கேள்வி என்பது காதினால் கேட்டு அடையும் அறிவு. பல நூல்களைப் படிப்பதனால் அறிவுண்டாகும் என்றாலும் மேலான அறிவு பெறுவதற்கு வெறும் புத்தகப் படிப்பு மட்டும் போதாது. பல அறிஞர்கள் சொல்லுகின்ற அறிவுரைகளை நிரம்பக் கேட்க வேண்டும். தாமாக நூல்களைப் படித்தறிய எழுத்தறிவு இல்லாதவர்களும்கூட, கேள்வியினால் மட்டும் நல்லறிவு பெறமுடியும். அதனால் கேள்வியும் கல்வியின் பயனைத் தரும். அறிஞர்கள் உலக நலத்தைக் கோரி தாமின்புறுவது உலகின்புறக் காணவேண்டி, தாமாக அறிவுரைகள் சொல்லுவதையும் நாமாக அறிஞர்களை நாடி சொல்லச் செய்து கேட்டுக்கொள்வதும் சேர்ந்தது கேள்வி. - நாமக்கல் இராமலிங்கம்
கற்றறிந்தாரிடமிருந்து கேட்டறிவது கேள்வி எனப்படுகிறது. இது கல்வியின் தொடர்ச்சியாகக் கற்றவர்களுக்கும், கல்லாமையின் குறையைப் போக்குவதற்கு ஒரு வழியாக கல்லாதவர்களுக்கும் உதவுவது. கேள்வி பற்றிய இவ்வதிகாரம் நல்லவையையே கேட்கச் சொல்கிறது; கேட்டுக்கொண்டே இருக்கவேண்டும் என்று கூறுகிறது. சொற்சுவையானதும் பொருட்சுவையானதுமான நூற்பொருள் கேட்க என்கிறது குறள் என்று உரையாசிரியர்கள் விளக்கினர்.
கேள்வி
கல்வியறிவை இரண்டு வகையாகப் பெறலாம். நூல்களின் மூலமாகக் கற்றறிவது ஒன்று. கற்றார் மூலமாகக் கேட்டு அறிந்து கொள்வது மற்றொன்று. இவ்வதிகாரம் இரண்டாம் வகையைச் சேர்ந்த அறிவுபெறும் முறையைப் பேசுகிறது. கேள்வியறிவினைக் கற்றோர், கல்லாதோர் ஆகிய இருவகையினரும் பெற்றுப் பயன் பெறுவர் என்பது அறியக் கூடும்.
கற்கும் ஆற்றலும் வாய்ப்பும் இருந்தும் கல்லாதவனுக்கு மாற்று வழியாக கேள்வி அமைகிறது. கல்வி வாயிலாக அறிவைப் பெறும் முயற்சியை விட கேள்வி வாயிலாக அறிவை எளிதிலும் கூடுதலாகவும் பெறலாம். எந்தத் துறையைப் பற்றிய செய்தி வேண்டுமானாலும் அந்தத் துறையின் நுட்பங்களை ஒருவன் தானே முயன்று, நூற்களை ஆராய்ந்து அறிந்து கொள்வது கடினம். அந்தத் துறையை நன்கு அறிந்தவர்களிடம் கேட்டு அறிவது எளிதானது. அதனால் காலச்செலவும் குறையும். கேட்பது கற்றலைவிட மனத்தில் நன்கு பதிந்து பயன் தரும். கற்றலின் எல்லை ‘சாந்துணை’யும் நீண்டுகிடப்பதுபோல கேட்டலின் எல்லையும் நெடியதே.
என்ன கேட்பது என்பது பற்றி குறள் குறிப்பாகவோ வெளிப்படையாகவே சொல்லவில்லை. கேள்வி அதிகாரம் சொல்வதெல்லாம் எதுவாயினும் நல்லவை கேடக என்பதுதான். குறள் கூறுவது சொற்சுவை, பொருட்சுவை உடைய நூல்கள் என்று உரையாசிரியர்கள் கொள்வர். நூற்பொருள்கள் தவிர்த்து இசையையும் கேள்விப் பொருள்களில் சிலர் சேர்த்துக் கொள்வர்.
பழைய உரையாசிரியர்கள் அன்றிருந்த ஊடகமான நூல்கள் பற்றி மட்டும் பேசினார்கள். ஆனால் குறளின் பொதுத்தன்மை இன்றைய ஊடகங்கள் வழி அறியும் செய்திகளுக்கும் இடம் தருகிறது. மனிதனுக்கு ஓய்வு குறையக் குறைய கேள்வியின் தேவையும் வளர்ந்துகொண்டே செல்கிறது. அதற்கு இணையாக இன்று வானொலி, டிவி, திரைப்படம், ஒலி-ஒளித்தட்டு, இணையம் போன்று பல கேள்விக் கருவிகள் நமக்கு உண்டு. இவற்றுள் தேர்ந்து தெளிந்து நல்லனவற்றை கேட்கப் பயின்றுவிட்டால் அவையும் சிறந்த செவிச்செல்வமாக அமையும்.
கேள்வி எங்கு நிகழும்? இது பற்றியும் இவ்வதிகாரம் ஒன்றும் சொல்லவில்லை. ஆயினும், தன் ஆசிரியரோடு பழகுதல், தன்னை ஒத்தவரோடு பழகுதல், வேறு ஆசியர்களோடு பழகுதல் ஆகியவற்றால் கேள்வியறிவு நிறையும் என்று அறிஞர்கள் விளக்குவர். “கம்பன் வீட்டுக் கட்டுத்தறியும் கவிபாடும்” என்ற வழக்கிற்கேற்ப, கற்றோர் சூழலில் இருப்பதுவே- அவர்கள் உரைப்பதை செவியில் ஏற்றுக் கொண்டிருப்பதே, அவர்கள் கற்றுக்கொடுக்காமலேயே, அறிவுவளரத் துணை செய்யும். பழகும் வட்டத்தை விரிவாக்கிக் கொண்டு தேர்ந்தெடுத்த செய்திகளைக் கேட்பது நிகழலாம். இது செவிக்குச் சுவையானதும் அறிவார்ந்ததுமான செய்திகள் கிடைக்கவும் வழி வகுப்பது. சமமான அறிவுநிலையில் உள்ளவர்கள் தங்களுக்குள் உரையாடும் பொழுது, ஒருவரின் பேச்சு, இன்னொருவருக்கு ஒளியூட்டுவதாகவும் வழிகாட்டுவதாகவும் அமைந்து விடுவதை உணர்வர். பொது அரங்கில் நடைபெறும் கருத்துரையாடல், கலந்துரையாடல் போன்றவையும் கேள்வி வாயில்களாக அமைவன. இலக்கிய சொற்பொழிவு மட்டுமல்ல அரசியல் கூட்டங்களுக்குச் சென்று கேட்பதும் கேள்விதான். கதை கேட்பதும் கூட கேட்டல்தான். வள்ளுவர் அறிவுரையாவது எது கேட்டாலும் நல்லவை மட்டுமே கேளுங்கள் என்பது. கேட்ட இடங்களில் நன்மை தீமை இரண்டும் கலந்து வந்தாலும் நன்மையற்றவைகளை ஒதுக்கி விடுங்கள்.
கேள்வி அறிவில்லாதவன் காதுஇருந்தும் செவிடன்தான் என்கிறது குறள்.
கேள்வியின் பயன்
கேள்விச் செல்வத்தைப் பரிமேலழகர் மனத்தின்கண் நூற்பொருள் நுழைதற்கு வழியாக்கும் கருவி என்பர். அது மழைத்துளி போல பலவாற்றான் வந்து நிறைந்து எல்லா அறிவுகளையும் உளவாக்கும் என்றும் பிற்பயத்தலுமுடையது என்றும் கூறுவார்.
நூல்களைப் படைத்தோர் எல்லோரும் முழுமையான அனுபவ அறிவுகொண்டோர் என்று கூறமுடியாது. அதோடு காலவேறுபாட்டால் எழுதியவர் கருத்துக்கள் நடைமுறை வாழ்க்கைக்கு ஓரளவுதான் துணை செய்யும். ஆனால் கேள்வியோ நமது காலத்திலேயே வாழும் மனிதர் சொல்வது. அவர் வேறு பலநூல்களைக் கற்றவராகவும் இருப்பார். அதனால் பயன் மிகும். தளர்ச்சி வந்தகாலத்து கேட்டவை உற்ற உதவியாய் அமையும்.
ஒழுக்கம் உடையார் வாய்ச்சொல் தடுமாற்றம் தவிர்க்கத் துணை செய்யும்.
நன்கு ஆய்ந்து கேட்டுத் தெளிவடைந்தவர்கள் அறியாமை தரும் சொற்களைச் சொல்லமாட்டார்கள்.
நுட்பமான பொருளைக் கேட்டவர் பணிவான மொழிபேசும் பக்குவம் பெறுகிறார் என்றும் வள்ளுவர் இங்கு தெரிவிக்கிறார்.
கேள்வி அதிகாரப் பாடல்களின் சாரம்:
குறள் எண் 411 செவிச்செல்வத்திற்குத் தலைமைச் சிறப்பு தருகிறது.. குறள் எண் 412 செவியுணவு இல்லாத வேளை மட்டும் வயிறுணவு கொள்க என்கிறது. குறள் எண் 413 கேள்விச் செல்வம் பெற்றவர்க்கு ஒப்பார் இவ்வுலகில் யாருமில்லை என்று சொல்வது. குறள் எண் 414 தளர்ச்சியில் உதவி செய்யும் என்று கூறுவது. குறள் எண் 415 ஒழுக்கம் உடையார் வாய்ச்சொல் தடுமாற்றம் தவிர்க்கத் துணை செய்யும் என்று கூறுவது. குறள் எண் 416 நல்லவைகளை மட்டுமே கேட்க என்று அறிவுறுத்துவது. குறள் எண் 417 ஆய்ந்துணர்ந்து கேட்டவர் பிறழ மொழியார் என்று சொல்வது. குறள் எண் 418 கேட்டுக்கொண்டே இருக்கச் சொல்லி அறிவுரை பகர்வது. குறள் எண் 419 நுட்பமாகக் கேள்; பணிமொழி தானே வரும் என்று அறிவிப்பது. குறள் எண் 420 கேள்விச் சுவை அறியார் இருப்பதும் இல்லாததும் ஒன்றுதான் என்று உரைப்பது.
கேள்வி அதிகாரச் சிறப்பு
வள்ளுவர் அருட்செல்வம், பொருட்செல்வம், அடக்கம் செல்வம் என்பன போலப் பலவற்றைச் செல்வமாக அழைப்பார். அவர் கூறும் செல்வங்களனைத்தினும் தலையாயது இது என்று அவரே கூறுவதால் இவ்வதிகாரம் தனிச் சிறப்பு பெறுகிறது.
கேள்விச் செல்வம் ஈண்டியவரை வானுலக மாந்தருக்கு இணையாக ஏற்றிப் பேசுகிறார் வள்ளுவர். இது கேள்விக்கு அவர் அளிக்கும் அரிய பெருமையாகும்.
கேள்வி அதிகாரத்திலும் அறவாளர்களான ஒழுக்கமுடையாரை நினைத்து இணைக்கிறார்.
கேள்வியற்றவரை பூமிக்குப் பாரம் என்று மிகக் கடுமையாக இகழ்ந்துரைக்கிறார்.