Devapriyaji - True History Analaysed

Members Login
Username 
 
Password 
    Remember Me  
Post Info TOPIC: 45 அன்பும் அறனும் உடைத்தாயின்


Guru

Status: Offline
Posts: 7602
Date:
45 அன்பும் அறனும் உடைத்தாயின்
Permalink  
 


அன்பும் அறனும் உடைத்தாயின் இல்வாழ்க்கை
பண்பும் பயனும் அது

(அதிகாரம்:இல்வாழ்க்கை குறள் எண்:45)

பொழிப்பு (மு வரதராசன்): இல்வாழ்க்கை அன்பும் அறமும் உடையதாக விளங்குமானால், அந்த வாழ்க்கையின் பண்பும் பயனும் அதுவே ஆகும்.

மணக்குடவர் உரை: இல்வாழ்க்கையாகிய நிலை யாவர்மட்டும் அன்பு செய்தலையும் அறஞ்செய்தலையும் உடைத்தாயின், அதற்குக் குண மாவதும் பயனாவதும் அவ்விரண்டினையு முடைமை தானே.
பயன் வேறு வேண்டாம் :தனக்கும் பிறர்க்கும் உண்டான முகமலர்ச்சி தானே யமையுமென்பது. இது பழியோடு வாராத வுணவை நுகர வேற்பார் மாட்டு அன்புசெய்யவேண்டுமென்பதும் சீலனாய்க் கொடுக்க வேண்டுமென்பதும் கூறிற்று.

பரிமேலழகர் உரை: இல்வாழ்க்கை அன்பும் அறனும் உடைத்தாயின் - ஒருவன் இல்வாழ்க்கை தன் துணைவிமேல் செய்யத்தகும் அன்பினையும், பிறர்க்குப் பகுத்து உண்டல் ஆகிய அறத்தினையும் உடைத்தாயின்; அது பண்பும் பயனும் - அவ்வுடைமை அதற்குப் பண்பும் பயனும் ஆகும். (நிரல்நிறை. இல்லாட்கும் கணவற்கும் நெஞ்சு ஒன்றாகா வழி இல்லறம் கடைபோகாமையின், அன்புடைமை பண்பு ஆயிற்று; அறனுடைமை பயன் ஆயிற்று. இவை மூன்று பாட்டானும் இல்நிலையில் நின்றான் அறஞ்செய்யுமாறு கூறப்பட்டது.)

இரா சாரங்கபாணி உரை: இல்லறத்தானது வாழ்க்கை அன்புடையதாயின், அதுவே இல்வாழ்க்கைப் பண்பாகும்; அறனுடையதாயின், அதுவே இல்வாழ்க்கைப் பயனாகும்.

பொருள்கோள் வரிஅமைப்பு:
இல்வாழ்க்கை அன்பும் அறனும் உடைத்தாயின் அது பண்பும் பயனும்.

பதவுரை: அன்பும்-அன்பும்; அறனும்-நல்வினையும்; உடைத்தாயின்-உடையதானால்; இல்வாழ்க்கை-இல்லாளோடு கூடிய வாழ்க்கை; பண்பும்-குணமும்; பயனும்-பயனும்; அது-அது.


அன்பும் அறனும் உடைத்தாயின் இல்வாழ்க்கை:

இப்பகுதிக்குத் தொல்லாசிரியர்கள் உரைகள்:
மணக்குடவர்: இல்வாழ்க்கையாகிய நிலை யாவர்மட்டும் அன்பு செய்தலையும் அறஞ்செய்தலையும் உடைத்தாயின்;
பரிப்பெருமாள்: இல்வாழ்க்கையாகிய நிலை யாவர்மட்டும் அன்பு செய்தலையும் அறஞ்செய்தலையும் உடைத்தாயின்;
பரிதி: நேசமும் தன்மமும் உண்டாகிய இல்லறம்;
காலிங்கர்: மற்று இங்ஙனம் செலுத்தா நின்ற இல்வாழ்க்கையானது இல்வாழ்க்கைக்கே உரிய அன்பையும் மற்றதன் பயனாகிய அறத்தையும் உடையதானால்;
பரிமேலழகர்: ஒருவன் இல்வாழ்க்கை தன் துணைவிமேல் செய்யத்தகும் அன்பினையும், பிறர்க்குப் பகுத்து உண்டல் ஆகிய அறத்தினையும் உடைத்தாயின்;

'எல்லோரிடத்தும் அன்பு செய்தலையும் அறம் செய்தலையும் உடைய இல்வாழ்க்கை' என்று மணக்குடவரும் 'தன் இல்லாள் மேல் அன்பும் பகுத்துண்டல் அறம் உடைய இல்வாழ்க்கை' என்று பரிமேலழகரும் உரை கூறினர். பரிதி 'அன்பும் அறனும் உடைய இல்லறம்' என்று சொல்ல காலிங்கர் 'இல்வாழ்க்கைக்கே உரிய அன்பு, அதன் பயனாகிய அறம் உடைத்தாயின்' என்று கூறுகிறார்.

இன்றைய ஆசிரியர்கள் 'அன்பும் அறனும் உடைய குடும்பம்', 'இல்வாழ்க்கையானது, மனைவி மக்கள் முதலியவர்கள்பால் அன்பும் பிறர்க்குதவும் அறமும் உடையதானால்', 'இல்லற வாழ்க்கை அன்பு நெறியிலும், அறநெறியிலும் செல்லுதல் வேண்டும்', 'அன்பும் அறமும் உடைய இல்வாழ்க்கை' என்றபடி உரை தந்தனர்.

இல்வாழ்க்கை அன்பும் அறனும் உடையதானால் என்பது இப்பகுதியின் பொருள்.

பண்பும் பயனும் அது:

இப்பகுதிக்குத் தொல்லாசிரியர்கள் உரைகள்:
மணக்குடவர்: அதற்குக் குண மாவதும் பயனாவதும் அவ்விரண்டினையு முடைமை தானே.
மணக்குடவர் குறிப்புரை: பயன் வேறு வேண்டாம் :தனக்கும் பிறர்க்கும் உண்டான முகமலர்ச்சி தானே யமையுமென்பது. இது பழியோடு வாராத வுணவை நுகர வேற்பார் மாட்டு அன்புசெய்யவேண்டுமென்பதும் சீலனாய்க் கொடுக்க வேண்டுமென்பதும் கூறிற்று. [அமையும்-போதும்; சீலன்-ஒழுக்கம் உடையவன்]
பரிப்பெருமாள்: அதற்குக் குண மாவதும் பயனாவதும் அவ்விரண்டினையு முடைமை.
பரிப்பெருமாள் குறிப்புரை: பயன் வேறு வேண்டாம் :தனக்கும் பிறர்க்கும் உண்டான முகமலர்ச்சி தானே அமையுமென்பது. இது பழியோடு வாராத வுணவைப் பகுக்குங்கால் ஏற்பார் மாட்டு அன்புசெய்யவேண்டுமென்பதூஉம் சீலவானாகக் கொடுக்க வேண்டுமென்பதூஉம் கூறிற்று.
பரிதி: இம்மைக்குச் செல்வம்; மறுமைக்கு மோட்சம் தரும் என்றவாறு.
காலிங்கர்: அவையிரண்டுமே இல்வாழ்க்கையின் குணமுமாம் பயனுமாம் என்றவாறு.
பரிமேலழகர்: அவ்வுடைமை அதற்குப் பண்பும் பயனும் ஆகும்.
பரிமேலழகர் குறிப்புரை: நிரல்நிறை. இல்லாட்கும் கணவற்கும் நெஞ்சு ஒன்றாகா வழி இல்லறம் கடைபோகாமையின், அன்புடைமை பண்பு ஆயிற்று; அறனுடைமை பயன் ஆயிற்று. இவை மூன்று பாட்டானும் இல்நிலையில் நின்றான் அறஞ்செய்யுமாறு கூறப்பட்டது. [நிரல்நிறை- வரிசையாகச் சொல்லப்பட்ட பொருள்களுக்குத் தொடர்புள்ளவற்றை அம்முறையே சொல்லுதல். இங்கு அன்பு-பண்பு; அறன்-பயன் என்ற வரிசை.]

'குணமும் பயனும் அவை' என்று கூறிய மணக்குடவர் 'உணவு பகிர்வார்மாட்டு அன்பு செய்தல் வேண்டும் என்றும் ஒழுக்கமுடையவனாய் இருக்கவேண்டும்' என்று விரிக்கிறார். பரிதி 'இம்மைக்குச் செல்வம்; மறுமைக்கு மோட்சம் தரும்' என்று கூறுகிறார். காலிங்கர் 'அவை இல்வாழ்க்கையின் குணமும் பயனும்' என்கிறார். 'அன்பு பண்பாகவும் அறன் பயனாகவும் ஆயிற்று நிரல்நிறையாக' என்றபடி பரிமேலழகர் பொருளுரைத்தார்.

இன்றைய ஆசிரியர்கள் 'நாகரிகமும் நலமும் பெற்று விளங்கும்', 'அவ்வாழ்க்கை உயர்ந்த தன்மையும் சிறந்த பயனும் உளதாகும்', 'இல்லறவாழ்க்கையின் பண்பு: அன்பு. பயன்: அறன்', 'பண்பும் பயனும் பெற்ற வாழ்க்கை ஆகும்' என்றபடி பொருள் உரைத்தனர்.

அது பண்பும் பயனும் ஆகும் என்பது இப்பகுதியின் பொருள்.

நிறையுரை:
இல்வாழ்க்கை அன்பும் அறனும் உடையதானால் அது பண்பும் பயனும் ஆகும் என்பது பாடலின் பொருள்.
யார் யாரிடம் செலுத்தும் அன்பு இங்கு சொல்லப்படுகிறது?

அன்பும் அறமும் இல்லறவாழ்வின் தன்மையும் பயனும் ஆகும்.

அன்பாக இருக்கும் தன்மையும் அறவழியில் ஒழுகுதலும் உடைய இல்வாழ்க்கை பண்பானது, பயனுள்ளது.
இல்வாழ்க்கை என்பது குடும்ப வாழ்க்கை பற்றியது. குடும்பம் என்னும் சொல், இல்வாழ்வான், துணைவி, பெற்றோர், பிள்ளைகள் போன்ற உறவுகளைக் கொண்ட அமைப்பைக் குறிக்கும். இல்வாழ்க்கையில் அன்பு தழைக்க வேண்டும்; அறம் செழிக்க வேண்டும். அப்பொழுதுதான் அது குடும்பவாழ்வின் தன்மையையும் பொருளையும் உணர்த்தும் என்கிறது இக்குறள்.
இல்வாழ்க்கை அன்பின் விளைநிலமாகும். அன்பு என்பது உறவு, நட்பு முதலான தொடர்புடையார் மாட்டு உண்டாகும் நெகிழ்ச்சியைக் குறிப்பது. குடும்ப வாழ்க்கை என்னும் தன்மைபெற அங்கு அன்பு என்ற பண்பு நிறைந்திருக்கவேண்டும். குடும்பத்தில் உள்ளோர் ஒருவருக்கொருவர் அன்பு செலுத்தி வாழும் சூழல் இனிமையானது. இல்லத்தின் குணச்சிறப்பாக அன்பு இருக்கவேண்டும்.
இல்வாழ்க்கையில் அறச்செயல்கள் நிகழவேண்டும். அறன் என்றது இல்வாழ்வாரது குற்றமற்ற வாழ்க்கையையும், இல்லத்திற்கு வெளியே உள்ள உலகில் உள்ளோருக்குச் செய்யும் நற்செயல்கள் பற்றியதும் ஆகும். ஒருவனது வாழ்க்கை பொருள் பொதிந்ததாக இருக்க வேண்டுமென்றால் அதில் அறம் நிறைந்திருக்கவேண்டும். மனமாசின்மை, இனியவை கூறல் போன்றவையும் அறங்களே.
அன்பானது இல்லறத்துக்குக் குணம் சேர்க்கிறது. அறம் இல்வாழ்க்கையை பயனுள்ளதாக்குகிறது. அன்பும் அறமும் இணைந்த குடும்ப வாழ்க்கை பொலிவுடன் விளங்கும். அன்பு செலுத்துவது இல்வாழ்க்கைப் பண்பு, அறனுடைமை இல்வாழ்க்கைப் பயன்.

மணக்குடவர் தனது உரையில் 'இல்வாழ்க்கையாகிய நிலை எல்லோரிடத்திலும் அன்பு செய்தலையும் அறஞ்செய்தலையும் உடைத்தாயின், அதுவே வாழ்க்கையின் குணமும் பயனும் ஆம்' எனக் கூறி 'பயன் வேறு வேண்டாம்; தமக்கும் பிறர்க்கும் உண்டாகும் முகமலர்ச்சியே போதும்' என்கிறார். அன்பும் அறனும் நிறைந்த குடும்பத்தின் அழகையும் மகிழ்ச்சியையும் காட்டி, குறளின் உட்பொருளையும் இவ்விளக்கம் தெளிவாக்குகிறது.

யார் யாரிடம் செலுத்தும் அன்பு இங்கு சொல்லப்படுகிறது?

'அன்பு' என்றதற்கு யாவர்மட்டும் அன்பு செய்தல், இல்வாழ்க்கைக்கே உரிய அன்பு, தன் துணைவிமேல் செய்யத்தகும் அன்பு, இருவர் கொள்ளும் அன்பு, வாழ்க்கை அன்புடையதாதல், எல்லாரிடத்திலும் அன்பாக நடந்து கொள்வது, மனைவி மக்கள்(குழந்தைகள்) முதலியவர்கள்பால் அன்பு, அன்பு நெறி, எல்லோரிடத்தும் அன்பு, அவனுக்கும் அவன் வாழ்க்கைத்துணைக்கும் இடைப்பட்ட இருதலைக் காதல், அனைவரிடமும் அன்பு என உரையாசிரியர்கள் விளக்கம் தந்தனர்.

மனைவி மக்கள்(குழந்தைகள்) முதலியவர்கள்பால் அன்பு. தன் துணைவிமேல் செய்யத் தகும் அன்பு, யாவர் மாட்டுஞ் செய்யும் அன்பு செய்தல் என வேறுவேறாக அன்பு காட்டுதல் விளக்கப்பட்டது. குறள் காட்டும் இல்லறத் தலைவனும் தலைவியும் ஒத்த மனமுடையோராகி வாழ்க்கையறத்தை மேற்கொண்டவர்கள், இவர்கள் இருவரிடை உள்ள அன்பாகிய அப்பண்புதான் இங்கு கூறப்பட்டது என்று சொல்வது அவ்வளவு சிறப்பு இல்லை. இங்கே குறிக்கப்பெறுவது உறவு, நட்பு ஆகிய தொடர்புடையாரிடையே முகிழ்த்து நிலைக்கும் அன்பு பற்றியே எனக் கொள்வது பொருத்தமாகும். தொடர்ந்துவரும் அறன் என்ற சொல், எல்லோரிடத்தும் பரந்து விரிந்த அன்பு அருளாவதைக் குறிக்கும்.

இல்வாழ்க்கை அன்பும் அறனும் உடையதானால் அது பண்பும் பயனும் ஆகும் என்பது இக்குறட்கருத்து.



__________________
Page 1 of 1  sorted by
 
Quick Reply

Please log in to post quick replies.



Create your own FREE Forum
Report Abuse
Powered by ActiveBoard