Devapriyaji - True History Analaysed

Members Login
Username 
 
Password 
    Remember Me  
Post Info TOPIC: 37 அறத்தாறு இதுவென வேண்டா சிவிகை


Guru

Status: Offline
Posts: 7602
Date:
37 அறத்தாறு இதுவென வேண்டா சிவிகை
Permalink  
 


அறத்தாறு இதுவென வேண்டா சிவிகை
பொறுத்தானோடு ஊர்ந்தான் இடை

(அதிகாரம்:அறன் வலியுறுத்தல் குறள் எண்:37)

பொழிப்பு (மு வரதராசன்): பல்லக்கைச் சுமப்பவனும் அதன் மேலிருந்து ஊர்ந்து செல்லுவோனுமாகிய அவர்களிடையே அறத்தின் பயன் இஃது என்று கூறவேண்டா.

மணக்குடவர் உரை: நீங்கள் அறநெறி யித்தன்மைத்தென் றறிய வேண்டா, சிவிகைக் காவுவானோடு செலுத்துவானிடைக் காணலாம்.
இது பொன்றினாலுந் துணையாகுமோ என்றார்க்குத் துணையாயினவாறு காட்டிற்று.

பரிமேலழகர் உரை: அறத்து ஆறு இது என வேண்டா - அறத்தின் பயன் இது என்று யாம் ஆகம அளவையான் உணர்த்தல் வேண்டா; சிவிகை பொறுத்தானோடு ஊர்ந்தான் இடை - சிவிகையைக் காவுவானோடு செலுத்துவானிடைக் காட்சியளவை தன்னானே உணரப்படும்.
பயனை 'ஆறு' என்றார். பின்னது ஆகலின். 'என' என்னும் எச்சத்தால் சொல் ஆகிய ஆகம அளவையும், 'பொறுத்தானோடு ஊர்ந்தானிடை' என்றதனால் காட்சியளவையும் பெற்றாம். உணரப்படும் என்பது சொல்லெச்சம். இதனான் அறம் பொன்றாத் துணையாதல் தெளிவிக்கப்பட்டது.

குன்றக்குடி அடிகளார் உரை: சிவிகை ஊர்ந்து செல்வோன் - தூக்கிச் செல்வோனிடையில் உள்ள வேறுபாட்டை அறத்தின் பயன் என்று கூறும் பழக்கம் உடைய சமுதாயத்தை மறுத்துக் கூறியது.
இதுவென வேண்டா: வியங்கோள்
"உள்ளது மறுத்தல்" என்ற குறிக்கோளுடையது இப்பா. பொறுத்தல் துன்பம் தருவது. அறத்தில் வளர்ந்தவர்கள் மற்றவர் துன்புறுதலை அதுவும் தமக்காகத் துன்புறுதலை ஒருபொழுதும் ஏற்றுக்கொள்ள மாட்டார்கள். அப்படியே ஏற்றுக் கொண்டால் அறம் பிழைத்துப் போய் விடுகிறது.

பொருள்கோள் வரிஅமைப்பு:
சிவிகை பொறுத்தானோடு ஊர்ந்தான் இடை அறத்து ஆறு இது என வேண்டா.

பதவுரை:
அறத்தாறு-அறத்தினது வழி; இது என-இது என்று; வேண்டா-வேண்டாம்; சிவிகை-பல்லக்கு (பணியாட்கள் அதில் பயணம் செல்வோரைத் தூக்கிச் செல்வர். (இன்று கோயில்களில் தெய்வ உருவச்சிலைகளைத் தூக்கிச் செல்லப் பயன்படுத்தப்படுவது.); பொறுத்தானோடு-சுமப்பவனோடு; ஊர்ந்தான்-பயணிப்பவன்; இடை-இடம்.


அறத்தாறு இதுவென வேண்டா:

இத்தொடர்க்குத் தொல்லாசிரியர்கள் உரைகள்:
மணக்குடவர்: நீங்கள் அறநெறி யித்தன்மைத்தென் றறிய வேண்டா;
பரிதி: தருமஞ் செய்வோரையும் பாவஞ் செய்வோரையும் விசாரிக்கவேண்டின்;
காலிங்கர்: உலகத்து அறத்தின் நெறி இத்தன்மைத்து என்று உமக்கு யாம் எடுத்துரைக்க வேண்டுவதில்லை;
பரிமேலழகர்: அறத்தின் பயன் இது என்று யாம் ஆகம அளவையான் உணர்த்தல் வேண்டா;

அறத்தாறு என்ற சொற்றொடர்க்கு அறநெறி என்று மணக்குடவரும் காலிங்கரும் பொருள் கொள்ள பரிமேலழகர் அறத்தின் பயன் என்று உரை எழுதினார். பரிதி இத்தொடரை 'அறம் செய்வோரையும் அறமல்லாத செய்வோரையும் ஆராய்ந்தால்' என்று விளக்கினார். 'இதுவென வேண்டா' என்பதற்கு மணக்குடவர் இத்தன்மைத்து என்று அறிய வேண்டா என்றும் காலிங்கர் இத்தன்மைத்து என்று எடுத்துச் சொல்ல வேண்டியதில்லை என்றும் பொருள் கூறினர். பரிமேலழகர் 'அறத்தின் பயன் இது என்று யாம் ஆகம அளவையான் உணர்த்தல் வேண்டா' அதாவது 'அறநூல்கள் மூலம் அறிவுறுத்த வேண்டியதில்லை' என்றார்.

இன்றைய ஆசிரியர்கள் 'அறத்தின் பயனை மதிப்பிடாதே', 'அறநெறி இதுவெனக் கூற வேண்டா', 'நற்செய்கையின் பயன் இஃது என்று நூலினால் உணர்த்த வேண்டியதில்லை', 'இதுதான் அறத்தின் பயன் என்று கூறுதல் விரும்பத்தக்கதன்று' என்றபடி உரை நல்கினர்.

'அறவழி இது என்று கூற வேண்டாம்' என்பது இத்தொடரின் பொருள்.

சிவிகை பொறுத்தானோடு ஊர்ந்தான் இடை:

இத்தொடர்க்குத் தொல்லாசிரியர்கள் உரைகள்:
மணக்குடவர்: சிவிகைக் காவுவானோடு செலுத்துவானிடைக் காணலாம்.
மணக்குடவர் கருத்துரை: இது பொன்றினாலுந் துணையாகுமோ என்றார்க்குத் துணையாயினவாறு காட்டிற்று.
பரிதி: அத்தண்டிகைப் பத்தனையும் சுமப்பார்களையும் கண்டுகொள்க என்றவாறு. [தண்டிகைப் பத்தன் -பல்லக்கின் தலைவன்]
காலிங்கர்: சிவிகையைச் சுமந்தவனோடு மற்று அதன்மேலேறியிருக்கின்றவனுமே சான்று என்றவாறு.
பரிமேலழகர்: சிவிகையைக் காவுவானோடு செலுத்துவானிடைக் காட்சியளவை தன்னானே உணரப்படும்.
பரிமேலழகர் விரிவுரை: பயனை 'ஆறு' என்றார். பின்னது ஆகலின். 'என' என்னும் எச்சத்தால் சொல் ஆகிய ஆகம அளவையும், 'பொறுத்தானோடு ஊர்ந்தானிடை' என்றதனால் காட்சியளவையும் பெற்றாம். உணரப்படும் என்பது சொல்லெச்சம். இதனான் அறம் பொன்றாத் துணையாதல் தெளிவிக்கப்பட்டது.

'பல்லக்கைத் தூக்குவான், அதைச் செலுத்துவான் ஆகிய இருவரிடைக் காணலாம்' என்பது மணக்குடவர் உரை. பரிதி 'பல்லக்குத் தலைவனையும் சுமப்பவர்களையும் கண்டுகொள்க' என்கிறார். காலிங்கர் 'பல்லக்கில் ஏறியிருப்பவனும் அதைச் சுமந்தவனுமே சான்று' என்று சொல்கிறார். பரிமேலழகர் 'பல்லக்கைத் தூக்குவான், அதைச் செலுத்துவான் ஆகிய இருவரிடையேயுள்ள காட்சியாலேயே உணரப்படும்' என்றார்.

இன்றைய ஆசிரியர்கள் 'பல்லக்கில் இருப்பவனையும் சுமப்பவனையும் பார்த்து', 'பல்லக்கு சுமப்பவனையும் ஏறிச் செல்பவனையும் கண்டு', 'சிவிகையைத் தாங்குவோனுக்கும் அதில் ஏறிச் செல்வோனுக்குமுள்ள வேற்றுமையே அதைக் கண்கூடாகக் காட்டும்', 'பல்லக்கைத் தூக்கிச் செல்வாரையும் அதில் வீற்றிருப்பாரையும் காட்டி' என்றபடி உரைத்தனர்.

'பல்லக்கைத் தாங்கிச் செல்வார், ஏறிச் செல்வார் இவர்களிடை' என்பது இத்தொடரின் பொருள்.


நிறையுரை:
பல்லக்கைத் தாங்கிச் செல்வார், ஏறிச் செல்வார் இவர்களிடை அறத்தாறு இது என வேண்டா என்பது பாடலின் பொருள்.
'இதுவென வேண்டா' என்ற தொடர் குறிப்பது என்ன?

அறக்கருத்து பிழைபடவேண்டாம் எனத் தெளிவுறுத்தும் பாடல்.

செல்வநிலை ஏற்றத்தாழ்வை எளிதில் உணர்த்தும்-யாவருக்கும் உறுத்தலாகத் தோற்றமளிக்கும் - மனிதனை மனிதன் சுமக்கும் காட்சி ஒன்று இங்கு சுட்டிக் காட்டப்படுகிறது. இக்காட்சியில் சுமப்பவர் இன்னல்பட பயணம் செய்பவனுக்கு அந்தத் துன்பம் இல்லை. இருவரிடையே உயர்வு-தாழ்வு காண்கிறோம். (மனிதன் பொறுத்து மனிதன் பயணிக்கும் பல்லக்கு இன்றில்லை. ஆனாலும் அதற்கு இணையான, மாந்தர்க்குள் பொருளாதார, இன்ப-துன்ப வேறுபாடுகள் மிகுந்த, காட்சிகள் இன்றும் நாம் அன்றாடம் காண்பவைதாம்.) இக்காட்சியை முன்வைத்து வள்ளுவர் என்ன சொல்லவருகிறார் என்பதை விளக்குவதில் பலவேறு கருத்துக்கள் எழுந்தன. அவற்றை இருபெரும் பிரிவுக்குள் அடக்கலாம்.

முதல் வகைக் கருத்து வினைப்பயன் சார்ந்த ஒன்று. அது சொல்வது: 'ஏன் இந்த வேறுபாடு என்பதற்கு விளக்கம் காண அறநூல்களில் தேடவேண்டியதில்லை. பல்லக்குக் காட்சி'யைப் பார்த்த அளவிலேயே புரிந்து கொள்ளலாம்; இந்த உயர்வு தாழ்வுகள் ஒருவர் செய்கின்ற நல்வினை தீவினைப் பயனளவு வந்து சார்கின்றன; இவை அவரவர் செய்த அறத்தின் பயனால் வந்தன. பல்லக்கைச் சுமப்பவன் அறம் செய்யவில்லை; அதில் அமர்ந்திருப்பவன் அறம் செய்தவன் என்பவை எளிதில் உணரப்படும்.' மணக்குடவர், பரிதி, காலிங்கர், பரிமேலழகர், ஆகிய அனைத்துத் தொல்லாசிரியர்களும் இக்கருத்துத் தோன்ற உரை எழுதியுள்ளனர். 'அறம் செய்தால் அதன் பயன் தன்னை வந்தடையுமோ அடையாதோ என்று ஐயப்பட வேண்டா; சிவிகையைச் சுமப்பவனையும் ஏறிச் செலுத்துவானையும் பார்த்து அறிந்து கொள்க' என்று இதை விளக்குவர். இக்கால தமிழ் அறிஞர்களுள்ளும் தேவநேயப் பாவாணர், வ உ சி, கா சுப்பிரமணியம் பிள்ளை, நாமக்கல் இராமலிங்கம், சுத்தானந்த பாரதியார், சாமி சிதம்பரனார் முதலியோரும் இக்கருத்துக்கு ஒத்திசைந்து உரை பகன்றுள்ளனர். ஊழ்வலி இங்கு கூறப்பட்டுள்ளதாக சொல்லும் மற்றவர்கள் உரைகளும் இவ்வகையைச் சார்ந்ததுவே.

ஆனால் "வள்ளுவர் அப்படியா சொல்லியிருப்பார்? இல்லவே இல்லை" என்று மறுப்புக் குரல் கொடுக்கும் இரண்டாவது வகையினர் இன்று மிகுதி. 'உயர்வு-தாழ்வு என்பது அறிவால், ஆற்றலால், செல்வத்தால் உண்டாகிறது. இக்காட்சியை வைத்து அறத்தின் பயனை மதிப்பிட வேண்டாம். பல்லக்கைச் சுமப்பவனை அறம் செய்யாதவன் என்றும் அதில் அமர்ந்து செல்வோனைப் அறம் செய்தவனென்றும் பார்த்த உடனேயே எப்படிக் கூறமுடியும்? அறம் செய்யாத சிலர் பல்லக்கில் செல்வதும், அறம் செய்த சிலர் பல்லக்கைத் தூக்க நேர்தலும், நாம் கண்கூடாகப் பார்க்கிறோம். சிவிகையைச் சுமப்பவன் மாசில்லாத மனத்தினனாகவும் அறச் செயல் ஆற்றியவனாகவும் இருக்க முடியாதா? அன்றி அதில் அமர்ந்து செல்வோன்தான் குறையுடையோனாகவும் குற்றம் செய்தவனாகவும் இருக்கக்கூடாதா? இதை எண்ணிப் பாராமல் காட்சியளவிலேயே- பல்லக்கில் செல்வதையும் பல்லக்கைத் தூக்குவதையும் வைத்துக்கொண்டு அறம் செய்தவர் அறம் செய்யாதவர் என்று முடிவு செய்யக்கூடாது. பல்லக்கில் அமர்ந்திருப்பவனிடமும் அப்பல்லக்கைச் சுமப்பவனிடமும் சென்று அவர்களது ஏற்றத் தாழ்வான நிலையை நிறுவ எந்த அறமும், மெய்யியலும் பயன்படாது என்பதைத்தான் இக்குறளில் வள்ளுவர் பதிவு செய்துள்ளார்' என்பர் இவர்கள். வ சுப மாணிக்கம், திரு வி க, கு ச ஆனந்தன், குன்றக்குடி அடிகளார், சி இலக்குவனார், தமிழண்ணல், இளங்குமரனார், வ செ குழந்தைசாமி போன்ற இன்றைய அறிஞர்கள் இந்த விளக்கத்தையே எதிரொலிக்கின்றனர்.

பழைய உரையாசிரியர்கள் அனைவரும் ஒரே கருத்தாகவும் இன்றைய உரையாசிரியர்களில் பெரும்பான்மையோர் முற்றிலும் மாறுபட்ட கருத்தும் கொண்டு உரை கண்ட, குறிப்பிடத்தக்க, தொடர்ந்து ஆய்வுக்கு உட்பட்டு வரும் குறள் இது.
இக்குறளில் சுட்டப்படும் காட்சி "இது (முற்பிறவியில் செய்த) நல்வினை-தீவினைப் பயனால் உண்டானது; இதை விளக்க வேண்டிய தேவை இல்லை; பார்த்தாலே புரியவில்லையா?" என்று கூறுகிறதா? அல்லது "பல்லக்கைச் சுமந்து நடப்பவனுக்கும் அமர்ந்து ஊர்பவனுக்கும் அமைந்த அறவழி பொதுமையான ஒன்றே. அறவழி அல்லது அறப்பயன் ஒருவர்க்கு ஒன்று, இன்னொன்று அடுத்தவர்க்கு என்று கூறவேண்டியதில்லை" என்று கூறுகிறதா?
ஒரு பக்கம் 'உலகம் எளியது; நல்லது செய்தால் இன்ப வாழ்வு வாழலாம்; தீயது செய்தால் துன்பப்படவேண்டும்' என்று நம்புவர்கள்.
மறுபுறம் 'உலகம் சிக்கலானது; நம் உலகவாழ்வு பிழையற்றதும், முழுமை பெற்றதும் அல்ல; நல்லது செய்பவர்கள் மட்டும் இன்பமாக இருக்கிறார்கள் என்பது இல்லை; தீயவர்களும் இன்பம் துய்ப்பதைக் கண்ணால் பார்க்கிறோம்; அறம் செய்தலுக்கும் அதன் இன்பப் பயனை அனுபவிப்பதற்கும் உள்ள கால இடைவெளி என்று ஏதாவது உண்டா? இன்ப-துன்ப துய்ப்பு அடிப்படையில் அறம் செய்தவர், அறஞ்செய்யாதவர் என்று முடிவு கட்ட முடியாது' என்று கருதுகிறவர்கள். சிவிகைக் காட்சியைக் காணும் முன்னவர்கள் "இது அவர்கள் விதி, வினைப்பயன்" என்று விரைந்து முடிவுக்கு வருகிறார்கள். பினனவர்கள் "அறவினை-அதன்பயன் என்னும் கோட்பாடு இக்காட்சியை விளக்க இயலாது; எனவே அறத்தின் நெறி இதுதான் என்று கூறவேண்டாம்" என்பர்.
காட்சி அளவை ஒன்றை மட்டும் வைத்து நிகழ்வுகளுக்கு எந்த ஒரு முடிவும் கொள்ள முடியாது. காட்சிகள் மாறுதலுக்கு உட்பட்டன; காலப்போக்கில் மேலது கீழாயும் கீழது மேலாயும் மாறும் இயல்புடையது என்பதை வள்ளுவர் அறியாயதவர் அல்லர். இங்கு காட்டப்படும், பொறுத்தான், ஊர்ந்தான் இவர்கள் உள்ள இடங்களின் நிலை அவர்கள் வாழும் காலங்களிலேயே மாறி மாறி வரும் என்பதை நன்கு உணர்ந்தவர். எனவே அவர் அறத்தின் வினைப்யயன் தான் வாழ்வு நிலையை முடிவு செய்கிறது என்று விரைந்து முடிவுக்கு வர மாட்டார்.
விதி, பலபிறவிகள், முற்பிறவியின் விளைவுகள் ஆகிய எவற்றாலும் விளக்க முடியாத நிகழ்வுகள் உலகில் உண்டு என்பதையும் உணர்த்துவதற்காகவே "அறத்தின் பயன் இது என்று சொல்ல வேண்டாம்" என்று அக்காட்சியைக் காண்போர் அனைவருக்கும் வள்ளுவர் அறிவுறுத்துவதாகக் கொள்ளுதலே சரியானதாகும்.
சிவிகையில் அமர்ந்துள்ளவன் அறம் செய்தவன் என்றும் அதனைச் சுமப்பவன் அறமற்றவன் என்றும் நிலவிய ஒருமயக்கக் கருத்தை மறுப்பது இக்குறள். இப்பாடலின் வழி வள்ளுவர் கூறவருவது: தூக்குபவனையும் சுமப்பவனையும் வைத்து அறத்தாற்றினைத் துணிந்திட வேண்டாம். அது தனித்தது. புறத்தோற்றத்தில் காணப்படும் உயர்வுதாழ்வுகளைக் கொண்டு அறத்தின் பயனை அளந்தறியக்கூடாது என்பதுவே.

'இதுவென வேண்டா' என்ற தொடர் குறிப்பது என்ன?

'இது' என்ற சொல்லின் விளக்கத்தில் உள்ள மாறுபாடே உரை வேற்றுமைகளுக்குக் காரணம். 'இது என' என்பது 'இது என்று சொல்ல' என்ற பொருள் தரும். இங்கு 'இத்தன்மையது அல்லது இன்னது நெறி என்று சொல்ல' எனப் பொருள்படும்.
'இன்னது, இத்தகையது என்று ஆகம அளவையான் அதாவது -அற நூல்களில் கண்டபடி சொல்லத் தேவையில்லை' என்றும் 'சிவிகை பொறுத்தான் ஊர்ந்தோன் இடையாகிய ஏற்றத் தாழ்வு அறத்தின் பயன் இது எனச் சொல்ல வேண்டாம்' என்றும் இருதிறமாக இத்தொடர் விளக்கப்பட்டது.
பல்லக்கில் செல்லுதலும் பல்லக்கைத் தூக்குதலும் ஆன ஏற்றத் தாழ்வை முறையே நல்வினை, தீவினை ஆகியவற்றான விளைவு எனக் கொள்ளவேண்டாம். குறளிலேயே பிறிதோர் இடத்தில் பொறாமைக் குணம் கொண்டவன் செல்வம் பெறுதலும் நேர்மையாளனது வறுமையும் ஆராயப்படவேண்டும் (அழுக்காறாமை குறள் 169) என்று முரண்கள் உண்டானது ஏன் என்பது அறியப்படவேண்டும் என்று சொல்லப்பட்டுள்ளது. ஆகவே புறநிகழ்வு அடிப்படையில் அறம் இது? அறம் அல்லாதது இது? என்று 'சொல்ல' முடியாது என்ற கருத்து ஏற்புடையது. இதுவென வேண்டா என்பதற்கு அறத்தின் பயன் 'இது என மிகைப்பட எளிமையாக்க வேண்டாம்' எனவும் கூறலாம்.
வேண்டா என்ற சொல்லாட்சி எதைக் குறிக்கிறது? 'உலகத்தார் நடைமுறையில் கொண்டிருக்கும் கருத்தினை மறுப்பது ஒரு குறள் உத்தி' எனக் கூறி அதற்கு 'புணர்ச்சி பழகுதல் வேண்டா...'(நட்பு குறள் 785), 'மழித்தலும் நீட்டலும் வேண்டா...'(கூடாவொழுக்கம் குறள் 280)
என்னும் குறள்களை வ சுப மாணிக்கம் எடுத்துக் காட்டுவார். உலகத்தார் கொண்டிருக்கும் ஒரு கருத்துக்கு மறுதலையாக 'வேண்டாம்' என்ற பொருளிலேயே 'வேண்டா' எனச் சுட்டப்படும் நடை வெளிப்படுத்துகிறது.

தூக்குபவன் - அமர்ந்திருப்பவன் இவர்களிடம் சென்று அறத்தின் தன்மை பற்றிச் சொல்ல வேண்டாம் (அவர்களுக்கு இடையில் காணப்படும் ஏற்றத் தாழ்வை விளக்க அல்லது நியாயப்படுத்த அது பயன்படாது; அது அன்றைய பொருள் நிலையால் உண்டாவது) என்பதுவே 'இதுவென வேண்டா' உணர்த்துவது.
'இதுவென வேண்டா' என்ற தொடர் அறத்தின் பயன் இது என்று சொல்ல வேண்டாம் என்ற பொருள் தரும்.

பல்லக்கைத் தாங்கிச் செல்வார், ஏறிச் செலுத்துபவர் இவர்களிடத்து அறவழி இது என்று கூற வேண்டாம் என்பது இக்குறட்கருத்து.



__________________
Page 1 of 1  sorted by
 
Quick Reply

Please log in to post quick replies.



Create your own FREE Forum
Report Abuse
Powered by ActiveBoard