ஒருவன் மனைவியை மற்றொருவன் விரும்புவது சமூகத் துரோகமாகும்; கள்ள நட்புக் கொண்டிருப்பது சமுதாயக் கட்டுப்பாட்டுக்கு உலை வைப்பதாகும். இதனால் ஒரு குடும்பத்துக்கும், மற்றொரு குடும்பத்துக்கும் பகைமை உண்டாகும். இந்தத் தனிப் பகைமை சமுதாயக் கலகமாக்வும் மாறிவிடும். ஆகையால்தான் பெண்களுக்குக் கற்பைக் கடமையாக்கியது போல் ஆண் மக்களுக்குப் பிறனில் விழையாமையைக் கடமையாக்கினார் வள்ளுவர். - சாமி சிதம்பரனார்
'பிறன்மனை விழையாமை' ஆண்களுக்கென உரைக்கப்பட்ட பாடல் தொகுப்பாகும். காம இனபங்களைத் தன் மனைவியிடம் பெறுதல் ஒழுக்கம். பிறன் இல்லாளை விரும்பி அடைதல் மற்றவர் உரிமையில் தலையிடும் அறமற்ற தீயசெயல். உயிர்கள் அனைத்திற்கும் உள்ள இணைவிழைச்சு இயல்பூக்கமாயினும், புறத்தொழுக்கம் இருப்பின் இல்வாழ்க்கை சிறவாது என்பதால், மாந்தர்க்கு அது ஒரு வரையறைக்குள் கொண்டுவரப் பெற்றுள்ளது. பெண்ணுக்குக் கற்புப் போன்று ஆண்களுக்குப் பிறன்மனை நயவாமை வேண்டும் என்கிறது இவ்வதிகாரம். அடுத்தவனுடைய பொருளான மனைவிமீது காமுறுவது பேதைமை, தீமை, பழி,பாவம் என்று கடியும் அதிகாரம், 'பிறன் மனை நோக்காத பேராண்மை' என்று பிறன்மனை விழையாமையைப் புகழ்கிறது.
பிறனில் விழையாமை
மனித இனத்தின் இயல்பூக்கங்களில் பாலுணர்ச்சி மிகவும் வன்மை வாய்ந்தது என்றும், இதனால் பிற உயிரினங்களை விடக் கூடுதலான புணர்ச்சித் தூண்டுதல்கள் மனிதரைக் கிளரச் செய்கின்றன என்றும் பாலியல் அறிஞர் கருதுவர். நீண்ட காலத்துக்கு முன்னரே, ஒருத்தி தனது பாலியல் செயல்பாட்டை, ஒருவனுக்கு மட்டுமே உடைமையாக்குமாறு செய்ய 'கற்பு' என்னும் விதி நடைமுறைப்படுத்தப்பட்டது. அது போலவே, பின்னர், பிறனில் விழையாமை என்ற அறம் ஆடவனுக்கு பாலியல் ஒழுக்கமாக வரையறுத்துச் சொல்லப்பட்டது. ஆண்-பெண் இருவரது முறைகடந்த அதாவது இயல்பான- இயற்கையான பாலியல் உறவுகளைத் தடுக்க இச்செயற்கையான கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டன. வரம்பு மீறிய பாலியல் உறவுகளை உலகிலுள்ள பிற பண்பாடுகளும் இழிவான செயல்களாகவே பார்க்கின்றன.
வள்ளுவர் முதலான அறநூலோர் வாழ்ந்த காலத்தில்தான் தமிழ் இலக்கிய உலகில், ஆணுக்குப் பிறனில் விழையாமை என்ற பாலியல் அறம் கூறப்பட்டது என்பர். ஆண்களுக்கும் பாலியல் ஒழுக்கத்தை வலியுறுத்துவது 'பிறனில் விழையாமை' அதிகாரம். மற்றவர் மனைவியை காம மயக்கத்தோடு நோக்குவதற்கு எதிரான வள்ளுவரின் போராட்ட உணர்வு இவ்வதிகாரத்தில் நன்கு புலப்படும். ஆடவரின் பெருமைக்குரிய குணமாக ஆண்மையாக-பேராண்மையாக பிறன்மனை நயவாமையைச் சொல்கிறது குறள். பாலுணர்ச்சி சார்ந்த காமக்குறியோடு பிறரது பொருளாளை விரும்புவது பேதைமை எனச் சாடும் வள்ளுவர், இந்தச் செயலைத் தீமை புரிதலுக்கு ஒப்பிடுகிறார். 'பிறன் மனைவி மீது காமம் கொள்பவர்களுக்கு அறமும் தெரியாது பொருளும் தெரியாது. அவனைவிடப் பெரிய அறிவிலி யாருமில்லை. அவன் இறந்தவனுக்குச் சமம். அவன் எவ்வளவு பெரியவனாக இருந்தும் என்னத்துக்கு? பிறன்மனை புகல் அவனுக்கு எப்பொழுதும் இழிவையே தரும்' என இவ்வதிகாரத்துப் பாடல்கள் அவனை இகழ்ந்துரைக்கும். பொறுக்க இயலாத தீயசெயலாக இராவணனும் வாலியும் பிறன் மனைவியர் மீது காமம் கொண்டதைக் கம்ப இராமாயணம் குறிப்பிடும்.
ஆண்மகனை வேறொருவன் மனைவியிடமிருந்து விலகிச் செல்லுமாறு 'பிறனில் விழையாமை'யில் வள்ளுவர் சொல்கிறார். வள்ளுவர் கடிந்த குற்றங்களுள் தலையாயது வஞ்சகம். நம்பிக்கைக்கு உரிய இடமெல்லாம் வஞ்சித்தற்கு உரிய இடங்களாய் மாறும்போது பிறன்மனை புகுதல் நேர்கிறது. தூய்மையான இல்லத்தில் பெருச்சாளி சென்று பாழ் செய்வது போல் 'இவளை எய்துதல் தனக்கு எளிமையான' தென்று எண்ணிப் பிறன்கடை நிற்கிறான் ஆடவன். எளிதில் கிடைக்கிறதென்று எண்ணிய நிலை, அப்பெண் பிறன் பொருளாக இன்றி, நிலைகுலைந்தவளாக இருத்தல், தன் முயற்சிக்கு காலம் இடம் முதலியன ஒத்திருக்கின்றன என்பனவற்றைக் குறிக்கும். அவளைக் கொண்டவன் செல்வம், செல்வாக்கு, உடல்வலி முதலியவற்றில் குறைந்தவனாக இருப்பதும் காரணங்கள். தனது செல்வாக்கை அடாத முறையில் பயன்படுத்துபவர், தன்னை நம்பியவர் மனைவியை விழைந்து தீமை செய்வோர், ஒழுக்கமில்லாச் சான்றோர் போன்றோர் பிறன் பொருளாளைப் பெட்டொழுகும் பேதையராகக் குறிப்பிடப்படுகின்றனர். காம மிகுதியால் பிறனது மனையுள் நுழைந்து தீமை புரிவது, அகல்யையின் இல்லில் புகுந்த இந்திரன் கதையை நினைவிற்குக் கொண்டுவரும்.
பிறர் மனைவியைக் கள்ளத்தனமாகக் கூடுதல் என்பது அப்பெண்ணின் உடன்படுதலுடன்தான் நடைபெறமுடியும். அதாவது இங்கே ஆண்-பெண் இருவரிடம் இலக்கணம் மீறிய காம இச்சைகள் காணப்படுகின்றன. ஆனால் வள்ளுவர் ஆண்மகனின் செயற்பாடுகளை மட்டும் பழித்துக் கூறினாரே தவிர இவ்வதிகாரத்து எந்த இடத்திலும் அப்பெண்ணைப் பற்றி இழிவாகவோ தாழ்த்தியோ குறிப்பிடவில்லை என்பது சிந்திக்கத்தக்கது. தன் செல்வாக்கை அடாது பயன்படுத்தி ஆண் இழைத்த தீச்செயலுக்கு ஒத்துழைத்ததால் மட்டுமே அப்பிறன் மனைவி குற்றவாளி அல்லர் என்பதால் அவளைத் தன் காம இச்சைக்கு ஆட்படுத்திய இல்இறப்பானே கண்டிக்கத்தக்கவன் என்பது இவ்வதிகாரத்தின் முடிபாகலாம்.
பிறனில் விழையாமை அதிகாரப் பாடல்களின் சாரம்
141 ஆம்குறள் அறம் பொருள் அறிந்தவரிடம் இன்னொருவனுக்கு உரிமையாவாளை விரும்பும் மடைமை இல்லை என்கிறது.
142 ஆம்குறள் அறத்திற்குப் புறம்பாக வாழ்வோருள் பிறன்மனைவியை விரும்பிப் புறக்கடையில் சென்று நிற்பவர்களைவிட அறிவிலிகள் யாரும் இல்லை எனச் சொல்கிறது.
144 ஆம்குறள் ஒருவர் பெரியவராயிருந்தும் என்னத்துக்கு? பிறன் மனைவியை விழைந்து அவன் வீட்டிற்குள் நுழைந்தால் சிறுமையே வந்து சேரும் என்று சொல்கிறது.
145 ஆம்குறள் அடைவது மிக எளிது என்று கருதிப் பிறன் மனை கடந்து செல்பவன், என்றும் நீங்காத பழியை அடைவான் என்கிறது.
146 ஆம்குறள் பிறன் மனை விழைபவனிடத்தே பகை, பாவம், அச்சம், பழி எனும் நான்கும் நீங்காது தங்கியிருக்கும் எனச் சொல்கிறது.
147 ஆம்குறள் அறத்தின் வழியிலே இல்வாழ்க்கை நடத்துபவர் யாரென்றால் பிறன் மனைவியின் பெண்மையை விரும்பாதவன் ஆவான் எனக் கூறுகிறது.
148 ஆம்குறள் பிறன்மனைவியை தமது உள்ளத்தால் கருதாத பெரும்ஆற்றல் சான்றோர்க்கு அறமும் ஒழுக்கமுமாகும் எனச் சொல்கிறது.
149 ஆம்குறள் எல்லா நலத்துக்கும் உரியவர் யாரென்றால் அச்சம் தரும் கடல் சூழ்ந்த இவ்வுலகில் மற்றவனுக்கு உரியவளது தோளைத் தழுவாதவரே. என்பதைச் சொல்வது.
150 ஆவதுகுறள் அறத்தின் துணை அறியாமல் அறமல்லாதவற்றைச் செய்தாலும் மற்றவன் எல்லைக்கண் உள்ள பெண்மையை நயவாமை நன்று எனக் கூறுகிறது.
பிறனில் விழையாமை அதிகாரச் சிறப்பியல்புகள்
அறன்கடை நின்றாருள் எல்லாம் பிறன்கடை நின்றாரின் பேதையார் இல் (குறள் 142) என்பதில் பிறன்மனை விழைபவன் அடுத்தவன் வீட்டு புறவாசலில் இரங்கத்தக்க நிலையில் நிற்க வைக்கப்படுகிறான்; அவன் அறிவுகெட்டவன் எனவும் பழிக்கப்படுகிறான்.
எனைத்துணையர் ஆயினும் என்னாம்?.... மற்ற என்ன பெருமை பெற்றும் என்னத்துக்கு? என்று பிறன்மனை புகுதல் என்பது பெற்ற சிறப்புக்கள் எல்லாவற்றையும் அழித்து விடும் தன்மையது என இக்ழ்கிறது குறள் 144.
பிறர் மனைவியை காம நோக்கில் பார்க்காதவர்கள் வீரர்களே என அவர்களை மிக் உயர்த்திச் சொல்கிறது பிறன்மனை நோக்காத பேராண்மை.... என்ற பாடல் (குறள் 148). இக்குறட்கருத்தும் பேராண்மை என்ற சொல்லாட்சியும் இப்பாடலைப் புகழுக்குரியதாக்கின.