கணவன் மனைவிக்கிடையில் அன்பான சூழலை விளக்கிய பிறகு பிள்ளைகளின் பெருமையில் மகிழ்கிறார்கள். பின்னையது சமூகத்துக்குப் பயன்படக்கூடியது. வள்ளுவர் இந்த அன்பை மேலும் விரித்து விருந்தினரைப் பேணுவதுவரை கொண்டு செல்லுகிறார். எதிர்பாராத விருந்தினர்க்குத் தம் உணவைப் பகிர்ந்து கொடுப்பதில் அடையும் மகிழ்ச்சியையும் பெருமையையும் பற்றிப் பேசுகிறார். திருவள்ளுவர் இதனை வேள்வி அல்லது பெருந்தியாகம் என்று அழைக்கின்றார். - தெ பொ மீ
விருந்து என்ற சொல் இன்று மணவிழா, சிறப்புப்பெற்றவர்களை வாழ்த்துவது இவை போன்ற கொண்டாட்ட நிகழ்சிகளில், சுற்றத்தார்க்கும் நட்பு வட்டத்திற்கும் மற்றவர்க்கும், மகிழ்ச்சியின் வெளிப்பாடாக, வீட்டிலோ வெளிஇடங்களிலோ, அளிக்கப்படும் உயர்ந்தவகை உண்டியையே குறிக்கிறது. ஆனால், முன்னாட்களில் விருந்து என்றது புதியது அதாவது புதியவர் என்று பொருள்பட்டது. புதியதாகத் தன் இல்லம் நாடி வருபவரை அன்புடன் வரவேற்றுச் 'சோறிடுதல்' விருந்தோம்பல் எனப்பட்டது.
விருந்தோம்பல்
அன்பு முதிர்ந்த நிலையை ஆர்வமுடைமை என்று வள்ளுவர் குறிப்பார். ஆர்வ நிலையில் விருந்தோம்பல் என்ற பண்பு மலரும். தென்புலத்தார் தெய்வம் விருந்தொக்கல் தானென்றாங்கு ஐம்புலத்தாறு ஓம்பல் தலை (இல்வாழ்க்கை குறள் 43) என்ற பாடலில் இல்வாழ்வானுக்குரிய தலையாய ஐந்து கடமைகளில் விருந்தோம்பலும் ஒன்று எனக் கூறிய வள்ளுவர் அதற்கென தனியாக ஒரு அதிகாரம் படைத்து அதன் விழுப்பங்கள், பயன்கள், விருந்தோம்பும் முறை இவற்றை விளக்கியுள்ளார். விருந்தோம்பாமை இழித்தும் சொல்லப்படுகிறது, மனித மேம்பாட்டைச் சிறப்பிக்கும் விருந்தோம்பல் என்ற பசி தீர்க்கும் அறத்தை ஒவ்வொரு இல்வாழ்வாரும் கடைப்பிடிக்க வேண்டும் என்று வள்ளுவர் வகுக்கின்றார். விருந்தோம்பல் இல்லாதவழி அன்பு பெருகி அருளாக மாறாது.
அறிமுகமானவர்களும் விருந்தினர்களாக வருவர். அறியாதவர்களும் வருவர். ஆனாலும் விருந்து என்பதற்குப் புதிது என்றும் விருந்தினர் என்பதற்கு புதியவர் என்றுமே பொருள். எத்துணை முறை வந்தாலும் சரி, பன்முறை பழகிவந்தாலும் சரி. அவர்களையெல்லாம் புதியராக எண்ணிப் போற்றவேண்டும் என்னும் விழுமிய எண்ணத்தால் எழும்பியதே இச்சொற்கள் போலும்!(இரா இளங்குமரனார்). பயணம் போகும் இடங்களில் அவர்களை ஏற்றுக்கொண்டு பேணக்கூடியவர்கள் இல்லங்களில் தங்கி அவர்கள் அளிக்கும் உணவையுண்டு அவ்வவ்விடங்களில் அறப்பணியாற்றியவர்கள் புதியவர் எனப்பட்டிருக்கலாம். இக்காலம் போல் பணம் பெற்று வசதியளிக்கும் உண்டுறை விடுதிகள் அக்காலத்தில் இருந்திருக்கா. ஆகவே, ஊருக்குப் புதிதாக வருவோரை வரவேற்று உணவு கொடுக்க வேண்டியது இல்லறத்தார்க்குரிய கடனாகக் கருதப்பட்டிருக்கலாம். பசியாற்றல்தான் விருந்தோம்பல் என்றால் பகுத்துக் கொடுக்கத் தக்கவர் எல்லாரையும் கூறாது, விருந்து ஒன்றை மட்டும் கூறியது ஏன் என்ற கேள்வி எழுப்பி அது சிறப்பு விதியாகக் கூறப்பட்டது என்று அமைதியும் கூறினார் தொல் உரையாசிரியர் பரிப்பெருமாள்.
இல்லறத்தில் கணவனும் மனைவியும் மனவேறுபாடின்றி இணைந்து விருந்தோம்பல் கடமையை நிறைவேற்றினர். கோவலன் தன்னை விட்டுப் பிரிந்திருந்ததனால் ...... தொல்லோர் சிறப்பின் விருந்துஎதிர் கோடலும் இழந்த என்னை......(சிலப்பதிகாரம் மதுரைக்காண்டம் கொலைக்களக் காதை 72-73) எனக் கண்ணகி விருந்தோம்புதலை ஆற்ற இயலவில்லையே என்று கலங்கினாள். ... விருந்து கண்டபோது என்னுறுமோ என்று விம்மும்'(சுந்தரகாண்டம், காட்சிப்படலம்) என்று கம்ப இராமாயணத்தில் இராமனிடம் இருந்து பிரித்துக் கொணரப்பட்டுத் தனிமையில் வைக்கப்பட்டிருந்த சீதையும் விருந்து பேண முடியாமற்போமே என்று வருந்துவாள்.
82 ஆம்குறள் சாவா மருந்தேயானாலும் விருந்தினரோடு உண்க எனச் சொல்வது.
83 ஆம்குறள் விருந்தினர் நாளும் வந்தாலும் அவர்களைப் பேணிக்கொள்ள வேண்டும் என்பதைச் சொல்கிறது.
84 ஆம்குறள் வருவோரை முகமலர்ச்சியுடன் பேணுவானது செல்வமும் மலரும் எனச் சொல்வது.
85 ஆம்குறள் வந்தவர் அனைவரும் உண்டனரா என்று உறுதி செய்தபின் தான் உண்பவன் நிலத்தில் விளைச்சல் பெருகும் என்கிறது.
86 ஆம்குறள் நாள் முழுவதும் இடையறாது விருந்து போற்ற விழைவானை வரவேற்க இன்பம் மட்டுமே நிறைந்த வேறோர் உலகம் காத்துக் கொண்டிருக்கிறது எனக் கூறுகிறது.
87 ஆம்குறள் இல்லற வேள்வியான விருந்தோம்பல் பயன் இவ்வளவு என்று சொல்லக்கூடிய ஒன்று இல்லை என்று சொல்கிறது.
88 ஆம்குறள் செல்வம் இருந்தபோது உணவிட மனம் இல்லாது இப்பொழுது அதை நினைப்பது காலங்கடந்த புரிதலாகிறது எனச் சொல்வது.
89 ஆம்குறள் செல்வமிருந்தும் விருந்து தலைப்படாதது மூடத்தனம் என்று குறிக்கிறது.
90 ஆவதுகுறள் வந்த விருந்தினரை மகிழ்வோடு ஏற்று மலர்ந்த முகத்தோடு மனத்தில் சற்றும் களங்கமில்லாமல் பேண வேண்டும் என அறிவுறுத்துவது.
விருந்தோம்பல் அதிகாரக் கருத்துக்கள் இன்று பொருந்துகின்றனவா?
விருந்தோம்பலைப் பாட்டும் தொகையும் பாடல் காலத்து விருந்தோம்பலாக மட்டும் வள்ளுவர் நோக்கவில்லை; ஒரு புனிதமான வேள்வியாக விருந்தோம்பலை வள்ளுவர் கருதினார் (ராஜ் கௌதமன்). வள்ளுவர் காலத்துக்கு ஆயிரம் ஆண்டுகள் பின் வந்த உரையாசிரியர்கள் காலத்தில் விருந்தோம்பல் பொருளில் மாற்றம் காணப்பட்டது போல் தெரிகிறது. எந்த நேரத்தில் விருந்து வந்தாலும் உணவு தரவேண்டும் என்று வள்ளுவர் கூற மணக்குடவர்/பரிப்பெருமாள் உரை 'உண்ணுங் காலத்துப் புதியார் வந்தால் பகுத்துண்ண வேண்டும்' என்கிறது. அதற்குப் பின்பு விருந்தோம்பலின் எல்லை இன்னும் சுருங்கி, தொடர்புடைய சுற்றத்தார், நட்பினர் இவர்களே இப்பொழுது விருந்தினர் ஆகிவிட்டார்கள். சமூக-பொருளாதார அமைப்பில் ஏற்பட்ட மாற்றங்களே விருந்தினர் யார் என்பதற்கான அடையாளம் மாறியதற்குக் காரணம். ......விருந்தோம்பி வேளாண்மை செய்தற் பொருட்டு' என்று வள்ளுவர் விருந்தோம்பலை பிறர்க்கு உதவி செய்தல் என்ற பொருளிலேயே ஆண்டுள்ளார். பழம்பாடல்களிலும் குறளிலும் கூறப்பட்ட விருந்தோம்பல் முறை இன்று அப்படியே இல்லை என்றாலும் இன்று பசியாற்றல் நிகழ்வுகளை வேறுவடிவில் காணமுடிகிறது. அறச்சாலைகளிலும், சமுதாயக்கூடங்களிலும், செல்வந்தர்/செல்வாக்குடையவர் இல்லங்களிலும், இப்பொழுது வெளியாட்களுக்கு உணவு வழங்கப்படுகிறது. விருந்தோம்புவான் வரையறைக்குள் இவர்கள் முற்றிலும் பொருந்தமாட்டார்கள் என்றாலும் விருந்தோம்பும் பண்பு இவ்விடங்களிலும் காணப்படும். சில இல்லங்களில் குறிப்பாக நகர்ப்புறங்களில் 'காசுகொடுக்கும் விருந்தாளி' (Paying Guest) அதாவது பணம் பெற்று உணவு வழங்குதல் முறை உள்ளது. இதையும் பசியாற்றல் பணியாகக் கொள்வதில் குற்றம் இல்லை. இன்று விருந்தோம்பல் பணியை, தொழில் முறையாக ஆதாயம்பெற்றுச் செய்யும் உண்டுறை விடுதி (hospitality industry) செய்கிறது. பொதுவாக இன்று வீடுகளில் உற்றார்க்கும் நண்பர்க்கும் செய்யப்படும் விருந்தோம்பல் அறமாகப் போற்றப்படாவிட்டாலும் இவ்வதிகாரத்தில் கூறப்பட்ட விருந்தோம்பும் பண்புநலன்கள் பின்பற்றப்படுகின்றன.
பசியாற்றி உதவி செய்தலே விருந்தோம்பல் எனக் கொள்வேமேயானால் இவ்வதிகாரத்துக் கருத்துக்கள் இன்றைக்கும், இங்குமங்கும் சில மாறுதல்களுடன், பொருந்துவனவே.
விருந்தோம்பல் அதிகாரச் சிறப்பியல்புகள்
இறவாமையைத் தருவதாகக் கூறப்படும் அமிழ்தம் கிடைத்தாலும் அதை விருந்தினர் புறத்திருக்கத் தான் மட்டும் உண்ணக்கூடாது என்பதை வலியுறுத்தும் விருந்து புறத்ததாத் தானுண்டல் சாவா மருந்தெனினும் வேண்டற்பாற் றன்று என்னும் உயர்ந்த கருத்துக் கொண்ட பாடல் (குறள் 82) இவ்வதிகாரத்தின் கண்ணே உள்ளது.
வித்தில்லாமலே விளைச்சல் பெருகும் எனச் சொல்லும் வித்தும் இடல்வேண்டும் கொல்லோ ..... எனத் தொடங்கும் செய்யுள் (குறள் 85) இங்குதான் உள்ளது. உணர்ச்சியும் கற்பனையும் ஒருங்கே இயைந்து படிப்போர் உள்ளத்தில் அழுத்தமாகப் பதியவைக்கும் வகையில் கருத்தைக் கூறிய குறட்பா இது.
குறள் 89-இல் உடைமையுள் இன்மை....... என்னும் அழகிய தொடர் அமைந்துள்ளது. செல்வமிருந்தும் விருந்தோம்பா மடமையை வளமையில் வறுமை என்ற பொருள்படும்படி இத்தொடர் குறிக்கிறது.
மோப்பக் குழையும் அனிச்சம் முகந்திரிந்து நோக்கக் குழையும் விருந்து. என்ற ஓசை நயம் கொண்ட பாடல் (குறள் 90) இவ்வதிகாரத்து உள்ளது. நுண்ணுணர்வையும் மென்மையையும் கொண்ட அனிச்சமலரை விருந்தினர் உள்ளத்துக்கு ஒப்பிட்டது எண்ணி இன்புறத்தக்க உவமையாம். வீட்டிற்கு வரும் விருந்தினர் மனம் புண்படும்படி நடந்துகொள்ளக்கூடாது என்பதை இதனினும் அழுந்த யாராலும் கூறமுடியாது.