கடைச்சங்க காலத்துக்குப் பின் தமிழரின் இருண்ட காலமாகக் கருதப்படுகிறது. பண்டுதொட்டுத் தென் நாட்டையாண்ட மூவேந்தர் ஆட்சிகள் மறைந்தன. சேர அரச குலம் முற்றாக அழிந்தது. பாண்டியரும், சோழரும் பால காலஞ் சிற்றரசர்களாக இருந்தனர். தமிழ் நாட்டை பல்லவர், களப்பிரர், சாளுக்கியர், கங்கர், கதம்பர், கோசர், இராட்டிரகூடர் ஆண்டனர். இவர்கள் யாவரும் தமிழ் நாட்டிற்கு வடக்கே தென்னிந்தியாவில் வாழ்ந்த திராவிட மக்களாவர். ஆனால், இவர்களுடைய தாய்மொழி தமிழன்று. கன்னடம், தெலுங்கு மராட்டி, கலிங்கம் முதலியவை தாய்மொழிகளாகும். இப்பகுதிகளிலே தான் சமஸ்கிருதம் இடைக்காலத்திற் பெரு வளர்ச்சியடைந்தது. ஆதலால், இவ்வரசர் வடமொழிக்குப் பேராதரவு அளித்தனர். தமிழ் மொழி அரியாசனத்தை இழந்தது. இக்காலத்தில் வடமொழி தமிழ் நாடு முழுவதும் பரவிப் பெருஞ் செல்வாக்கடைந்தது. பிராமணீயம் தமிழர் சமயத்துடன் கலந்து தற்காலச் சைவ வைணவ மதங்கள் தோன்றின. இளவரசர் பலர் ஆரம்பத்திற் புத்த சமண சமயத்தவராக இருந்தனர். இச்சமயங்களை ஆதரித்தனர். ஆனாற், பிற்காலத்தில் இச்சமயங்கள் மறைந்து சைவமும் வைணவமும் தலையோங்கின. இவ்வரசர்கள் மொழியளவில் அந்நியராயினும், சமயம், பண்பாடு, நாகரிகம், கலை முதலியனவற்றில் இவர்களுக்கும் தமிழருக்கும் முரண்பாடில்லை. சில காலம் தமிழ் நாட்டில் வாழ்ந்த பின் இவர்கள் தமிழரோடு கலந்து தமிழராகினர். தமிழ் மொழிக்கும் ஆதரவளித்தனர். இக் காலத்திற் சமயத்துறையிற் பெரு முன்னேற்றத்தைக் காணலாம். பக்தி மார்க்கம் தென்னாட்டிலே தொடங்கி இந்தியா முழுவதும் பரவிற்று. தென் நாட்டிலுள்ள பெருங் கற்கோயில்கள் இக்காலத்திற் கட்டப்பட்டவையாகும். சங்கீதம், சிற்பம், ஓவியம் முதலிய கலைகள் இக்காலத்தில் வளர்ச்சியடைந்தன.
கடைச்சங்கத்துக்குப் பிற்பட்ட காலத்தைப் பற்றிப் பல வரலாற்று நூல்கள் உள. தமிழர் வாழ்க்கையிலேற்பட்ட சில மாற்றங்களை மிகச் சுருக்கமாகக் காட்டுவதே எனது நோக்கமாகும். ஆதலாற் கடைச் சங்கத்துக்குப் பிற்பட்ட காலத்தை இரு பகுதிகளாகப் பிரிக்கிறேன். (1) கி.பி 3ஆம் நூற்றாண்டு தொடக்கம் 14ஆம் நூற்றாண்டு வரையும் (2) 14ஆம் நூற்றாண்டுக்குப் பின்.
(1) 3ஆம் நூற்றாண்டு தொடக்கம் 14ஆம் நூற்றாண்டு வரையும் களப்பிரர்: களப்பிரர் தொண்டை நாட்டின் வட பகுதியில் வாழ்ந்த கனவர் அல்லது குறும்பர் எனுஞ் சாதியினராவர். இவர்களுடைய தாய்மொழி தமிழாயினும், இவர்கள் நாகரீகத்திலும் பண்பாட்டிலுஞ் சற்றுக் குறைந்தவர்களாக இருந்தனர். இவர்கள் பல்லவரையும், சோழரையும், பாண்டியரையும் வென்று தமது ஆட்சியைப் பரப்பினர். பாண்டியரை இவர்கள் வென்றதினாற் கடைச்சங்கம் அழிந்தது என்பர். இஃது எவ்வாறாயினும், இவர்களுடைய ஆட்சிக்காலம் கலவரங்களும், நாட்டில் அமைதியின்மையுமுண்டான காலம் என்பதில் ஐயமில்லை. தமிழ் மொழி இக்காலத்திற் சீரழிந்தது. இக்கால நூல்கள் மிகச் சிலவாகும். கி.பி. 300 தொடக்கம் கி.பி. 500 வரை இருநூறு வருடங்கள் இவர்கள் தமிழ் நாட்டிற் பேராட்சி நடத்தினர். இக்காலத்தில் இத்துறையிலாவது குறிப்பிடத்தக்க முன்னேற்றம் ஏற்படவில்லை.
பல்லவர்: இவர்கள் எந் நாட்டவர் என்பது பற்றிக் கருத்து வேற்றுமையுண்டு. இராசநாயக முதலியார் இவர்கள் மணிபல்லவ (ஈழ நாட்டு) அரச குடும்பத்தைச் சேர்ந்தவர் என்கிறார். ஆனால் இக்கொள்கைக்குப் போதிய ஆதாரமில்லை. தமிழ் நாட்டிற்கு வடக்கே தெலுங்கு நாட்டில் தென்பொண்ணை கிருஷ்ணா ஆறுகள் பாயும் பகுதியிற் பல்லவர். சாதவர்கள் அரசரின் கீழ்ச் சிற்றரசர்களாக இருந்தனர். சாதவாகன அரசு பலங் குன்றியப்போது. இவர்கள் சுதந்திர மன்னராகினர். பின்பு சோழ நாட்டைக் கைப்பற்றிக் காஞ்சியில் தமது அரசை நிறுவினர். படிப்படியாகத் தமது அரசைத் தென்னாட்டிற் பரப்பினர். பல காலங்களிற் பாண்டி நாட்டையும் கைப்பற்றி ஆண்டனர். கி.பி 7ஆம் நூற்றாண்டிற் பல்லவர் ஆட்சி தென்னாடு முழுவதும் பரவியிருந்தது. முதலாம் நரசிம்மன் சேரர், சோழர், பாண்டியர், களப்பிரர், இராட்டிர கூடர் முதலிய யாவரையும் வென்று வாதாபி வரையும் தனது பேரரசை நிறுவியனான். இவன் ஈழத்தையும் வென்றான். 9ஆம் நூற்றாண்டின் இறுதியிற் பல்லவப் பேரரசு வீழ்ச்சியடைந்தது.
பல்லவர் சோழ நாட்டிற்கு வடக்கே வாழ்ந்த தெலுங்கர் என்பதைப் பல சான்றுகள் காட்டுகின்றன.
(அ)மன்னர்களின் பெயர்கள்:
(ஆ)பல்லவர் ஆட்சியில் வடமொழியை அரசாங்க மொழியாக இருந்தமை.
(இ)இவர்களுடைய காலத்தின் ஆரிய – திராவிடப் பிராமணீயமும் வடமொழியும் தென்னாட்டிற் பரவியமை.
(ஈ) பல்லவர் புத்த சமண சமயங்களை ஆதரித்தனர். அக்காலத்திற் காஞ்சி இச்சமயங்களுக்கு இருப்பிடமாக இருந்தது.
(உ) பல்லவ மன்னர் பெரும்பாலும் தெலுங்கு சாளுக்கிய மன்னர் குலங்களிற் கல்யாணஞ் செய்தமை.
(ஊ) பல்லவருக்கும் மூவேந்தருக்கும் எவ்வித தொடர்மின்மை: கதம்பர், மேலைக்கங்கர், இராட்டிர கூடர், சாளுக்கியர்:- கதம்பர் கன்னட நாட்டவர், பல்லவரையும் கங்கரையும் வென்று தமது ஆட்சியைப் பரப்பினர். மேலைக்கங்கர் மைசூரில் ஆண்ட அரச வமிசத்தவர். சமண சமயத்தை ஆதரித்தனர். வடமொழியையும் கன்னடத்தையும் வளர்த்தனர். சோழரையும் இராட்டிர கூடரையும் வென்று தமது ஆட்சியைப் பரப்பினர். மேலைச் சாளுக்கியர் தக்கணத்தின் பிஜாப்பூரில் ஆண்ட பண்டை மராட்டியராவர்.
கடைச்சங்க காலத்துக்குப் பின் 200 ஆண்டுகள் தமிழ் நாட்டில் ஓர் இருட் காலமாகும். ஆனாற் பல்லவர் ஆட்சியில் தமிழ் பழைய நிலையை அடைந்தது. பல நூல்கள் தோன்றின. பண்டிதர் கா.பொ. இரத்தினம் எழுதிய “நூற்றாண்டுகளில் தமிழ்” என்ற புத்தகத்தில் இக்கால நூல்கள் கொடுக்கப்பட்டிருக்கின்றன. இவற்றுள் முக்கியமானவை சில இங்கு குறிப்பிடப்படுகின்றன.
9;. திருக்குறள் தவிர்ந்த ஏனைய கீழ்க்கணக்கு நூல்கள்.
பிற்கால நூல்கள் பெரும்பாலுஞ் சமயத் தொடர்பனவையான படியினால் அவற்றிலும் பார்க்கச் சங்ககால நூல்களைச் சிறந்தவையாகச் சிலர் கருதுகின்றனர். ஆனாற் சங்க நூல்களை இன்று மிகச் சிலரே படிக்கின்றனர். இப்பிற்காலச் சமய நூல்கள் பெரும்பாலான மக்கள் போற்றும் நூல்களாகும். உதாரணமாகத் திருவாசகத்தை எடுத்துக்கொள்வோம். இதற்கு ஒப்பான நூல் எம்மொழியிலுமில்லை. திருக்குறளையும் திருவாசகத்தையும் தமிழ் நூல்களில் தலை சிறந்தவையாகக் கருதவேண்டும். “தேவர் குறளும் திருநாள் மறை முடிவும் மூவர் தமிழும், முனிமொழியும் - கோவை திருவாசகமும், திருமூலர் சாலும் ஒருவாசகமென் றுணர்.” இக்காலத்தில் தமிழுடன் வடமொழி கலந்த போதிலும் இதனால் தமிழ் சிறப்படைந்ததேயன்றி இழிவடையவில்லை. வளரும் மொழி பிற மொழிகளிடமிருந்து கடன்படுவது இயல்பாகும்.
சமயத்துறையிற் பக்தி மார்க்கத்தின் எழுச்சியும் வெற்றியும் இக்காலத்தில் நடைபெற்றன. சமணமும் புத்தமும் நாட்டிலிருந்து மறைந்தன. தென்னிந்தியாவிலுள்ள பெரிய கற்கோயில்கள் பல்லவர் காலத்திற் கட்டப்பட்டவையாகும். கலைகள் இக்காலத்தில் வளர்ந்தன.
சோழப் பேரரசும் பாண்டியர் பேரரசும் சோழப் பேரரசில் மறுபடியும் தமிழராட்சி தென்னாடு முழுவதிலும் பரவிற்று. மறுபடியும் தமிழ் அரச மொழியாகி அரியாசனம் ஏறிற்று. சைவமும் தமிழும் வளர்ந்தன. சங்க காலத் தமிழரின் வீரத்தையுஞ் செல்வத்தையும் கல்வியையும் புகழையும் மீண்டும் சோழப்பேரரசிற் காண்கிறோம்.
கி.பி. 9ஆம் நூற்றாண்டிற் சோழர் உறையூரிற் சிற்றரசர்களாக இருந்தனர். சங்ககாலத்துக்குப் பின்பு ஏழு நூற்றாண்டுகள் சோழர் புகழ் மங்கிக் கிடந்தது. கி.பி. 9ஆம் நூற்றாண்டின் பிற்பகுதியிற் பல்லவர் ஆட்சி பலங்குன்றிச் சீரழிந்தது. ஆதித்தியன் எனுஞ் சோழ அரசன் கி.பி. 890இல் பல்லவரை வென்று தொண்டைமண்டலத்தைக் கைப்பற்றினான். பின்பு கொங்கை நாட்டையும் மேலைக் கங்கர் தலைநகரத்தையும் தனதாக்கினான். இலங்கையையும் வென்றான்.
முதலாம் பரந்தகன்: (கி.பி. 907 – 953) இவன் ஆதித்தியனுக்குப் பின் அரசனானான். இவனுடைய ஆட்சிக்காலம் 46 ஆண்டுகளாகும். பாணரையுங் கங்கரையும் பல்லவரையும் பாண்டியரையும் வென்று சோழப் பேரரசைக் கன்னியாகுமரி வரையும் பரப்பினான். மதுரையில் ஆடசி செய்யச் சோழப் பிரதிநிதிகளை நியமித்தான். கி.பி. 934இற்கும் கி.பி. 944இற்கும் இடையில் இலங்கையைப் பலமுறை வென்று பொலநறுவாவில் தனதாட்சியை நிறுவினான்.
ஒட்டைக் கூத்தர் மூவருலாவிற் பரந்தகனின் ஈழநாட்டு வெற்றியைப் புகழ்கிறார்.
“ஈழம் எழுநூற்றுக் காவதமும் சென்று எறிந்து வேழம் திறை கொண்டு மீண்ட கோன்”
முதலாம் இராசராசன்: (கி.பி. 985 – 1014) இவன் காலத்திற் சோழப் பேரரசு மேலும் உச்சநிலையடைந்தது. இவனுடைய எண்ணற்ற வெற்றிகளையும் ஆட்சிக் காலத்திலேற்பட்ட பல சீர்திருத்தங்களையும் பல நூல்கள் கூறுகின்றன. இவனுடைய முதலாவது போர் கந்தள+ர்ப் போராகும். இப்போரிற் சேரனை வென்று அவனுடைய இராச்சியத்தைக் கைப்பற்றினான். பின்பு பாண்டி நாட்டை வென்றான். இவ்வெற்றிகளுக்குப் பின்பு வடக்கே பெயர்ந்தான். குடகு, கங்கைபாடி, நுளம்பபாடி, தடிகைபாடி முதலிய நாடுகளைவென்றான். கி.பி. 991இல் இலங்கை மேற் படையெடுத்து அனுராதபுரம், பொலநறுவா, மாந்தோட்டை முதலிய நகரங்களைக் கைப்பற்றினான். இலங்கையிற் பல பாகங்களில் இன்றுஞ் சோழர் ஆட்சிச் சின்னங்களைக் காணலாம். பின்பு சாளுக்கியரை வென்றான். வடக்கே சீட்புலி நாடு, வேங்கை நாடு, கலிங்கம் முதலியவற்றையும் மேற்கே மாலைதீவுகளையுங் கைப்பற்றினான். முதலாம் இராசராசனின் வெற்றிகளைப் பின் பரும் பாட்டுக் கூறுகிறது.
“காந்த ள+ர்ச்சாலை கல மறுத் தருளி வேங்கை நாடும் கங்கை பாடியும் தடிகை பாடியும் நுளம்ப பாடியும் குடமலை நாடும் கொல்லமும் எலிங்கமும் முரண் தொழில் சிங்களர் ஈழ மண்டலமும் இரட்டைபாடி ஏழரை இலக்கமும் முந்நீரப் பழந்தீவு பன்னீராயமுங் கொண்டு – தன் எழில் வளர் ஊழியில் எல்லாயாண்டும்”
இரண்டாம் இராசேந்திரன்:- கி.பி. 1014 இல் இராசேந்திரன் பட்டத்துக்கு வந்தபோது, சோழப் பேரரசு தற்காலத் தமிழகம் முழுவதையும், தற்கால ஆந்திரம், கேரளம் முழுவதையும், கன்னடத்தின் பெரும் பகுதியையும், ஏறக்குறைய இலங்கை முழுவதையும் உள்ளடக்கி இருந்தது. இராசேந்திரன் இவ்வரசை உலகப் பேரரசாக்கினான். முதலில் கன்னியாகுமரி தொடக்கம் இமயம்வரை பல நாடுகளை வென்றான். இராசேந்திரனின் வடதிசை வெற்றிகளை மெய்கீர்த்தி எனும் புலவர் பாடுகிறார். இவன் வென்ற நாடுகளாவன:-
(அ)இடைத்துறை நாடு: இது கிருஷ்ணா – துங்கபத்திரா ஆறுகளுக்கு இடைப்பட்ட நிலப்பரப்பாகும். தற்போது பம்பாய் மாவட்டத்திலுள்ள இரேய்ச் சூரப் பகுதியாகும்.
(ஆ)வனவாசி பன்னீராயிரம்@ இது மைசூரின் வடமேற்குப் பகுதியும் அதற்கு வடக்கிலுள்ள கோவாப் பகுதியுமாகும்.
(இ)மண்ணைக் கடக்கம்: இது சாளுக்கிய இராட்டிர கூடப் பேரரசின் தரைநகரமாகும்.
(ஈ)ஈழம்:- ஏனைய சோழ, பாண்டிய அரசர் பெரும்பாலும் இலங்கையில் வடக்கு, வட கிழக்குப்பகுதிகளை மட்டுமே வென்றனர். மத்திய தென் பகுதிகளில் இவர்கள் ஆட்சி பரவவில்லை. இராசேந்திரன் இலங்கை முழுவதையும் வென்றான்.
(உ)சக்கரக் கோட்டம்: இது தற்போதைய நடு மாகாணத்திலுள்ள ஒரு நகரமாகும்.
(ஊ)ஒட்டர் தேசம் - இது தற்கால ஒரிசாவாகும்.
(எ)கோலசம் - இது கங்கைச் சமவெளியிலுள்ள பண்டை நகரமாகும்.
(ஏ)தண்டபுத்தி – தற்கால வங்க மாகாணத்தின் மீதுன்புரி மாவட்டம்.
(ஐ)வங்காளம்.
(ஒ) தக்கணலாடம் - இது குஜராட்டின் தென்பகுதி.
(ஓ) உத்தரலாடம் - இது குஜராட்டின் வட பகுதி.
இராசேந்திரனும் அவனுக்குப் பின் வந்த சோழ அரசர்களும் அந்தமான், நிக்கோபார்த், மாலைதீவுகளையும், பர்மா, மலேஷியா, சுமத்திரா முதலிய கிழக்காசிய நாடுகளையும் வென்று சோழப் பேரரசிற் சேர்த்தனர். கடல் கடந்து இரண்டாம் இராசேந்திரன் வென்ற நாடுகளாவன.
(1) சீர் விசயம்:- சீர் விசயம் கடாரப் பேரரசின் தலைநகரமாகும். (கடாரம் தற்காலச் சுமாத்திரா) சங்க காலத்திலும் அதற்கு முன்னரும் சுமத்திராவைத் தமிழ் மன்னர் ஆண்டனர். சீர் விசய நகர் அரசர் குலம் சேர், சோழ, பாண்டியரைப் போன்று மிகப் பழையதாகும்.
(2) மலையூர் – மலையூர் சுமாத்திராவின் ஒரு பகுதியாகும்.
(3) பண்ணை - இது சுமாத்திராவின் கீழ்க்கரைப் பகுதியாகும்.
(4) மாயுருடிங்கம் - மாயுருடிங்கம் தற்கால மலேஷியாவின் ஒரு பகுதியாகும்.
(5) இலங்கா சோகம் - இது மலேஷியாவின் கீi;டக் கரையிலிருந்த ஒரு நகரமாகும்.
(6) மாமப்பனரம் - இது மலேஷியாவின் வட பகுதியாகும்.
(7) தலைத்தக்கோணம் - இது மலேஸியாவின் மேற்குப் பகுதியாகும்.
(8) தாமரலிங்கம் - இதுவும் மலேஸியாவின் கீழ்க்கரைப் பகுதியாகும்.
(9) இலாமூரி - இது மலேஸியாவின் வட பகுதியாகும்.
(10) பர்மா –
(11) மாகக்கவாரம் - நிக்கோபார்த் தீவுகள்.
(12) அந்தமான் தீவு –
(13) மாலைத்தீவுகள் -
(14) சாந்திமத் தீவு - இது அரபிக் கடலில் இருந்த ஒருதீவாகும்.
வரலாற்றில் குறிப்பிடப்படும் ஏனைய பேரரசுகளுடன் இச்சோழப் பேரரசை ஒப்பிடுக. இச் சோழ அரசர் கடலாட்சியும் தரையாட்சியும் செய்தனர். இரண்டாம் இராசேந்திரன் காலத்திலும் வீர இராசேந்திரன் காலத்திலும் சோழப் பேரரசு உச்சநிலையில் இருந்தது. இப்பேரரசைப் பற்றிய பல நூல்களுள. இவற்றைத் தமிழராகிய நாம் தவறாது படிக்க வேண்டும்.
முதலாம் குலோத்துங்கன் காலத்திலே சோழப் பேரரசிற் பல குழப்பங்கள் உண்டாயின. அரசு ஆட்டங்காணத் தொடங்கிற்று. எனினும் குலோத்துங்கன் கலிங்க போர்களில் இருமுறை வெற்றிகண்டான்.
குலோத்துங்கனுக்குப் பின்பு சோழப் பேரரசு படிப்படியாகப்பலங் குன்றிற்று. 11ம் நூற்றாண்டு தொடக்கம் 13ம் நூற்றாண்டின் நடுப்பகுதி வரையிலுமான 350 வருடங்கள் இப்பேரரசின் காலமாகும்.
பாண்டியர் பேரரசு பண்டு தொட்டுப் பாண்டியர் பேரரசு நிறுவி ஆண்டனர். இவர்கள், பெருவள நாட்டுப் பேரரசர் குடும்பத்தவராவர். சங்கங்களை நிறுவியவர் பாண்டிய மன்னராவர். தமிழைப் பேணிவளர்த்தவர் பாண்டியரே. பாண்டி நாடே செந்தமிழ் நாடெனும் பெருமைக்குரியதாகும். 3ஆம் நூற்றாண்டில் களப்பிரர் பாண்டி நாட்டைக்கைப் பற்றி 200 வருடங்கள் ஆண்டனர். 6ஆம் நூற்றாண்டில் மறுபடியும் பாண்டியர் எழுச்சியுற்றனர். களப்பிரரை வென்றனர். பாண்டிய மன்னன் இராச சிம்மன் காலத்தில் பல்லவ சாளுக்கிய அரசுகளின் பலங் குன்றின போது, இவன் கூடல், வஞ்சி, கோழி எனும் பாண்டிய சோழச் சேரத்தலை நகர்களைக் கைப்பற்றினான்.
கி.பி. 815இற் பட்டமெய்திய திரு வல்லவன் ஈழன் வரைவென்றான். குடமுக்கு என்ற இடத்தில் கங்கர், பல்லவர், சோழர், கலிங்கர், மகதர் படைகளைத் தோற்கடித்தான் எனவும் வில்லினம் என்ற இடத்தில் சேரனை வென்றான் எனவும் சின்னமதூர்ப் பட்டயம் கூறுகிறது. சோழப் பேரரசின் போது பாண்டியர் சிற்றரசர்களாக இருந்தனர். சோழர் பிரதிநிதிகள் மதுரையில் ஆண்டனர்.
கி.பி. 1187 இல் விக்கிரமன் மதுரையிற் பாண்டிய அரசானன காலந் தொடக்கம் பாண்டிய அiசு மறுமலர்ச்சியடையத் தொடங்கிற்று. கி.பி. 1190 இற் குல சேகரன் பட்டமெய்திய பின் மேலும் வளர்ந்தது. சுந்தர பாண்டியனின் காலம் (கி.பி. 1216 – 38) பொற் காலமாகக் கருதப்படுகிறது. சுந்தர பாண்டிய் சோழ நாட்டைவென்று உறையூரையும் தஞ்சையையும் தீக்கிரையாக்கினான். முதலாம் சடாவீரமன் காலத்தில் பாண்டியர் திருவாங்கூரையும் கோயசாளரையும், சோழரையும், ஈழத்தையும் வென்றனர். இக் காலத்திலே தான் வட இலங்கையில் ஆரியச் சக்கரவர்த்தி குடும்பத்தவரின் ஆட்சி தொடங்கிற்று. வீரபாண்டியன் கி.பி. 1310இல் மகமதியரின் உதவியை நாடினான். உதவிக்கு வந்த மகமதியர் மதுரையைக் கைப்பற்றி 50 வருடங்கள் ஆண்டனர். மகமதியரிடமிருந்து விசயநகரப் பேரரசு பாண்டி நாட்டைக் கைப்பற்றிற்று. இதற்குப் பின் மேனாட்டவர் தென்னிந்தியாவிற்குட் புகுந்தனர்.
மூவேந்தர் ஆட்சி முற்றாக மறைந்தது. வரலாறுக்கு முற்பட்ட காலந்தொட்டு வந்த தமிழ் மக்கள் சுதந்திரத்தை இழந்து அடிமைகளாகினர்.
சோழப் பேரரசில் தமிழ் மொழியும் சைவமும் தழைத்தோங்கின. பல நூல்கள் எழுந்தன. ஒரு மக்களின் மொழி, பண்பாடு, நாகரிகம், தொழில், வாணிபம், செல்வம் முதலியவற்றின் வளர்ச்சிக்கும் அரசியற் சுதந்திரத்திற்கும் இடையில் நெருங்கிய தொடர்புண்டு. சங்க காலத்திற்குப் பிற்பட்ட இலக்கியத்திற் பல குறைபாடுகளைச் சிலர் எடுத்துக் காட்டுகின்றனர்.
(1) நூல்கள் பெரும்பாலும் பிரபந்தங்களாகும், கோவை, உலா இரட்டை மணிமாலை, கலம்பகம், பரணி எனப்பிரபந்தங்கள் முப்பத்தாறு வகைபடும்.
(2) நூல்கள் பெரும்பாலும் அதிகங் கலந்துவிட்டது.
(3) தமிழில் வடமொழி அதிகங் கலந்துவிட்டது.
(4) பிராமணீயக் கொள்கைகள் பரவிவிட்டன.
(5) நூல்கள் பெரும்பாலும் வடமொழியிலிருந்து மொழி பெயர்ப்புக்களாகும்.
இவற்றைக் குறைபாடுகளாக எடுத்துக் கொள்ள முடியாது. ஒவ்வொரு நூலையும் அதன் சொல் பொருள் நயம் பற்றி மதிப்பிட வேண்டும்.
12ம் நூற்றாண்டு 13. கந்தப்புராணம் - கச்சியப்ப சிவாச்சாரியார்
14. பெரிய புராணம் - சேக்கிழார்
15 இராமாயணம் - கம்பர்
16 மூருலா
17 குலோத்துங்கன் - ஒட்டக் கூத்தர் பிள்ளைத்தமிழ்
18. ஆத்திசூடி முதலிய ஒளவையார் நூல்கள்
19. திருவுந்தியார் திருவியலூர் உய்ய வந்த தேவநாயனார்
20 நளவெண்பா – புகழேந்திப் புலவர்.
21. நன்னூல் - பவணந்தி முனிவர்
13ம் நூற்றாண்டு 22. சிவஞான போதம் - மெய்கண்ட தேவர்
23. சிவஞான சித்தியார் – அருணந்தி சிவாச்சாரியார்
(2) 14ம் நூற்றாண்டு தொடக்கம் இச்சமீப காலத்தைப் பற்றிப் பல வரலாற்று நூல்கள் உள@ 14ஆம் நூற்றாண்டுக்குப் பிற்பட்ட நாம் தமிழரைப்பற்றி எழுதுவது எனது நோக்கமன்று. இதுவரையும் அரசுகளும் அரசர்களும் மாறினபோதிலும், பேரரசுகள் காலத்துக்குக் காலம் தோன்றி மறைந்த போதிலும் இவை யாவும் ஒரே நாகரிகமும் பண்பாடுமுடைய ஒரு நாட்டு ஓரின மக்களிடையில் நடந்தவையாகும். போர்கள் அடிக்கடி நிகழ்ந்த போதிலும், இப்போர்களினால் மக்களின் வாழ்க்கை பாதிக்கப்படவில்லை. பண்டுதொட்டுப் பற்பல காலங்களில் இந்தியாவிற்குட் புகுந்த சீன, சிதிய காக்கேசியக் குழு மக்கள் இந்திய மக்களுடன் கலந்து ஒன்றாகினர். இக்கலப்பிலிருந்து இந்திய மொழிகளும், நாகரிகமும், பண்பாடும், சமயங்களும் தோன்றின. ஆரியம் திராவிடர் என்பவை திசையைக் குறிக்குஞ் சொற்களன்றி இனத்தைக் குறிக்குஞ் சொற்களன்று எனக் கண்டோம். சீன, சிதிய காக்கேசியக் குழுக்களின் பேச்சு மொழிகளுடன் திராவிடம் கலந்து வட இந்திய மொழிகள் தோன்றின. சமஸ்கிருதம் மத்திய இந்தியாவிற் பிற்காலத்திலே தோன்றி வளர்ந்த செயற்கை மொழி. தமிழும் சமஸ்கிருதமும் தொடர்புடைய ஓரின மொழிகள் எனக் காஞ்சி புராணங் கூறுகிறது.
“வட மொழியைப் பாணினிக்கு வகுத்தருளி அதற்கிணையாத் தொடர்புடைய தென் மொழியை உலக மெலாம் தொழு தேத்தும் குடமுனிக்கு, வலியுறுத்தார் கொல் லேற்றுப் பாகர்”
14ஆம் நூற்றாண்டிலிருந்து மொழிகள், பண்பாடு, சமயத்தில் வேறுபட்ட அந்நியர் இந்தியாவிற்குட் புகுந்தனர். இவர்கள் வர்த்தகத்துக்காக இந்தியாவிற்குட் வந்து நாட்டின் பல பாகங்களைக் கைப்பற்றிக் கொள்ளையடித்தனர். பத்தொன்பதாம் நூற்றாண்டில் ஆங்கிலேயர் தமது ஆட்சியை இந்தியா முழுவதிலும் நிறுவும் வரையும் நாடெங்கும் போர்களும், கொலைகளும், கொள்ளையடித்தலும் நடந்தன. இவ்வந்நியரின் சமயங்கள் இந்தியாவிற்குட் புகுந்தன. சமயச் சண்டைகளும், மத மாற்றங்களும் தோன்றின. இந்தியா (தமிழ் நாடும் உட்பட) அழிந்தது. இந்து சமயமும் இந்தியப்பண்பாடும் நாகரிகமும் சீர்குலைந்தன. செல்வம் செழித்தோங்கிய இந்திய நாடு வறுமையடைந்தது. விவசாயமும் தொழில்களும் குன்றின. வாணிபத்தை அந்நியர் கைப்பற்றினர்.
இக்காலத்தில் தென்னாட்டை மகமதியரும் விசயநகரப் பேரரசர்களும் ஆண்டனர். இவர்களிடையில் இடையறாப்போர்கள் நடந்தன. 14ஆம் நூற்றாண்டின் ஆரம்பத்தில் விசயநகர அரசர் துங்கபத்திரை நதிக்கரையிற் சிற்றரசர்களாக இருந்தனர். படிப்படியாகப் பல மன்னவர்களை வென்று சில காலத்திற்குள் இச்சிற்றரசு சோழப் பேரரசை ஒத்த பேரரசாகிற்று. விசய நகரப் பேரரசைப் பற்றிய பல நூல்கள் உள. இங்கு நாம் இப்பேரரசின் விளைவாகத் தமிழ் நாட்டிலேற்பட்ட மாற்றங்களை மட்டுமே சுருக்கமாகப் பார்ப்போம்.
(அ) விசயநகரப் பேரரசர் வடமொழியையும் தெலுங்கையும் ஆதரித்தனர்.
(ஆ) இக்காலத்தில் தெலுங்கர் பெருந்தொகையாகப் படையெடுத்து வந்து தமிழ் நாட்டிற் குடியேறினர். தெலுங்கர், கன்னடியர் படைகள் தமிழ்நாடு முழுவதும் நிறுவப்பட்டன. தெலுங்கு நாட்டு விவசாயிகளும் தொழிலாளிகளும் தமிழ் நாட்டிற் குடியேறினர். தமிழ்ச் சிற்றரசர்களின் இடத்தில் நாயக்கர் ஆண்டனர். தெலுங்கருக்கே நிலங்கள் அளிக்கப்பட்டன. இவர்கள் நிலப்பிரபுக்கள் அல்லது பண்ணைக்காரராயினர். ஆட்சியை மட்டுமன்றி வாணிபத்தையும் செல்வத்தையும் கைப்பற்றினர். தமிழ் மக்கள் மேலும் வறுமையடைந்தனர். ஒரு பக்கம் மகமதியர் கொடுமையினாலும் மறு பக்கம் தெலுங்கர் கொடுமையினாலும் தமிழ் மக்கள் துன்புற்றனர்.
(இ) தெலுங்குப் பிராமணர் தமிழ் நாட்டிற்கு வந்தனர். பிராமணீயம் மேலும் பரவிற்று. இக்காலத்தில் சாதி வேற்றுமைகளும் இந்து மதத்துக்கு இழுக்கான கொள்கைகளும் பழக்க வழக்கங்களும் பரவின. தெலுங்குப் பிராமணர் சைவருக்கும் வைணவருக்குமிடையிற் பகைமையையும் பொறாமையையும் உண்டாக்கினர். வைணவ சமயம் பரவிற்று.
(ஈ) எனினும், விசயநகரப் பேரரசு தென்னாட்டில் மதத்தைக் காப்பாற்றிற்று. இப்பேரரசு இருந்திருக்காவிடின், தென் இந்து நாட்டில் இந்து மதம் அழிந்திருக்கும்.
தமிழ் மொழி இக்காலத்தில் வளர்ச்சியடையவில்லை. பெரும் பாலான நூல்கள் பண்டார சாத்திரங்களாகும். தல புரணங்களும் சதகங்களும் பள்ளுகளும், சிற்றரசர்களைப் பற்றிய மான்மியங்களும் தோன்றின. சுதந்திரமற்ற தமிழ் மக்கள் உன்னத இலட்சியங்களை இழந்தனர். அற்ப சிறு விடயங்களைப் பற்றி நூல்கள் எழுதினர். இந்நூல்களில் அடிமை மனப்பான்மைக் காணலாம். இக்காலத்திற் சிறந்த நூல்களாக மிகச் சிலவற்றையே குறிப்பிடலாம்.
1. பாரதம் – வில்லிப்புத்தூராழ்வார்
2. திருப்புகழ் – அருணகிரிநாதர்
3. சீறாப்புராணம் – உமறுப்புலவர்
4. தேம்பாவணி – வீரமாமுனிவர்
5. தாயுமானவர் பாடல்கள்
6. இராமலிங்க சுவாமிகள் பாடல்கள்
7. தமிழ் விடுதூது – அமிர்தம் பிள்ளை
ஆங்கிலேயரும் வாணிபத்திற்காகவே இந்தியாவிற்கு வந்தனர். கிழக்கிந்திய தீவுக் கொம்பனியின் ஆட்சிக் காலத்திற் பல அநீதிகளும் போர்களும் கொலை களவுகளும் நடந்தன. ஆங்கிலேயர் தமது சாம்ராச்சியத்திலிருந்த நாடுகளைச் சுரண்டிச் செல்வமடைந்தனர் என்பதில் ஒரளவு உண்மையுண்டு. எனினும், இங்கிலாந்துப் பாராளுமன்றம் ஆட்சிப் பொறுப்பேற்ற பின் அரசியல் நிலை படிப்படியாகச் சீரடைந்தது. இந்தியா முழுவதையும் ஆங்கிலேயர் ஒரு குடைக்கீழ்க் கொண்டுவந்தனர். நாடு முழுவதிலும் கலவரங்களையும் போர்களையும் தடுத்து அமைதியை நிலை நாட்டினர். யாவருக்கும் சம நீதி வழங்கினர். சமவாய்ப்பு அளித்தனர். கல்வியைப் பரப்பினர். இருபதாம் நூற்றாண்டில் ஆங்கிலேயர் ஆட்சியில் என்றுமுள தமிழ் மீண்டும் தலையோங்கிற்று. பல துறைகளில் பல தமிழ் நூல்கள் தோன்றின.
“தந்தை அருள் வலியாலும் - இன்று சார்ந்த புலவர் தவவலியாலும் இந்தப் பெரும் பழி தீரும் - புகழ் ஏறிப் புவிமிசை என்றும் இருப்பேன்” (பாரதி)
ஆங்கிலம் தமிழ் வளர்ச்சிக்குப் பெரும் உதவியாக இருந்த தன்றிச் தடையாக இருக்கவில்லை. தமிழர் தொழிலிலும் வாணிபத்திலும் முன்னேறினர். ஆங்கில சாம்ராச்சியத்திலிருந்த பல நாடுகளிற் குடியேறினர்.