எல்லாவற்றின் மையத்திலும் மனிதரை இருத்தி, தனிமனித மேம்பாட்டையும் வளர்ச்சியையும் ஊக்குவிக்கும் வகையில் இந்து சமயங்களிலும் சம்பிரதாயங்களிலும் உள்ள பல்வேறு தத்துவங்களையும் நம்பிக்கைகளையும் இதுவரை பேசி இருக்கிறோம். இதைத் தொடர்ந்து ‘இந்து திருவிழாக்களை’ இந்தப் பகுதியில் எடுத்துப் பேசுவோம். திருவிழாக்களைப் பற்றிப் பேசுவது அவசியம்தானா என்று சிலர் நினைக்கலாம். நாம் அனேகமாக திருவிழாக்கள் கொண்டாடப்படுவதை வழக்கமாக எடுத்துக் கொள்கிறோம், அவற்றின் மீது போதிய கவனம் கொள்வதில்லை.
திருவிழாக்கள் என்னும்போது, ஏதோ ஒரு விஷயத்தைக் கடைப்பிடிக்கவோ, கொண்டாடவோ குறிப்பிட்ட ஒரு மக்கள் குழுவோ, சமூகமோ பங்கேற்கும் பெரும் நிகழ்வுகளையே குறிக்கிறேன்.
திருவிழாக்களைக் கொண்டாடும் அல்லது கடைப்பிடிக்கும் மக்களின் குறிப்பிட்ட தத்துவ நம்பிக்கைகளை வெளிப்படுத்துவதாகவோ பிரதிபலிப்பதாகவோ திருவிழாக்கள் இருக்கின்றன. எனவேதான் சமயம் சார்ந்த திருவிழாக்கள், சமூக- பண்பாட்டு நிகழ்வுகள், விவசாய திருவிழாக்கள், கலைத் திருவிழாக்கள் என்று பலவகைப்பட்ட திருவிழாக்கள் இருக்கின்றன.
இங்கும் இந்து கலாச்சாரமும் சமூகமும் பிற சமூகங்களைவிட மிகவும் வேறுபட்டிருப்பதைப் பார்க்க முடியும்- மற்ற கலாச்சாரங்களில் உள்ளதை விட இந்து திருவிழாக்களில் சமய உணர்வின் உள்ளீடு கூடுதலாக இருக்கிறது, கூடுதலாகவும் வெளிப்படுகிறது. இது தொடர்பாக சுவாமி விவேகானந்தர் கூறியது மிகப் பிரபலமான ஒன்று- “.. இந்து என்பவன் வித்தியாசமான ஒரு மனிதன். அவன் அனைத்தையும் சமய உணர்வுடன் செய்கிறான். அவன் சாப்பிடுவதில் சமய நம்பிக்கை இருக்கிறது; அவன் தூங்குவதில் ஒரு சமய உணர்வு இருக்கிறது; காலையில் எழும்போதே சமய உணர்வுடன்தான் எழுந்திருக்கிறான். அவன் செய்யும் நற்காரியங்களில் ஒரு சமய நம்பிக்கை வெளிப்படுகிறது;அவன் செய்யும் கெட்ட காரியங்களிலும் சமய நம்பிக்கைகளைக் கடைப்பிடிக்கிறான்,” என்றார் அவர். பின், இந்துக்களின் எல்லாத் திருவிழாக்களிலும் சமய இயல்பு காணப்படுவதில் என்ன ஆச்சரியம் இருக்க முடியும்? பிறப்பு, இறப்பு, திருமணம், கலவி, பணி- என ஒவ்வொரு செயலும் இந்துக்களின் வாழ்வில் சமய நம்பிக்கையால் கட்டமைக்கப்பட்டதாக இருக்கிறது.
பிற பண்பாட்டில் உள்ள திருவிழாக்களோடு ஒப்பிடும்போது இந்துக்களின் திருவிழாக்கள் எந்த வகையில் தனித்தன்மை கொண்டவையாக இருக்கின்றன என்று பார்த்தால் ஒன்று சொல்லலாம் – இந்து திருவிழாக்களில் நோன்பைத் தவிர்க்க முடியாது, பிற பண்பாடுகளில் விருந்துதான் பிரதானமாக இருக்கிறது.
நோன்பிருப்பது என்பது விரதத்தின் அங்கம்- இந்து திருவிழாக்களின் இரு முக்கியமான உறுப்புகளில் ஒன்று இது. மற்றொன்று எது என்றால், உற்சவம், அல்லது ஆனந்தக் கொண்டாட்டம் என்றாகும். இந்த இரண்டும் இந்து திருவிழாக்களுக்கு எளிய நளினத்தை, ஆழத்தை, ஆடம்பரமற்ற அலங்காரத்தை அளிக்கின்றன
தத்துவ நோக்கில் பார்க்கும்போது இந்து திருவிழாக்கள் அடிப்படையில் நான்கு புருஷார்த்தங்களின் வெளிப்பாடாக இருக்கின்றன என்பதைக் காணலாம். சாதாரண பூதவுடல் தரித்த பௌதிக இருப்பிலிருந்து மனிதரைக் காப்பாற்றி அனைத்து உழற்சிக்கும் அப்பாற்பட்ட ஆன்மீகத் தளங்களுக்கு அவரைக் கொண்டு செல்லும் சாதனங்களாக திருவிழாக்கள் செயல்படுகின்றன. அவரது இயல்பான புலன் உந்துதல்கள், செல்வங்களில் திளைக்கும் நாட்டம் போன்றவற்றை நிறைவு செய்தவண்ணமே, இறுதியில் அனைத்தையும் மோட்சம் என்ற லட்சியத்தில் கரைத்து, மனிதரை உயர்த்துகின்றன.
அத்தனை திருவிழாக்களும் சமயம் சார்ந்த ஒரு சங்கல்பத்துடன் துவங்கி, உற்சவத்தில் முடிகின்றன. பிற சமயங்கள் சிலவற்றில் உள்ளது போல் தவம், விரதம் போன்றவை இந்து திருவிழாக்களில் தன்னை வருத்திக் கொள்ளும் வாதைகளல்ல.
எந்த ஒரு திருவிழா அல்லது கொண்டாட்டத்தையும் கடைப்பிடிப்பதிலும் மேற்கொள்வதிலும் உள்ள மிக முக்கியமான விஷயம், அதை முன்னின்று கொண்டாடும், கடைப்பிடிக்கும் கர்த்தா அமைதியாகவும் சஞ்சலமற்ற மனதோடும் இருக்க வேண்டும் என்பதுதான். ஆணோ, பெண்ணோ, முதலில் ஸங்கல்பம் எடுத்துக் கொண்டாக வேண்டும். ஸங்கல்ப மந்திரங்கள் திருவிழாக்களுக்கும் விரதங்களுக்கும் ஏற்ப மாறுபடும். அமைதியான மனதுடன் ஸங்கல்பம் எடுத்துக் கொண்டு செய்யப்படும் எந்த ஒரு சடங்கும் அதன் கர்த்தாவுக்கு மட்டுமல்லாமல் அவரைச் சுற்றிலும் உள்ள அனைவர்க்கும், ஏன், அவர் இருக்கும் சூழல் முழுமைக்கும் நன்மை விளைவிக்கும் என்பது நம்பிக்கை.
இந்து சமுதாயத்தில் நூற்றுக்கணக்கான திருவிழாக்கள், நிகழ்வுகள், மேளா அல்லது சந்தை விழாக்கள் கொண்டாடப்படுகின்றன. எழுநூற்றுக்கும் மேற்பட்ட விரதங்கள் இருப்பதாகக் கூறப்படுகிறது. இவை அனைத்தையும் ஒருவர் கடைப்பிடித்தாக வேண்டும் என்ற விதியோ அல்லது கட்டாயமோ கிடையாது. ஒருவரால் என்ன முடியுமோ, அவரது நாட்டம் எப்படி உள்ளதோ, அதற்கு ஏற்றவாறு தனக்குத் தகுந்த விரதங்களை அவர் மேற்கொள்ளலாம். ஆனால் இதிலும் முக்கியமானது சமுதாயத்தில் உள்ள அனைவரின் ஒட்டுமொத்த முன்னேற்றத்தையும், அண்டத்தில் உள்ள அனைத்தும் வளமாய் வாழ வேண்டும் என்ற எண்ணத்தையும் அவர் கருத்தில் கொள்ள வேண்டும் என்பதுதான்.
ஆனால் நவீன இந்தியாவில் இது எல்லாம் மறக்கப்பட்டுவிட்டது. திருவிழாக்கள், மேளாக்கள் என்ற பெயரில் அவலட்சணம் மிகுந்த ஒரு காட்டுமிராண்டித்தனம் அரங்கேற்றப்படுவதைதான் நாம் இந்நாட்களில் காண்கிறோம். ஒருவர் தனி முயற்சியில் அந்தரங்கமாகச் செய்ய வேண்டியவை , மாபெரும் ஊர்வலங்களாக நடத்தப்படுகின்றன. பெருந்திரளாக மக்கள் கூடும் திருவிழாக்கள், உதாரணத்துக்கு நீராட்டு விழாக்கள், தொலைதூரப் பகுதிகளில் உள்ளவர்களுக்காக மட்டும்தான் நிகழ்த்தப்பட்டன- அங்குள்ள ஏழைகளும் முதியோர்களும் இத்தகைய சடங்கில் பங்கேற்க முடியாது என்பதால்தான் இந்த ஏற்பாடு. தேவையற்ற இதுபோன்ற கூட்டங்கள் போதாது என்று, எங்கே பயபக்தியுடன் வழிபாடு செய்யப்பட வேண்டுமோ, அங்கு மிக மலினமான வக்கிர நடனங்களும் கேளிக்கைகளும் நடக்கின்றன. தொலைநோக்குப் பார்வையில், இத்தகைய போக்குகளில் தனி மனிதனுக்கும் ஒட்டுமொத்த சமூகத்துக்கும் தீங்கு விளைவிக்கும் வாய்ப்புகளே அதிகம்.
முக்கியமான சில இந்து திருவிழாக்களின் தாத்பர்யம் சுருக்கமான வடிவில் இனி அளிக்கப்படுகிறது:
அக்ஷய திருதியை
எந்த ஒரு துவக்கத்துக்கும் தகுந்த மிகச் சிறந்த சுபதினங்களில் அக்ஷய திருதியையும் ஒன்று.
சந்திர சூரியர்கள் மிகப் பிரகாசமாக இருக்கும் விசாக மாதத்தின் மூன்றாம் நாளன்று அக்ஷய திருதியை கொண்டாடப்படுகிறது, மேஷ ராசியுள் சூரியன் பிரவேசிக்கும் காலமும் இதுவே.
மகா விஷ்ணுவின் மூன்று அவதாரங்கள் நிகழ்ந்துள்ள திரேதா யுகத்தின் துவக்கம் அக்ஷய திருதியை. இந்த நாளன்றுதான் பரசுராமர் பிறந்தார். வியாசர் மஹாபாரதத்தை எழுதத் துவங்கிய நாளும் இன்றே.
அக்ஷய திருதியையன்று வேத மந்திரங்களை ஜபித்தபடி புனித நதிகளில் நீராடுவதும் ஹோமம் வளர்த்து வழிபடுவதும் வழக்கம்.
அக்ஷய என்றால் முடிவற்றது என்று பொருள். இதைத் தவறாகப் புரிந்து கொண்டு இக்காலத்தவர் பேராசையுடன் தங்கம் வாங்கிக் குவிக்கின்றனர். இந்த நாளின் பிற சிறப்புகளை மறந்து விட்டனர்.
சுபகாரியங்களைத் துவங்க ஏற்ற நாள் இது. இன்று துவங்கிய செயல்கள் சாகும்வரை தொடரும் என்பது நம்பிக்கை.
ஒருவர் தன்னால் இயன்ற அளவு பிறருக்கு பொருளுதவி செய்யவும் தகுந்த நாள் இது- இன்றுள்ளது போல் சொத்து சேர்ப்பதில் மட்டும் குறியாக இருப்பதற்கான நாள் அல்ல. முன்போல் இப்போது தகுதியுள்ள பிராமணர்களுக்கும் பிற வகுப்பினருக்கும் பொருள் வழங்கிக் கொண்டாடுபவர்கள் மிகச் சிலரே உள்ளனர்.
யுகாதி அல்லது குடி பாட்வா
யுகாதி, அல்லது ஒரு சகாப்தத்தின் துவக்கம் ஆந்திர, கர்நாடக, மகராஷ்திர மக்களால் ஆண்டுப் பிறப்பாகக் கொண்டாடப்படுகிறது. மகராஷ்டிராவில் மட்டும் இது குடி பாட்வா என்று அழைக்கப்படுகிறது. (மராத்தியில் இது गुढी पाडवा என்று எழுதப்படுகிறது.) ஒவ்வொரு மாதமும் சித்திரை (மார்ச்/ ஏப்ரல்) மாதப் பிறப்பன்று யுகாதி கொண்டாடப்படுகிறது.
இந்த நாளன்றுதான் பிரம்மன் இந்த உலகைப் படைத்தான் என்ற நம்பிக்கையில் யுகாதி கொண்டாடப்படுகிறது. இன்றுதான் மகாவிஷ்ணுவும் மச்சாவதாரம் எடுத்தார் என்பதும் நம்பிக்கை.
யுகாதியன்று மக்கள் தம் இல்லங்களை அலங்கரித்து, எண்ணெய்க் குளியல் எடுத்துக் கொண்டபின், பல்வேறு ஆலயங்களுக்குச் சென்று வழிபட்டு, தர்ம காரியங்களைச் செய்து முடித்தபின் விருந்து உண்கின்றனர். இந்த விருந்தில், கசப்பு- புளிப்பு- இனிப்பு ஆகிய மூன்று சுவைகளும் கொண்டதாக, வேப்பிலை, மாங்காய், வெல்லம் கலந்து உண்கின்றனர். வாழ்க்கையில் கசப்பும் இனிப்பும் உண்டு, இரண்டையும் சமநிலையுடன் ஏற்றுக் கொள்ள வேண்டும் என்பதை உணர்த்துவதற்காக இவ்வாறு செய்யப்படுகிறது.
புதிய ஆண்டின் விசேஷ தினங்கள், திருவிழாக்கள் மற்றும் பல முக்கியமான நிகழ்வுகளை அறிந்து கொள்ள இந்த நாளன்று பஞ்சாங்கம் வாசிக்கும் பழக்கமும் உண்டு.
மராத்தியர்கள், பட்டுத் துணியால் அலங்கரிக்கப்பட்ட ஒரு கம்பத்தின் உயரத்தில் ஒரு பானையை ஏற்றி குடி பாட்வாவைக் கொண்டாடுகின்றனர். மராத்திய வீரன் போரில் வெற்றி பெற்று வீடு திரும்புதலை இது குறிக்கிறது.
ஹோலி
ஹோலி, அல்லது ஹோலிகா, இந்தியாவில், அதிலும் குறிப்பாக இந்தியாவின் வடபகுதிகளில் பரவலாகக் கொண்டாடப்படும் திருவிழாக்களில் முக்கியமான சிலவற்றில் ஒன்று.
இது, இந்தியாவில் மிகத் தொன்மையான திருவிழாக்களில் ஒன்றும்கூட. கிட்டும் இலக்கிய நூல்களை ஆதாரமாய் கொண்டு, குறைந்தது இரண்டாயிரம் ஆண்டுகளாவது முற்பட்ட திருவிழா இது என்று தீர்மானிக்க முடிகிறது. கருட புராணம், ஹர்ஷதேவனின் ரத்னாவளி, ஜைமினியின் பூர்வ மீமாம்ச சூத்திரங்கள், காதக க்ருஹ்ய சூத்திரங்கள் முதலிய பல நூல்களில் ஹோலி குறிப்பிடப்படுகிறது.
இந்து திருவிழாக்களில் மிகவும் கொண்டாட்டமான திருவிழாக்களில் ஒன்று ஹோலி. மிக அதிக அளவில் ஆனந்தமும் அலங்காரமும் தீபாவளிக்கு அடுத்தபடி ஹோலியில்தான் நாம் பார்க்க முடியும் என்று நினைக்கிறேன். ஹோலி வண்ணங்களின் திருவிழா, வசந்தத்தின் வருகையைக் குறிக்கும் திருவிழா. நிறைவான அறுவடையைக் கொண்டாடும் திருவிழாவாய் பழங்காலத்தில் இருந்திருக்கக்கூடும், அல்லது பெண்களுக்கான திருவிழாவாகவும் இருந்திருக்கலாம். பங்குனி மாதம் பௌர்ணமி தினத்தன்று ஹோலி கொண்டாடப்படுகிறது.
ஹோலி ஏன் கொண்டாடப்படுகிறது என்பது குறித்து எண்ணற்ற கதைகளும் பெருங்கதைகளும் உண்டு. இவற்றில் ஒரு பெருங்கதை, சிவன் தன் மூன்றாம் கண்ணைத் திறந்து காமதேவனைச் சாம்பலாய் சுட்டெரித்த நாள் இது என்பதால்தான் ஹோலி கொண்டாடப்படுகிறது என்று சொல்கிறது.வேறொரு கதை, இந்த நாளன்றுதான், ராட்சதன் ஹிரண்யகசிபுவின் சகோதரி ஹோலிகா, பிரகலாதனைச் சுட்டெரிக்க முயன்று, தான் சாம்பலானாள் என்று சொல்கிறது. கிருஷ்ணனையும் ராதையையும் தொடர்புபடுத்திப் பல கதைகள் உண்டு, அதே போல், துண்டி என்ற அரக்கியைக் குறிப்பிடும் கதைகளும் உண்டு.
ஹோலி இந்தியாவின் மிகத் தொன்மையான திருவிழா என்றாலும், பிற திருவிழாக்களைப் போல் ஹோலியன்று சமயச் சடங்குகள் எதுவும் கடைப்பிடிக்கப்படுவதில்லை. மாறாக, தடையற்ற கொண்டாட்டமாய், பல வண்ணங்களை ஒருவருக்கொருவர் பூசிக் கொண்டு, மதுபானங்களைப் பருகிக் கொண்டாடும் திருவிழாவாய் இருக்கிறது. வங்காளத்தில் அமைதியாகவும், நளினமாகவும், ஊஞ்சல் திருவிழா என்று பொருள்படும் டோலயாத்ரா என்றும், சைதன்ய மகாபிரபு ஜெயந்தியாகவும் இந்த நாள் கொண்டாடப்படுகிறது.
மஹா சிவராத்திரி
ஒவ்வொரு மாதமும் தேய்பிறை நிலவில் வாரம் பதின்மூன்றாம் நாள் இரவும், பதினான்காம் நாள் பகலும் சிவராத்திரி என்று அழைக்கப்படுகின்றன.
விக்கிரம வருடக் கணக்குப்படி, பங்குனி மாதத்தில் வரும் சிவராத்திரி மஹா சிவராத்திரி என்று அழைக்கப்படுகிறது. இந்து வருடாந்தரக் கணக்குப்படி, மிகப் புனித தினங்களில் ஒன்றாகவும், மிக மங்கலமான நாட்களில் ஒன்றாகவும் இது கருதப்படுகிறது.
பிற மாதங்களில் வரும் சிவராத்திரி, மாச சிவராத்திரி என்று அழைக்கப்படுகிறது. இவை அனைத்துமே மங்கலமாகவும் புனிதமாகவும் கருதப்பட்டாலும், மஹா சிவராத்திரியே மிகச் சிறந்தது. ஏனெனில், இன்றுதான் உலகு அனைத்தையும் அழித்திருக்கக்கூடிய (ஆலகால) விஷத்தை சிவன் அருந்திய தினம் என்று ஒரு பெருங்கதை உண்டு. உலகு காப்பாற்றப்பட்டதைக் குறிக்க மஹா சிவராத்திரி ஒவ்வொரு ஆண்டும் கொண்டாடப்படுகிறது.
இந்துக்களின் மிக முக்கியமான திருவிழாக்களில் மஹா சிவராத்திரியே மிக அமைதியுடன், தீவிர பக்தியுடன் கொண்டாடப்படும் திருவிழாவாகும். உண்ணாமை, பிரார்த்தனை என்று விரதம் கடைப்பிடிக்கவே முக்கியத்துவம் அளிக்கப்படுகிறது, கொண்டாட்டங்களோ, கேளிக்கைகளோ கிடையாது.
சிவராத்திரி இரவன்று சிவபக்தர்கள் கண்விழித்து, பஜனை செய்வது, சிவநாமத்தை ஜெபிப்பது, பூஜைகள் செய்வது என்று பலவகைகளில் வழிபாடு செய்கின்றனர். அதிகாலையில் இறுதி பூஜை செய்து முடித்ததும், சிவபூஜையில் படைக்கப்பட்ட பிரசாதம் அல்லது நைவேத்யம் உண்டு தங்கள் உண்ணா நோன்பை முடித்துக் கொள்கின்றனர்.
ஒவ்வொரு பிரதேசத்துக்கும் ஒவ்வொரு கதை என்று பல்வேறு கதைகள் சிவராத்திரி குறித்து வழங்கப்படுகின்றன. 12 அல்லது 14 அல்லது 24 ஆண்டுகள் மஹா சிவராத்திரி பூஜை செய்வதாய் சங்கல்பம் எடுத்துக் கொள்ளும் பக்தர்கள் பலர் உண்டு.
வாராணசி, ராமேஸ்வரம், சிதம்பரம், திருவண்ணாமலை, ஸ்ரீ காளஹஸ்தி, ஸோம்நாத் முதலான பல்வேறு தலங்களில் உள்ள சிவாலயங்கள் அனைத்திலும் மிகச் சிறப்பாக மஹா சிவராத்திரி நாடெங்கும் கொண்டாடப்படுகிறது.
ஸ்ரீ ராம நவமி
விஷ்ணுவின் இருபெரும் அவதாரங்களில் ஒன்றான ராமாவதார தினமான ஸ்ரீ ராம நவமி, சித்திரை (சைத்ர) மாதம் வளர்பிறையின் ஒன்பதாம் நாள், நவமியன்று, (மார்ச்/ ஏப்ரலில்) கொண்டாடப்படுகிறது.
ஸ்ரீ ராம நவமியன்று ஒன்றரை நாள் உண்ணா நோன்பிருக்கும் வழக்கம் சில பகுதிகளில் உண்டு. ஸ்ரீ ராமர் விக்கிரகத்தை ஆவாஹனம் செய்து, அதை மலர்களால் அலங்கரித்து, பூஜை, ஹோமம் முதலானவை செய்து, காலை முதல் மாலை வரை ஸ்ரீ ராம நாமம் ஜெபித்து தகுதியுள்ளோருக்கும் தேவையுள்ளோருக்கும் பொருளுதவி செய்து ஸ்ரீ ராம நவமி கொண்டாடப்படுகிறது.
சிலர் மாலை வேளையில் பெரும் எண்ணிக்கையில் மக்களை அழைத்து ஏராளமான அளவில் உணவளித்து கூட்டு விருந்து வைப்பதும் உண்டு. விஷ்ணு ஆலயங்களும் ராமர் கோவில்களும் இந்தியாவில் ஏராளமான இடங்களில் உள்ளன. மக்கள் பெருந்திரள் எண்ணிக்கையில் இங்கு சென்று ஸ்ரீ ராம நவமியை ஆனந்தமாய், ஆனால் அமைதியாய் கொண்டாடுவது வழக்கம். ஸ்ரீ ராம நவமியன்று மக்கள் மிக அதிக அளவில் கூடும் இடங்கள் அயோத்யாவும் ராமேஸ்வரமும் – இவ்விரண்டு தலங்களும் ஶ்ரீ ராமர் வாழ்வில் மிக முக்கியமான தொடர்புடையவை.
தற்காலத்தில் இந்த நாளில் மக்கள் ஆலய வழிபாடு செய்யும் வழக்கம் தொடர்ந்தாலும், ராம நவமியன்று உணவு உண்ணாதிருத்தல், சிலை நிறுவி வழிபாடு செய்தல் போன்ற பழக்கங்கள் மிக அபூர்வமாகி விட்டன.
ஹனுமத் ஜெயந்தி
விஷ்ணுவின் தசாவதாரங்களில் ஒன்றான ராமாவதாரத்தில், ராமனின் மிக முக்கியமான பக்தனாய் இருந்த ஹனுமான் இந்து மதத்தின் மிகப் பிரபலமான, உற்சாகமான கடவுளர்களில் ஒருவர்.
அஞ்சனா தேவியின் மகன் என்று பொருள்பட, ஆஞ்சநேயன் என்றும் அனுமனை அழைப்பது உண்டு. காற்றின் கடவுளாகிய வாயுவின் அனுக்கிரகத்தால் அனுமன் பிறந்ததாகவும் சொல்வதுண்டு.
எப்போதும் ராம நாமம் ஜெபித்துக் கொண்டிருக்கும் அனுமன், எங்கு ராம நாமம் ஜெபிக்கப்படுகிறதோ, அங்கு பிரசன்னமாவதாகவும் ஒரு நம்பிக்கை உண்டு.
அனுமன் அவதரித்த தினமாக சித்திரை மாதம் பௌர்ணமியன்று அனுமத் ஜெயந்தி கொண்டாடப்படுகிறது.
நாள் முழுதும் உண்ணா நோன்பிருந்து, காலை முதல் மாலை வரை ராம நாமம் ஜபிக்கும் மக்கள், தங்களைத் தூய்மைப்படுத்திக் கொண்டு, அனுமன் விக்கிரகத்தை மலர்கள் கொண்டு அலங்கரித்து, நைவேத்யம் செய்து அனுமத் ஜெயந்தி கொண்டாடுவது வழக்கம்.
இந்து கோவில்களில், மூலவர்கள் எவராய் இருப்பினும், ஏறத்தாழ அனைத்திலும் சன்னதி உள்ள மிகச் சில கடவுளர்களில் அனுமனும் ஒருவர்.
ராஜஸ்தானில் ஸாலாஸர் (सालासर ) என்ற ஊரில் உள்ள பாலாஜி கோவிலில் ஆயிரக்கணக்கான பக்தர்கள் அனுமத் ஜெயந்தியை முன்னிட்டு, கூடி அனுமனை வழிபடுவது வழக்கம். எண்ணற்ற மக்கள் தம் துன்பங்கள் அகலவும், அறிவு விரிவடையவும், இறையருள் கிட்டவும் துளசிதாசர் பாடிய ஹனுமான் சாலீஸாவை ஜெபிப்பதும் வழக்கமாய் இருக்கிறது.
குரு பூர்ணிமா
குரு, அல்லது ஆசிரியருக்கு, வழிபாடு செய்யும் நாள் குரு பூர்ணிமா.
இந்து மதத்தில் உள்ள குருபரம்பரையில் அனைவர்க்கும் முன்னோடியாய் வியாசர் கருதப்படுவதால், இது வியாச பௌர்ணமி என்றும் அழைக்கப்படுவது உண்டு. வேதங்களைப் பகுத்தவரும், மகாபாரதம் இயற்றியவரும், பதினெட்டு மகாபுராணங்களைத் தொகுத்தவரும் வியாசரே என்று சொல்வதுண்டு. வேதங்களில் அநாதி உண்மைகளை வெவ்வேறு வடிவில், வெவ்வேறு தளங்களில் வெளிப்படுத்தியவர் வியாசர். வெவ்வேறு மனப்பாங்கு கொண்ட பல்வகைப்பட்ட மக்களையும் இந்த உண்மைகள் சென்று சேர இவ்வாறு பலவடிவங்களை உருவாக்கியவர் அவர்.
ஜூன்- ஜூலையில் வரும் ஆஷாட மாதத்தில் பௌர்ணமியன்று குரு பூர்ணிமா கொண்டாடப்படுகின்றது. இந்து சமயத்தில் குருவுக்கு உள்ள முக்கியத்துவத்தையும் அவர் மீது உள்ள மதிப்பையும் வெளிப்படுத்தும் நாள் இது.
இந்து மடாலயங்கள், ஆசிரமங்கள் அனைத்திலும் குரு பௌர்ணமி கொண்டாடப்படுகின்றது. ஹோமம் வளர்த்து, ஆன்மீக வளர்ச்சி நாடி, குருவின் அனுக்கிரஹத்துக்காக பஜனைகள் செய்வது வழக்கம்.
இந்த நாளன்றே சந்நியாசிகளின் நான்கு மாத ஓய்வுப் பருவமான சாதுர்மாஸ்யம் துவங்குகிறது. மழைக்காலத்தின் துவக்கம் என்று உழவர்களும் இந்த நாளைக் கொண்டாடுவது வழக்கத்தில் உள்ளது.
நவராத்திரி அல்லது நவராத்ரா
நவராத்திரி, அம்பிகையை அவளது பல்வேறு வடிவங்களில் ஒன்பது இரவுகள் வழிபடும் திருவிழா.
பண்டைய இந்து நூல்களில் இருவேறு நவராத்திரிகள் குறிப்பிடப்படுகின்றன- சைத்ர நவராத்ரா, ஷாரதிய நவராத்ரா. (शारदीय नवरात्र -இதுவே மஹா நவராத்திரி என்றும் அழைக்கப்படுகிறது.) இரு நவராத்திரிகளும் அம்பிகையை அவளது பல்வேறு உருவங்களில் வழிபட்டாலும், சைத்ர நவராத்திரியின் ஒன்பதாம் நாளன்று ஸ்ரீ ராமர் பிறந்த தினமான ஸ்ரீ ராம நவமி கொண்டாடப்படுவது விசேஷம்.
மற்றபடி இரு நவராத்திரிகளிலும், தீய சக்திகளை தேவ சக்திகள் வெற்றி கொண்டதை பத்தாம் நாளன்று தசரா கொண்டாட்டங்கள் நிறைவு செய்கின்றன. இதிலும் பல்வேறு வடிவங்கள் உள்ளன.
தேசத்தின் சில பகுதிகளில் அம்பிகை அவளது ஒன்பது வடிவங்களில் வழிபடப்படுகிறாள்- துர்கா, உமா, கெளரி, பார்வதி, ஜகதாம்பா, காளி, சண்டி, பைரவி, அம்பிகை. இந்த ஒன்பது நாட்களில் உண்ணா நோன்பிருந்து இரவுகளில் அம்பாளின் நாமத்தை ஜெபித்தபடி கண் விழித்திருப்பது வழக்கம். இறுதி நாளன்று சிறுமிகள் இல்லங்களுக்கு அழைக்கப்பட்டு அவர்களை அம்பாளாய் கருதி அவர்களுக்கு இனிப்புகள் வழங்கி பெருமைப்படுத்துவது வழக்கம்.
இந்தியாவின் வட பகுதிகளில் நவராத்திரியில், ராவணன் மீது ராமன் வெற்றி கண்டதைக் கொண்டாடும் திருவிழாவாக ராமலீலாவும் கொண்டாடப்படுகிறது. மக்கள் உண்ணாநோன்பிருந்து ராமாயணம் வாசிப்பது வழக்கம். விஜய தசமி (विजयदशमी), அல்லது தசரா (दशहरा) என்று அழைக்கப்படும் பத்தாம் நாளன்று ராவணன், கும்பகர்ணன் மற்றும் பலரின் கொடும்பாவிகளைக் கொளுத்துவது ராமலீலா கொண்டாட்டங்களின் தனித்துவம்.
தென்னிந்தியாவில் முதல் மூன்று நாட்களும் லட்சுமியும் அடுத்த மூன்று நாட்கள் சரஸ்வதியும், இறுதி மூன்று நாட்கள் துர்க்கையும் வழிபடப்படுகின்றனர். பத்தாம் நாளான விஜய தசமி இந்தியாவெங்கும் கொண்டாடப்படுவது போலவே தெய்வ சக்திகளின் வெற்றியாகக் கொண்டாடப்படுகிறது.
விஜயதசமியன்று அம்பாளின் அருள் நாடி, புதிய முயற்சிகள் மேற்கொள்ளப்படுகின்றன. பலருக்கும் விஜயதசமியே தங்கள் குழந்தைகள் கல்வி பயிலும் முதல் நாளாக இருக்கிறது.
வேறொரு சிறு மரபில், தென்னிந்தியாவில் சில இடங்களில், கடைசி மூன்று நாட்களில் துர்க்கையைக் கொண்டாடுவதற்குப் பதிலாக சரஸ்வதி தேவியைக் கொண்டாடுகிறார்கள்.
நாக பஞ்சமி
தொல்நாகரிகங்கள் பலவற்றைப் போல் இந்தியாவிலும் பல்வேறு வடிவங்களில் இயற்கை வழிபாடு உண்டு. சிரவண மாதத்தின் வளர்பிறையில் ஐந்தாம் நாள் நாகங்களை வழிபடும் வகையில் நாக பஞ்சமி கொண்டாடப்படுகிறது. (ஜூலை/ ஆகஸ்டு]
துவக்க இலக்கியங்களில் நாகம் போன்ற ஒரு உயிரினம் குறிப்பிடப்படுகிறது, அதன் பின் வரும் இலக்கியங்களில் பல்வேறு கதைகள் இருக்கின்றன, என்றாலும் நாக வழிபாடு எவ்வாறு தோற்றம் பெற்றது, வளர்ச்சி கண்டது என்பன குறித்து தெளிவான ஆதாரங்கள் இல்லை. இதனால், கடந்த மூவாயிரம் ஆண்டுகளாகவே பல்வேறு ஊகங்கள் பரிமாறிக் கொள்ளப்பட்டிருக்கின்றன. அக்ஷய திருதியை, மகர சங்கராந்தி போலவே இந்த நாளும் சுபதினமாகக் கருதப்படுகிறது. இதுவும் ஏன் என்று தெரியவில்லை.
நாக பஞ்சமியன்று நாகர் விக்கிரகங்களை நீராட்டி, பாம்புகள் வாழும் புற்றுகளில் பாலூற்றி வழிபடுவது உண்டு. சில பகுதிகளில் ராஜநாகங்களுக்கு நேரடியாக வழிபாடு செய்வதும் உண்டு.
இந்தியாவில் பல்வேறு இடங்களில் பாம்புகளுக்கு ஆலயங்கள் இருக்கின்றன. ஆனால், மகராஷ்டிரா, கர்நாடகா, ஆந்திர பிரதேசம், தமிழ் நாடு ஆகிய பகுதிகளில்தான் நாக வழிபாடு பிற மாநிலங்களைவிட அதிகமாய் உள்ளது.
ஸ்ரீ கிருஷ்ண ஜன்மாஷ்டமி/ கோகுலாஷ்டமி
ஸ்ரீ கிருஷ்ண ஜன்மாஷ்டமி, அல்லது கோகுலாஷ்டமி, அல்லது மிக எளிமையாகச் சொன்னால் ஜன்மாஷ்டமி, ஸ்ரீ கிருஷ்ணர் பிறந்த தினம். இந்து சமயத்தின் மும்மூர்த்திகளில் ஒருவரான விஷ்ணுவின் எட்டாம் அவதாரம் இது.
இந்தியாவெங்கும், ஏன், உலகெங்கும் வாழும் இந்தியர்களால், சிரவண மாதத்தின் தேய்பிறை நிலவில் எட்டாம் நாள் கிருஷ்ண ஜன்மாஷ்டமி கொண்டாடப்படுகிறது.
பிற விசேஷ தினங்களைப் போலவே ஜன்மாஷ்டமியன்றும் மக்கள் உண்ணா நோன்பிருக்கின்றனர். கிருஷ்ண நாம பாராயணம் செய்து கிருஷ்ண விக்கிரகத்தை வழிபட்டு கிருஷ்ணனின் பிள்ளைப் பிராய விளையாட்டுகளை விவரிக்கும் பாகவதக் கதைகள் கேட்கின்றனர். கிருஷ்ணர் நள்ளிரவில் பிறந்த காரணத்தால் நள்ளிரவில் அவருக்குப் பூஜைகள் செய்யப்படுகின்றன. பூஜை முடிந்ததும் நாமஜெபம், பஜனைகள் செய்து முடித்து பாரணம் என்று அழைக்கப்படும் விரதம் முடித்துக் கொள்ளும் நிகழ்வு நடக்கிறது.
மகராஷ்டிர மக்கள் பானைகளில் தயிர், மோர், நெய் முதலியவற்றை நிரப்பி மிக உயர்ந்த இடத்தில் தொங்க விடுகிறார்கள். ஸ்ரீ கிருஷ்ணரைப் பின்பற்றி இளைஞர்கள் ஒருவர் மீது ஒருவர் ஏறி நின்று, அவற்றை உடைக்க முயற்சிக்கின்றனர்.
மதுராவிலும் விருந்தாவனிலும் பிறந்த நாள் கொண்டாட்டங்கள் ஒரு மாதம் நடைபெறுகின்றன, அங்குள்ள அனைத்து வீடுகளும் கோயில்களும் வண்ணங்களால் அலங்கரிக்கபடுகின்றன. ஸ்ரீ கிருஷ்ணரின் விக்கிரகத்தை ஓர் ஊர்வலத்தில் எடுத்துச் செல்வது இங்கு வழக்கம்.
தென்னிந்தியாவில் பிறந்த தினத்தை நட்சத்திர அடிப்படையில் கொண்டாடுவது வழக்கம். எனவே, சிலர் சிரவண மாத தேய்பிறை எட்டாம் நாளன்று ஜன்மாஷ்டமி கொண்டாடுவதற்கு பதில் ரோகிணி நட்சத்திர தினமன்று கொண்டாடுகின்றனர். எப்படியாயினும் அவர்களும் தம் இல்லங்களைச் சுத்தப்படுத்தி, தரையில் ஸ்ரீ கிருஷ்ணரின் குழந்தைப் பாதம் நடந்து சென்றது போல் அரிசி மாவைக் கரைத்துக் கோலமிட்டு, கிருஷ்ணருக்கு விருப்பமான தின்பண்டங்களை நைவேத்தியம் செய்து, பூஜை, பஜன், பாரணம் என்று வழிபாடு செய்கின்றனர்.