தெரிந்தோ தெரியாமலோ பிறர் தமக்குச் செய்த சிறியவும் பெரியவுமான தீங்குகளை யெல்லாம் திருப்பிச் செய்யாதும், அவற்றிற்காக அவரைத் தண்டியாதும், பொறுத்துக் கொள்ளுதல். பெருங்குற்றமாயினும் பொறுத்துக் கொள்ள வேண்டுமென்றற்கு, இது பிறனில் விழையாமையின் பின் வைக்கப்பட்டது. - தேவநேயப்பாவாணர்
பொறையுடமையாவது, பிறர் தமக்குத் தீமை செய்யும்பொழுது தாமும் அவர்களுக்குத் தீங்கு செய்யாது பொறுத்துக்கொள்ளுதல். அறிந்தோ, செருக்காலோ, அல்லது மடமையாலோ ஒருவர் நமக்குத் தீங்கு செய்தபொழுது பொறுத்துக்கொள்வது மட்டுமல்ல அதை மறந்துவிடவும் சொல்கிறது இவ்வதிகாரப் பாடல்கள். பொறுமையை 'வன்மையுள் வன்மை' என்கிறது; பொறுமை காக்கப் பேராற்றல் வேண்டும்; பொறுமை உடையவர் நிறையுடை மாந்தர்; அவர் பொன்போல் போற்றப்படுவார்; அவர் என்றும் நினைக்கப்படுவர் என்று சொல்கின்றன இத்தொகுப்பிலுள்ள பாக்கள். பழி தீர்க்க எண்ணாது வேறு தகுதியான வழிகளில் தீர்வு காண்க என அறிவுரை கூறுகிறது ஒரு செய்யுள். இன்னாச்சொல் பொறுத்தார் துறந்தாரையும் தவம் செய்வாரையும் விட பெருமை பொருந்தியவர்; அவர் புனித உயிர்த்தன்மை கொண்டவர் (தூய்மையுடையார்) என ஏற்றிப் பாடுகின்றன இவ்வதிகாரத்துக் குறள்கள்.
பொறையுடைமை
பிறன் செய்த தீமையால் உள்ளத்தில் சினம் தோன்ற அதனால் பதிலுக்குத் தீயன செய்ய உந்துதல் உண்டாவது இயல்பு. அதைச் செயல்களில் வெளிப்படாதவாறு பொறுத்துக் கொள்ளுதலே பொறையுடைமை. பல்லுக்குப் பல், அடிக்கு அடி, உதைக்கு உதை என்பதே சரியான பழிதீர்க்கும் முறை என்ற தவறான கருத்துக் கொண்டோர்க்கு, ஒருவன் தனக்கு மிகை செய்தால், தானும் அதைச் செய்யாமல் பொறுத்துக் கொள்ளவேண்டும் என்பது போன்ற அறிவுரைகள் அடங்கியது இவ்வதிகாரம். அதிகார வைப்பு முறை எண்ணி (பொறையுடமை அதிகாரம் பிறனில் விழையாமை எனும் அதிகாரத்திற்குப் பின் வருவது), நல்லொழுக்கத்தினின்றும் நீங்கிய, அதாவது பிறன் மனையாளை விரும்புதல் முதலிய, தீய செயல்களைச் செய்தவர்களையும் பொறுக்க வேண்டும் என்று இவ்வதிகாரம் கூறுவதாக அறிஞர்களும் ஆய்வார்களும் கருத்துத் தெரிவித்துள்ளனர். இராமன் போர்க்களத்தில் இராவணன் சீதையை ஒப்படைத்து விட்டால் அவனை மன்னிக்கும் பொறுமை கொண்டவனாக இருக்கிறான் என்பது தெ பொ மீ தரும் எடுத்துக்காட்டு. பொறுத்தல் என்பது தாங்கிக் கொள்ளுதலையும் மறத்தலையும் உள்ளடக்கியது; மறத்தல் என்பது மன்னிப்புடன் கூடிய மறத்தல் குறித்தது; அறியாமல் செய்யப்படும் தீங்குகளைப் பொறுத்துக் கொள்வது என்பது பொறுத்தாரது உறுதியான மனவலியைக் காட்டும் அது கோழைத்தனம் அன்று; பொறுத்துக்கொள்ளுதலுக்கு மனவலிமை, பக்குவம், பெருங்குணம், பேராற்றல் யாவும் வேண்டும். பொறுத்தல் மென்மையாலன்று; வலிமையால் என்பதாம். உலகம் தீமைக்குத் தீமை செய்து ஒறுத்தவரை ஒரு பொருளாக மதிப்பதில்லை; பொறுத்தவரையே பொன் போல் நன்கு போற்றி மதிக்கும்; இவை பொறையுடமை தரும் செய்திகளாகும்.
பொறையுடைமை அதிகாரப் பாடல்களின் சாரம்
151 ஆம்குறள் நிலம் தன்னை வெட்டுகிறவர்களையும் பொறுமையுடன் தாங்குகிறது. அது போன்றே தம்மை இகழ்பவர்களையும் பொறுத்தல் முதன்மையாகும் என்கிறது.
152 ஆம்குறள் ஒருவர் தமக்குச் செய்யும் மிகையினைப் பொறுத்துக் கொள்ளுக. அதை முழுமையாக மறந்து விடுவது அதனினும் நல்லதாம் எனச் சொல்கிறது.
153 ஆம்குறள் கொடிய வறுமையிலும் வறுமையாவது வந்த விருந்தினரைப் பேண முடியாமை. வலிமையிலும் வலிமையாவது அறிவிலார் செயலைப் பொறுத்தல் என்கிறது.
154 ஆம்குறள் நற்குணங்கள் நிறைந்திருக்கும் தன்மை தம்மைவிட்டு நீங்காமல் இருக்க வேண்டுமாயின், பொறுமைக் குணம் அழியாமல் காக்கப்பட வேண்டும் என்று சொல்கிறது.
155 ஆம்குறள் பொறாது தண்டித்தவரை உலகோர் ஒரு பொருளாக மதிக்கமாட்டார்; தீமையைப் பொறுத்துக் கொண்டவரைப் பொன் போல் போற்றி வைப்பர் என்கிறது.
156 ஆம்குறள் தனக்குத் தீமை செய்தவரைத் தண்டித்தவர்க்குத் தண்டித்த அன்று உண்டாகும் ஒரு நாளை இன்பமே; ஆனால் அதனைப் பொறுத்துக் கொள்வார்க்கு உயிர் அழியும் வரை புகழ் உண்டாகும் எனச் சொல்கிறது.
157 ஆம்குறள் செய்யக் கூடாத இழிவை ஒருவன் தனக்குச் செய்தாலும் அதற்காக மிக வருந்தி, அறநெறிப்படாத செயல்களைச் செய்யாமை நன்று எனக் கூறுகிறது.
158 ஆம்குறள் உள்ளச்செருக்கும், பொருட்செருக்கும் கொண்டு நமக்குத் தீமை செய்வாரை பொறுமைகொண்டு கெட்டிக்காரத்தனத்தால் வெற்றி கொள்க என அறிவுறுத்துகிறது.
159 ஆம்குறள் வரம்பு கடந்து சொல்வாரின் கொடுஞ்சொற்களைப் பொறுத்துக் கொள்பவர், துறவியரைவிட மேம்பட்டவர் ஆவர் எனக் கூறுகிறது.
160 ஆவதுகுறள் பற்றுக்களைத் துறந்து உண்ணாநோன்பு கொள்பவர் பெரியவரே. அப்பெரியரும் பிறர் சொல்லும் தீய சொல்லைப் பொறுத்துக்கொள்பவர்க்குப் பிற்பட்டவரே எனக் கூறுகிறது.
பொறையுடைமை அதிகாரச் சிறப்பியல்புகள்
நிலம் தன்னைப் பள்ளம் தோண்டுபவனையும் விழாமல் தாங்குகின்றது. அதுபோலப் பொறையுடையான் தனக்குத் தீமை செய்தானுக்கு தீங்கிழைக்காமல் பொறுப்பான். இக்கருத்தைக் கூறும் அகழ்வாரைத் தாங்கும் நிலம்போலத் தம்மை இகழ்வார்ப் பொறுத்தல் தலை (குறள் 151) என்ற பாடலில் ஆளப்பட்டுள்ள உவமை எண்ணி இன்புறத்தக்கது. பொறுமையிடங்களாக வரம்பு மீறிய செயல்களைப் பொறுத்தல், அறிவிலார் செயலைப் பொறுத்தல், திறன் அல்ல செய்தாரைப் பொறுத்தல், மிகுதியான் மிக்கவை செய்தாரைப் பொறுத்தல், இறந்தார்வாய் இன்னாச்சொல் பொறுத்தல் எனப் பல சூழல்கள் கூறப்பட்டிருந்தாலும், தன் துணைமேல் வாழ்ந்துகொண்டே ஒருவன் தன்னை இகழ்வானாயின், அவ்விகழ்வுப் பொறையே பொறுத்தல்களுள் எல்லாம் தலைமையான பொறுத்தல் என இக்குறள் கூறுகிறது.
ஒறுத்தார்க்கு ஒருநாளை இன்பம் பொறுத்தார்க்குப் பொன்றும் துணையும் புகழ் (குறள் 156) என்பதில் கூறப்பட்டுள்ள ஒரு நாளை இன்பமும் பொய்யின்பம்தான் என்பதாக அமைந்து பொறுத்தவர்க்கே சாகும்வரை புகழ் நிலைக்கும் என்ற உயரிய கருத்தையும் நல்குகிறது.
அறிவிலார் தீங்கு செய்தலைப் பொறுத்தல் சரி. மிகுதியால் மிக்கவை செய்தாரை ஏன் பொறுக்க வேண்டும் என்பது இயல்பாக எழும் வினா. அதற்கு வள்ளுவர் கூறும் தீர்வானது: பொறுமை மூலம் முரண்பாடுகளை முடிவுக்குக் கொண்டுவருதலே சிறந்த வழி; மிக்கவையையும் பொறுத்துக்கொள்; அவற்றை வெல்லத் திறமான வழிகள் பலவுண்டு. அவற்றை ஆராய்ந்து 'தகுதியான் வென்றுவிடல்' என்கிறார். மிகுதியான் மிக்கவை செய்தாரைத் தாம்தம் தகுதியான் வென்று விடல். (குறள் 158) என்பது பாடல்.