Devapriyaji - True History Analaysed

Members Login
Username 
 
Password 
    Remember Me  
Post Info TOPIC: 027 தவம் அதிகாரப் பாடல்களின் சாரம்


Guru

Status: Offline
Posts: 7602
Date:
027 தவம் அதிகாரப் பாடல்களின் சாரம்
Permalink  
 


அதிகார விளக்கம் 
தவம் 
தமக்குற்ற துன்பங்களைப் பொறுத்துக் கொள்ளலும் பிறஉயிர்க்குத் தீமை செய்யாதிருத்தலும்.
குறள் திறன்-0261 குறள் திறன்-0262 குறள் திறன்-0263 குறள் திறன்-0264 குறள் திறன்-0265
குறள் திறன்-0266 குறள் திறன்-0267 குறள் திறன்-0268 குறள் திறன்-0269 குறள் திறன்-270

openQuotes.jpgதிருவள்ளுவர் கூறும் தவம் புதுமையானது, எளிமையானது. அன்பு வழியிலும் அறவழியிலும் ஒழுகுவோருக்கு இயல்பானது. தனக்கு வரும் துன்பத்தைப் பொறுத்துக் கொள்ளுதலும் பிற உயிர்களுக்குத் தீங்கு செய்யாதிருப்பதும்தான் அரிய செயலாகும். இதனைத்தான் திருவள்ளுவர் தவம் என்று சொல்லுகிறார்.
- இ சுந்தரமூர்த்தி

 

இவ்வதிகாரத்தில் முயற்சியே தவம்; தம் கருமம் செய்வதே தவம் என்கிறார் வள்ளுவர். அவர் சொல்லும் தவம் கடமை ஆற்றும் முயற்சியான் வரும் துன்பங்களை ஒரு நோன்பு போலத் தாங்கிக் கொள்ளுதலும் அம்முயற்சியில் வெற்றி காணும் நோக்கில் மற்றவர்களுக்கு ஊறு நேராவண்ணம் வாழ்வியல் மேற்கொள்ளலுமாம். தவம் என்பது துறவு மேற்கொண்டவர்களுக்கு மட்டும் உரித்தானது அல்ல என்பது பெறப்பட்டது.
குறளில் துறவற இயல் என்று வகுக்கப்பட்டதில் இல்லறத்தார்க்கும் துறவறத்தார்க்கும் பொதுவான அதிகாரங்கள் பல உள. அவற்றில் இதுவும் ஒன்று.

தவம்

‘தவம்’ என்ற சொல் நோன்பு, பொறுத்தல், பேறு என இடத்திற்குத் தக்கவாறு பல பொருள்களை வழங்குவது. தவத்தின் இலக்கணம் இன்னது என்பதை உற்றநோய் நோன்றல் உயிர்க்குறுகண் செய்யாமை அற்றே தவத்திற்கு உரு (261) என்னும் குறட்பா கூறுகின்றது. தவம் என்பதனைக் குறிக்கும் நோன்பு என்னும் சொல்லும் இவ்வதிகாரத்தில் நான்கு இடங்களில் வழங்கப்பட்டுள்ளது. நோன்றல் என்றும் நோற்றல் என்றும் சொல்லப்படும் உறுதிப்பாடே நோன்பு ஆகும். இவ்வுறுதிப்பாடே தன் துயர் பொறுத்தலும் பிறவுயிர்க்குத் துன்பம் செய்யாமையுமாம் இயல்பை ஆக்கும்.
'தவம்' என்பதன் வேர் 'தவ்' என்பது. தவ் என்பது சுருங்குதல் பொருளது. ஆக்க வழியிலே செல்லும் சுருக்குதல் தவ்-தவம். தேவையைச் சுருக்கி உளநலத்தையும் உரத்தையும் பெருக்குதல் வழியாகத் 'தவ்' என்பது அகரம் சேரத் 'தவ' என்றாகி மிகுதிப் பொருள் தரும் உரிச் சொல்லாக விளங்குவதாயிற்று. தவம் என்பது 'மிக நலம்' என்னும் பொருளுக்கு உரியதாயிற்று. தவப்பிஞ்சு என்பது மிகப்பிஞ்சு என்றும் தவப்பேறு என்பது மிகப்பேறு என்றும் பொருள் தருவதாயிற்று' எனத் தவம் என்ற சொல்லை விளக்குவார் இரா இளங்குமரன்.

தொன்மங்களில் ஈடுபாடுடையோர்க்குத் தவம் என்றவுடன் காட்டிடை தனித்துறைதல், ஊண் உறக்கம் குறைத்தல், வெயில், மழை, பனி தாங்கல், நீர்நிலை நிற்றல், கனி நுகர்ந்து, ஐந்து நெருப்பின் நடுவில் இருந்து உடல் வாட்டும் கடும் பயிற்சிகளை மேற்கொள்ளல், ஞானம் தேடி கோயில் குளம் சுற்றல், யாகம் இயற்றி இறைவனிடம் வேண்டுவன பெறுதல் என்பதும் தவம் செய்பவர் தனியே காட்டிலோ அல்லது மலையிலோ அல்லது யாருமில்லாத தனித்துள்ள குகைகளிலோ அமர்ந்து தியானித்து இருந்து, வரம் கொடுக்கும் ஆற்றல் பெற்றவராக அல்லது சாபங்கள் இடும் சினம் கொண்டவராக இருப்பார் என்பனவே மனக்காட்சியில் தோன்றும்.
ஆனால் குறளில் அப்பொருளில் 'தவம்' கையாளப்பெறவில்லை. தம் கடமை பற்றி ஒருமுகமாக எண்ணிச் செயல்படுவதையே தவம் என்கிறது குறள்.

தவம் என்பதற்கு இன்றைய நாளில் கடின உழைப்பு, முயற்சி, ஒரு நோக்கத்திற்காகத் தன்னை முழுமையாக ஒப்படைத்துக் கொள்ளுதல் என்று விளக்கம் கூறி அதை 'முயற்சித் தவம்' என்று அழைக்கின்றனர். ஒரு கடமையில் ஈடுபடுபவன் அதைத் தவம் போலக் கருதி அதே நினைவாய்-ஓர்மையுடன் வரும் இடையூறுகளை யெல்லாம் பொறுத்து முன்னேறிச் செல்வது தவத்தின் இயல்பு என்பர் இவர்கள். நாமக்கல் இராமலிங்கம் 'தவம் என்பது ஒருவனுடைய மனம் முழுவதும் ஒரே நோக்கத்தில் ஈடுபட்டு, வேறு எண்ணங்களுக்கு இடங்கொடுக்காமல் இருப்பதற்காகச் செய்யப்படும் முயற்சிகளின் தொகை' என விளக்கினார்.
ஆனால் முயற்சியையே வள்ளுவர் தவம் என்ற சொல்லால் குறிக்கின்றார் என்பதை மறுப்போரும் உண்டு. பொருட்பாலில் ஊக்கம் உடைமை, மடியின்மை, ஆள்வினை உடைமை, இடுக்கண் அழியாமை ஆகிய அதிகாரங்கள் முயற்சியின் பெருமையையே வலியுறுத்துவன ஆதலால் தவம் என்ற அதிகாரம் தவத்தைப் பற்றித்தான் கூறுகிறது என்பர் இவர்கள்.
முயற்சியும் ஒருவகைத் தவம்தான் என்பது வள்ளுவர் கருதுவதுதான்.
துறவுத் தவம் பற்றியும் இவ்வதிகாரக் குறள் ஒன்று 'துறந்தார்க்குத் துப்புரவு வேண்டி..'(263) எனப் பேசுகிறது.
..... துன்பம் சுடச்சுட நோற்கிற் பவர் என்று கடுந்தவம் செய்வோர் பற்றி மற்றொரு பாடல் (267) கூறுகிறது.
,,,,,,மன்னுயிர் எல்லாம் தொழும் என்று தொழத்தக்க வகையில் மிக உயர்நிலையில் தவம் மேற்கொள்வார் பற்றியும் குறள் (268) பாடுகிறது.

தவம் அதிகாரப் பாடல்களின் சாரம்

 

  • 261 ஆம்குறள் தனக்கு நேரிட்ட துன்பத்தைத் தாங்கிக் கொள்ளுதலும், பிற உயிர்களுக்கு ஊறு செய்யாமையும் ஆகிய அவ்வளவேயாம் தவத்திற்கு வடிவம் எனச் சொல்கிறது.
  • 262 ஆம்குறள் தவவடிவம் ஏற்பது தவஒழுக்கம் உடையார்க்கே கூடும்; அதனைத் தவமிலாதார் மேற்கொள்வது பழிப்பு எனக் கூறுகிறது.
  • 263 ஆம்குறள் துறந்தவர்கட்கு உதவுதலை விரும்பி, துறவாத மற்றவர்கள் தவஞ்செய்தலை மறந்தனர் போலும் என்கிறது.
  • 264 ஆம்குறள் பகைவரை அழித்தலும் வேண்டியவரை உயர்த்தலும் நினைத்தால் தவத்தால் முடியும் என்று சொல்கிறது.
  • 265 ஆம்குறள் விரும்பியவற்றை விரும்பியவாறே பெறலாம் ஆதலால் உரிய தவத்தை இங்கேயே முயற்சிக்க வேண்டும் என்கிறது.
  • 266 ஆம்குறள் தன் கடமைகளைக் கருத்துடன் செய்கின்றவர் தவம் செய்வார் ஆவார்; பிறர் ஆசையுள் மாட்டிக்கொண்டு வீண்செயல் செய்பவர் எனச் சொல்கிறது.
  • 267 ஆம்குறள் சுடச்சுடப் பொன் ஒளிமிகுதல் போல் தவம் செய்கிறவர்களுக்குத் துன்பம் வருத்த வருத்த சிறப்பு மிகும் என்கிறது.
  • 268 ஆம்குறள் தன்னுயிர் என்றும் தான் என்றும் கருதும் பற்றினை முற்றும் நீங்கப் பெற்றவனை உலக உயிர்களெல்லாம் தொழும் எனக் கூறுகிறது.
  • 269 ஆம்குறள் தவத்தின் ஆற்றல் கைவரப் பெற்றவர்க்குக் கூற்றுவனைத் தாண்டுதலும் இயலும் எனக் கூறுகிறது.
  • 270 ஆவதுகுறள் இல்லாதவர்கள் மிகுதியாக இருப்பதற்குக் காரணம் தவம் செய்வார் சிலர், தவம் செய்யாதார் பலராக இருப்பது என்கிறது.

 

தவம் அதிகாரச் சிறப்பியல்புகள்

 

உற்றநோய் நோன்றல் உயிர்க்குறுகண் செய்யாமை அற்றே தவத்திற்கு உரு (261) - உலகில் முயற்சியால் வரும் துன்பங்களைப் பொறுத்தலும், பிற உயிர்களுக்குத் துன்பம் செய்யாமையுமே தவம் என்ற தவத்திற்கான வள்ளுவரின் இந்த விளக்கம் பழைய கற்பனைக்கு மறுதலையானது. புரட்சிகரமானது.

அவரவர் கடமைகளைச் செய்வது தவம் செய்தல் என்று தவஞ்செய்வார் தம்கருமம் செய்வார்மற் றல்லார் அவம்செய்வார் ஆசையுள் பட்டு (266) என்ற பாடலில் குறிக்கிறது குறள். தமக்குரிய கடமைகளில் ஈடுபாடு காட்டுவதே தவம் என்பதும் புதுமையான விளக்கமாகப் பார்க்கப்படுகிறது.

சுடச்சுடரும் பொன்போல் ஒளிவிடும் துன்பம் சுடச்சுட நோற்கிற் பவர்க்கு (267) என்ற பாடல் சிறந்த உவமை வழி கடுந்தவம் செய்பவர் எய்தும் மேன்மையைக் குறிக்கிறது.

இலர்பலர் ஆகிய காரணம் நோற்பார் சிலர்பலர் நோலா தவர். (270) என்பது அதன் ஆழ்ந்த சிந்தனைக்காகப் புகழ் பெற்றது.



__________________
Page 1 of 1  sorted by
 
Quick Reply

Please log in to post quick replies.



Create your own FREE Forum
Report Abuse
Powered by ActiveBoard