Devapriyaji - True History Analaysed

Members Login
Username 
 
Password 
    Remember Me  
Post Info TOPIC: புறநானூறு, திருக்குறளில் அரண் அமைப்பும் உறுப்புக்களும்


Guru

Status: Offline
Posts: 7467
Date:
புறநானூறு, திருக்குறளில் அரண் அமைப்பும் உறுப்புக்களும்
Permalink  
 


புறநானூறு, திருக்குறளில் அரண் அமைப்பும் உறுப்புக்களும்

E-mailPrintPDF

ஆய்வு: புறநானூறு, திருக்குறளில் அரண் அமைப்பும் உறுப்புக்களும்!-  க.லோகமணி, பகுதிநேரமுனைவர்பட்டஆய்வாளார், தமிழாய்வுத்துறை, உருமு தனலெட்சுமி கல்லூரி, திருச்சிராப்பள்ளி-19.பண்டைத் தமிழரின் சிறப்பையும், பெருமையையும் இவ்வுலகிற்கு எடுத்துக்காட்டுவனவாகச் சங்க இலக்கியங்கள் விளங்குகின்றன. சங்க நூல்களுள் ஒன்றான புறநானூறு தமிழக வரலாற்றை அறிவதற்கு மிகப்பெரிய சான்று ஆகும்.  புறநானூற்றின் மூலம் நாகாpகம், பண்பாடு, வீரம், ஆட்சி, கொடை, வாணிகம் போன்றவற்றையும், படைத்திறம் வாய்ந்த பெருவேந்தரையும் கொடைத்தன்மை வாய்ந்த வள்ளல்களையும் கற்றறிந்த சான்றோர்களையும் பழந்தமிழ்க் குலங்களையும் அறியமுடிகிறது. மேலும் அரசனின் ஆட்சிக்கு அடித்தளமான அரண் குறித்த கருத்துக்களையும் உணரமுடிகின்றது. திருக்குறளிலும் அரண் குறித்த செய்திகளைப் பொருட்பாலில் அரண் என்ற அதிகாரத்தின் மூலம் அறியமுடிகின்றது.

அரண்
அரண்  - பாதுகாப்பு, கோட்டை. போரில் வெற்றி பெற்ற அரசனும் வீரர்களும் வாகைப் பூவைச் சூடி வெற்றியைக் கொண்டாடுவர் என்பதைத் தொல்காப்பியம் முதலான நூல்களில் காணலாம். வாகை என்பது வெற்றியாளரை அடையாளப்படுத்தி வெற்றிக்கு ஆகுபெயராகியது. வாகை என்றால் வெற்றி என்றும், வாகை சூடினான் என்றால் வெற்றி பெற்றான் என்றும் பொருள்படுவது போல பாதுகாப்பு என்று பொருள்படும் அரண், அரசனுக்குப் பாதுகாப்பு அளிக்கும் கோட்டைக்கு ஆகுபெயராகி வருகிறது. அரண் என்றால் ‘கோட்டை’ என்றும் பொருள்படுகிறது.

அரணின் சிறப்பு
அரசனுக்குரிய ஆட்சி அங்கங்களுள் அரண் ஒன்று. பிற நாட்டின் மீது படையெடுப்பவர் தன் நாட்டைப் பாதுகாப்புடன் வைத்துவிட்டுச் செல்வதற்கும், பிறநாட்டார் படையெடுப்பிற்கு அஞ்சித் தம்மைக் காத்துக்கொள்வதற்கும் அரண் (கோட்டை) இன்றியமையாததாகும். இக்கருத்தை வள்ளுவரும்,

“ஆற்று பவர்க்கு மரண்பொரு ளஞ்சித்தள்
போற்று பவர்க்கும் பொருள்” (குறள். 741)
என்று குறிப்பிடுகின்றார். '

மேலும் வேந்தனின் உறுப்புக்களுள் ஒன்றான அரண் பற்றித் திரிகடுகம்,
“…………… பலர் தொகினும்
எத்துணையும் அஞ்சா எயி;ல் அரணும் ….
மண்ணாளும் வேந்தர்க் குறுப்பு” (திரிகடுகம்-100)
என்று குறிப்பிடுகின்றது.

பிறநாட்டார்மீது படையெடுத்துச் சென்று பகைஅரணை அழித்து வென்ற செய்தியை,
“பாடல் சான்ற விறல் வேந்தனும்மே
வெப்பு உடைய அரண் கடந்து
துப்பு உறுவர் புறம் பெற்றிசினே” (புறம். 11)
என்றும்

“………… ஒன்னார்
கடி மதில் அரண்பல கடந்த
நெடுமான் அஞ்சி ……….” (புறம். 92)

என்றும் குறிப்பிடுகின்றன. மேலும் பகைநாட்டார் படையெடுப்பிற்கு அஞ்சித் தன்னைக் கோட்டைக்குள் பாதுகாத்துக் கொண்டு, தன் மதில் கதவம் திறவாது, உள்ளிருக்கும் அரசர்களைப் பற்றி,

“திறவாது அடைத்த திண்நிலைக் கதவின்
நீள்மதில் ஒருசிறை ஒடுங்குதல்” (புறம். 44) என்றும்

“நெடுமதில் வரைப்பின் கடிமனை இயம்ப,
ஆங்கு இனிதிருந்த வேந்தனொடு…..” (புறம். 36) என்றும் குறிப்பிடுகின்றன.

இவற்றின் மூலம் அரணின் சிறப்பு வெளிப்படுவதுடன், அரணின்றேல் அரசுமின்று, நாடுமின்று என்பதை அறியமுடிகின்றது.

அரண் அமைப்பும் உறுப்புக்களும்
ஒரு பெரும் நிலப்பரப்பை ஆளும் மன்னன் தன் நாடு முழுவதற்கும் மதில் முதலாய அரண்களை அமைத்து மக்களைக் காக்க இயலாது. மன்னனும் அவனைச் சார்ந்த சுற்றத்தாரும், ஐம்பெருங்குழுவும், எண்பேராயமும் வதியும் தலைநகரைச் சுற்றிலும் அரண்களாக அமையும் மதிலும் அதன் புறத்து அமையும் பரந்த நிலப்பரப்பும், அவற்றை உள்ளடக்கிய காவற்காடும் அமைக்க இயலும். இவ்வகை அரண்களைச் சங்க இலக்கியங்கள் விரிவாகப் பேசுகின்றன. பட்டினப்பாலையின் தலைவனாகிய திருமாவளவன் தான் அமைத்த புதிய தலைநகராகிய பூம்புகாருக்கு இத்தகைய அரண்களை அமைக்காமல் யானை, குதிரை, தேர், காலாட்படைகளையே சுற்றிலும் அமைத்தமை ஈண்டு எண்ணத்தக்கது. இத்தகைய அமைப்பிற்கு மூலமாய் அமைந்தது பாசறை அமைப்பு ஆகும். பாசறை அமைப்பை நன்கு விளக்கும் நூலாக முல்லைப்பாட்டு விளங்குகின்றது. சிலப்பதிகாரம் மதுரையிலிருந்த கோட்டை அமைப்பை விரிவாக விளக்கும் நூல் ஆகும். அந்நூல் மதில்மேல் அமைக்கப்பட்டுள்ள கருவிகளையும் பிறவற்றையும் பற்றி விரிவாகப் பேசுகிறது.

கோட்டையை மையமாகக் கொண்டு அரண் அமைப்பை இரு பிரிவாகப் பிரிக்கலாம். 1.கோட்டையின் புற அரணமைப்பு 2.கோட்டையின் அக அரணமைப்பு

(i) கோட்டையின் புற அரணமைப்பு
நீர் அரண், நில அரண், மலை அரண், காட்டரண் இந்நான்கும் கோட்டைக்குப் புறத்தே அமைவதே புற அரண் ஆகும். நீரரணாகக் கோட்டையைச் சுற்றிலும் எப்போதும் வற்றாத ஆழமான நீருடைய அகழியும், நிலவரணாக பரந்த வௌ;ளிடை நிலமும் (திடல்கள்), மலையரணாக மலைகளும், குன்றுகளும், காட்டரணாக அடர்ந்த மரங்கள் நிறைந்த காடும் (காவற்காடு) அமைந்திருத்தலே புற அரண் ஆகும். இதில் மலையரண் என்பது அனைத்து நாட்டிற்கும் அமைய வாய்ப்பின்று.

கோட்டைக்குப் புறத்தே அமையும் அரணுறுப்புக்கள் பற்றி வள்ளுவரும்,

“மணிநீரும் மண்ணும் மலையும் மணிநிழற்
காடு முடைய தரண்” (குறள். 742)
என்று குறிப்பிடுகின்றார்.

இதனையே சிறுபஞ்சமூலமும்
“நீண்டநீர் காடு களார்நிவந்து விண்தோயும்
மாண்ட மலை மக்கள் உள்ளிட்டு  - மாண்டவர்
ஆய்ந்தன ஐந்தும் அரணா உடையானை
வேந்தனா நாட்டல் விதி” (சிறுபஞ்சமூலம்-49)

என்று குறிப்பிடுகின்றது.

கடத்தற்கரிய காவற்காடும், அகன்ற நிலமுடைய திடலும், ஆழமான நீருள்ள அகழியும் அமைந்த நாட்டைப் பற்றிக் குறிப்பிடும்போது,
“அருமிளை இருக்கையதுவே - வென்வேல்
வேந்துதலை வரினும் தாங்கும்
தாங்கா ஈகை, நெடுந்தகை ஊரே” (புறம். 325) என்றும்,

“அருமிளை இருக்கையதுவே - மனைவியும்
வேட்டச் சிறாஅரி சேண்புலம் படராது” (புறம். 326)
என்றும்,

“நிலவரை யிறந்த குண்டுகன் அகழி
……………………………………..
கதிர்நுழை கல்லா மரம்பயில் கடிமிளை” (புறம். 21)
என்றும் புறநானூற்றுப்பாடல்கள் குறிப்பிடுகின்றன. இவற்றின் மூலம் கோட்டையின் பல கூறுகளும் புற உறுப்புக்களும் புலனாகின்றன.

(ii) கோட்டையின் அக அரணமைப்பு
கோட்டை மிக உயர்ந்ததாகவும், அகலமும், உறுதியும் மிக்கதாவும், பகைவரால் அணுகமுடியாத அருமை உடையதாகவும் அமைந்திருக்க வேண்டும். பகைவர் கோட்டையை முற்றுகையிட்ட போதும் உள்ளே நுழைய முடியாதபடி அமைந்திருக்க வேண்டும். உள்ளிருப்பவர் இருக்குமிடத்தை அறியமுடியாதபடி மறைத்துப் பகைவரால் கைப்பற்ற முடியாத உபாயங்கள் அமைந்ததாக இருக்கவேண்டும். இவற்றை,
“உயர்வகலம் திண்மை அருமைஇந் நான்கின்
அமைவரண் என்றுரைக்கும் நூல்” (குறள். 743)
என்று வள்ளுவர் குறிப்பிடுகின்றார். இவற்றைப் புறநானூறும்,
“குரூஉக் கெடிற்ற குண்டு அகழி
வான் உட்கும் வடிநீள் மதில்” (புறம்.18)
என்றும்
“ஏந்து கொடி இறைப் புரிசை
வீங்கு சிறை வியல் அருப்பம்” (புறம்.17)
என்றும் குறிப்பிடுகின்றது. இவற்றின் மூலம் கோட்டையின் அமைப்பும், கோட்டையின் மேல் அமைந்துள்ள உயர்ந்த மதில், மதிலில் அமைந்த கொடி, குறும்பு (சிற்றரண்) போன்ற அக உறுப்புக்களை அறியமுடிகிறது.

மேலும் ஆழ்ந்த அகழியும், அடர்ந்த காவற்காடும், குறும்பும் (சிற்றரண்), ஓங்கிய மதிலும், நிறைந்த ஞாயிலும் கொண்ட அரணமைப்பை,
“நிலவரை யிறந்த குண்டுகன் அகழி
வான்தோய் வன்ன புரிசை விசும்பின்
மீன்பூத்தன்ன உருவ ஞாயில்
கதிர்நுழை கல்லா மரம்பயில் கடிமிளை
அருங்குறும் புடுத்த கானப்பேர் எயில்” (புறம்.21)
என்ற பாடல் மூலம் அறியமுடிகின்றது. இதில் கோட்டையின் பெருமையும், அகத்திலும் புறத்திலும் அமைந்த அரணுறுப்புக்களும் வெளிப்படுகின்றன.

கோட்டை எயில்
கோட்டையின் சிறந்த அங்கம் எயில் (மதில்) ஆகும். மதிலைக் குறிக்கும் சொற்கள் பலவாகும். ஆரை, அரண், இஞ்சி, எயில், நொச்சி, புரிசை என்பன மதிலின் பிற பெயர்களாகும். கோவூர்கிழார்தம் பாடலில் சோழன் நலங்கிள்ளியைப் பாடும்பொழுது, ஏழெயில் கோட்டையைக் குறிப்பிடுகின்றார். ஏழெயில் என்பது ஒன்றன் பின் ஒன்றாக அமைந்த ஏழு மதில்கள் மற்றும் அதன்கண் அமைந்த கதவுகளையும் உடைய ஒரு கோட்டை ஆகும். இதனை,

“தென்னம் பொருப்பன் நன்னாட் டுள்ளும்
ஏழெயில் கதவம் எறிந்துகைக் கொண்டுநின்
பேழ்வாய் உழுவை பொறிக்கும் ஆற்றலை” (புறம். 33)
என்ற பாடல் அடிகள் குறிப்பிடுகின்றன.
“ஏழெயிற் கதவம் - ஏழெயில் என்பது சிவகங்கையைச் சார்ந்துள்ள  

‘ஏழுபொன்கோட்டை’ யென்னும் ஊராக இருக்கலாம்”

எனஅறிஞர் கருதுகின்றனார்.(ஔவைசு.துரைசாமிபிள்ளை,புறநானூறு, ப.93) மேலும் தண்டியலங்காரம் மேற்கோள் பாடல் ஒன்று மதிலின் சிறப்பைக் கூறும்பொழுது

“ஏரி யிரண்டும் சிறகா வெயில்வயிறாக்
காருடைய பீலி கடிகாவா - நீர்வண்ணன்
அத்தியூர் வாயா வணிமயிலே போன்றதே
பொற்றேரான் கச்சிப் பொலிவு” (தண்டி-37:3)

என்று காஞ்சி மாநகரின், எயிலின் சிறப்பைக் குறிப்பிடுகின்றது. “தொண்டை நாட்டு 24 கோட்டங்களில் ஒன்று எயிற்கோட்டம். இதில் அமைந்ததே காஞ்சி. அதனால் சேக்கிழார் காஞ்சி மாநகரை ‘எயில்பதி’ என்று குறிப்பிடுகின்றார்.” (புற.நா.சொற்பொழிவு, பக்-7) இவற்றின் மூலம் எயிலின் சிறப்பையும் முக்கியத்துவத்தையும் அறியமுடிகின்றது.

செப்பு எயில்
மதில்கள் மிகுந்த வலிமையுடன் விளங்குவதற்காகச் செப்புத் தகடுகளைச் செறித்துத் திண்மை செய்யும் முறையைக் கையாண்டனர். இதனை,

“கராஅம் கலித்த குண்டுகண் அகழி
இடம்கரும் குட்டத்து உடன்தொக்கு ஓடி
யாமம் கொள்பவர் சுடர்நிழல் கதூஉம்
கடுமுரண் முதலைய நெடுநீ ரிலஞ்சிச்
செம்புறழ் புரிசைச் செம்மல் மூதூர்” (புறம்.37)

என்ற பாடல் மூலம் நப்பசலையார் குறிப்பிடுகின்றார். இதே கருத்தைக் கம்பர், இராமாயணத்தில்,
“செம்பிட்டுச் செய்த இஞ்சித் திருநகர்” (கம்ப கும்பகர்ணன் வதை படலம்)
என்று இலங்கை மாநகரின் திண்ணிய மதில்களின் திறத்தைச் சுட்டியுள்ளார்.

தூங்கு எயில்
தூங்குதல் என்றால் ‘தொங்குதல்’ என்று பொருள். தூங்கெயில் என்றால்‘தொங்குகின்ற மதிலையுடைய கோட்டை’ என்றே பொருள்படுகிறது. தூங்கெயில் பற்றிய செய்தியை,
“ஒன்னார் உட்கும் துன்னரும் கடுந்திறல்
தூங்கெயில் எறிந்தநின் னூங்கணோர் நினைப்பின்
அடுதல்நின் புகழும் அன்றே” (புறம். 39)

என்ற புறநானூற்றுப் பாடலில் நப்பசலையார் கிள்ளிவளவனைப் பாடியதிலிருந்து அறிகின்றோம். மேலும் தூங்கெயில் பற்றிப் பல நூல்களிலும் செய்திகள் குறிப்பிடப்பட்டுள்ளன. தூங்கெயில் கோட்டையைத் தகர்த்த ஒரு சோழமன்னன் “தூங்கெயில் எறிந்த தொடிதோட் செம்பியன்” (மணிமேகலை-1:4) என்ற சிறப்புப் பெயர் பெற்றுள்ளான். “கடவுள் அஞ்சி வானிழைத்த தூங்கெயில்” (பதிற்.-31:18-19) என்றும், “ஒன்னாரோங்கெயிற் கதவ முரு முச்சுவல் சொறியும், தூங்கெயிலெறிந்த தொடிவிளங்கு தடக்கை, நாடா நல்லிசை நற்றோ;ச் செம்பியன்” (சிறுபாண். 79-82) என்றும் குறிப்பிடுகின்றது. மேலும் சிலம்பு, தொல்காப்பியம், பழமொழி நானூறு போன்ற நூல்களில் தூங்கெயில் பற்றிய செய்தி இடம்பெற்றுள்ளது.

மேலும் தூங்கெயில் பற்றி உ.வே.சாமிநாத ஐயரும்  ஔவை  சு. துரைசாமிப்பிள்ளை அவர்களும் குறிப்பிடும் போது “அணுகுதற்கரிய மிக்க வலிமையுடைய ஆகாயத்துத் தூங்கெயில்” என்றே குறிப்பிட்டுச் செல்கின்றனர். புலியூர் கேசிகன் தன் புறநானூற்று உரையில், “வானூர் கோட்டை” என்று குறிப்பிடுகின்றார். “விண்ணின் இடைப்பகுதியில் அவுணார்அமைத்த அரண்” என்று புறநானூறு  நியூ செஞ்சுர் புக் ஹவுஸ் வெளியீடு குறிப்பிடுகின்றது.

“கடவுள் அஞ்சி வானத்திழைத்த தூங்கெயில்” என்ற பதிற்றுப்பத்து பாடலடியானது, சிவபெருமான், தாரகாசுரன் என்ற அரக்கன் அமைத்த இரும்பு, வெள்ளி, பொன்னாலாகிய மூன்று கோட்டைகளைத் தகர்த்து அழித்தார் என்ற புராணச் செய்தியை வெளிப்படுத்துகின்றது. இப்புராணச் செய்தியினை “முப்புரம் எறிந்த திரி சடைக்கடவுள்” என்ற பாடலடியும் குறிப்பிடுகின்றது.

ஞாயில்
மதிலின் (எயிலின்) உறுப்புக்களில் ஒன்று ஞாயில். மதிலில் ஞாயிலே மிகச் சிறந்த உறுப்பு. ஞாயில் என்பது படையெடுத்துவரும் பகைவர்  மீது மறைந்து நின்று அம்பு எய்வதற்குரிய அறை ஆகும். இதற்கு ‘ஏப்புழை’ என்ற பெயரும் உண்டு. மதிலுக்கு ஞாயிலே சிறந்த உறுப்பு என்பதை,

‘மதிலும் ஞாயிலும் இன்றே, கிடங்கும்
நீஇர் இன்மையின் கன்று மேய்ந்(து) உகரும்
ஊரது நிலைமையும் இதுவே” (புறம். 355)

என்று பாழடைந்த கோட்டையில், ஞாயில் இன்றி சிதைந்த மதிலைக் குறிப்பிடுகின்றார். மேலும் ஞாயில் பற்றிக் கூறும் பொழுது,

“வான்தோய் வன்ன புரிசை விசும்பின்
மீன்பூத் தன்ன உருவ ஞாயில்” (புறம்.21)
என்று ஐயூர் மூலங்கிழார் குறிப்பிடுகின்றார்.

முடிவுரை
புறநானூற்றில் காணப்பெறும்
 அரண் அமைப்பு முறை தமிழரின் சிறந்த ஆட்சியையும், நுண்ணறிவையும் காட்டுகின்றது. அரண் உறுப்புகள், மதில், ஞாயில் போன்றன அக்கால போர்முறைகளையும் சிறிது வெளிப்படுத்துகின்றன. இதன் மூலம் தமிழ் மன்னர்கள் அரண்களின் பாதுகாப்புடன் சிறப்பாக நாட்டை  ஆண்டனர் என்பதை அறியமுடிகிறது.

பார்வை நூல்கள்
1. டாக்டர் உ.வே.சாமிநாதையர்  - புறநானூறு மூலமும் உரையும், ஆறாம்  பதிப்பு, 1963, கபீர் அச்சுக்கூடம், சென்னை.

2. திரு. ஔவை சு.துரைசாமிப்பிள்ளை - புறநானூறு மூலமும் உரையும், பத்தாம் பதிப்பு டிசம்பர், 1996 - சைவசித்தாந்த நூற்பதிப்புக் கழகம், சென்னை-19.

3. புறநானூறு மூலமும் உரையும் - நியூ செஞ்சுரி புக் ஹவுஸ் (பி) லிட்,
அம்பத்தூர், சென்னை-600 089.
4. புலியூர் கேசிகன், - புறநானூறு மூலமும் உரையும், பதிப்பு - 2002 - பாரி நிலையம், சென்னை.

5. திரு. ஔவை சு.துரைசாமிப்பிள்ளை - பதிற்றுப்பத்து - மூலமும்
உரையும், 5-ஆம் பதிப்பு ஆகஸ்ட் - 1999 சைவசித்தாந்த
நூற்பதிப்புக் கழகம், சென்னை-19.

6. பத்துப்பாட்டு பகுதி - I மூலமும் உரையும், நியூ செஞ்சுரி புக்
ஹவுஸ்(பி)  லிட், அம்பத்தூர், சென்னை-600 089.

7. நாமக்கல் கவிஞர் திரு.வெ. இராமலிங்கப்பிள்ளை - திருக்குறள் புது
உரைச்சுருக்கம், கவிஞர் பதிப்பகம், ராஜவீதி, கோயம்புத்தூர்,
நான்காம் பதிப்பு - 1963.

8. சி.ர. கோவிந்தராசன் - நீதி நூல்கள் திரிகடுகம், ஆசாரக்கோவை,
சிறுபஞ்சமூலம், மூலமும் உரையும், இந்து பப்ளிகே‘ன்ஸ், சென்னை.

9. கம்ப இராமாயணம்  - பதிப்பாசிரியர் பேரா. அ.ச.ஞானசம்பந்தன்,
பதிப்பு - 2004. கம்பன் அறநிலை  - கோவை.

10. தண்டியலங்காரம் - கழக வெளியீடு, 21-ம் பதிப்பு 1992, திருநெல்வேலி
தென்னிந்திய சைவசித்தாந்த நூற்பதிப்புக் கழகம், சென்னை.

11. புறநானூற்றுச் சொற்பொழிவுகள்  - கழக வெளியீடு, திருநெல்வேலி
தென்னிந்திய சைவசித்தாந்த நூற்பதிப்புக் கழகம், சென்னை.

rtctamil@gmail.com



__________________
Page 1 of 1  sorted by
 
Quick Reply

Please log in to post quick replies.



Create your own FREE Forum
Report Abuse
Powered by ActiveBoard