புகழ்புரிந்த இல்லிலோர்க்கு இல்லை இகழ்வார்முன் ஏறுபோல் பீடு நடை (அதிகாரம்:வாழ்க்கைத்துணை நலம் குறள் எண்:59)
பொழிப்பு:புகழைக் காக்க விரும்பும் இல் இல்லாதவர்க்கு, இகழ்ந்து பேசும் பகைவர்முன் பெருமித நடை இல்லை.
மணக்குடவர் உரை: புகழ்பொருந்தின மனையாளை இல்லாதார்க்கு இல்லையாம்: தம்மை யிகழ்ந்துரைப்பார்முன் ஏறுபோல நடக்கும் மேம்பட்ட நடை. ஏறு நடை- அசைவும் தலையெடுப்பும் பொருந்திய நடை.
பரிமேலழகர் உரை: புகழ் புரிந்த இல் இலோர்க்கு - புகழை விரும்பிய இல்லாளை இல்லாதார்க்கு; இகழ்வார் முன் ஏறு போல் பீடுநடை இல்லை - தம்மை இகழ்ந்துரைக்கும் பகைவர்முன் சிங்க ஏறு போல நடக்கும் பெருமித நடை இல்லை. ('புரிந்த' என்னும் பெயரெச்சத்து அகரம் விகாரத்தால் தொக்கது. பெருமிதம் உடையானுக்குச் சிங்க ஏறு நடையான் உவமம் ஆகலின், 'ஏறுபோல' என்றார். இதனால் தகைசான்ற சொல் காவா வழிப்படும் குற்றம் கூறப்பட்டது.)
இரா சாரங்கபாணி உரை: புகழை விரும்பிய மனைவியைப் பெறாதார்க்கு இகழ்ந்து பேசும் பகைவன்முன் காளைபோல் நடந்துசெல்லும் பெருமிதமில்லை.
பொருள்கோள் வரிஅமைப்பு: புகழ்புரிந்த இல்லிலோர்க்கு இகழ்வார்முன் ஏறுபோல் பீடு நடை இல்லை.
இத்தொடர்க்குத் தொல்லாசிரியர்கள் உரைகள்: மணக்குடவர்: புகழ்பொருந்தின மனையாளை இல்லாதார்க்கு; பரிதி: இன்னாள் 'பதிவிரதை' என்று சொல்லும் சொல் பெறாத மடவரை மனையாளகவும் உடையான்; காலிங்கர்: கற்பினால் பெரிதும் புகழ தங்கப்பட்ட இல்லாளை இல்லாதவற்கு; பரிமேலழகர்: புகழை விரும்பிய இல்லாளை இல்லாதார்க்கு; பரிமேலழகர் குறிப்புரை: 'புரிந்த' என்னும் பெயரெச்சத்து அகரம் விகாரத்தால் தொக்கது.
'புகழ்பொருந்தின மனையாளை இல்லாதார்க்கு' என்ற பொருளில் பழம் ஆசிரியர்கள் இத்தொடர்க்கு உரை நல்கினர்.
இன்றைய ஆசிரியர்கள் 'மனைவி புகழ் காவாவிடின்', 'கற்பினால் வரும் புகழினை விரும்பி நடக்கும் மனையாளில்லாதவருக்கு', 'புகழை விரும்பிய மனைவியைப் பெறாதவர்க்கு', 'பெண்களுக்குப் புகழ் தரும் கற்புக்குணம் இல்லாத பெண்ணை மனைவியாகக் கொண்டுவிட்ட ஒருவனை' என்ற பொருளில் உரை தந்தனர்.
புகழ் விரும்பிய இல் இல்லாதார்க்கு என்பது இத்தொடரின் பொருள்.
இத்தொடர்க்குத் தொல்லாசிரியர்கள் உரைகள்: மணக்குடவர்: இல்லையாம் தம்மை யிகழ்ந்துரைப்பார்முன் ஏறுபோல நடக்கும் மேம்பட்ட நடை. மணக்குடவர் குறிப்புரை: ஏறு நடை- அசைவும் தலையெடுப்பும் பொருந்திய நடை. பரிப்பெருமாள்: மனையாள் ஒழுக்கக் குறைபாட்டால் அறத்திற்கு வரும் குற்றம் என்ன? என்றார்க்கு, அதனானே தலையிறக்கம் வரும். வந்தாற்பின் வாழ்க்கைத் தருமம் செல்லாது என்பது. பரிதி: தன்னை வேண்டார் முன்னே 'இன்னார் ரிஷபம் போல திரிகின்றான்' என்று ஏசுதற்கு இடமாவான் என்றவாறு. காலிங்கர்: இல்லை ஏறுபோன்றுள்ளதோர் பெருமை ஒழுக்கம் என்றவாறு. பரிமேலழகர்: இல்லை தம்மை இகழ்ந்துரைக்கும் பகைவர்முன் சிங்க ஏறு போல நடக்கும் பெருமித நடை. பரிமேலழகர் கருத்துரை: பெருமிதம் உடையானுக்குச் சிங்க ஏறு நடையான் உவமம் ஆகலின், 'ஏறுபோல' என்றார். இதனால் தகைசான்ற சொல் காவா வழிப்படும் குற்றம் கூறப்பட்டது.
'தம்மை இகழ்ந்துரைப்பார்முன் சிங்க ஏறு போல நடக்கும் பெருமித நடை இல்லை' என்றபடி பழைய ஆசிரியர்கள் இத்தொடர்க்கு உரை கூறினர்.
இன்றைய ஆசிரியர்கள் 'பகைவர் முன் காளைபோன்ற நடை கணவனுக்கு இராது', 'தம்மை இகழ்ந்து பேசும் பகைவர் முன்னே ஆண்சிங்கம் போல நடக்கும் பெருமித நடை இல்லை', 'தம்மை இகழ்ந்துரைக்கும் பகைவர் முன்னிலையில் ஏறு போன்ற பெருமித நடை கிடையாது. (கற்பில்லா) மனைவியைப் பெற்றவன் வெட்கத்தால் தலைகுனிந்து நடக்க வேண்டி வரும்', 'அதற்காக யாரேனும் ஏளனம் செய்தால் அப்படி ஏளனம் செய்கிறவர்களுக்கு முன்னால் அவன் ஆண்பிள்ளைக்குரிய கம்பீரத்தோடு நிமிர்ந்து நடக்க முடியாமல் தலை குனிய வேண்டியதுதான்' என்றபடி பொருள் உரைத்தனர்.
தம்மை இகழ்ந்துரைப்பார்முன் ஆண் சிங்கம் போல நடக்கும் பெருமித நடை இல்லை என்பது இத்தொடரின் பொருள்.
நிறையுரை: நற்பெயர் பெற்ற குடும்பம் பெற்றார் வீறு கொண்ட நடை போடுவர் என்னும் பாடல்.
புகழ்புரிந்த இல் இல்லாதார்க்குத் தம்மை இகழ்ந்துரைப்பார்முன் ஆண் சிங்கம் போல நடக்கும் பெருமித நடை இல்லை என்பது பாடலின் பொருள். புகழ் புரிந்த இல் இல்லாதார் யார்?
இல் என்ற சொல்லுக்கு இங்கு இல்லம், இல்லாள் என்பன பொருந்தும். இலோர்க்கு என்ற சொல் இல்லாதவர்க்கு என்ற பொருள் தரும். இகழ்வார் என்பதற்குத் தூற்றிப் பேசுவோர் என்பது பொருள். ஏறு என்ற சொல்லுக்கு காளை என்றும் ஆண் சிங்கம் என்றும் பொருள் உண்டு. காளை என்பது பழைய வழக்கு; ஆண் சிங்கம் என்று இப்பொழுது கொள்வர்.
நற்பெயர் பெறாத குடும்பம் சமுதாயத்தில் மதிப்பிழக்கிறது.
குறைபாடு உடைய குடும்பம் நிமிர்ந்த நடை இழக்கும் என்கிறது இக்குறள். முதல் வரியிலுள்ள 'இல்' என்ற சொல்லுக்கு இல்லம் என்றும் இல்லாள் என்றும் இருவிதமாகப் பொருள் கொள்ளமுடியும். பாடல் சொல்நடைப்படி, புகழ் பொருந்தாத இல்லறத்தில் உள்ளோர்க்குச் சிங்கம் போன்ற பெருமித நடை இல்லை என்பதும் பொருத்தம்தான். இல்லறம் நடத்துவோரான கணவன், மனைவி இருவரையும் இல்லத்தார் என்று கொண்டால், இப்பாடலுக்கு, இல்லறத்தை நல்லறமாக ஓம்பாத இல்லத்தைக் கொண்டவர் இகழ்ச்சி அடைவர் என்ற பொருள் அமையும். இல்லத்தின் புகழை விரும்புவோர் இல்லாத இல்லத்தோர் பெருமித நடை நடக்க இயலாது என்கிறது இக்குறள். அதிகாரம் 'வாழ்க்கைத்துணை நலம்' ஆதலால் துணையாகிய மனைவியின் கடமையே புகழ் புரிதல் ஆகும் என்பர். வாழ்க்கைத்துணை என்பது இருவரையும் குறிக்கும் என்ற கருத்தும் உண்டு. அந்த வகையில் இக்குறள் இருவரையும் சேர்த்தே குறிப்பதாகக் கொள்ளலாம். மேலும் ஏறு என்பது காளை அல்லது ஆண் சிங்கம் என்று பொருள்படும் ஆதலால் இது கணவனுக்கு உண்டாகும் இழுக்கு பற்றிச் சொல்வதாகக் கொள்வதே சரியாகும் என்பர். ஆனால் பீடு நடை பெண்களுக்கும் உண்டானதுதான். எனவே இல் என்பதற்கு இல்லம் என்று கொண்டு இக்குறட்பொருளைப் புரிந்து கொள்வதில் குற்றமில்லை. குடும்பத்தை மாண்புடன் கணவனும் மனைவியும் இணந்து நடத்திச் செல்வர். மாண்புகெட இகழ்ச்சி வந்து சேரும். அது குடும்பத்திலுள்ளோர் அனைவரையும் பாதிக்கும். இருவர் மாட்டும் நன்மையமைந்த புகழ் வளருமாறு விரும்பி இல்லறம் நடாத்தி வரப்பெற்றால், அந்த இல்லம் சிறந்து விளங்கும். புகழை விரும்பி குடும்பம் செலுத்தப்படாவிட்டல், இல்லத்திலுள்ளோர் சமுதாயத்தில் இறுமாந்து நடத்தல் இயலாது; அவர்கள் தலையிறக்கம் பெறுகிறார்கள் என்பது கருத்து. இவ்வாறாக வாழ்க்கைத்துணை நலம் எதிர்மறை நடையால் விளக்கப்பட்டது
குறளின் இரண்டாம் பகுதிக்கு 'தம்மை இகழ்வார்முன் ஏறு போல நடக்கும் பெருமித நடை இல்லை' என்பது பொருள். இந்நடையை அசைவும் தலை எடுப்பும் பொருந்திய நடை என்று அழகுற விளக்கினார் மணக்குடவர். பரிதி குறள் நடையை உடன்பாட்டில் மாற்றி, இன்னார் மனையாள் என்ற சொல் பெறும்படி நடவாதவளை உடையவனை, அவனை வேண்டாதார் 'இவன் மாடு மாதிரி திரிகின்றான் பார்' என்று இகழ்வர் என எழுதினார். இவர் உரை கண்டிருக்கும் திறம் புதுமையாய் இருந்தாலும் சொற்கிடக்கை முறை குறட்கருத்தொடு பொருந்துமாறு இல்லை.
குறளின் இரண்டு பகுதிகளுக்கும் இடையிலே அமைந்த 'இல்லை' என்னும் சொல் ஒருவகை அழுத்தம் ஒலிக்க இரண்டு பகுதிகளையும் இணைத்துக் காட்டும் நடைப்பாங்கு குறிப்பிடத்தக்கது. (இ சுந்தரமூர்த்தி)
'புகழ் புரிந்த இல் இல்லாதார்; யார்?
புகழ் புரிந்த என்றதற்கு புகழ் பொருந்திய என்றும் புகழ் விரும்பிய என்றும் பழம் ஆசிரியர்கள் பொருள் கொள்வர். 'பொருள்சேர் புகழ்புரிந்தார் மாட்டு' (குறள் 5) என்ற தொடர் கொண்ட பாடலிலும் புகழ்புரிந்தார் என்பதற்கு அவ்வாறே, புகழ் பொருந்திய, புகழ் விரும்பிய) என்றவாறே அவர்கள் பொருள் கொண்டனர். 'புகழ் புரிந்த இல் இல்லாதார்' என்றதில் உள்ள 'இல்' என்பதற்கு மனைவி என்று கூறியவர்கள், இத்தொடர்க்குப் 'புகழ் விரும்பும் மனைவியைப் பெறாதவர்' எனப் பொருள் கூறினர். அவர்கள் இத்தொடர் கேட்டவுடன், 'மகளிர் பிறன்மனை புகுதல் இயல்பு என்ற தொனி தெரிகிறது; பாலியல் ஒழுக்கம் இல்லாத அதாவது படிதாண்டும் பத்தினியைப் பற்றிய பாடல் இது' என்று விரைந்து முடிவு கொண்டனர். புகழ் பொருந்தா மனைவி என்றால் பாலியல் கட்டுப்பாடுகளை மீறும் கற்பில் குறைந்த பெண் என்று பொருள் உரைத்தனர். கற்பு காத்தலின் சிறப்பு பற்றி ஏற்கனவே முந்தைய குறளில் (குறள் எண்: 54) கூறப்பட்டுவிட்டது. எனவே மீண்டும் அதுபற்றிக் கூறத் தேவையில்லை. இல்லத்தின் புகழ் குன்றுவதற்கு வேறு காரணங்கள் நிறைய இருக்கின்றன. எனவே இத்தொடர்க்குப் 'புகழ் விரும்பும் மனைவி' என்பது பொருளாக இருக்கமுடியாது.
'இல்' என்ற சொல்லுக்கு இல்லம் என்ற பொருள் பொருத்தமாகப்படுகிறது. 'புகழ் புரிந்த இல் இல்லோர்' என்பதற்கு 'புகழ் விரும்பிய இல்லறம் கொள்ளாதார்' என்பது கருத்தாகிறது. இப்பொருளில் 'புகழ் புரிந்த இல்'என்பது இல்வாழ்வானும் இல்லாளும் மனையறத்தில் சிறந்து விளங்குதலைக் குறித்து 'புகழ் விரும்பிய இல்லம்' என்ற பொருளைத் தரும். புகழ் புரிதல் என்பது இல்லாள் மனைமாட்சியுடன் திகழ்ந்து, இல்வாழ்வானும் சிறந்த நெறி காத்து, இல்லறத்துக்கு பெருமை சேர்ப்பதைக் குறிப்பது. குடும்பத்தை நடத்திச் செல்வதில் இருவருக்கும் சமபங்கு உண்டு. புகழ் விரும்பும் குடும்பத்தில் கணவன்-மனைவி ஒருவருக்கொருவர் விட்டுக் கொடுத்து குடும்பத்தின் பெருமையைக் காப்பாற்றுவர். பண்புகளாலும் செயல்களாலும் புகழ் பொருந்தியவர்களாக அவர்கள் இல்லாமல் இருந்தால், அது தொடர்பான இழிவுகள் இல்லத்துக்கு வந்து சேரும். அப்பொழுது சமூகத்தினர் முன் இருவருமே நிமிர்ந்த நடை கொள்வதென்பது இயலாது.
புகழ்விரும்பும் இல் இல்லாதார்க்கு தம்மை இகழ்ந்துரைப்பார்முன் சிங்கம் போல நடக்கும் பெருமித நடை இல்லை என்பது இக்குறட்கருத்து.