தமிழக சமய வரலாறு என்பது இலக்கியங்கள், கல்வெட்டுகள், செப்பேடுகள், அகழாய்வு என விரிந்து, ஆய்ந்து ஒருங்கிணைக்கப்படும் ஆய்வு முடிவுகள்.இத்தளங்களில் ஒன்றில் ஆய்வு மேற்கொள்ளுபவர் மற்றவற்றைப் பற்றியும்ஓரளவு ஆழ்ந்த வாசிப்பு இருந்தால் மட்டுமே மேற்கொள்ளும் ஆய்வு முடிவுகள் நம்பகத்தன்மை கொண்டதாக அமையும். தற்கால தமிழியல் ஆய்வாளர்கள், குறிப்பாக கல்வெட்டு, நாட்டார் வழக்காற்றியல், செப்பேடு, அகழாய்வு ஆகிய துறைகளில் ஆய்வு மேற்கொள்ளும் ஆய்வாளர்கள், அவர்கள் சார்ந்த துறையறிவை மட்டுமே கணக்கில் கொண்டு தமிழர் வரலாற்றை நிறுவ முயல்கின்றனர்.
அத்தகைய ஆய்வுப் போக்குகள் தமிழர்களின் வரலாற்றை திரிப்பதோடல்லாமல், தமிழ் ஆய்வாளர்களின் குறைபாடான ஆய்வுமுறைகள்குறித்து மேலைநாட்டோர் குறைகூறுவதற்குப் பெரும் களம் அமைத்துக் கொடுக்கின்றனர்.உதாரணமாக, கடந்த 2015 மார்ச் மாதம் பதினைந்தாம் தேதி ‘தி இந்து’ தமிழ் நாளிதழில் வெளியான “சிற்பங்கள் தொன்மங்களைச் சித்திரிக்கின்றன: செந்தீ நடராசன் நேர்காணல்” என்ற பகுதியில் கல்வெட்டு ஆய்வாளர் திரு.செந்தீ நடராசன் அவர்கள் தமிழர்களின் சமயம் குறித்த கேள்விக்கு மனம் போன போக்கில் தவறான செய்திகளைக் கூறியிருக்கிறார். கல்வெட்டு ஆய்வாளர் திரு.செந்தீ நடராசன் ஆழ்ந்த இலக்கிய வாசிப்பு இல்லாதவர் என்பது "சங்க இலக்கியத்தில் சிவன், விஷ்ணு என்ற சொற்களே இல்லை. ஒரு இடத்தில் முக்கண்ணன் என்ற சித்தரிப்பு வருகிறது. அது இந்திரனைக் குறிப்பதாகத்தான் இருக்க வேண்டும். அவனுக்கும் மூன்று கண்கள்."என்றும் “சங்க இலக்கியத்தில் யாகங்களைச் செய்ததற்கான சான்றுகள் இருக்கின்றன. வைதீகம் இருந்திருக்கிறது. சமணமும் பவுத்தமும் ஆசிவகமும் இருந்திருக்கினறன. பின்னால் சங்க இலக்கியத்தை சைவர்கள் தொகுக்கும்போது சமண, பவுத்த தடயங்களை நீக்கிவிட்டார்கள் என்று சொல்லப்படுகிறது. அதையும் மீறிச் சில இடங்களில் இவற்றைப் பார்க்க முடிகிறது.” என்றும் சைவர்கள் மீது (மறைமுகமாக சங்க இலக்கியத்தைத் தொகுத்த தமிழ்த் தாத்தா உ.வே.சா. போன்றோர் மீது) குற்றச்சாட்டுக்களை எந்த ஆதாரமும் இன்றி வம்படி வழக்காக கூறுவதிலிருந்தே அப்பட்டமாக வெளிச்சமாகிறது.
செந்தீ நடராசன் கூறும் இந்திரன் கள்ளத்தால் அகலிகையைப் புணர்ந்து சாபம் பெற்ற கதையை பரிபாடல் 19ம் பாடல் விளக்குகின்றது. (இச்சாபத்தால் இந்திரன் பெற்றது ஆயிரம் கண்கள்; மூன்றாம் கண்ணல்ல) கண்ணுதலோன் அல்லது முக்கண்ணன் என்ற பெயரால் வழங்கப்படுவது சிவபிரானே என்பது குழந்தையும் அறிந்த ஒன்று. சங்க இலக்கியங்களில் சிவனும், விஷ்ணுவும் (திருமாலும்) பல இடங்களில் வருகின்றனர்.உதாரணமாக, சங்க இலக்கியத்தின் எட்டுத்தொகை நூல்களில், ஐங்குறுநூறு, கலித்தொகை, அகநானூறு, புறநானூறு என்ற நான்கு நூல்களிலும் கடவுள் வாழ்த்தாக அமைந்த பாடல்கள் சிவபெருமானைப் பற்றியவை. திருமால்(விஷ்ணு) ஐந்திணைத் தெய்வங்களுள் காடும் காடுசார்ந்த முல்லைக்குத் தெய்வமாக விளங்குகின்றான். சங்க இலக்கியங்களில் வரும் பாடல்களில் சங்கத் தமிழர்களின் சமய வாழ்வியல் உண்மைகள் எங்கும் நீக்கமற விரவிக் கிடக்கின்றன. அவைகளை யாரும் மனம் போன போக்கில் நீக்கிவிட முடியாது.
சங்கப்பாடல்கள் தமிழர்தம் வீரவரலாற்றையும், அகம், புறம் என்னும் கூறுகளின் ஊடே அவர்தம் சமூக வரலாற்றையும், பண்பாட்டு அசைவுகளையும் அழகுற வெளிப்படுத்துபவை. இப்பண்பாட்டு அசைவுகள் சங்ககாலத் தமிழர்களின் இறைவழிபாட்டுக் கூறுகளையும் உள்ளடக்கியதேயாகும். சங்ககாலத் தமிழர்களின் சமயவுணர்வு ஒழுக்கங்கள் குறித்த சொற்களும், சொற்றொடர்களும் சங்க இலக்கியப் பாடல் வரிகளின் ஊடே இழையோடிக் காணப்படுகின்றன; அவையே நாம் சங்கத்தமிழர்களின் இறைவழிபாட்டு முறைமைகளை அறிந்துகொள்ளும் சான்றுகளாகவும், வாயில்களாகவும் நின்று நம்மை மலைப்புறச் செய்கின்றன. புறப்படைஎடுப்பு எதையும் எதிர்கொள்ளாச் சங்கத்தமிழர்கள், புலவர்களின் பாடல்களையே சமூக,அரசியல் மற்றும் வரலாற்று ஆவணங்களாகக் கொண்டிருந்தனர். சங்ககால ஆட்சியாளர்கள் வரலாறு குறித்த சங்ககாலக் கல்வெட்டுகளோ, ஓலைச்சுவடிகளோ கிட்டாமைக்கு இதுவே காரணமாகும்.
சங்க இலக்கியங்களும், தொல்காப்பியம் உள்ளிட்ட இலக்கணங்களும் சங்ககாலத்தில் இருந்த உலக வழக்கையும், செய்யுள் வழக்கையும் ஒட்டியே உருவானவை என்பது தொல்காப்பியத்தின் பாயிரத்தில்பனம்பாரனார் பாடிய “தமிழ் கூறும் நல்லுலகத்து வழக்கும் செய்யுளும் ஆயிரு முதலின்” என்னும் வரியிலிருந்து விளங்கும். சங்கத் தமிழரின் சமயக் கொள்கைகளை தெளிவாக நிறுவ, சங்ககாலத்தில் இருந்த உலக வழக்கையும், செய்யுள் வழக்கையும் மட்டுமே சான்றாகக் கொண்டு ஆய்வை மேற்கொள்ளுவோம்.
சங்கத் தமிழரின் சமயக் கொள்கைகள்
சமய வாழ்வுக்கு இன்றியமையாத கடவுட் கொள்கை சங்ககாலத் தமிழரிடையே நிலவியதற்கு சங்கப்பாடல்களே சான்றாக நிலவுகின்றன. கடவுள் ஒருவர் உண்டு என்பதை உணர்ந்து, அவரை வாழ்த்தி, வணங்கி வழிபட்டு, உலக வாழ்க்கையை மேற்கொள்ளுவது சமய வாழ்வாகும். இக்கடவுட் கொள்கைக்கு நிலைக்களமாக உயிர்களும் இவ்வுலகமும் விளங்குகின்றன. உலகத்தை “நிலம், தீ, நீர், வளி விசும்போடு ஐந்தும் கலந்த மயக்கம்” என்று வரையறுக்கின்றது நம் தொல்காப்பியம். இவ்வைந்துக்கும் அப்பால், அவற்றை ஆக்கிப் படைத்து ஆட்டுவிக்கும் முதற்பொருளை சங்கத்தமிழர் ‘கடவுள்’ என்றும், ‘இயவுள்’ என்றும் குறித்துள்ளனர். “கடவுள் வாழ்த்து”, “பெரியோர் ஏத்தும் பெரும் பெயர் இயவுள்” ஆகிய தொடர் மொழிகள் இவைகளை நிறுவும். சமயம் என்ற நிலைக்களத்தில், “காலம் உலகம் உயிரே உடம்பே, பால் வரை தெய்வம் வினையே பூதம், ஞாயிறு திங்கள் சொல் என வரூஉம் ஆயீரைந்தும்” சிறந்த பொருள்களாக நிற்கின்றன. உயிர்கள் ஓரறிவு உடைய புல் முதல் ஆறறிவுடைய மனிதர்கள் முடிய ஆறு வகைப்படுகின்றன. இவ்வுயிர்கள் அனைத்தும் “மன்னுயிர்” என்றும் “தொல்லுயிர்” என்றும் சிறப்பாக வழங்கப்படுவதால், (மன் என்றால் நிலைப்பேறு என்று பொருள்) அவை கடவுளாகிய முதற்பொருளால் படைக்கப்படாமல் கடவுளைப்போன்றே என்றும் நிலைப்பேறுடைய உள்பொருளாகும். உயிர்கள் தவிர்த்த உலகமும், உலகிலுள்ள பொருள்களும் (உயிர்கள் வாழும் உடல்கள் உள்ளிட்ட) அம்முதற் பொருளால் படைக்கப்படுவன என்பது கடவுளை முதற்பொருள் என்பதோடு “உலகு இயற்றியான்” என்றும் “உலகு படைத்தோன்” என்றும் நற்றிணை:240 – ம் பாடலில் குறிப்பிடப்படுவதிலிருந்து அறியலாம்.
உயிர்களுக்கு என்று தனியான நிறமோ, உருவமோ இல்லை; ஆனால், அவை உலகியல் பொருட்களான பல்வேறு உடம்புகளுக்குள் புகுந்து இயங்குவதோடல்லாமல், ஏனைய உலகியல் பொருட்களையும் இயக்குகின்றன; இவ்வுயிர்கள் உடல்களில் ஏன் புக வேண்டும்? இதற்கு என்ன காரணம்? அதுதான் வினைப் பயன். உயிர்கள் அத்தகைய இயக்கங்களை புரிவதால், வினைகள் உயிர்களிடையே தோன்றி நிலவுகின்றன. “வினையெனப் படுவது வேற்றுமை கொள்ளாது நினையுங் காலைக் காலமொடு தோன்றும்” (தொல்.சொல்.சூ.198) எனத் தொல்காப்பிய நூற்பா குறிக்கும். செய்யும் வினைகளுக்குத் தகுந்த வினைப்பயனாக, உயிருக்கு உடம்பும், நுகர்பொருட்களான பலன்களும் அமைகின்றன. அத்தகைய உடம்பையும், நுகர்பொருட்களையும், அவற்றின் நிலைக்களனாக இவ்வுலகத்தையும் படைத்து அளிக்கும் கருணையைச் செய்வதே முதற்பொருளாகிய இறைவனின் தன்மையாகும். உயிர் இவ்வுலகில் உலவ இறைவன் படைத்து அளித்த உடலில் தங்கி வினை (தொழில்) செய்து, தன்னிடம் இயல்பாய் ஒட்டியிருக்கும் அறியாமையிலிருந்து நீக்கம் பெற்று, தன்னை அறிந்து, தன் தலைவனாம் இறைவனையும் அறிந்து நிலைத்த பேரின்பப் பிறவாநிலை பெற்றுப் பயன்பெறுவதால், இவ்வுலகம் உயிர்களின் பொருட்டே இறைவனாகிய பரம்பொருளால் படைக்கப்பட்டு, உயிர்களுக்கு உதவப்பட்டிருப்பது என்பது சங்கத் தமிழரின் சமயக் கொள்கையாகும். அவ்வாறு உடம்பையும் நுகர் பொருட்களையும் படைத்து அளிக்கும் வகையில் முதற் பொருளாகிய இறைவன் மேன்மையுற்று விளங்குகின்றான். ஆகவே, இறைவனுக்கும், உயிர்களுக்கும் உள்ள தொடர்பு பலன் கருதாது உதவி செய்வோனுக்கும், அவ்வுதவியைப் பெற்றோனுக்கும் உள்ளதாகும். உதவி பெற்ற உயிர்கள் இறைவனது அருளை நினைந்து வழிபட்டு உய்கின்றன. இதனால்தான் தொல்காப்பியர் கடவுள் வாழ்த்துப் பகுதிக்குச் சிறப்பாக இலக்கணம் வகுத்தார். சங்கத்தமிழர்கள் உலகுயிர்கள் இயங்கும் திறத்தினை தமது வாழ்வியல் நுகர்ச்சியில் கண்டு தெளிந்தவர்கள் என்பதை “ஆருயிர் முறைவழிப்படூஉம் என்பதைத் திறவோர் காட்சியில் தெளிந்தனம் ஆதலின் மாட்சியின் பெரியோரை வியத்தலும் இலமே! சிறியோரை இகழ்தல் அதனினும் இலமே!” என்று சங்கப்புலவர் கணியன் பூங்குன்றனார் “யாதும் ஊரே யாவரும் கேளிர்” பாடலில் திறம்படப் பதிவு செய்கின்றார். (அவர்கள் தமது வாழ்வியலின் முடிந்த முடிவாகக் கண்டுணர்ந்த மெய்யுணர்வுக் கொள்கையே பிற்காலத்தில் சைவசித்தாந்தமாக அடையாளம் காணப்பட்டது.)
உயிர் வகையுள், மக்களை உயர்திணை உயிர் என்றும், ஏனைய உயிர் வகையை அஃறிணை உயிர் எனவும் வகுத்தனர் சங்கத்தமிழர். உயர்திணை' என்மனார், 'மக்கட் சுட்டே;' , 'அஃறிணை'என்மனார், 'அவர் அல பிறவே;' – (தொல். சொல். சூ. 1) என்கின்றது சங்கத்தமிழ் தொல்காப்பியம். மக்கள் இனத்துள் அடங்காமல், கடவுளாகிய (அல்லது இறைவனாகிய) முதற்பொருளும் ஆகாமல், இவை இரண்டிற்கும் இடைப்பட்ட நிலையில் ‘தெய்வங்கள்’ காணப்படுகின்றன. இத்தெய்வங்கள் உலக உயிர் போல மனவுணர்வும், வினை புரிதலும் இன்ப துன்ப நுகர்ச்சியும் கொண்டு, பிறத்தலும் இறத்தலும் உடையன. தெய்வங்களின் செயல் முறைகளும், வாழ்க்கையும் உலக உயிர்களினின்றும் மேல்-நிலையில் உள்ளன. “தெய்வம் சுட்டிய பெயர் நிலைக்கிளவி” 'இவ்' என அறியும் அந்தம் தமக்கு இலவே; - (தொல். சொல். சூ. 4.) உலக மக்கள் இனம் அல்லாததால், “இவ்வென அறியும் அந்தம் தமக்கு இல” என்றும், சொல் உலகில் “உயர்திணை மருங்கின் பால்பிரிந்து இசைக்கும்” எனவும் வரையறுத்துள்ளார் தொல்காப்பியர்.
மேலும், குறிஞ்சி நிலம் முதலாக தெய்வவகை அனைத்திற்கும் தோற்றம் நிலை வேறுபாடு கூறப்படுவது போல, முதற்பொருளாம் இறைவனுக்கு தோற்றமும் ஈறும் கூறப்படுவதில்லை. சங்க இலக்கியங்களில் முதற்பொருளாம் இறைவனை குறிக்கும் போதெல்லாம் பிறைமுடியும், முக்கண்ணும், கறைமிடறும் உடையவனாகக் குறிக்கின்றன. இவ்விறைவன், சங்கத்தமிழரின் அன்றாட வாழ்வியலில் உணர்வில் கலந்தவன் என்பதை, நீண்ட ஆயுள் தரவல்ல அரிய நெல்லிக்கனியைத் தானுண்ணாது தனக்கு ஈந்த வள்ளல் அதியமான் நெடுமான் அஞ்சியைப் பாடிய புறநானூறு: 91-ம் பாடலில் சங்கப்புலவர் ஔவையார் அழகுற வெளிப்படுத்துகின்றார். ஔவையார் அக்கனியை உண்டபின்னரே அதன் சிறப்பை அறிந்து பெருவியப்புற்றார். தான் நெடிது வாழ நினையாது, எனக்குத் தந்து என்னை நெடிது வாழச் செய்த பெருந்தகை வள்ளலை வாழ்த்தப் பாடிய ஔவையார் “இந்நெல்லிக்கனியின் அருமை கருதாது எனக்குத் தந்து சாதலை நீக்கிய நீ நீலமணி மிடற்றுக் கடவுள் போல என்றும் நிலைபெற்று வாழ்வாயாக!” என்று வாழ்த்தியுள்ளார். இதோ அப் புறநானூற்றுப் பாடல்:
வலம்படு வாய்வா ளேந்தி யொன்னார்
களம்படக் கடந்த கழறொடித் தடக்க
ஆர்கலி நறவி னதியர் கோமான்
போரடு திருவிற் பொலந்தா ரஞ்சி
5 பால்புரை பிறைநுதற் பொலிந்த சென்னி
நீல மணிமிடற் றொருவன் போல
மன்னுக பெரும நீயே தொன்னிலைப்
பெருமலை விடரகத் தருமிசைக் கொண்ட
சிறியிலை நெல்லித் தீங்கனி குறியா
10 தாத னின்னகத் தடக்கிச்
சாத னீங்க வெமக்கீத் தனையே. (91)
“நீலமணி மிடற்று ஒருவன்போல” என்ற கருத்து, “பல்லுயிர்களையும் சாவிலிருந்து காக்கும் பொருட்டு, சாதற்குக் காரணமாகிய கொடிய ஆலால நஞ்சைத் தானுண்டும், அந்நீலமணிமிடற்று இறைவன்நிலைபெற்றிருந்தாற் போல, நீயும் சாவாதிருத்தல் வேண்டும்” என்றார். ‘ஒருவன்’ என்ற விளி இறைவனைக் குறிக்கும். இப் புறநானூற்றுப் பாடல், நீலமணிமிடற்று இறைவன் மக்களின் வாழ்வியல் இரண்டறக் கலந்தவன் என்பதை வெளிக்காட்டும் ஒரு சிறந்த உதாரணமாகும். (இறைவன் குறித்த பல சங்கக் காட்சிகளைத் தனியே காண்போம்)
தற்காலத்தில், ‘சிவன்’, ‘சிவம்’ என்ற சொற்களால் குறிக்கப்படும் முதற்பொருளாம் இறைவன் இவ்வடையாளங்களைத் தன்பால் கொண்டிருப்பது கொண்டு, சிவப் பரம்பொருளே பழந்தமிழர்களாம் சங்கத்தமிழரின் சமயத்துறையில் நிலவிய கடவுள் / இறைவன் என்பது தெளிவாகும். சங்க இலக்கியங்களில் தெய்வங்களுக்குத் தோற்றமும், இறைவனுக்கு அது கூறப்படாமையும் நோக்கும்போது, உடல்களில் பிறவாத வாழ்க்கைப் பெருமையுடையவன் இறைவன் என்பதும், பிறந்து நிலை வேறு கொண்டு இயங்குவன தெய்வங்கள் என்பதும் பழந்தமிழர் கொண்டிருந்த இறைக்கொள்கைகள் எனத் தெளிவாகும்.
சங்ககால மக்கள் வாழ்வில் வினையுணர்வும் மறுபிறப்பும், வீடுபேற்றின்பமும், நிரயம் என்னும் சொர்க்க/ நரகத் இன்ப/ துன்பமும் சொல்வழக்கில் நிலவுகின்றன. மக்களின் மனம், மொழி, மெய் என்னும் உடம்பு ஆகிய மூன்றின் அசைவு மற்றும் அசைவின்மைகளால் வினைகள் தோன்றுகின்றன. வினையில்லாத உயிரே உலகில் இல்லை. ஒவ்வொரு வினைக்கும் அதற்கேற்ற பயன் உண்டு. இன்பம் பயப்பது நல்வினை; துன்பம் தருவது தீவினை. நல்வினை செய்தோர் இன்பத்துக்கும், தீவினை செய்தோர் துன்பத்துக்கும் உரியவராவர். இறந்தகால வினை (செயல்கள்) உயிர்கட்கு நிகழ்காலத்தை ஏற்படுத்துகிறது. நிகழ்கால வினை எதிர்காலத்தை உருவாக்குகிறது. செய்யும் வினைக்கேற்ப ஊதியமும் உறைவிடமும் அமைவது போல வினைக் கேற்பவே உயிர்கட்கு நுகர்ச்சியும் உடம்பும் அமைகின்றன.
உடலுடன் பொருந்திய உயிருக்கு வினைகள் தோன்றுகின்றன. வினைக்கு உயிரோ உணர்வோ இல்லை. அது தானேச் சென்று வினை செய்தவனுக்குரிய பலனைத் தருவதில்லை. வினை செய்தவனுக்கு வினைப் பயன் அவனையே அடைவதற்குரிய தொழிலைச் செய்யும் வகையில் தெய்வங்கள் பணிபுரிகின்றன. அரசன் இட்ட பணியை ஏவலர்கள் செய்வது போல, வினை செய்தோனுக்குரிய வினைப்பயன் அவனையே அடையுமாறு இறைவனிட்ட பணியை அந்த தெய்வங்கள் செய்கின்றன. அதனாலேயே அத்தெய்வங்களை “பால் வரை தெய்வம்” என்கிறார் தொல்காப்பியர். செய்யப்படும் வினைப்பயன்களுக்கு ஏற்றவகையில் உயிர்களுக்கு இம்மை, மறுமை, வீடுபேறு என மூவகை உலகுகள் காட்டப்படுகின்றன.
“காலம் உலகம் உயிரே உடம்பே
பால்வரை தெய்வம் வினையே பூதம்
ஞாயிறு திங்கள் சொல்லென வரூஉம்
ஆயீரைந்தோடு பிறவுமன்ன
ஆவயின் வரூஉங் கிளவி எல்லாம்
பால் பிரிந்திசையா வுயர்திணை மேன.”
(தொல். சொல். சூ. 57)
காலம் என்பது காலக் கடவுள். உலகம் என்பது உலக மக்கள் வினை செய்தற்குரிய இடமான மண்ணுலகம். வினைப்பயனை நுகர்தற்குரிய மறுமையுலகம் நிரயம். தொல்காப்பியர் ஊழின் இயல்பினை எடுத்துரைத்தலால் அவ்வூழிற்குக் காரணமாகிய மறுபிறப்பு உண்டென்பதும் சங்கத்தமிழரின் கருத்தென்பது தெரிய வருகிறது. வினைத் தொடர்பினின்றும் அறவே நீங்கி விளங்கும் அறிவுடைச் சான்றோர்க்குரியது வீடுபேறு என்றும் சங்கத்தமிழர் கருதினர். வினை செய்தவுடனே உடன் தோன்றும் வினைப்பயன் வினைமுடிவில் ஊழ்கனிபோல் நின்று நுகர்ச்சிக்குரிய காலத்தில் வினைபுரிந்தோனே அப்பயனை நுகரும்வண்ணம் செய்கின்றன இறைவன் ஆணையால் இயங்கும் தெய்வங்கள். (இதுவே ஊழ்வினை என்பது சங்கத்தமிழர் கருத்து.)
ஊழ்வினையை ஊட்டுவிக்கும் பணி இறைவன் ஆணைவழி இயங்கும் தெய்வங்களின் செயல்களாதலால், தெய்வ வழிபாட்டால் வினைப்பயனது நுகர்ச்சி கால வகையில் வேறுபடும் என்று கருதினர் சங்கத்தமிழர். குன்றவர் முருகனுக்கு வழிபாடாற்றி வேட்டம் செல்வதும், ஆயர் மாயோனுக்கு குரவையாடி வழிபாடு இயற்றுவதும், வேளாளர் இந்திர விழா எடுத்தலும், பரதவர் சுறவுக்கோடு நட்டு வருணனுக்கு வழிபாடு செய்து மீன் வேட்டம் புரிவதும், கொற்றவையை வழிபட்டு எயினர் மறத்தொழில் செய்வதும் சங்க இலக்கியங்களில் காணப்படுவது இக்கருத்து பற்றியதே ஆகும்.
கடவுள், தெய்வம் என்னும் சொற்களில் மட்டும் இறைமையை தொல்காப்பியர் கூறியதோடு நில்லாமல், தொல்காப்பியம் முழுமையும் இறையியல் நிறையியலாக நிறைந்திருப்பதைக் காணலாம். உதாரணமாக, எழுத்ததிகாரத்தில், "தமிழில் உயிர், மெய், உயிர் மெய் என அமைந்த அற்புதச் செய்தி எண்ணுவதற்கு இனிமை பயப்பதாகும். "உயிர்" என்பது "ஆதியும் அந்தமும் இல்லாத அருட்பெருஞ்சோதியுமான அழிவில்லாத பொருளை" என்றும். "மெய்" என்பது சாருகின்ற பண்டங்கள் தோறும் சார்ந்ததின் வண்ணமாய்க் காணப்படும் ஆன்மாவை என்றும். "உயிர்மெய்" என்பது கடவுளும் பரிபக்குவம் எய்திய ஆன்மாவும் இரண்டறக் கலந்த நிலையாகும்" என்றும். "ஆன்மாவின் இயற்கை ஆணவத்தோடு நிற்றல் என்றும் கொள்ளலாம்; இதை தொல்காப்பியர் "மெய்யின் இயற்கை புள்ளியொடு நிலையல்" என்றார்.
ஆன்மாவின் இயக்கமும் அதன் அனுபவ விளைவும் இறைவனால் நடைபெறுகின்றது. இந்த உண்மையைத் தொல்காப்பியர்" மெய்யின் இயக்கம் அகரமொடு சிவனும்" (தொல்.எழுத்து.சூ. 46.) என்றார். "க்" என்ற மெய்யெழுத்தில் உள்ள புள்ளியே ஆணவமாகும். மெய் என்ற ஆன்மாவில் ஆணவம் என்ற புள்ளி அகல அகரம் அவற்றோடு ஒன்றாக வேண்டும். அப்போது "க்" என்ற புள்ளி இயல்பாக நீங்கி "க" என்று உயிரின் அளவாய் ஒலிக்கும். அதுபோல அகரமாகிய இறைவன் மெய்யாகிய ஆன்மாவில் கலந்து கொண்டால் ஆன்மா ஆணவம் நீங்கி அவன் அளவினதாய் நிற்கும்" என்று கூறிய தவத்திரு தேமொழியார் சுவாமிகளின் கருத்து இங்கு ஆராயத்தக்கது. (நன்றி:’மாமறை பேசுகிறது’ கட்டுரை.).
உலக வாழ்வில், அனைத்து உயிர்களும் இன்பம் ஒன்றையே விரும்புகின்றன. “எல்லா உயிர்க்கும் இன்பம் என்பதுதான் அமர்ந்து வரூஉம் மேவற்றாகும்” (தொல்.பொருள்..சூ. 219).என்பது தொல்காப்பியர் வாக்கு. இந்த இன்பப்பயனை அடைவதற்காகத் தோன்றும் வினை தடையாகி நிற்கும் போதும் இன்னல்களைச் சந்திக்கும் போதும், அத்தகைய தடைகளையும், இன்னல்களையும் நீக்குவதற்காக மக்களின் அறிவும், முயற்சியும் பெருமளவு ஈடுபடுத்தப்படுகின்றன. தடைகளும், இன்னல்களும் எல்லை கடந்து செல்லும்போது சமயவுணர்வும் வழிபாடும் தோன்றுகின்றன. பெருமழை, மழையின்மையால் பெரும்வரட்சி, பெருங்காற்று, பெரும்பகை, கொடுவிலங்கு போன்றவற்றால் இடையூறு உண்டாகும்போது தெய்வவழிபாடு மூலம் தீர்வுகாண முயல்கின்றனர். பெருமழையில் வருந்திய குறிஞ்சிநிலக் குறவர் மக்கள் கடவுள் வழிபாட்டால் மழை நின்று மகிழ்வெய்தினர் என்று பறைசாற்றுகின்றது புறநானூறு. இதோ அப்பாடல்:
“மலைவான் கொள்கென வுயர்பலி தூஉய்
மாரி யான்று மழைமேக் குயர்கெனக்
கடவுட் பேணிய குறவர் மாக்கள்
பெயல்கண் மாறிய உவகையர்” (புறநானூறு: 143)
வினையின் தொடக்கத்தில் இடையூறு நேராமல் இருப்பதற்காகவும், வினையின் நடுவில் வந்த இடையூறு நீங்குவதற்காகவும், வினையின் முடிவில் வினைப்பயனாக வரவேண்டிய இன்பம் குறைவிலாது கிடைப்பதற்காகவும், சமய வழிபாடு நிகழ்த்தப்பட்டது.
சங்ககாலத் தமிழர்கள், உலகமக்கள் வாழ்வை அகம், புறம் என இரண்டாக வகுத்துக்கொண்டனர். உடல் வளர்ச்சியிலும், மன வளர்ச்சியிலும் முழுவதும் தகுதி பெற்று, தனியே இருந்து வாழ்க்கை நடத்தும் திறனுள்ள ஒருவனும் ஒருத்தியும்ஒருவரையொருவர் விரும்பிக் காதலுறவு கொண்டு, உள்ளத்தால் ஒன்றுபட்டு மணம் செய்துகொண்டு இல்லறம் புரியும் ஒழுக்க வாழ்வே அகம் எனப்படும். அகம் தவிர்ந்த அனைத்து வாழ்வும் புறம் ஆகும். சமய வாழ்வு ‘புறம்’ பகுதியைச் சார்ந்தது.
சங்க இலக்கியங்களில் வெளிப்படையாக முழுமுதற் கடவுளைச் ‘சிவன்’ என்ற பெயரால் கூறப்படவில்லை. (சிவன் என்பது சிவப்பு, செம்மை என்ற காரனப்பெயராகும். இறைவனுக்கு மட்டுமல்ல, எவரையும் அவர்தம் சிவந்த மேனி நிறத்தைக்கொண்டு புகழும் காட்சிகளைச் சங்கப்பாடல்களில் எங்கும் காண இயலாது. இது, சங்கப்பாடல்களின் தனிச்சிறப்பாகும்.)ஆனால், முழுமுதற் கடவுளின் இயல்பை விரித்துரைக்கப்பட்டுள்ளது; குறிப்பாக, அவன் எடுத்த படைகளாகிய கணிச்சி, மழு, மூவிலைச்சூலம் பற்றியும், அவனுடைய இடபவாகனத்தையும்,உமாதேவியார் எப்போதும் பெருமானுடன் சேர்ந்திருப்பதையும், பெருமான் எப்போதும் இசைபாடுவதையும் கூறும் அவர், அவனது பழமையான இயல்புகள் அமரரும், முனிவரும், பிறரும் அறியாத் தொன்மை மரபென்றும், அவன் அருள்மயமான தாளின்கீழ்உயிர்க்கூட்டம் எப்போதும் வாழ்கின்றன என்றும் திறம்படக் கூறுகின்றனர் சங்கப்புலவர்கள். "அறவாழி அந்தணன்" என்று இறைவனை அழைக்கின்றார் திருவள்ளுவ தேவநாயனார்; பெருந்தேவனாரோ "மணிமிடற்று அந்தணன்" (நீலகண்டன்) என்றழைத்து மகிழ்கின்றார். இதோ சிவபெருமானின் புகழ்பாடும் பெருந்தேவனாரின் கடவுள் வாழ்த்து பாடல்:
இங்கும், புலவர் பெருந்தேவனார், "சிவன்" என வெளிப்படையாகக் கூறாது அவன் தன்மைகளையே பாமாலையாகச் சூட்டுகின்றார். சிலப்பதிகாரத்தில் இளங்கோவடிகளும் சிவன் கோவிலை "பிறவா
யாக்கைப் பெரியோன் கோவில்" என்றே பதிவு செய்கின்றார். சிவபெருமானைப் பற்றிப் பாடும் பெரும்பான்மையான சங்கப்பாடல்களில் இம்மரபையே கைக்கொண்டு பாடப்பட்டிருக்கின்றதைக் காண்கிறோம். புறநானூறு சங்கப் பாடல்களில் பாடல் எண்கள் 55, 91 ஆகியவை சிவபெருமானைப் பற்றிய குறிப்புகளையும் பாடல் எண்கள் 57, 58 ஆகியவை திருமாலைப் பற்றிய குறிப்புகளையும், பாடல் எண் 56 யமன், சிவன், திருமால், முருகன், பலதேவன்ஆகியோர் பற்றிய குறிப்புகளையும், பாடல் எண் 299 முருகன் கோயில் பற்றிய குறிப்புகளையும், பாடல் எண் 241 இந்திரன் கோயில் பற்றிய குறிப்புகளையும், பாடல் எண் 378 இராமன், சீதை,இராவணன், அனுமன் குறிப்புகளையும் கொண்டவை என்பதைக் காணலாம்.
தமிழன் கொஞ்சம் உறங்கினால் சங்கஇலக்கியங்களே அடையாளம் தெரியாமல் அழிந்துவிடும் அபாயம் செந்தீ நடராசன் போன்றோரால் ஏற்படும் என்ற அச்சம் வருகின்றது. தமிழ்ப் பண்பாட்டு அடையாளங்களை இவர்போன்றோர் தம் “அறியாமை அடாவடி அதிரடி நாட்டாமை” முறை தீர்ப்புகளால் அழித்துவிடுவர். இவர்கள் அனைத்து இலக்கியங்களையும் பொருள்முதல்வாதம் மற்றும் ஐரோப்பிய ஆய்வுச் சட்டகங்களைக் கொண்டும் அடக்க முயல்வதுதான் இத்தகைய அவலங்களுக்குக் காரணம். உள்ளதை உள்ளபடியே ஏற்றுக்கொள்வதும், மேலேடுத்துச் செல்வதும்தான் பன்மைத்துவம் ஆகும். பன்மைத்துவத்துக்கு வேள்வியை அடிப்படையாகக் கொண்ட வேதமதத்து ஆரிய ஒர்ரைப்புனிதக் கொள்கைகளால் ஆபத்து என்றால், பொருள்முதல்வாதிகளால் ஏற்படுவது மற்றோர் பேராபத்து. பன்மைத்துவத்தாலான தமிழக மற்றும் இந்தியப் பண்பாட்டு அசைவுகளுக்கு இவை இரண்டுமே அச்சுறுத்தல்கள்தாம்.