Devapriyaji - True History Analaysed

Members Login
Username 
 
Password 
    Remember Me  
Post Info TOPIC: 58 பெற்றார்ப் பெறின்பெறுவர் பெண்டிர்


Guru

Status: Offline
Posts: 7602
Date:
58 பெற்றார்ப் பெறின்பெறுவர் பெண்டிர்
Permalink  
 


பெற்றார்ப் பெறின்பெறுவர் பெண்டிர் பெருஞ்சிறப்புப்
புத்தேளிர் வாழும் உலகு

(அதிகாரம்:வாழ்க்கைத்துணை நலம் குறள் எண்:58)

பொழிப்பு: தனக்கே உரியவனாகக் கணவனைப் பெற்றால் இங்கேயே சொர்க்க உலகம் தான்.

மணக்குடவர் உரை: பெண்டிரானவர் தம்மை மனைவியராகப் பெற்றவரையே தமக்குத் தலைவராகப் பெறின் தேவர் வாழும் பெரிய சிறப்பினையுடைய உலகத்தைப் பெறுவர்.

பரிமேலழகர் உரை: பெண்டிர் பெற்றான் பெறின் - பெண்டிர் தம்மை எய்திய கணவனை வழிபடுதல் பெறுவராயின்; புத்தேளிர் வாழும் உலகு பெருஞ்சிறப்புப் பெறுவர் - புத்தேளிர் வாழும் உலகின் கண் அவரால் பெருஞ்சிறப்பினைப் பெறுவர்.
(வழிபடுதல் என்பது சொல்லெச்சம். இதனால் தற்கொண்டாற் பேணிய மகளிர் புத்தேளிரால் பேணப்படுவர் என்பது கூறப்பட்டது.)

தமிழண்ணல் உரை: தன்னைத் தனக்குரிய மனைவியாகப் பெற்ற கணவனை, தான் தனக்குரிய கணவனாகவும் பெற்று இணைந்து வாழும் வாழ்வு பெற்றால், அப்பெண்டிர் இவ்வுலகில் மட்டுமன்று, தேவர்கள் வாழும் உலகிலும் பெருஞ்சிறப்புப் பெறுவர்.
உரியராகப் பெறுதல் அத்துணை ஒருவருக்கொருவர் உறவுரிமையுடயராதல். இங்கு மட்டுமென்ன; தேவருலகிலும் சிறப்புண்டாகும் என்ற உலகியல் நடை இது.

பொருள்கோள் வரிஅமைப்பு:
பெற்றார்ப் பெறின் பெண்டிர் புத்தேளிர் வாழும் உலகுபெருஞ்சிறப்புப் பெறுவர்.


பெற்றார்ப் பெறின்:
பதவுரை: பெற்றான் -அடைந்தவன்; பெறின்-அடைந்தால்.

இத்தொடர்க்குத் தொல்லாசிரியர்கள் உரைகள்:
மணக்குடவர்: பெண்டிரானவர் தம்மை மனைவியராகப் பெற்றவரையே தமக்குத் தலைவராகப் பெறின்;
காலிங்கர்: தம்மை மணமகளிராகப் பெற்ற கணவரையே தாமும் கணவராகப் பெறுவாராயின்;
பரிமேலழகர்: தம்மை எய்திய கணவனை வழிபடுதல் பெறுவராயின்;
பரிமேலழகர் குறிப்புரை: வழிபடுதல் என்பது சொல்லெச்சம்.

மணக்குடவரும் காலிங்கரும் 'தம்மை மனைவியராகப் பெற்றவரையே தமக்குக் கணவராகப் பெற்றால்' என்றும் பரிதி 'கற்புடையாள் எனப் பெயர் பெற்றவள்' என்றும் பரிமேலழகர் 'கணவனை வழிபடுதல் செய்பவள்' என்றும் இத்தொடர்க்கு உரை நல்கினர்.

இன்றைய ஆசிரியர்கள் 'கணவனது அனபைப் பெறும்', 'பண்புகள் பெற்ற கணவன்மாரைப் பெற்றால்', 'தம்மையடைந்த கணவர்களை வழிபட்டு அவர்களது அன்பிற்கு உரியராகப் பெறுவாராயின்', 'தன் கணவனைக் காதலால் வழிபடுதல் செய்வாராயின்' என்ற பொருளில் உரை தந்தனர்.

பெற்றானைத் (கணவனைத்) தனக்கே உரியவனாகப் பெற்றால் என்பது இத்தொடரின் பொருள்.

பெறுவர் பெண்டிர் பெருஞ்சிறப்புப் புத்தேளிர் வாழும் உலகு:
பதவுரை: பெறுவர்-அடைவர்; பெண்டிர்-பெண்கள்; பெரும்-பெரியதாகிய; சிறப்பு-பெருமை; புத்தேளிர்-வானவர்; வாழும்-வாழ்கின்ற; உலகு-உலகம்.

இத்தொடர்க்குத் தொல்லாசிரியர்கள் உரைகள்:
மணக்குடவர்: பெண்டிர் தேவர் வாழும் பெரிய சிறப்பினையுடைய உலகத்தைப் பெறுவர்.
பரிப்பெருமாள் கருத்துரை: இதனானே அதனின் மாறுபட ஒழுகினார் நரகம் புகுவர் என்றவாறு. இது மறுமைப் பயன் கூறிற்று. இவை மூன்றினானும் பெண்டிர் இலக்கணமும் அவர் பெறும் பயனும் கூறப் பெற்றன.
பரிதி: தன்பத்தாவும் பூலோகமும் இவள் பதிவிரதை என்ன மனமகிழ்ந்த கற்பினாள் பெறுவள் தேவர்கள் செய்யும் சிறப்பை என்றவாறு.
பரிதி குறிப்புரை: இதற்கு ஒப்பனைகள் கண்ணகியாரைக் கண்டுகொள்க என்றவாறு.
காலிங்கர்: மற்று அவர் பெறுவர் இம்மை ஆக்கமும், மிகவும் சிறப்புடைத்தாகிய தேவர்கள் வாழும் உலகினையும் என்றவாறு.
பரிமேலழகர்: பெண்டிர் புத்தேளிர் வாழும் உலகின் கண் அவரால் பெருஞ்சிறப்பினைப் பெறுவர்.
பரிமேலழகர் குறிப்புரை: இதனால் தற்கொண்டாற் பேணிய மகளிர் புத்தேளிரால் பேணப்படுவர் என்பது கூறப்பட்டது.

'பெண்டிர் தேவர் வாழும் பெரிய சிறப்பினையுடைய உலகத்தைப் பெறுவர்' என்ற பொருளில் பழைய ஆசிரியர்கள் இத்தொடர்க்கு உரை கூறினர்.

இன்றைய ஆசிரியர்கள் 'மனைவியர் மேலுலகிலும் பெருஞ்சிறப்புப் பெறுவர்', 'மகளிர் தேவர்கள் வாழும் உலகில் அவர்களால் பெருஞ்சிறப்புப் பெறுவர்', 'மகளிர் தேவர்கள்வாழ்கின்ற உலகத்திலே மிக்க மேம்பாட்டை யடைவர்', 'பெண்கள் தேவர் வாழும் உலகில் உள்ள பெருஞ்சிறப்பினை அடைவர்' என்றபடி பொருள் உரைத்தனர்.

மகளிர் சொர்க்க உலகப் பெருஞ்சிறப்பை இங்கேயே பெறுவர் என்பது இத்தொடரின் பொருள்.

நிறையுரை:
தனக்கே உரியவனாகக் கணவனை அடைந்த பெண் சொர்க்க உலகம் பெற்றது போல உணர்வாள் என்னும் பாடல்.

கணவனைத் தனக்கே உரியவனாகப் பெற்றால் மகளிர் மேலுலகப் பெருஞ்சிறப்பை இங்கேயே பெறுவர் என்பது பாடலின் பொருள்.
இக்குறள் அடிக்கடித் தவறாக மேற்கோள் காட்டப்படுகிறதே ஏன்?

பெறுவர் என்ற சொல்லுக்கு அடைவர் என்பது பொருள்.
பெண்டிர என்ற சொல் பெண்மக்கள், மனைவியர் என்ற பொருள் தரும்.
சிறப்பு என்னும் சொல் உயர்வு அல்லது பெருமை என்னும் பொருளில் வழங்குகிறது.
புத்தேளிர் என்பது வானுறையும் தேவர்களைக் குறிப்பது.

முன்னர் கற்புடைய மனைவியை அடைந்த பேறு பெற்ற கணவனைப் பற்றிச் சொல்லப்பட்டது (குறள் எண்:54). இக்குறளில் கற்புள்ள ஆடவரைக் கணவனாகப் பெற்ற மனைவி அடையும் பேரின்பம் கூறப்படுகிறது.

இக்குறட்பாவிலுள்ள 'பெற்றான் பெறின்' என்ற தொடர் ஒரு புதிர்போல் அமைந்தது. புதிரின் விடைய, மணக்குடவர், ('பெற்றார்ப்' எனப் பாடம் கொண்டு) 'தம்மை (மனைவியராகப்) பெற்றவரையே தமக்குத் (தலைவராகப்) பெறின்' என்று திறம்பட உரை கண்டு, முதலில் கண்டார். பின்வந்த காலிங்கர் இதை முழுமையாக ஏற்று தனது உரை அமைத்தார்.
இவ்வுரையைத் 'தனக்கே உரிய கணவனாகப் பெற்றவள்' என்று விளக்கினர். தனக்கு உரிய கணவன் என்பது தன்னைத் தவிர வேறு பெண்களை நோக்காத கொழுநன் அதாவது புறம்போகாத, கற்புடைய ஆடவனைக் குறிக்கும். கற்பு இருபாலரிடத்தும் விளங்கல் வேண்டுமென்பதையே வள்ளுவர் எப்பொழுதும் விரும்பினார்.
தாம்வீழ்வார் தம்வீழப் பெற்றவர் பெற்றாரே
காமத்துக் காழில் கனி

(பொருள்: தாம் விரும்பும் காதலர் தம்மை விரும்புகின்ற பேறு பெற்றவர், காதல் வாழ்க்கையின் பயனாகிய விதை இல்லாத பழத்தைப் பெற்றவரே ஆவர்.) என்னும் பாடலில் இடம்பெற்ற 'பெற்றவர் பெற்றாரே' எனவரும் தொடரில் உள்ள பொருளில்தான் 'பெற்றான் பெறின்' என இங்கு அமைந்துள்ளது. 'தன்னைப்போல் நல்லொழுக்கத்தில் உளஉறுதி படைத்த கணவன் கிடைக்கும் பேறு பெற்றால்' என்பது இத்தொடரின் பொருள்.

குறளின் இரண்டாம் பகுதி அத்தகைய மகளிர் 'புத்தேளிர் வாழும் உலகின் பெருஞ்சிறப்புப் பெறுவர்' என்கிறது. புத்தேளிர் வாழும் உலகு என்பது புலவர் கற்பனையால் படைக்கப்பட்ட மேலுலகம். எவர்க்கும் எட்டாத அவ்வுலகம் இந்நிலவுலகினும் மேம்பட்டதாக எண்ணப்படுவது. இவ்வுலகில் காணப்படும் குறைபாடுகள் அவ்வுலகில் இல்லை. அது பேரின்பத்திற்கு நிலைக்களமாகவும் உள்ளதாகும். அப்படிப்பட்ட உலகத்தில் கிடைக்கக்கூடிய இன்பத்தை கணவனை முழுமையாகப் பெற்ற மனைவி இங்கேயே பெறுவாள் என்பது கருத்து.

மனைவிக்கு மட்டுமே உரியவனாகும் கணவனைப் பற்றியது இப்பாடல். தன்னை அவனுக்கு மட்டுமே உரிமையாக்கிக் கொள்பவள், அவனும் தனக்கே உரியவனாக ஆகிவிட்டால் அவள் அடையும் இன்பத்துக்கு எல்லை இல்லை. காதலிலே கட்டுண்ட இவர்களது இல்லறத்தில் கற்பொழுக்கம் நிலைத்து நிற்கும். இவர்களது நெஞ்சங்கள் செல்லும் இடங்களில் எல்லாம் உழன்று திரிவதில்லை. புறம்போகாத ஆடவனைக் கணவனாகப் பெற்றதாலும், மனைமாட்சி தன்னிடத்து இருத்தலினாலும், வெற்றியும் புகழும்பெற்ற இன்ப வாழ்க்கை நடத்துவாள் இவள்.
கற்பில் சிறந்த மனைவியப் பெற்றதால் அவன் பேறு பெற்றான். அதுபோலவே தான் விரும்பியவாறு பிறன்மனை நோக்காதவனாக கணவன் அமைந்ததால் அவளும் பேறு பெற்றாள். இவ்விருபேறும் ஒரு பேறாய் இணைந்து பெரும்பேறாய்ச் சிறக்கிறது. அந்த நிலையில் புத்தேளிர் வாழும் உலகிலே பெறத்தக்க இன்பச் சிறப்பினை இவ்வுலகிலேயே அடைவர் என்பதில் யாருக்கு ஐயம் பிறக்கும்? இருவரும் பெறுவதைக் கூறவருகின்ற வள்ளுவர், அதை இவள் மேல் வைத்து ஓதுவது ஏன்? என்றெழும் வினாவிற்கு, 'வளத்தக்காள் என்பதால் குறிக்கப்பட்டபடி இவளே இல்லறத்திற்கு இன்றியமையாத சிறப்பினள் ஆதலின் என்க' என அமைதி கூறுவார் தெ பொ மீ..

''பெற்றார்ப் பெற' பெண்டிர் கற்புடைய ஆடவரைத் தேர்ந்தெடுக்கும் பயிற்சியில் தேர்ச்சி பெறுதல் வேண்டும்; ஒத்த குணநலன்கள் உடைய ஒருவனைத் தேர்ந்தெடுக்கக் களவு முறையே பழந்தமிழரால் அறிவுறுத்தப் பெற்றது' என்று கூறி; களவு மணம் உயிர்ப்புற்றால் இன்பவாழ்வு எய்தமுடியும் என்ற பரிந்துரையும் செய்கிறார் திரு வி க.

இக்குறள் ஏன் தவறான பொருளில் சிலரால் உரை காணப்பட்டது?

தொல்லாசிரியர்களில், பரிதி 'ஊராரும் கணவரும் அவளை கற்புடைமை கொண்டவள் என மகிழ்ந்தால்' அதாவது கற்புடைய மனைவியை அவன் பெற்றால் என்றும் பரிமேலழகர் 'தம்மைப் பெற்ற கணவனை வழிபடுதல் பெறுவராயின்' என்றும் உரை செய்தனர். இவர்களது விளக்கங்கள் குறளின் உரைப்போக்கை மாற்றிவிட்டன. பின்வந்த மற்ற உரையாசிரியர்கள் 'கற்பு என்ற மன உறுதியுள்ள பெண்ணை கணவன் மனைவியாகப் பெறுவானாயின்' என்றும் பெண்மைக்குரிய சிறப்பியல்புகளை அடைந்து சிறப்புறும் பெண்ணை ஒருவர் வாழ்க்கைத் துணைநலமாகப் பெறின்' என்றும் விளக்கத் தொடங்கினர். பெண்ணின் கற்புக் குணங்களை மட்டும் கூறிவிட்டு அவனது 'கற்பு' பற்றி இவ்வுரைகள் ஒன்றும் பேசவில்லை என்பது நோக்கத்தக்கது.
'பழைய உரையாசிரியர்கள் சில ஸ்மிருதி மொழிகளை உளங்கொண்டு இப்பாட்டுக்கு உரை கண்டுள்ளரென்று தெரிகிறது' என்பார் திரு வி க. இவர் சுட்டும் சுலோகம் கணவனுக்குப் பணிவிடை செய்வதனாலேயே பெண்கள் சொர்க்கத்தில் பெருமை அடைகின்றார்கள்; பெண்கள் இறந்தபின் தேவர் சிறப்புச் செய்ய இப்போது கணவனை வழிபடுதல் வேண்டும் எனச் சொல்கிறது. இதை மனத்தில் கொண்டே பரிமேலழகர் முதலான உரையாசிரியர்கள் 'பெற்றாற் பெறின்' என்ற தொடருக்குத் தம்மை எய்திய கணவனை வழிபடுதல் பெறுவராயின் என்ற உரை வரைந்தனர் என்று தோன்றுகிறது.
மகளிர் தனிமையாகச் செயல்புரிந்து நேரே துறக்கம் செல்ல முடியாது என்று ஸ்மிருதி கூறுகிறது. வள்ளுவரோ மனைவியால் கணவனும் மேன்மையடைவான் என்ற கருத்துக் கொண்டதுடன், இல்லாளுக்கு புத்தேள் உலகம் செல்லும் உரிமையையும் வழங்குகிறார்.
குறளின் நோக்கம் அறியாமல், பிற நீதிநெறியால் பாதிக்கப்பட்டு எழுதப்பட்ட உரையான 'தம்மை எய்திய கணவனை வழிபடுதல் பெறுவராயின்' என்றது பிழையான பொருளுக்கு வழி காட்டியது. பிழையான உரையைப் பின்பற்றியோர்தாம், ஆணுக்குச் சேவை செய்யப் பிறந்த ஒரு அடிமைதான் பெண் என்பதைத் தாண்டி குறள் கருத்துக் கூறிவிடவில்லை என்று வசை பாடுவர். மேற்சொன்னபடி, இக்குறளின் உணமையான பொருளை உணர்ந்தால் இவர்கள் இவ்விதம் பேசமாட்டார்கள். இதுவே இக்குறள் தவறாக மேற்கோள் காட்டப்படுவதற்கான காரணம்.

கணவனைத் தனக்கே உரியவனாகப் பெற்றால் மகளிர் மேலுலகப் பெருஞ்சிறப்புப் பெறுவர் என்பது இக்குறட்கருத்து.



__________________
Page 1 of 1  sorted by
 
Quick Reply

Please log in to post quick replies.



Create your own FREE Forum
Report Abuse
Powered by ActiveBoard