்ள இந்த இடம் (தூக்குமரத்தோட்டம்) எத்தலப்ப நாயக்கர் தூக்கிலிடப்பட்ட இடமாகும் என்றொரு கருத்தைச் சொன்னார். இந்தச் செய்திக்கும் தகுந்த சான்றுகள் தேவைப்படுகின்றன. வரலாற்றுப் பேராசிரியர் கோவை இளங்கோவன் அவர்கள் மற்றொரு கருத்தை முன்வைக்கிறார். 1799-இல் கட்டபொம்மன் தூக்கிலிடப்பட்டபின்னர், 1801-1802 காலகட்டத்தில்  ஆங்கிலேய அரசுக்கெதிராக ஒரு கூட்டமைப்பு ஏற்படுத்தப்பட்டது. இதில், பாளையக்காரர்கள், மருது பாண்டியர், கட்டபொம்மனின் சந்த்திகள், திப்புவின் சந்ததிகள், ஆங்கிலேய அரசுக்குப் பகை நாடான பிரஞ்சு அரசு ஆகியோர் ஒன்றிணைந்து எதிர்க்கிறார்கள். அந்த வகையில், தளி பாளையப்பட்டுக்கு உதவிய பிரஞ்சுக்காரர் ஒருவர் இறந்ததற்காக இந்தச் சமாதியும் கல்வெட்டும் எழுப்பப்பட்டிருக்கலாம். வரலாற்றுப் பேராசிரியரின் இக்கருத்து ஆய்வு நோக்கில் கருதற்பாலது. கல்வெட்டு ஆங்கிலேயர் வைத்திருந்தால் ஆங்கிலத்தில் இருந்திருக்கவேண்டும். தமிழில் கல்வெட்டு அமைவதால் இளங்கோவன் அவர்களின் கருத்து முன்னிலை பெறுகிறது. இறந்து போன பறங்கியின் பெயரான கெதிஷ் என்பது பிரஞ்சுப் பெயர்போலத் தோற்றமளிக்கிறது. ”அந்திரை” என்பது ”ANDREW" என்பதாகலாம். ”கெதிஷ்” என்பதன் சரியான ஆங்கில வடிவம் தெரியவில்லை. இப்பெயர், பிரஞ்சுப்பெயர்தானா என்ற ஐயம் நீக்கப்படல்வேண்டும். தொல்லியல் பேராசிரியர் எ.சுப்பராயலு அவர்கள் கல்வெட்டைப் படித்து, பறங்கியன் பெயர்”ஆந்த்ரே கேதி” (ANDRE KATIE) என்பதாகலாம் எனக் கருத்திட்டிருக்கிறார். 
  
எத்தலப்ப நாயக்கரின் வரலாறு-நாட்டர்ர் புனைவுகள்?
 
P1150439.JPG
 
1988-ஆம் ஆண்டு, தளியைச் சேர்ந்த சுந்தரசாமிக் கவுண்டர் என்பவர், “கீர்த்தி வீரன் எத்தலப்பன் வரலாறு”  என்னும் தலைப்பில் நூல் வெளியிட்டுள்ளார். அதில், தளியில் திருமூர்த்தி மலைச் சாரலில், சரக்கூட ஆசிரமம் ஒன்றை 1970களில் அமைத்துத் துறவு வாழ்க்கை மேற்கொண்ட யோகி இராமசாமி அவர்களுக்கு நேர்ந்த ஒரு நிகழ்வினை அடிப்படையாகக் கொண்டு எத்தலப்ப நாயக்கரின் வரலாற்றை எழுதியுள்ளார். எத்தலப்ப நாயக்கனின் மெய்க்காப்பாளன் சின்னையன் என்பவனின் ஆவி, பல இரவுப்போதுகளில்     யோகி அவர்கள் முன்பு தோன்றி எத்தலப்ப நாயக்கன் வரலாற்றைச் சொன்னதாக நூல் விரித்துரைக்கிறது. ஆங்கிலேயர்கள், தளி பாளையக்காரர் எத்தலப்ப நாயக்கருடன் சமாதானமாகப் போவதென ஒரு சிறு தூதுக்குழுவுடன் தளிக்கருகில் வந்து கோட்டைத்தளபதியிடம் எத்தலப்ப நாயக்கரைக் கண்டு பேசவேண்டும் என்று தூதுத் தகவல் அனுப்பியபோது, நாயக்கர் இதனை ஒரு சதியென நினைத்து வீரர்களை அனுப்பி ஆங்கிலேயத் தூதுவனைப் பிடிக்கச்செய்து தூக்கிலிடச் செய்தார். இதற்கு எதிர்வினையாகக ஆங்கிலேயர் தளி மீது இரவு நேரத்தில் பீரங்கித் தாகுதல் நடத்தினர். எத்தலப்ப நாயக்கரின் தம்பியும், அரண்மனைப் பெண்டிர் அனைவரும் இறந்துபடுகின்றனர். எத்தலப்ப நாயக்கர் தாம் வணங்கும் ஜக்கம்மா சிலையருகில் இருக்கும் சுரங்கப்பாதை வழியே வெளியேறித் தன்னுணர்வின்றி திருமூர்த்திமலை மேல் சென்றார். அங்கு அவரைக்கண்ட முதுவர் குடியினர், அவர் கைகாட்டியதிசையில் அவரை  அகத்தியம்பாறை என்னுமிடதில் விட்டு அகன்றனர். அவரைத் தேடி அலைந்த மெய்க்காப்பாளன் சின்னையனுக்கு எத்தலப்ப நாயக்கரின் குரலில்தெற்கே மலைக்குப்போகிறேன் வந்து சேர்” என்னும் ஒலி கேட்டது. முதுவர் உதவியுடன் அகத்தியம் பாறை சென்ற சின்னையன், நாயக்கர் அங்கு உயிரோடு வீடுபேறுற்றார் என உணர்ந்தான். கனத்த குட்டையான, நீண்ட தாடியுடைய ஒரு முனிவர் சின்னையனை எதிர்கொண்டு, “நீ இன்னும் இருநூறு ஆண்டுகள் தூல உடலில் இருந்து இறைவனடி சேர்வாய் என்று சொன்னதால் ஆவி வடிவில் யோகி இராமசாமியைச் சந்தித்து எத்தலப்ப நாயக்கரின் வரலாற்றைச் சொன்னதாக நூல் விரிகிறது.
 

 

ஆனால், தளி பாளையப்பட்டின் வரலாறும், எத்தலப்ப நாயக்கரின் வரலாறும் இன்னும் முற்றாகச் சான்றுகளோடு  நிறுவப்படவில்லை என்றே கருதவேண்டியுள்ளது. 

------------------------------------------------------------------------

து.சுந்தரம், கல்வெட்டு அராய்ச்சியாளர், கோவை.
அலைபேசி : 9444939156.


__________________
Page 1 of 1  sorted by
 
Quick Reply

Please log in to post quick replies.



Create your own FREE Forum
Report Abuse
Powered by ActiveBoard