பொழிப்பு:சுவை ஒளி ஊறு ஓசை நாற்றம் என்று சொல்லப்படும் ஐந்தன் வகைகளையும் ஆராய்ந்து அறிய வல்லவனுடைய அறிவில் உள்ளது உலகம்.
மணக்குடவர் உரை: சுவை முதலாகக் கூறிய வைந்து புலன்களின் வகையை யாராய்வான் கண்ணதே யுலகம். எனவே, இவற்றின் காரியம் வேறொன்றாகத் தோன்றுமன்றே அதனை அவ்வாறு கூறுபடுத்துக் காணக் காரணந் தோற்றுமாதலால், காரியமான வுலகம் அறிவான் கண்ணதா மென்றவா றாயிற்று.
பரிமேலழகர் உரை: சுவை ஒளி ஊறு ஓசை நாற்றம் என்ற ஐந்தின் வகை - சுவையும், ஒளியும், ஊறும், ஓசையும், நாற்றமும் என்று சொல்லப்பட்ட தன் மாத்திரைகள் ஐந்தனது கூறுபாட்டையும்; தெரிவான்கட்டே உலகு - ஆராய்வான் அறிவின்கண்ணதே உலகம். (அவற்றின் கூறுபாடு ஆவன :பூதங்கட்கு முதல் ஆகிய அவைதாம் ஐந்தும், அவற்றின்கண் தோன்றிய அப்பூதங்கள் ஐந்தும், அவற்றின் கூறு ஆகிய ஞானேந்திரியங்கள் ஐந்தும், கன்மேந்திரியங்கள் ஐந்தும் ஆக இருபதும் ஆம். 'வகைதெரிவான் கட்டு' என உடம்பொடு புணர்த்ததனால், தெரிகின்ற புருடனும், அவன் தெரிதற் கருவிஆகிய மான் அகங்கார மனங்களும், அவற்றிற்கு முதல் ஆகிய மூலப்பகுதியும் பெற்றாம். தத்துவம் இருபத்தைந்தனையும் தெரிதல் ஆவது, மூலப்பகுதி ஒன்றில் தோன்றியது அன்மையின் பகுதியே ஆவதல்லது விகுதி ஆகாது எனவும், அதன்கண் தோன்றிய மானும், அதன்கண் தோன்றிய அகங்காரமும், அதன்கண் தோன்றிய தன் மாத்திரைகளும் ஆகிய ஏழும், தத்தமக்கு முதலாயதனை நோக்க விகுதியாதலும் , தங்கண் தோன்றுவனவற்றை நோக்கப் பகுதியாதலும் உடைய எனவும், அவற்றின்கண் தோன்றிய மனமும், ஞானேந்திரியங்களும், கன்மேந்திரியங்களும், பூதங்களும் ஆகிய பதினாறும் தங்கண் தோன்றுவன இன்மையின் விகுதியே ஆவதல்லது பகுதி ஆகா எனவும், புருடன், தான் ஒன்றில் தோன்றாமையானும் தன்கண் தோன்றுவன இன்மையானும் இரண்டும் அல்லன் எனவும், சாங்கிய நூலுள் ஓதியவாற்றான் ஆராய்தல். இவ் விருபத்தைந்துமல்லது உலகு எனப் பிறிதொன்று இல்லை என உலகினது உண்மை அறிதலின், அவன் அறிவின்கண்ண தாயிற்று. இவை நான்கு பாட்டானும் பெருமைக்கு ஏது ஐந்து அவித்தலும், யோகப் பயிற்சியும், தத்துவ உணர்வும் என்பது கூறப்பட்டது.)
சி இலக்குவனார் உரை: சுவை,ஒளி,ஊறு,ஓசை,நாற்றம் என்று கூறப்படும் ஐவகைப் புலன்கள் பற்றியும் அறிவான்பால்பட்டது உலகு.
பொருள்கோள் வரிஅமைப்பு: சுவைஒளி ஊறுஓசை நாற்றமென்று ஐந்தின் வகை தெரிவான் கட்டே உலகு.
இப்பகுதிக்குத் தொல்லாசிரியர்கள் உரைகள்: மணக்குடவர்: சுவை முதலாகக் கூறிய வைந்து புலன்களின் வகையை; பரிதி: ஐம்புலன்வழியே மனசு போகாமற் காக்கும்; காலிங்கர்: இவை ஐந்தினது கூறுபாட்டையும்; பரிமேலழகர்: சுவையும், ஒளியும், ஊறும், ஓசையும், நாற்றமும் என்று சொல்லப்பட்ட தன்மாத்திரைகள் ஐந்தனது கூறுபாட்டையும்;
ஐம்புலன்களான சுவை, ஒளி, ஊறு, ஓசை, நாற்றம் இவற்றின் கூறுபாட்டை என்று தொல்லாசிரியர்கள் இப்பகுதிக்கு உரை கூறினர்.
இன்றைய ஆசிரியர்கள் 'சுவை,ஒளி,ஊறு,ஓசை,மணம் என்ற ஐவகைகளை', 'சுவை,ஒளி,ஊறு,ஓசை,நாற்றம் என்னும் ஐவகைகளை', 'சுவை,ஒளி,ஊறு,ஓசை,நாற்றம் என்ற ஐந்து உணர்ச்சிகளையும் அவற்றைப்பற்றிய உண்மைகளையும்', 'ஐம்பூதங்களுக்கு மூலமாகிய சுவை,ஒளி,ஊறு,ஓசை,மணம் என்பனவற்றின் தோற்றுவாயினை', என்ற பொருளில் இப்பகுதிக்கு உரை தந்தனர்.
'நாக்கின் சுவை, கண்ணின் காட்சி, உடல் தீண்டும் உணர்ச்சி, காதில் கேட்கும் ஓசை, மூக்கில் முகரும் மணம் என்ற ஐந்து புலன்களின் கூறுபாடுகளை' என்பது இத்தொடரின் பொருள்.
இத்தொடர்க்குத் தொல்லாசிரியர்கள் உரைகள்: மணக்குடவர்: யாராய்வான் கண்ணதே யுலகம். மணக்குடவர் கருத்துரை: எனவே, இவற்றின் காரியம் வேறொன்றாகத் தோன்றுமன்றே அதனை அவ்வாறு கூறுபடுத்துக் காணக் காரணந் தோற்றுமாதலால், காரியமான வுலகம் அறிவான் கண்ணதா மென்றவா றாயிற்று. பரிப்பெருமாள்: இது உலகினும் பெரியர் என்றது. பரிதி: அவர்களிடத்திலேயே பெரியோரிருப்பர் என்றவாறு. காலிங்கர்: உள்ளபடி ஆராய்ந்து அறிவான் கண்ணதே உலகம் என்றவாறு. பரிமேலழகர்: ஆராய்வான் அறிவின்கண்ணதே உலகம். பரிமேலழகர் விரிவுரை: அவற்றின் கூறுபாடு ஆவன :பூதங்கட்கு முதல் ஆகிய அவைதாம் ஐந்தும், அவற்றின்கண் தோன்றிய அப்பூதங்கள் ஐந்தும், அவற்றின் கூறு ஆகிய ஞானேந்திரியங்கள் ஐந்தும், கன்மேந்திரியங்கள் ஐந்தும் ஆக இருபதும் ஆம். 'வகைதெரிவான் கட்டு' என உடம்பொடு புணர்த்ததனால், தெரிகின்ற புருடனும், அவன் தெரிதற் கருவிஆகிய மான் அகங்கார மனங்களும், அவற்றிற்கு முதல் ஆகிய மூலப்பகுதியும் பெற்றாம். தத்துவம் இருபத்தைந்தனையும் தெரிதல் ஆவது, மூலப்பகுதி ஒன்றில் தோன்றியது அன்மையின் பகுதியே ஆவதல்லது விகுதி ஆகாது எனவும், அதன்கண் தோன்றிய மானும், அதன்கண் தோன்றிய அகங்காரமும், அதன்கண் தோன்றிய தன் மாத்திரைகளும் ஆகிய ஏழும், தத்தமக்கு முதலாயதனை நோக்க விகுதியாதலும் , தங்கண் தோன்றுவனவற்றை நோக்கப் பகுதியாதலும் உடைய எனவும், அவற்றின்கண் தோன்றிய மனமும், ஞானேந்திரியங்களும், கன்மேந்திரியங்களும், பூதங்களும் ஆகிய பதினாறும் தங்கண் தோன்றுவன இன்மையின் விகுதியே ஆவதல்லது பகுதி ஆகா எனவும், புருடன், தான் ஒன்றில் தோன்றாமையானும் தன்கண் தோன்றுவன இன்மையானும் இரண்டும் அல்லன் எனவும், சாங்கிய நூலுள் ஓதியவாற்றான் ஆராய்தல். இவ் விருபத்தைந்துமல்லது உலகு எனப் பிறிதொன்று இல்லை என உலகினது உண்மை அறிதலின், அவன் அறிவின்கண்ண தாயிற்று. இவை நான்கு பாட்டானும் பெருமைக்கு ஏது ஐந்து அவித்தலும், யோகப் பயிற்சியும், தத்துவ உணர்வும் என்பது கூறப்பட்டது. [ஞானேந்திரியங்கள்-அறிகருவிகள்: காது, உடம்பு, கண், நாக்கு, மூக்கு. கன்மேந்திரியங்கள்- தொழிற்கருவிகள்: வாய், கால், கை, குதம், குறி.]
'ஆராய்வான் கண்ணதே யுலகம்' 'உள்ளபடி ஆராய்ந்து அறிவான் கண்ணதே உலகம்' 'ஆராய்வான் அறிவின்கண்ணதே உலகம்' என்றபடி பழம் ஆசிரியர்கள் பொருள் உரைத்தனர்.
இன்றைய ஆசிரியர்கள் 'அறிந்தவன் வசம் உலகம்', 'ஆராய்வான் எல்லைக்குட்பட்டது உலகம்', 'அறிந்து அவற்றை வசப்படுத்திய பெரியோரைத்தான் உலகத்தில் அறிவுடையோர் போற்றி வந்திருக்கிறார்கள்', 'அறியவல்லவனது அறிவின்கண் உலகத்தினியல்பு அமைந்துள்ளது. (அவற்றை அறிய வல்லவனே உலகத்தில் உண்மை இயல்பை உணர்ந்தவனாவான் என்பதாம். உலகம் ஐபூதத்தின் அமைப்பு ஆதலாலும், ஐம்பூதத்தின் மூலங்களையும் அவற்றின் ஆதிக்காரணத்தினையும் அறிந்தவர் உலக அமைப்பின் உண்மையுணர்ந்தவராவர். மற்றையோர்க்கு உலகத்தின் மெய் இயல்பு விளங்காதென்றவாறு.) ' என்றபடி இப்பகுதிக்கு பொருள் உரைத்தனர்.
'ஆராய்ந்து அறிவான் வசம் உலகம்' என்பது இத்தொடரின் பொருள்.
நிறையுரை: ஐம்புலன்களின் கூறுபாடுகளைத் தெரிந்த நீத்தார் இவ்வுலகத்தை இயக்குவர் என்னும் பாடல்.
சுவை, ஒளி, ஊறு, ஓசை, நாற்றம் இவ்வைந்தின் வகை தெரிவான் வசம் உலகம் என்பது பாடலின் கருத்து. இக்குறட்கருத்து சாங்கிய நெறி கூறுவதை ஆராய்வதா?
சுவை ஒளி ஊறு ஓசை நாற்றம் என்றதற்கு உண்டல், காணல், மெய்உறுதல், கேட்டல், முகர்தல் என்பது பொருள். என்றைந்தின் என்ற தொடர் என்று கூறப்படும் ஐந்தைப் பற்றிய எனப் பொருள் தரும். வகை என்னும் சொல்லுக்கு கூறுபாடு அல்லது தன்மை என்று பொருள். தெரிவான் கட்டே என்ற தொடர் 'ஆராய்ந்து தெளிந்தவன் கண்ணே' என்ற பொருளது. உலகு என்ற சொல் உலகம் குறித்தது.
சுவை, ஒளி, ஊறு, ஓசை, மணம் என்று கூறப்படும் ஐவகைப் புலன்கள் பற்றியும் அறிந்த நீத்தாரிடத்தேதான் உலகியக்கம் அடங்கியுள்ளது.
சுவை ஒளி ஊறு ஓசை நாற்றம் என்னும் ஐவகையாகவே உலகம் உணரப்படுதலாலும் அவைகளே உலக அனுபவத்திற்குக் காரணம் ஆதலாலும் ஐம்புலன்களின் வகை தெரிதல் சொல்லப்பட்டது. இவ்வைந்தைப் பற்றிய உண்மைகளையும் கூறுகளையும் தெரிந்தவனே 'ஐந்தின் வகை தெரிவான்'. அவன் கண் உலகு நிற்கும் என்கிறது இப்பாடல். சுவைத்தல், காண்டல், மெய்உறுதல், செவிகேட்டல், முகர்தல் என்ற ஐந்து புலன்களின் இயல்புகளையும், அவைகளுடைய உணர்ச்சிகளையும் அந்த வகைகளைச் சேர்ந்த தத்துவங்களையும் தெரிந்து, இன்னின்ன பொறிகளை இவ்விதமாக அடக்கி ஆண்டால் இன்னின்ன ஆற்றல் கிடைக்கும் என்பதைக் கடைப்பிடித்து நடந்து தவவலிமையும் ஆன்மபலமும் அடைந்தவர்கள்தாம் 'நீத்தார்' என்று சொல்லப்படுபவர். அதாவது நீத்தார் என்பவர்கள் ஐம்புலன்களைப் பற்றிய உண்மைகள் யாவற்றையும் அறிந்தவர்கள் ஆவர். ஐம்புலன்களின் கூறுபாட்டையும் ஆராய்ந்தவர் இவ்வுலக இயல்பையும் உடல் இயல்பையும் உள்ளவாறு அறிந்தவர். அவ்வாறு அறிந்தவரே நீத்தார் ஆவார். இவர்கள் கல்வி கேள்விகளால் தோட்கப்பட்ட செவி உடையவர்களாகவும் கண்ணோட்டமுள்ள கண் உடையவர்களாகவும் நாவடக்கம் உடைய நா உடையவர்களாகவும் நாறும் மணமுள்ளதையே முகரும் மூக்கு உடையவர்களாகவும் மலரினும் மெல்லிது என்ற உணர்வுடன் காமம் துய்த்து அதன் செவ்வி தலைப்பட்டவர்களாகவும் திகழ்வர். அவர்களே தந்நலம் அழித்து, உலகோர் நலம் பேணும் மாந்தநேயம் கொண்டவர்களாகவும் வாழ்ந்து சிறப்புப் பெறுபவர்கள்.
அறிவுடையோர், நல்லோர், அறிவிலார், கயவர் போன்ற முரண்பட்டோர் கலந்திருக்கும் இவ்வுலகம் எப்படி நிலைக்கிறது என்று ஆராய்கிறார் வள்ளுவர். அதன் முடிவாக, அறம் செய்வார், அரசியல் புரிவார், செல்வர் - இவர்கள் கண்ணது உள்ளது என்று சொல்லவில்லை; உலகம் சுவை, ஒளி, ஊறு,ஓசை, நாற்றம் என்ற ஐம்புலன்களின் தன்மைகளை உணர்ந்து, அவற்றின் அடிப்படைகள் மற்றும் பயன்களை உலகத்துக்குத் தருகிற ஐந்தின் வகைதெரிவான் கண் உலகம் உள்ளது என்று சொல்கிறார். பயன்களை உலகிற்குத் தரும் என்பதால் அந்த ஆய்வறிஞன் அறிவியல் அறிஞன் மட்டுமல்லாமல் உலக நன்மைக்காக எந்த வகையிலும் பாடுபடுவனையும் குறிக்கும். உலக இயக்கம் புலன் ஒழுக்கம் உடைய நீத்தாரிடத்து உள்ளது என்பது இதன் கருத்து. புலனடக்கம் தந்நலம் நீக்கத் துணை செய்கிறது. தந்நலம் நீத்தவர்களாலேயே உலகை மேம்பாடு அடையச் செய்யமுடியும். உலக முன்னேற்றத்தின் உருவாக்கத்திற்கு நீத்தார் பங்களிப்பு பெரிது. உலகப் பெரியார்களெல்லாம் ஐம்புலன்களின் தன்மையை உணர்ந்து நடந்து பெருமை பெற்றவரேயாவர்.
ஐந்தின் வகைதெரிவான் என்பது சாங்கியநெறியில் கண்ட அறிவை ஆராய்வதா?
சுவைகளையும் அதன் வகைகளையும் அவற்றை ஆராயும் முறையையும் சாங்கிய நூலின் கருத்து என்று சொன்னவர் பரிமேலழகர். இக்குறளில் கூறப்படும் ஐந்தின் வகைதெரிவான் என்றதை சாங்கியநெறியில் கண்ட அறிவை ஆராய்வதோடு தொடர்புபடுத்தினார் இவர். அதை விளக்கும் வகையில் தனது உரையில் நெடிய விளக்கம் தருகிறார். 'ஐந்தின் வகை' என்ற தொடர்க்கும் 'தெரிவான்' என்ற சொல்லுக்கும் சிறப்புப் பொருள் கூறுமிடத்தில் பரிமேலழகர் சாங்கிய தத்துவச் சிந்தனையிலிருந்து மேற்கோள் காட்டுகிறார். சாங்கியம் என்பது ஒரு பழம் தத்துவநெறி. இந்தியாவில் தோன்றிய பல்வேறு தத்துவக் காட்சிகளும் சாங்கியத்தின் அடித்தளத்தின் மேல்தான் நிற்கின்றன என்பர். 'இவ்வையம் எவ்வாறு தோன்றியது? உயிர்களின் தன்மைகள் யாவை? வாழ்க்கைப் பயணம் எங்கே முடிகிறது? ஆன்ம விடுதலைக்கு வழி என்ன?' என்ற கேள்விகளுக்கு முதன்முதல் விளக்கம் காண முற்பட்ட மெய்யியல்நெறி சாங்கியம் ஆகும். இது சாங்கியம் -(ஸேச்சுர சாங்கியம்) கடவுட் கொள்கை உடையது, (நிரீசுவர சாங்கியம்) கடவுள் கொள்கை இல்லாதது என இருவகைப்படும். இரண்டினது ஆசிரியர் பெயரும் கபிலர் என்பதுவே. பரிமேலழகர் இங்கு எடுத்துக்காட்டுவது கடவுட்கொள்கை இல்லாத சாங்கியமாகும் (தண்டபாணி தேசிகர்). அது இருபத்தைந்து தத்துவங்களை உடையது. சுருக்கமாகச் சொல்வதானால் நிலம், நீர், தீ, காற்று, விண் என்ற பூதங்கள் ஐந்தும், நாற்றம், சுவை, ஒளி, ஊறு, ஓசை என்ற புலன்கள் ஐந்தும், மெய், வாய்,கண், மூக்கு, செவி என்ற பொறிகள் (அறிகருவிகள்) ஐந்தும், வாக்கு, கை, கால், மலம், சிறுநீர் விடும் வழிகள் இரண்டுமான தொழிற்கருவிகள் ஐந்தும் இவற்றினால் பிறக்கும் மனம், புத்தி, சித்தம் அகங்காரம் என்ற மூலப்பகுதிகள் நான்கும், அதற்குமேல் மான் என்றதையும், எப்படி இவை உடலாக, உலகமாகக் காட்சியளிக்கின்றன என்பதை விளக்குவது சாங்கியமாகும். பரிமேலழகர் இவ்விதம் சாங்கிய நெறியை விளக்கிய பின்னர் 'நீத்தார் தத்துவப் பயிற்சி உடையவராக இருக்க வேண்டும்' என்று இக்குறளுக்கான உரையை முடிக்கிறார். பொறி-புலன் முதலானவற்றைப் பற்றி குறளில் பலவிடங்களில் சொல்லப்பட்டுள்ளதால், பரிமேலழகர் இவ்வகைகளைக் கூறும் சாங்கிய சிந்தனையைக் கூறியிருக்கலாம். ஆராய்தல் என்பதை விளக்கும் முகத்தான் சாங்கியநெறி பரிமேலழகர் உரையில் சொல்லப்படுகிறது. குறளில் எங்கும் சாங்கியநெறி பற்றிக் குறிப்பில்லை. எனவே இக்குறளில் சாங்கிய நெறி சுட்டப்பெற்றுள்ளது என்றோ வள்ளுவருக்குச் சாங்கியம் உடன்பாடு என்றோ 'ஐந்தின் வகைதெரிவான்' என்பது சாங்கியநெறியில் கண்ட அறிவை ஆராய்தல் என்றோ முடிவு கட்டவேண்டியதில்லை.
ஐம்புலன்களின் உண்மைநிலையை ஆய்ந்து அறிந்து அளவோடு ஆள்பவன் கண் உலகமே அடங்கும் என்பது இக்குறளின் கருத்து.