நிலை (7)
நிலை அஞ்சி நீத்தாருள் எல்லாம் கொலை அஞ்சி
கொல்லாமை சூழ்வான் தலை - குறள் 33:5 கொல்லாமை மணக்குடவர் உரை: மனைவாழ்க்கையில் நிற்றலை யஞ்சித் துறந்தவரெல்லாரினும் கொலையை யஞ்சிக் கொல்லாமையைச் சிந்திப்பான் தலைமையுடையவன்; இல்வாழ்க்கையில் நிற்பினும். இஃது எல்லாத் துறவினும் நன்றென்றது. மு.வரதராசனார் உரை: வாழ்க்கையின் தன்மையைக்கண்டு அஞ்சித் துறந்தவர்கள் எல்லாரிலும், கொலைசெய்வதற்க்கு அஞ்சிக் கொல்லாத அறத்தைப் போற்றுகின்றவன் உயர்ந்தவன்.
முதல் இலார்க்கு ஊதியம் இல்லை மதலை ஆம்
சார்பு இலார்க்கு இல்லை நிலை - குறள் 45:9 பெரியாரைத் துணைக்கோடல் மணக்குடவர் உரை: முதலில்லாதார்க்கு இலாபமில்லையானாற் போலத் தாங்குதலாகிய சார்பு இல்லாதர்க்கு அரசு நிலைநிற்றல் இல்லை. மு.வரதராசனார் உரை: முதல் இல்லாத வணிகர்க்கு அதனால் வரும் ஊதியம் இல்லை, அதுபோல் தம்மைத் தாங்கிக் காப்பாற்றும் துணை இல்லாதவர்க்கு நிலைபேறு இல்லை.
ஆற்றின் நிலை தளர்ந்து அற்றே வியன் புலம்
ஏற்று உணர்வார் முன்னர் இழுக்கு - குறள் 72:6 அவையறிதல் மணக்குடவர் உரை: ஒரு நெறியின்கண் நின்றார் அந்நிலைமை குலைந்தாற் போல இகழப்படும், அகன்ற கல்வியைக் கேட்டறியவல்லார் முன்னர்த் தப்புதல். இது தப்புதல் வாராமற் சொல்லல் வேண்டுமென்றது. மு.வரதராசனார் உரை: விரிவான அறிவுத்துறைகளை அறிந்து உணர்கின்றவரின் முன்னே குற்றப்படுதல், ஒழுக்கநெறியிலிருந்து நிலைத் தளர்ந்து கெடுவதைப் போன்றதாகும்.
நிலை மக்கள் சால உடைத்து எனினும் தானை
தலைமக்கள் இல்வழி இல் - குறள் 77:10 படைமாட்சி மணக்குடவர் உரை: படையானது நிலையுடைய வீரரைப் பெரிது உடைத்தாயினும் தனக்குத் தலைவரை இல்லாத விடத்துத் தனக்கு வெற்றியில்லையாம். இது படையமைத்தாலும் படைத்தலைவரையும் அமைக்க வேண்டுமென்றது. மு.வரதராசனார் உரை: நெடுங்காலமாக நிலைத்திருக்கும் வீரர் பலரை உடையதே ஆனாலும், தலைமைதாங்கும் தலைவர் இல்லாத போது படைக்குப் பெருமை இல்லையாகும்.
நட்பிற்கு வீற்றிருக்கை யாது எனின் கொட்பு இன்றி
ஒல்லும் வாய் ஊன்றும் நிலை - குறள் 79:9 நட்பு மணக்குடவர் உரை: நட்புக்கு மேம்பட இருக்கும் இடம் யாதெனின் மனத்தின்கண் ஐயுற வின்றிச் செல்லுமாற்றால் தளராமைத் தாங்கி நிற்கும் நிலை வீற்றிருத்தல்-தலைப்பட இருத்தல். மு.வரதராசனார் உரை: நட்புக்கு சிறந்த நிலை எது என்றால், எப்போதும் வேறுபடுதல் இல்லாமல், முடியும் போதெல்லாம் உதவி செய்து தாங்கும் நிலையாகும்.
புகழ் இன்றால் புத்தேள் நாட்டு உய்யாதால் என் மற்று
இகழ்வார் பின் சென்று நிலை - குறள் 97:6 மானம் மணக்குடவர் உரை: இம்மைப் பயனாகிய புகழைத் தாராதாயின், மறுமைப் பயனாகிய சுவர்க்கத்துப் புகுதலில்லை ஆயின், தன்னை இகழ்ந்துரைப்பார்பின் சென்று ஒருவன் நிற்கின்றது பின்னை என்ன பயனைக் கருதி? இது தம்மை இகழ்வார்மாட்டுச் சென்று நிற்றலைத் தவிர்க வென்றது. மு.வரதராசனார் உரை: மதியாமல் இகழ்கின்றவரின் பின் சென்று பணிந்து நிற்க்கும் நிலை, ஒருவனுக்கு புகழும் தராது, தேவருலகிலும் செலுத்தாது, வேறு பயன் என்ன.
உழவினார் கைம்மடங்கின் இல்லை விழைவதூஉம்
விட்டேம் என்பார்க்கு நிலை - குறள் 104:6 உழவு மணக்குடவர் உரை: உழவை யுடையவர் அத்தொழிலைச் செய்யாது கைம்மடங்கு வராயின், யாதொரு பொருளின்கண்ணும் விரும்புவதனையும் விட்டேமென்பார்க்கு அந்நிலையின்கண் நிற்றல் இல்லை. எனவே துறவறத்திண்கண் நிற்பாரை நிறுத்துதல் உழவர்கண்ண தென்றவாறு. . சாலமன் பாப்பையா உரை:உழுபவர் கை மட்டும் வேலை செய்யாது மடங்கிவிட்டால், எல்லாரும் விரும்பும் உணவையும், நாம் விட்டுவிட்டோம் என்று கூறும் துறவியரும்கூட அவரது அறத்தில் நிலைத்து நிற்க முடியாது.
நிலைக்கு (2)
கண்ணோட்டத்து உள்ளது உலகியல் அஃது இலார்
உண்மை நிலக்கு பொறை - குறள் 58:2 கண்ணோட்டம் மணக்குடவர் உரை: உலகநடை கண்ணோட்டத்தின்கண்ணது: ஆதலால், அஃதில்லாதார் உளராயிருத்தல் நிலத்துக்குப் பாரமாம். இது கண்ணோட்டமில்லாதாரை நிலம் பொறாதென்றது.
கொளற்கு அரிதாய் கொண்ட கூழ்த்து ஆகி அகத்தார்
நிலைக்கு எளிது ஆம் நீரது அரண் - குறள் 75:5 அரண் மணக்குடவர் உரை: பகைவரால் கொள்ளுதற்கு அரிதாய்த் தன்னகத்தே அமைக்கப்பட்ட உணவையும் உடைத்தாய் அகத்துறைவார்க்கு நிற்றற்கு எளிதாகும் நீரையுடைத்தாயிருப்பது அரணாவது. எனவே, புறத்தார்க்கு நிற்றற்கரிதாகும் நீரையுடைத்தாதலும் வேண்டுமென்றவாறாயிற்று; தூரத்தில் நீரைப் பிறரறியாமல் உள்ளே புகுதவிடுதலும் வேண்டும் என்பதாம். மு.வரதராசனார் உரை: பகைவரால் கைப்பற்ற முடியாததாய், தன்னிடம் உணவுபொருள் கொண்டதாய், உள்ளிருப்போர் நிலைத்திருப்பதர்க்கு எளிதாகிய தன்மை உடையது அரண்.
வலி இல் நிலைமையான் வல் உருவம் பெற்றம்
புலியின் தோல் போர்த்து மேய்ந்த அற்று - குறள் 28:3கூடாவொழுக்கம் மணக்குடவர் உரை: வலியில்லாத நிலைமையை யுடையவன் வலிதாகிய தவவுருவங் கோடல், பெற்றமானது பிறர் பயப்படும்படி புலியினது தோலைப் போர்த்துப் பைங்கூழ் மேய்ந்த தன்மைத்து. மு.வரதராசனார் உரை: மனத்தை அடக்கும் வல்லமை இல்லாதவன் மேற்கொண்ட வலிய தவக்கோலம், புலியின் தோலைப் போர்த்திக் கொண்டு பயிரை பசு மேய்ந்தாற் போன்றது.
பசக்க-மன் பட்டு ஆங்கு என் மேனி நயப்பித்தார்
நன் நிலையர் ஆவர் எனின் - குறள் 119:9 பசப்புறுபருவரல் மணக்குடவர் உரை: என்னுடம்பு நிலையாக என்றும் பசப்பதாக: நம்மைக் காதலித்தவரும் நம்மைப்போலத் துன்பமுறுவாராயின். இது தலைமகனது கொடுமையை உட்கொண்டு கூறியது. மு.வரதராசனார் உரை:பிரிவுக்கு உடன்படச் செய்த காதலர் நல்ல நிலையுடையவர் ஆவார் என்றால், என்னுடைய மேனி உள்ளபடி பசலை நிறம் அடைவதாக.
நிலையின் (2)
நிலையின் திரியாது அடங்கியான் தோற்றம்
மலையினும் மாண பெரிது - குறள் 13:4 அடக்கமுடைமை மணக்குடவர் உரை: தனது நிலையிற் கெடாதே யடங்கினவனது உயர்ச்சி மலையினும் மிகப் பெரிது. நிலை- வன்னாச்சிரம தன்மம் தன் நிலையிலிருந்து மாறுபடாமல் அடங்கி ஒழுகுவோனுடைய உயர்வு, மலையின் உயர்வை விட மிகவும் பெரிதாகும்.
தலையின் இழிந்த மயிர் அனையர் மாந்தர்
நிலையின் இழிந்த-கடை - குறள் 97:4 மானம் மணக்குடவர் உரை: தலையினின்று இறங்கிய மயிரைப்போல இகழப்படுவர்: மாந்தர் தமது நிலையினின்று நீங்கித் தாழ ஒழுகின விடத்து. மக்கள் தம் உயர்வுக்கு உரிய நிலையிலிருந்து தாழ்ந்த போது, தலைமையிலிருந்து விழுந்து தாழ்வுற்ற மயிரினைப் போன்றவர் ஆவர். நிலையின (1)
நில்லாதவற்றை நிலையின என்று உணரும்
புல்லறிவு ஆண்மை கடை - குறள் 34:1 நிலையாமை மணக்குடவர் உரை: நில்லாத பொருள்களை நிலைநிற்பனவென்று நினைக்கின்ற புல்லிய வறிவுடைமை இழிந்தது. எனவே, பொருள்களை யுள்ளவாறு காணவொட்டாத மயக்கத்தைக் கடிய வேண்டுமென்றவாறாயிற்று. மு.வரதராசனார் உரை: நிலையில்லாதவைகளை நிலையானவை என்று மயங்கி உணரும் புல்லறிவு உடையவராக இருத்தல் வாழ்க்கையில் இழிந்த நிலையாகும்.
நிலையே (3)
ஆரா இயற்கை அவா நீப்பின் அ நிலையே
பேரா இயற்கை தரும் - குறள் 37:10 அவாவறுத்தல் மணக்குடவர் உரை: நிறையா இயல்பினையுடைய ஆசையை விடுவானாயின் அது விட்ட பொழுதே அழியாத இயல்பினைத் தரும். இயல்பாவது என்றும் ஒருபடிப்பட்டது. இது தன்னுடைய உருவத்தைப் பெறுமென்றது. மு.வரதராசனார் உரை: ஒருபோதும் நிரம்பாத தன்மை உடைய அவாவை ஒழித்தால் ஒழித்த அந்நிலையே எப்போதும் மாறாதிருக்கும் இன்ப வாழ்வைத் தரும். திருக்குறளார் வீ. முனிசாமி உரை: ஒருபோதும் நிறைவு பெறாத தன்மையுடைய ஆசையினை ஒருவன் நீக்கிவிட்டால், நீக்கிய அச்செயல் அவனுக்கு அப்போதே எக்காலத்திலும் ஒரு நிலையில் நிலைத்திருக்கும் தன்மையைத் தரும்.
எய்தற்கு அரியது இயைந்த-கால் அ நிலையே
செய்தற்கு அரிய செயல் - குறள் 49:9 காலமறிதல் மணக்குடவர் உரை: பெறுதற்கு அரிய காலம் வந்தால் அப்பொழுதே தன்னாற் செய்தற்கு அரியவாகிய வினைகளைச் செய்து முடிக்க. இது காலம் வந்தால் அரிதென்று காணாமற் செய்யவேண்டு மென்றது. மு.வரதராசனார் உரை:கிடைத்தற்கறிய காலம் வந்து வாய்க்குமானால், அந்த வாய்ப்பைப் பயன்படுத்திக் கொண்டு அப்போதே செய்தற்கரியச் செயல்களைச் செய்ய வேண்டும்.
ஒட்டார் பின் சென்று ஒருவன் வாழ்தலின் அ நிலையே
கெட்டான் எனப்படுதல் நன்று - குறள் 97:7 மானம் மணக்குடவர் உரை:
ஒருவன் தன்னை இகழ்வார்பின் சென்று வாழும் வாழ்க்கையின், அவர்பால் செல்லாத அந்நிலையே நின்று கெட்டானென்று பிறரால் சொல்லப்படுதல் நன்று.