Devapriyaji - True History Analaysed

Members Login
Username 
 
Password 
    Remember Me  
Post Info TOPIC: 17 நெடுங்கடலும் தன்நீர்மை குன்றும்


Guru

Status: Offline
Posts: 7602
Date:
17 நெடுங்கடலும் தன்நீர்மை குன்றும்
Permalink  
 


நீர்ச் சுழற்சி முறை


நெடுங்கடலும் தன்நீர்மை குன்றும் தடிந்தெழிலி
தான்நல்கா தாகி விடின்

(அதிகாரம்:வான் சிறப்பு குறள் எண்:17)

பொழிப்பு (மு வரதராசன்): மேகம் கடலிலிருந்து நீரைக் கொண்டு அதனிடத்திலே பெய்யாமல் விடுமானால், பெரிய கடலும் தன் வளம் குன்றிப் போகும்.

மணக்குடவர் உரை: நிலமேயன்றி நெடியகடலும் தனது தன்மை குறையும், மின்னி மழையானது பெய்யாவிடின்.
தடிந்தென்பதற்கு, கூறுபடுத்து என்று பொருளுரைப்பாரு முளர். இது நீருள் வாழ்வனவும் படுவனவுங் கெடுமென்றது. இவை நான்கினானும் பொருட்கேடு கூறினார், பொருள்கெட இன்பங்கெடு மென்பதனால் இன்பக்கேடு கூறிற்றிலர்.

பரிமேலழகர் உரை: நெடுங்கடலும் தன் நீர்மை குன்றும் - அளவில்லாத கடலும் தன் இயல்பு குறையும்; எழிலி தான் தடிந்து நல்காது ஆகி விடின் - மேகம் தான் அதனைக் குறைத்து அதன்கண் பெய்யாது விடுமாயின்.
(உம்மை சிறப்பு உம்மை. தன் இயல்பு குறைதலாவது நீர் வாழ் உயிர்கள் பிறவாமையும், மணி முதலாயின படாமையும் ஆம். ஈண்டுக் குறைத்தல் என்றது முகத்தலை. அது "கடல்குறை படுத்தநீர் கல் குறைபட வெறிந்து" (பரி.பா.20) என்பதனாலும் அறிக. மழைக்கு முதலாய கடற்கும் மழை வேண்டும் என்பதாம். இவை ஏழு பாட்டானும் உலகம் நடத்தற்கு ஏதுவாதல் கூறப்பட்டது.

இரா சாரங்கபாணி உரை: மேகம் தான் முகந்த நீரை மீண்டும் அங்கே பொழியாதொழியின், நீண்ட பெரிய கடலும் தன் வளம் குறையும்.

பொருள்கோள் வரிஅமைப்பு:
நெடுங்கடலும் தன்நீர்மை குன்றும் எழிலி தான் தடிந்து நல்காது ஆகி விடின்.

பதவுரை: நெடுங்கடலும்-ஆழமும் அகலும் உள்ள அளவில்லாத கடலும்; தன்நீர்மை-தன் இயல்பு, தன் தன்மை; குன்றும்-குறையும், குறைவுபடும்; தடிந்து-பூரித்து, பெருத்து, குறைத்து (முகந்து); எழிலி-முகில்; தான்நல்காது-தான் தராதது, தான் பெய்யாதது; ஆகிவிடின்-ஆகிவிட்டால்.


நெடுங்கடலும் தன்நீர்மை குன்றும்:

இப்பகுதிக்குத் தொல்லாசிரியர்கள் உரைகள்:
மணக்குடவர்: நிலமேயன்றி நெடியகடலும் தனது தன்மை குறையும்;
பரிதி: பெருமையான கடலில் சங்கு, முத்து, பவளம் பிறவாது;
காலிங்கர்: பெரிதாகிய கடலும் தன்றன்மை குறைபடும்;
பரிமேலழகர்: அளவில்லாத கடலும் தன் இயல்பு குறையும்;
பரிமேலழகர் குறிப்புரை: உம்மை சிறப்பு உம்மை. தன் இயல்பு குறைதலாவது நீர் வாழ் உயிர்கள் பிறவாமையும், மணி முதலாயின படாமையும் ஆம்.

பழைய ஆசிரியர்கள் இப்பகுதிக்குப் பெரிய கடலும் தன் தன்மை குறைபடும் என்று இப்பகுதிக்கு உரை செய்தனர். மணக்குடவர் நிலமேயன்றி நெடியகடலும் என உரைத்தார். பரிமேலழகர் 'இயல்பு குறைதலாவது நீர் வாழ் உயிர்கள் பிறவாமையும், மணி முதலாயின படாமையும் ஆம்' என்று விளக்கமும் தருகிறார்.

இன்றைய ஆசிரியர்கள் 'நெடுங்கடலும் தன் வளம் குறைந்துவிடும்', 'கடலுங்கூடக் குறைந்து வறண்டு போகும்', 'பெரிய கடலும் தனது வளத்திற் குறைவுபடும் (கடலில் நீர்வாழும் உயிர்களும், முத்து மணி முதலியனவும் உண்டாகா என்றவாறு)', 'பெரிய அக்கடலில் கிடைக்கும் வளங்கள் எல்லாமும் குறைந்து போகும்', என்ற பொருளில் இப்பகுதிக்கு உரை தந்தனர்.

பெரிய கடலும் தன் தன்மையில் குறைவுபடும் என்பது இத்தொடரின் பொருள்.

தடிந்தெழிலி தான்நல்கா தாகி விடின்:

இப்பகுதிக்குத் தொல்லாசிரியர்கள் உரைகள்:
மணக்குடவர்: மின்னி மழையானது பெய்யாவிடின்.
மணக்குடவர் குறிப்புரை: தடிந்தென்பதற்கு, கூறுபடுத்து என்று பொருளுரைப்பாரு முளர். இது நீருள் வாழ்வனவும் படுவனவுங் கெடுமென்றது. இவை நான்கினானும் பொருட்கேடு கூறினார், பொருள்கெட இன்பங்கெடு மென்பதனால் இன்பக்கேடு கூறிற்றிலர்.
பரிதி: மழை பெய்யாவிடில்.
காலிங்கர்: பருவங்களில் வந்து பூரித்து மழை வழங்காதாயின்.
பரிமேலழகர்: மேகம் தான் அதனைக் குறைத்து அதன்கண் பெய்யாது விடுமாயின்.
பரிமேலழகர் குறிப்புரை: ஈண்டுக் குறைத்தல் என்றது முகத்தலை. அது "கடல்குறை படுத்தநீர் கல் குறைபட வெறிந்து"(பரி.பா.20) என்பதனாலும் அறிக. மழைக்கு முதலாய கடற்கும் மழை வேண்டும் என்பதாம். இவை ஏழு பாட்டானும் உலகம் நடத்தற்கு ஏதுவாதல் கூறப்பட்டது.

மழை பெய்யாவிடில் என்று அனைத்து பழம் உரையாசிரியர்களும் இப்பகுதிக்குப் பொருள் தந்தனர். 'தடிந்து' என்ற சொல்லுக்கு மணக்குடவர் 'மின்னி' என்றும் காலிங்கர் 'பூரித்து' என்றும் பரிமேலழகர் 'குறைத்து' என்றும் பொருள் கொண்டனர்.

இன்றைய ஆசிரியர்கள் 'மேகம் நீரைத்தாங்கத் திரும்பப் பொழியாவிடின்', 'கடலிலிருக்கிற தண்ணீரை ஆவியாக்கி ஆகாயத்திற்குக் கொண்டு போகிற மேகங்கள் ஒன்றாகச் சேர்ந்து இடியிடித்து மழை பெய்யாமல் இருந்துவிடுமானால்', 'மேகமானது கடல்நீரைக் குடித்துக் கடலுக்குக் குறைவு செய்து குடித்த நீரைத் திரும்பக் கொடுக்காமற் போமாயின்', 'கடலில் முகந்த நீரை முகில் மழையாக மீண்டும் வழங்காது என்றால்' என்றபடி இப்பகுதிக்கு பொருள் உரைத்தனர்.

மின்னல் மின்னி மழை பொழியாவிட்டால் என்பது இப்பகுதியின் பொருள்.

நிறையுரை:
தடிந்தெழிலி அருள் செய்யாவிட்டால் பெரிய கடலும் தன் தன்மையில் குறைவுபடும் என்பது பாடலின் பொருள்.
'தடிந்தெழிலி' என்றால் என்ன?

கடல் வளம் நிலைக்கவும் மழை தேவை.

மின்னல் சுமந்த மேகங்கள் பொழியாவிட்டால், காண்பதற்கே மலைப்பையும், குறையவே குறையாது என்ற எண்ணத்தையும் உண்டாக்குகிற, பரந்து விரிந்த மாபெருங்கடலும், தன்னுடைய தன்மையில் குறைவுபடும்.
மழை இல்லையானால் நிலம் பயனற்றுக் கெடுவதுபோலவே, கடலும் பயன் குறைந்து போகும். எனவே கடலுக்குள்ளும் மழை பெய்யவேண்டும். 'மழை பொழியாதொழியின் கடல் நீர்மை குன்றும்' என்கிறது பாடல். கடல் தன் நீர்மையில் குறைவுபடுவதை கடல் நீரின் தன்மை மாறும் எனவும், கடல் வளம் குறையும் எனவும் விளக்குவர்.
கடலின் நீரின் உப்புக்கு ஓர் அளவு உண்டு. கடலின் நீரின் அடர்த்திக்கும் ஓர் அளவு உண்டு. இது நிலைத்திருக்க வேண்டுமானால் மேகம் கருக்கூடிக் கடல்நீரை அள்ளிக் கொண்டு போய் மலைகளிற் பொழிந்து உப்பையும் தடிப்பையும் ஆற்றின் மூலமும் நேராகவும் மறுபடியும் கடலிற் கொண்டு வந்து சேர்த்தாக வேண்டும். இன்றேல் கடல் நீரின் உப்பும், அடர்த்தியும் கூடுதலாகிவிடும். கடல்வாழ் உயிரினங்கள் அழியும். நல்லநீர் பருகாது போனால் உடம்பில் பலவகையான உப்புச் சத்து பெருகி உடல் வளர்ச்சியைக் கெடுப்பதுபோலக் கடலிலும் நன்னீர் மழையாலோ-பனியுருகியோ வந்து கலவாதாயின் உயிர்கள் வாழமாட்டா. இது கடல் நீர்மைக்கு நன்னீர் உதவுவதை விளக்கும்.

கடல்வளம் என்பது கடல் நீராதார வாழ்வைக் குறிப்பது.
வானம் வேண்டா வறனில் வாழ்க்கை என்று நீராதார வாழ்வின் வளத்தைச் சங்கப்பாடல் ஒன்று புகழ்ந்து மகிழ்கிறது. அது என்ன வாழ்க்கை?
வானம் வேண்டா வறன்இல் வாழ்க்கை
நோன் ஞாண் வினைஞர் கோள் அறிந்து ஈர்க்கும்
மீன் முதிர் இலஞ்சிக் கலித்த தாமரை
நீர்மிசை நிவந்த நெடுந் தாள் அகல் இலை 
(அகநானூறு 186 பொருள்: மழைபெய்தலை வேண்டாத வறுமையுறுதல் இல்லாத வாழ்க்கையினையுடைய, வலியதூண்டிற் கயிற்றினையுடைய மீன் பிடிப்போர், (மீன் இரை கோத்தமுள்ளினைப்) பற்றியது உணர்ந்து இழுக்கும், மீன் மிக்க நீர்நிலையில், தழைத்த தாமரையின் நீர்மீது உயர்ந்த நெடியகாம்பினையுடைய அகன்ற இலையை.) இச்செய்யுள் கூறுவது: தாமரைகள் மிகவும் உயர்ந்தும் செழித்தும் விளங்கும் இலஞ்சியின் செழுமையால் நன்கு விளைந்து பருத்தமீன்கள் மலிந்து மகிழ்ந்து நீந்திக்களிக்கின்றன. இம்மீன்களே சிலர்க்கு வாழ்வாதாரம். அவர்களுக்கு உழவும் வேண்டாம். விதைக்கவும் வேண்டாம். வளர்ந்திட்ட பயிர்கள் வான்மழை இன்றி வாடுகின்றனவே என்று வானத்தைப் பார்த்து ஏங்கவும் வேண்டாம். தூண்டிலும் அதனை ஈர்க்க உதவும் நாணும், தூண்டில் இரையைக் கவ்வும் மீனைக் குறி பிழையாது பார்த்துப் பிடிக்கக்கூடிய திறனுமே அவர்களுக்கு வறட்சி இல்லாத வாழ்வை அளித்து விடுகின்றன. இதுவே 'வானம் வேண்டா வறனில் வாழ்க்கை'.
இதுபோலவே நெய்தல் நிலம் அதாவது கடலும் கடல்சார்ந்த நிலத்தில் சிறந்த வாழ்க்கை வாழ்பவர்களின் வாழ்வை வானம் வேண்டா வாழ்க்கை எனலாம். ஆனால் வள்ளுவர் இவ்விதமான வாழ்க்கைக்கும் மழை தேவையே என்கிறார். மழை இல்லையென்றால் கடலிலுள்ள நீர்வாழ் உயிர்களும் வாழ்வதரிது என இக்குறள் மூலம் தெரிவிக்கிறார்.
கடல் சார் வளம் குன்றுவது என்பது கடல் உயிர்கள் அதாவது மீன் முதலிய நீர் வாழுயிர்கள் வாழ முடியாமையையும், முத்து, பவளம் முதலியனவற்றின் விளைச்சல் இன்மையையும் குறிக்கும். கடலில் மீன் பிடிக்கும் தொழிலும், கடலினின்று சங்கு, முத்து, பவளம் ஆகியவற்றை எடுக்கும் தொழிலும் கடல் வளத்தின் பயன்களாம். மழை இன்றேல் இத்தொழில்களும் கெடும்.
மழை இல்லையெனில் கடல்நீர் வற்றி அதன் அளவு குறைந்து போகும் என்றும் உரை செய்தனர். இக்கருத்துக்கு அறிவியல் சான்று இருப்பதாகத் தெரியவில்லை.

இக்குறள் நீரியல் சுழற்சி பற்றியும் தெரிவிப்பதாயும் அமைந்தது. மழைக்கு மூலமாக உள்ள நீர்நிலைகளில் கடல் முதன்மையானது. கடலுக்கும் மழைத் துணை வேண்டும். கடல்நீர் ஆவியாகி மேலே சென்று திரும்பவும் மழையாகப் பொழிகிறது என்பது அறிவியல் உண்மை. ஒரு நீர்நிலையிலிருந்து இன்னொரு நீர்நிலைக்கு -ஆற்றிலிருந்து கடலுக்கும் கடலிலிருந்து வானிற்கும் பின் வான்மேகத்திலிருந்து மழையாக பூமிக்கும் மாறி மாறி வருவதும் அது சமயம் நீர் ஆவியாக உருவெடுப்பதும், சுருங்குவதும், மழையாகவோ, பனியாகவோ மறுபடியும் பூமியில் வீழ்வதும், ஊடுருவதும், ஓடிப்பாய்வதும், நிலத்தடியில் சென்று சேர்வதும் - நீர்மை, திடம், காற்று என்று- வடிவங்கள் எடுத்து மாறுபடுவதும் தொடர்ந்து நிகழ்கின்றன. இதுவே நீரியல் சுழற்சி எனப்படுகிறது. கடலுக்கும் மழைக்கும் உள்ள தொடர்பை இயற்கையின் நீர் சுழற்சி எளிதில் விளக்கும்.

மணக்குடவர் முதல் குறள் உரையாசிரியர் எனக் கூறுவர். இக்குறள் உரையில் 'தடிந்து' என்பதற்குக் கூறுபடுத்து என்று பொருள் உரைப்பாருமுளர் என்று காணப்படுவதால் இவர்க்கும் முன்னரே உரை இருந்தமை தெரிய வருகிறது,

'தடிந்தெழிலி' என்றால் என்ன?

தடிந்தெழிலி என்பதற்கு மேகமானது மின்னலும் இடியுமாக மழை பெய்வது என்பதாகவும், கடலையே குறைத்து அக்கடலிலே மழையாகப் பெய்வது என்றும் இருவகையாகப் பொருள் கூறினர்.
தடிந்து என்ற சொல்லுக்கு மணக்குடவர் முதலில் மின்னி என்று பொருள் கண்டார். இதன்படி தடிந்து எழிலி என்பது மின்னலுடன் கூடிய மேகங்கள் என்று பொருள்தரும்; மேகமானது மின்னலும் இடியுமாக மழை பெய்தலைக் குறித்தது. இப்பொருளை ஏற்றுக் கொள்ளும் திரு வி க கம்பராமாயணத்திலுள்ள தடி உடை முகில் குலம் சலிப்ப அண்டமும்(கம்ப இராமாயணம் தாடகை வதைப் படலம் 378: தடி உடை - மின்னலை உடைய) என்ற வரியை மேற்கோள் காட்டி 'தடி' என்றது மின்னல் என்னும் பொருளில் ஆளப்பட்டுள்ளதைச் சுட்டிக் காட்டுவார்.
தடிந்து-குறைத்து என்று பொருள் கண்டார் பரிமேலழகர். இங்கு குறைத்தல் என்றது முகத்தலைக் குறிக்கும் என்றும் விளக்கினார் அவர். மேகமானது கடல்நீரைக் குடித்துக் கடலுக்குக் குறைவு செய்து முகந்து குடித்த நீரைத் திரும்பக் கொடுக்காமற் போனால், பெரிய கடலும் தனது வளத்திற் குறைவுபடும் என்று குறளுக்கு விளக்கம் அளித்தார். தடிந்து என்பது குறைத்து என்ற பொருளிலேயே ஆளப்பட்டது என்பதற்குப் பரிமேலழகர் சான்று தரும் பரிபாடல்: கடல் குறைபடுத்த நீர் கல் குறைபட எறிந்து (பரிபாடல் 20) (பொருள்: சூல் முதிர்ந்த முகில் கடலிலிருந்து முகந்தநீரை மலையினது நிலைகுறையும்படி அதன்கண் பொழிந்தது.)
மற்றவர்கள் பூரித்து என்றும் நுண்பொருள் பருப்பொருளாகி என்றும் தடிந்து என்பதற்குப் பொருள் கூறினர்.
'தடி' என்பது மின்னலுக்குரிய இயற்பெயராயின், அதனடியாகத் தடிந்து என்ற வினையெச்சம் பிறக்கலாம். 'தடித்து' என்ற ஆரியச் சிதைவு ஆயின், தடிந்து என வருவது இயைபிலது (தண்டபாணி தேசிகர்). ‘தடித்து என்பதற்குப் பெருத்து என்பது நேர் பொருள். தானே பெருத்தல் தடிந்து எனப்படும் என்பர். இங்கு முகில் தானே பெருத்தல் சொல்லப்படுகிறது எனவும் கொள்ளமுடியும். வள்ளுவர் புயல் என்னுமளவு பெருமழையையே வேண்டினார். இப்பாடலிலும் மேகங்கள் ஒன்றோடொன்று சேர்ந்து இடி இடித்து மின்னல் மின்னி மழை பெய்வதையே விரும்பி இருப்பது தெரிகிறது. காலிங்கரும் தடிந்தெழிலி என்றதற்குப் பூரித்து மழை பெய்தல் எனக் குறிப்பிடுவது நோக்கத்தக்கது. எனவே தடிந்து என்றதற்கு மின்னி அல்லது பூரித்து என்பதே சிறப்பான பொருளாகிறது.

தடிந்து எழிலி என்பது மின்வெட்டி இடிஇடித்துப் பெருமழை பொழிதலைக் குறிக்கும்

மின்னல் மின்னி மழை அருள் செய்யாவிட்டால் பெரிய கடலும் தன் தன்மையில் குறைவுபடும் என்பது இக்குறட்கருத்து.



இடி இடித்து மின்னல் மின்னி மழை பெய்யாவிட்டால் மாபெரும்கடலும் தன் இயல்பில் குறைவுபடும் என்பது இக்குறட்கருத்து.



__________________
Page 1 of 1  sorted by
 
Quick Reply

Please log in to post quick replies.



Create your own FREE Forum
Report Abuse
Powered by ActiveBoard