இல்வாழ்க்கையிலும் சமூக வாழ்க்கையிலும் இணைப்பு தேவை. இணைப்புக்கு உரமிடுவது இனிய சொற்களேயாம். எல்லாம் நன்றாகச் செய்யினும் இனிய சொற்கள் கூறத் தெரியாவிடில் அனைத்தும் பாழ். ஆதலால் இனிய கூறலும் அறமாயிற்று. - குன்றக்குடி அடிகளார்
இனிமை பயக்குஞ் சொல்லைச் சொல்லுதல் இனியவை கூறல் ஆகும். அன்போடு கலந்து படிறு நீங்கிச் சொல்லப்படுவது இன்சொல்லாம். இனிய பேசுவதால் மாந்தரிடையே வெறுப்புணர்ச்சி மறைகிறது. இனியவை கூறல் ஓர் அறம் என்கிறார் வள்ளுவர்.. இன்சொல் தமக்கு இனிமை பயப்பதை உணர்பவர் ஏன் வன்சொல் வழங்குகிறார் என்று வியப்புத் தெரிவிக்கிறார் அவர். இன்சொல் பேசுதலின் மாண்பு கூறி அதன் பயன்; தெரிவித்து வன்சொல் கூற வேண்டாம் என அறிவுறுக்கிறது அதிகாரம்.
இனியவைகூறல்
அன்பு நெஞ்சினின்றுதான் இனிய சொற்கள் ஊறும். உலகில் நல்லவை நடப்பதற்கும் கெட்டவை உண்டாதற்கும் பேசப்படும் சொற்களும் காரணம். ஆதலால் அறநெறியொழுக்கத்திற்கும் வாழ்வில் வெற்றிபெறுதற்கும் இன்சொல் பேசிப்பழகுதல் வேண்டும். மாந்தர், தங்களுக்குள் பழகும்போதும் உரையாடும்போதும், ஒருவர்க்கொருவர் உள்ளன்போடு இன்முகம் காட்டி இனிய சொற்கள் பேசவேண்டும் என்பதைச் சொல்வது இவ்வதிகாரம். . ஈகை பெறுவதை விட, அன்பு கலந்து உள்ளத்தில் வஞ்சகம் இல்லாமல் கொடுப்போர் பேசும் இன்சொற்களோ ஏற்பார்க்கு மகிழ்வு அளிக்கும்; இன்சொல் பேசுவதே ஓர் அறமாகும்; இன்சொல் புகல்வோர் மற்றவர்களிடம் வெறுப்புக் கொள்ளார்; பிறரும் இவர் மேல் காழ்ப்பு காட்ட மாட்டார்கள் பணிவுடன் இன்சொல் பேசுபவதாலாயே ஒருவர் பொலிவு பெறுவர். என்கிறது ஒரு பாடல். இன்சொல் பயனாக தீயவை குறையும் நல்லவை பெருகும்; இன்சொல்லினால் அறம் வளரும். நம்மை பலரும் விரும்புதல் நிகழும்; இவ்வுலகிலுல் வேறு உலகிலும் இன்பவாழ்வு கிடைக்கும்; மற்றவர் நம்மிடம் இனிமையாகப் பேசும் போது அதை நன்கு அனுபவித்து மகிழுகிற நமக்கு எது இனிமையான பேச்சு என்பதும் தெரியும். எப்படி இனிமையாகப் பேசவேண்டும் என்பதும் தெரியும். வன்சொல் சிறுமை பொருந்தியது. இன்சொல் என்ற கனி இருக்கும்போது ஒருவர் ஏன இன்னாச்சொல் என்னும் பழுக்காத காயை எடுத்து நுகர வேண்டும்? .
95 ஆம்குறள் இன்சொல் பேசி பணிவாக நடப்பானானால் அது அவர்க்கு அழகு சேர்க்கும் அணியாகும் என்கிறது.
96 ஆம்குறள் இனியவை கூறக் கூற தீயன குறைந்து நன்மைகள் வளரும் என்னும் அறக்குரல் ஒலிப்பதைச் சொல்வது.
97 ஆம்குறள் இனிமைப் பயன் நல்கும் சொல்லானது விரும்புதல தந்து, நன்மை உண்டாக்கும் என்று சொல்கிறது.
98 ஆம்குறள் இழிவுபடுத்தாத இனிய சொற்கள் பேசினால் இருமையிலும் இன்பம் கிடைக்கும் எனச் சொல்வது.
99 ஆம்குறள் இன்சொல்லின் இனிமையை உணர்ந்தும் கடுஞ்சொல் பேசும் மக்களைப் பார்த்து வள்ளுவர் ஆற்றாமை கொள்வதைக் குறிப்பது.
100 ஆவதுகுறள் இன்பம் தரும் சொற்கள் தம்முள் இருக்க ஒருவன் பயன்தராத கடுஞ்சொற்கள் பேசவேண்டாம் என அறிவுறுத்துவது.
இனியவைகூறல் அதிகாரச் சிறப்பியல்புகள்
ஈகையைவிட இன்சொல் சிறந்தது என்னும் கருத்துக் கொண்ட அகன்அமர்ந்து ஈதலின் நன்றே...... என்ற பாடல் (குறள் 92) இவ்வதிகாரத்தில் உள்ளது.
சொல்பவன் கேட்பவன் ஆகிய இருவர் நெஞ்சமும் இன்சொல்லைச் சொல்லிப் போதும் என்றும், கேட்டுப் போதும் என்றும் அமையாத வண்ணம் இன்சொல்லைச் கூறினால் அதுவே அறம் என்னும் இனிமையான கருத்தமைந்த பாடல்.முகத்தான் அமர்ந்துஇனிது நோக்கி அகத்தானாம் இன்சொல் இனதே அறம் இங்கே இருக்கிறது
இன்பம் தரும் பழமும், இன்னாசொல்லான கனியாத காயும் இருக்கும் இடத்திலிருந்து ஏன் ஒருவன் காயை எடுத்து நுகர்கிறான் என வியந்து வன்சொல் வழங்குதல் வேண்டாம் என அறுவுறுத்தும் இனிய உளவாக இன்னாத கூறல் கனியிருப்பக் காய்கவர்ந் தற்று என்ற நன்கு அறியப்பட்ட பாடல் இடம்பெற்றுள்ள அதிகாரம் இது.