உலகிற்கே அறத்தைக் கற்பித்த திருக்குறளானது தமிழ் உலகின் இணையில்லாப் படைப்பாகும். இத்தகைய பெருமை மிகு குறளினை மறைக்கும் / எதிர்க்கும் முயற்சியினைப் பார்ப்பனியமானது காலகாலமாக மேற்கொண்டுவருகின்றது. `கடவுள்` என்ற சொல்லே இல்லாத திருக்குறளினை `கடவுள் வாழ்த்து` என அதிகாரம் அமைத்து தொடங்குவதிலிருந்து இந்த அரசியல் தொடங்குகின்றது (அதிகாரங்கள் எல்லாம் பின்நாளில் வகுக்கப்பட்டதே). வள்ளுவன் குறிப்பிடுவது எல்லாம் இறைவன், தெய்வம் ஆகிய இரு சொற்களே. இங்கு `இறைவன்` என்பது இறை (வரி) அறவிடும் தலைவனை / அரசனையே குறிக்கின்றது (மக்களை இறுக்குவதால் இறை) . தெய்வம் என்பது ஒரு பாலறியாக் கிளவி. இங்கு இயற்கையோடு ஒன்றிய மூத்தோர் வழிபாடு, இயற்கை போன்றவற்றையே தெய்வம் என்பது குறிக்கும்.
“வையத்துள் வாழ்வாங்கு வாழ்பவன் வானுறையும்
தெய்வத்துள் வைக்கப் படும்.” – (குறள்50)
இங்கு மூத்தோர் வழிபாடே ஒரு வகையில் தெய்வமாகக் காட்டப்படுகின்றது. இத்தகைய இயற்கையோடு ஒன்றிய இறைவன், தெய்வம் என்பவற்றைப் பின்நாளில் கடவுள் வாழ்த்தாக்கியதே முதல் புரட்டு ஆகும்.
பரிமேலழகரின் உரைப்பாயிர அரசியல்:
திருக்குறள் குறிப்பிடும் அறத்துப்பாலில் அறம் என்ற சொல் முதன்மையானது. அறம் என்ற சொல்லானது அறுத்தல் என்ற வினைச்சொல்லினை அடிப்படையாகக்கொண்ட ஒரு சொல்லாகும் (அறு+அம்=அறம்). எவற்றை அறுக்க (விட்டொழிக்க) வேண்டும். இதோ வள்ளுவனே கூறுகின்றார்.
“அழுக்காறு அவாவெகுளி இன்னாச்சொல் நான்கும்
இழுக்கா இயன்றது அறம்.” – (குறள்:35)
அதாவது அழுக்காறு (பொறாமை), அவா (பேராசை), வெகுளி (சினம்), இன்னாச்சொல் (கடுஞ்சொல்) ஆகிய நான்கையும் அறுப்பதே அறம் எனப்படும் என்கின்றார் வள்ளுவர்.
இன்னொரு இடத்தில் வள்ளுவன் “மனத்தின்கண் குற்றம் இல்லாது இருத்தலே அறவழியில் செல்லுதலாகும்” என்கின்றார். இதனையே பின்வரும் குறள் காட்டுகின்றது.
“மனத்துக்கண் மாசிலன் ஆதல் அனைத்தறன்
ஆகுல நீர பிற.” – (குறள்:34)
மணிமேகலையும் அறத்திற்கு விளக்கம் கொடுக்கின்றார்.
“அறம் எனப்படுவது யாதெனக் கேட்பின்
மறவாது இதுகேள்! மன்னுயிர்க் கெல்லாம்
உண்டியும் உடையும் உறையுளும் இல்லது கண்டதில்”.
இந்த `அறம்` என்ற சொல்லிற்கு ஓரளவிற்கு சரிநிகரான சொல்லாக கிரேக்கச் சொல்லான `Ethics` காணப்படுகின்றது. `தர்மம்` என்ற வடசொல்லிற்கு நிகராக அறத்தை கருதுவது தவறு, ஏனெனில் தர்மம் ஆட்களிற்கேற்ப வேறுபடும். அதாவது ஒரு வழக்கறிஞர் தனது கட்சிக்காரரிற்காகப் பொய் சொல்லுவது தொழில் தர்மம் என்பார்கள். ஆனால், அது அறமாகாது. அறம் எப்பொழுதும் பொது நன்மை கருதியே காணப்படும். எமக்கு எது தேவையோ அதுவே தர்மமாகும் எனக் கூறுவதுபோல அறத்தை வளைக்க முடியாது. அதனால்தான் மனு சுமிர்தியினை (Manusmriti ) மனுதர்மம், மனுநீதி என்றெல்லாம் அழைப்பார்கள். ஆனால் `மனு அறம்` என அழைக்க அவர்களிற்கே நா கூசும் (அதேபோன்றே சனாதன தர்மமும்).
பரிமேலழகர் இத்தகைய சிறப்புவாய்ந்த சொல்லான அறம் என்பதற்குப் பொருந்தா விளக்கம் கொடுக்கின்றார். பரிமேலழகர் தனது உரைப்பாயிரத்தில் “அறமாவது மனு முதலிய நூல்களில் விதித்தன செய்தலும், விலக்கின ஒழித்தலும் ஆகும்” என்கின்றார். அதாவது மனுதர்மத்தில் கூறப்பட்டவையே அறம் என வேண்டுமென்றே பொய் சொல்லுகின்றார். திருக்குறள் மனுதர்மத்திற்கு காலத்தால் முற்பட்டது என்பது ஒரு புறமிருக்க; மறுபுறத்தே மனுதர்மத்திற்கும், குறள் விளக்கும் அறத்திற்குமிடையே மலைக்கும் மடுவிற்குமுள்ள வேறுபாடுகள் உண்டு. பிறப்பினடிப்படையிலான வர்ணாச்சிரம சாதிக் கோட்பாட்டினை வலியுறுத்தும் மனுநீதி எங்கே? பிறப்பொக்கும் எனப் பாடி பிறப்பிலடிப்படையிலான வேறுபாடுகளை அறவே களையும் குறள் எங்கே?
“பிறப்பொக்கும் எல்லா உயிர்க்கும் சிறப்பொவ்வா
செய்தொழில் வேற்றுமை யான்.” – (குறள் :972)
அதுமட்டுமல்ல, கொல்லாமையினை வலியுறுத்தும் குறள் எங்கே?
“கொல்லான் புலாலை மறுத்தானைக் கைகூப்பி
எல்லா உயிரும் தொழும்”. – (குறள் :260)
பார்ப்பனர்களை பசுக்களை கொன்று உண்ணுமாறு கூறும் மனுநீதி எங்கே?
“சிராத்தத்தில் வரிக்கப்பட்ட பார்ப்பனன், புலால் உண்ண மறுத்தால், 21 பிறவிகள் பசுவாய்ப் பிறப்பான்”. – (மனுநீதி சுலோகம்:35).
“உழுதுண்டு வாழ்வாரே வாழ்வார்மற் றெல்லாம்
தொழுதுண்டு பின்செல் பவர்”. – (குறள் : 1039)
என வேளாண்மையினைப் (கமத்தினை) புகழும் குறள் எங்கே? பயிர் செய்தலைப் பாவகரமாகப் பார்க்கும் மனுநீதி எங்கே?
இவ்வாறு திருக்குறள் குறிப்பிடும் அறத்திற்கு முற்றிலும் முரணாக மனுநீதி காணப்பட, எவ்வாறு மனுநீதி முதலிய நூல்கள் விதித்ததுதான் அறம் என பரிமேலழகர் கூறுகின்றார்? வேறு ஒன்றுமில்லை, அவருடைய பார்ப்பனச்சாதிப் பற்றே அவ்வாறு பச்சைப்பொய் சொல்லவைத்தது. இந்த பரிமேலழகர் கக்கிய நஞ்சின் நீட்சியே இன்றைய நாகசாமியின் ` Tirukkural – An Abridgement of Shaastras ` என்ற புத்தகம் ஆகும்.
திருக்குறளை திரிக்க முயலும் ஒரு ஆங்கில நூல் –
` Tirukkural – An Abridgement of Shaastras`
நாகசாமி என்பவர் Tirukkural – An Abridgement of Shaastras என்றொரு (புத்தகத்தினை) புரட்டினை எழுதியுள்ளார். அதில் மனுதர்மம் முதலிய சமசுகிரத நூல்களின் பிழிவிலிருந்தே (சாரம்சம்) திருக்குறள் தோன்றியதாக வழமையான பார்ப்பன புரட்டினை கூறியுள்ளார். மனுதர்மம் காலத்தால் திருக்குறளிற்குப் பிற்பட்டது என்று ஏற்கனவே அறிஞர்களால் சான்றுபடுத்தப்பட்டதனை அவர் கவனத்திற்கொள்ளவில்லை. நூலின் தலைப்பிலும், நூல் முழுவதுமே திருக்குறள் வடமொழி சாத்திரங்களின் வழிவந்ததே என அழுத்திக் கூறும் இவர், ஓரிடத்தில் மட்டும் இது எதிர்கால ஆய்விற்குரியது என்கின்றார்.
திருக்குறள் மீது பார்ப்பனர்களின் ஒவ்வாமை வரலாறு அறிந்ததே. “தீக் குறளை சென்று ஓதோம்” (கோள் சொல்லுதல் கூடாது) என்ற ஆண்டாள் பாடலிற்கு “திருக்குறளை ஓதவேண்டாம்” என வலியப் பொய் சொன்ன மூத்த சங்கரச்சாரியார் முதல் “முதல் பத்து குறள்களை மட்டுமே பயன்படுத்தலாம்” என்று சொன்ன செயேந்திர சங்கரச்சாரியார் ஈடாக இன்றைய நாகசாமியின் இப் புத்தகம் வரை இந்த தமிழ் வெறுப்பினைக் காணலாம். இப் புத்தகத்தின் பொய்மையினை உடைக்க சங்கரச்சாரியார் விரும்பும் முதல் பத்து குறள்களிலேயே சில குறள்களை முதலில் நாமும் அவர் விருப்பப்படி எடுத்துக்கொள்வோம்.
மனுநீதி முதலான பார்ப்பனிய சாத்திரங்கள் எல்லாவற்றுக்கும் அடிப்படை வர்ணாச்சிரம கோட்பாடே ஆகும். ரிக்வேத புருச சூத்திரத்தின் 10 வது சுலோகமான பிரம்மனின் படைப்புக் கோட்பாடே சாத்திரங்களின் அடிப்படை. இதன்படி சூத்திரன் காலிலிருந்தே பிறந்தவர்கள் எனக் கூறி தமிழர்களை இழிவுபடுத்துகின்றது ரிக்வேதம். இக் கருத்து தமிழ் மண்ணையும் வந்துசேர்ந்த காலத்திலேயே திருக்குறள் எழுதப்படுகின்றது. இப்போது முதல் பத்து குறள்களில் (பின்நாளில் கடவுள் வாழ்த்தாக்கப்பட்ட) குறள்களில் 7 குறள்களை எடுத்து, அதற்கு முனைவர் மறைமலை இலக்குவனார் கொடுத்த விளக்கங்களையே துணையாகக் கொள்ளப்போகின்றேன். இங்கு நீங்கள் கவனிக்கவேண்டிய விடயம் பின்வரும் 7 குறள்களிலும் காலின் பெருமையினைப் பேசியே வள்ளுவன் ரிக்வேத புருச சூத்திரத்திற்குப் பதிலடி கொடுக்கின்றார்.
“கற்றதனா லாய பயனென்கொல் வாலறிவன்
நற்றாள் தொழாஅ ரெனின்” – (குறள் 2)
{தூய அறிவுடைய ஆசிரியரின் தாளை – (காலை) வணங்காவிட்டால் கற்றதனால் பயன் ஒன்றும் இல்லை என்கிறார்.}
“மலர்மிசை யேகினான் மாணடி சேர்ந்தார்
நிலமிசை நீடுவாழ் வார்” (குறள் 3)
{திருவள்ளுவர். மாண்பு உடையவர்களின் – சிறப்பு உடையவர்களின் – அடிகளைப் பொருந்தி வாழ்பவர்களே நீடு வாழ்பவர்களாம் எனவே தலையில் பிறந்ததாக ஆணவம் கொள்ளாமல் காலை வணங்க வேண்டும்}
“வேண்டுதல் வேண்டாமை யில்லா னடிசேர்ந்தார்க் கு
யாண்டு மிடும்பை மில” (குறள் 4)
{துன்பம் இல்லாது வாழ என்ன செய்ய வேண்டும் என்கிறார்? விருப்பு வெறுப்புடன் எதையும் – யாரையும் பார்க்காத – அணுகாத கண்ணோட்டம் உடைய விருப்பு வெறுப்பு அற்றவர்களின் அடியை ( பாதம்)வணங்க வேண்டும்}
“தனக்குவமை யில்லாதான் தாள்சேர்ந்தார்க் கல்லால்
மனக்கவலை மாற்ற லரிது”. (குறள் 7)
{மனத்துன்பத்தை யாரால் போக்க முடியும்? ஒப்பு நோக்குவதற்கு இணையற்ற ஆற்றோர் திருவடிகளைப் பற்றினால் அன்றி மனக்கவலைகளை மாற்ற இயலாது எனத் திருவள்ளுவர்}
“அறவாழி யந்தணன் தாள்சேர்ந்தார்க் கல்லாற்
பிறவாழி நீந்த லரிது” (குறள் (8)
{பொருட்கடலிலும் இன்பக்கடலிலும் திளைக்க வேண்டும் என்றால் அழகிய பண்புநலன்கள் உடைய அறவோர்களின் தாள் ( கால் ) பணிதல் வேண்டும் என்கிறார்} (அந்தணர் = அறவோர், பார்ப்பனரல்ல)
தலையில் பிறந்ததால் உயர்வு என்போரை அடிசாய்க்கும் வகையில் திருவள்ளுவர் மற்றொரு கருத்தைக் கூறுகிறார். என்னவென்று?
“கோளில் பொறியிற் குணமிலவே யெண்குணத்தான்
தாளை வணங்காத் தலை”. (குறள் 9)
{எண்ணிப் போற்றும் குணம் உடையவனின் தாளை வணங்காத தலை பயன் அற்றது }
“பிறவிப் பெருங்கட னீந்துவர் நீந்தார்
இறைவ னடிசேரா தார்”. (குறள் 10)
{நல்ல பண்புகளை உறைவிடமாகக் கொண்டவர்கள் – கல்விச் செல்வம் தங்கியிருப்பவர்கள் – அதிகார ஆளுமை தங்கியிருப்பவர்கள் ஆகிய இறைமையாளர்களின் அல்லது இறைவனின் அடி சேர்ந்தவர்களால் மட்டும் அவர்கள் வழிகாட்டுதலில் துன்பக்கடலைக் கடக்கமுடியும்}.
நாகசாமி .பார்த்தீர்களா! வள்ளுவன் எவ்வாறு முதல் அதிகாரத்திலேயே ரிக்வேத புருச சூத்திர படைப்புக் கோட்பாட்டினை காலின் பெருமை பேசி தகர்த்து எறிந்துள்ளார். இங்கு வள்ளுவன் காலின் பெருமைகளைப் பேசி சூத்திரர்களை உயர்ந்தவராகக் காட்டமுயல்கின்றார் என்பதல்ல, மாறாக முள்ளை முள்ளால் எடுப்பதுபோல கால்களின் பெருமையினை உவமையாகக் கையாண்டு புருச சூத்திர படைப்புக் கோட்பாட்டினைத் தகர்த்து எறிகின்றார். இவை எல்லாவற்றிற்றிற்கும் முத்தாய்ப்பாக அமைந்த குறள் வருமாறு
“பிறப்பொக்கும் எல்லா உயிர்க்கும் சிறப்பொவ்வா
செய்தொழில் வேற்றுமை யான்”. (குறள் 972)
மேற்கூறிய குறளில் `எல்லா உயிர்க்கும் பிறப்பு ஒருத் தன்மையானதே` என மேற்குறித்த குறளில் வர்ணாச்சிரமக் கோட்பாட்டினையே தகர்த்து எறிகின்றார்.
“அவிசொரிந்து ஆயிரம் வேட்டலின் ஒன்றன்
உயிர்செகுத்து உண்ணாமை நன்று” (குறள் 259)
என்ற குறளின் மூலம் பார்ப்பனச் சடங்கான வேள்வியினையே (யாகம்) ஏளனம் செய்கின்றார் வள்ளுவன்.
“மறப்பினும் ஒத்துக் கொளல்ஆகும் பார்ப்பான்
பிறப்பு ஒழுக்கம் குன்றக் கெடும்” (குறள் 134)
என்ற குறள் வேறு பார்ப்பனர் என்ற சொல்லையே பயன்படுத்திச் சாடுகின்றார் வள்ளுவர்.
படிக்க:
♦ திருக்குறளும் எளிமையான தமிழ் இலக்கணமும் | பொ வேல்சாமி
♦ இராஜராஜ சோழன் ஆட்சி! பார்ப்பனியத்தின் மீட்சி!!
இவ்வாறு குறள்களை அடுக்கிக்கொண்டே போகலாம், விரிவஞ்சி நிறுத்துகின்றேன். இத்தகைய முழுவதும் பார்ப்பன – ஆரிய எதிர்ப்பாக அமைந்த திருக்குறளை `ஆரிய சாத்திரங்களின் சாரம்` என நூல் எழுதுபவர்களை என்ன சொல்லுவது!
“எப்பொருள் யார்யார்வாய்க் கேட்பினும் அப்பொருள்
மெய்ப்பொருள் காண்ப தறிவு”. (குறள் : 423)
வி.இ. குகநாதன்