Devapriyaji - True History Analaysed

Members Login
Username 
 
Password 
    Remember Me  
Post Info TOPIC: 21 ஒழுக்கத்து நீத்தார் பெருமை


Guru

Status: Offline
Posts: 7602
Date:
21 ஒழுக்கத்து நீத்தார் பெருமை
Permalink  
 


ஒழுக்கத்து நீத்தார் பெருமை விழுப்பத்து
வேண்டும் பனுவல் துணிவு

(அதிகாரம்:நீத்தார் பெருமை குறள் எண்:0021)

பொழிப்பு: ஒழுக்கத்தில் நிலைத்துநின்று பற்றுவிட்டவர்களின் பெருமையைச் சிறந்ததாகப் போற்றிக் கூறுவதே நூல்களின் துணிவாகும்.

மணக்குடவர் உரை: ஒழுக்கத்தின் பொருட்டு எல்லாப் பொருளையுந் துறந்தாரது பெருமையை நூல்களின் துணிவு விழுப்பத்தின் பொருட்டு வேண்டும்.
யாதானுமொரு பொய்யைச் சொல்லும் நூலும் தன்னை யெல்லாருங் கொண்டாடுவதற்காகத் துறந்தார் பெருமையை நன்கு மதித்துக் கூறும். அதனானே யானுஞ் சொல்லுகின்றேனென்பது.

பரிமேலழகர் உரை: ஒழுக்கத்து நீத்தார் பெருமை - தமக்குரிய ஒழுக்கத்தின் கண்ணே நின்று துறந்தாரது பெருமையை; விழுப்பத்து வேண்டும் பனுவல் துணிவு - விழுமிய பொருள்கள் பலவற்றுள்ளும் இதுவே விழுமியது என விரும்பும் நூல்களது துணிவு. (தமக்கு உரிய ஒழுக்கத்தின் கண்ணே நின்று துறத்தலாவது, தத்தம் வருணத்திற்கும் நிலைக்கும் உரிய ஒழுக்கங்களை வழுவாது ஒழுக அறம் வளரும்; அறம் வளரப் பாவம் தேயும்; பாவம் தேய அறியாமை நீங்கும் ; அறியாமை நீங்க நித்த அநித்தங்களது வேறுபாட்டு உணர்வும் அழிதன் மாலையவாய இம்மை மறுமை இன்பங்களின் உவர்ப்பும், பிறவித் துன்பங்களும் தோன்றும் ; அவை தோன்ற வீட்டின் கண் ஆசை உண்டாம்; அஃது உண்டாகப் பிறவிக்குக் காரணம் ஆகிய 'பயன்இல்' முயற்சிகள் எல்லாம் நீங்கி வீட்டிற்குக் காரணமாகிய யோகமுயற்சி உண்டாம்; அஃது உண்டாக,மெய்யுணர்வு பிறந்து புறப்பற்று ஆகிய 'எனது' என்பதும், அகப்பற்று ஆகிய 'யான்' என்பதும் விடும். ஆகலான் இவ்விரண்டு பற்றையும் இம் முறையே உவர்த்து விடுதல் எனக் கொள்க. 'பனுவல்' எனப் பொதுபடக் கூறிய அதனான் ஒன்றையொன்று ஒவ்வாத சமய நூல்கள் எல்லாவற்றிற்கும் இஃது ஒத்த துணிவு என்பது பெற்றாம். செய்தாரது துணிவு பனுவல்மேல் ஏற்றப்பட்டது.)

சி இலக்குவனார் உரை: நல் ஒழுக்கம் உடையவராய்த் தம் நலம் துறந்தாருடைய பெருமையை நூல்களெல்லாம் புகழ்ந்து கூறும்.

பொருள்கோள் வரிஅமைப்பு:
ஒழுக்கத்து நீத்தார் பெருமை விழுப்பத்து வேண்டும் பனுவல் துணிவு.


ஒழுக்கத்து நீத்தார் பெருமை:
பதவுரை: ஒழுக்கத்து-ஒழுக்கத்தின் கண்ணே; நீத்தார்-துறந்தவர்; பெருமை-உயர்வு.

இத்தொடர்க்குத் தொல்லாசிரியர்கள் உரைகள்:
மணக்குடவர்: ஒழுக்கத்தின் பொருட்டு எல்லாப் பொருளையுந் துறந்தாரது பெருமையை;
பரிப்பெருமாள்: ஒழுக்கத்தின் பொருட்டு எல்லாப் பொருளையுந் துறந்தாரது பெருமையை.
பரிதி: ஐம்புலன்களை அடக்கின ஒழுக்கத்தினோர்க்குப் பெருமை எங்கே என்னில்;
காலிங்கர்: தாம் முன்னம் ஒழுகிய ஒழுக்கத்தினைப் பின்பு துறவு நெறி சொல்லுகின்ற ஒழுக்கத்தின்கண்ணே தாற்பரித்து விட்டு நீங்கினார் யாவர் சிலர் அவரது பெருந்தன்மைச் சிறப்பின்மாட்டே;
பரிமேலழகர்: தமக்குரிய ஒழுக்கத்தின் கண்ணே நின்று துறந்தாரது பெருமையை;
பரிமேலழகர் விரிவுரை: தமக்கு உரிய ஒழுக்கத்தின் கண்ணே நின்று துறத்தலாவது, தத்தம் வருணத்திற்கும் நிலைக்கும் உரிய ஒழுக்கங்களை வழுவாது ஒழுக அறம் வளரும்; அறம் வளரப் பாவம் தேயும்; பாவம் தேய அறியாமை நீங்கும்; அறியாமை நீங்க நித்த அநித்தங்களது வேறுபாட்டு உணர்வும் அழிதன் மாலையவாய இம்மை மறுமை இன்பங்களின் உவர்ப்பும், பிறவித் துன்பங்களும் தோன்றும்; அவை தோன்ற வீட்டின் கண் ஆசை உண்டாம்; அஃது உண்டாகப் பிறவிக்குக் காரணம் ஆகிய 'பயன்இல்' முயற்சிகள் எல்லாம் நீங்கி வீட்டிற்குக் காரணமாகிய யோகமுயற்சி உண்டாம்; அஃது உண்டாக,மெய்யுணர்வு பிறந்து புறப்பற்று ஆகிய 'எனது' என்பதும், அகப்பற்று ஆகிய 'யான்' என்பதும் விடும். ஆகலான் இவ்விரண்டு பற்றையும் இம் முறையே உவர்த்து விடுதல் எனக் கொள்க.

இப்பகுதிக்கு 'ஒழுக்கத்தின் பொருட்டு எல்லாப் பொருளையுந் துறந்தாரது பெருமையை' என்று மணக்குடவர், பரிப்பெருமாள் ஆகியோரும், 'ஐம்புலன்களை அடக்கின ஒழுக்கத்தினோரது பெருமையை' என்று பரிதியும் 'துறவு நெறி சொல்லுகின்ற ஒழுக்கத்தின்கண்ணே தாற்பரித்து விட்டு நீங்கினார் சிறப்பை' என்று காலிங்கரும் 'தமக்குரிய ஒழுக்கத்தின் கண்ணே நின்று துறந்தாரது பெருமையை' என்று பரிமேலழகரும் உரை கண்டனர். பரிமேலழகர் விரிவுரையில் வருணாச்சிரம தன்ம அடிப்படியில் உரை கூறியுள்ளார். எல்லா நிலையினர்க்கும் ஒப்பப் பொது அறம் கூறும் குறளுக்கு இவ்வுரை பொருந்தவே பொருந்தாது

இன்றைய ஆசிரியர்கள் 'ஒழுக்கம் விடாத துறவிகளின் பெருமையே', 'ஒழுக்கத்தில் நின்று பற்றற்ற தூறவிகளின் பெருமையை', 'ஒழுக்கம் தவறாமல் ஆசாபாசங்களை நீக்கி வாழ்ந்து சென்ற மகான்களின் பெருமையை', 'நல்லொழுக்கத்திலே நின்று முற்றுந்துறந்த முனிவரது பெருமையை', என்ற பொருளில் இப்பகுதிக்கு உரை தந்தனர்.

ஒழுக்கத்திற்காக தம்நலம் துறந்தவர்களின் பெருமையை என்பது இப்பகுதியின் பொருள்.

விழுப்பத்து வேண்டும் பனுவல் துணிவு:
பதவுரை: விழுப்பத்து-விழுமங்களை; வேண்டும்-விரும்பும்; பனுவல்-நூல். துணிவு-முடிவு.

இத்தொடர்க்குத் தொல்லாசிரியர்கள் உரைகள்:
மணக்குடவர்: நூல்களின் துணிவு விழுப்பத்தின் பொருட்டு வேண்டும்.
மணக்குடவர் விரிவுரை: யாதானுமொரு பொய்யைச் சொல்லும் நூலும் தன்னை யெல்லாருங் கொண்டாடுவதற்காகத் துறந்தார் பெருமையை நன்கு மதித்துக் கூறும். அதனானே யானுஞ் சொல்லுகின்றேனென்பது.
பரிப்பெருமாள்: நூல்களின் துணிவு விழுப்பத்தின் பொருட்டு வேண்டும்.
பரிப்பெருமாள் விரிவுரை: யாதானுமொரு பொருளைச் சொல்லும் நூலும் தன்னை யெல்லாருங் கொண்டாடுவதற்காகத் துறந்தார் பெருமையை நன்கு மதித்துக் கூறும். அதனானே யானுஞ் சொல்லுகின்றேனென்பது. அன்றியும் ஒழுக்கத்தின் கண்ணே நின்று எல்லாப் பொருளையும் துறந்தாரது பெருமையாவது உயர்ச்சியிலே விரும்பி நடக்கின்ற நூல்களின் துணிந்தபொருள் என்றுமாம் என்றது எல்லாம் துறந்தார்க்குப் பெருமையாவது அவரது தன்மை. அதனைத் தத்துவ ஆராய்ச்சியின் நூல்களின் துணிந்த பொருள் எனின் அல்லது வேறொன்றனோடு உவமிக்கப்படாது என்றவாறு.
பரிதி: தாங்கள் கற்ற சாத்திரத்தின் பெருமையினால்.
காலிங்கர்: விரும்பி நின்றது மறை முதலாகிய எல்லா நூல்களிலும் ஆராய்ந்து துணிந்து நின்ற துணிவு நிலை.
பரிமேலழகர்: விழுமிய பொருள்கள் பலவற்றுள்ளும் இதுவே விழுமியது என விரும்பும் நூல்களது துணிவு.
பரிமேலழகர் விரிவுரை: 'பனுவல்' எனப் பொதுபடக் கூறிய அதனான் ஒன்றையொன்று ஒவ்வாத சமய நூல்கள் எல்லாவற்றிற்கும் இஃது ஒத்த துணிவு என்பது பெற்றாம். செய்தாரது துணிவு பனுவல்மேல் ஏற்றப்பட்டது.

பழம் ஆசிரியர்களில் 'நூல்களின் துணிவு விழுப்பத்தின் பொருட்டு வேண்டும்' என்று மணக்குடவரும் 'உயர்ச்சியிலே விரும்பி நடக்கின்ற நூல்களின் துணிந்தபொருள்கள்' என்று பரிப்பெருமாளும் கூறினர். பரிதி 'தாங்கள் கற்ற சாத்திரத்தின் பெருமையினால்' என்றார். பெருமை ஒருவரது ஒழுக்கத்தான் அமையுமேயல்லாமல் கற்ற நூலின் பெருமையால் அமையா தாதலால் பரிதி உரை பொருத்தமில்லை. மேலும் அவர் கற்றிருக்க வேண்டும் என்பதுமில்லை. 'விரும்பி நின்றது மறை முதலாகிய எல்லா நூல்களிலும் ஆராய்ந்து துணிந்து நின்ற துணிவு நிலை' என்பது காலிங்கர் காணும் உரை. பரிமேலழகர் 'விழுமிய பொருள்கள் பலவற்றுள்ளும் இதுவே விழுமியது என விரும்பும் நூல்களது துணிவு' என்றார். மணக்குடவரின் குறிப்புரை அவரது வழக்கத்துக்கு மாறான கருத்தாகத் தோன்றுவதாலும் குறளாசிரியருக்கே சிறுமை சேர்க்குமாறு பொருள் கொள்ள இடமிருப்பதாலும் அது இடைச்செருகலாக இருக்கலாம் எனக் கருதுவர்.

இன்றைய ஆசிரியர்கள் 'நூல்கள் ஒருமுகமாகப் பாராட்டும் பெருமை', 'நூல்களினது துணிவு மேன்மையினால் பாராட்டும்', 'போற்றுவது நன்மை தரக்கூடியது. அதை முதலில் சொல்ல வேண்டும்', 'நூல்கள் பலவும் முடிவாக, மேலானவற்றுள் மேலானதாக விரும்பி எடுத்து மொழிகின்றன' என்றபடி இப்பகுதிக்கு பொருள் உரைத்தனர்.

விழுமங்களை விரும்பும் நூல்கள் முடிவு கொள்ளும் என்பது இத்தொடரின் பொருள்.

நிறையுரை:
ஒழுக்கத்திற்காகத் தன்னலம் நீத்தாரது பெருமை மேலானவற்றில் மேலானது என்பதற்காக நூல்கள் அதை விரும்பிப் போற்றும்.

ஒழுக்கத்திற்காக நீத்தார் பெருமையே விருப்பமான விழுப்பம் என பனுவல் முடிவு கொள்ளும் என்பது பாடல் கருத்து.
எந்தப் பனுவல்' சொல்லப்பட்டது?

ஒழுக்கத்து என்ற சொல்லுக்கு ஒழுக்கத்தின் பொருட்டு அதாவது ஒழுக்கத்திற்காக என்பது பொருள்.
நீத்தார் என்ற சொல் பற்றுக்களை நீத்தவர் அதாவது துறந்தவர் என்ற பொருள் தருவது.
பெருமை என்ற சொல்லுக்கு சிறப்பு என்று பொருள்.
விழுப்பத்து என்ற சொல் மேலானவற்றுள் மேலானதாக இருப்பதற்காக என்ற பொருள் தரும்.
வேண்டும் என்றது விரும்பி என்ற பொருளது.
துணிவு என்ற சொல் முடிவு எனப் பொருள்படும். [இங்கு (புகழ்ந்து கூற) முடிவு கொள்கிறது என அமையும்.]

ஒழுக்கமான வாழ்வு நடத்த வேண்டும் என்பதற்காக தன்னலம் துறந்தவரது பெருமையை நூல்கள் விருப்பமான விழுப்பமாகக் கொள்ளும்.

இக்குறளுள் காணப்படும் 'ஒழுக்கத்து நீத்தார்' என்ற சொற்றொடர் நீத்தாருக்கான வரையறையைச் சொல்வதுபோல் அமைந்துள்ளது. இத்தொடரை விளக்குவதில் தொல்லாசியரகள் அனைவரும் மாறுபடுகின்றனர். பரிமேலழகர் உரை வள்ளுவத்திற்கு ஒவ்வாத வருணாசிரமம் தழுவியது ஆதலால் கருதற்குரியது அல்ல. மற்றவர்கள் வழி மூன்று விளக்கங்கள் கிடைக்கின்றன:
ஒன்று மணக்குடவரது. 'ஒழுக்கத்தின் பொருட்டு எல்லாப் பொருளையுந் துறந்தார்' என்பது. இது ஒழுக்கத்திற்காக நீத்தார் எனப் பொருள்படுவது. இரண்டாவது பரிதி கூறும் 'ஐம்புலன்களை அடக்கின ஒழுக்கத்தினோர்' என்றது. மூன்றவதாக காலிங்கர் ''தாம் முன்னம் ஒழுகிய ஒழுக்கத்தினைப் பின்பு துறவு நெறி சொல்லுகின்ற ஒழுக்கத்தின்கண்ணே தாற்பரித்து விட்டு நீங்கினார்'' அதாவது துறவறநெறி கருதி முன்னே ஒழுகிய ஒழுக்கத்திலிருந்து நீங்கினார்' என்பது. இதை முன்னர் ஒழுகிய ஒழுக்கமான இல்லற ஒழுக்கத்திலிருந்து நீத்தார் என விளக்குவர். பரிதி உரை முற்றும் துறந்த முனிவர் என்ற பொருள் தருகிறது. காலிங்கர் பொருள் இல்லறத்தை முற்றிலும் நீங்கியவர் என்ற கருத்துத் தருவது. பனுவல்கள இல்லறநெறி நின்றோரையும் போற்றும் என்பதாலும் அறன் எனப்பட்டதே இல்வாழ்க்கை என்பது வள்ளுவர் கருத்தாதலாலும் பரிதி, காலிங்கர் ஆகியோர் உரை இத்தொடரின் பொருளுக்கு ஓரளவே பொருந்தி வருகிறது. சி இலக்குவனார் உரை ''நல் ஒழுக்கம் உடையவராய்த் தம் நலம் துறந்தார்' என்கிறது.
அனைத்து உரைகளையும் கலந்து நோக்கும்போது நீத்தார் என்பவர் 'ஒழுக்கத்தின் பொருட்டு தந்நலம் நீத்தார்' என்றாகிறது. மணக்குடவர் கூற்றை ஒட்டி 'இல்லறத்திலிருந்து உலகியல் பற்றுநீங்கி வாழ்பவர்' எனப் பொருள் கொள்வது பொருத்தமாகலாம். தன்னலம் நீக்கியவர்களையே நீத்தார் என்ற சொல் குறிக்கிறது. தியாகி என்ற பொருளும் நீத்தார் என்ற சொல்லுக்குப் பொருந்தி வரும். இங்கு சுட்டப்படும் துறந்தவர், அறவழியில் நாட்டம் கொண்டு, ஒழுக்கமாக வாழவேண்டும் என்ற உறுதியுடன் தந்நலம் நீக்கி இல்லறத்தின் கண் நின்று ஒழுகுபவர் ஆவர். அவர்கள் அறநெறி நின்று வாழ்வின்பம் துய்த்து, வாழ்வும் மனமும் பக்குவமெய்திய பின்னர், தந்நலம் துறக்கும் தூயவர்கள். இவர்களே ஒழுக்கத்து நீத்தார். இவர்கள் பற்றியதே இவ்வதிகாரம்.

ஒழுக்கத்து நீத்தாரை தெ பொ மீ நிறைமனிதர்கள் என்றும் அறத்தின் கருத்துருவங்கள் எனவும் குறிக்கிறார். மானிட உயர்வை அடையச் செல்லும் பாதையில் உள்ளவர்கள் இவர்கள். அறநெறி சார்ந்த வாழ்வியலுக்கு இவர்கள் உயர்ந்த எடுத்துக்காட்டாக விளங்குவர். இத்தகைய நீத்தார் சிறப்பு பொறியடக்கம், தவம் இவற்றால் உண்டாவது. தந்நலம் நீக்கி, ஐம்புலனடக்கி, தவ வாழ்க்கையில் சமுதாயத்தின் வாழ்க்கைச் சிறப்பிற்காகவே வாழும் நீத்தார்களின் பெருமையை பனுவல்கள் விரும்பும் என்கிறது இக்குறள். அற நெறிகளில் ஒழுகி செயற்கரிய செய்யும் இப்பெரியவர்களின் பெருமையை அது மேலானவற்றில் மேலானது என்பதற்காகக் காலங்களைத் தாண்டி நிலைத்து நிற்கும் நூல்கள் விரும்பிப் பாடும் என்பது செய்தி.

எந்தப் 'பனுவல்' சொல்லப்பட்டது ?

பனுவல் என்ற சொல்லுக்கு நூல் என்பது பொருள்.
இங்கே பனுவல்களின் துணிவு இதுவென்று அறுதியிட்டுக் கூறுகிறார் வள்ளுவர். அப்பனுவல்களை வள்ளுவர் ஆய்ந்தறிந்த பின்னரே இவ்வாறு கூறுகின்றார் என்பது தெளிவு. பல வகையான நூல்கள் இருப்பினும், பனுவல் என்ற சொல் மெய்யறிவு நூல் அல்லது அறநூலையே சிறப்பாகக் குறிக்கும் என்பர். இது மக்களுக்கு வழிகாட்டுவதாக இருக்கும். பனுவல் என்பது கல்வி, கேள்வி, அறிவு,ஒழுக்கம், அனுபவம் முதலியவற்றில் முதிர்ந்த புலவரால் செய்யப்பட்டு அவை பின்வரும் சந்ததியினருக்கும் பயன்படுமாறு இருக்கும் என்பார் திரு வி.க. பனுவல்கள் எல்லாம் மனிதவாழ்வின் விழுமங்கள் பற்றி மிகையாகப் பேசும். எல்லா விழுப்பங்களையும் ஆயும் பனுவல்கள், சிறந்த விழுமம் நீத்தார் பெருமையே என்று முடிவு கொள்ளும் என்கிறது இக்குறட்பா.

ஒழுக்கத்திற்காக நீத்தார் பெருமையை விருப்பமான விழுப்பம் என நூல்கள் முடிவு கொள்ளும் என்பது இக்குறட்கருத்து.



__________________
Page 1 of 1  sorted by
 
Quick Reply

Please log in to post quick replies.



Create your own FREE Forum
Report Abuse
Powered by ActiveBoard