Devapriyaji - True History Analaysed

Members Login
Username 
 
Password 
    Remember Me  
Post Info TOPIC: 29 குணமென்னும் குன்றேறி நின்றார் வெகுளி கணமேயும் காத்தல் அரிது


Guru

Status: Offline
Posts: 7468
Date:
29 குணமென்னும் குன்றேறி நின்றார் வெகுளி கணமேயும் காத்தல் அரிது
Permalink  
 


குணமென்னும் குன்றேறி நின்றார் வெகுளி
கணமேயும் காத்தல் அரிது

(அதிகாரம்:நீத்தார் பெருமை குறள் எண்:29)

பொழிப்பு: நல்ல பண்புகளாகிய மலையின்மேல் ஏறிநின்ற பெரியோர், ஒரு கணப்பொழுதே சினம் கொள்வார் ஆயினும் அதிலிருந்து ஒருவரைக் காத்தல் அரிதாகும்.

மணக்குடவர் உரை: குணமாகிய மலையை மேற்கொண்டு நின்றார்மாட்டு உளதாகிய வெகுளியால் வருந்தீமையைச் சிறிது பொழுதாயினும் வாராமற் காத்தலரிது.
நகுஷன் பெரும்பாம்பாயினன். இது வெகுளி பொறுத்தலரிதென்றது.

பரிமேலழகர் உரை: குணம் என்னும் குன்று ஏறி நின்றார் வெகுளி - துறவு, மெய்யுணர்வு, அவாவின்மை முதலிய நற்குணங்கள் ஆகிய குன்றின் முடிவின்கண் நின்ற முனிவரது வெகுளி; 'கணம் ஏயும்' காத்தல் அரிது - தான் உள்ள அளவு கணமே ஆயினும், வெகுளப்பட்டாரால் தடுத்தல் அரிது.
(சலியாமையும், பெருமையும் பற்றிக் குணங்களைக் குன்றாக உருவகம் செய்தார். குணம் சாதியொருமை. அநாதியாய் வருகின்றவாறு பற்றி ஒரோ வழி வெகுளி தோன்றியபொழுதே அதனை மெய்யுணர்வு அழிக்கும் ஆகலின்,கணம் ஏயும் என்றும், நிறைமொழி மாந்தர் ஆகலின், 'காத்தல் அரிது' என்றும் கூறினார். இவை இரண்டு பாட்டானும் அவர் ஆணை கூறப்பட்டது.)

குன்றக்குடி அடிகளார் உரை: நற்குணம் என்னும் குன்றின் மீது ஏறி நின்றவர்கள் வெகுளியை ஒரு நொடியும் பேணிக் காக்க மாட்டார்கள். அதாவது வெகுளியை ஒரு பொருளாகக் கொள்ள மாட்டார்கள். அவர்கள் வெகுளல் அரிது. ஒரொவழி, வெகுண்டாலும் உடன் மாறும் என்பதாம்.

பொருள்கோள் வரிஅமைப்பு:
குணமென்னும் குன்றேறி நின்றார் வெகுளி கணமேயும் காத்தல் அரிது.


குணமென்னும் குன்றேறி நின்றார்:
பதவுரை: குணம்-நற்பண்பு; என்னும்-என்கின்ற; குன்று-சிறுமலை; ஏறி-ஏறி; நின்றார்-நின்றவர்.

இப்பகுதிக்குத் தொல்லாசிரியர்கள் உரைகள்:
மணக்குடவர்: குணமாகிய மலையை மேற்கொண்டு நின்றார்மாட்டு உளதாகிய;
பரிதி: சற்குணம் என்னும் மலையின் உச்சியிலே நின்றார்;
காலிங்கர்: ராசத தாமத சாத்துவிதம் என்கின்ற குணங்களும், காம வெகுளி மயக்கம் என்கின்ற குணவிகாரங்களும், அழல்சீதம் இடர் இன்பம் மானம் அவமானம் என்று எண்ணப்படுகின்ற குணம் அனைத்தின் தொகையுமாகிய குன்றைக் கடந்து வீட்டின்பத்து நிலைநின்றோராகிய நீத்தோரை;
பரிமேலழகர்: துறவு, மெய்யுணர்வு, அவாவின்மை முதலிய நற்குணங்கள் ஆகிய குன்றின் முடிவின்கண் நின்ற முனிவரது
பரிமேலழகர் விரிவுரை: சலியாமையும், பெருமையும் பற்றிக் குணங்களைக் குன்றாக உருவகம் செய்தார். குணம் சாதியொருமை.

பழைய ஆசிரியர்கள் குணம் என்கின்ற மலையில் நின்றார் என்று இப்பகுதிக்குப் பொருள் தந்தனர். காலிங்கரும் பரிமேலழகரும் குணம் குறித்தது என்ன என்பதற்கு விளக்கம் தந்தனர்.

இன்றைய ஆசிரியர்கள் 'குணக்குன்று போலும் சான்றோரின்', 'நற்பண்புகளாகிய மலையுச்சியில் நின்றவரது', 'நல்லியல்பு என்னும் மலையின் உச்சியில் நின்றவர்கட்கு', 'உயர்குணம் என்னும் மலையுச்சியில் ஏறி நின்றார்', என்ற பொருளில் இப்பகுதிக்கு உரை தந்தனர்.

குணமாகிய குன்றின்மேல் நின்றவர் என்பது இப்பகுதியின் பொருள்.

வெகுளி கணமேயும் காத்தல் அரிது:
பதவுரை: வெகுளி-சினம்; கணமேயும்-நொடிப்பொழுதேனும்; காத்தல்-வைத்திருத்தல்; அரிது-அருமையானது.

இப்பகுதிக்குத் தொல்லாசிரியர்கள் உரைகள்:
மணக்குடவர்: வெகுளியால் வருந்தீமையைச் சிறிது பொழுதாயினும் வாராமற் காத்தலரிது.
மணக்குடவர் கருத்துரை: நகுஷன் பெரும்பாம்பாயினன். இது வெகுளி பொறுத்தலரிதென்றது.
பரிதி: கோபம் கணமேனுங் காக்கமாட்டார் என்றவாறு.
காலிங்கர்: மற்று அவ்வெகுளியானது தன்மாட்டுச் சிறுதுபொழுது நிறுத்திக்கொண்டு நிற்கமாட்டாது என்றவாறு.
பரிமேலழகர்: தான் உள்ள அளவு கணமே ஆயினும், வெகுளப்பட்டாரால் தடுத்தல் அரிது.
பரிமேலழகர் விரிவுரை: அநாதியாய் வருகின்றவாறு பற்றி ஒரோ வழி வெகுளி தோன்றியபொழுதே அதனை மெய்யுணர்வு அழிக்கும் ஆகலின்,கணம் ஏயும் என்றும், நிறைமொழி மாந்தர் ஆகலின், 'காத்தல் அரிது' என்றும் கூறினார். இவை இரண்டு பாட்டானும் அவர் ஆணை கூறப்பட்டது.

மணக்குடவர் சிறுபொழுதாயினும் வெகுளியால் உண்டாகும் தீமையை காத்தல் அரிது என்றார். இதை ஏற்ற பரிமேலழகர் கணமே ஆனாலும் வெகுளப்பட்டாரால் தடுத்தல் அரிது என்றார். பரிதியும் காலிங்கரும் கணப்போதும் நீத்தார் சினம் கொள்ளார் என்ற பொருளில் இப்பகுதிக்கு உரை நல்கினர்.

இன்றைய ஆசிரியர்கள் 'சினத்தைச் சிறுபொழுதும் யாரும் தாங்கமுடியாது', 'சினத்தை அச்சினத்திற் சிக்கியோரால் கணப்பொழுதும் தடுத்து நிறுத்துதல் இயலாது', 'சினமானது ஒரு கணப்பொழுதுதான் தோன்றும். அப்படித் தோன்றியபோது அதனைத் தடுத்தல் முடியாததே', 'சீற்றம் நிலைப்பது ஒரு நொடிதான் எனினும் அதன் ஆற்றலைத் தடுத்தல் இயலாது' என்றபடி இப்பகுதிக்கு பொருள் உரைத்தனர்.

ஒரு கணப்பொழுதும் வெகுளமாட்டார் என்பது இப்பகுதியின் பொருள்.

நிறையுரை:
குணத்தில் சிறந்த நீத்தார்க்கு ஒருகணம் கூட சினம் தோன்றுவதில்லை என்னும் குறள்.

குணக்குன்றாக இருப்பவர்கள் சினம் கணமேயும் காத்தல் அரிது என்பது இப்பாடலின் பொருள்.
தீய குணங்கள் பல இருக்கும்போது வெகுளி மட்டும் ஏன் இங்கு தனித்துப் பேசப்படுகிறது?

குணமென்னும் என்ற தொடர்க்கு குணம் என்ற என்பது பொருள்.
குன்றேறி நின்றார் என்ற தொடர் குன்றின் மேல் நின்றார் அதாவது உள்ளவர்கள் என்ற பொருள் தரும்.
வெகுளி என்ற சொல்லுக்கு சினம் என்று பொருள்.

நல்ல குணம் என்ற குன்றின்மேல் நிலைத்திருக்கும் நீத்தார்க்குச் சினமே வராது; வந்தாலும் அது கணநேரங்கூடத் தங்காது.

பண்புக் குன்றாக மாறிய நீத்தார் சினம் 'கணமேயும் காத்தல் அரிது' என்கிறது பாடல்.
'கணமேயும் காத்தல் அரிது' என்ற தொடர்க்கு சினத்தை ஒரு கணப்பொழுதேனும் தாங்கியிரார் என்றும் நீத்தாரால் வெகுளப்பட்டார் அச்சினத்தை ஒரு கணப்பொழுதேனும் தாங்கி நிற்கார் என்றும் இரு திறமாகப் பொருள் உரைக்கப்பட்டது.
கணம் என்பதன் பொருள் நொடிப்பொழுது ஆகும். காத்தல் என்பதற்கு பாதுகாத்தல், தாங்குதல், பேணுதல், அல்லது வைத்திருத்தல் என்பது பொருள். கணமேயும் காத்தல் அரிது என்றது நொடிப்பொழுதுகூட தாங்கியிருத்தல் அல்லது தம்முள் நீடிக்கச் செய்வது கடினம் என்பதாகும்.
இத்தொடர் பற்றி பல விளக்கங்கள் இருக்கின்றன. அவை:
1. நீத்தார்க்கு சினம் வராது; வரினும் கணப்பொழுதுதான் நிற்கும். அது நிற்கும் நேரம் கணப்பொழுதேயாயினும் வெகுளப்பட்டார் அதைத் தடுத்துத் தம்மைக் காத்துக்கொள்ளுதல் அரிது. அகத்தியர் சாபத்தால் பாம்பாய் மாறிய நகுடன் வரலாறு கூறி இக்கருத்தை மணக்குடவர் தொடங்கி வைத்தார். பரிமேலழகர் அதைத் தழுவி உரை எழுதியதால் பின்வந்த பலரும் அதை ஏற்றுக் கொண்டனர். குணமென்னும் குன்றேறி நின்றாரது வெகுளியால் நேரும் கேட்டை ஒரு கணமேனும் பிறர் தாங்குதல் அரிது; எரிமலையொத்த அவர்கள் சினம் தடுக்கற்பாலது அன்று என்பது இவர்களது கருத்து.
2. இன்னும் சிலர், இக்குறள் துறவியை எச்சரிப்பது போலும் அமைந்துள்ளது; துறவிக்குச் சினம் வரக்கூடாது. வரின் அவரையே அது அழித்துவிடும்; துறவியர் சினம் கொள்வது கண நாழிகை என்றாலும் அவர் தம்மை அதனின்று காத்துக் கொள்ளுதல் அரிது என்று பொருள் கூறினர்.
3. குணமென்னும் குன்றேறி நின்றார்க்குத் தன்னலம் கருதி வெகுளி வருவதில்லை. பிறர் தீமை கண்டு அவரைத் திருத்துவதற்காக வெகுளி வருதல் உண்டு. அது பொழுது யாவராலும் தடுத்தற்கு இயலாது என்று மற்றும் சிலர் உரைத்தனர். இவற்றுள் எது சரி?
நீத்தாரால் வெகுளப்பட்டார் அச்சினத்தை ஒரு கணப்பொழுதேனும் தாங்கி நிற்கார் என்று கருதியவர்கள் துறவியும் வெகுள்வான் என்பது ஒன்னார்த் தேறலும் உவந்தாரை ஆக்கலும் எண்ணின் தவத்தான் வரும் (தவம் குறள் 264: பொருள்: அறத்திற்குப் பகையாய் உள்ளவரைத் தண்டித்துத் தொலைத்தலும் அறத்தை விரும்பியவரை உயர்த்தலும் ஆகிய இரண்டும் தவமுடையார் நினைப்பின் அவரது தவவலியால் நேரும்) என்னும் குறளால் பெறப்படுதல் காண்க எனச் சொல்லி நீத்தாரது வெகுளி நிற்கும் பொழுது கணமேயாயினும் பிறர் வெகுளி போலாது பிறரால் தாங்கற்கரிது என்று கூறுமுகத்தான் அவரது பெருமை உணர்த்தப்பட்டது எனவும் கூறுவர்.
குணமென்னும் குன்றேறி நின்றார்க்குத் தன்னலம் கருதி வெகுளி வருவதல்ல. பிறர் தீமை கண்டபோது அவரைத் திருத்துவதற்காக வெகுளி வருதல் உண்டு என்பர் இவர்கள்.

'குணம் என்னும் குன்று ஏறி நின்றார்' என்று சொல்லியபின், அவர்க்கு வெகுளி எப்பொழுதாவது எழுவதையும் கூறமாட்டார் வள்ளுவர். வெகுளி எழாமையே நீத்தாரது பண்பு.
தொன்மக் கதைகளில் வரும் ,'பிடி சாபம்!' என்று தம் தவ வலிமையால் பிறருக்கு ஊறு செய்யும், முனிவர்களைப் போல் அல்லாது, குணமென்னும் குன்று ஏறி நின்று, எழுந்த சினத்தைக் கணப் பொழுதும் தம் பால் தங்கவிடாது போக்கும் அருளாளரையே நீத்தார் என்பார் வள்ளுவர். வெகுளிக்கு வடிகாலாகச் சாபத்தைப் பயன் படுத்துவோர், 'குணம் என்னும் குன்று ஏறி நின்றார்' ஆதல் முடியாது.
காமமொடு கடுஞ்சினம் கடிந்த காட்சியர் அதாவது ஆசையையும் கடும் சினத்தையும் நீக்கிய ஞானம் உடையவர்கள் என்று நக்கீரர் சொன்னது போன்ற குணம் உடையவர்கள் பற்றியே இப்பாடல் பேசுகிறது. துறவிகள் சினம் கொண்டால் குன்றனைய நற்குணங்கள் யாவும் ஒரு கணப் பொழுதில் காணாமல் போய்விடும் என்பதுவே வள்ளுவர் கருத்தாக இருக்க முடியும்.
சினம் ஒரு தீயகுணம். அக்கொடிய குணத்தை, அது ஒரு கணமாக இருந்தாலும், அடக்கமுடியாதவரை, நீத்தார் என எப்படி அழைக்க முடியும்? சினத்தின் தன்மையைக் காட்டுவதற்காக இப்படிச் சொல்லியிருக்கலாம் என்றால் இக்குறள் வெகுளாமை என்னும் அதிகாரத்தில் வந்திருக்கவேண்டும். ஆனால் இது 'நீத்தார் பெருமை'யில் இருப்பதால் என்ன காரணத்திற்காக ஆனாலும் சினம் கொண்டவர் பெருமை பெறமுடியாது.
மேலும் 'ஒன்னார்த்தெறலும் உவந்தாரை யாக்கலும்' என்பது தவத்தின் பயன். அத்தவம் வெகுளாமையாகிய பொறையின் பயன். ஆகவே வெகுளி தோன்ற வேண்டிய இடத்தும் தோன்றாமையே நீத்தார்க்குப் பெருமை தருவது. அச்சினத்தை ஒரு கணப்பொழுதேனும் தாங்கி நிற்கார் என்பதல்ல இப்பாடலுக்கான பொருள். நீத்தார், சினத்தை ஒரு கணப்பொழுதேனும் கொள்ளார் என்பதே பொருள்.

தீய குணங்கள் பல இருக்கும்போது வெகுளி மட்டும் ஏன் இங்கு தனித்துப் பேசப்படுகிறது?'

சினம் கொண்டு சாபம் கொடுப்பது முனிவர்கள் பண்பு என்ற கருத்து உருவாகியிருக்கவேண்டும். அதை மறுப்பதற்கே வெகுளியைப் பற்றி இக்குறளில் வள்ளுவர் பேசுகிறார் என்று தோன்றுகிறது. இவர் நீத்தார்-இவர் நீத்தாரல்லர் என்பதை உணர்தற்கு வெகுளியே ஒரு உரைகல்லாக நின்று துணை செய்கிறது. எனவே அதை ஆசிரியர் சிறப்பாகக் குறித்தார் என்பார் திரு வி க.
இக்குறளின் கருத்து நீத்தாருக்குச் சினமே வராது; வந்தாலும் கணப்பொழுதில் நீங்கிவிடும் என்பது.
நல்ல பண்புகள் எல்லாம் நிறைந்து வாழும் நீத்தார் தீய பண்பு எதுவும் சிறுது நேரமும் இவர்களிடம் அணுகாதவாறு அவ்வளவு தூய்மை பெற்று விளங்குவார்கள். தடுப்பதற்கு அரிதாகிய வெகுளியும் இவர்களிடத்தில் எழாது. தீய இயல்புகளைக் கடந்து வளர்ந்து நற்குணங்களைப் பெற்று உயர்ந்து நிற்போர், இவர்கள் வெகுளியை ஒரு நொடியும் தம் நெஞ்சத்தில் நிலைபெறச் செய்யமாட்டார்.
'மற்ற எல்லாக் குற்றங்களையும் அடியோடு விலக்கிக் கடிந்த திருவள்ளுவர், சினத்தைத் தடுப்பது அருமை என்றும், சில வேளைகளில் தடுக்க முடியாதபடி தோன்றிவிடும் என்றும் உணர்ந்தே, அவ்வேளையிலும் கூடுமானால் சினம் கொள்ளாதிருப்பது நல்லது (புணரின் வெகுளாமை நன்று 308) என்று உணர்த்தியுள்ளார். கூடுமானால் (புணரின்) என்று விலக்கு அளிப்பது போல் கூறத்தக்க அருமைப் பாடு உடைய அந்த நற்பண்பும் இவர்களுக்கு எளிதாய் இயல்பாய் அமைந்துவிடும் என்று இங்கே கூறுகின்றார்' என்பது மு வரதராசன் கருத்து.

வெகுளியுடையவர் நீத்தார் அல்லர். வெகுளி சிறுதுடையாரும் ஒரோவழி எழுதலுடையாரும் கூட நீத்தாராகார். சினம் கொண்டு சாபம் வழங்குகின்ற முனிவர்கள் நீத்தாராகவே கருதப்படமாட்டர். வெகுளி முற்றிலும் அற்ற ஒருவரே நீத்தாரவர்; குறை கடந்தவராவர் வெகுளி தோன்ற வேண்டிய இடத்தும் தோன்றாமையே நீத்தார்க்குப் பெருமை தருவது. இக்கருத்துக்களைத் தெளிவாக்கவே இப்பாடல் படைக்கப்பட்டது.

குணமாகிய மலையின் மேல் நின்றவர் ஒரு கணப்பொழுதும் வெகுளமாட்டார் என்பது இக்குறட்கருத்து.



__________________
Page 1 of 1  sorted by
 
Quick Reply

Please log in to post quick replies.



Create your own FREE Forum
Report Abuse
Powered by ActiveBoard