அஃதாவது ஊனுண்டலை ஒழிதல். ஊனாவது உயிர் நீக்கப்பட்டதாகலின், அதனை உண்டல், உயிர்கண் மாட்டுச் செல்லும் அருளுடைமைக்கு மாறாகலின் அஃது ஒழிதல் அருளுடைமைக்கு இயைபுடைத்தாயிற்று. இதனான் அதிகார முறைமை விளங்கும். - நாகை சொ தண்டபாணியார்
புலால் மறுத்தலாவது புலால் உண்பதைத் தவிர்த்தல். புலால் உணவு அருளுக்கு மாறானது. அருளைக் கருதுகிறவர்கள் ஓருயிரைக் கொன்று கிடைக்கும் ஊனை உண்ணமாட்டார்கள். பிற உயிர்களைக் கொன்று அதன் உடலை உண்ணுவது கொல்லாமை அறத்திற்கு எதிரானது என்பதால் அதை மறுக்க வேண்டும் என்று இவ்வதிகாரம் கூறுகிறது. மறுத்தல் என்பதனால், சுவை கருதியோ அல்லது மற்ற காரணங்களுக்காக உண்ண நேரிட்டாலும் வேண்டா என்று மறுத்தல் வேண்டும். வாய்க்கு அடிமையாகி புலால் உண்ணவேண்டாம் என உணவு ஒழுக்கம் கூறப்பட்டது.
புலால்மறுத்தல்
புலால், ஊன், ஊன்சோறு' போன்ற சொற்கள் பல இடங்களில் சங்கப் பாடல்களில் இடம் பெற்றுள்ளன. விலங்குகளைக் கொன்று ஊனை விற்றல், மீன் பிடித்தல் ஆகிய தொழில்கள் வழியும், வேட்டையாடுதல் போன்ற விளையாட்டு வழியும் உயிர்கள் கொல்லப்பட்டு அவற்றின் ஊனை உண்டனர். அவை இன்றும் தொடர்கின்றன. ஒருகோடியில். காற்றில் உள்ள சிறு உயிர்கள் அழிந்து விடும் என்பதற்காக மூக்கில் திரையிட்டு பொதுவெளியில் நடமாடுவது, நடந்து செல்லும்போது எறும்புகள் போன்ற சிறு உயிர்கள் இறந்துவிடும் என்பதற்காக, அவற்றை மயிற்பீலிகளால் அகற்றிய பின்பு மேல் கடந்து போவது, நீராடினால் நீரிலுள்ள நுண்ணுயிர்கள் அழிந்து விடும் என்று கருதி நீராடாமல் இருப்பது, மரத்திலுள்ள நுண்ணுயிர்கள் அழிந்துவிடும் என்பதற்காக தச்சுவேலை செய்யாதிருப்பது போன்றவை ஒருசிலரால் பின்பற்றப்பட்டன. மறுகோடியில் உணவுக்காக உயிர்கள் வேட்டையாடப்பட்டன; போர்க்களங்களில் மனித உயிர்கள் கொல்லப்பட்டதை புலவர் போற்றிப் பாடினர்; உணவுக்காகவும் உடைமைக்காகவும் உயிர்க்கொலை புரிவது இயல்பான செயலாகக் கருதப்பட்டது. இந்தப் பின்னணியில் வள்ளுவர் புலால் உண்ணாமை அதிகாரம் மூலம் உணவிற்காக உயிர்களைக் கொல்லாமையையும், கொன்று அவற்றின் இறைச்சியை உண்ணாதிருப்பதையும் வலுவாக முன் வைத்தார். நல்லது கெட்டது என்பது எழுத்தில், பேச்சில், எண்ணத்தில், செயலில் மட்டுமல்ல; உண்ணும் பொருளிலும் உண்டு என்று இவ்வதிகாரம் மூலம் உணர்த்தினார். மற்ற நெறிகளைப் போல் புலால் உண்ணாமை என்ற எதிர்நிலைச் சொல்லைப் பயன்படுத்தாமல் 'புலால் மறுத்தல்' என்ற சொல்லாடலால், அந்த அறம் அழுத்தமாக வள்ளுவரால் அறிமுகப்படுத்தப்படுகிறது. உண்ணக் கூடாத பொருள்களில் புலாலும் ஒன்று என்பது அவர் கருத்து.
உடலுக்குத் தேவையான வளமான ஆற்றலையும், வலிமையையும் புலால் உணவு தரும் என்றனர். கொன்றால்தான் தவறு. யாரோ கொன்றதை அல்லது தானாகச் செத்து வீழ்ந்ததைத் தின்பதில் தவறில்லை என்றனர் இன்னும் சிலர். புலால் உண்பதற்கும் அருளுக்கும் தொடர்பில்லை; புலாலுண்பவன் அருளாளனாக இருக்கலாம் என்றனர் மற்றவர்கள். இதுபோன்ற பெரும் கருத்துப் போர் நடைபெற்ற சூழலில் (இப்போர் இன்றும் தொடர்ந்துகொண்டிருக்கிறது), அக்கருத்துக்கள் அனைத்தையும் புறம் தள்ளி, ஊன் உணவை மறுக்கச் சொல்கிறார் வள்ளுவர். புலால் உண்ணலின் இழிவை உரக்கச் சொல்லவே அதை ஊன் உண்ணல் அதாவது 'உடல் தின்னுதல்' 'உடல் தின்னுதல்' எனத் திரும்பத் திரும்ப கூறுகிறார்.
அருளாளன் ஆகவேண்டுமானால் புலால் உண்ணுவதை நிறுத்த வேண்டும்; ஊன் உண்டாலும் நெஞ்சில் அருள் கெடாமல் வாழ முடியாதா என்று கேட்போர்க்குப் புலால் உண்பார்க்கு அருளாட்சி இல்லை என்று உறுதியாகக் கூறப்படுகிறது. ஓர் உயிரின் உடம்பைக் கொன்று தின்று சுவை கண்டபிறகு, அந்த மனம் மற்றோர் உயிரைக் கண்டபோது அருளுணர்வோடு எண்ண முடியுமா? அதன் உடம்பையும் உண்ண வேண்டும் என்ற சுவை வேட்கைதான் பிறக்கும். ஆகையால், அவ்வாறு உண்டவர் மனத்தில் நல்ல எண்ணம் எழாது; கொலைக் கருவியைக் கையில் கொண்டவரின் மனம் கொலையைவிட்டு மற்றதை எண்ணுவதில்லை; அதுபோலவே புலால் உண்டவரின் மனதிலும் ஊன் தவிர்த்த எண்ணம் தோன்றுவதில்லை. ஊன் உண்ணுவது புண் தின்பது போன்றது என்று அருவருப்பு காட்டப்படுகிறது. புலால் உண்பவனுக்கு நரகம் கூட வாயில் திறவாது ஒதுக்கும் என இழிவு படுத்தப்படுகிறது. கொல்லானையும் புலால் மறுத்தானையும் உலக உயிர்கள் கைகூப்பி வணங்கும் என்று ஊக்கவழி கூறப்படுகிறது. தெய்வத்தின் பெயரால் உயிர்க்கொலை செய்து ஆயிரக்கணக்காக சடங்குகள் செய்வதைவிட கொன்ற உடம்பின் புலால் உண்ணாமல் இருப்பது நல்லது. இவை இவ்வதிகாரம் தரும் செய்திகள்.
புலால் உண்ணாமை எல்லோரும் மேற்கொள்ளக்கூடிய ஒழுக்கமன்று என்று வள்ளுவர் கருதினார் என்றனர் ஒரு சிலர். புலால் உண்ணாமை துறவறத்தார்க்கு விலக்கப்பட்டது என்பதால் இல்லறத்தார் உண்ணலாம் என்பதைக் குறிப்பான் உணர்த்துவர் என்பர் இவர்கள். ஆனால் .....விலைப்பொருட்டால் ஊன்தருவார் இல் (குறள்எண்: 256) என்னும் பாடல் விலைக்கு விற்கும் ஊன் பற்றிச் சொல்கிறது. பொருளைத் துறந்த துறவி விலைகொடுத்து ஊன் வாங்குவது எப்படி? ஆதலால் 'புலால் உண்ணாமை' அதிகாரம் துறவிகளுக்கு மட்டும் என்பது பொருந்தாது; புலால் மறுத்தல் யாவர்க்கும் உரியதாகவே வள்ளுவர் வகுத்தார்.
புலால்மறுத்தல் அதிகாரப் பாடல்களின் சாரம்
251 ஆம்குறள் தன் உடம்பை வளர்த்தற்கு மற்றோர் உயிரின் உடலைத் தின்பவன், எப்படி அருள் உணர்வுடையவனாக இருக்கக் கூடும்? எனக் கேட்கிறது.
252 ஆம்குறள் பொருள் காக்க மாட்டதவர்களுக்கு அதன்மேலான பயன் கிடைக்காது; அதுபோல புலால் உண்பவர்களுக்கு அருளினை ஆளுதல் இல்லை எனச் சொல்கிறது.
254 ஆம்குறள் அருள் யாது என்றால் கொல்லாமை; அருளல்லதாது எது எனில் கொல்லுதல்; பயன் தராதது புலால் உண்ணுதல் என்று சொல்கிறது.
255 ஆம்குறள் உயிருக்கு உறுதியான நிலை, ஊன் உண்ணாமையால் உள்ளது; ஊன் உண்பானாயின் அவனது உடலை ஏற்க நரகமும் வாய்திறக்காது என்கிறது.
256 ஆம்குறள் தின்னுதற்காக உலகத்தார் வாங்காவிட்டால், விலைக்காகப் புலால் கொடுப்பதற்கென்று எவரும் இல்லை எனச் சொல்கிறது.
257 ஆம்குறள் பிறிதோர் உடம்பின் புண் என்று அதனைத் தெரிந்து கொள்பவராக இருந்தால் புலால் உண்ணாதிருத்தல் வேண்டும் என்கிறது.
258 ஆம்குறள் குற்றத்தை நீக்கிய தெளிவுடையவர் ஓர் உயிரை நீக்கி வந்த புலாலை உண்ணமாட்டார் எனக் கூறுகிறது.
259 ஆம்குறள் அவியைச் சொரிந்து ஆயிரம் வேள்விகள் செய்தலைவிட ஓர் உயிரைக் கொன்று அதன் ஊனை உண்ணாமலிருத்தல் நல்லது எனக் கூறுகிறது.
260 ஆவதுகுறள் ஓருயிரைக் கொல்லாதவனாய், புலால் உண்ணுதலை மறுத்தவனை எல்லா உயிரும் கை குவித்து வணங்கும் என்கிறது.
புலால்மறுத்தல் அதிகாரச் சிறப்பியல்புகள்
அன்றும் சரி இன்றும் சரி, புலால் உண்டவர்கள் எல்லாம் கொடியவர்களாயிருந்தார்கள்; கொடியவர்களாயிருக்கின்றார்கள். ஊன் உண்ணாதவர்கள் எல்லாம் அருளாளர்களாக இருக்கின்றார்கள் என்பது இல்லை. வள்ளுவரும் அப்படிச் சொல்லவில்லை. இறைச்சி உண்டால் உடல்நலம் கெடும் என்றும் இவ்வதிகாரம் சொல்லவில்லை. உயிர்களைக் கொல்வது அருளற்ற கொடிய செயல். கொன்றதைத் தின்பது அருவருக்கத்தக்கது, அதை உண்போர் மனநலம் பாதிக்கும்; அவர்க்கு அருள் தோன்றாது என்றுதான் சொல்கிறது. இவ்வதிகாரத்தைத் திரும்பத்திரும்பப் படித்தால், புலாலுண்பார்க்கு ஊன் உணவைக் கண்டாலே வெறுப்புண்டாகும்; தாமாகவே புலாலுண்ணும் பழக்கத்தை கைவிடுவர்.
தன்ஊன் பெருக்கற்குத் தான்பிறிது ஊன்உண்பான் எங்ஙனம் ஆளும் அருள் (குறள் 251) என்ற பாடலில் புலால் உணவு உடம்புக்கு உரம் தரும் என்று நம்பி அதை ஒருவன் சுவைக்கலாம். ஆனால் அவன் அருளாளன் என்ற பெயர் பெறுவது இயலாது என்று கூறி புலாலை மறுக்கச் சொல்கிறார்.
உயிர்களைக் கொல்லாமையே அருள் எனப்படுவது; கொல்லுதல் அருள் இல்லாதது எனச் சொல்லி ஊன் தின்பவன் வாழ்க்கையே பொருளற்றதாகி விடுகிறது என்று அருள்அல்லது யாதுஎனின் கொல்லாமை கோறல் பொருளல்லது அவ்வூன் தினல் (குறள் 254) என்ற குறள் சொல்கிறது. புலால் உண்ணாமை ஒருவனது வாழ்வை அருள் நிறைந்ததாக மட்டுமல்லாமல் அது பொருள் பொதிந்ததாகவும் இருக்கச் செய்யும் என உயர்ந்தேத்திச் சொல்லப்பட்டது.
தினற்பொருட்டாற் கொள்ளாது உலகெனின் யாரும் விலைப்பொருட்டால் ஊன்தருவார் இல் (குறள் 256) என்று ஊன் உண்பனைப் பார்த்து 'நீ உண்ணுவதால்தானே, விற்பவன் உயிரைக் கொன்று வந்து தருகிறான். நீ புலால் வாங்குவதை விட்டுவிடு. அவன் எப்படி விற்கமுடியும்?' என ஒத்துழையாமை இயக்கம் பற்றி அன்றே பேசியுள்ளார் வள்ளுவர்.
தெய்வத்தின் பெயரால் உயிர்க்கொலை செய்து ஆயிரக்கணக்கில் சடங்குகள் செய்வதைவிட ஒரு உயிரை நீக்கி அதன் ஊனை உண்ணாதிருப்பது நல்லது என வேதவேள்விகளைச் சாடி அவிசொரிந்து ஆயிரம் வேட்டலின் ஒன்றன் உயிர்செகுத்து உண்ணாமை நன்று (குறள் 259) எனப் பாடும்போது தனது கருத்தை எந்தவிதத் தயக்கமுமின்றி மிகத்தெளிவுடன் பதிவு செய்கிறார் வள்ளுவர்.
நெடுங்காலமாகவே புலால் உண்ணும் பழக்கம் உலக நடைமுறையில் உள்ளது. நட்பு முதலிய துறைகளில் மனிதன் பழமையைப் பாராட்ட வேண்டும் என்று வற்புறுத்திக் கூறுகின்ற வள்ளுவர், இரக்கமற்ற உயிர்க்கொலையையும் புலால் தின்றல் என்ற புரையோடிப் போன உணவுப் பழக்கத்தையும் தகர்த்தெறியத் தயங்கவில்லை. தனி மனிதனுடைய வாழ்க்கையில் கொல்லாமை, புலாலுண்ணாமை ஆகிய இரண்டும் மிகச் சிறந்த அறங்கள் என்று கொல்லான் புலாலை மறுத்தானைக் கைகூப்பி எல்லா உயிரும் தொழும் (குறள் 260) என்ற பாடல்வழி சொல்லி அவற்றை ஊக்கவழியில் பின்பற்றச் சொல்கின்றார்.