இந்தியாவிற் பெரும்பாலும் ஈரின மக்கள் வாழுகின்றனர் எனப் பத்தொன்பதாம் நூற்றாண்டில் இந்திய வரலாறெழுதிய மேனாட்டவர் ஆதாரமின்றி எடுத்துக்கொண்டனர். இவர்களின் கற்பனையில் எழுந்த இந்த இனங்களை ஆரியர், திராவிடர் எனப் பெயரிட்டனர். ஈரான் மத்திய ஆசியா முதலிய இடங்களிலிருந்து வந்த காக்கேசியக் குழுக்களின் சந்ததிகள் ஆரியராவர். பண்டை இந்திய மக்களின் சந்ததிகள் திராவிடராவர். இந்தியாவிற்குட் புகுந்த மங்கோலிய சித்தியக் குழுக்களை இவர்கள் புறக்கணித்தனர்.
ஆரியர், திராவிடர் எனுஞ் சொற்கள் இந்தியா, இந்து மதம் என்பவைபோன்று பிற்காலத்திலெழுந்த சொற்களாகும். வடமொழியிலோ தென்மொழியிலோ “ஆரியன்” என்ற சொல் இன அடிப்படைச் சொல் அன்று. திசை அல்லது நாட்;டடிப்படைச் சொல்லாகும். இந்தியாவின் வட பகுதியிலுள்ள நாடுகள் ஆரியவர்த்தம் எனப்பட்டன. மேலும் ஆரியன் என்ற சொல்லுக்குப் பல கருத்துக்களுண்டு. பெரியோன், பழையவன், நாகரிகமுடையவன், பண்பாடுடையவன், உழவன் என்பவை இவற்றுட் சிலவாகும். தமிழ் என்பது திரிந்து திராவிட மாகிற்று என்பர். அவ்வாறாயின் தமிழ் பேசும் மக்களே திராவிடர் எனப்படுவர். கன்னடம், தெலுங்கு, மராட்டி, ஒரிசா மொழிகள் பேசுவோர் தாம் திராவிடர் என்பதை ஒப்புக்கொள்வதில்லை. அவர்கள் தம்மை ஆரியர் என்கின்றனர். இன்று மலையாள மக்கள் தாமும் தம்மை ஆரியர் என்கின்றனர். இதற்கெனப் புராணங்கள் எழுதி வைத்திருக்கின்றனர். வங்காள மக்கள் இன அடிப்படையில் மங்கோலிய – திராவிடராயினும் தம்மை ஆரியர் என்கின்றனர். தென்னிந்தியாவில் வாழ்ந்த பண்பாட்டிலும் நாகரிகத்திலுங் குறைந்த பல குலத்தவர் - இயக்கர், நாகர், முண்டார் முதலியோர் – பிற்காலத்திலே தம்மை ஆரியரெனப் புகழ்பாடிப் புராணங்கள் எழுதுவித்தனர்.
தமிழ் என்ற சொல் “த்ரமிளம்” என்ற வட சொல்லிலிருந்து பிறந்தது எனவும் த்ரமிளம் என்ற சொல்லின் கருத்து துரத்தப்பட்டவர் எனவுஞ் சில வடமொழியாளர் கூறுவர்.
ஆரியர் என்ற சொல்லிற் சமய அடிப்படையான கருத்துமுண்டு. இந்து மதத்தையும் தர்மத்தையும் ஒழுக்கத்தையும் பின்பற்றுவோர் ஆரியர் எனப்பட்டனர். இருவரும் இந்துக்களானபடியினால் கம்பர் இராமனையும் இராவணனையும் ஆரியரெனக் குறிப்பிடுகிறார். ஆரிய மதம் ஆரியதருமம் என்பனவற்றில் ஆரிய என்ற சொல்லின் கருத்து இந்து என்பதாகும். இக்கருத்தின்படி எந்நாட்டவனும் எவ்வினத்தவனும் இந்துவாகும்போது ஆரியனாகிறான். இந்து மதத்தைச் சேராதவர் ஆரியராக முடியாது.
சிந்து நதிக்குக் கிழக்கே கங்கை சமவெளியில் ஒரு சிறு பகுதி பண்டைக்காலத்தில் ஆரிய வர்த்தகம் எனப்பட்டது. இப்பகுதியில் வாழ்ந்த மக்கள் எக்காரணம் பற்றியோ தம்மை ஆரியர் எனக் குறிப்பிட்டனர். இப்பகுதியிலேதான் வேதங்களும் ஆகமங்களும் உபநிடதங்களும் தோன்றின. ஞானிகளும் முனிவர்களும் வாழ்ந்தனர். பௌராணிக மதம் வளர்ந்தது. காக்கேசிய, ஈரான் முதலிய நாடுகளிலிருந்து இந்தியாவிற்குட் புகுந்த குழுக்களை இப்பகுதி மக்கள் மிலேச்சர் எனக் குறிப்பிட்டனர். இந்த ஆரிய மக்கள் எக்காலத்திலாவது இந்தியாவிற்கு வெளியிலிருந்து வரவில்லை என்பதை இவர்களுடைய நூல்கள் கூறுகின்றன. மனிதன் முதன் முதலிலே தோன்றியவிடம் சரஸ்வதி நதிக்கரையெனவும் அங்கிருந்து சென்று அவன் உலகிற் பல பாகங்களிலுங் குடியேறினான் எனவும் வேதங்கள் கூறுகின்றன. புராணங்களும் இக்கருத்தை வலியுறுத்துகின்றன.
(ஆ)இங்குதான் வேதங்களும் ஆகமங்களும் உபநிடதங்களும் முதன் முதலிற் கூறப்பட்டன.
(இ)ஆரிய மதமும் தருமங்களும் தோன்றின.
இப்படிப்பட்ட கதைகள் பல மக்களிடையிலுள்ள உவில்லிய வேதமும் இப்படிப்பட்ட கதைகளில் ஒன்றாகும். குமரி நாட்டிலிருந்து மக்கள் இந்தியா முழுவதிலும் வேறு பல நாடுகளிலும் பரவினர் என்பது தமிழராகிய எமது கதையாகும். இக்கதையை இந்நூல் கூறுகிறது. சரஸ்வதி நதிக்கரையிலிருந்து மக்கள் இந்தியா முழுவதிலும் உலகிலும் பரவினர் என்பது வட இந்திய புராணக் கதையாகும். எது உண்மை என்பதை வருங்காலத்தில் விஞ்ஞானிகள் முடிவு செய்யட்டும். ஆனால் இவற்றிலிருந்து ஒரு பேருண்மையை அறியலாம். இந்திய மக்கள் யாவரும் அடிப்படையில் ஓரினத்தவர் என்பதும் எமது மொழிகளில் “ஆரியர்”, “திராவிடர்” என்ற சொற்கள் இன அடிப்படைக் கருத்துடையவையல்ல என்பதும் வெளிப்படை பௌராணிக மதமும் ஆரியப் பண்பாடும் பிற்காலத்தில் இந்தியாவின் ஏனைய பகுதிகளிற் பரவியபோது, அப்பகுதி மக்களும் ஆரியராகினர். தக்கணத்திலும் வடகிழக்கு இந்தியாவிலும் வாழ்ந்த மக்கள் சங்க காலத்தில் ஆரியராகக் கருதப்படவில்லை என்பதைச் சிலப்பதிகாரங் காட்டுகிறது.
“கொங்கணர் கலிங்கர் கொடுங் கருநாடர் பங்களர், கங்கர், பல்வேற்கட்டியர் வடவா ரியரோடு.” இங்கு ஆரியர் என்பது நாட்டடிப்படைச் சொல்லாகும்.
மேனாட்டவர் ஆரியர் திராவிடர் என்ற சொற்களை இன அடிப்படைக் கருத்திற் பயன்படுத்தினர். இவர்கள் மக்களை நான்கு அடிப்படை இனங்களாக வகுத்தனர். ஆரியர், நடுநிலக் கடலக மக்கள், நீக்குரோக்கள், மங்கோலியர், வடபுல மக்கள் ஆரியராவர். ஆரிய மக்களுக்குச் சர்மனியர், காக்கேசியர், ஈரானியர் உதாரணமாவர். “இவர்கள் நீண்டுயர்ந்த தேகத்தின. வெள்ளை நிறத்தினர். கரிய அல்லது நீல விழியினர். முகத்தில் மிகுந்த மயிரினர், நீண்ட மண்டையினர், ஒடுங்கி உயர்ந்திருந்தாலும் தனிப்பட நீளாத மூக்கினர். மேனாட்டவர் இங்கு வந்தபின் ஆரியர், திராவிடர் என்ற எமது சொற்களுக்கு அவர்களுடைய இன அடிப்படைக் கருத்துக்களைக் கொடுக்க எத்தனித்தபடியினால், வரலாற்றில் மயக்கமும் குழப்பமும் ஏற்பட்டன.
பண்டை இந்திய மக்களைக் கியேர்சன என்பவர் ஏழு அடிப்படை இனங்களாகப் பிரிக்கிறார். (1) துருக்கி - ஈரானியர் (2) இந்திய – ஆரியர் (3) ஆரியத் - திராவிடர் அல்லது இந்துஸ்தானியர் (4) சித்தியத் திராவிடர் (5) மங்கோலியர் (6) மங்கோலியத் திராவிடர் (7) திராவிடர்
மேலும் அவர் கூறியதாவது:-
“சென்னை மாகாணத்தில் உள்ளவர்கள் எல்லாம் திராவிடர் என்றோ அன்றி வங்காளத்தில் உள்ளவர்கள் எல்லாம் மங்கோலிய – திராவிடர் என்றோ கூறுவது அறியாமையாகும். பண்டுதொட்டு இவ்வினங்கள் யாவும் இந்தியாவிற் பலகாலம் வாழ்ந்து கலந்துவிட்டன. ஆகவே ஆரியர் – திராவிடர் என்பன போன்ற இனப்பிரிவுவகை ஆராய்ச்சிக் கருவியாகக்கொண்ட பொதுவான அளவுகோலாகும்.” இன்று மக்கள் மொழி அடிப்படையில் இனங்களாகப் பிரிக்கப்படுகின்றனர்.
பண்டைக்காலத்தில் இந்தியா முழுவதிலும் தெற்கே குமரி நாட்டிலும் வாழ்ந்த மக்கள் நடுநிலக் கடலக இனத்தவர் என்பதில் ஐயமில்லை. இவர்களை நாம் திராவிடர் என்போம். ஆனாற் காலத்துக்குக் காலம் பலவினக் குழுக்கள் வெளி நாடுகளிலிருந்து இந்தியாவிற் குட்புகுந்து அங்கு வாழ்ந்த திராவிட மக்களுடன் கலந்தன. இவற்றில் மூன்று இனங்ள் முக்கியமாகக் குறிப்பிடலாம். (1) மங்கோலியர், இவர்கள் முதன் முதலில் இந்தியாவிற்குட் புகுந்த காலம் கி.மு. 14,000 அளவிலாகக் கணிக்கப்படுகிறது. இவர்கள் இமயமலைச் சாரலிலும் வடகிழக்கு இந்தியாவிலும் பரவினர். கிழக்குக் கரையோரமாக இலங்கை வரையும் வந்தனர் என்வும் யக்கரும், நாகரும், மங்கோலிய இனத்தவர் எனவும் ஒரு கொள்கையுண்டு. வங்காளத்திலும் அராமிலும் வாழும் மக்கள் மங்கோலியருடன் ஓரளவு கலந்த திராவிடராவர். மங்கோலிய – திராவிடர் எனப்படுவர். ஆனால், இப்பகுதிகளிலேதானும் மங்கோலியருடன் கலப்பில்லாத திராவிடரும் பெருந்தொகையாக உளர்.
(2)சிதியக் குழுக்கள் இந்தியாவிற்குள் முதன் முதலிற் புகுந்த காலம் கி.மு. 9000 அளவிலாகும். இவையும் திராவிட மக்களுடன் கலந்தன. குஜராத்திலும், மகாராஷ்டிரத்திலும், சிந்திலும் வாழும் மக்கள் சிதிய – திராவிடராவர். அதாவது சிதியருடன் ஓரளவு கலந்த திராவிடர், பிற்காலத்திலே பல குழுக்கள் பிற நாடுகளிலிருந்து வந்து இந்தியாவின் மேற்குக் கரையோரங்களிற் குடியேறின. யவனர் கிரேக்கர், அரேபியர், சீரியர் இவைகளுட் சில.
(3)ஆரியர் என்ற சொல்லை மேனாட்டவரின் இன அடிப்படைக் கருத்திற் பயன்படுத்துவோம். கி.மு. 2000 அளவில் மத்திய ஆசியாவிலிருந்தும் ஈரானிலிருந்தும் பல நாடோடிக் குழுக்கள் இந்தியாவிற்குட் புகுந்தன எனவும் இவையே இந்தியாவிற்குள் முதன் முதலிற் புகுந்த ஆரியக் குழுக்கள் எனவும் மேனாட்டவர் எடுத்துக்கொண்டனர். பிற்காலத்தில் இந்திய வரலாறெழுதிய இந்தியரும் மேனாட்டவரும் மாக்ஸ்முலர் இறிக்வேத காலத்தை கி.மு. 2000 அளவிலாக நிரூபித்துவிட்டனர் என எவ்விதமான ஆதாரங்களுமின்றி எடுத்துக் கொண்டனர். இக்கால வரையறையை இந்துக்களாகிய நாம் எக்காலத்திலாவது ஒப்புக்கொண்டதில்லை. ஆரிய வர்க்கத்திலே வேதங்களும் உப நிடதங்களும் தோன்றிய காலமும், முனிவர்களும், மெஞ்ஞானிகளும் வாழ்ந்த காலமும் கி.மு. 2000 இற்கும் பல்லாயிரம் வருடங்கள் முற்பட்டவையாகும். இந்திய – ஆரியரின் தாயகம்பற்றி இரு கொள்கைகளுண்டு.
(1)இந்திய – ஆரியர் எனப்பட்டோர் எக் காலத்திலாவது வெளிநாடுகளிலிருந்து இந்தியாவிற்கு வரவில்லை. இவர்களும் பண்டை இந்திய மக்களாவர். மத அடிப்படையிலோ, திசை அடிப்படையிலோ தம்மை ஆரியர் எனக் குறிப்பிட்டனர். இவர்கள் மேனாட்டவரின் இன அடிப்படையில் ஆரியரல்லர். இந்தியாவிற்குட் புகுந்த காக்கேசிய ஈரானிக் குழுக்களை இவர்கள் மிலேச்சர் எனக் குறிப்பிட்டனர். இக்கருத்து உண்மையாயின், வேதமொழி தானும் பண்டை இந்திய மொழிகளிலொன்று என்பதை ஏற்றுக்கொள்ள வேண்டும். இக்கருத்தையே இந்நூலிற் பல விடங்களில் வற்புறுத்துகிறேன். ஆரியமும் தமிழும் ஒரு சாதியார் வழங்கிய இரு வேறு பாஷைகள் என்பதும் அத்துவிதம் என்பதும் மரபுக்கொள்கை.
(2)அலெக்சாண்டரின் படைகள் இந்தியாவிற் சிந்து நதிவரையும் வென்றன. கங்கைச் சம வெளிக்குள்ளும் புகுந்தன. அலெக்சாண்டர் இறந்தபின் அவருடைய படைவீரர் வென்ற நாடுகளை ஆண்டனர். சிந்து வெளிக்கு மேற்கேயுள்ள நாடுகள் இப்படை வீரர் கையில் இருந்தன. இக்காலத்துக்குப் பின் இப்பகுதிகள், ஆங்கிலேயர் ஆட்சி வரையும் இந்திய வரலாற்றிலிருந்து மறைந்தன. அலெக்சாண்டர் படையில் கிரேக்கர், யவனர், அரேபியர், துருக்கியர், ஈரானியர் முதலிய பல நாட்டு மக்கள் இருந்தனர். இவர்களையும் கி.மு. 2000 அளவில் இந்தியாவிற்குட் குடிபுகுந்த குழுக்களையும் மேனாட்டவரின் இன அடிப்படையில் ஆரியராகக் கருதலாம்.
கிறித்துவ சகாப்தத்தின் ஆரம்பத்தில் மேற்கே உரோமப் பேரரசும் கிழக்கே சீனப் பேரரசும் இருந்தன. இவற்றுக்கிடையில் நான்கு பேரரசுகள் இருந்தன.
(1)பார்த்திய அரசு: பார்த்தியா, மீடியா, பாரசிகம், பாபிலோனியா முதலிய நாடுகள் இவ்வரசக்குட்பட்டிருந்தன. சிந்து ஆற்றுவாய் முகத்திலும் குஜராத்திலும் பார்த்திய மன்னரின் சேனைவீரர் ஆட்சி செய்தனர்.
(2)காந்தார அரசு: இவ்வரசு பற்றீயா தொடக்கம் யமுனை வரையும் பரந்து கிடந்தது. இதைச் சாகர் குலத்தவர் ஆண்டனர்
(3)மகத அரசு :- காந்தாரத்திற்குக் கிழக்கே இமயமலை தொடக்கம் தமிழ்நாடு வரையும் (கங்கைச் சமவெளியும் உட்பட, மகதப் பேரரசு இருந்தது. இதையாண்டவர் ஆந்திரப் பெருங்குடி சார்ந்த மகாகர்ணராவர்.
இந்துஸ்தானியர் யாவரையும் ஆரிய திராவிடர் எனக் குறிப்பிட்டோம். கங்கைச் சமவெளியில் உத்தரப் பிரதேசம், பீகார் மாகாணங்களில் வாழும் மக்கள் ஆரிய – திராவிடராவர். விந்திய மலைக்குத் தெற்கே வாழும் மக்கள் திராவிடர். தக்கணத்தில் அற்ப ஆரியக் கலப்புண்டு. கஸ்மீரம் இராசஸ்தான மேற்கு வடவெல்லை மாகாணம் முதலிய பகுதிகளில் வாழும் மக்களே இன அடிப்படையில் ஆரியராவர். இப்பகுதிகளிலும் திராவிடருடன் ஓரளவு கலப்புண்டு. இப்பகுதிகள் இன்று பெரும்பாலும் பாகிஸ்தானில் இருக்கின்றன.
சங்க காலத்துக்குப் பின்பு தமிழ் நாட்டுக்கு வந்த ஆரியர் எனப்பட்டோர் பெரும்பாலும் கலிங்கர், கன்னடர், மேலைக்கீழைச் சாளுக்கியர், இராட்டிரகூடர், கங்கர், கோசர், தெலுங்கராவர். இவர்களே வடமொழியையும் பிராமணியத்தையும் தமிழ் நாட்டிற் பரப்பியவர்கள். இவர்கள் யாவரும் இன அடிப்படையில் திராவிடரே. பிராமணர் வழக்கமாகத் தம்மை ஆரியர் என்கின்றனர். இவர்களும் இன அடிப்படையிhல் ஆரியர்களல்லர். இக்கூட்டத்திற் பலவினங்களும் குலங்களுமுண்டு.
(அ)திராவிட மக்களுக்குள் எகிப்திய குருமாரைப் போன்ற ஒரு குலத்திவர் இருந்தனர். இவர்கள் ஐயர். பார்ப்பனர், அந்தணர் எனப்பட்டனர். தொல்காப்பியத்திற் குறிப்பிடப்படுகின்றனர்.
“அறு வகைப்பட்ட பார்ப்பனப் பக்கமும், ஐவகை மரபின் அரசர் பக்கமும், இரு மூன்று மரபின் ஏனோர் பக்கமும்.”
“நூலே கரகம் முக்கோல் மனையே ஆயுங் காலை அந்தணக்குரிய”
(ஆ)நாகர் முன்டர் குலங்களிலும், மந்திரத்திலும் மருத்துவத்திலும் வல்ல குருமார் இருந்தனர்.
திராவிடர் திராவிடர் என்ற சொல்லை மேனாட்டவரின் இன அடிப்படைக் கருத்தில் இந்நூலிற் பயன்படுத்துவோம். மேனாட்டவரின் நடுநிலக் கடலக மக்களும் திராவிடரும் ஒன்றென எடுத்துக் கொள்வோம். இதுவே, பெரும்பாலான ஆராய்ச்சியாளரின் கருத்தானபடியினால், இதிலிருந்து விலகுவது மயக்கத்துக்கு ஏதுவாகும். தமிழர் திராவிட இனங்களில் ஒன்றென்பதை யாவரும் ஒப்புக்கொள்வர். ஏனைய திராவிட இனங்கள் போன்று நாம் பொய்ப் புராணங்கள் எழுதவில்லை. சிங்கத்திலிருந்தோ முனிவர்களிலிருந்தோ தேவர்களிலிருந்தோ, அக்கினியிலிருந்தோ, சூரியசந்திரரிலிருந்தோ தோன்றவில்லை. உயிரினத்தின்படி வளர்ச்சியில் தோன்றினோம். ஆதி மனிதர் இராமப் பிதிக்கஸ், லெமூரியர் எனப்பட்டனர். எமது உண்மை வரலாறே, எமது பண்டை நாகரிகத்துக்கும் பண்பாட்டிற்கும் போதிய சான்றாக இருப்பதினாற் புராணங்கள் அனாவசியமாகும்.
இன்று தமிழர் என்ற சொல் மொழி அடிப்படையிற் பயன்படுத்தப்படுகிறது. தமிழ் மொழி பேசும் மக்கள் யாவரும் திராவிட இனத்தவராயினும், ஒரே குலத்தவர் என முடியாது. தமிழர் இந்தியா முழுவதும் பரந்து தமது ஆட்சியையும் நாகரிகத்தையும் பரப்பியபோது, ஏனைய திராவிடக் குலங்களுடன் கலந்தனர். தமிழ் மொழியே திராவிட மொழிகள் யாவற்றுக்கும் மூலமும், முதலுமாயது. ஏனைய திராவிட இனத்தவர் தமது குழுப் பேச்சு மொழிகளைக் கைவிட்டுத் தமிழ் மொழியை ஏற்றனர். இவர்களுடைய மொழி சிதைந்த கொடுந்தமிழாக இருக்கலாம். ஆதலால், இன்று தமிழரில் முண்டர், நாகர், இயக்கர், வேளீர், கந்தருவர் முதலிய பல திராவிடக் குலங்கள் உள.
பண்டைக்காலத்தில் இந்தியா முழுவதிலும் இலங்கையிலும் கிழக்கிந்திய தீவுகள் தொடக்கம் அமெரிக்கா வரையும் மத்திய இரேகைக்கு இரு மருங்கிலுமுள்ள நாடுகளிலும் திராவிட இன மக்கள் வாழ்ந்தனர். இவ்வுண்மையைப் பேராசிரியர்கள் ரிசிலியும் றாப்சனும் வற்புறுத்துகின்றனர். இம்மக்கள் இலேமூரியாக் கண்டத்திலிருந்து சென்று அமெரிக்கா வரையுமுள்ள பல நாடுகளிற் குடியேறினர் எனக் கர்ணாமிர்த சாகரங் கூறுகிறது. உலகிலே தற்காலத்திலுள்ள எல்லா மக்களும் அடிப்படையில் இக்கரிய பழுப்பு நிற இனத்தவரென ர்.பு. வெல்சு தமது உலக வரலாற்றுச் சுருக்கத்திற் கூறுகிறார். இன்றும் இலங்கை முதல் இமயம் வரை பரவியிருக்கும் மக்கட் கூட்டத்தாரிற் பெரும் பகுதியினர். திராவிடரெனப் பேராசிரியர் ரிசிலி கூறுகிறார். இது பெரும்பாலான ஆராய்ச்சியாளரின் முடிவாகும்.
திராவிடர் யாவருங் கறுப்பு நிறந்தவரல்லர். இவர்களிற் பல்வேறு நிறத்தவரைக் காணலாம் - கறுப்பு நிறத்தவர், கறுப்பில் வெளியேறிய நிறத்தவர், சிவப்பு நிறத்தர், பொன்னிறம் மிகுந்தவர். பழுப்பு நிறத்தவர். பண்டைக் காலத்தில் திராவிட இனங்களே உலகையாண்டன எனவும், ஆதியில் நாகரிக மடைந்தவர் இவர்களே எனவும், புதுக்கற்கால நாகரிகம் இவர்களுடையதெனவும் ர்.பு. வெல்சு கூறுகிறார். கடலாட்சியும், நிலவாட்சியும் செய்த பண்டைத் திராவிட இனங்கள் பலவாகும். அக்காலத்திலே திராவிட மக்களே கடலோடிகளாகவும் உலக வாணிகராகவும் இருந்தனர். பண்டைக் காலத்திற் புகழ்பெற்ற கடலோடித் திராவிட இனங்கள் பின்வருவனவாகும். வட ஐரோப்பாவிலிருந்து ஐபீரியர், ஸ்பெயின் நாட்டுப் பாஸ்குகள், இத்தாலி நாட்டு எட்றஸ்கானர், வட ஆபிரிக்கா, கிழக்காசியா, தென் ஐரோப்பியா நாடுகளிற் பரவிய கார்த்தேசியர், பினீசியர், கிறீசிலும் கிறீட்டிலும் வாழ்ந்த ஈஜியர், செங்கடலுக்கு அப்பெயர் அளித்த எரிதிரையர், சுமேரியர், ஏலமியர், சிந்து வெளி மக்கள் இந்தியாவில் வாழ்ந்த திரையர், பரதர். இவர்கள் வாணிபத்திற்காக மேற்கெ அத்துலாந்திசு வரையும் கிழக்கே பசுபிக் தீவுகள் வரையுஞ் சென்று பற்பல இடங்களிற் குடியேறினர்.
பண்டை இந்தியாவில் வாழ்ந்த திராவிட இனத்தின் கிளைகள் பல. பல குலங்குடிகள் இருந்தன.
(1)முண்டர்: இவர்கள் அவுத்திரலொயிட் மக்களாவர். கிழக்கிந்திய தீவுகளிலும் பசுபிக் தீவுகளிலும் வாழும் மக்கள் பெரும்பாலும் இவ்வினத்தவராவர். கிழக்கிந்திய தீவுகளிலிருந்து இவர்கள் இந்தியாவிற்குட் புகுந்தனர் என்பது ஒரு கொள்கை. இவர்கள் பண்டைக்காலத்தில் இலேமூரியாக் கண்டத்திலும் இந்தியாவிலும் வாழ்ந்த ஆதிவாசிகள் என்பது மற்றக்கொள்கை. தமிழர் இந்தியாவிற்கு வரமுன், இவர்களே இந்தியாவில் வாழ்ந்த பூர்வீக மக்கள் என்பது சிலரின் கருத்தாகும். ஆனால், இது தவறான கருத்தென்பதில் ஐயமில்லை. ஏனென்றால், தமிழர் எக்காலத்திலாவது வெளிநாடுகளிலிருந்து இந்தியாவிற்கு வரவில்லை. குமரி நாடே தமிழரின் பூர்வீக தாயகம். வரலாறுக்கு முற்பட்ட காலந்தொட்டுத் திராவிடரும் முண்டரும் குமரி நாட்டிலும், இந்தியாவிலும் ஒருங்கு வாழ்ந்து இரண்டறக் கலந்துவிட்டனர். பண்டைக்காலத்திலேயே முண்டர், திராவிடரின் மொழி, சமயம், பண்பாடு, நாகரிகம் முதலியனவற்றை ஏற்றுத் திராவிடராகிவிட்டனர்.
இன்று இந்தியாவில் இம்மக்கள் பல பாகங்களிற் பல பெயர்களினாற் குறிப்பிடப்படுகின்றனர். முண்டர், கொலர், சண்டாளர், பில்சுகள், குறும்பர், கானவர், குறவர், இலங்கையில் வாழும் தமிழர், சிங்களவர் சமுதாயங்களிலும் இவ்வின மக்கள் உளர். இன்றும் இந்தியாவிற் பல பாகங்களில் முண்டர் மொழிகள் பேசப்படுகின்றன. தக்கணத்தில்:- ஐவாங், கேரியாகடவா@ சவநா, மத்திய பிரதேசத்தில் :- கூர்க்கு.
(2) நாகர்:- பண்டைக்காலத்தில் இந்தியாவிலும் இலங்கையிலும் நாகர் குலத்தவர் பரந்து வாழ்ந்தனர். இவர்களும் இலேமூரியாக் கண்டத்தின் பூர்வீக குடிகளாவர். தென் கிழக்காசிய நாடுகள் எல்லாவற்றிலும் - இந்தியா, இலங்கை, பர்மா, மலேசியா, கிழக்கிந்திய தீவுகள் எல்லாவற்றிலும் - நாகர் வாழ்ந்தனர். தமிழர் மாத்திரமன்றிச் சிங்களவர், கலிங்கர், வங்காளர், பர்மியர், மலேசியர், திபெத்தியர், நேபாளர் முதலிய மக்களும் பெரும்பாலும் நாகர் மரபினராவர். பர்மா, மலேசியா, யாவா, சுமாத்திரா முதலிய நாடுகளுக்கும் இந்தியாவிற்கும் உள்ள தொடர்பு பெரும்பாலும் நாகர் தொடர்பாகும். மன்னர் குடிப்பெயர்களில் மட்டுமன்றி, இடப்பெயர்கள், மக்கட் பெயர்கள் ஆகியவற்றிலும் மொழியிலும் வாழ்விலும் சமயத்திலும் பண்டைச் சாவக நாட்டில் நாம் பல தமிழ்த்தொடர்புகளைப் பொதுவாகவும் பாண்டிநாட்டுத் தொடர்புகளைச் சிறப்பாகவுங் காண்கிறோம். பாண்டியன், மீனன், ஊர், சிவன் முதலிய பெயர்கள் 4000 வருடங்களுக்கு முன்பே பல நாடுகளில் வழங்கப்பட்டன. இந்தியாவின் எல்லாப் பாகங்களிலும் - வடக்கிலும் தெற்கிலும் கிழக்கிலும் மேற்கிலும் - நாகர் வாழ்ந்தனர். பல நாகர் இராச்சியங்கள் இருந்தன. இராவணன் இயக்கர்கோன் அவனுடைய மனைவியாகிய மண்டோதரி, மாதோட்டையில் (தற்கால மன்னாரில்) அரசாண்ட நாகவரசர் குலத்தவள். அக்காலத்தில் நாகரும் இயக்கரும் ஒரே மொழியினராகவும் ஒரே சமயத்தவராகவும் இருந்தனர். ஒற்றுமையாக வாழ்ந்தனர். பாண்டவரில் ஒருவனாகிய அருச்சுணன் சித்திராங்கனை எனும் நாக கன்னியை மணந்தான். புத்தர் காலத்தில் வட இந்தியாவில், நாகர் இராச்சியங்கள் பல இருந்தன. மௌரியருக்கு முன் சைசுநாகர் மகத நாட்டை 300 வருடங்கள் ஆண்டவர். புத்தபிரான் கபிலர் வழியில் தோன்றிய நாகர் குலத்தவரென “ஓலட்காம்” எனும் ஆராய்ச்சியாளர் கூறுகிறார். புத்த சமயம் நாகரின் பேராதரவைப் பெற்றது. அவர்கள் வாழ்ந்த நாடுகளில் எல்லாம் விரைவிற் பரவிற்று.
இன்று இமய மலைச்சாரலில் நாகர் நாடு இருக்கிறது. இந்நாகர் சீனருடன் கலத்தவராவர். சீனரையும் நாகர் குலத்தவர் எனச் சிலர் குறிப்பிடுகின்றனர். தென்னிந்தியாவில் நாகர் அரசுகள் பல இருந்தன எனத் தமிழ் இலக்கியங்கள் கூறுகின்றன. இந்தியாவின் வடமேற்குப் பகுதியில் தக்கசீலம் எனும் நகரை அடுத்துள்ள இடங்களில் நாகர் பெருந்தொகையாக வாழ்ந்தனர். மலையாளப் பகுதி இவர்களுடைய சிறப்புவாய்ந்த குடியிருப்பாகும். தலைச்சங்கத்திலும் இடைச்சங்கத்திரும் கடைச்சங்கத்திலும் நாகர் குலத்தைச் சேர்ந்த பல புலவர் இருந்தனர். நாகரின் தாய்மொழி தமிழாகும். தமிழரும் நாகரும் இன அடிப்படையிலே திராவிடராவர். ஆனால் வௌ;வேறு குலத்தவரா அல்லது ஒரே குலத்தவரா? ஒரே குலத்தவர் என்பதற்கிச் சில சான்றுகள் இருப்பினும், சமயத்தையும், பண்பாட்டையும் பழக்கவழக்கங்களையும் நோக்கும்போது வௌ;வேறு குலத்தவர் போலத் தோன்றுகின்றனர். ஈழ நாட்டுத் தமிழ் வேளாளரும் சிங்கள “கொய்கம” சாதியினரும் நாகவேளாளராவர்.
பண்டைக் காலத்தில் நாகர் தொழில் வல்லுநராகவும், சிற்பிகளாகவும், கடலோடிகளாகவும், வணிகராகவும் இருந்தனர். கல்வியிலும், கலைகளிலும், பண்பாட்டிலும் சிறந்து விளங்கினர். இவர்களுடைய வழிபாடுகளை இன்றும் இந்தியாவிலும் இலங்கையிலும் பலவிடங்களிற் காணலாம்.
கி.மு. ஆறாம் நூற்றாண்டில் இலங்கையிற் பல பகுதிகளிற் பல நாகர் அரசுகள் இருந்தன. விசேடமாக மேற்குக் கடற்கரைப் பகுதிகளைக் குறிப்பிடலாம். முதலாவது மணிபல்லவம். இது தற்கால யாழ்ப்பாணமாகும். இரண்டாவது மாதோட்டை. இது தற்கால மன்னார்ப் பகுதியாகும். மூன்றாவது கல்யாணி. இது தற்காலக் கலனியாவாகும். இரண்டாம் நூற்றாண்டிற் கல்யாணியை ஆண்ட திசா என்பவரின் காலத்திலே கடற்பெருக்கினாற் கல்யாணி இராச்சியத்திற் பெரும் பகுதியும் அழிந்ததெனப் புத்த ஏடுகள் கூறுகின்றன.
“அக்காலத்திற் கடல் கல்யாணியிலிருந்து இருபத்தொருகல் தொலைவிலிருந்தது. சமயக் குருவின் வெம்பழியாற் காவல் தெய்வங்கள் சினங்கொண்டு கடலெழுச்சியினால் நிலம் அமிழச் செய்தன. 10,000 பேரூர்களும், 770 மீன் பரவலர் சேரிகளும், 400 சிற்றூர்களுஞ் சேர்ந்து கல்யாணியின் பன்னிரண்டிற் பதினொடு பங்கு கடலில் ஆழ்ந்தது.” (இராஜவள்ளி)
வட இலங்கையிற் கந்தரோடை நாகர் குடியிருப்புத் தலைநகராக இருந்தது. நாகர்களிடையில் ஏற்பட்ட பிணக்குகளைத் தீர்ப்பதற்குப் புத்தபிரான் இலங்கைக்கு மூன்று முறை வந்ததாக மகாவம்சம் கூறுகிறது. – முதன்முறை மகியங்கனைக்கும் இரண்டாம் முறை நாகதீபத்துக்கும் மூன்றாம் முறை கல்யாணிக்கும், அக்காலத்தில் இலங்கையிலிருந்து ஏனைய நாகர் இராசதானிகளாவன:- தெற்கே – திசமகறாமை@ கிழக்கே – கிரிநுவரை. மாத்தளைக்கு வடக்கே லெனதொதை. அக்காலத்திலே வாழ்ந்த மக்கள் நாகரான படியினால் இத்தீவு நாகர் தீவு எனப்பட்டது. அநுராதபுரத்திலாண்ட விசயன் பரம்பரை ஐந்து தலைமுறைகளில் அழிந்தபின் நாகர் குலத்தவர் ஆண்டனர். இலங்கை வரலாற்றிலே திசன், நாகன் எனும் பெயர்கள் நாகர் குலத்தவரைக் காட்டுகின்றன. பண்டைக் காலத்தில் நாகர் நாகரிகம் எகிப்து தொடக்கம் கிழக்கிந்திய தீவுகள் வரையும் பரந்திருந்தது. நாகர்களிலும் பல பிரிவினர் இருந்தனர். ஓவியர் என்போர் மிக நாகரிகமுடையவராக இருந்தனர்.
(3)இயக்கம்: இமயம் தொடக்கம் ஈழம் வரை இந்தியாவின் கிழக்குப் பகுதிகளிலும் ஈழத்தின் கிழக்கு மத்திய பகுதிகளிலும் இயக்கர் வாழ்ந்தனர். இவர்கள் ஆண்மையிலும், வீரத்திலும், போரிலுஞ் சிறந்து விளங்கினர். இயக்கர் அரசுகள் பல பண்டைக்காலத்தில் இருந்தன. இலங்கை வேந்தனாகிய இராவணன் இயக்கர்கோன் மறத்தமிழன், சிவபக்தன், போருக்கு அஞ்சாதவன். பிற்காலத்தில் புராணம் எழுதிய பிராமணர் நயவஞ்சகனும், கோழையும், அரசுக்குப் பேராசைப்பட்டவனும், இனத் துரோகியுமான விபூடணனைப் போற்றிப்புகழ்ந்தனர். இராவணனுக்குப் பின்பு இலங்கையில் இயக்கர் நிலைமை சீர்கேடடைந்தது. இயக்கர் மங்கோலிய இத்தவரென்பது சிலரின் கொள்கையாகும். இது தவறான கொள்கையென இன்று உணரப்படுகிறது. இயக்கர் திராவிட இனத்தவர் வடகிழக்கு இந்தியாவில் இவர்கள் மங்கோலியருடன் ஓரளவு கலந்திருக்கலாம்.
(4) நிருதர்: திராவிட மக்களுக்கும் நீக்கிரோ மக்களுக்கும் பண்டு தொட்டுத் தொடர்புண்டு. ஒரு காலத்தில் இருவின மக்களும் இலேமூரியாவில் ஒளி நாட்டிலும் பெருவள நாட்டிலும் வாழ்ந்தனர். இந்நாடுகள் அழிந்த போது, தப்பியர்வகளிற் பெரும்பாலானோர் ஆபிரிக்காக் கண்டத்திற் குடியேறினர். சிலர் குமரி நாட்டிலும் இந்தியாவின் பல பகுதிகளிலும் குடியேறினர். இந்தியாவிற் குடியேறியவர் திராவிடர்களுடன் கலந்தனர். சில இந்திய மக்களில் நிருதரின் அடையாளங்களை இன்றும் காணலாம். கொச்சி நாட்டுக்காடர், புலையர் உதாரணமாவர். பண்டைக்காலத்தில் நிருதர் பல காலங்களிற் பொதியம் வரையும் வென்றதாகப் புராணங்கள் கூறுகின்றன
(5) பரதர், திரையர், பானியர்: இவர்களே பண்டைக்காலத்திற் கடலோடிய திராவிட மக்களாவர். உலகிற் பல நாடுகளுடன் வாணி பஞ்செய்ததுமன்றி அந்நாடுகளிற் குடியேறி நிறம், மொழி, வேற்றுமையடைந்தனர்.
(6) தமிழர்: இவர்கள் குமரி நாட்டிற் பெரும்பாலும் வாழ்ந்த திராவிட இனத்தவர், வேளீர் எனப்பட்டனர். தெற்கிலிருந்து இந்தியா முழுவதும் பரவித் தமது ஆட்சியையும், மொழியையும் பரப்பினர், சிலர் தமிழரைக் கந்தருவர் என்கின்றனர். தமிழரின் பண்பாடு இலக்கியங்களிற் குறிப்பிடப்படும் கந்தருவர் பண்பாட்டை ஒத்திருப்பதே இக்கொள்கைக்குக் காரணமாகும்.
(7) ஏனைய திராவிட இனங்கள்: கடம்பர், வில்லவர், மீனவர், எயினர், ஒளியர், தோடர், மறவர், மாறர், கோசர், குறும்பர், கங்கர், வானரர், வானவர் முதலியோராவர். இறிக் வேதத்திற் பண்டை இந்திய மக்கள் தாசுக்கள் எனப்பட்டனர். கொடிகளின் அடிப்படையிற் குறிப்பிடப்பட்டனர்.
குமரி நாடு கடலாற் கொள்ளப்பட்ட போது, அங்கிருந்து சென்று வட இந்தியாவிலும் தென்னிந்தியாவிலும் குடியேறிய திராவிட இனங்கள் பின்வருவனவாகக் குறிப்பிடப்படுகின்றன:- பிராகுவியர், ஆந்தரர், கோடர், தோடர், கொண்டர், நாகர், துளுவர், கருநாடர், மலையாளர், வேளீர், கந்தருவர்.
பண்டைக்காலத்தில் வட இந்தியாவிலும் தென்னிந்தியாவிலும் ஈழத்திலும் வாழ்ந்த மக்கள் திராவிடராவர். இவர்கள் கிழக்கிந்திய தீவுகள் தொடக்கம் அமெரிக்கா வரையும் நடுநிலக் கடலக நாடுகளிற் பரவியிருந்தனர். இந்நாடுகளின் பழைய நாகரிகங்களும் வழிபாடுகளும் கலைகளும் இவ்வுண்மையை நிரூபிக்கின்றன. இந்நாடுகளில் வழங்கிய எழுத்துக்களினதும் தமிழ் எழுத்துக்களினதும் உற்பத்தி ஒன்றென ஆராய்ச்சியாளர் கூறுகின்றனர். தமிழர் வெளிநாடுகளிலிருந்து இந்தியாவுக்கு வந்தனரா அல்லது இந்திய நாட்டுப் பூர்வீகக் குடிகளா? இது பற்றி மூன்று கொள்கைகளுண்டு.
(1)திராவிடர் மத்திய தரை நாடுகளில் தோன்றி இமயமலை கணவாய்கள் வழியாக இந்தியாவிற்குட் புகுந்து இந்தியாவின் வடமேற்கு நாடுகளில் முதன்முதலிற் குடியேறிப் பின்பு தெற்கே வந்தனர் என்பது முதலாவது கொள்கையாகும். இக்கொள்கைக்கு ஆதாரங்களாவன:-
(அ)பலுச்சிஸ்தானில் ஒரு சாரார் பேசும் மொழி திராவிட மொழியை ஒத்திருப்பது@
(ஆ)கடவுள் வழிபாடு, கோயில் அமைப்பு, சிற்பம், பிரேதங்களைப் புதைக்கும் தாளிகள் முதலியனவற்றிற் சுமேரியருக்கும் தமிழருக்கும் உள்ள ஒற்றுமைகள்@
(இ)மத்தியதரை நாட்டு மக்களாகிய மிட்டானியர், ஏல்மையிற்றுக்கள், காசைற்றக்கள் என்போர் மொழிகளுக்கும் திராவிட மொழிகளுக்குமுள்ள ஒற்றுமைகள்@
(உ)தமிழ் என்பது த்ரமிளம் எனும் வட சொல்லிலிருந்து பிறந்தது. த்ரமிளம் என்ற சொல்லின் கருத்து துரத்தப் பட்டவர் என்பதாகும். எனவே, தமிழர் வடமேற்கு இந்தியாவில் ஒருகாலத்தில் வாழ்ந்தனர். பின்பு, தெற்கே துரத்தப்பட்டனர்.
இவை யாவும் திராவிடர் இந்தியாவிலிருந்து சென்று இந்நாடுகளிற் குடியேறினர் எனுங் கொள்கைக்குஞ் சமமாகப் பொருத்தமுடையனவாகும்.
(2)தமிழர் திபெத்திலிருந்து இந்தியாவிற்குட் புகுந்த மங்கோலிய இனத்தவர் என்பது இரண்டாவது கொள்கையாகும். இக்கொள்கையைத் “தமிழர் வரலாறு” எனும் நூலிற் சூரிய நாராயண சாத்திரியார் விளக்குகிறார். இக்கொள்கைக்கு ஆதாரங்களாவன:-
(அ)மங்கோலியருக்கும் திராவிடருக்கும் உடலமைப்பிலும் சமூகப் பழக்க வழக்கங்களிலும் உள்ள ஒற்றுமைகள்:
(ஆ)அசாமில் வாழும் காஸ்சிகளும் திராவிடரும் பல வகைகளில் ஒத்திருப்பது@
(இ)தமிழ் நாட்டரசர் வானவர் குலத்தவர் என்ற மரபுக் கதை. அவர்கள் திபெத்திலிருந்து வந்தவரெனச் சிலர் வியாக்கியானஞ் செய்தனர்.
(3)தமிழர் இந்தியாவிற் பூர்வீக குடிகள், மனித இனம் தோன்றிய காலந் தொட்டு இந்தியாவில் வாழ்ந்து வருகின்றனர். குமரி நாட்டிலிருந்து இந்தியா முழுவதும் பரவினர். இது மூன்றாவது கொள்கையாகும். இக்கொள்கையையே எமது இலக்கியங்களும் புராணங்களும் மரபுக் கதைகளும் வற்புறுத்துகின்றன.
திராவிடர் அல்லது தமிழர் மத்தியதரை நாடுகளிலிருந்து இந்தியாவிற்கு வந்தவரா? இந்தியா அல்லது குமரிநாடு அவர்களின் தாயகமா? இதுபற்றி அறிஞர்களினதும் ஆராய்ச்சியாளர்களினதும் அபிப்பிராயங்கள் சுருக்கமாகப் பின்வருவனவாகும்:-
(1)மக்கள் தோன்றுவதற்கு அடிப்படையானோர் மத்திய தரைக்குங் கிழக்கிந்திய தீவுகளுக்கும் இடையே கிடந்த பெரிய பூகண்டத்தில் தோன்றிப் பெருகிய கபிலநிற மக்களாவர். மத்திய தரை நாடுகளில் ஆதியில் வழங்கிய பாஸ்க் மொழியும் திராவிடமும் நெருங்கிய தொடர்புடையவை:- ர்.பு. வெல்சு.
(2)உலகிலுள்ள மண்ணியல் அமைப்புக்களில் தக்கணமே மிகப் பழையது. பழைய கற்காலச் சின்னங்கள் தக்கணத்திலேயே பெருமளவு காணப்படுகின்றன:- பேராசிரியர் ளு.ர். இறிஸ்லி.
(3)பண்டை நடுநிலக் கடலக மக்களின் வழிபாடுகள் திராவிடரின் வழிபாடுகளாகும். இன்று இவை ஏனைய நாடுகளில் அழிந்து விட்டபோதிலும், இந்தியாவில் நிலை பெற்றிருக்கின்றன.
(4)அவுத்திரேலியா, இந்தியா, தென்னாபிரிக்கா முதலியன முன்னொருகாலத்தில் தரையால் இணைக்கப்பட்டிருந்தன. இக்கண்டமே ஆதிமக்களின் தொட்டிலாகும்:- கலாநிதி பேசுடோ.
(5)பழைய கற்காலச் சின்னங்கள் தக்கணத்திற் காணப்படுகின்றன. இங்கிருந்து மக்கள் மத்திய இந்தியாவிலும் கங்கை யமுனைச் சமவெளிகளிலும் வடமேற்கு இந்தியாவிலும் இமயம் வரையுங் குடியேறினர் - இந்தியாவும் பசுபிக் உலகமும்.
(6)இந்திய நாட்டிலே தொல்லுயிர்கள் வளர்ச்சியடைந்து பெருகின. மனிதன் இங்கு தோன்றித் தத்தளித்து மேலோங்கினான்:- பேராசிரியர் கிரேம் உவில்லியம்.
(7)நடு நீலக் கடலகமக்கள் மேற்கிலிருந்து கிழக்குச் சென்றனரென இதுவரை நம்பப்பட்டது. ஆனால், இவர்கள் கிழக்கிலிருந்து மேற்குச் சென்றனர் என்பதை இன்று ஆராய்ச்சிகள் நிரூபிக்கின்றன. (வணக்கத்துக்குரிய கெறஸ் பாதிரியார்)
(8)இந்தியாவில் நீண்டகாலமிருந்து நாகரிகம் வளர்த்த பின்பு திராவிடர் மேற்கு நோக்கிக் குடிபெயர்ந்தனர். மெசொப்பற்றாமியா முதலிய பல நாடுகளில் தங்கிப் பிரிட்டிஷ் தீவுகள் வரை தமது நாகரிகத்தைப் பரப்பினர் – வணக்கத்துக்குரிய கெறஸ் பாதிரியார்.
(9) வரலாறு உணரலாகாப் பழங்காலத் திராவிட மக்கள் தாமும் நாகரிக மறியா இழி நிலை மக்களாக வாழ்ந்தவராகத் தெரியவில்லை. ஆரியர் அவர்களிடையில் வந்து வாழத் தொடங்குவதற்கு முற்பட்ட காலத்திலேயே திராவிட மக்கள் நாகரிக வாழ்வில் அடியிட்டிருந்தனர் என்பதில் ஐயமில்லை – கால்டுவெல்.
(10)ஆரியர் இந்தியாவிற்கு வரன்முனரே இந்தியாக் கண்டம் எங்கணும் பெருந் தொகையினராய்ப் பரவியிருந்தவர் தமிழரும் அவரோடு இனப்பட்ட திராவிடருமே – பேராசிரியர் றாப்சன்.
(11)திட்டவட்டமான தேக அடையாளங்களை அடிப்படையாகக் கொண்டு இனங்களை வகுப்பர். இந்த அடிப்படையிற் பார்த்தால் இந்திய மக்கள் பெரும்பாலுந் திராவிடர் என்பதில் ஐயமில்லை. பேராசிரியர் இறிக்ஸ்லி.
(12)திராவிட மக்களே இந்தியாவின் பூர்வீக குடிகள். இவர்கள் பூர்வீக குடிகளல்லர் என்பதற்கு எவ்வித சான்றுமில்லை – கலாநிதி கியேர்சன்.
(13) தென்னிந்தியாவே திராவிட மக்களின் தாயகம். இவர்கள் வெளிநாட்டிலிருந்து இந்தியாவிற்கு வந்ததாக மரபுக்கதை தானுமில்லை – கலாநிதி பேக்குசன்.
(14) குமரி முனைக்குத் தெற்கேயுள்ள ஞாலத்தின் நடுக்கோட்டிற்கு இரு மருங்கிலுமிருந்த நிலப்பகுதிகளே மக்கள் வாழ்விற்குத் தக்க நிலையை முதற் கண் அடைந்தன. அங்கு மக்கள் முதற் கண்தோன்றி வளர்ந்து நாகரிகத்துக்கு வித்திட்டனர் – கொக்கல்.