திருக்குறள், இந்த உலகிற்கு தமிழ் சமூகம் ஈன்ற கொடை.
உலக பொதுமுறை தான் எங்கள் திருக்குறள். இதனை நாம் பெருமையுடன் கூறுவோம்.
பாரதியார் கூறியது போன்று இது ஒரு வான்மறை தான். அனைவருக்கும் பொதுவான மறை, மறை என்றால் வேதம். இதை உலகமே போற்றலாம், இதன் வழி நடந்து அனைவரும் நலம் பெறலாம். ஆனால், இதை எந்த சமயமும் சார்ந்தது இல்லை எனவும், இந்து மத நம்பிக்கையை கூறா நூல் என கூறி வரும் தற்குறிகளுக்காகவே இந்த பதிவு.
திருக்குறள் பல குறள்களில் இந்து மத நம்பிக்கையை பற்றி பேசுகின்றன.
இந்துக்கள் ஒன்றும் சுயநலவாதிகள் அல்ல. அவர்கள் தங்கள் மதத்தின் மூலமாக இந்த உலகிற்கு பல நற்வழிகளையும், மாபெரும் நூல்களையும் வாழும் கலைகளையும் வாரி வழங்கியுள்ளார்கள்.
அவர்கள் அந்த நூல்களையும் மறைகளையும் இந்த உலக நலன் கருதி பொதுவாக தான் படைத்தார்கள். அதே சமயம், அது பொது என்பதால் அது இந்து மத நூல் இல்லை என்றும் இந்து மத நம்பிக்கை பற்றி திருவள்ளுவர் ஏதும் கூறவில்லை என்றும் கூறினால் உங்கள் அறிவாற்றலை எண்ணி நகைக்காமல் இருக்க இயலவில்லை.
பல ஆண்டுகளாக திருக்குறளில் கடவுள் என்ற வார்த்தையும் இல்லை, எந்த ஒரு கடவுளையும் குறிப்பிட்டு வள்ளுவர் குறள் இயற்றவில்லை என்ற ஓர் பொய் பிரச்சாரம் நடந்த வண்ணமே உள்ளது. அதை சரி பார்க்க கூட திறன் இன்றி பல ஞான கொழுந்துகள் சமூக வலை தடங்களில் மேலும் பகிர்ந்து கொண்டுள்ளார்கள்.
இன்னும் நடுநிலை நாயகன் என்ற போர்வையில் நீங்கள் இதை ஆமோதித்தால் கீழே உள்ள குறள்களை படித்து தெளிவு பெறவும்.
இந்த உவமைகளும் குறிப்புகளும் நான் உருவாக்கினவை என்று மார் தட்டி கொள்ள இங்கே பதிவிடவில்லை. இந்த பதிவில் வரும் அனைத்தும் பல சான்றோர்களால் பல வருடங்களாக கூறப்பட்டு வந்தவையே. ராமருக்கு அணில் உதவியது போன்றே, நானும் அவைகளை ஒன்று திரட்டி ஓர் இடத்தில் தொகுத்து வைக்கும் சிறிய செயலையே செய்கிறேன்.
சரி, இனி விளக்கங்களுக்கு செல்வோம்.
முதல் அதிகாரமே கடவுள் வாழ்த்தில் தான் துவக்கம்.
1. அகர முதல எழுத்தெல்லாம் ஆதி
பகவன் முதற்றே உலகு
அய்யன் வள்ளுவர் தன் முதல் குறளை துவக்கும் போதே எங்கள் இறைவனை முன்னிறுத்தியே துவங்குகிறார்.
10. பிறவிப் பெருங்கடல் நீந்துவர் நீந்தார்
இறைவன் அடிசேரா தார்
ஒருவர் இறைவனை நாடி அவரது அடி சேராமல் இருப்பாராயின், அவர் மீண்டும் இந்த உலகில் பிறந்து துன்பத்துக்குள்ளாவார்கள் என்பதே வள்ளுவனின் கருத்து. முற்பிறவியிலும் மறு பிறவியிலும் நம்பிக்கை கொண்ட மதம் இந்து மதம். இக்குறள் மூலம், வள்ளுவர் இந்து மத நம்பிக்கையான மறுபிறவியை பற்றி எழுதியுள்ளார்.
18. சிறப்பொடு பூசனை செல்லாது வானம்
வறக்குமேல் வானோர்க்கு ஈண்டு
இவ்வுலகில் மழை பெய்யாமல் இருக்குமேயானால், வானவர்க்கு செய்யும் எந்த விழாவும் பூசைகளும் நடைப்பெறாது என்று உணர்த்தும் குறள். இதில் கூறப்பட்டிருக்கும் பூசையும் வான் வழிபாடும் இந்து மத நம்பிக்கைகளையும் பழக்கங்களையும் வழிபாடுகளையும் குறிப்பதல்லவா?
25. ஐந்துஅவிந்தான் ஆற்றல் அகல்விசும்பு னார்கோமான்
இந்திரனே சாலும் கரி
தனது ஐம்புலனையும் அடக்க தெரியாதொருவனுக்கு என்ன தீங்கு நேரிடும் என்பதற்கு அந்த இந்திரனே ஒரு சான்று. இந்த குறளில் வரும் இந்திரன் எந்த மதம் சார்ந்தவர்களின் நம்பிக்கை என்று கூற முடியுமா? திருக்குறளில் எந்த கடவுள் பெயரும் இல்லை என்று பொய்யாக கூறி திரியும் மகாஜனங்களே இப்பொழுது புரிகிறதா?
55. தெய்வம் தொழாஅள் கொழுநன் தொழுதெழுவாள்
பெய்எனப் பெய்யும் மழை
எல்லோரும் போற்றும் அந்த கடவுளை வழிபடவில்லையென்றாலும் தன் கணவனை உண்மையாய் போற்றி வரும் பெண்களின் பெருமையை உணர்த்தும் குறள் இந்த குறள். இது எப்படி “திருமணம் சில கால நிகழ்வு” என்றும், அது “இன்னும் 50 – 100 வருடத்தில் மறைந்துவிடும்” என்றும் கூறிவரும் தகரமுத்துவிற்கு தெரியாமல் போனது?
ஆயிரம் ஆயிரம் வருடங்களாக நமது தமிழ் சமுதாயம் இந்த திருமணம் என்ற ஓர் சமூக நிகழ்வை தாங்கி பாதுகாத்து வந்துள்ளது என்பதையே இக்குறள் நினைவூட்டுகிறது. அது இறக்க நாம் ஒரு காரணம் என்று கூறும் போது ஓர் குற்ற உணர்வுகூட இல்லையா? அதை பாதுகாத்து எவ்வாறு நமது முன்னோர்கள் நம்மிடம் வழங்கினார்களோ அதே போன்று நாமும் நம் அடுத்த சங்கதியினருக்கு வழங்கி செல்லவில்லை என்றால் நாம் இந்த பிறவியில் பிறந்து தான் என்ன பயன்?
62. எழுபிறப்பும் தீயவை தீண்டா பழிபிறங்காப்
பண்புடை மக்கள் பெறின்
ஒருவன் நற்பண்புகள் கொண்ட மக்களை பெற்றிருந்தால் அவருக்கு இந்த பிறப்பில் மட்டுமல்ல ஏழு பிறவியிலும் எந்த துன்பமும் தோன்றாது என்ற இந்த குறள் மூலம் இந்து மதத்தின் நம்பிக்கையை எடுத்துரைக்கவில்லையா? மறுபிறப்பில் நம்பிக்கை உள்ள மதம் இந்து மதம் தவிர வேறு ஒன்று உண்டா?
167. அவ்வித்து அழுக்காறு உடையானைச் செய்யவள்
தவ்வையைக் காட்டி விடும்
இந்த குறளின் மூலம், பொறாமை பிடித்த ஒருவனிடமிருந்து ஸ்ரீதேவி விலகுவது மட்டுமல்ல, அவளது சகோதரியான மூதேவியை விட்டு செல்வாள் என்று நமக்கு கூற வருகிறார் வள்ளுவர். ஸ்ரீதேவியும் மூதேவியும் எந்த மத நம்பிக்கை உள்ள மக்கள் வழிபடுவார்கள்? அதை நான் கூறி தான் உங்களறிவுக்கு எட்ட வேண்டுமா?
260. கொல்லான் புலாலை மறுத்தானைக் கைகூப்பி
எல்லா உயிரும் தொழும்
ஒருவன் புலால் உண்பதை தவிர்த்தால், அனைத்து உயிரினங்களும் அவனை வணங்கும் என்பதே இந்த குறளின் பொருள். புலால் உணவை வேண்டாம் என்று வலியுறுத்த புலால் மறுத்தல் என்ற அதிகாரத்தையே இயற்றியுள்ளார் வள்ளுவர். இதை எந்த மதம் வலிறுத்துகிறது என்பதை உங்கள் பார்வைக்கே விட்டு விடுகிறேன்.
262. தவமும் தவமுடையார்க்கு ஆகும் அவம்அதனை
அஃதிலார் மேற்கோள் வது
தவம் செய்வது கூட முற்பிறவியில் நல்வினை கொண்ட மக்களாலேயே செய்யவல்லது என்பதே என் வள்ளுவனின் கருத்து. தவத்தில் சிறந்த பல முனிவர்களையும் ரிஷிகளையும் கொண்ட மதம் இந்து மதம். அப்படியிருக்க இந்த குறளில் வரும் தவம் என்ற சொல் வேறெந்த மதத்தினை குறிக்க முடியும்? அதுமட்டுமின்றி இந்த குறளின் மூலமாக இந்து மக்களின் நம்பிக்கையான முற்பிறவியின் பலனை பற்றியும் கூறுகிறார் அல்லவா?
380. ஊழின் பெருவலி யாவுள? மற்றொன்று
சூழினும் தான்முந் துறும்
நீ விதியை வெல்ல எது செய்தாலும் விதியே வந்து உன் முன் நிற்கும் என்று கூறும் வள்ளுவரின் குறள். விதி வலியது என்று நம்பும் மக்கள் இந்து மத வழி வந்தவர்கள். இங்கு ஊழி என்பது விதியையே குறிக்கும். இந்த குறளில் இந்து மத நம்பிக்கைகளை கூறவில்லை என்றால், வேறு எதை பற்றி கூறுகிறார்?
617. மடிஉளாள் மாமுகடி என்ப மடிஇலான்
தாள்உளாள் தாமரையி னாள்
இந்த குறளின் மூலமாக சோம்பேறியாக சுற்றி திரிபவனிடம் மூதேவியும், உடல் உழைப்பு கொண்டவனிடம் ஸ்ரீதேவியும் குடியிருப்பாள் என்பதை எடுத்துரைக்கிறார் வள்ளுவர்.
இந்த குரலில் தாமரையிலாள் என்று போற்றப்படுவது யார் என்று தெரிகிறதா? தாமரையில் அமர்ந்திருக்கும் ஸ்ரீதேவியையே இந்த குறள் குறிக்கிறது. ஸ்ரீதேவி எந்த மத கடவுள் என்று அறிவோம் அல்லவா?
இது போன்று பல திருக்குறளில் இந்து மத நம்பிக்கையை வலியுறுத்தியுள்ள நூல் தான் திருக்குறள்.
நான் ஒருபோதும் திருக்குறள் இந்து மதத்திற்கே சொந்தம் என்று கூறவில்லை. ஆனால், என்று ஒருவர் தீய நோக்கதோடு திருக்குறள் இந்து சமயம் சார்ந்ததில்லை என்று பொய் கூற்றை பரப்ப முயலுகிறார்களோ அப்போது அதை பொய் என்று நிரூபிப்பது நம் கடமையல்லவா?
எனவே தான் எந்த பதிவு.
இனியும் திருக்குறள் இந்து மத நம்பிக்கையை பற்றி கூறவில்லை என்று யாரும் கூறினால், மேலே கூறியவற்றை அவர்களுக்கு எடுத்துரைக்கவும்.
வேண்டுங்கால் வேண்டும் பிறவாமை மற்றது வேண்டாமை வேண்ட வரும்.
மணக்குடவர் உரை:
வேண்டுங்கால் பிறவாமையை விரும்புதல் வேண்டும்: அப்பிறவாமை பொருளை விரும்பாமையை விரும்பத் தானே வரும். இது பிறவாமையும் இதனாலே வருமென்றது.
ஆரா இயற்கை அவாநீப்பின் அந்நிலையே பேரா இயற்கை தரும். குறள் 370: அவாவறுத்தல்
ஒருபோதும் நிரம்பாத தன்மை உடைய அவாவை ஒழித்தால் ஒழித்த அந்நிலையே எப்போதும் மாறாதிருக்கும் இன்ப வாழ்வைத் தரும்.
பரிமேலழகர் உரை:
ஆரா இயற்கை அவா நீப்பின் - ஒருகாலும் நிரம்பாத இயல்பினையுடைய அவாவினை ஒருவன் நீக்குமாயின், அந்நிலையே பேரா இயற்கை தரும் - அந்நீப்பு அவனுக்கு அப்பொழுதே எஞ்ஞான்றும் ஒரு நிலைமையனாம் இயல்பைக் கொடுக்கும். (நிரம்பாமையாவது: தாமேயன்றித் தம்பயனும் நிலையாமையின் வேண்டாதனவாய பொருள்களை வேண்டி மேன் மேல் வளர்தல். அவ்வளர்ச்சிக்கு அளவின்மையின், நீத்தலே தக்கது என்பது கருத்து. களிப்புக்கு கவற்சிகளும் பிறப்புப் பிணிமூப்பு இறப்புக்களும் முதலாயின இன்றி, உயிர் நிரதிசய இன்பத்தாய் நிற்றலின் வீட்டினை 'பேரா இயற்கை' என்றும், அஃது அவாநீத்த வழிப்பெறுதல் ஒரு தலையாகலின், 'அந்நிலையே தரும்' என்றும் கூறினார். ஒன்றாய்க் கிடந்த அரும்பெரும்பாழ் உலப்பிலதனை உணர்ந்துணர்ந்து, சென்றாங்கு இன்பத்துன்பங்கள் செற்றுக்களைந்து பசையற்றால், அன்றே அப்போதே வீடும் அதுவே வீடு வீடாமே. (திருவாய் 78-6)என்பதும் இக்கருத்தே பற்றி வந்தது. இந்நிலைமை உடையவனை வடநூலார் 'சீவன் முத்தன்' என்ப. இதனால் வீடாவது இது என்பதூஉம், அஃது அவா அறுத்தார்க்கு அப்பொழுதே உளதாம் என்பதூஉம் கூறப்பட்டன.).