Devapriyaji - True History Analaysed

Members Login
Username 
 
Password 
    Remember Me  
Post Info TOPIC: இளங்கோவும் திருவள்ளுவரும்


Guru

Status: Offline
Posts: 7602
Date:
இளங்கோவும் திருவள்ளுவரும்
Permalink  
 


இளங்கோவும் திருவள்ளுவரும் 

இளங்கோவும் திருவள்ளுவரும் தமிழ்நாட்டுக்கு இரு கண்கள் போன்றவர்கள். அந்தக் கண்கள் என்ற உவமையைத் தான் நினைந்து நினைந்து பார்க்கிறேன். கண்கள் இரண்டா யினும் அவை காண்பது ஒன்றை அல்லவா? அதுபோல, வள்ளுவனும் இளங்கோவும் மாறுபட்ட பொருளை மாறுபட்ட கோணத்திலே நின்று காண்பதில்லை. ஒன்றையேதான் ஒரே கோணத்தில் நின்று கண்டனர். சில சமயங்களில் கண்களுக் குள்ளே வேறுபாடு இருக்கலாம். என் போன்றவர்களுக்கு அது தெரியும். ஒரு கண்ணுக்கு 5.7 கண்ணாடியும், மற்றொரு கண்ணுக்கு 27 கண்ணாடியும் போட்டுக் கொள்ளுகிறோம். அப்படிப் போடப்பட்டாலும் காணப்படும் பொருள் இரண்டாகக் காட்சி அளிப்பதில்லை. அதேபோல வள்ளுவன் ஒன்றே முக்கால் அடியால் குறள் எழுதினாலும், இளங்கோ ஆயிரக்கணக்கான அடிகளினாலே நிலை மண்டில ஆசிரியப்பா எழுதினாலும், இருவரும் காண்பது ஒன்றையேதான். ஒருவர் நீதி நூலாக எழுதினார் மற்றவர் வரலாற்றுக் காப்பியமாக அமைத்தார். எனினும் இருவரும் கண்ட காட்சி ஒன்றேதான். சிலப்பதிகாரம் ஒசைப் பாட்டாகவும் இசைப் பாட்டாகவும் அமைந்தாலும், கற்பனையோடு கலந்து காணப்பட்டாலும், கற்பனையற்ற கட்டளைகள்ாகத் திருக்குறள் காணப்பட்டாலும் இரண்டும் காண்பது ஒன்றையேதான்.

அழகிய சலவைக்கற்கள் கிடைப்பது மிகமிகக் கடினம். அப்படிப்பட்ட கற்களை யாரேனும் ஒருவன் கொண்டுவந்து, ஒரிடத்தில், அடுக்கிவைப்பானேயானால், சாதாரண மக்கள் அதனைக் காணும் பொழுது நம்முடைய வீட்டில் குளியலறையில் போட்டால் மிக நன்றாய் இருக்குமென்று நினைப்பர் சிறந்த கலைஞன் ஒருவன் அந்தச் சலவைக் கற்களைப் பார்க்கும் பொழுது தாஜ்மஹாலையோ, அல்லது ராஜராஜேஸ்வர உடையார் கோயிலையோ நிர்மானிக்கலாம் என்று கருதுவான், அதுபோல, வள்ளுவர் அழகான சலவைக் கற்களாக எடுத்துச் சதுரிக்க வேண்டிய தேவையைக்கூடப் பிறருக்கு வைக்காமல் எல்லா வற்றையும் சதுரித்து அடுக்கி வைத்துவிட்டுப் போனார். இளங்கோ அந்தக் கற்களை எடுத்துச் சுந்தரமாம் ஒரு காப்பியம் செய்தார். ஆகவே வள்ளுவனுடைய குறள் போன்ற சலவைக் கற் களைத் தனிப்பட்ட முறையில் அடுக்கி வைத்திருக்கும்பொழுது, விரிந்த கற்பனையின் உயர்ந்த கலை ஞானம் உடையவனுக்குத் தான் இக் கற்களைக் கொண்டு என்ன காரியம் செய்யலாம் என்று தோன்றுமே தவிர, சாதாரணமானவர்களுக்குக் கல்லைப் பார்க்கும்பொழுது ஒன்றும் தோன்றாது தோன்றினாலும் கலையாகத் தோன்றாது. வள்ளுவன், குறள் என்ற சலவைக் கற்களை அடுக்கி வைத்திருந்ததைப் பலரும் கண்டதுண்டு. இத் தமிழ்நாட்டில். அதனை எடுத்துப் பயன்படுத்த வேண்டுமென்று நினைத்தவர் ஒருசிலர். அவ்வாறு பயன்படுத்தியவருள்ளும் ஒப்பற்ற கலைக் கோயிலைச் சமைத்தவர் இளங்கோ, காலத்தால் முற்பட்டு நிற்கின்றார் இளங்கோ, அடுத்த கட்டத்தில் நிற் கின்றான் கம்பநாடன், இந்த இருவருக்கும் மூத்த நிலைக் களனாய் அற்புதமான மூலப் பொருளாய் அமைந்த அந்தத் திருக் குறளை, எத்தனைப் பகுதிகளில் வேண்டுமானாலும் இளங்கோ பயன்படுத்தும் முறையைக் காணலாம். -

'வையத்துள் வாழ்வாங்கு வாழ்பவன் வானுறையும் தெய்வத்துள் வைக்கப்படும்”என்ற அந்த ஒரு குறளுக்குத்தானே கண்ணகியினுடைய வாழ்வு இலக்கியமாயிற்று. திங்களைப் போற்றத் தொடங்கிக் கண்ணகியைக் கடவுளாக்கிய வரையில் வையத்துள் அவள் வாழ்வாங்கு வாழ்ந்த வகையும், அதன் பயனாக அவள் வானுறையும் தெய்வத்துள் வைக்கப்பட்ட வகை யுந்தான் கூறுகிறார் அடிகள். தானே தெய்வத் தன்மை அடைந் தாள் என்று கூறினாலும் அவளுடைய வாழ்க்கை முறையை அமைத்துக் கொண்ட சிறப்பால் அதையும் அவள் பெற்றாள். ஆனால், பிறர் அதை உணர்ந்து, இத்தகைய சிறந்த வாழ்க்கை வாழ்ந்த காரணத்தினால் இவள் வானுறையும் தெய்வத்துள் வைத்து எண்ணப்படத் தகுந்தவள் என்று கருதினார்களே - அன்றுதொட்டுப் பத்தினி வழிபாட்டைத் தமிழர்கள் மேற் கொண்டனர். இந்த இரண்டு கருத்தும் அந்த ஒரு திருக் குறளிலிருந்து கிடைப்பனவல்லவா? வையத்துள் வாழ்வாங்கு வாழ்ந்தவர் கண்ணகிக்கு முன்னர் உண்டா? இருந்திருக்கலாம். இவர்கள் வாழ்வில் ஒப்புநோக்குதல் மூலமாக, ஒரளவு வேறுபாடு காணமுடியும். ஆனால், முற்றிலும் அந்த இலக்கணத்திற்குப் பொருத்தமான இலக்கியமாக அமைந்தது இந்தப் பெருமாட்டி யினுடைய வாழ்க்கைதான். "வாழ்வாங்கு வாழ்பவன்” என்று ஆண்பாலாலே குறிக்கப்பட்டாலும், பெண்ணாயிருந்த ஒருத்தி தெய்வத்துள் வைக்கப்பட்டாள் என்றால், இதைவிட வள்ளு வருக்குப் பெருமை தரக்கூடியது வேறு ஒன்றும் இராது. வள்ளுவர் தந்த சலவைக் கல்லை ஒப்பற்ற ஒரு தெய்வமாக வடித்துத் தந்த பெருமை வேறு யாரிடத்தில் நாம் காண முடியும்?

கற்பனை என்பது, நாகர் மலைகளிலே வாழுகின்ற மலைச் சாதியார்களுக்கும், உத்தரப்பிரதேசத்திலே வாழ்கின்ற நாகரிகம் மிகுந்தவர்களுக்கும் ஒன்றுதான். அதேபோல, வள்ளுவனுடைய குறளாகிய சட்டங்கள், தமிழ்கூறு நல்லுலகுக்கு மட்டுமல்லாமல் பாண்டும் பொருத்தமுடையன என்பதைச் சொல்ல இனங் கோவடிகள் ஒரு பேருரை வகுத்துத் தருகின்றார். சோழ நாட்டில் தொடங்கிய ஒரு வரலாற்றைப் பாண்டி நாட்டில் வளரச் செய்து சேரநாட்டில் கொண்டுமுடிக்கின்றார். இம் மூன்று நாடுகளையும் ஒன்றாகத் தழுவுவதன் மூலமாக, எந்தச் சட்டத்தைத் தான் அடிப்படையாக மனத்திலே கொண்டுள்ளாரோ அந்தச் சட்டமும் இந்த மூன்று நாடுகட்கும் பொருந்துவதைக் காட்டுகிறது. திருக்குறள் முழுவதையும் கற்பாருக்கு, இரண்டு மூன்று தவறான எண்ணங்கள் வந்து தோன்றத்தான் செய்யும். முதலாவது, வாழ்க்கையில் அன்றாடம் அல்லல்பட்டு உழல்வோருக்கு விதி யினுடைய கொடுமை நினைவு வாராமல் போகாது. மனிதன் எவ்வளவோ முயல்கின்றான், எண்ணுகின்றான், கோட்டைகள் கட்டுகின்றான் என்றாலும் அந்தக் கோட்டைகளும், எண்ணங் களும், முயற்சிகளும் பிடி சாம்பலாகும்பொழுது, தன்னையும் அறியாமல் மனிதன் தன் தகுதியின்மையை நினைத்து வருந்துகிறான் அல்லவா? அப்பொழுது என்ன பேசுகிறான்? தான் ஒரு நல்ல காரியத்தைச் செய்து, அதில் வெற்றியும் பெற்று விட்டால், தான் செய்ததாக நினைந்து மகிழ்வதே மனித இயல்பு, தான் மேற்கொண்ட காரியத்தில் தோல்வியைப் பெறுவானே யானால், பிறரைக் காணும்பொழுது, கடவுளுக்கே நான் நினைத்தது பொறுக்கவில்லை போலிருக்கிறது என்று கூறக் கேட்கிறோம். ஆகவே, தான் மேற்கொண்டது தோல்வியாக ஆகும்பொழுது கடவுளை அழைப்பதும், வெற்றியாக ஆகும் பொழுது தன்னுடைய அறிவுக்குப் பெருமை தந்துகொள்ளு வதும் மனிதனுடைய இயல்பாக அமைந்திருக்கின்றது. இது பிழை என்பதை அறியவேண்டும்.

 

 



__________________


Guru

Status: Offline
Posts: 7602
Date:
Permalink  
 

எவ்வளவுதான் மனிதனுடைய அறிவு விசாலப் பட்டாலும், அனுபவம் அகன்று சென்றாலும், செயல்படுகின்ற திறமை வலிமையுற்றாலும், இறுதியில் அவனையும் அறியாமல் ஆட்டிப் படைக்கின்ற சக்திகள் சில உண்டு. அவற்றின் கட்டளைக்கு இணங்கித்தான் மனிதன் வாழவேண்டுமென்ற ஒரு சூழ்நிலை அல்லது நியதி உள்ளது. எங்கே நீ சுற்றி வந்தாலும், அந்த நியதி உன்னை விடப்போவதில்லை என்று ஒரு குறள் பாடியுள்ளார். எவ்வளவுதான் அறிவின் துணை கொண்டு சுற்றி வந்தாலும் "மற்றொன்று குழினும் தான் முந்துறும்” என்ற அந்த ஒரு குறளைப் பின்னிப் பின்னிக் காட்டுகின்றார் இளங்கோ என்றாலும், நீதி நூலுக்கும் காப்பிய நூலுக்கும் உள்ள அழகிய வேறுபாட்டினைக் காணவேண்டும். சலவைக் கல்லை ஒர் இடத்தில் அடுக்கி வைத்துப் பார்ப்பதைப் போலாகும் நீதிநூலைப் படிப்பது என்பது முன்னரே கூறப்பெற்றது. ஆனால், அந்தச் சலவைக் கல்லை அழகானதொரு கோபுரமாகவோ, சிலை யாகவோ வடித்துக் காண்பதாகும் காப்பியம் கல்லைக் கானும் பொழுது அதைக் கொண்டு என்ன என்ன செய்யக் கூடும் என்ற உண்மையைக் கலைஞன் ஒருவன் தான் அறிய முடியும். நம் போன்றவர்களுக்கு அது விளங்காது. ஆகவே, மற்றொன்று சூழினும், தான் முந்துறும் என்ற குறளைச் சட்டமாக வகுக்கும் பொழுது அதனுடைய ஆழம் எவ்வளவு தூரம் என்பது நமக்குத் தெரிவதில்லை. ஆனால், அந்தச் சட்டத்தை எடுத்துப் பயன் படுத்தும் வழக்கறிஞனும் அந்தச் சலவைக் கல்லை எடுத்துச் சிலை செய்து தருகின்ற கலைஞனும் தம் செயலை முடித்தபோது தான் அதன் முழு அழகையும் நாம் அறிய முடியும், விதியினுடைய வன்மையைப் பற்றிப் படிக்கலாம் ஒரளவு அறிந்தும் இருக்கலாம். ஆனால், காப்பியத்தில் புலவன்-அதைப் பயன்படுத்தும்பொழுது, அதனுடைய தன்மையே வேறாகிவிடுகின்றது.

விதியின் கையிலே பட்ட பாத்திரங்கள்தாம் காப்பியத் தலைவனும் தலைவியும் அற்புதமான ஒரு பணக்காரக் கல்யாணம் நடைபெறுகிறது. எத்தனை விருந்தினர்கள்? எவ்வளவு பெரிய கூட்டம்? யானை மீதிருந்து திருமணத்தை அறிவிக்கின்ற அப்படிப்பட்ட ஒரு கல்யாணம் அழைக்கப்பட்டவர்களும் அழைக்கப்படாதவர்களும் ஆகிய எத்தனையோ விருந்தினர் உள்ளனர். அழைக்கப்படாதவர்களும் ஒவ்வொரு கல்யாணத் திலும் வருவதுண்டல்லவா? கண்ணகியின் திருமணத்தில் அழையாத விருந்தினருள்முதலாவதாக இருக்கின்ற விருந்தினர் தான், வள்ளுவர் மற்றொன்று குழினும் தான்முந்துறும்"என்று கூறிய அந்த விருந்தினன்; அதுதான் விதி கூட்டத்தில் வந்து அமர்ந்து இந்தத் திருமணத்தைப் பார்க்கிறான் விதி என்பான். சில நல்லவர்கள் பிறருடைய வாழ்க்கையைக் கண்டு ம்ம்... இப்படியா'என்று வயிறு எரிந்து சொல்லுகிறார்களே அதுபோல, இந்த விதி கண்ணகியைக் கண்டு தன்னுடைய பல்லைக் கடித்துப் பெருமூச்சு விடுகின்றது. என்றாலும், பிறர் அதைக் காண முடிய வில்லை. ஆகவே, இந்தப் பணக்கார வீட்டுக் கல்யாணத் தட புடவில் இந்தப் புதிய விருந்தாளி இருக்கின்றானே அவனுடைய மொறுமொறுப்பை யாரும் கவனிக்கவில்லை. அங்கே தொடங்கு கிற இந்தப் போராட்டம் கண்ணகியினுடைய வாழ்நாள் முழுவதும் தொடர்கின்றது. கண்ணகியின் போராட்டத்தை நினைக்க நினைக்க வள்ளுவர் சிலப்பதிகாரக் கதையைத் தெரிந்து கொண்டுதான் அந்தச் சொல்லைப் பயன்படுத்தினாரோ என்றும் நினைக்கத் தோன்றுகிறது.

விதி செய்த போரில் தன்னுடைய போர்த் தந்திரங்களை (Tactics) யெல்லாம் மாற்றிமாற்றிப்பார்க்கின்றது. கோவலனையும் கண்ணகியையும் முதலில் ஒன்றாக வாழச் செய்து பார்க்கின்றது; கண்ணகி மகிழ்ந்தபாடில்லை. கோவலனையும் கண்ணகியையும் பிரித்துப் பார்க்கின்றது. கண்ணகி மசிந்தபாடில்லை. தேவந்தி என்ற தோழியின் மூலமாகக்கூட வந்து, அந்த விதி விளையாடிப் பார்க்கின்றது. தேவந்தி கண்ணகியைப் பார்த்து வருந்தி காமன் கோட்டம் சென்று வழிபட்டு வரலாம் என்று கூறும்பொழுதும் விதியின் விளையாட்டைத்தான் காண்கின்றோம். அத்தனைக்கும் கண்ணகி அசைந்தவளாகத் தோன்றவில்லை; அதிலும், விதி யுடன் அப் பெருமாட்டி போட்டிபோட்டதாகக் கூடத் தோன்ற வில்லை. மிக எளியவனைத்துச்சமாக உதறித் தள்ளுவதுபோல, விதியைத் துச்சமாகத் தள்ளுகிறாள் கண்ணகி விதியினுடைய கோபம் மிகுந்துகொண்டே செல்கின்றது. மற்றொன்று குழினும் என்றானே'அதுபோலப் புதியபுதிய தந்திரங்களைக் கையாண்டு பார்க்கிறது. காமன் கோட்டம் செல்வது தம்போன்ற கற்புடைய மங்கையர்க்கு பீடன்று என்று சொல்லிவிட்ட கண்ணகியின் எதிரே விதி தன்னுடைய தந்திரத்தை மாற்றுகிறது. இவ்வளவு நாட்கள் பிரிந்திருந்த கோவலனை மீண்டும் கொண்டுவந்து அவளிடத்திலே சேர்த்துவிடுகின்றது. விதியின் இப் புதிய தந்திரத்தில் வீழ்ந்து விடுகின்றாள் கண்ணகி. இறுதியாக வள்ளுவனுடைய குறள்தான் வெற்றி பெறுகிறது. சட்டநூல்தான் வெற்றி பெறுகிறது. விதியைக் காட்டிலும் வலிமையுடையது வேறொன்றுமில்லை. எத்தனை வகையாக, எத்தனை முறையாக எத்தனை வேறுபட்ட வகையில் தடை செய்தாலும், அது அந்தத் தடைகளின் வழியாகவே வந்து நிற்கும் என்று பரிமேலழகர் பொருள் எழுதினார். அது நினைந்துநினைந்து ஆராய்தற்குரியது. எத்தனை வகையாக விதியைத் தடை செய்தாலும் நாம் மேற் கொள்ளும் தடையின்மூலமாகவே அது உள்ளே வந்து நுழையும்.

எந்த உறுதிப்பாட்டைக் கொண்டு விருப்பு வெறுப்பை நீக்கிக் கண்ணகி விதியைத் தோற்கடிக்க வேண்டுமென்று நினைத்தாளோ, அந்த உறுதியின் மூலமாகவே விதி உள்ளே வருவதைக் காண்கின்றோம். கோவலனைத் திருமணத்தில் சேர்த்து வைத்த காலத்தில் கண்ணகியைத் தோல்வியடையச் செய்ய முடியவில்லை. பின்னர் அவனைப் பிரித்துவைத்த காலத் திலேயும் தோல்வியடையச் செய்ய முடியவில்லை. மறுபடி தன் தவற்றை நினைந்து வருந்துபவனாகக் கோவலனை உள்ளே வரவழைக்கிறது அந்த விதி குலம்தரு வான்பொருட் குன்றம் தொலைத்த இலம்பாடு நானுத்தரும்” - கண்ணகி மலையத் தனைப் பொருள்கள் செலவழிந்து என்னே என் அறியாமை? என்று வெட்கப்படுகின்ற தன்னிரக்கமான வார்த்தையுடை யவனாக இங்கே வந்தேன்' என்று சொல்லுகிறானே கோவலன், அந்தச்சொல்லிலே புகுந்தது விதி. சிலம்பு உளகொண்ம்'என்று சொல்லிப் பார்க்கிறாளே அந்தப் பெருமாட்டி, அந்தச் சொல்லிலே விதி முந்துகிறது. இலம்பாடு நானுத் தரும்” என்று அவன் சொல்லிய சொல்லிலேயும் சிலம்பு உள கொண்ம்” என்று இவள் சொல்லிய மூன்று சொல்லிலேயும் விதி நின்று கண்ணகியைத் தோல்வி அடையச் செய்கின்றது. ஆகவே, மற்றொன்று சூழினும் தான் முந்துறுகின்ற அந்த விதி முதன் முதலாகக் கண்ணகியிடத்திலேயும், அடுத்தபடியாகக் கோவலனிடத்திலேயும் தன் வெற்றிக் கொடியை உயர்த்தி விடுகிறது.

"வளையாத செங்கோல் வளைந்தது. இது என் கொல்?” என்கின்றார்களே மதுரை மாநகர் மக்கள் அதுதான் சிறப்பு. எங்கேயும் தன்னுடைய ஊரவன் ஒருவனை உள்ளுரான் புகழ்வ தென்பது அவ்வளவு சுலபமான காரியமன்று அதை மனத்திலே வாங்கிக் கொண்டே பாடுகின்றார்.இளங்கோவடிகள், ஏனையோர் பாண்டியனுடைய புகழைப்பாடுவதில் பெருமை யொன்றுமில்லை! ஆனால், மதுரை நகரத்திலே வாழும் மக்களே போற்று கின்றார்கள் ஏன்? குறை நிறைவுகள் இரண்டையும் உள்ளூரி லிருந்து நன்றாகக் கண்டுகொண்டிருப்பவர்கள். ஆதலால் அவர்கள் வாயினாலேயே புகழ்கிறார்கள் என்றால் அந்தப் புகழ்ச்சி உண்மையாக இருக்கும் என்பதை அறிவித்தற்காகவே மதுரை மக்கள் கூற்றாகப் பேசுகின்றார். இது என்ன புதுமை? வளையாத செங்கோல் வளைந்ததே ”யென்று அவர்கள் பேசு கிறார்கள், வளையாத செங்கோலையுடைய மன்னவன் இருக் கின்றானே அவனிடத்திலேயும், மற்றொன்று குழினும் தான் முந்துறுகின்ற விதி சென்று தன் கைவரிசையைக் காட்டு கின்றது. உலகு தோன்றிய நாள்தொட்டு மன்பதை காக்கும் தென்புலங் காவல் என்முதல் பிழைத்தது என்றான் பாண்டிய மன்னன். கல் தோன்றி மண் தோன்றாக் காலத்திலேயே வாளோடு முன்தோன்றிய இந்தப் பாண்டியன் குடியில் இது வரையில் இப்படிப்பட்ட தவறு நேரவில்லை, இப்பொழுது ஏன் நேர்ந்தது? பின்னர் கண்ணகியாலேயே மன்னவன் திதிலன்' என்று அவன் புகழ்பேசப்படுகின்றதே! அத்தகைய பாண்டியன் எவ்வளவு பெரிய தவற்றைச் செய்கின்றான்? மன்னனுடைய விதி பொற்கொல்லன் வடிவாக எதிரே வந்து நிற்கின்றது. கள்வனைக் கொல்வதற்காக அச் சிலம்பைக் கொணர்க என்று கூறவந்த மன்னன் 'கொன்று அச் சிலம்பு கொணர்க” என்றான். ஏன்? 'வினைவிளை காலம் ஆதலின் யாவதும் சினை அலர்வேம்பன் தேரானாகிக் கொன்று அச்சிலம்பு கொணர்க”என்றான் என்று அடிகள் காரணம் காட்டுகின்றார். ஐயோ பாவம் எவ்வளவு பெரிய தவற்றைச் செய்யப்போகின்றான் பாண்டியன்? ஒப்பற்ற கதைக் கவிஞராகிய இளங்கோவடிகள் தம்முடைய அருமையான பாத்திரமாகிய பாண்டியன் பெருந் தவறிழைத்து நம் மதிப்பிலிருந்து கீழே விழும்பொழுது நொறுங்கிப் போகாமல் இருப்பதற்காக ஒர் அதிர்ச்சி தாங்கியை (Shock-absorber) வைக்கிறார். ஆதலின் அவரிடம் தவறு காண முடியாது. பைத்தியம் ஒன்று பெருந்தவறு இழைத்து விட்டாலும் பார்ப்பவர்கள் 'பாவம் குற்றம் சொல்லாதீங்க? பைத்தியம் அது அது என்ன பண்ணும்?” என்று சொல்லு வார்களல்லவா? அது போல வினையின் காரணமாகப் பாண்டியன் இத்தவறிழைத்தான் என்று கூறி நம் சினத்தை அமைதிப்படுத்து கிறார் ஆசிரியர் கொலை முதலிய குற்றத்தைக் கூட மூளை குழம்பிவிட்டவன் அல்லது பைத்தியம் ஒருவன் செய்துவிட்டால் தண்டனை இல்லை. கருத்திலாக்குற்றம் (Unotivated) என்று சொல்லுவார்கள் வேண்டுமென்றே செய்கின்ற காரியம் வேறு. தவறுதலாகச் செய்யப்படுகின்ற காரியம் வேறு. ஆதலால் பாண்டியன் செய்த பெருந் தவறுக்கு விதியை முன் நிறுத்தி அமைதி காட்டுகிறார் இளங்கோவடிகள். அவன் பேரின் தவறு காண வேண்டா வினை விளை காலம் அது என்கிறார்.

இன்றைக்கு அறிவுக்குத் தலைமை இடம் கொடுக்கும் காலமாகலான், விதி செய்யச் சொன்னால் அறிவு எங்கே போயிற்று என்று கேட்டுவிடுவார்களே என்று கருதிப்போலும் இளங்கோ 'யாவதும் சினையலர் வேம்பன் தேரான் ஆகி” என்றார். தேர்தல் அறிவின் செயலாகும். போற்றப்படும் அந்த அறிவே விடைபெற்றுக் கொண்ட நிலைமைதான் விதியின் போராட்டாகும். விதி உள்ளே துழையும்பொழுது முதன்முதலாக விடைபெற்றுக்கொள்ளுவது அறிவுதான், அறிவு அங்கே இருக்குமேயானால், இப்படிப்பட்ட செயல் நிகழாது. பின்னர் ஏன் நிகழ்ந்தது? அறிவு அழிந்ததனால் அந்த அறிவு ஏன் அழிந்தது? கற்றறிவும் பண்பாடும் உடைய அவனையும் மீறி அழிந்தது என்றால் அதைத்தான் விதி என்று கூறுகிறோம். 'யாவதும் சினையலர் வேம்பன் தேரானாகி’.அந்த பாவதும் என்று சொல்லிலே இருக்கின்ற அந்தப் பொருள் ஆழத்தை மற்றொன்று. குழினும் என்ற சொல்லின் ஆழத்துடன் வைத்துக் கான வேண்டும் கல்வியால் பெரியவன்; பண்பாட்டான் பெரியவன் பரம்பரையால் பெரியவன் குலவிச்சை கல்லாமல் பாகம்படும்’ என்றும் சொல்வார்களே தவறே நிகழாத பாண்டியன் குடியிலே எவ்வாறு இப்படிப்பட்ட தவறு வந்து நுழைய முடியும் என்று கேட்கத் தோன்றுகிறது. கேட்டுப் பயனில்லை. ஒரு சிறிதுகூட நினைக்கவில்லையாம் மன்னன்; நினையாமற் செய்யச் செய்தது அந்த விதி.

இதுமட்டுமா? அந்த விதி இன்னும் என்னென்ன வேலை செய்கிறது? காப்பியத் தலைவன் கோவலனை எடுத்துக் கொள்வோம். முதலில் கண்ணகியோடு வாழ்ந்தான், பிறகு, மாதவியோடு வாழ்ந்தான். கண்ணகியோடு வாழுங்காலத்தில் அவள் எத்தகையவள் யாருடைய ஒப்பற்ற ஒரு மகள் என்பதை அறியவில்லையா அவன்? பின்னர் மாதவியுடன் பல்லாண்டுகள் வாழ்ந்தானே அப்பொழுதெல்லாம் மாதவி யார் என்று அறிய முயலவில்லையா? நூற்றுப்பத்தடுக்கி எட்டுக் கடைநிறுத்த அந்த மாலையை வாங்கும்பொழுது மாதவி இன்ன குலத்தைச் சேர்ந்தவள் என்று அறியவில்லையா? "மாலை வாங்குநர் சாலும் நம் கொடிக்கு” என்று மாலை விற்றவள் கூறினாளே, அப் பொழுதாவது மாதவி இன்ன குலத்தைச் சேர்ந்தவள் என்று தெரியாதா? அடுத்து, மாதவியினுடைய வீட்டில் சென்று வாழத் தொடங்கினானே அப்பொழுது அவள் என்ன குலத்தினள் என்று தெரியாதா? தலைக்கோல் அரிவைப்பட்டம் பெற்றவள் ஆயிற்றே, அப்பொழுதாவது மாதவி இன்ன குலத்தினள் என்று தெரியாதா? தெரிந்துதானே அவளுடன் வாழப் போனான். அவள் அந்தக் குலத்தைச் சேர்ந்தவளாக இல்லையெனில் கோவலனுக்கு அங்கு என்ன வேலை? அவ்வாறிருந்தும் கானல்வரிப்பாட்டு முடிந்ததோ இல்லையோ கானல்வரியான்பாடத் தான் ஒன்றின் மேல் மனம் வைத்து மாயப் பொய் பலகூட்டும் மாயத்தாள் பாடினாள்”என்று அவன் பேசக் காரணம் யாது? இவ்வாறு பேசிவிட்டு அவளை விட்டுப் பிரிந்துபோகும் கோவலன்மேல் நமக்குச் சினம் தோன்றுவது இயல்பே. நம்முடைய சினத்தைத் தணிக்குமுகமாக அடிகள், பாண்டியன்மேல் வரும் ஒரு பெரும்பழிக்கு அதிர்ச்சி அடை கொடுத்தாரே அதேபோலக் கோவலனுக்கும் கொடுக்கிறார். இத்தனை ஆண்டுகள் அவளுடன் வாழ்ந்து அவளுடைய பண்பாட்டை அறிந்திருந்தும் மாயப் பொய்பல கூட்டும் மாயத் தாள்' என்றால், கோவலன் பேசுவது விதியின் விளையாட்டே யாகும்.

கோவலன் பிரிவால் துயரடைந்த மகளிர் இருவர் ஒருத்தி கண்ணகி மற்றொருத்தி மாதவி கோவலன் கண்ணகியைப் பிரிந்து சென்றமையின் அவள் அடைந்ததுயரம் இருவகைப்படும். இளமை யோடிருந்த அவள் வாழ்வு பாழாயிற்று எனினும் அவள் அதற்குக் கவலையுறவில்லை. இப் பிரிவால் அவள் துன்புற்றாள் என்றும் கூறமுடியாது. காரணம் துன்பம் என்பது வருந்து கின்றவர்களுடைய மன நிலையை வைத்துத்தான் துன்பமா கிறதே தவிர, துன்பம் என்று தனியாக ஒன்றும் கிடையாது. துன்பத்தை இன்பமாகக் கொண்டுவிட்டால் துன்பம் எங்கே இருக்கிறது? கண்ணகியைப் பொறுத்த மட்டில் முதல் வகைக்காக அப் பெருமாட்டி துன்பப்படவில்லை எனினும் இரண்டாவ தொன்றுக்காகப் பெரிதும் வருந்தினாள். கணவனுடன் இல்லா மையால் விருந்துபசரித்தல், துறவிகளை உபசரித்தல் முதலிய இல்லறக் கடமைகளைச் செய்ய இயலவில்லையே என்பதற்காக வருந்தினாள்

மாதவியின் நிலை அவ்வாறு இல்லை. கோவலனுடன் வாழ்வை விரும்பி இருந்தவள். எனவே, அவன் இவளைக் காரணமின்றி விட்டுப் பிரியும்போது இருவகைக் குற்றம் செய்கின்றான், முதலாவது குற்றம், இதுகாறும் அவளோடு வாழ்ந்தும் அவளைத் தெரிந்து கொள்ளாத குற்றம், இரண்டாவது குற்றம், தன்னையே பற்றுக்கோடாகப்பற்றி முழுதும் நம்பியிருந்த ஒருத்தியைத் துறந்து அவளுடைய வாழ்வை அழித்ததாகும். இவ்வாறு இரண்டு பெரிய குற்றங்கள் இழைத்தவனாயினும் அடிகள் அவனைக் காயவில்லை. கற்றறிவும், பண்பாடும், கருணையும் நிறைந்தவனாகிய கோவலன் இவ்வாறு தவறிழைத்தான் எனில், அது விதியின் கோளாறேயாகும் என்று நினைக் கிறார் அடிகள். எனவே, வள்ளுவர் குறளில் காணப்பெற்ற இந்த விதிக்குப் பெரியதொரு கலைக் கோயில் எழுப்பி, எந்த எந்த இடங்கள் உயிர் நாடியான இடங்களோ அங்கேயெல்லாம் அந்தக் குறளை எடுத்து வைத்துப் பேசுகிறார் அடிகள், குறளிலே சொல்லப்பட்ட நீதிகளுக்கு இளங்கோவடிகளே பேருரைகள் செய்கின்றவர்.

எற்றுஎன்று இரங்குவ செய்யற்க; செய்வானேல்

மற்றுஅன்ன செய்யாமை நன்று'

என்று ஒரு குறள் பேசுகிறது. அதாவது பின்னர் நினைத்துப் பார்த்து ஏன் இப்படிச் செய்தோம் என்று எண்ணி வருந்தும் காரியங்களைச் செய்யாதே என்றார் வள்ளுவர். முடியுமா? சட்ட நூலில் கூறிய நடை முறைப்படி நாம் நடக்கமுடியுமா? முடியாது என்பதை அறிந்து வழி கூறுவதுதான் வள்ளுவனுடைய பெருமை. தினம்தினம் படித்தாலும் கூடாது என்பவற்றைச் செய்வதுதான் மனித இயல்பு பின்னர் இரங்கும் காரியத்தைச் செய்யக் கூடாது. ஒருவேளை செய்து தொலைத்துவிட்டால் என்ன செய்வது? செய்வானேல் மற்று அன்ன செய்யாமை' வேண்டும் என்கிறார். அதாவது தவறிச் செய்துவிட்டால் அதைப் பற்றிக் கவலைப்படாமல் மேற்கொண்டு செய்ய வேண்டியதைக் கவனிக்க வேண்டுமே தவிர, நடந்ததை நினைத்து ஐயோ ஏன் இப்படிச் செய்தோம் என்று வருந்தக் கூடாது. இந்தக் குறளுக்கும் அடிகள் இடம் வகுக்கிறார். கோவலன் மனைவி யுடன் மதுரையில் தங்கிய அன்று இரவு சமையல் செய்து போட்டிருக்கிறாள். சாப்பிட்டவுடன் அவளுடன் மகிழ்ச்சியாகப் பேசாமல் அந்தக் கொஞ்ச நேரத்தையும் மகிழ்ச்சியில்லாமல் செய்து விடுகின்றான் அவன். கடந்தகால வாழ்வு முழுமையும் நினைத்துப் பார்க்கின்றான். - -



__________________


Guru

Status: Offline
Posts: 7602
Date:
Permalink  
 

 “மைஈர் ஒதியை, வருக'எனப் பொருந்தி,

'கல்.அதர் அத்தம் கடக்க யாவதும்

வல்லுந் கொல்லோ மடந்தைமெல் அடி'என,

வெம்முனை அரும்கரம் போந்ததற்கு இரங்கி

"எம்முது குரவர் என்உற் றனர்கொல்?

மாயம்கொல்லோ? வல்வினை கொல்லோ?

யான் உளம் கலங்கி யாவதும் அறியேன்,

வறுமொழி யாளரொடு வம்பப் பரத்தரொடு

குறுமொழிக் கோட்டி, நெடுநகை புக்கு,

பொச்சாப் புண்டு, பொருள்உரை யாளர்

நச்சுக்கொன் றேற்கு நல்நெறி உண்டோ?

இருமுது குரவர் ஏவலும் பிழைத்தேன்;

சிறுமுதுக் குறைவிக்குச் சிறுமையும் செய்தேன்;

வழுஎனும் பாரேன்; மாநகர் மருங்குஈண்டு

எழுகஎன எழுந்தாய்; என் செய்தனை' (16; 55–70)

உறுதிப்பாடற்ற கோவலன் மனநிலை இங்கு வெளிப்படுகிறது. எவ்வாறு மாதவியினுடைய பாட்டைக் கேட்டுத் தவறாகப் பொருள் செய்துகொண்டு ஓடிவந்தானோ, அதேபோல்தான் இங்கேயும் தன்னுடைய சென்ற கால வாழ்வை நினைந்து பார்க் கிறான். மிகக் கேவலமான வாழ்வு நடாத்திய யான் மதுரை செல்ல முடிவெடுத்து எழுக என எழுந்தாய் என் செய்தனை? என்று கேட்கிறான். இவ்வாறு பேசுவதால் அப் பெருமாட்டி எத்துணைத் தூரம் வருந்துவாள் என்றுகூட அவன் சிந்திக்க வில்லை. தவறுகள் இழைத்த அவன் அவற்றிற்காக ஒரளவு பச்சாதாபப்பட்டு வருந்துவது சரிதான், ஒயாமல் அதை நினைந்து வருந்துவதும் தன்னிரக்கம்'(Self-pity) கொள்வதும் சிறப்பன்று. எற்று என்று இரங்கும் காரியத்தைச் செய்துவிட்டு ஒயாமல் அது பற்றி நினைந்து வருந்துகிறான் கோவலன். இளங் கோவடிகள் தன் இரக்கம் உடைய இந்தப் பாத்திரத்தை வடித்துக் காட்டுகிறாரே அதுபோல ஷேக்ஸ்பியரின் ரிச்சர்ட் II நாடகம் அமைந்துள்ளது. தன்னுடைய குறைபாட்டைப் பெரிதுபடுத்தி அதை ஒயாமல் சொல்லிச் சொல்லி அனுபவித்துக் கொண்டிருக்கும் பாத்திரம் ரிச்சர்ட் கோவலன் போன்ற பாத்திரம் ஏனைய நற்பண்புகள் அனைத்தும் நிறைந்தவனாய் இருந்தும் இக் குறைபாட்டைப் பெற்றிருந்ததற்காகக் குறை சொல்லவில்லை, இரக்கங் காட்டுகிறோம். இந்த இரக்கத்திற்குப் பாத்திரமாக அவன் ஆனதும்கூட, வள்ளுவனுடைய குறளை வைத்துத்தான் என்பதை மறந்துவிட வேண்டா,

இனி, கண்ணகியினுடைய கற்பைப்பற்றிக் காணலாம். 'இடும்பைக்கே கொள்கலம் கொல்லோ குடும்பத்தைக் குற்றம் மறைப்பான் உடம்பு" வள்ளுவன் காலத்தில்கூட உழைப்பாளி களும் உழைக்காதவர்களும் இருந்திருப்பர்போலும் அதை அவர் பார்த்திருக்கிறார். உழைக்கின்ற பண்பாடுடையவன் குடும்பத் தலைவன். உழைக்கின்றவன் உழைத்துக்கொண்டே இருப்பான். அந்த உழைப்பால் கொழுக்கிறவன் கொழுத்துக்கொண்டே இருப்பான். துன்பப்படுவதற்கென்றே பிறந்தானா இவன்? ஏன் இப்படி உழைக்கின்றான். குடும்பத்தைக் குற்றம் மறைப்பதற் காகவே, பலரை வைத்துக் காக்க வேண்டுமென்ற கடப்பாட்டை மேற்கொண்டுவிட்டானானால், தன்னுடைய கடமையைப் பெரிது என்று நினைத்துவிடுவானேயானால், தன்னுடைய இன்பத்திற்கு அங்கு இடமே கிடையாது. இவன் இன்பத்தை நாடினால், ஏனையோர் துன்பத்தில் உழல நேரிடும் அவர்கள் இன்பமாக வாழவேண்டும் என்றால் இவன் உழைத்தே ஆகவேண்டும் வேறு வழியில்லை. மனிதர்களுடைய வாழ்க்கையைப் பார்க்கிறோம்; இப்படித் துன்பத்தைப் பெரிதுபடுத்துகிறவர்களும் உண்டு. இதன் எதிராகக் கண்ணகி வாய்திறந்து எங்கேயாயினும் தன்னுடைய துன்பத்தைப் பெரிதெனக் கூறியதுண்டா? மாமனார், மாமி யாரிடத்திலும் தன்னுடைய துன்பத்தைச் சொல்ல மாட்டாள். அவர்களே அவள் புன்சிரிப்பைக் கண்டு வருந்தினார்களாம்.

மாமன் மாமியரைக் கண்டு அவள் புன்முறுவலுடன் வர வேற்றாலும் அச் சிரிப்பு உதட்டளவில் தோன்றியது என்பதை அறிந்து அவர்கள் வருந்தினார்களாம். போலியாகச் சிரித்துக் கொண்டு கண்ணகி வாழவேண்டிய இன்றியமையாமை யாது? அவள் தந்தையிடம் சென்றிருக்கலாமே? எவ்வளவு பெரிய செல்வன் அவன்? இல்லை, மாமன் மாமியர்கள்தாம் இவளைத் தாங்கமாட்டார்களா? சிலம்புதான் மிச்சமிருக்கிறதென்று சொல்லுகிற அளவுக்கு வாழ்க்கையில் வறுமை வந்துற்றதே. எவ்வளவு வசதி குறைந்த வாழ்க்கையாக இருக்கும்? வசதிக் குறைவாகவே பிறந்து வளர்ந்திருந்தால் கவலையில்லை. ஆனால், பெரு வளத்திலே வாழ்ந்த அவள் தன்னை மாறி இறுக்க உள்ள கடன்கள் என்று சொல்லுவார்களே அந்த முறையில், அந்த வாழ்ந்து-கெட்ட சூழ்நிலையிலே, எவ்வளவு சுலபமாக அவள் தப்பித்துக்கொண்டிருக்கலாம். இந்நிலையிலும் பிறர் இரக்கத்தை அவள் வேண்டவில்லை. அதுவே, தன்மான உணர்ச்சி. குடும்பத்தின் மரியாதை வெளியிலே கெடக்கூடாது என்ற உறுதிப்பாடு குடும்பத்தின் குற்றத்தை மறைக்கவேண்டும் என்று அவள் கொண்ட உறுதியான கொள்கை, தன்னுடைய எல்லையற்ற துன்பத்தைப் பொறுத்துக்கொள்ளச் செய்தது. அந்தத் துன்பம் மலைபோல வந்து விழ்கின்றது எனினும் அவள் வாய் திறந்து பேசவில்லை. மாமன் மாமியரிடம்கூட வாய் திறந்து பேசவில்லை என்றால், அந்த உறுதிப்பாட்டை என்னவென்று புகழ்வது? அதனுடைய பயன் என்ன ஆகிறது? இடும்பைக்கே கொள்கலன் கொல்லோ? என்ற வள்ளுவன் குறளின் முற்பகுதி நினைவுக்கு வருகிறது. ஊரில் உண்டான துன்பங்களுக் கெல்லாம் அவள்தான் உறைவிடமாக இருக்கிறாள். கணவனைப் பிரிந்ததனாலே வந்த வருத்தம்; தன்னுடைய வாழ்க்கையிலே விருந்தினர் முதலானவர்களை உபசரிக்க முடியவில்லையே என்ற வருத்தம் இந்த இரண்டு வருத்தம்கூடப் பெரிதில்லை. உலக அனுபவம் பெற்றவர்களுக்கு மூன்றாவது ஒன்றும் உண்டு. நம்முடைய மக்கள் பிறர் வாழ்வில் தலையிடாமல் இருப்பதில்லை. தேவை இல்லாதவிடத்தும் தம் அனுதாபத்தைக் காட்ட முனைந்து ஆறி இருக்கும் தழும்பை மறந்துபோனதுயரத்தை - கிளறிவிட்டு விடுகின்றனர். உற்றார், உறவினர், நொதுமலர் ஆகிய அனை வரும் கண்ணகியிடம் தம் வெற்று அனுதாபத்தை அறிவிக்கத் தொடங்குகின்றனர். அவர்கள் தம்முடைய அனுதாபத்தைத் தெரி வித்துக்கொள்வதானால்தான் கண்ணகி தன் குடும்ப கெளரவம் பறிபோகிறதாக நினைத்து வருந்துகிறாள். இத் தமிழர்கள் எவ்வளவு துன்பம் வந்த காலத்திலும், செல்வம் மல்கிய காலத் திலும் அன்றி, அல்லல் நல்குரவு ஆனபோதிலும்” அயல் அறியாமை வாழ விரும்புகிற பண்பாடுடையவர்கள். அடுத்த வீட்டுக்காரர்களுக்குத் தம் வீட்டில் என்ன நடக்கிறது என்று தெரியாமல் வாழுவதே குறிக்கோள் வாழ்க்கையாகக் கொண்ட வர்கள் இத் தமிழர்கள். அந்தப் பண்பாட்டிலே ஊறித்திளைத்த வளாகிய கண்ணகிக்கு, பிறர் தங்களுடைய குடும்பத்தின் சூழ்நிலையை எடுத்துப் பேசுவதும் அதன் காரணமாகத் தனக்கு வருத்தம் தெரிவிப்பதும் எல்லையற்ற துன்பத்தைத் தருகிறது. விநாடிதோறும் இதனைப் பொறுத்துக் கொண்டிருக்கவேண்டிய சோதனைக்கு ஆளாகிறாள் இவள். இத்தனையும் நினைந்து பார்க்கும்பொழுதுதான் இடும்பைக்கே கொள்கலன் கொல்லோ, குடும்பத்தைக் குற்றம் மறைப்பான் உடம்பு” என்ற குறள் நம்முடைய நினைவுக்கு வருகிறது. -

வாழ்க்கைத் துணைநலம் என்ற அதிகாரத்தில் பேசப்பட்ட அத்தனைக் குறள்களும் கண்ணகியின் வாழ்க்கையில் ஒன்றொன்றாக வந்து காட்சியளிப்பதைக் காணலாம். தற்காத்து, தற்கொண்டான் பேணி, தகைசான்ற சொற்காத்துச் சோர்விலாள் பெண் என்பன போன்ற குறள்களையெல்லாம் தனித்தனி நிகழ்ச்சிகளில் வைத்துப் பார்க்கும் பொழுது, குறளை எவ்வளவு தூரம் பயன்படுத்தியிருக்கின்றார் இளங்கோவடிகள் என்பதை நன்கு காணமுடியும். இரண்டு கண்களும் ஒன்றையே காணும் முறையில், ஒன்றுக்குப் பேருருரையாக மற்றொன்று அமைந் திருக்கிறது என்பதைத்தான் காண்கிறோம். அல்லற்பட்டு ஆற்றாது அழுத கண்ணி அன்றே செல்வத்தைத் தேய்க்கும் படை' என்ற குறளைப்பற்றி அறிவோம். இக் குறளையும் இளங்கோ நன்கு பயன்படுத்தியுள்ளார் என்பதை அறியலாம். அறிவினால் ஆகுவதுண்டோ பிறிதின்நோய் தன் நோய்போல் போற்றாக்கடை என்பது ஒரு குறள். இன்றைக்கு நாம் அறிவு' என்ற சொல்லால் எதனைக் கூறுகிறோமோ அதனை வள்ளுவர் குறிப்பிடவில்லை. அவர் கூறுவது வேறு. இங்கே அறிவு என்பதற்குப் பண்பாடு என்று பொருள் கொள்ளவேண்டும். ஆராயும் அறிவு எனப் பொருள் கொண்டாலும் சரியே. பிற உயிர்கள் துன்புறுகின்றன. அந்தத் துன்பத்தைக் காணுகின்றான் ஒருவன். வயிற்று வலியினால் துடிக்கிறார் அவர் நான் என்ன பண்ணமுடியும். வாங்கிக் கொள்ளமுடியுமா?’ என்கிறார் அதனைக் காணுபவர் இவ்வாறு கூறுபவர் தீர்க்கக் கூடியதாக இருந்தால் பகிர்ந்து கொண்டு தீர்க்கிறேன். தீர்க்கக்கூடாததாக இருந்தால் என்ன செய்யமுடியும்?”என்ற பொருளில் பேசுகிறார். இப்பொழுது என்னசெய்ய முடியும்? எல்லா நாட்டிலேயும் இருந்தல் ஒரு பெரிய பிரச்சினைதான் இது. பிறருடைய துன்பத்தைப் போக்கவேண்டுமென்று வள்ளுவர் சொல்லிவிட்டால் போதுமா? பிறருடைய துயரத்தைப் பார்த்துக் கொண்டிருத்தல் பண்பாடு அன்று அறிவினால் ஆகுவது உண்டோ பிறிதின் நோய் தன் நோய்போல் போற்றாக்கடை"-அறிவில்லாதவனுக்கும் இருக்கிற வனுக்கும் என்ன வேறுபாடு? பிறர் நோய் என்று சொல்லவில்லை; பிறிதின் நோய் என்கிறார். அஃறிணைக்கும் உயர்தினைக்கும் வள்ளுவனுக்கு நன்றாக வேறுபாடு தெரியும். வேண்டுமென்றே தான்பிறிதின் நோய் என்ற சொல்லைப் பயன்படுத்துகிறார். பிறர் நோய் என்றால், மக்கள் படும் துன்பத்தைமட்டும் கவனித்துப் பிற உயிர்களுக்கு வருகின்ற துன்பத்தைப் பற்றிக் கவலைப்படாமல் விட்டுவிடுவான். பிற அஃறிணை உயிர்களுக்கும் உள்ள துன்பத்தைக் கண்டு நீ பொறுத்துக் கொண்டிருப்பாயேயானால், அறிவு பெற்றுப் பயன் என்ன என்கின்றார். அப்படியானால், அந்தத் துன்பம் போக்கக் கூடியதாக இருந்தால் போக்கலாம்; போக்க முடியாததாக இருந்தால் என்ன செய்வது? பசி என்று வருகிறான் ஒருவன். நான் வயிறு நிறைய உண்டுவிட்டேன். சோறு இருந்தால் கண்டிப்பாகப் போடவேண்டியதுதான் அதில் தவறே கிடையாது. இல்லையானால் என்ன செய்கிறது? இருந்தால் போடலாம்; இல்லாதபோது? சரி வடித்துப்போடு என்கின்றார் வள்ளுவர். நம்ம வீட்டிலே அரிசியே இல்லை என்றால் கடன் வாங்கிப் போடு என்கின்றார். இது தமிழ்நாட்டுப் பண்பாடு, அதனால்தான் இளையான்குடிமாறர் விருந்தினரைக் கண்டவுடன் கடன் வாங்கிப் போடவேண்டியது கடப்பாடு என்று எண்ணுகிறார். தன்னை மாறி இறுக்க உள்ளன. கடன்கள்” பெற்றுவிட்டார். எல்லாவற்றையும் அடகுவைத்தும் வாங்கியா யிற்று. இந்தமாதிரிச்சூழ்நிலையிலேயும் கடமையை விடக்கூடாது என்பதுதான் தமிழ்நாட்டுப் பண்பாடு என்ன செய்வது? வயலில் போட்டிருக்கிற விதையைப் போய் அள்ளிக்கொண்டு வருகிறார். இந்நிலையை எடுத்துக்கொண்டு பார்ப்போமேயானால், பிறருடைய துன்பத்தைப் போக்கமுடியாத நிலைதான். அப்படிப் போக்க முடியவில்லையானால் அந்த நிலையைச் சமாளிக்க ஒரு சட்டம் சொன்னான் இந்த நாட்டுக்காரன், போக்க முடியவில்லை என்றால் நீயும் அந்தத் துன்பத்தை உடன் பங்கிட்டு அனுபவிப்பாயாக என்றான். ஒருவர் வயிற்று வலியிலே துடிக்கிறார். வயிற்று நோயை விலைக்கு வாங்க முடியுமா? உண்மையாக அவன் துன்பத்தில் பங்கு கொள்வதென்றால், நீயும் வயிற்று வலியை வரவழைத்துக்கொண்டு அனுபவி என்றான். ஆனால், கான முயல் எய்த அம்பினில் யானை பிழைத்தவேல் ஏந்தல் இனிது!’ என்றும் உள்ளுவதெல்லாம் உயர்வுள்ளல்"என்றும் கூறியதற்கு இது எடுத்துக் காட்டு வாழ்க்கையில் நம்முடைய குறிக்கோள் எப்படி இருக்கவேண்டுமென்றால், அற்பமானதாகவும் அடையக் கூடியதாகவும் இருக்கக்கூடாது; மிக உயர்வாக இருக்க வேண்டும். அறவாழ்வினுடைய அடிப்படை இது என்றால், பிறனுடைய துன்பத்தைப் போக்க முடியாதபொழுது நீயும் அதனைப் பகிர்ந்து கொள்ள வேண்டுமென்று கூறும் அளவுக்குச் செல்கிறது. மனுநீதிச் சோழனுடைய வரலாறு அதுதான் இறந்த கன்றுக்குட்டியை எழுப்ப முடியாது. வேறென்ன செய்வது? கன்றை இழந்த பசுவின் துன்பத்தை நானும் அடைவேன் என்கிறான் மன்னன். உன்னுடைய துயரத்தை நாங்கள் பங்கு கொள்ளுகிறோம் என்று பசுவினிடம் சொல்லிவிட்டால் போதுமா? அது தவறு என்கிறான் மன்னன். நான் அனுபவிக்கிறேன் என்று சொன்னால்மட்டும் போதாது. தானும் உண்மையிலேயே அனுப விக்கவேண்டுமென்றுதான் தன் மகனை, ஒரு மைந்தன் தன் குலத்துக்குள்ளான் என்பதும் உணராமல், அவன் மருமத்தின் இடையே தேரைச் செலுத்தினான். வள்ளுவன் குறளுக்கு அவன் கண்ட இலக்கியம்,

சிலப்பதிகாரத்திலேயும் இக் குறளைக் காண முடிகின்றது. அறிவினால் ஆகுவதுண்டோ'என்ற குறளை எங்கே பேசுகிறார்? மதுரைமக்களுடைய கூற்றாக வைத்துப் பேசுகின்றார் கண்ணகி துயரை மதுரை மக்கள் பார்த்தார்கள். சான்றோரும் உண்டு கொல் பெண்டிரும் உண்டுகொல்' என்று அவள் அழுத அரற்றலில், கதறிய கதறலில் மற்ற மக்கள் உண்மையைக் கண்டு கொண்டார்கள். தவறு நடந்துவிட்டது என்பதை அவள் அரற்றல் காட்டிவிட்டது. மதுரை மக்கள் இந்நிலையில் என்ன செய்ய முடியும்? அவளுடைய துயரத்தை அவர்கள் போக்க முடியுமா? நிச்சயமாக முடியாது. கடவுள் ஒருவரையல்லாமல் கொலை செய்த பாண்டியன்கூடப் போக்க முடியாத துயரத்தைப் பெற்றுவிட்டாள் அவள் பட்டேன் ஒரு துயரம், யாரும் படாதது என்று அவளே கூறுகிறாள். இப்பொழுது என்ன செய்ய முடியும் மதுரை மக்கள்: முன்னர்ச்சட்டம் செய்தவர் அறிவினால் ஆகுவதுண்டோ'என்று கூறிவிட்டாரே-இயற்றிவிட்டாரே என்ன செய்யமுடியும்? மதுரை மக்கள் பார்த்துக் கண்ணிர் விட்டார்கள் என்றால், கண்ணிர் பலதரப்படுமே என்று தெரியும் என்ன செய்யமுடியும் அவர்கள்? அவர்கள் செய்ததை மல்லல் மதுரையாரெல்லாரும் தாம் மயங்கி' என்ற சொல்வில் காட்டிவிட்டார் இளங்கோ, அந்த மயங்கி என்ற சொல்லில் தான் பிறிதின் நோய் தன் நோய்போல் போற்றுகின்ற அந்த ஒப்பற்ற பண்பாட்டை வைத்துக் காட்டுகின்றார். மயங்கி என்று சொல்லுகின்ற சொல்லுக்குப் பொருளென்ன? செய்வது அறியாது திகைத்து விழுதல். கண்ணகியினுடைய துயரத்தை எவ்விதமாகவேனும் போக்க வேண்டுமென்று நினைத்தார்கள். எவ்விதத்திலும் போக்க அவர்களுக்கு வழியில்லை. என்ன செய்தார்கள்? மயங்கி வீழ்ந்துவிட்டார்கள். கண்ணகி பன்முறை மயங்கி விழ்கின்றாள் துயரந் தாளாமல். இவர்களும் அந்தத் துன்பத்தைப் பங்கு கொண்டு மயங்கி வீழ்கின்றார்கள். வள்ளுவருடைய இலக்கணத்தில் காணப்படுகின்ற மிகமிக உண்மையான இடங்களுக்கெல்லாம் பேருரைகள் வகுக்கப்படு கின்றதைச் சிலப்பதிகாரத்தில் காணுகின்றோம்.

இனி நாடொறும் நாடி முறை செய்யா மன்னவன் நாடொறும் நாடு கெடும்” என்று ஒரு குறள் பேசுகிறது. தினந்தோறும் மன்னன் நீதி வழங்கிக் கொண்டிருக்கவேண்டும் என்கிறார். ஒன்றே முக்கால் அடி உள்ள குறளில் வள்ளுவன் நயம் வைத்தால் அந்த நயத்தை இளங்கோ வாங்குகிறார். நாடொறும் முறை செய்யவேண்டும் முறை செய்வதிலும் நாடி முறை செய்யவேண்டும் நாடி என்றால் ஆராய்ந்து என்பது பொருள். கள்வனைக்கோறல் கடுங்கோலன்று என்று மன்னவன் சொல்லிவிட்டான். அதற்கு என்ன அடிப்படையாக இருந்தது? தேவியின் திருட்டுப் போன சிலம்பு கள்வன் கையகத்தது எனப் பொற்கொல்லன் கூறினான். சினையலர் வேம்பன் தேரானாகிக் கொன்று அச்சிலம்பு கொணர்க ஈங்கு'என்று சொல்லிவிட்டான். அவனைப் பிடித்துக் கொண்டு வார விசாரித்துத் தவறு நேர்ந் திருக்குமேயானால் அவனைத் தண்டிக்கலாம் என்ற பொருளில் கள்வனைக் கொல்ல அச் சிலம்பு கொணர்க இங்கு என்று சொல்லியிருக்க வேண்டும். கொல்ல என்ற எதிர்கால வினை யெச்சம் கொன்று என்று இறந்தகால வினையெச்சமாக அங்கு விழுந்ததே அதற்கு இலக்கணம் இந்தக் குறள்;முறை செய்தான்; ஆனால், நாடி முறை செய்யவில்லை. நாடுதல் என்பது எங்கே? எதிர்மறை, உடன்பாடு இரண்டையும் ஆராய்ந்து பார்க்க வேண்டும். அந்த நாடுதலாகிய ஒன்று செய்யாமையின் பெருந் தவறு விளைந்துவிட்டது. வையத்துள் வாழ்வாங்கு வாழ்பவன் வானுறையும் தெய்வத்துள் வைக்கப்படும்” என்ற குறளையும் 'ஊழிற் பெருவலி யாவுள' என்ற குறளையும் சிலப்பதிகாரம் முழுவதும் விரித்துப் பேசுகிறது. .

சொல்லுக சொல்லைப் பிறிதோர் சொல் அச்சொல்லை வெல்லும் சொல் இன்மை யறிந்து'-இந்த ஒரு குறளுக்கு எவ்வளவு விரிவுரை செய்கின்றார் இளங்கோவடிகள் அதிலும் கண்ணகியின் கூற்றாக இச் சொற் செல்வத்தை வைத்து மனித சமுதாயம் முழுவதற்கும் பயன்படும் முறையில் இளங்கோவடிகள் பேசுகின்றார். பாண்டியன் கேட்டது ஒரு கேள்வி. அதற்குக் கண்ணகி பதில் சொல்லுகின்ற முறையில் சொற் செல்வத்தைக் காண்கிறோம். "யாரையோரீமடக்கொடி?”என்ற ஒரு கேள்விக்கு எத்தனை எத்தனை விதமாகத்தான் விடை யிறுக்கப்படுகிறது. எத்தனை எத்தனை கேளாதவினாக்களுக்கு அதிலே விடை கிடைக்கிறது! அதைத்தானே சொற்செல்வம் என்று சொல்லுகின்றோம். செல்வம் என்பதன் பொருளென்ன? வேண்டுமானவற்றை வேண்டுமானபோது வாங்குவதற்கு வாய்ப்பாக இருக்கின்ற ஒன்றுதானே செல்வம். உண்மையான செல்வம் எது? ஈகின்ற சக்தியுடையதாக இருத்தல் வேண்டும். பிறர் துயரம் களையக் கூடியதாக இருத்தல் வேண்டும். எந்தத் தேவையோ அந்தத் தேவைக்குப் பயன்படக் கூடியதாக இருத்தல் வேண்டும். இங்கே பாண்டியனுடைய தேவை யாது? அவனுடைய மனத்தில் எழப்போகும் பல சந்தேகங்களையும் ஒன்றொன்றாகக் கேட்கப்போகின்றான். உன் கணவன் யார் என்பான்? பின்பு அவன் ஏன் மதுரை வந்தான் என்பான்? அவ்வாறு கேட்டுக் கேட்டுக் கொடுத்தால் அது உண்மையான செல்வத்துக்குச் சிறப்பாகாது. உண்மையான செல்வம் கேளாமலே பயன்பட வேண்டும். கண்ணகியினுடைய சொற்செல்வம் எப்படிப் பயன் படுகிறது? வேண்டிய இடத்திலே பயன்படுகிறது; தக்க முறையிலே பயன்படுகிறது; பாண்டியனுடைய ஐயத்தைப் போக்கப் பயன் படுகிறது. ஆகவே, அவள் பேசியதை வெறுஞ் சொல் என்னாமல் சொற்செல்வம் என்கிறோம். ஆனால், அவள் பேசியதால் பயனில்லை என்றால், அது வெற்றுரையாக ஆய்விட்டிருக்கும். சொல்லுக சொல்லில் பயன் உடைய’ என்று சொல்லிவிட்டாரே வள்ளுவர். ஆகவே, கண்ணகியினுடைய சொற்செல்வம் பயனுடை யதாய், வேண்டத்தக்க விடத்தில் பயன்படுவதாய், பாண்டி யனுடைய ஐயத்தைப் போக்கக் கூடியதாய் அமைவதைக் காண்கிறோம். எனவே, "சொல்லுக சொல்லிற் பயனுடைய” என்ற குறளையும் சொல்லுக சொல்லைப் பிறிது ஒர் சொல் அச் சொல்லை வெல்லும் சொல் இன்மை அறிந்து என்ற இந்த இரண்டையும் வைத்துக் கொண்டு எவ்வளவு சிறந்த முறையில் கண்ணகியின் சொற்செல்வத்தைக் காட்டுகிறார் இளங் கோவடிகள் "தேராமன்னா”என்று தொடங்கும் முதற்பகுதியை நினைந்து பார்க்கவேண்டும் ஒருவன் தவறிழைத்தால் இரண்டு வகையிலே எடுத்துக் காட்டலாம். நீ இந்தத் தவறைச் செய்தாய் என்று சொல்வது நேரடி முறை, நாங்கள் இத்தகைய தவற்றைச் செய்ததில்லை என்று சொல்லுவது இன்னும் கொஞ்சம் கெளரவமான மறைமுக முறை. இரண்டாவதான மறைமுக முறைதான் பெரியவர்கள் செய்கின்ற காரியம். நீ இந்தக் குறையைச் செய்தாய் என்று சொல்லுவதைக் காட்டிலும், இப்படிப் பட்ட பிழையைப் பெரியோர்கள் செய்வதில்லை என்று சொல்லு வதுதான் இம் முறை. சோழ நாட்டில் இம்முறையில் நீதி வழங்கப்பட்டது என்று சொல்லும்பொழுது, பாண்டியநாட்டில் அது அவ்வாறு இல்லை என்பதைக் குறிப்பதாகும். புறவு ஒன்றின் பொருட்டாகத் துலைபுக்க நாடு என்னுடையது'என்னும் பொழுது இங்கே மனிதர்க்கே இரக்கங் காட்டுவார் இல்லை என்ற குறிப்பைக் காட்டுகின்றது. இனி அடுத்தபடியாக, கணவனுடைய பெருமையெல்லாம் வரிசையாகச் சொல்லிக்கொண்டு வரும் முறையில் சங்கப்பாடல் நினைவுக்கு வருகிறது. எய்யாதாகும் எஞ்சிறு செந்நாவே'என்றுபாடுகிறார் ஒரு புலவர் இந்தச் சிறிய நாக்கு இப்படியெல்லாம் பொய் பேசாது”என்கிறார். அதற்கு உரை எழுத வந்தவர் பொய் பேசாத நாக்கு ஆகலின் செந்நா’ என்று சொன்னார் தற்புகழ்ந்தாராகாமையின் சிறுநா என்றார் என்று கூறுகிறார். கண்ணகி வழக்குரைத்த பகுதி சிலப்பதிகாரத் திலேயே ஒப்புயர்வற்ற பகுதியாகும்.

 "தேரா மன்னா செப்புவது உடையேன்,

என்அறு சிறப்பின் இமையவர் வியப்ப

புள்உறு புன்கண் தீர்த்தோன்; அன்றியும்,

வாயில் கடைமணி நடுநாநடுங்க,

ஆவின் கடைமணி உகுநீர் நெஞ்சு சுட தான்தன்

அரும்பெறல் புதல்வனை ஆழியின் மடித்தோன்

பெரும்பெயர்ப் புகார் என் பதியே; அவ்உணர்,

ஏசாச் சிறப்பின் இசைவிளங்கு பெருங்குடி

மாசாத்து வாணிகன் மகனை ஆகி

வாழ்தல் வேண்டி, ஊழ்வினை துரப்ப,

சூழ்கழல் மன்னா, நின்நகர்ப் புகுந்து, இங்கு

என்கால் சிலம்பு பகர்தல் வேண்டி, நின்பிால்

 கொலைக்களப் பட்ட கோவலன் மனைவி;

கண்ணகி என்பது என் பெயரே'

இங்கே தன்னடக்கத்தையும் புறநானூற்றுப் பாடல் கவிஞனைப் போல இப் பெருமாட்டி கணவனுடைய புகழைப் பாடுகின்ற நிலைமையிலே தற்புகழ்ந்தாளாகாமையையும் காட்டினார். வியவற்க எஞ்ஞான்றும் தன்னை' என்பது இந் நாட்டு நீதி இதனைப் பின்பற்றிய கண்ணகியார் தம்முடைய கணவனுடைய குடும்பத்தைத் தவிர, தம்முடைய குடும்பத்தைப் பற்றி ஒரு வார்த்தைகூடப் பேசவில்லை. ஆனால், அதிலேயும் ஒரு சிறப்பைக் காண்கின்றோம். அப்படிப்பட்ட கோவலன் அவ்வளவு உயர்ந்தவனாக இருப்பானேயானால், இங்கே ஏன் வரவேண்டும் என்ற வினாவை எதிர்நோக்கி அழகாக ஊழ்வினை துரப்ப” என்றாள். மறுபடியும் குறள்தான் நினைவுக்கு வருகிறது. ஊழ்வினை துரப்ப என்ற தொடரில் துரப்ப என்ற சொல்லுக்கு ஒர் அற்புதமான பொருள் உண்டு, துரப்ப என்றால் விரும்பாத பொழுதும் கழுத்தைப் பிடித்து நெக்குவது என்று பொருள். சாதாரணமாக இழுப்பது வேறு கழுத்தை பிடித்துத் தள்ளுவது வேறு வாஎன்று ஒருவர் இழுத்தால் வரமுடியாது என்று எதிர்ப்புச் சக்தியைக் கொடுத்துப் பார்க்கலாம். கழுத்தைப் பிடித்துத் தள்ளினால் எதிர்ப்புச் சக்தியைப் பயன்படுத்த முடியாது. முன்னர் சொன்ன ஊழ் வினை எப்படிப்பட்டது? மற்றொன்று சூழினும் தான் முந்துறக் கூடியதல்லவா? ஊழ்வினையை எதிர்த்துப் போராடுகிறவர்கள் யாருமில்லையே. கோவலனை ஊழ்வினை பின்னே நின்று தள்ளியதால் (துரப்ப) அவன் அதனை எதிர்த்துப் போராடச்சக்தியற்று இவண் வந்துற்றான்'என்கிறாள் கண்ணகி இவ்வளவு பொருட் சிறப்பையும் இளங்கோவடிகள் எங்கே காட்ட முடியும்? துரப்ப என்ற சொல்லிலே வைத்துக் காட்டுகின்றார். எனவே, வள்ளுவர், இளங்கோ என்ற இருவரும் தமிழ் உலகுக்கும், தமிழ் இல்க்கிய உலகுக்கும், தமிழ்ப் பண்பாட்டை வடித்துக் காட்டுகின்ற சூழ்நிலைக்கும் இரண்டு கண்ணாவார்கள் என்பதும், உலகில் என்றும் இரண்டு கண்களும் ஒரே பொருளைத் தான் காணும் என்பதும், அந்த உலகிலே இந்த இரண்டு பெரு மக்களும் ஒரே பொருளைக் கருதினார்கள் என்பதும், கண்ணினுள் எத்தனை மாறுபாடுகள் இருப்பினும் காணப்படும் பொருள்கள் ஒன்றாகவே இருத்தல்போல், பெருங் காப்பியமாக ஒன்று அமைந்திருப்பினும், ஒன்றே முக்கால் அடியை உடையதாக மற்றொன்று அமைந்திருப்பினும், இவை இரண்டினாலும் நுவலப்பட்ட பொருள் ஒன்றேயாம் என்பதும், ஒன்று சட்டமாக அமைந்தது என்பதும், அந்தச் சட்டத்தை விரிவுரை செய்கின்ற தாக மற்றொன்று அமைந்தது என்பதும், சட்டம் அனைவரும் புரிந்து கொள்ளும் முறையில் பரந்துபட்டு நில்லாது என்பதும், விரிவுரை அனைவரும் அறிந்து பயன் அடையக்கூடிய சூழ் நிலையில் இருக்கிறது என்பதும், திருக்குறள் சதுரித்து வைத்த சலவைக் கல்லாய் அமைந்திருக்கிறது என்பதும், சதுரித்து வைத்த சலவைக் கல்லை எடுத்துச் சுந்தரமாம் ஒரு காப்பியமாக இளங் கோவடிகள் செய்தார் என்பதும், எங்கே எங்கே பயன் உடையவை உண்டோ, அங்கே அங்கே அதனைக் குறிப்பிட் டுச் சொல்லுவது வள்ளுவன் குறளின் அடிப்படையாய நோக்கம் என்பதும், அங்ங்ணம் அவன் குறிப்பிட்டு அழுத்தமாகச் சொல்லிய அனைத்தையும் தம்முடைய பெருங் காப்பியத்தில் கொண்டு வந்து தந்திருக்கின்றார் இளங்கோ என்பதும், மனிதனுடைய வாழ்வில் எங்கே போராட்டம் நிகழ்கின்றதோ அங்கேதான் சட்டத்திற்குத் தேவை என்பதும் சாதாரண அமைதி வாழ்க்கையில் சட்டம் தேவையில்லை என்பதும், நம்முடைய வாழ்க்கையில் போராட்டம் நிகழும்பொழுதெல்லாம் இதன் முடிவு என்ன என்று நாம் விசாரிக்கும்பொழுது திருக்குறளில்தான் விடை காணமுடியும் என்பதும், அந்தச் சட்ட்த்தின் நுணுக்கம் புரியாதபொழுது சிலப்பதிகாரத்தை எடுத்துப் புரட்டுவோமேயானால் வாழ்வின் செம்மையான நெறி எது என்பதை நாம் அறிந்து கொள்ளக்கூடும் என்பதும் நன்கு விளங்கும். இந்த இரண்டும் தமிழனுக்குமட்டும் அல்லாமல் உலகம் முழுவதற்கும் இரண்டு கண்ணாக அமையக் கூடுமென்பது மனத்தில் இருத்தவேண்டும்.



__________________
Page 1 of 1  sorted by
 
Quick Reply

Please log in to post quick replies.



Create your own FREE Forum
Report Abuse
Powered by ActiveBoard