சென்ற அத்தியாயத்தில் வேதங்களின் இயல்பையும் நோக்கத்தையும் கண்டோம். வேதங்கள் எங்கும் பொருந்தக்கூடிய பொதுவிதிகள் என்றும் எல்லா இடங்களுக்கும் எக்காலத்துக்கும் உரிய ஒலிகள் என்றும் சொல்வதை நாம் ஏற்றுக் கொண்டோமானால், மனிதனின் அன்றாட வாழ்வில் அவற்றுக்கு அப்படி என்ன முக்கியமான இடம் இருக்க முடியும் என்ற கேள்வி எழுகிறது. இவை யாருக்குரியவை? அனைவரும் தம் விருப்பப்படி இந்த ஒலிகளைப் பயன்படுத்தி தங்கள் வாழ்வை மேம்படுத்திக்கொள்ள முடியுமா? அல்லது இந்த மந்திரங்கள் வெறும் ஓசைகள்தானா? இவற்றால் மனிதர்களுக்கு பயனில்லை என்றால் வேத மந்திரங்களால் ஆவதென்ன? இந்தக் கேள்விகளுக்கு இப்படி ஒரு சுருக்கமான பதில் சொல்லலாம்- வேத மந்திரங்கள் அனவைருக்கும் உரியவை. ஆனால் அவற்றை அன்றாட வாழ்வில் பயன்படுத்துவதற்கான நெறிமுறைகளை வேதாங்கங்களும் உபவேதங்களும் வகுத்திருக்கின்றன. வேதங்களைப் பயன்படுத்தி மேன்மையடைவதற்கான வழிகாட்டிகளாகவும் கருவிகளாகவும் இவ்விரண்டும் இயங்குகின்றன.
வேதாங்கங்கள்
வேதாங்கங்கள் – வேத அங்கங்கள்- வேதங்களின் உறுப்புகள் என்று சொல்லப்படுகின்றன. வேத ஒலிகளையும் அக்ஷரங்களையும் புரிந்து கொண்டு சரியான முறையில் பயன்படுத்த வேதாங்கங்கள் மிக முக்கியமாய் இருக்கின்றன. எனவேதான் வேதங்களைக் கற்பிப்பதில் வேதாங்கங்களுக்கு முதன்மை இடம் அளிக்கப்படுகிறது.
வேதாங்கங்கள் எண்ணிக்கையில் அறுவகைப்படும்
அவை,
சீக்ஷா – உச்சரிப்பு
வியாகரணம் – இலக்கணம்
சந்தஸ் – செய்யுள் இலக்கணம்
நிருக்தம்- சொல் இலக்கணம்
ஜோதிடம் – வானசாஸ்திரம்
கல்பம் – செயல்முறை
இவை ஒவ்வொன்றும் ஒரு உறுப்பாக, வேதங்களின் ஒரு அங்கமாகக் கருதப்படுவதால் இவையனைத்தும் வேதாங்கங்கள் என்று அழைக்கப்படுகின்றன.
வேதாங்கங்களின் முதல் உறுப்பான சீக்ஷா, ஓசை நயம் மற்றும் உச்சரிப்பு முறையை நெறிப்படுத்துகிறது. சீக்ஷா வேதங்களின் நாசியாகக் கருதப்படுகிறது. நாம் சுவாசிக்கவும் நம் பிராணனைக் காத்துக் கொள்ளவும் நம் நாசி உதவுவதுபோல் சீக்ஷா வேத மந்திரங்களின் ஜீவ சக்தியைக் கட்டிக் காக்கிறது. வேத மந்திரங்களின் பலனை முழுமையாய்ப் பெற அவற்றை முறைப்படி சரியாக உச்சரித்தாக வேண்டும். அசைகளின் ஓசை மற்றும் ஒலிப்பைத் தூய முறையில் காத்துக் கொள்வதற்கான விதிமுறைகளை வரையறை செய்வதால் சீக்ஷா முக்கியத்துவம் பெறுகிறது. உச்சரிப்பில் எழும் எந்த ஒரு சிறு பிழையும் விரும்பத்தகாத, அல்லது எதிர்மறை பலன் கொடுக்கக்கூடும். எனவே வேத புருஷனின் ஆறு உறுப்புகளில் வேதாங்கமே பிரதானமாக மதிக்கப்படுகிறது. ஒவ்வொரு அக்ஷரமும் எவ்வளவு உயர்ந்து அல்லது தாழ்ந்து ஒலிக்கப்பட வேண்டும், அதன் கால அளவை என்ன என்பன போன்ற விஷயங்களை சீக்ஷாவே நெறிப்படுத்துகிறது. இந்த விதிமுறைகள் மாற்றப்படக்கூடாதவை என்பதில் ஒருமித்த கருத்துண்டு. எனினும் வெவ்வேறு சாகைகளுக்கு இடையே மந்திரங்களை உச்சரிப்பதில் வேறுபாடு இருப்பதைப் பார்க்கிறோம். இங்குதான் சீக்ஷா மிக முக்கியமான பணியாற்றுகிறது- வெவ்வேறு பகுதிகளுக்குரிய சாகைகளுக்கு ஏற்ற வகையில் விதிமுறைகளை வகுத்து மந்திர பிரயோகத்தில் பிழை ஏற்படாத வகையில் சீக்ஷை பார்த்துக் கொள்கிறது.
வேதாங்கங்களின் இரண்டாம் உறுப்பான வியாகரணம் இலக்கண விதிகள் வகுத்தளிக்கிறது. வியாகரணம் வேதத்தின் வாய் என்று கருதப்படுகிறது. பரம்பொருள் சொரூபங்களில் மிக முக்கியமானது ஒலி வடிவே. சீக்ஷையும் வியாகரணமும் ஒலி வடிவை மேம்பட்ட, தெளிவான வகையில் உணர உதவி நமக்கு நன்மை பயக்கின்றன. பிற இலக்கண விதிகள் போலல்லாது வியாகரணம் மிக விரிவான பார்வை கொண்டிருக்கிறது. வியாகரணம் வகுத்துக் கொடுக்கும் மோட்ச சாதனங்களில் ஒன்று சப்த பிரம்ம வாதம் – ஒலியும் பரம்பொருளும் அடிப்படையில் ஒன்றே என்பது இதன் தாத்பர்யம். இதிலிருந்து கிளைத்த பல்வகை சாதனைகளில் ஒன்றான நாத பிரம்ம உபாசனையின் அடிப்படை தத்துவத்தை நாம் இங்கு காணலாம்- நாதமே பரம்பொருளுக்கு இட்டுச் செல்கிறது. வியாகரணங்களில் பாணினியின் வியாகரணமே மிகப் பரவலாய் அறியப்பட்டுள்ளது.
சந்தஸ் அல்லது யாப்பு, வேதாங்கங்களின் மூன்றாவது உறுப்பாகும். இது வேதத்தின் பாதமாக கருதப்படுகிறது. யாப்பிலக்கணம் என்று சந்தஸ் குறித்து சொல்லலாம். சீக்ஷை சரியான உச்சரிப்புக்கான விதிமுறைகளைத் தொகுக்கிறது, வியாகரணம் அக்ஷரங்களின் பொருத்தத்தைத் தீர்மானிக்கிறது, சந்தஸ் மந்திரப் பிரயோகத்தின் ஒட்டுமொத்த ஒலி வடிவம் குலைவற்ற ஒழுங்கு கொண்டிருக்க உதவுகிறது. இவ்வகையில் வேத ஒலிகள் மற்றும் மந்திரங்களை சந்தஸ் காப்பாற்றிக் கொடுப்பதாகச் சொல்லலாம். வேத மந்திரங்களைத் தவறாக உச்சரிப்பது விரும்பத்தகாத, எதிர்மறை விளைவுகளை அளிப்பது போலவே அக்ஷரங்களைக் கூட்டுவதும் குறைப்பதும் பிழைபலன் தருவதாக அமையும். எனவே, வேதக்கல்வியில் சந்தஸ் மிக முக்கியமான இடம் கொண்டதாய் இருக்கிறது. சந்தஸ் குறித்த நூல்களில் பிங்களரின் சந்தஸ் சாஸ்திரமே மிகவும் புகழ் பெற்றதாகும்.
நிருக்தம் அல்லது சொல் இலக்கணம் நான்காம் வேதாங்கமாகும். அது வேதத்தின் செவியாகக் கருதப்படுகிறது. நிருக்தம் வேதத்தின் வேர்ச்சொல்லகராதி. வேறெந்த வேர்ச்சொல் அகராதியையும் போலவே நிருக்தம் ஒவ்வொரு சொல்லின் வேரையும் கண்டெடுத்துக் கொடுக்கிறது. ஆனால் பிற மொழிகள் போல் அல்லாமல் வேத மொழியில் பல அசாதாரணமான, கடினமான சொற்கள் உள்ளன. நிருக்தம் அவற்றின் மூலம் மற்றும் பொருள் தருவதோடல்லாமல், அன்றாட பயன்பாட்டில் உள்ள சொற்களையும் அசை பிரித்து அவற்றின் மூலப்பதங்களை விளக்கி, ஏன் குறிப்பிட்ட பொருளில் ஒவ்வொரு சொல்லும் பயன்படுத்தப்படுகிறது என்பதை விளக்குகிறது. மந்திரங்களின் ஆழ்பொருளை அறிய நிருக்தங்கள் மாணவர்களுக்கு உதவுகின்றன, வெகு சில சொற்கள் அல்லது மிகச் சிறிய வாக்கியத்தின் மீபொருண்ம உள்ளடக்கம் என்ன என்பதைப் புரிந்து கொள்ளவும் நிருக்தம் பயன்படுகிறது.
ஜோதிடம் அல்லது வான சாஸ்திரம் ஐந்தாம் வேதாங்கம். அது வேதங்களின் கண்ணாகக் கருதப்படுகிறது. ஜோதிடத்தை நயனம் என்று அழைப்பதுண்டு, அதற்கும் கண் என்றுதான் பொருள். குறிப்பிட்ட சில கோள்கள் எப்போது எந்த அமைப்பில் இருக்கும் என்பதை கணிக்கவும் எப்போது வைதீக கர்மாக்கள் செய்ய வேண்டும் என்பதற்கும் எண்ணற்ற நெறிமுறைகள் இருக்கின்றன. எனவே வேதங்களைக் கற்பதில் ஜோதிடம் ஒரு பயனுள்ள துறையாய் இருக்கிறது. மிகத் தொலைவில் உள்ள நட்சத்திரங்கள் மற்றும் கோள்களின் நிலையைக் கணிப்பது என்பது சிக்கலான நடைமுறை கொண்டிருப்பதால், கணிதம் ஜோதிட சாஸ்திரத்தின் தவிர்க்க இயலாத அங்கமாக இருக்கிறது. கணித அடிப்படையில் ஜோதிடம் மூன்று பிரிவுகள் அல்லது ஸ்கந்தங்களாக பகுக்கப்பட்டுள்ளது- சித்தாந்த ஸ்கந்தம், சம்ஹித ஸ்கந்தம், ஹோர ஸ்கந்தம். இவற்றில் சித்தாந்த ஸ்கந்தம் அல்ஜீப்ரா, ட்ரிகோணமெட்ரி, ஜியோமெட்ரி, கூட்டல் கழித்தல் போன்றவற்றின் அடிப்படையில் கணிக்கிறது. சம்ஹித ஸ்கந்தம், வானவியல் மற்றும் ஜோதிடம் முதலான துறைகளைப் பேசுகிறது. ஹோர ஸ்கந்தம் கோள்களின் இயக்கம் பூமியின் மீதும் அதன் மக்களின் மீதும் ஏற்படுத்தும் தாக்கத்தை விவரிக்கிறது.
கல்பம் அல்லது நடைமுறை, வேதாங்கங்களின் ஆறாம் அங்கம். இது வேதங்களின் கரமாகக் கருதப்படுகிறது. வைதீக கர்மாக்களில் பங்கேற்பதற்கான துவக்கம் என்று கல்பம் அறியப்பட்டாலும் நாம் மேன்மையாகவும் ஒழுக்கமாகவும் வாழவும், வாழ்வின் வெவ்வேறு கட்டங்களில் உள்ளவர்கள் சமூக அமைப்பில் எவ்வாறு நடந்து கொள்ள வேண்டும் என்றும், ஒருவன் தன் இல்லத்தில் எவ்வாறு நடந்து கொள்ள வேண்டும், வைதீக கர்மாக்களில் எவ்வாறு பங்கேற்க வேண்டும் என்றும் பல நெறிமுறைகள் உள்ளன. இது மிகப் பெரிய பேசுபொருள் என்பதால் ரிஷிகள் கல்பம் சார்ந்த சாஸ்திரங்களை மூன்று வகைகளாக தொகுத்துள்ளனர்- அவை, தர்ம சாஸ்திரம், க்ருஹ்ய சாஸ்திரம், ஸ்ரௌத சாஸ்திரம் என்று அறியப்படுகின்றன.
உபவேதங்கள்
உபவேதம் என்ற பதத்தின் பொருள் செயல்முறை அறிவு என்று சொல்லலாம். வெவ்வேறு துறைசார்ந்த தொழில்நுட்ப தகவல்கள் உபவேதங்களாகத் தொகுக்கப்பட்டிருக்கின்றன. தலைமுறை தலைமுறையாக வேத ரிஷிகள் காலம் முதல் கைமாற்றி அளிக்கப்படும் பல்வேறு துறை சார்ந்த பயனுள்ள தகவல்களே உப வேதங்களாக அறியப்படுகின்றன.
வித்யாஸ்தானங்கள் அல்லது அறிவகங்களின் ஒரு பகுதியே உபவேதங்கள். இந்து தத்துவங்களில் பதினெட்டு வித்யாஸ்தானங்கள் குறிப்பிடப்படுகின்றன.
நான்கு வேதங்கள், ஆறு வேதாங்கங்கள், மீமாம்சை, நியாயம், புராணங்கள் (புராணங்கள் அண்டவியல் குறித்தும் பேசுகின்றன), தர்ம சாஸ்திரங்கள் மற்றும் நான்கு உப வேதங்கள்- இவையே பதினெட்டு வித்யாஸ்தானங்கள்.
வேதாங்கங்களின் பின்னிணைப்பாக உபவேதங்கள் கருதப்படுகின்றன.
இவையே நான்கு உபவேதங்கள்-
ஆயுர் வேதம் – வாழ்வு குறித்த அறிவியல்
அர்த்த சாஸ்திரம்– அரசியல், ஆட்சி, பொருளாதாரம் குறித்த அறிவியல்
தனுர்வேதம்– போர்க்கலைகள் மாற்றும் ஆயுதங்கள் குறித்த அறிவியல்
காந்தர்வ வேதம்– நுண்கலைகள்