பாரதவர்ஷம் பல்வேறு நம்பிக்கைகளும் சம்பிரதாயங்களும் நிறைந்த மண். ஐரோப்பிய காலனித்துவத்தின் விளைவால் அவற்றில் பல வழக்கிழந்து போயின. கானகத்தீயில் விருட்சங்களுடன் சேர்ந்து விஷ நாகங்களும் எரிவது போல, சில மூடத்துவங்களும் அழிந்தது மகிழ்ச்சிக்குரியது. அவற்றுள் ஒன்று சுயமாக உயிரை தியாகம் செய்யும் முறை. இந்தியவரலாற்றை நோக்குங்கால் இவ்வாறான இரு பிரதான உயிர்த்தியாக முறைகள் பழக்கத்தில் இருந்தன. ஒன்று சதி (உடன்கட்டை), மற்றொன்று நவகண்டம் (அறிகண்டம்).
சதி (உடன்கட்டை ஏறுதல்)
கணவன் இறந்த பின்பு மனைவியும் இணைந்து கணவனுடன் சிதையில் ஏறி, அத்தீயில் தன்னை தானே அழித்துக்கொள்வது சதி முறைமை எனப்பட்டது. இந்த சதி முறைமையானது இந்துமத புராணங்களில் இருந்து பெறப்பட்டுள்ளது. தக்ஷனின் மகளான சதி தேவி தனது தந்தையின் யாகத்தில் தன் கணவனுக்கு ஏற்பட்ட அவமானம் தாளாது அக்னிக்கு தன்னை இறையாக்கிக்கொண்டாள். இதன் தாக்கமாகவே சதி எனும் பெயருடன் உடன்கட்டை ஏறும் வழமை கைக்கொள்ளப்பட்டது. மேலும் சமஸ்கிருத சொல்லான सती (sati) எனும் சொல்லின் பொருள் நல்ல மனைவி என்பதாகும். எனவே நல்லதொரு மனைவியின் அடையாளமாக இந்த உடன்கட்டை ஏறும் வழமை பிற்காலத்தில் மாற்றப்பட்டிருக்க வேண்டும்.
தமிழ் இலக்கிய குறிப்புகளின் பிரகாரம், பாண்டியன் மாதேவியால் பாடப்பட்ட புறநானூறு பாடல் ஒன்றில் அரசனுடன், அரசியும் உடன்கட்டை ஏறிய குறிப்பு உள்ளது. அதன் படி பூதப்பாண்டியன் தேவி நாட்டின் அமைச்சர்கள் அனைவரினதும் ஆலோசனையையும் தவிர்த்து அரசனுடன் உடன்கட்டை ஏறியுள்ளாள். இங்ஙனமே மஹாபாரதத்தில் மஹாராஜா பாண்டுவின் இறப்புக்கு பின்னர், இளைய அரசி மாத்ரி உடன்கட்டை ஏறினாள், ஆனால் முதல் அரசி குந்தி அவ்வாறு செய்யவில்லை. சோழ சாம்ராஜ்யத்தின் முக்கிய அரசரான ராஜராஜரின் தாயான வானவன்மாதேவியும், ராஜேந்திர சோழரின் மனைவி வீரமாதேவியும் தங்கள் கணவர்களின் இறப்பினால் முழுமனதுடன் உடன்கட்டை ஏறினார்கள். இதன் மூலம் ஆரம்பகாலத்தில் சதி முறைமையானது முழுக்க முழுக்க பெண்களின் தன்னிச்சையான முடிவாகவே அமைந்தது தெளிவுற தெரிகிறது. பெண்கள் தம் கணவனின் மீது கொண்ட அதீத அன்பின் விளைவால் இத்தகைய பழக்கத்தை கைக்கொண்டனர். எனினும் பின்பு இம்முறைமையானது கௌரவத்தின் சின்னமாக மாற்றப்பட்டு, கணவனை இழக்கும் அத்தனை பெண்கள் மீதும் திணிக்கப்பட்டது.

சதிமுறைமையில் உயிரை துறக்கும் பெண்களின் ஞாபகச்சின்னமாக சதிகல் நடுவது வழக்கமாய் இருந்தது. இந்தியாவின் பல பகுதிகளில் காணக்கூடிய இந்த சதிகற்கள் ராஜஸ்தானில் மாத்திரம் மிகையாக கிடைக்கப்பட்டுள்ளது. இவை பெரும்பாலும் 11ம் நூற்றாண்டு காலப்பகுதியை சேர்ந்தவை. ஆர்தர் கோக் பர்னல் மற்றும் ஹென்றி யூள் ஆகியோரின் கருத்துப்படி சதி முறையானது முற்கால வோல்கா நதிக்கரை ரஷ்யர்களிடமும், தென்கிழக்கு ஐரோப்பிய பழங்குடிகளான Thracians இடமும், டோங்கா மற்றும் பிஜி தீவு பழங்குடியினரிடமும் காணப்பட்டது. டியோடோர்ஸ் எனும் வரலாற்று ஆசிரியரின் நூலின் படி கி.மு 1ம் நூற்றாண்டில் அலெக்சாண்டரின் படைவீரன் ஒருவனின் இறப்புக்கு பின்னர் அவனின் இருமனைவியரில் ஒருத்தி உடன்கட்டை ஏறியதாக குறிப்பு உள்ளது.
சதிமுறைக்கு இணையாக பலப்பெண்கள் கூட்டாக தீயில் விழுந்து உயிரை துறக்கும் முறை ஜஉஹர் (jauhar) எனப்பட்டது. இந்த பழக்கமானது ராஜஸ்தான் மற்றும் மத்தியபிரதேசம் ஆகிய ராஜபுத்திர ஆட்சி நிலவிய பகுதிகளில் மேற்கொள்ளப்பட்டது. 14ம் நூற்றாண்டுகளில் ராஜபுத்திர அரசுகள் இஸ்லாமிய படைகளுடன் போர் புரிய ஆரம்பித்த காலத்திலேயே இது வளர்ச்சிகண்டது. போரில் ராஜபுத்திர படைகள் தோல்வியடைந்து எதிரிகள் கோட்டைக்குள் நுழைவார்கள் எனக்கருதும் சமயங்களில் பெண்கள் தங்களின் மானத்தையும், கற்பையும் பாதுகாக்கும் நோக்கில் ஒன்றாக இணைந்து பெரிய அக்னி குண்டத்தில் விழுந்து உயிரை மாய்த்துக்கொள்வார்கள். இந்த பழக்கமானது இஸ்லாமிய-ராஜபுத்திர போர்களின் போது மட்டுமே கைகொள்ளப்பட்டதே தவிர இந்து-ராஜபுத்திர போர்களின் போது நடைபெறவில்லை என்பது குறிப்பிடத்தக்கது. எனவே ஜஉஹர் (jauhar) முறையானது இஸ்லாமிய ஆக்கிரமிப்பாளர்களிடம் பெண்கள் தங்களின் கற்பை பாதுகாக்க மேற்கொண்ட நடவடிக்கை என தெளிவாக தெரிகிறது. 2018 இல் வெளியான பத்மாவத் எனும் திரைப்படம் ஜஉஹர் முறையை சிறப்பாக வெளிப்படுத்தி காட்டியுள்ளது.

பட உதவி : www.idiva.com
ஆங்கில கிழக்கிந்திய கம்பெனியின் ஆட்சி இந்தியாவில் நிலைகொண்ட பிறகே சதிமுறைக்கு எதிரான குரல்கள் ஒலிக்க ஆரம்பித்தன. 1815இல் இருந்து 1818 வரையான காலப்பகுதியில் வங்காள மாநிலத்தில் மாத்திரம் சதி முறையால் இறந்தவர்களின் எண்ணிக்கை 387 இல் இருந்து 839 ஆக அதிகரித்தமை குறிப்பிட வேண்டிய விடயம். உடன்கட்டை ஏறும் இந்த மூடப்பழக்கத்தை வேரறுக்க கிறிஸ்தவ மறைபரப்பாளரான வில்லியம் கேரி என்பவரும், பிராமண இந்து சீர்திருத்தவாதி இராஜாராம் மோகன் ராய் முதலியோரும் அயராது பாடுபட்டு, 1829 இல் சதி முறையானது சட்டவிரோதம் என மாநில அளவிலான சட்டத்தை கொண்டுவர செய்தனர். 1861 இல் விக்டோரியா மகாராணியின் ஆணைப்படி இந்தியா முழுவதும் சதி முறை ஒழிக்கப்பட்டது. நேபாளத்தில் 1920 முதல் சதி முறைமை ஒழிக்கப்பட்டது. இந்திய சதி (உடன்கட்டை ஏறல்) தடுப்பு சட்டத்தின் படி, சதி முறைமையை ஆதரித்தல், பின்பற்றுதல், பிரபல்யம் செய்தல் ஆகிய அனைத்துமே தண்டனைக்குரிய குற்றங்களாக்கப்பட்டன. இருப்பினும் இன்னும் மின்சாரம் தொடாத சின்னஞ்சிறு கிராமங்களில் மடைமையின் பிரதிபலிப்பாக சதி ஏறும் சிதைகள் எரிந்துகொண்டுள்ளன.