Devapriyaji - True History Analaysed

Members Login
Username 
 
Password 
    Remember Me  
Post Info TOPIC: கண்ணகியும் காரைக்கால் அம்மையாரும்


Guru

Status: Offline
Posts: 7602
Date:
கண்ணகியும் காரைக்கால் அம்மையாரும்
Permalink  
 


கண்ணகியும் காரைக்கால் அம்மையாரும்

பழைய தமிழ் இலக்கியங்களில் இன்று நமக்குக் கிடைத் துள்ள காப்பியங்களில் மிகப் பழமையானது சிலப்பதிகாரம். இது இரண்டாம் நூற்றாண்டில் தோன்றியது என்று அனைவரும் ஏற்றுக்கொள்கின்றனர். எனவே, இதனைத் தமிழில் தோன்றிய முதற்காப்பியம் என்று கூறலாம். பெரியபுராணம் சேக்கிழாரால் இயற்றப்பட்டது. இவர் இரண்டாம் குலோத்துங்க சோழனிடம் அமைச்சராக இருந்தவர் என்று தெரிகிறது. இவருடைய காலம் 12-ஆம் நூற்றாண்டு. பெரியபுராணத்திற்கு பிறகு 20-ஆம் நூற்றாண்டுவரை பெருங்காப்பியம் என்று சொல்லத் தக்கது எதுவும் தோன்றவில்லை. எனவே முதற்காப்பியம் என்று சிலம்பையும், கடைசிக் காப்பியம் என்று பெரியபுராணத்தையும் கூறலாம். இவ்விரண்டு காப்பியங்களிலும் பேசப்பெறும் இரண்டு பெண்மணிகளைப் பற்றி இங்கு ஆராயலாம். கண்ணகி சிலம்பு முழுவதும் வியாபித்து இருக்கிறாள் என்பது உண்மைதான். இதற்கு மாறாக பெரியபுராணத்தில் வரும் காரைக்கால் அம்மை யார் வரலாறு 53 பாடல்களில் அடங்கும். என்றாலும் இவ் இரு வரலாறுகளும் வியக்கத்தகுந்த ஒற்றுமையைத் தம்முள் கொண்டு விளங்குகின்றன.

இந்த இரண்டு பெண்மணிகளும் வணிகர் குலத்தைச் சேர்ந்தவர்கள். வணிகர்கள் என்று கூறியவுடன் ஏதோமளிகைக் கடை நடத்தும் சிறுவணிகர் என்று நினைத்துவிட வேண்டாம். கண்ணகியின் தந்தையும், காரைக்கால் அம்மையின் தந்தையும் கடல் வாணிபம் செய்த பெருவணிகர்கள் ஆவர். சங்கப் பாடலில் வரும் நல்கூர்ந்தார் செல்வமகள் (கலி) என்ற அடி இவர்கள் இருவரையும் நினைக்கும்போது நம் மனக்கண்முன் வருகின்றது. பெருஞ் செல்வராயினும், மக்கட் செல்வத்தில் வறுமை உடையவர்கள். அதாவது ஒரே குழந்தையை உடையவர்கள் என்பது பொருள். இவர்கள் இருவருமே தம் தாய் தந்தையர்க்கு ஒரே பெண்ணாகப் பிறந்தவர்கள். கண்ணகி காவிரிப்பூம் பட்டினத்திலும், புனிதவதியார் (காரைக்கால் அம்மையார்) காரைக் காலிலும் தோன்றியவர் ஆவர். இரண்டுமே தமிழகத்துள் கடல் வாணிபத்திற்குப் பெயர்போன நகரங்களாகும். பிறப்பு முதலிய வற்றால் ஒற்றுமை உடைய இவர்கள் வரலாற்றில் திருமணத் திலும் ஒர் ஒற்றுமையைக் காண்கிறோம்.

பெருஞ்செல்வர்களுடைய பெண்களுக்குத் திருமணம் செய்யும் போது அவர்களுடைய விருப்பபுவெறுப்புகளை யாரும் சட்டை செய்ததாகத் தெரியவில்லை. மனப்பருவம் வரையில் தந்தை வீட்டில் வளருகிறார்கள். இவர்களுடைய இயல் புகள், பழக்கவழக்கங்கள், பண்புகள், விருப்பு வெறுப்புகள், குறிக்கோள்கள் என்பன பற்றி யாருமே ஆராய்ந்ததாகவோ, சிந்தித்ததாகவோ தெரியவில்லை. தம்முடைய பெண்ணின் மனநிலைக்கும். பழக்கவழக்கங்களுக்கும் ஏற்ற மணாளனா இவன் என்று சிந்தித்ததாகவே தெரியவில்லை. தங்கள் செல்வ நிலைக்கேற்ற செல்வக் குடும்பத்தில் பிறந்தவர்களையே மணவாளர்களாகத் தேர்ந்தெடுத்தனர்.

கண்ணகியின் திருமணமும் புனிதவதியின் திருமணமும் இவ்வாறுதான் நடைபெற்றன என்று இளங்கோவும், சேக்கிழாரும் குறிப்பாக அறிவிக்கின்றனர். கண்ணகியின் திருமணத்தைக் கூறும்போது மாநகர்க்கு ஈந்தார் மனம் (சிலம்பு மங்கல. 44) என்று கூறியுள்ளார். அதாவது நகரத்திலுள்ளவர்கள் பெரு மகிழ்ச்சியடையுமாறு இத்திருமணம் நடைபெற்றது என்று கூறுகிறார். மணமகள் மகிழ்ந்தாளா? இத்திருமணத்தை ஏற்றுக் கொண்டாளா? என்று யாரும் கவலைப்பட வில்லை. இரண்டு பெருஞ்செல்வருடைய விருப்பமும் நிறைவேறும் வகையில் திருமணம் நடைபெற்றதாம். இனி காரைக்கால் அம்மையார் திருமணத்தைப் பற்றி பேச வரும் சேக்கிழார் சற்று விரிவாகவும் மணமக்கள் இருவருடைய மனநிலையை விளக்கும் முறையிலும் நான்கு பாடல்கள் பாடுகின்றார். கண்ணகிக்கு வாய்த்த மணமகன் உள்ளுர்க்காரன். புனிதவதியாருக்கு வாய்த்த மணமகன் நாகப்பட்டினத்தைச் சேர்ந்தவன். புனிதவதியார் திருமணத்தைக் காண விரும்பி வந்ததைத் தன்னுடைய சுற்றத் தார் அனைவரும் இந்தத் திருமணத்தைப் பற்றி பெருமகிழ்ச்சிக் கொண்டார்கள் என்று பெரியபுராணம் பேசுகிறது. மணமகள், மணமகன் இருவருடைய தந்தைமாரும் சுற்றத்தார்கள் மகிழ்ச்சி யடையும்படி இவ்வதுவைக்கு ஏற்பாடு செய்தார்கள் என்று சேக்கிழார் பேசுகிறார் (பெரிய, காரைக்கால் 9) இதற்கு அடுத்த பாடலில் இன்னும் விளக்கமாகவும் தம் மனத்திலுள்ள குறை வெளிப்படும்படியும் சேக்கிழார் பேசுகிறார்.

அளிமிடைதார்த் தனதத்தன் அணிமாடத் துள்புகுந்து

தெளிதருநூல் விதிவழியே செயல்முறைமை செய்து அமைத்துத்

தளிர் அடிமென் நகைமயிலைத் தாது.அவிழ்தார்க் мх காளைககுக

களிமகிழ்சுற் றம்போற்றக் கலியாணம் செய்தார்கள். (காரைக்கால் 11.)

இப்பாடலின் இரண்டாவது அடி தெளிதருநூல் விதிவழியே செயல் முறைமை செய்து அமைத்து என்று கூறுவதையும், சிலப்பதிகாரம், . 

மாமுது பார்ப்பான் மறைவழிக் காட்டிடத்

திவலஞ் செய்வது காண்பார்கள் நோன்பென்னை (சிலம்பு 52-53)                           என்றும் பேசுவதிலிருந்தும் இவ்வணிகர் குலமக்கள் நெடுங்கால மாகத் திருமணமுறையில் ஒரே வழியைப் பின்பற்றினர் என்பது அறிய முடிகிறது.

“பொய்யும் வழுவும் தோன்றிய பின்னர்

ஐயர் யாத்தனர் கரணம் என்ப"              என்ற தொல்காப்பிய சூத்திரத்திற்கு இவ்விரண்டு திருமணங் களும் எடுத்துக் காட்டுகள் ஆகும். இளங்கோ அடிகள் மாநகர்க்கு ஈந்தார் மணம் என்றும், சேக்கிழார் களிமகிழ் சுற்றம் போற்றக் கலியானம் செய்தார்கள் என்றும் கூறுவது சிந்திக்கத் தக்கது. அதாவது மேட்டுக்குடி மக்களின் வீடுகளில் நடக்கின்ற திருமணங்களில் மனப்பெண்ணின் மனநிலை பற்றி யாரும் கவலைப்படுவதில்லை. சுற்றத்தார்களின் மகிழ்ச்சியே முதலிடம் பெறுகிறது என்பதை அறிய முடிகிறது.

இவர்கள் இருவருடைய திருமணங்களும் பொருந்தாத் திருமணங்களே என்பதை இவர்களுடைய பின் வரலாறு கற்பிக் கின்றது. இளங்கோவடிகள் அதனை வெளிப்படக் கூறவில்லை யாயினும், சேக்கிழார் மிக அற்புதமான ஒர் உருவகத்தின் மூலம் இதனை வெளியிடுகிறார். தளிர் அடிமென் நகைமயிலைத் தாது அவிழ்தார்க் காளைக்கு. கல்யாணம் செய்தார்கள் என்றால் மயிலும் காளையும் எவ்வகைப் பொருத்தமும் இல்லாதவை என்பதை நாம் அறிய முடிகின்றது. மயிலின் மெல்லிய நடை மற்றும் பாவனைகளுக்கு முரட்டுத்தனமான காளையின் நடை மற்றும் பாவனைகள் எங்ங்ணம் பொருந்தும்? ஆனாலும் என்ன? கல்யாணம் செய்து வைக்கப்பட்டது என்ற பொருளில் கல்யாணம் செய்தார்கள் என்று பேசுகிறார் சேக்கிழார்,

இனி, இந்த இரண்டு பெண்களினுடைய மனநிலை, உள்ளத்து உணர்ச்சிகள், குறிக்கோள் என்பவை பற்றி இந்த இடத்தில் சற்று ஆய்வது பொருத்தமுடையதாகும். நாடக பாணியில் சிலம்பு அமைக்கப்பட்டதாகலின் அவள் திருமணம் வரையில் வளர்ந்த முறை விரிவாகப் பேசப்படவில்லை. கண்ணகியை அறிமுகப் படுத்தும் இளங்கோ,

போதிலார் திருவினாள் புகழுடை வடிவென்றும்

தீதிலா வடமீனின் திறம் இவள் திறபொன்றும்

மாதரார் தொழுதேத்த வயங்கிய பெருங்குணத்துக்

காதலாள் பெயர்மன்னும் கண்ணகியென் பாள்மன்னோ          (சிலம்பு, மங்கல 26-29) என்ற முறையில் பாடுகிறார். இப்பாடலின் முதலடி கண்ணகியின் பேரழகை விளக்குகிறது. பல்வேறு இடங் களிலும் வாழ் திருமகள் அந்தந்த இடத்திற்கேற்ப வடிவுபெறுதல் இயற்கை ஆனால் தாமரை என்பது அவள் இயல்பாக அமைதி யுடன் தங்கி இருக்கும் வீடாகும். எனவேதான் போதிலார் திருவினாள் வடிவு' என்று பேசுகிறார் அடிகள், இயல்பான இடத்தில் அமைதியாக இருக்கும் பொழுது ஒருவருடைய முழு அழகும் வெளிப்படும். இரண்டாவது அடியில் கண்ணகியின் மனத்திண்மை, கற்புநிலை பேசப்படுகிறது. அருந்ததி போன்ற கற்புடையவள் இவள் என்றுதான் வாலாயமாகக் கவிஞர்கள் வருணிப்பது வழக்கம். ஆனால், அடிகள் இதனை மாற்றி அமைக்கிறார். அருந்ததியின் கற்பு எத்தகையது தெரியுமா? கண்ணகியின் கற்பைப் போன்றது என்று உவமையையும் பொருளையும் மாற்றியமைப்பதால் கண்ணகிக்கு ஒரு மாபெரும் சிறப்பைச் செய்கிறார். இதில் மற்றொரு சிறப்பையும் காண். கிறோம். கண்ணகியின் வடிவழகு மனத்திண்மை என்பது பற்றி யார் பேசுகிறார் தெரியுமா? புகார் நகரத்து மாதரார் பேசு கின்றனர். இவ்வாறு கூறுவதன் நோக்கம் என்ன? உலகியல் முறையில் எந்தவொரு பெண்ணின் அழகையும் கற்பையும் மற்றொரு பெண் அல்லது பெண்கள் மனமுவந்து பாராட்டு வார்கள் என்பது இயலாத காரியம். பெண்களின் மனநிலை அத்தகையது என்று மன இயலார் கூறுகின்றனர். எனவே அடிகள் அதனை மனத்துட் கொண்டு புகார் நகரத்து மகளிர் கண்ணகி வடிவையும் திண்மையையும் புகழ்வதோடு மட்டு மில்லாமல், தம்மால் தொழத்தகுந்தவள் அவள் என்று வணங்கு கிறார்கள் என்றும் பேசுகிறார். மாதரார் தொழுது ஏத்த’ ஏத்தினார்கள் என்று மட்டும் கூறினால் அந்தப் பாராட்டு முகமனாகக் கூட அமைந்துவிடலாம். அதனாலேயே தொழுது ஏத்தினார்கள் என்று அடிகள் பேசுகிறார். இங்கே கண்ணகி யிடம் இரண்டு சிறப்புக்கள் ஈடு இணையற்ற முறையில் விளங்கக் காண்கிறோம். அவருடைய ஒப்பற்ற வடிவழகில் ஈடுபடுகின்ற கோவலன் அவளுடைய மனத் திண்மையை இறுதி வரை அறியாதவனாகவே இருந்துவிட்டான். எவ்வளவு சிறந்தவர்களாயினும் பிறந்த ஊரில் பெயரெடுப்பது கடினம். அந்தச் சிறப்பையும் கண்ணகி பெற்றுள்ளாள் என்பதை அறிவிக்கவே மாதாரார் தொழுதேத்த வயங்கிய பெருங்குனத் துக் காதலாள் என்கிறார் அடிகள், காதலாள் என்பதால் யாவரிடத்தும் மாறுபாடின்றி அன்பு பாராட்டும் இயல்பினாள் என்பதையும் பெறவைத்து விட்டார் அடிகள். இத்தகைய ஒரு பெண்ணுக்கு இன்ப வேட்கையிலேயே பொழுதைக் கழிக்கும் ஒருவன் மணமகனாக வாய்த்தது வருந்தத்தக்கதே ஆகும். கோவலனைப் பொருத்த மட்டில் மாபெரும் கலைஞன் ஆதலானும், பெரிதும் உணர்ச்சி வசப்படுபவனாதலானும், கலைச்செல்வம் உள்ள ஒருத்திதான் பொருத்தம் உடையவளாக ஆதல் கூடும். கண்ணகியைப் பொருத்தமட்டில் அறிவின் துணைகொண்டு வாழ்ந்தாளே தவிர உணர்வின் துணை கொண்டு வாழ்ந்தாளில்லை.

கோவலன் மனநிலையையும் கண்ணகி மனநிலையையும் முதல் இரவின் சந்திப்பின்போது அடிகள் ஒருவாறு விளக்க முற்படுகிறார். அழகைப் பாராட்டுவதில் கைதேர்ந்தவனும் கலைஞனுமாகிய கோவலன்,

மலையிடைப் பிறவா மணியே என்கோ

அலையிடைப் பிறவா அமிழ்தே யென்கோ

யாழிடைப் பிறவா இசையே யென்கோ

................

உலவாக் கட்டுரை பலபாராட்டி (சிலம்பு மனையறம். 77)

என்ற முறையில் கண்ணகியிடம் பேசுகிறான். கண்ணகியைப் பொறுத்தவரை இந்த பாராட்டுதலைக் கேட்டு எந்தவிதமான எதிர் நிகழ்வும் (Re-action) ஏற்பட வில்லை என்பதை அடிகள் குறிப்பாகப் பேசுகிறார். உணர்ச்சி வசப்பட்டு இவ்வாறு பேசு பவனிடம் மறுமொழி ஒன்றும் கூறாது இருத்தல் அவனுடைய மனத்தில் ஒரு நெருடலை உண்டாக்கும் என்பதில் ஐயமே இல்லை. ஆனாலும், கோவலன் இதைப் பெரிதாகப் பாராட்டாமல் சில ஆண்டுகள் கண்ணகியுடன் சேர்ந்தே இல்லறம் நடத்துகிறான்.

மறப்பருங் கேண்மையோடு அறப் பரிசாரமும்

விருந்து புறந்தரூஉம் பெருந்தண் வாழ்க்கையும்

வேறுபடு திருவின் வீறுபெறக் காண

உரிமைச் சுற்றமோ டொருதனி புணர்க்க

யாண்டுசில கழிந்தன இற்பெருங் கிழமையிற்

காண்டகு சிறப்பிற் கண்ணகி தனக்கென்                    (சிலம்பு. மனையறம் 85-90) இவ்வடிகளில் அடிகள் அறவோர்க்களித்தல் துறவோர்க்கு எதிர்தல், விருந்து எதிர்கோடல் ஆகியவை நன்கு நடைபெறு வான் வேண்டி கண்ணகியையும் கோவலனையும் தனிவீட்டில் இருக்கச் செய்தார்கள் என்று பேசுகிறான். இச் செயல்களை கலைஞனாகிய கோவலனும் வாழ்க்கையின் ஒரு பகுதியாகக் கொண்டிருந்தான். ஆனால் கண்ணகியோ இவற்றையே தன் வாழ்க்கையின் குறிக்கோள் என்று கொண்டிருந்தாள், சில ஆண்டுகள் இவர்கள் கணவனும் மனைவியுமாக வாழ்ந்தார்கள் என்றாலும் அவர்கள் வாழ்க்கைச் சகடம் சரியாக ஓடவில்லை என்பதை அடிகள் குறிப்பால் உணர்த்துகிறார்.



__________________


Guru

Status: Offline
Posts: 7602
Date:
Permalink  
 

புனிதவதியாரை (காரைக்கால் அம்மையார்)ப் பொறுத்த மட்டில் அவருடைய இளமைப் பருவம் எவ்வாறு கழிந்தது என்பதைச் சேக்கிழார் விரிவாகப் பாடுகிறார்.

அல்கியஅன்புடன் அழகின் கொழுந்து எழுவது என வளர்வார் (4)

வண்டல்பயில் வனவெல்லாம் வளர்மதியம் புனைந்தசடை

அண்டர்பிரான் திருவார்த்தை அனையவரு வனபயின்று,

தொண்டர்வரில் தொழுது, தாதியர்போற்றத் துணைமுலைகள்

கொண்டு நுசுப்பு ஒதுங்குபதம் கொள்கையினில் குறுகினார். (5)

புனிதவதியாரின் இளமைக்காலம் ஏனைய செல்வர்கள் வீட்டுக் குழந்தைகளைப் போல அமையவில்லை என்று சேக்கிழார் கூறுகிறார். மிக இளங் குழந்தையாக மணல் வீடு கட்டி விளையாடும் பருவத்திலும் பேச்சு பழகுகின்ற பருவத்திலும் கூட இறைவன் - சிவபெருமானுடைய புகழைப் பேசுவதிலும் அதுசம்பந்தமான விளையாட்டுகளிலுமே அவருடைய இளமைப் பருவம் கழிந்தது என்கிறார் சேக்கிழார். இவ்வாறு சேக்கிழார் கூறுவதற்குக் காரணம் காரைக்கால் அம்மையார் பிற்காலத்தில் பாடியுள்ள பாடலில் வரும் ஒரு குறிப்பேயாகும்.

பிறந்து மொழி பயின்ற பின்எல்லாம் காதல்

சிறந்து நின்சேவடியே சேர்ந்தேன்                        (அற்புதத் திருவந்தாதி)

இக் குறிப்பே அம்மையாரின் இளமைப் பருவம் எவ்வாறு கழிந்தது என்பதைச் சேக்கிழார் சிந்திக்க இடந்தந்தது. இறைவன் அருள் நிரம்பப் பெற்றவர்கள் குடும்ப வாழ்க்கையில் ஈடுபடக் கூடாது என்பது மிகப் பிற்காலத்தில் தமிழகத்தில் புகுந்த தவறான கொள்கைகளில் ஒன்றாகும்.

இறை உணர்வில் மூழ்கிய அம்மையாரும், கற்பில் நின்று இல்லறக் கடமைகள் நான்கையுமே குறிக்கோளாகக் கொண்ட கண்ணகியும் இவ்வாழ்வில் ஈடுபட்டு சில ஆண்டுகள் அவ் வாழ்வில் இருந்தபடியே வீடுபேற்றை அடைந்தனர் என்பது சிந்திக்க வேண்டிய ஒன்றாகும். இல்வாழ்க்கை என்பது ஆன்ம முன்னேற்றத்துக்குத் தடை என்று பேசுகிற பிறநாட்டுக் கொள்கை தமிழர்களைப் பொறுத்தமட்டில் என்றுமே ஏற்றுக் கொள்ளப்பட வில்லை.

இல்வாழ்வில் ஈடுபட்டிருந்த கண்ணகி, அம்மையார் ஆகிய இருவருக்கும் அவர்கள் விரும்பாமலே அதைத் துறக்க வேண்டிய சூழ்நிலை உருவாகிவிட்டது. இதிலும் ஒரு புதுமை என்ன வென்றால், கணவன் உயிருடன் இருக்கும்பொழுதே இல்வாழ்வைத் துறக்க வேண்டிய சூழ்நிலை உருவாயிற்று. கண்ணகியைப் பொறுத்த வரை, மனைவியின் அருமை தெரி யாமல் பிரிகிறான் கோவலன், தன்னுடைய பிரிவு அவளை எவ்வளவு தூரம் துன்புறுத்தும் என்பது பற்றி அவன் சிந்தித்த தாகவே தெரியவில்லை. கோவலன் பிறர் துயரத்தைக் கண்டு கொள்ள மறுக்கும் கீழ்மகன் அல்லன், மாதவியுடன் வாழ்கின்ற காலத்தில் ஒரு கிழட்டு வேதியனைக் காப்பாற்ற வேண்டி யானையின் துதிக்கையில் புகுந்து அந்த யானையை அடக்கிய வன். ஒரு பார்ப்பனியின் துயரைப் போக்க வேண்டி பெருஞ் செல்வத்தைத் தந்தவன். கயவன் ஒருவனைக் காப்பாற்ற வேண்டி சதுக்கபூதத்தினிடம் தன்னையே ஒப்படைக்க முனைந்தவன் அப்பூதமோ,

நரகனுயிர்க்கு நல்லுயிர் கொண்டு

பரகதி யிழக்கும் பண்பிங் கில்லை . - s - (சிலம்பு. அடைக்கலம் 84 85)

என்று கூறும்பொழுது, கோவலனை நல்லுயிர் என்று குறிப்பிடுவதைக் காணலாம். இவ்வளவு பண்புடையவனும் பிறர்துயர் துடைக்க முந்துபவனும் ஆகிய கோவலன் எவ்வாறு கண்ணகியின் துயரத்தைப் பற்றிச் சிந்திக்காமல் இருந்தான்? ஆழ்ந்து சிந்தித்தால் மனவியலார் தத்துவப்படி இதற்கொரு காரணத்தைச் சொல்லமுடியும், சிறந்த கலைஞனுக்குத் தான்' என்ற முனைப்பு சற்று அதிகமாகவே இருக்கும். எனவே, எந்தச் குழ்நிலையிலும், எந்த நிகழ்ச்சியிலும், எந்த சந்தர்ப்பத்திலும் அவனுடைய தனித் தன்மை தலைதூக்கி நிற்கவேண்டும். அவன் செய்த உபகாரங்கள் அனைத்திலும், அவன் உபகாரம் செய்பவனாகவும், ஏனையோர் அவன்கீழ் நின்று உபகாரத்தைப் பெறுபவர்களாகவும் இருக்கின்றார்கள். அந்தக் கலைஞனின் தன்னலமற்ற உபகார சிந்தையில் கூட தான்' என்பது தலைதூக்கி நிற்கும். இவ்வாறு கூறுவதால் அவன் அகங்காரம் கொண்டவன் என்றோ தருக்கித் திரிபவன் என்றோ தவறாக நினைத்துவிடக் கூடாது. கலைஞர்களுக்கே உள்ள இயல்பான முனைப்பாகும் அது. அவன் மிகுதியும் நேசித்து மனைவியாகவே ஏற்றுக்கொண்ட மாதவியிடத்துக் கூட இம்முனைப்பை இவன் விட்டுவிடவில்லை தலைக்கோல் அரிவை’பட்டம் பெற்று அரசவையிலும் மன்றத்திலும் நாட்டியம் ஆட வேண்டியவள் பல சமயங்களில் கோவலனுடைய விருப்பத் திற்கிணங்க தன் ஆட்டத்தையே நிறுத்திவிட்டாள் என்று அறிகிறோம். எனவே அவனுடைய முனைப்பு எங்கும் பரவியிருந்தது என்பதை அறிய முடிகின்றது. இந்த முனைப்பு கண்ணகியின் எதிரே செல்லும்போது அவளுடைய கற்பின் திண்மை, குறிக்கோள் வாழ்க்கை என்பவற்றின் முன்னே முனை மழுங்கி விடுகிறது. சில ஆண்டுகள் கண்ணகியுடன் குடும்பம் நடத்துகின்ற காலையில், கோவலன் இதனை உணர்ந்திருக்கவேண்டும். ஒருவேளை கண்ணகி அதிகம் பேசுபவளாக இருந்திருந்தால் போராடித் தன் முனைப்புக்கு கோவலன் முக்கியத்துவத்தைப் பெற்றிருப்பான். ஆனால் வாய் திறந்து அதிகம் பேசாத அப்பெருமாட்டியின் எதிரே கோவலனின் முனைப்பு முனை மழுங்கியதில் வியப்பு ஒன்றுமில்லை. எனவே அவளைச் சந்திப்பதையே அக் கலைஞன் தவிர்த்து விட்டான் என்று தான் நினைக்க வேண்டி யுள்ளது. இல்லாவிட்டால் ஒரே ஊரில் வாழ்ந்து ஒருமுறைகூட தன் இல்லத்திற்குச் செல்லவில்லையென்றால் அதற்கொரு முக்கியமான காரணம் இருத்தல் வேண்டும். மாதவிமாட்டுக் கொண்ட தன்னையிழந்த காதல் காரணமாகவே கோவலன் கண்ணகியை மறந்தான் என்று சொல்லலாமா என்றால் அதுவும் அவ்வளவு சரியாகப்படவில்லை. தன் பழைய வாழ்க்கையை நினைந்து பார்த்து கண்ணகியிடம் கோவலன் கூறும் சொற்கள் மாதவியிடமும் அவன் முழுவதுமாக தன்னை இழந்து காதலித்தான் என்று சொல்லமுடியாது என்பதை நிரூபிப்பன ஆகும். அவன் கூறும் சொற்கள்,

வறுமொழி யாளரொடு வம்பப் பரத்தரொடு

குறுமொழிக் கோட்டி நெடுநகை புக்குப்

பொச்சாப் புண்டு பொருளுரை யாளர்

நச்சுக்கொன் றேற்கு நன்னெறி யுண்டோ (கொலைக் களக் காதை 63-66)

என்பவை ஆகும். வறுமொழியாளர் முதலானோர் கூட்டத்தில் அவன் பொழுது போக்கியதற்குக் காரணங்கள் இரண்டுண்டு. வறுமொழியாளர், வம்பப் பரத்தர் முதலானவர்கள் பெருஞ் செல்வனாகிய அவனை, தம்மால் போற்றப்படும் தலைவனாகக் கொண்டு ஒயாது முகஸ்துதி செய்வார்கள், இந்தக் கலைஞனின் முனைப்புக்கு அவர்கள் புகழுரை நல்ல உணவாக அமைந்தது. இரண்டாவது காரணம் அவன் வாழ்வு முழுவதிலும் குறிக்கோள் என்ற ஒன்று இல்லவே இல்லை. அவ்வப்பொழுது எண்ணத்தில் தோன்றும் திடீர் உணர்ச்சிகளுக்கு ஆளாகும் இயல்புடையவன். 

உணர்ச்சி வசப்பட்டவன் implisive mar அவன் எனபதை அவன் வாழ்நாளில் நடந்த நிகழ்ச்சிகள் அறிவுறுத்து கின்றன. குறிக்கோள் அற்ற வாழ்க்கை, திடீர் உணர்ச்சிகளுக்கு ஆளாதல், என்ற இரண்டும் உடைய ஒருவன், குறிக்கோள் தன்மையையே உருவாகக் கொண்டவளும், உணர்ச்சிகட்கு ஒரு சிறிதும் இடங்கொடாதவளும் ஆகிய கண்ணகியின் முன்பு செல்வதையே தவிர்த்து விட்டான். இத்தனைக் கருத்தை யும் உள்ளடக்கி அடிகள்,

மணமனை புக்கு மாதவி தன்னோடு

அணைவுறு வைகலி னயர்ந்தனன் மயங்கி

விடுத லறியா விருப்பின னாயினான்

வடுநீங்கு சிறப்பின்தன் மனையக மறந்தென் - (அரங்கேற்று காதை 172-175)

என்று கூறுகிறார். மனையகம் மறப்பதற்குக் காரணம் கண்ணகி முகத்தில் விழிக்க அவனுடைய தன் முனைப்பு இடம் தராமையே. இதுவரை கூறிய நீண்ட பகுதி கோவலனைப் பற்றியது என்றாலும் இதன் பின்னணியில் நிற்பவள் கண்ணகி யேயாவாள். தன்னுடைய திடீர் உணர்ச்சிகளுக்கு இரை போடும் வாழ்க்கையை மேற்கொண்டானாயினும் கோவலன் வாழ்க்கையில் அமைதி என்ற ஒன்று இருந்ததாகத் தெரிய வில்லை. ஆனால் கண்ணகியைப் பொறுத்த மட்டில் கணவனை உயிருடன் இழந்து வாழ்ந்தாளேனும் அவள் வாழ்க்கையில் அமைதிக்குப் பஞ்சமே இல்லை. கணவனை மீட்டு மறுபடியும் இல்லற வாழ்க்கையில் ஈடுபடவேண்டும் என்று அவள் கருதி யிருந்தால் சில்ப்பதிகாரமே நடைபெற்றிருக்காது. அவள் தோழி தேவந்தி சோம குண்டம், சூரியகுண்டம் மூழ்கி காமவேள் கோட்டம் கைதொழுதான் கணவனை மீட்டுப் பெறலாம் என்று புத்திமதிகள் கூறியபிறகு கண்ணகி கூறிய விடை பீடு அன்று' என்ற இரு சொற்களேயாகும். கணவனைப் பிரிந்து வாழ்வது தன் வாழ்க்கையில் ஏற்பட்டுவிட்ட மாபெரும் குறை அல்லது இழப்பு என்று அவள் நினைந்ததாகத் தெரியவில்லை. அவளுடைய குறிக்கோள் அதுவாக இருந்திருப்பின் தேவந்தியின் அறிவுரைகளுக்குக் கட்டுப்பட்டிருப்பாள். தன் தகுதியால் கணவனை மீட்க வேண்டுமே தவிர தெய்வத்தின் உதவியால் அதனைப் பெறுதல் பீடு அன்று என்று அவள் கூறியதில் தவறு ஒன்றும் இல்லை. குறிக்கோள் வாழ்க்கை உடையார்க்கு அக்குறிக்கோள் தவிர வேறெதுவும் ஒரு பொருட்டாக எதிரே நிற்பதில்லை. அதனால்தான் காமவேள் கோட்டம் தொழுது கணவனை மீட்டல் தன் குறிக்கோளுக்குப் பீடு செய்யாது என்று நினைக்கிறாள்.

கணவன் என்ற ஒருவன் இருக்கின்ற வரையில் அவனுக்குத் தேவையானவற்றைச் செய்வது, தேவை ஏற்பட்ட பொழுது சிலம்பு உள கொண்ம் என்று தருவது, மதுரைக்கு எழுக என்றவுடன் எழுவது, ஆகிய அனைத்துமே அக்குறிக் கோள் வாழ்க்கையின் ஒரு பகுதியாகும். கணவனைப் பிரிந்து உறைகின்ற காலத்தில் கண்ணகி வாழ்க்கை நடத்தியவிதம் இதுவாகும்.

இது மாதிரி ஒரு சூழ்நிலை காரைக்கால் அம்மையாருக்கு ஏற்படுகிறது. பரமதத்தன் கோவலனைப் போன்ற கலைஞன் அல்லன். கடைந்தெடுத்த வணிகன் ஆவான் அவன் முதல், ஆக்கம் என்பவை தவிர அவன் வாழ்க்கையில் வேறு குறிக் கோளே இல்லையென்பதைச் சேக்கிழார் குறிப்பாக உணர்த்து கிறார். அழகே வடிவானவரும் பண்பாட்டின் உறைவிடமாக உள்ளவரும் ஆகிய புனிதவதியாரை மணந்ததால், பரமதத்தன் மகிழ்ச்சி அடைந்தானா என்ற வினாவை எழுப்பி அதற்கு வேறு வகையாக விடை தருகிறார் சேக்கிழார்.

மகள் கொடையின் மகிழ்சிறக்கும் வரம்புஇல்தனம் - - கொடுத்ததன்பின்

நிகர்ப்புஅரிய பெருஞ்சிறப்பில் நிதிபதிதன் குலமகனும்

தகைப்புஇல் பெருங் காதலினால் தங்கு மனைவளம் பெருக்கி 

மிகைப் புரியும் கொள்கையினில் மேம்படுதல் மேவினாள். (காரைக்கால் 13)

இப்பாடலின் முதலடி நம் கவனத்திற்குரியது. மனைவியைப் பெற்ற மகிழ்ச்சியைக் காட்டிலும் புனிதவதியாரின் தந்தை தனதத்தன் தந்த வரம்புஇல் தனம் - அளவற்ற செல்வம் - கண்டு மகிழ்ந்தான் பரமதத்தன் என்று கூறுகிறார் சேக்கிழார் மூன்றாவது அடியில் நிதிபதி தன் குலமகன் தகைப்புஇல் பெருங் காதலினால் இல்லறம் நடத்தினான் என்கிறார் ஆசிரியர். இந்தக் காதல் யார் மாட்டு? மனைவியிடமா? அதற்கு விடைகூறும் முகமாகவே, மகிழ்சிறக்கும் வரம்புஇல் தனம் கொடுத்தான் என்று பேசுகிறார் ஆசிரியர், அந்த அளவற்ற செல்வத்தின் மேல் காதல் கொண்டான் பரமதத்தன் என்று தேரிகிறது. கலை யுணர்ச்சியால் மனைவியின்மாட்டு முழு அன்பு செலுத்தாமல் ஏனோதானோவென்று குடும்பம் நடத் தினான் கோவலன். கணவன் மனைவி உறவு இருந்ததே தவிர அந்த உறவின் உயிர் நாடியாக அன்பு இருந்ததாகத் தெரியவில்லை.

அதேபோல பரமதத்தன், புனிதவதியார் இல்லறம் நடந்தது. இந்தக் கணவன் மனைவி உறவின் அடிப்படையில் அன்பு இருந்த தாகத் தெரியவில்லை. பரமதத்தன் அன்பெல்லாம் வரம்புஇல் தனத்தின் மேலேயே ஆகும். உண்மையான அன்பு உடைய வனாக இருந்திருப்பின், அம்மையாரிடத்து காதல் கொண்டு வாழ்ந்து இருப்பின் அவன் வாழ்க்கையில் ஒரு பெரும் தவற்றைச் செய்திருக்க மாட்டான். அவனுக்குக் கையுறையாக கிடைத்தவை இரண்டு மாம்பழங்கள். அவற்றில் ஒன்றைக் கொண்டு வந்து கணவனுக்கு இட்டார் அம்மையார். அதன் சுவையில் மயங்கி, இனையது.ஒரு பழம் இன்னும் உளது அதனை இடுக என, (24) கூறினான். முதலில் உண்ட பழம் மிக இனிமையாக இருந்தது என்றால், ஒரு சராசரிக் கணவன் என்ன செய்திருப்பான்? நல்ல வேளை இரண்டு மாங்கனிகள் கிடைத்தன. இவ்வளவு சுவை யுடைய பழத்தை அவளுமுண்டு மகிழட்டும் என்றுதானே நினைத்திருப்பபான்? அவ்வாறு செய்யாமல் இதுபோன்ற இன்னொரு பழம் உள்ளது. அதனையும் இலையில் இடுக’ என்று கூறினான் என்றால், ஒரு சராசரி மனிதன் மனைவி யிடம் செலுத்தும் அன்புகூட பரமதத்தனிடம் இல்லை என்பது தெளிவு. உணர்வு வாழ்க்கையால் கண்ணகியிடம் அன்பு செலுத்த மறந்தான் கோவலன், செல்வத்தின்மாட்டுக் கொண்ட விருப்பால் புனிதவதியாரிடம் அன்பு செலுத்த மறந்தான் பரமதத்தன்.

கண்ணகியைப் பொறுத்தவரை, திருமணத்தில் தொடங்கி சில ஆண்டுகள் வரை இல்வாழ்க்கை நடந்தது என்றாலும், அது அன்பு வாழ்க்கை என்று உறுதியாகக் கூற இயலவில்லை. அதன்பிறகு 15 ஆண்டுகள் குடும்ப வாழ்க்கையே இல்லை. இறுதி யாக, மதுரைக்குப் புறப்பட்டதிலிருந்து கோவலன் கொலையுறு கின்றவரை சிலநாட்கள் அதீத அன்பு வாழ்க்கை நடைபெற்றது. பல்லாண்டுகள் இழந்துவிட்ட கனவனின் அன்பை இறுதிச் சில நாட்களில் முழுவதுமாகப் பெற்றுவிட்டாள் கண்ணகி இந்த வாழ்க்கை நீடித்திருக்குமானால், அவள் இப்பிறப்பில் தேவருலகை அடைந்திருக்க முடியுமா என்பது ஐயத்திற்குரியதே. எனவே விதி அவளுடைய வாழ்க்கையில் ஒரு புதிய திருப்பத்தைத்தந்து அவள் கணவனை இழக்குமாறு செய்து, தேவருலகை அடையச் செய்தது.

காரைக்கால் அம்மையாரைப் பொறுத்தமட்டில் இத்தகைய நிலை ஏதும் இல்லை. தொடக்கத்திலிருந்தே கணவன், மனைவியைப் பொறுத்தவரை வீட்டுவேலை செய்யும் பணிப்பெண் ஆகவும், தன் உடல் தேவையைப் பூர்த்திசெய்யும் கருவி யாகவுமே கருதியிருந்தான். எனவே அவனைவிட்டு நீங்கி கயிலை செல்வது அம்மையாருக்கு எளிதாயிற்று.

இந்த நிலையில், இந்த இரு பெண்மணிகளும் இப்பிறப்பிலேயே வீடுபேற்றை அடையக் கூடிய தனிச்சிறப்பைப் பெற்றிருந்தும், ஏன் தங்களுடைய தனித்துவத்தைக் காட்டாமல் வாழ்ந்தனர் என்ற ஐயம் சிலர் மனத்திலாவது தோன்றலாம். கண்ணகியும் அம்மையாரும் ஏதோ அடிமைகள்போல் வாழ்ந்தனர் என்று நினைத்தால் அது பெருந்தவறாகும். இவர்களுடைய கணவன்மார்கள் எப்படியிருப்பினும் இவர்களைப் பொறுத்தமட்டில் அன்பு கடமை, குறிக்கோள் என்ற மூன்றிலும் முழுத் தன்மை பெற்றவராக வாழ்ந்தனர். கணவனிடத்தில் அன்பு செலுத்தும் கண்ணகியும், அம்மையாரும் அந்த அன்பு தம்தம் கணவன் மார்களால் திருப்பிச் செலுத்தப்படுகிறதா என்று சிந்திக்கவே இல்லை. உண்மையான அன்பின் இலக்கணம் அதுதான். கண்ணகியைப் பொறுத்தவரை, கனவன் உயிரோடு இருக்கின்ற வரை தனக்கென்று ஒரு வாழ்வையோ, செயலையோ மேற் கொள்ளவில்லை. கணவன்தான் செலுத்தும் அன்பைத் திருப்பிச் செலுத்தவில்லையே என்று ஒருகணம் நினைந்து இருப்பாளே யானால் அவள் பொற்புடைத் தெய்வமாக ஆகி இருக்க மாட்டாள். இது தெய்வீகத் தன்மை என்று சொல்லப்படும். உயிர்கள் தன்னிடம் அன்பு செலுத்தவில்லை என்ற காரணத் திற்காக இறைவன் உயிர்கள் மாட்டுக் கருணை செலுத்தாமல் இருப்பதில்லை. எனவே திருப்பி செலுத்தப்படுவதைப் பற்றி சிந்திக்காமல் அன்பு செய்வதை தெய்வீகத் தன்மை என்று சொல்கிறோம். இக் கருத்து காரைக்கால் அம்மையாருக்கும் பொருந்தும்.

 

 



__________________


Guru

Status: Offline
Posts: 7602
Date:
Permalink  
 

பெண்ணுரிமை பற்றி பெரிதாகப் பேசப்படும் இக்காலத்தில் சிலர் இவர்கள் இருவரும் அடிமை வாழ்க்கை வாழ்ந்தனர் என்று கூறுவார்களானால் அதில் வியப்பொன்றுமில்லை. இவ்வாறு கூறுகிறவர்கள் ஒன்றை மறந்துவிட்டுப் பேசுகிறார்கள். ஒருவருடைய உரிமை பறிக்கப்படுவது என்பது வேறு. அவர், தம்முடைய உரிமையை தாமே விட்டுக் கொடுப்பது என்பது வேறு. கண்ணகி அம்மையார் ஆகிய இருவரும் குடும்ப வாழ்க்கை அல்லாமல் வேறொரு குறிக்கோள் கொண்டிருந்தமையின் அக்குறிக்கோளுக்கு இழுக்கு வராத முறையில் தம் உரிமையைத் தாமே விட்டுக் கொடுத்து விட்டனர். குறிக்கோள் என்ற ஒன்று இல்லாதவர்களுக்கு உரிமைகள் என்று சொல்லப்படுபவை மிகப் பெரிதாகக் காட்சியளிக்கும். ஆனால் உயர்ந்த குறிக்கோளை வாழ்க்கையில் மேற்கொண்டவருக்கு அதுதவிர, எஞ்சிய அனைத்துமே பொருள் அற்றதாக அற்பமானதாக ஆகிவிடும். பக்கத்தில் பெரியகோடு வரையப்பட்டவுடன் முன்னர் பெரியது என்று நினைக்கப்பட்ட கோடு சிறியதாக ஆகிவிடுவது போல, குறிக்கோள் வாழ்க்கை வாழ்பவர்களுக்கு உரிமைகள் என்பவை யெல்லாம் சிறியனவாக ஆகிவிடுகின்றன.

கண்ணகியைப் பொறுத்தமட்டில் மதுரைக்கு வந்து, கணவனுக்கு உணவு சமைத்துப் போட்டு, சிலம்பை விற்கப் புறப்படுகின்ற வினாடிவரை தனக்கென்று தனியே ஒரு வாழ்வைக் கருதாதவளாக இருந்தாள். ஆகவே புகார்க் காண்டம் முழுவதிலும் பீடு அன்று”(இரண்டு வார்த்தை சிலம்பு உள கொண்ம்” (மூன்று வார்த்தை மதுரை மூதூர் யாது”(மூன்று வார்த்தை) என்ற எட்டுவார்த்தைகளையே பேசுகிறாள்கண்ணகி வார்த்தைகள் எட்டாயினும் அவள் மனவளர்ச்சி, பண்புநலன் நெஞ்சுறுதி என்பவற்றை விளக்க இவை போதுமானவை ஆகும். காமவேள் கோட்டம் தொழுது தன் கணவனைப் பெறவேண்டுமென்றால் அது பீடு அன்று என்று சொல்லும் போது அவளது நெஞ்சுறுதியும் குறிக்கோள் தன்மை கொண்ட வாழ்க்கையும் அறியப்படுகின்றன. சிலம்பு உள கொண்ம்'என்று சொல்லப்படுகின்றபோது எந்த நிலையிலும் சினங் கொள்ளாத இயல்பையும் இணர் எரி தோய்வு அன்ன இன்னாசெயினும் வெகுளாத மனப்பான்மையும் தனக்கென வாழாத மாபெரும் தியாக வாழ்க்கையும் வெளிப்படுகின்றன.

இத்தகைய பண்பு உடையவளான கண்ணகி எப்படி வழக்குரைக்கத் துணிந்தாள் என்ற வினாவை எழுப்பினால் இவளது பண்பாட்டை அறிய மற்றுமோர் வாய்ப்பு கிடைக்கும். கணவன் விரும்பியதைச் செய்வதே தன் கடமை என்று கொண்டிருந்த கண்ணகிக்குச் சோதனைக் காலம் வருகின்றது. முன்பின் தெரியாத ஊரில் மாதரியைத் தவிர வேறு யாரையும் அறியாத சூழ்நிலையில் பேரிடிபோல் கணவன் கொலையுண்ட செய்திபராயரியாகக் காதில் விழுகிறது. அந்த முன் இரவில்தான் இவர்கள் இருவரும் மாதரியின் துணையுடன் ஊருக்குள் புகுந்தனர். அன்று இரவே கொலை நிகழ்ந்து விட்டது. அதிலும் கள்வன் என்று பெயர் சூட்டப்பெற்று கோவலன் கொலையுண்டு இருக்கிறான். இந்த நிலையில் இவள் கணவன் கள்வன் அல்லன் என்று எடுத்துக் கூறுவார் யார்? அதனால்தான் எல்லையற்ற தன் துயரத்தை வெளிப்படுத்தும் வகையில் கள்வனோ என் கணவன்?’ என்று கேட்கிறார், பெருமாட்டி. இந்நிலையிலும் ஒன்றைச் சிந்திக்க வேண்டும். கள்வனோ என் கணவன் என்று கேட்கும் பொழுது கதிரவனிடமிருந்து விடை வரும் என்று எண்ணிக் கேட்டாளாகண்ணகி? இவ் வினாவிற்கு ஆம் என்பார் சிலர். ஆனால் பண்பின் சிகரத்தில் நிற்கும் இவர்களைப் பொருத்தமட்டில் இவ்விடை தவறானதாகும். விடை வருமென்று எண்ணி இவ்வினாவை எழுப்பினாள் கண்ணகி என்றால் இயற்கையின் இறந்த செயல்களைத் தான் செய்யக்கூடும் என்று கருதி கதிரவனைக் கேட்டாள் என்ற முடிவிற்கு வரநேரிடும்.

இயற்கையின் இறந்த நிகழ்ச்சிகளைச் செய்கின்ற, செய்ய வல்ல பெரியோர்கள் அனைவரும் இச்செயல்களைத் தாம் செய்ய முடியும் என்று கருதினார்கள் என்று கூறுவதே அவர்கள் சிறப்புக்கு இழுக்காகும். அகங்கார மமகாரங்களில் முட்டி நிற்கும் பேதையரே இது என்னால் முடியும் என்று பேசுவர். ஆனால் இத்தகைய எண்ணம் பெரியோர்கள் மனத்தில் தோன்றுவதே இல்லை. விடை பற்றிக் கவலைப்படவில்லை என்றால் பின்னர் ஏன் காய் கதிர் செல்வனே கள்வனோ என் கணவன்?”என்று கேட்க வேண்டும்? தன் கணவன் குற்றமற்றவன் என்று சான்று கூறுவார் யாருமில்லாத நிலையில் தெய்வத்தைச் சாட்சிக்கு அழைக்கிறாள் கண்ணகி. அவள் கற்பின் திண்மையாலும், பண்பாட்டின் சிறப்பாலும் கதிரவன் விடை இறுத்தான் என்பது வேறு அவளைப் பொறுத்த மட்டில் விடை வருமென்று அவள் எதிர் பார்க்கவே இல்லை. எதிர் பார்த்து இந்த வினாவை எழுப்பினாள் என்றால் கண்ணகியின் பெருமையை மிகுதியும் குறைத்துவிடும். அதேபோல இவள் எவ்வாறு வழக்குரைக்கப் புகுந்தாள் என்ற வினாவிலும் சில நுணுக்கங்கள் தொக்கி இருக்கின்றன. அவளாக வழக்குரைக்கப் போனாள் என்றோ, தான் கண்ட தீக்கனவில் மன்னனிடம் சென்று முறையிட்டது வந்ததாகலின் அக்கனவை நம்பிப் போனாள் என்றோ கூறுவது முற்றிலும் பொருத்தமற்றதாகும்.

வெட்டுண்ட கணவன் உடலைப் பார்க்க வேண்டுமென்று புறப்படுகிறாள் கண்ணகி. ஆனால் அவன் வெட்டுண்டு மரித்து விட்டான் என்பதை அவளுடையமனம் ஏற்கமறுக்கிறது. எனவே, அந்த இடத்தை நாடிச் செல்கையில் தன்னை மறந்த நிலையில் அப்பெருமாட்டி புலம்பிக் கொண்டே செல்கிறாள். அவன் இறந்து விட்டான் என்பதை ஏற்க மறுக்கின்ற மனநிலை இறந்துபோய் விட்டான் என்பதை அறிவுறுத்தும் அறிவுநிலை இந்த இரண்டின் இடைப்பட்டு பாடலின் இரண்டு அடிகள் வருகின்றன.

காதல் கணவனை காண்பனே ஈதொன்று

காதல் கணவனைக் கண்டால் அவன் வாயில்

திதறு நல்லுரை கேட்பனே ஈதொன்று (ஊழ் ஈழ் வரி 10-12)

இறந்து பட்டதை ஏற்க மறுக்கின்ற மனம் என்னுடைய காதலனைக் காண முடியுமோ என்று புலம்புகிறது. இறந்து விட்டான் என்பதை அறிவுறுத்தும் அறிவு இறந்தவன் பேசுவ தில்லை என்பதையும் அறிவுறுத்துகிறது. அந்த அறிவுறுத் தலையும் மீறி, பாடலின் அடுத்தவரி வருகிறது. காதல் கொழு நனைக் கண்டால் என்ற ஐயம் மனத்தில் துளிர்த்து விட்டது. அப்படி யொரு வேளை காணநேர்ந்தாலும் அவனுடைய வாயில் இருந்து குற்றமற்ற வார்த்தைகளைக் கேட்க முடியுமோ என்று புலம்புகிறாள். சில சமயங்களில் நடக்கக் கூடாததையும் நடக்கும் என்று நம்புவது உணர்வில் பிறக்கும் நம்பிக்கை. தன் கற்பின் திண்மையால் இவை இரண்டும் நடக்கும் என்று நம்பினாள் என்று கூறினால் அது கண்ணகிக்குச் செய்யும் பிழையாகும். இத்தகைய அருங் கற்புடையவள் தன்னிடம் ஒர் அதீத ஆற்றல் உண்டு என்று நினைப்பதும் இல்லை. நம்புவதும் இல்லை. அதனால்தான், காண்பனே, கண்டால் கேட்பனே, என்று ஐயப் பொருளிலும் வினாப் பொருளிலும் பேசுவதாகப் பாடலை அமைத்து உள்ளார்.

இப்படிப்பட்ட ஐயம், வினா முதலியன இல்லாமல் உறுதிப் பாட்டோடு வழக்குரை காதையில் முன்பின் தெரியாத மன்னனை "தேரா மன்னா!”என்று விளித்துப் பேசுகிறாளே அது எவ்வாறு முடிந்தது? என்ற வினா எழலாம், வெட்டுண்ட கனவன் உடலைப் பார்ப்பதற்கு முன்னர், கணவன் உள்ளத்துள் அடங்கிய கண்ணகி யாக இருக்கிறாள். ஆனால் வெட்டுண்ட உடலைக் கண்ட பிறகு அவ்வுடல் ஒன்று சேர்ந்து காதல் கொழுநனாகக் காட்சிதருகிறது. உயிர் பெற்ற கோவலன் அவள் கண்ணிரைத் துடைத்தான். அவள் வேண்டிக் கொண்டபடியே திதறு நல்லுரை ஒன்றும் பகர்ந்தான். அது இருந்தைக்க”என்பதாகும். இதனை ஆசிரியர் "எழுதெழில் மலருண்கண் இருந்தைக்க எனப் போனான் (ஊழ் 67) என்று பாடுகிறார். இப்பொழுது கண்ணகி சிந்திக்கத் தொடங்குகிறாள். கற்புடைய மனைவியாகிய தன்னை உடன் அழைத்துச் செல்லாமல் இருந்தைக்க என்று அவன் சொல்லிய காரணமென்ன என்று சிந்திக்கத் துவங்குகிறாள். அச்சிந்தனையின் விளைவுதான் தன் கணவனைக் கள்வன் என்று கூறிய மன்னவனிடம் அவன் கள்வன் அல்லன் என்று நிரூபிக்க வேண்டிய சூழ்நிலையை உருவாக்கிற்று, இனி, கணவனுடைய செயலில் தன்னை ஒடுக்கிக் கொண்டது போக தன் சார்பாகவும், அவன் சார்பாகவும் தானே தொழிற்பட வேண்டிய சூழ்நிலை உருவாகிவிட்டது என உணர்கிறாள். உறுதிப் பாட்டோடு தானே சிந்தித்து, தானே தொழிற்பட வேண்டும் என்ற சிந்தனையின் பயன்தான் அவளை வழக்குரைக்கத் துரண்டியது.

மனைவியின் கையில் சிலம்பைப் பார்க்கின்ற வரை மறுபடியும் வாணிபம் செய்ய வேண்டும், அதுவும் மதுரை சென்று செய்ய வேண்டும் என்ற எவ்வித எண்ணமும் இல்லாத கோவலனுக்கு கண்ணகி காட்டிய சிலம்பின் வழியே விதி விளையாடத் தொடங்கியது. ஆகவே விதி அவன் வாயில் நுழைந்து இச் சிலம்பு...முதலாக மாட மதுரை அகத்துச் சென்று. உலந்த பொருள் ஈட்டுதல் உற்றேன் (க 75-80 ஏடவர் கோதாய் எழுக” என விதி பேசச் செய்தது. அதே விதி இப்பொழுது கோவலனின் கதையை முடித்த பின்னர் பாண்டியனின் கதையை முடிக்க வழிசெய்கிறது. கண்ணகி சென்று வழக்குரைக்கவில்லையானால் பாண்டியன் தான் செய்த தவறை வேறு எவ்வாற்றானும் அறிந்திருக்க முடியாது. அப்பிழை காரணமாக உயிரையும் நீக்க வேண்டிய குழ்நிலை ஏற்பட்டிருக்காது. அதற்காக அவனுடைய விதி இறந்து எழுந்த கோவலன் வாயில் புகுந்து இருந்தைக்க என்று பேசச் செய்தது. சிலம்பின் வழியாக கோவலன் உயிரைக் குடிக்க சதி செய்ய விதி அச்சிலம்பின் வழியாகவே பாண்டியன் உயிரையும் குடித்தது.

காரைக்கால் அம்மையாரும் கனவனிடமிருந்து பிரிகின்ற நிலை ஏற்படுகிறது. அப்படிப் பிரிவதற்குக் காரணம் அவருடைய கனவனின் மனமாற்றமே ஆகும். இந்த வரலாற்றிலும் இரண்டாவது பழம் கிடைக்குமென்று உறுதியோடு அம்மையார் செயல்பட்டார் என்று சொல்வது தவறாகும். விடை வருமென்று எதிர்பாராமலே கண்ணகி காய்கதிர்ச் செல்வனை அழைத்தது போல அம்மையாரும் இரண்டாவது பழம் வேண்டுமென்று கணவன் கேட்டவுடன் என்ன செய்வது என்று அறியாமல் மனம் உருகுகிறார். தனியே சென்று இக்கட்டான நிலையில் இறை வனிடம் வேண்டிக் கொள்வது தவிர வேறொன்றும் செய்ய முடியாத நிலையில் இறைவனை வேண்டுகிறார். பழம் வேண்டு மென்று கேட்கவே இல்லை. இறைவன் பழம் தருவான் என்று எதிர்பார்க்கவும் இல்லை. அதுதான் அவரது பண்பாட்டின் சிறப் பாகும். தீர்க்கமுடியாத இச்சூழ்நிலையில் தான் என்ன செய்ய வேண்டும் என்று வழிகாட்டுமாறு இறைவனை வேண்டுகிறார். அந்த நிலையை விளக்க வந்த சேக்கிழார்,

அம்மருங்கு நின்று அயர்வார்; அரும்கனிக்கு அங்கு - என்செய்வார்?

மெய்ம்மறந்து நினைந்த இடத்துஉதவும் விடையவர்தாள்

தன்மனம் கொண் டுஉணர்தலுமே அவர் அருளால், - தாழ்குழலார்

கைம்மருங்கு வந்திருந்தது அதிமதுரக் கனி ஒன்று (காரைக்கால் 25)

கற்புக்கடம் பூண்ட இரு தெய்வங்களும் என்ன செய்வது என்று அறியாத நிலையில் இறைவனிடத்தில் முறையிடுகின்றனர். ஒருத்தி கதிரவனிடம் முறையிடுகிறாள். மற்றொருத்தி இறை வனிடம் முறையிடுகிறார். முறை இடுவதுதான் அவர்கள் கடமையே தவிர முறையீட்டிற்கு பலன் கிடைக்கும் அல்லது வேண்டும் என்று நினைப்பது அவர்கள் பண்பாட்டிற்குப் பொருத்தம் ஆகாது. அதே நேரத்தில் அவர்கள் எதிர்பார்க்கா விட்டாலும், அவர்கள் திண்மை, பக்தி என்பவற்றின் பயனாக கண்ணகிக்கு விடையும் அம்மையாருக்குப் பழமும் கிடைக் கின்றன. இதனைப் புரிந்து கொள்வது இறையருளின் துணுக் கத்தைப் புரிந்து கொள்வதற்கு உதவும். இக்கட்டிலிருந்து தன்னைக் காக்க வேண்டும் என்று இறைஞ்சிக் கேட்பது நம்பிக்கை உடையார் கடமை. அப்படிக் கேட்கும் பொழுது பயன் கிடைக்குமென்று எதிர் பார்த்தார்கள் அல்லது நம்பினார்கள் என்று கூறுவது பொருத்தமற்ற கூற்றே ஆகும்.

இவ்விருபெரு மகளிரும் தத்தம் கணவன்மார்களை உயர்கதி அடையச் செய்கின்றனர். இரண்டு கணவன்மார்களும் இப்பிறப்பில் உயர்கதி அடையவதற்குரிய தகுதி பெற்றிருந்தார்கள் என்று கூறுவது கடினம். வறுமொழியாளரொடும் வம்பப்பரத்த ரொடும் பொழுது போக்கியவனும் சிறுமுது குறைவிக்கு சிறுமை செய்தவனும் (16-69) ஆகிய ஒருவன் எவ்வாறு உயர்கதி அடைய முடியும் அதேபோல மனைவிக்கு ஒரு பழம் வேண்டும், அவளும் அதை அனுபவிக்கட்டும் என்று கூடக் கருதாத பரமதத்தனுக்கு உயர்கதி எவ்வாறு கிட்டும்? ஆனால் பொன்னொடு சேர்ந்த செம்பும் பொன்னாவது போல கண்ணகியை மணந்ததால் கோவலனும், அம்மையாரை மணந்ததால் பரமதத்தனும் உயர்கதி அடைந்தனர்.

தாங்கள் முன்னேறுவதுடன் தங்களைச் சேர்ந்த வர்களையும் முன்னேற்றும் பேராற்றல் வாய்ந்தவர்கள் இவ் விருபெரும் மகளிர் - கண்ணகியின் மாட்டு இறுதிக் காலத்தில் கழிவிரக்கம் கொண்டு பேரன்பு காட்டினான் கோவலன் என்பதில் ஐயமில்லை. ஆனால் கவுந்தியடிகளும் கொற்றவை வேடம் அணிந்த பெண்ணும் கண்ணகியை அறிந்திருந்த அளவுக்கு கோவலன் அறியவில்லை என்பது தெளிவு. ஆனால் பரமதத்தனைப் பொறுத்த மட்டில் நிலைமை வேறு விதம், கிடைத்த முதற் சந்தர்ப்பத்திலேயே வணிகனாகிய அவன் பிறரை எடைபோட நன்கு அறிந்திருந்தான். இரண்டாவது பழம் இறை யருளால் வந்தது என்பதை நம்ப மறுக்கிறான். பல்வேறு பண்டங் களையும் பலகாலமாக வாணிகம் செய்யும் அவன் ஈசன் அருள் என்ற பண்டத்தை இதுவரை கண்டதும் இல்லை, கேட்டதும் இல்லை. எனவே அதை நம்ப மறுத்து அதை நிரூபிக்க மற்றொரு பழத்தை வரவழைக்குமாறு அம்மையாருக்கு ஒரு தேர்வு நடத்து கிறான். பழம் வந்தது.அவன் ஐயம் தீர்வதற்குப்பதிலாக பேரச்சத் திற்கு ஆளாகிவிட்டான். இறைவன் திருவருளை இவ்வளவு எளிதாகப் பெறக்கூடிய பெருமாட்டியை மனைவி என்ற இடத்தில் வைத்து உரிமை கொண்டாடுவது தவறு என்று நினைத்து விட்டான். ஒரே விநாடியில் 'மானுடம் இவர்தாம் அல்லர்” என்ற முடிவிற்கு வந்துவிட்டான். -

கூர்த்த மதியுடைய வணிகன் ஆதலால் இந்த ஒரு நிகழ்ச்சியை வைத்துக் கொண்டு மனைவியின் அருமைப் பாட்டையும் உயர்வையும் அறிந்து கொள்கிறான். உணர்ச்சிவசப் படாமல் அறிவின் துணைகொண்டு ஆராய முற்பட்டதால் விளைந்த பயன் இதுவாகும். கோவலனைப் பொறுத்த மட்டில் கண்ணகியை அறிவுகொண்டு ஆராய முற்படவே இல்லை. தன் அறிவு முதலியவற்றை உணர்ச்சிக்கு அடகு வைத்து விட்டமையின் எந்த ஒன்றையும் சீர்தூக்கிப் பார்த்து அதன் உண்மைத் தன்மையை அறிய வாய்ப்பே இல்லாமல் போய் விட்டது.

உலகிடைத் தோன்றி வாழும் மக்களுள் ஆடவராயினும் பெண்டிராயினும் மாமனிதராக வாழ்வர் சிலர். மனிதர்கள் மாமனிதராக ஆக வேண்டுமானால் அவர்கள் வாழ்வில் குறிக் கோள் என்ற ஒன்று இருந்தே தீரவேண்டும். குறிக்கோள் இல்லாத வாழ்க்கை விலங்கு வாழ்க்கையிலும் வேறுபட்ட ஒன்று அன்று. கண்ணகி - காரைக்கால் அம்மையார் என்ற இருவருக்கும் குறிக்கோள் ஒன்று இருந்தது என்பதில் ஐயமில்லை. அது என்ன என்று காண்பதற்கு முன் குறிக்கோளைப் பற்றி ஒர் இரு தகவல் களைக் காணவேண்டும். அவை பிறர் நினைக்க முடியாத ஒன்றாக மிகப் பெரிதாக இருத்தல் வேண்டும் என்று கருதத் தேவையில்லை. அன்றாட வாழ்க்கையில் செய்ய வேண்டிய கடமைகளை எந்த நிலையிலும் விட்டுவிடாமல் செய்ய வேண்டு மென்பதும் குறிக்கோள்தான் ஒரே பிறப்பில் இறைவனை அடைய வேண்டும் என்று நினைப்பதும் குறிக்கோள்தான். குறிக்கோள் எது என்பது அவரவரைப் பொறுத்தது ஆகும். கண்ணகியைப் பொறுத்த மட்டில் எந்நிலையிலும் மனந் தளராது உறுதியோடு இருத்தல், கணவன் மனம் நோகும்படி நடவாது இருத்தல் என்ப வற்றோடு அறவோர்க்களித்தல், அந்தணர் ஒம்பல், துறவோர்க் கெதிர்தல் விருந்தெதிர் கோடல் ஆகியவை அவளது குறிக் கோள்களாக இருந்தன. அவை அனைத்திலும் தன்னலம் என்பது ஒரு சிறிதும் இல்லை. தன்னலத்திற்காக சோம் குண்டம் முதலிய வற்றில் மூழ்கி காமவேள் கோட்டம் தொழுது கணவனைப் பெற விரும்பவில்லை. தெய்வமே ஆயினும் தெய்வத்தின் உதவியால் தன்னலத்தை முற்றுவிக்க விரும்பவில்லை 9

அம்மையாரைப் பொருத்த மட்டில் கணவனுக்கொத்த மன வாழ்க்கை நடத்தினார் என்பதில் ஐயமில்லை. மாம்பழக் காட்சி ஒன்றை வைத்துக் கொண்டு பார்க்கும் பொழுது பரமதத்தனுக்கு மனைவிமாட்டு அன்பு சிறந்து ஒழுகியதாகத் தெரியவில்லை. கண்ணகியைப் போலவே அம்மையாரும் இதுபற்றி கவலைப் பட்டதாகவே தெரியவில்லை. கணவனுக்குச் செய்ய வேண்டிய கடமைகளில் கடுகளவும் குறைந்ததாகவும் தெரியவில்லை. உடல் பொருள் ஆவி அனைத்தையும் இறைவனுக்கு அர்ப்பணித்துள்ள மாபெரும் பக்தராகிய அவர் இல்வாழ்க்கையில் ஈடுபட்டு கணவன் மனம் கோணாமல் நடந்து கொண்டார் என்பதைப் பெரியபுராணம் அறிவிக்கின்றது. ஆனால் அவருடைய குறிக்கோள் இது என்று சொல்வதற்கில்லை. வாழ்வில் தம்முடைய குறிக்கோள் என்ன என்று அவரே தாம்பாடிய அற்புதத் திருவந்தாதியில் பின் வருமாறு கூறுகிறார். -

ஒன்றே நினைந்திருந்தேன் ஒன்றே துணிந்தொழிந்தேன்

ஒன்றேனன் உள்ளத்தின் உள்ளடைத்தேன் -ஒன்றேகாண்

கங்கையான் திங்கட் கதிர் முடியான் பொங்கொளிசேர்

அங்கையாற் காளாம் அது (11)

வெவ்வேறாக இருப்பினும் இவ்விருவருக்கும் ஒவ்வொரு குறிக்கோள் இருந்தது என்பதை அறிய முடிகிறது. ஏறத்தாழ ஒரே மாதிரியான வாழ்க்கை நடத்திய இவ்விருவர் இடையேயும் ஒரேயொரு மாறுதலைக் காணமுடிகின்றது. நகைச் சுவையை ஆக்குவதிலும் அனுபவிப்பதிலும் கண்ணகிக்கு ஈடுபாடு இருந்ததா என்று சொல்வதற்கில்லை. ஆனால் கோவலன் அதனைப் பெற்றிருந்தான் என்று கூறமுடிகின்றது. கலைஞன் ஆனதால் நகைச்சுவை அவன்மாட்டு இருந்தது போலும்,

காரைக்கால் அம்மையாரைப் பொருத்தமட்டில் நிறைந்த நகைச்சுவை உடையவர். அவருடைய அற்புதத் திருவந்தாதியில் உள்ள பல பாடல்கள் மூலம் அறிய முடிகிறது. உதாரணத்திற்கு ஒரு பாடல் வருமாறு :

நீயுலகம் எல்லாம் இரப்பினும் நின்னுடைய

தீய அரவொழியச் செல்கண்டாய் - தூய

மடவரலார் வந்து பலியிடார் அஞ்சி

விடஅரவம் மேலாட மிக்கு. (57)

இரண்டாம் நூற்றாண்டிலும் பன்னிரண்டாம் நூற்றாண் டிலும் வாழ்ந்த இளங்கோவும், சேக்கிழாரும் பெண்களின் பெருமையை எடுத்துக் காட்டுவதில் தந் நிகரற்று விளங்கு கின்றனர். மேட்டுக்குடியில் பிறந்தவர்களும் இல்லறத்தில் புகுந்தவர்களும் வீடு பேற்றை அடைய முடியாது. அடைவதாக இருப்பினும் பல பிறப்புக்கள் எடுக்க வேண்டும் என்று இடைக் காலத்தில் புகுந்த கொள்கையைத் தகர்த்து இருபெரும் மகளிரைப் படைத்துள்ளனர். பெருஞ் செல்வத்தில் பிறந்து பெருங்குடியில் புகுந்து இல்வாழ்வில் ஈடுபட்டாலும் குறிக்கோள் உடையவர்கள் ஒரே பிறப்பில் அக்குறிக்கோளை எய்தலாம் என்பதை அறிவுறுத்தும் இரு கலங்கரை விளக்குகள் ஆவர் கண்ணகியும் காரைக்கால் அம்மையும். -



__________________
Page 1 of 1  sorted by
 
Quick Reply

Please log in to post quick replies.



Create your own FREE Forum
Report Abuse
Powered by ActiveBoard