Devapriyaji - True History Analaysed

Members Login
Username 
 
Password 
    Remember Me  
Post Info TOPIC: 46 அறத்தாற்றின் இல்வாழ்க்கை ஆற்றின்


Guru

Status: Offline
Posts: 7602
Date:
46 அறத்தாற்றின் இல்வாழ்க்கை ஆற்றின்
Permalink  
 


அறத்தாற்றின் இல்வாழ்க்கை ஆற்றின் புறத்தாற்றில்
போஒய்ப் பெறுவது எவன்?

(அதிகாரம்:இல்வாழ்க்கை குறள் எண்:46)

பொழிப்பு: ஒருவன் அறநெறியில் இல்வாழ்க்கையைச் செலுத்தி வாழ்வானானால், அத்தகையவன் வேறு நெறியில் சென்று பெறத்தக்கது என்ன?

மணக்குடவர் உரை: இல்வாழ்க்கையாகிய நிலையை அறநெறியிலே செலுத்தவல்லவனாயின் புறநெறியாகிய தவத்திற் போய்ப் பெறுவது யாதோ?
மேல் சீலனாய்க் கொடுக்க வேண்டுமென்றார் அவ்வாறு செய்யின் தவப்பயனும் இதுதானே தருமென்றார.

பரிமேலழகர் உரை: இல்வாழ்க்கை அறத்தாற்றின் ஆற்றின் - ஒருவன் இல் வாழ்க்கையை அறத்தின் வழியே செலுத்துவன் ஆயின்; புறத்தாற்றின் போஒய்ப் பெறுவது எவன் - அவன் அதற்குப் புறம் ஆகிய நெறியில் போய்ப் பெறும் பயன் யாது?
('அறத்தாறு' என்பது பழி அஞ்சிப் பகுத்து உண்டலும், அன்பு உடைமையும் என மேற்சொல்லிய ஆறு. 'புறத்தாறு' இல்லை விட்டு வனத்துச் செல்லும் நிலை. அந்நிலையின் இது பயனுடைத்து என்பார், போஒய்ப் பெறுவது எவன் என்றார்.)

கா சுப்பிரமணியம் பிள்ளை உரை: ஒருவன் தனது இல்வாழ்க்கையை அறவழியிலே நடத்துவானாயின், அதற்குப் புறம்பாகிய நெறியிலே போய்ப் பெறும் பயன் யாதோ? (செவ்விய இல்வாழ்க்கையே எல்லாப் பயனையும் கொடுக்கும் என்பது கருத்து.)

பொருள்கோள் வரிஅமைப்பு:
அறத்தாற்றின் இல்வாழ்க்கை ஆற்றின் புறத்தாற்றில் போஒய்ப் பெறுவது எவன்?


அறத்தாற்றின் இல்வாழ்க்கை ஆற்றின் :
பதவுரை: அறத்து=அறத்தினது; ஆற்றின்-நெறியின்கண்; இல்வாழ்க்கை-இல்லாளோடு கூடிய வாழ்க்கை; ஆற்றின்-செய்தால்.

இத்தொடர்க்குத் தொல்லாசிரியர்கள் உரைகள்:
மணக்குடவர்: இல்வாழ்க்கையாகிய நிலையை அறநெறியிலே செலுத்தவல்லவனாயின்;
பரிதி: தருமத்தின் மேலாகிய இல்லறத்தின்வழி நிற்பது அன்றியிலே;
பரிமேலழகர்: ஒருவன் இல் வாழ்க்கையை அறத்தின் வழியே செலுத்துவன் ஆயின்;
பரிமேலழகர் குறிப்புரை: 'அறத்தாறு' என்பது பழி அஞ்சிப் பகுத்து உண்டலும், அன்பு உடைமையும் என மேற்சொல்லிய ஆறு.

'இல்வாழ்க்கையை அறத்தின் வழியே செலுத்துவன் ஆயின்' என்று பழம் ஆசிரியர்கள் இத்தொடர்க்கு உரை நல்கினர்.

இன்றைய ஆசிரியர்கள் 'அறத்தின்படி குடும்பம் நடத்தினால்', 'ஒருவன் இல்வாழ்க்கையை அறநெறியில் நடத்துவானாயின்', 'ஒருவன் தர்மநெறி தவறாமல் மனைவி மக்களோடு இல்வாழ்க்கை நடத்தினால்', 'அறவழியில் இல்லற வாழ்க்கையை நடத்தினால்' என்றபடி உரை தந்தனர்.

அறவழியில் இல்லற வாழ்க்கையை நடத்துவானாயின் என்பது இத்தொடரின் பொருள்.

புறத்தாற்றில் போஒய்ப் பெறுவது எவன்?:
பதவுரை: புறத்து-புறமாகிய; ஆற்றில்-நெறியின்கண்; போஒய்ப்-சென்று; பெறுவது-அடைவது; எவன்-யாது?.

இத்தொடர்க்குத் தொல்லாசிரியர்கள் உரைகள்:
மணக்குடவர்: புறநெறியாகிய தவத்திற் போய்ப் பெறுவது யாதோ?
மணக்குடவர் கருத்துரை: மேல் சீலனாய்க் கொடுக்க வேண்டுமென்றார் அவ்வாறு செய்யின் தவப்பயனும் இதுதானே தருமென்றார.
பரிதி: பாவத்தின் வழியிலே நின்று என்னபேறு பெற்றான் என்றவாறு.
பரிமேலழகர்: அவன் அதற்குப் புறம் ஆகிய நெறியில் போய்ப் பெறும் பயன் யாது?
பரிமேலழகர் குறிப்புரை: 'புறத்தாறு' இல்லை விட்டு வனத்துச் செல்லும் நிலை. அந்நிலையின் இது பயனுடைத்து என்பார், போஒய்ப் பெறுவது எவன் என்றார்.

மணக்குடவர் புறத்தாறு என்பதை தவநெறி என்று குறிப்பிட்டு 'அங்குப் பெறும் பயனும் இதுதானே' என்று உரை தருகிறார். பரிதி புறவழியைப் பாவவழி என்று கொண்டு 'அவ்வழியிலே என்ன பேறு பெற்றான்?' என்கிறார். பரிமேலழகர் புறத்தாறு என்பது வனத்துச் செக்கும் நிலை அதாவது வனப்பிரத்தன் நிலை என்று கொண்டு 'அதனினும் இல்லறம் பயனுடைத்து' என்று விளக்கினார்.

இன்றைய ஆசிரியர்கள் 'அதனைச் துறந்துபோய்ப் பெறுவது என்ன?', 'அவன் புறநெறியாகிய துறவால் எய்துவது யாது?', 'துறவறத்துக்குப் போய் அடையக்கூடிய நன்மை என்ன இருக்கிறது? ஒன்றுமில்லை', 'வேறு வழிகளில் சென்று அடைய வேண்டியது ஒன்றும் இல்லை, (இங்கு வேறு வழி என்பது துறவற நெறியை)' என்றபடி பொருள் உரைத்தனர்.

புறம்பாகிய நெறியிலே போய்ப் பெறும் பயன் என்ன? என்பது இத்தொடரின் பொருள்.

நிறையுரை:
அறவழியில் நடத்தப்படும் இல்வாழ்க்கை மற்ற எந்தவொரு வாழ்வு முறையினும் மேம்பட்டது என்னும் பாடல்.

அறவழியில் இல்லற வாழ்க்கையை நடத்துவானாயின், புறத்தாற்றில் போய்ப் பெறும் பயன் என்ன? என்பது பாடலின் பொருள்.
புறத்தாறு குறிப்பது என்ன?

ஆற்றின் என்ற சொல் இரண்டு இடங்களில் வேறுவேறு பொருளில் ஆளப்பட்டது. அறத்துஆற்றின் என்பதிலுள்ள ஆற்றின் என்பதற்கு வழியில் அல்லது நெறியில் என்பது பொருள். இல்வாழ்க்கைஆற்றின் என்பதிலுள்ள ஆற்றின் என்பதற்குச் செய்தால் அல்லது நடத்தினால் என்பது பொருள்.

அறவழியிலே நடத்தப்படும் இல்வாழ்க்கை புற வழியாகிய துறவுடன் ஒப்பு நோக்கப்படுகிறது.

இவ்வாழ்வில் அறம் செழிக்க வள்ளுவர் சில நெறிகளை வகுத்துச் சொல்கிறார். அவற்றிபடி இல்வாழ்வான் துறந்தவர்களுக்கும் இல்லாதார்க்கும் வாழ்விழந்தவர்களுக்கும் துணையாய் இருப்பான்; தன்குடியில் இறந்தோர், வழிபடு தெய்வம், விருந்து, சுற்றம், தான் எனப்பட்ட ஐந்திடத்தினையும் போற்றிக் காப்பான்; பழிக்குப் பயந்தும் பகுத்துண்டும் வாழ்வான். இத்தகைய அறம் மிளிரும்.குடும்பத்தில் அன்பு தழைக்கும். நிறைவு உண்டாகும். இறையருள் இயல்பாகக் கிடைக்கும். இல்வாழ்வார் பேரின்பம் கண்கூடாக அடையக் காண்பர்.

இல்லறத்திற்கு புறம்பான துறவு வாழ்க்கை என்ன பயக்கும்? துறவு வழிச்சொல்வோர், 'வீடு' எனப்பட்ட, இறையோடு இணையும், பேரின்ப நிலையைப் பெறும் நோக்கோடு.தவநெறி தழுவுவர். குடும்ப, சமூக சிக்கல்களின் அழுத்தம் தாங்க முடியாமல் இல்லறவாழ்வில் வெறுப்புக் கொண்டு துறவறம் மேற்கொள்வரும் பலர் உண்டு. துறவறத்தில் தனது உடல் வருத்தித் துன்புற்று, தனது மோட்ச நிலை ஒன்றையே குறிக்கொண்டு, மற்ற யாவர்க்கும் ஒருவகையிலும் உதவாமல் துறவோர் வாழ்வு கழிகிறது. கூடாவொழுக்கத்திற்கு ஆளாகியும் போவர் சிலர். இறுதியில் விடுதலை வாழ்வு எய்தினானா என்பதும் தெரிவதில்லை. ஒருகால் வீடுபெற்றான் என்று கொண்டாலும் அதில் என்ன சிறப்பு இருக்க முடியும்?

துறவு வாழ்வு நம் மண்ணில் இருந்ததில்லை; இங்குள்ள மரபுப்படி துறவறம் எனத் தனியே ஒரு வாழ்வு முறை இல்லை. இல்லறத்தில் வாழ்ந்து வளரும் நிலையே துறவும் தவமும் ஆகும் என்று அறிஞர்களும் ஆய்வாளர்களும் கூறுவர். எப்படியேனும், இக்காலச் சூழலில் துறவு என்ற வாழ்வு நிலை ஒன்று இல்லை என்னும் அளவு அது பெரிதும் அருகி விட்டது.
இல்லறத்தில் இருந்துகொண்டே அறநெறி ஆற்றி இறையருள் பெறமுடியும் என்பது ஒரு கொள்கை. துறவால் மட்டுமே அதை அடையமுடியும் என்பது மற்றொரு கோட்பாடு. அறத்துப்பால் முழுமையும் நோக்கினால் வள்ளுவர் இரண்டையுமே உயர்த்திப் பேசுகிறார் என்பதைப் படிப்போர் உணர்வர். ஆனாலும் இரண்டிலும் எது சிறந்தது என்ற வினா வரும்போது இல்லறத்தையே வள்ளுவர் மிகவும் போற்றுகிறார். துறவு வழியில் என்ன கிடைக்கப்போகிறது என்று சற்று ஏளனத்தோடேயே இக்குறளில் கேட்கிறார். அறநெறி பின்பற்றிய இல்வாழ்க்கையில் பெறமுடியாதது துறவு வாழ்க்கையில் ஒன்றும் இல்லை என்பது கருத்து.

'புறத்தாறு' என்ற சொல்லாட்சியும், இல்லறம் இருக்கும்போது புற நெறிகள் எதற்கு என்ற வினாவும், 'போஒய்' என்பதிலுள்ள ஓகாரம் 'அங்கு போய் என்னத்தைப் பெறப்போகிறாய்? என்ற் இகழ்ச்சிக் குறிப்பை வெளிப்படுத்துவது தெரிகின்றது.
'புறத்தாற்றின் போஒய்ப் பெறுவ தெவன்' என்னும் தொடரில் காணப்படும் அளபெடை மொழிநடையில் 'அறியாமையால் வீழ்தல்!' என்னும் பொருளும் 'அந்தோ! போய்ப் பெறுவதென்ன?' என்னும் இரக்கமும் ஒலிப்பதாகத் திரு வி க தெரிவிப்பார்.

புறத்தாறு குறிப்பது என்ன?

தொல்லாசிரியர்கள் உரைகளிலே மூன்று மாறுபட்ட பொருளில் புறத்தாறு என்ற தொடர்க்கு உரைகள் கிடைக்கின்றன. மணக்குடவர் புறநெறியாகிய தவம் என்று சொல்வதால் அதைத் துறவுநெறி என்று அவர் குறிப்பிடுகிறார் என அறியலாம். அடுத்து வந்த பரிதி புறத்தாறு என்பதற்குப் 'பாவத்தின் வழி' என்று பொருள் கூறுகிறார். பின்வந்த பரிமேலழகர் புறத்தாறு என்பதற்கு 'இல்லை விட்டு வனத்துச் செல்லும் நிலை' என்கிறார். இல்லை விட்டு வனத்துச் செல்லும் நிலை என்பது வடவரது நான்கு வாழ்வுநிலைகளில் (பிரம்மசரியம், கிரகஸ்தம், வானப்பிரஸ்தம், சந்நியாசம்) மூன்றாவதான வானப்பிரத்தம் ஆகும் என்று தண்டபாணி தேசிகர் விளக்கம் அளிப்பார். வானப்பிரத்தம் துறவுக்குப் புகுமுகம் ஆகிய நிலையாகும்; அந்நிலை மனைவியோடும் மனைவியை விட்டும் மேற்கொள்ளப்பெறும் இரண்டுபட்டதாயிருத்தலால் அதைக்கூறியிருக்கலாம் என்று மேலும் கூறுவார்.
இவ்விதமாக 'இல்லறத்திற்குப் புறம்பான துறவுநெறி', 'அறத்திற்குப் புறம்பான தீயநெறி', 'வானப்பிரத்தநிலை' என்ற மூவகைப் பொருள்கள் கிடைக்கின்றன.
வ சுப மாணிக்கம் புறத்தாறு என்பது இளமைத் துறவைக் குறிப்பதாகக் கொண்டு இத்துறவு நெறியை இயற்கைக்குப் 'புறத்தாறு' என்று சொல்கிறார்.
'புறத்து ஆறு' என்பது வெளியிலிருந்து வந்த பிற நெறி அதாவது நம் மரபுக்கு ஒவ்வாத புறநெறி என்றும் புறத்தாறு என்ற சொல்லாட்சியே வள்ளுவர்க்கு அந்தத் துறவில் ஈடுபாடில்லை என்பதைச் சொல்லும் என்றும்.சிலர் விளக்கம் சொல்வர்.
துறவு நெறி ஏன் புறத்தாறு என்று சொல்லப்பட்டது என்பதற்கு ஜி வரதராஜன் கூறும் வீளக்கம்: 'இல்லறம். தானும் இன்பமடைந்து, மற்றவரையும் இன்பமடையச் செய்து, அன்பை வளர்த்து, அருளிற்புக வைப்பது. துறவறம் அருளைப் பெற, தன் நலனை இழந்து, வருந்தித் தவம் செய்து, பிறரிடம் உணவு முதலியவற்றிற்கு இரக்க வைப்பது. ஆகையால் துறவறம் புறத்தாறு என்று கூறப்பட்டது. புறம் என்பது உலகியலுக்கும் மக்களுடைய இயல்பான இன்ப விருப்பிற்கும் புறம்பானது என்பது கருத்து.'

அறத்திற்கு நேர் எதிரான தீயவழியை அறநெறியோடு ஒப்பிடுவது தேவையற்றது. ஒப்பிடாமலே தீயவழி நீக்கப்பட்டுவிடும்.
குறளில் சொல்லப்படுவது இல்நிலை-துறவு என்ற இரண்டு நிலைகளே. எனவே வனப்பிரத்தம் பற்றி வள்ளுவர் எண்ணவில்லை என்பதால் இதுவும் பொருத்தமல்ல.

புறத்தாறு என்பதற்குத் துறவுநெறி என்பது இயல்பான பொருளாகும்.

அறவழியில் இல்லற வாழ்க்கையை நடத்துவானாயின் அதற்குப் புறம்பாகிய நெறியிலே போய்ப் பெறும் பயன் என்ன? என்பது இக்குறட்பொருள்.



__________________
Page 1 of 1  sorted by
 
Quick Reply

Please log in to post quick replies.



Create your own FREE Forum
Report Abuse
Powered by ActiveBoard