மத்தேயு 10: 2 அந்தப் பன்னிரண்டு அப்போஸ்தலர்களின் பெயர்கள் வருமாறு:
சீமோன் (மற்றொரு பெயர் பேதுரு.) மற்றும் அவரது சகோதரன் அந்திரேயா, செபதேயுவின் மகன் யாக்கோபு மற்றும்
அவரது சகோதரன் யோவான், 3 பிலிப்பு மற்றும் பார்த்தலோமியு, தோமா மற்றும் வரி வசூலிக்கும் அதிகாரியான மத்தேயு,
அல்பேயுவின் மகன் யாக்கோபு, ததேயு, 4 சீலோத்தியனாகிய சீமோன் மற்றும் யூதா ஸ்காரியோத்து. இயேசுவை அவரது எதிரிகளிடம் காட்டிக்கொடுத்தவன் இந்த யூதாஸ் ஆவான்.
மாற்கு 3: 16 அவர் தேர்ந்தெடுத்த பன்னிரண்டு பேரின் பெயர்களும் பின்வருமாறு: சீமோன், இயேசு இவனுக்கு பேதுரு என்று பெயரிட்டார். 17 யாக்கோபு, யோவான் இவர்கள் செபெதேயுவின் மகன்கள். (இயேசு இவர்களுக்கு பொவனெர்கேஸ் என்று பெயர் வைத்தார். இதற்கு “இடி முழக்கத்தின் மக்கள்” என்று பொருள்) 18 அந்திரேயா, பிலிப்பு, பர்த்தலோமேயு, மத்தேயு, தோமா, அல்பேயுவின் மகனான யாக்கோபு, ததேயு, கானானியனான சீமோன், 19 யூதா ஸ்காரியோத். இந்த யூதாஸ்தான் இயேசுவை அவரது பகைவர்களிடம் காட்டிக்கொடுத்தவன்.
லூக்கா 6:13 மறு நாள் காலையில் இயேசு தனது சீஷர்களை அழைத்தார். அவர்களுள் பன்னிரண்டு பேரைத் தேர்ந்தெடுத்தார். அவர்களுக்கு “அப்போஸ்தலர்கள்” என்று பெயரிட்டார். அவர்கள்:
14 சீமோன் (இயேசு அவனுக்கு பேதுரு என்று பெயரிட்டார்) அந்திரேயா என்னும் பேதுருவின் சகோதரன், யாக்கோபு, யோவான், பிலிப்பு, பர்தொலொமேயு, 15 மத்தேயு, தோமா, யாக்கோபு (அல்பேயுவின் மகன்), சீமோன் (செலோத்தே என்று அழைக்கப்பட்டவன்) 16 யூதா, (யாக்கோபின் மகன்) யூதாஸ்காரியோத் என்பவர்கள் ஆவார்கள். இந்த யூதாஸ் இயேசுவைப் பகைவர்களிடம் ஒப்படைத்தவனாவான்.
யோவான் 11: 16 பிறகு தோமா என்று அழைக்கப்படும் சீஷன், ஏனைய சீஷர்களைப் பார்த்து, “நாமும் அவரோடு போவோம். யூதேயாவில் இயேசுவோடு நாமும் சாவோம்” என்றான்.
[16திதிம் என்னும் தோமா தம் உடன் சீடரிடம், “நாமும் செல்வோம், அவரோடு இறப்போம்” என்றார்.]
யோவான் 20: 24 இயேசு அங்கு தோன்றியபோது தோமா சீஷர்களுடன் இல்லை. அவரது பன்னிரண்டு சீஷர்களுள் தோமாவும் ஒருவன்.25 ஏனைய சீஷர்கள் “நாங்கள் ஆண்டவரைப் பார்த்தோம்” என்று தோமாவிடம் சொன்னார்கள். அதற்கு தோமா “நான் அவரது கைகளில் ஆணிகளின் துவாரங்களைக் காணும்வரை நீங்கள் சொல்வதை நம்பமாட்டேன். அப்படிப் பார்த்தாலும் அந்த ஆணித் துவாரங்களில் எனது விரல்களையும், விலாகாயத்தில் எனது கைகளையும் வைத்துப் பார்ப்பேன். இல்லாவிட்டால் நான் நம்பமாட்டேன்” என்றான். 26 ஒரு வாரத்திற்குப் பின் சீஷர்கள் முன்புபோல் அந்த வீட்டில் மீண்டும் கூடினர். தோமா அவர்களோடு இருந்தான். கதவுகள் மூடப்பட்டிருந்தன. ஆனால் இயேசு வந்து அவர்களின் நடுவில் நின்றார். “சமாதானம் உங்களோடு இருக்கட்டும்” என்றார்.27 பிறகு இயேசு தோமாவிடம் “உனது விரல்களை இங்கே வை. எனது கைகளைப் பார். எனது விலாவிலே உன் கையை வைத்துப் பார். சந்தேகத்தை விட்டுவிடு. விசுவாசி” என்றார். 28 அதற்குத் தோமா இயேசுவிடம், “என் ஆண்டவரே! என் தேவனே!” என்று பதில் சொன்னான். 29 இயேசு அவனிடம், “நீ என்னைப் பார்த்ததால் விசுவாசிக்கிறாய். என்னைப் பாராமலேயே எவர் விசுவாசிக்கிறார்களோ அவர்கள் பாக்கியவான்கள்” என்றார்.
யோவான் 21: 21 இதற்குப் பின்பு இயேசு மறுபடியும் தன்னை சீஷர்களுக்குக் காண்பித்தார். அது திபேரியா (கலிலேயா) கடற்கரையில் நிகழ்ந்தது. அதைப்பற்றிய விபரமாவது:2 அங்கே சில சீஷர்கள் கூடியிருந்தனர். அவர்களில் சீமோன் பேதுரு, தோமா, செபெதேயுவின் இரு குமாரர்கள், கலிலேயா நாட்டின் கானா ஊரானாகிய நாத்தான்வேல், மேலும் இரண்டு சீஷர்கள் குறிப்பிடத்தக்கவர்கள்.