Devapriyaji - True History Analaysed

Members Login
Username 
 
Password 
    Remember Me  
Post Info TOPIC: 029 கள்ளாமை அதிகாரப் பாடல்களின் சாரம்


Guru

Status: Offline
Posts: 7468
Date:
029 கள்ளாமை அதிகாரப் பாடல்களின் சாரம்
Permalink  
 


அதிகார விளக்கம் 
கள்ளாமை 
கள்ளத்தனம் செய்யாமை.
குறள் திறன்-0281 குறள் திறன்-0282 குறள் திறன்-0283 குறள் திறன்-0284 குறள் திறன்-0285
குறள் திறன்-0286 குறள் திறன்-0287 குறள் திறன்-0288 குறள் திறன்-0289 குறள் திறன்-290

openQuotes.jpgகள்ளாமையாவது தனக்கு உரியனவல்லாத, தான் அனுபவிக்கக் கூடாத பிறர் பொருள்களைத் தனக்குரியனவாகவும். தான் அனுபவிக்க வேண்டும் என்று நினையாமையும், நினைவின்வழி களவுச் செயலைச் செய்யாமையும் ஆம்.
- ஜி வரதராஜன்

 

தனக்கு உரிமையில்லாத மற்றவர் உடைமைகளை அவரறியாமல் கைக்கொள்ளவோ, வஞ்சித்து எடுத்துக் கொள்ளவோ, எண்ணாதிருத்தலும் அங்ஙனம் செய்யாதிருத்தலும் கள்ளாமை ஆகும். பொருள் ஈட்டுவதற்காக மறைந்தொழுகல் செய்யலாகாது என்பதைக் கள்ளாமை அதிகாரம் சொல்கிறது.
சிறிதேயானாலும் களவாடக்கூடாது; களவுசெய்ய வேண்டும் என்று எண்ணுதலும் தீமையே; களவால் செல்வம் பெருகுவது போன்று தோன்றினாலும் அது அழிந்தே தீரும்; கண்டுபிடிக்கப்பட்டால் மிகுந்த துன்பத்தைத் தரும்; களவு செய்வார் அன்பில்லாதவராகவே இருப்பர்; அவர் வரம்புமீறிய வாழ்வு நடத்துவர்; இருள் அறிவு கொண்டவர்; களவின் சுவை கண்டவர் திரும்பவும் மாறுதல் கடினம்; மற்ற நல்ல தொழில்களைப் பயிலாதவர் நேரற்ற செயல்களையே புரிவர். ஆனால் கள்ளார் வானுலகமும் செல்லமுடியும். இவை இத்தொகுப்பில் உள்ள பாடல்கள் கூறும் செய்திகள்.
கள்ளாமையை ஒருவகை அறமாகவே கருதுகிறார் வள்ளுவர்.

கள்ளாமை

தனது முயற்சியினாலும், உழைப்பினாலும் ஆக்கம்பெற வேண்டியவன், பிறர் பொருளை மறைவாகக் கவர்ந்து பொருள்செய்கிறான். இது களவு எனப்படுகிறது. ஆள்வலிமையாலும் தோள் வலிமையாலும் வன்முறைகள் பிறவற்றாலும் களவு மேற்கொள்ளப்படுகிறது. பண்டைக்காலத்திலிருந்து களவு பெருங்குற்றமாகவே கருதப்பட்டு வந்திருக்கின்றது. கள்வனைக் கோறல் கடுங்கோலன்று; வெள்வேற் கொற்றம் என்ற பாண்டியன் நெடுஞ்செழியன் கூற்று (சிலப்பதிகாரம் மதுரைக் காண்டம் வழக்குரை காதை - 64 - 5 பொருள்: கள்வனைக் கொலை செய்தல் கொடுங்கோன்மைப் பாற்பட்டதன்று மேலும் அதுவே அரச நீதியுமாகும்.) களவுக்குக் கொலைத்தண்டனையும் அன்று இருந்தது என்பதைக் காட்டுகிறது.
ஒருவர் பொருளை அவர் உடன்பாடின்றிக் பறித்துக்கொள்ளுதல் வெளிப்படைக் களவாகும். ஏமாற்றுதல், பிறர் உரிமைகளில் ஊடுருவல், கடமைகளைச் சரிவரப் புரியாமை, பொறுப்புகளைப் புறக்கணித்தல், சூழ்ச்சிகள் போன்றவை மறைமுகக் களவு என அறியப்படுவனவாகும். பொருள்திருட்டு, வஞ்சித்து ஈட்டல், கந்து வட்டி வாங்குதல், கலப்படம்செய்தல், கள்ளச்சந்தை வணிகம், உழைப்பவரின் அறியாமை, வறுமை போன்றவற்றைப் பயன்படுத்திக் கூலியைத் திருடல், கொள்ளை, கொள்கையில்லா அரசியல், செய்யும் தொழிலில் உண்மையின்மை, கையூட்டுப்பெறல், முறைகேடுகளில் ஈடுபடுதல் போன்ற நேர்மையற்ற செயல்களால் ஈட்டிய செல்வம் களவினால் ஆகிய ஆக்கம் எனக் கருதப்படும்.
அறிவார்ந்த ஏமாற்றுதலும் களவின்பாற்படும். கருத்துப் பொருள் திருட்டு (Intellectual property (IP) theft) என்று அறியப்படுவதும் தரவு திருட்டு (data theft) முதலியனவும் களவுக்கு இனமானவையே.

பிறருடைய பொருளை வஞ்சகமாகச் சாத்திரம், சமயம் போன்றவைகளைப் பயன்படுத்தியும் கொள்கின்றனர். இவையும் ‘கள்ளத்தால் கள்வது’தாம். பரிதி என்ற பழம் உரையாசிரியர் 'தவம் செய்வார்க்குப் பர்த்தாக்கள் இரங்கிக் கொடுக்கும் பொருள் அன்றியிலே, ஒரு திருப்பணி போல காட்டி வாங்குதலை'த் தனது குறளுரையில் (282) குறித்துள்ளார். கோயில் கட்டுதல், குடமுழுக்கு, கல்விநிறுவனம், திக்கற்றோர் இல்லம் முதலியவற்றுக்கு உதவுதல் என்ற பெயரால் ஏமாற்றிப் பணம் திரட்டும் கொடியவர்களை இன்றும் காண்கிறோம்.
'துறவுக் கோலத்தாலும் மந்திரங்கள் உச்சரிப்பதாலும் நன்மை அல்லது தீமை இயலும் என்ற மனப்பான்மையைத் தம்மை அணுகுவாரிடத்தில் உண்டாக்கியும் அவர்களின் அறிவின்மையாலும் அவலங்களாலும் பாதிக்கப்பெற்ற நிலையில் பொருள்களைக் காணிக்கை என்ற பெயரில் கவர்தலும் கள்ளத்தனமாகக் கவர்தலோடு ஒக்கும். நடக்கக் கூடாதவைகளை நடக்கும் என்ற நம்பிக்கையை உண்டாக்கிப் பொருள்களைப் பெறுதல் களவாகும்' என்கிறார் குன்றக்குடி அடிகளார்.

அறத்துப்பாலில் காணப்படும் இல்லறவியல் துறவறவியல் என இவ்விரண்டையும் ஒரே இயலாகக் கருதி வாசித்தாலும் பொருளில் வேறுபாடு பெரிதும் இல்லை. கள்ளாமை அதிகாரத்தைத் துறவறவியலில் வைத்துள்ளனர். கள்ளாமை அதிகாரப் பாடல்கள் அனைத்தும் இல்லறத்தார், துறவறத்தார் அனைவர்க்கும் பொருந்துவதாகவே உள்ளதால் இது ஏன் துறவறவியலில் வைக்கப்பட்டுள்ளது என்பது தெளியப்படவில்லை. களவினாலாகிய ஆக்கம், எல்லாம் துறந்தவர்க்கு எங்கே வந்தது? மணக்குடவர் வாய்மை, வெகுளாமை, இன்னா செய்யாமை, கொல்லாமை, புலால் மறுத்தல், கள்ளாமை என்னும் அதிகாரங்களை இல்லறவியலில் அமைத்திருக்க, ஏனைய தொல்லாசிரியர்கள் அவற்றை துறவறவியலில் அமைத்துள்ளார்கள். பிற்கால உரையாசிரியர்களில் வ உ சிதம்பரம் கள்ளாமை அதிகாரத்தை இல்லறவியலில் கொண்டிருக்கிறார். துறவறவியலில் 'கள்ளாமை' இருப்பதால், பல உரையாசிரியர்கள் துறவிகளை இணைத்தே இவ்வதிகாரப் பாடல்களுக்கு உரை செய்துள்ளனர். இவை ஏற்குமாறு இல்லை. கள்ளாமை அதிகாரத்தை இல்லறத்திற்கும் துறவறத்திற்கும் பொதுவாகப் பார்ப்பதே பயனளிக்கும்.

கள்ளாமை அதிகாரப் பாடல்களின் சாரம்

 

  • 281 ஆம்குறள் பிறரால் இகழப்படாமையை விரும்புபவன் என்று சொல்லப்படுபவன் யாதொரு பொருளையும் பிறரிடமிருந்து களவாடி அடைய நினையாத வகையில் தன் மனத்தினைத் தடுத்துக் கொள்ள வேண்டும் எனச் சொல்கிறது.
  • 282 ஆம்குறள் மனத்தில் நினைப்பதுங் கூட தீமையேயாகும், பிறருக்குச் சொந்தமான பொருளை வஞ்சித்துத் திருடிக் கொள்ளலாம் என்று எண்ணற்க என்கிறது.
  • 283 ஆம்குறள் களவினால் கொண்ட செல்வம் ஆகுவதுபோலத் தோன்றி அளவுகடந்து அழியும் என்கிறது.
  • 284 ஆம்குறள் களவிலே கொண்ட மிகுந்த வேட்கை, விளைவாக, விட்டுத்தொலையாத துன்பத்தைத் தரும் என்று சொல்கிறது.
  • 285 ஆம்குறள் அருளை எண்ணி அன்புடையவராய் ஒழுகுதல் பிறர் பொருளைக் கொள்ளக் கருதி அவரது சோர்வு பார்ப்பாரிடத்து இல்லை என்கிறது.
  • 286 ஆம்குறள் அளவு அறிந்து அடங்கிய வாழ்க்கை நடத்த மாட்டாதவர் களவின்கண் மிகுந்த வேட்கையுடையவர்கள் எனச் சொல்கிறது.
  • 287 ஆம்குறள் களவு என்னும் இருள்அறிவின் அடர்ப்பு அளவறிந்து வாழ்தலாகிய திறனைப் பொருந்தியவர்களிடத்து இல்லை என்கிறது.
  • 288 ஆம்குறள் அளவறிந்து வாழ்வார் நெஞ்சில் அறம் நிலை பெற்றுள்ளது போல நிற்கும் திருடப் பழகினவர்கள் மனதில் வஞ்சனை எனக் கூறுகிறது.
  • 289 ஆம்குறள் கள்ளத்தனம் தவிர வேறொன்றும் பயின்றறியாதவர்கள் நேர்மையற்றன செய்து எந்தநேரமும் அழிவர் எனக் கூறுகிறது.
  • 290 ஆவதுகுறள் கள்ளத்தனம் செய்பவர்களை உயிர் வாழ்தற்கு இடமாகிய இவ்வுலகம் நீக்கி வைக்கும்; கள்ளத்தனம் செய்யாதவர்கள் வானுலகம் பெறாமலும் போகமாட்டார் என்கிறது.

 

கள்ளாமை அதிகாரச் சிறப்பியல்புகள்

ஆகாத செயல்களை மனத்தினாலே நினைப்பதும் குற்றமே ஆகும். எண்ணத்தில் உண்டாவதே செயலில் முடியும். ஆதலால் செயலளவில் குற்றம் உண்டாகாமல் காத்துக்கொள்ள வேண்டுமானால் பிறருடைய பொருளைக் களவின் மூலம் பறித்துக்கொள்வோம் மனத்தால் நினைப்பதும் தீமை என்று உணரவேண்டும். இது உள்ளத்தால் உள்ளலும் தீதே பிறன்பொருளைக் கள்ளத்தால் கள்வேம் எனல் (282) என்ற பாடல்வழி அறிவுறுத்தப்படுகிறது.

பிறர் எப்பொழுது அயர்வார் என்று எதிர்பார்த்து அவர் பொருளை எடுத்துக்கொள்ள நேரம் பார்த்துக்கொண்டிருப்பவர் அன்புடையராக முடியாது என்று அருள்கருதி அன்புடையர் ஆதல் பொருள்கருதிப் பொச்சாப்புப் பார்ப்பார்கண் இல்(285) என்ற குறள் கூறுகிறது. அப்படிப்பட்டவன் அன்புள்ளவனாக/அருள்கொண்டவனாக மாறிவிடுவான் என்று நம்புவது அறிவுடைமை ஆகாது என்பது உணர்த்தப்பட்டது.

தனது அளவு அதாவது பொருள் செலவழிக்கும் தகுதி எவ்வளவு என்று அறியாதவனே பின்னர் களவில் எளிதில் பெறுவது கண்டு அதில் ஆசைகொண்டு விடுவர் என்பதை அளவின்கண் நின்றொழுகல் ஆற்றார் களவின்கண் கன்றிய காத லவர் (286) என்ற பாடல். இது அளவு அறிய வேண்டும் என்பதை வலியுறுத்துகிறது.

களவு என்னும் இருட்டு அறிவு அடரப் பெற்றவனிடம் தனது வரம்பு உணர்ந்து வாழ்க்கையை அமைத்துக் கொள்ள வேண்டும் என்ற எண்ணம் தோன்றுவதில்லை என்பதை களவென்னும் காரறி வாண்மை அளவுஎன்னும் ஆற்றல் புரிந்தார்கண் இல் (287) என்ற பாடல் தெரிவிக்கின்றது. களவு செய்பவன் இருண்ட உலகத்திலிருந்து இயங்குகிறான் எனச் சொல்லப்பட்டது.



__________________
Page 1 of 1  sorted by
 
Quick Reply

Please log in to post quick replies.



Create your own FREE Forum
Report Abuse
Powered by ActiveBoard