Devapriyaji - True History Analaysed

Members Login
Username 
 
Password 
    Remember Me  
Post Info TOPIC: 051 தெரிந்து தெளிதல் அதிகாரப் பாடல்களின் சாரம்


Guru

Status: Offline
Posts: 7468
Date:
051 தெரிந்து தெளிதல் அதிகாரப் பாடல்களின் சாரம்
Permalink  
 


அதிகார விளக்கம் 
தெரிந்து தெளிதல் 
செயற்பாடுகளே ஒருவரது நிறை குறைகளைத் தெரிவிக்கும்
குறள் திறன்-0501 குறள் திறன்-0502 குறள் திறன்-0503 குறள் திறன்-0504 குறள் திறன்-0505
குறள் திறன்-0506 குறள் திறன்-0507 குறள் திறன்-0508 குறள் திறன்-0509 குறள் திறன்-0510

openQuotes.jpgதெரிந்து தெளிதல் என்பதற்கு ஆராய்ந்து நம்புதல் என்பது பொருள். அதாவது ஒருவன் தனக்காகத் தன்னுடைய காரியங்களைச் செய்கிற துணைவர்களை ஆராய்ந்து அறிந்து கொண்டு அதன் பிறகுதான் அவர்களிடம் நம்பிக்கை வைக்க வேண்டும் என்பது.
- நாமக்கல் இராமலிங்கம்

 

தெளிந்து தெரிதல் என்பது 'ஆராய்ந்து தேர்ந்தெடுத்தல்' என்ற பொருள் தருவது. கொள்கை வகுப்பாளர்கள் அதற்கு அடுத்த நிலையில் உள்ள செயல் வீரர்கள், கண்காணிப்பாளர்கள் போன்ற உயர்ந்த பொறுப்பான பணிகளில் அமர்த்தப்பட வேண்டியவர்களைத் தேர்ந்தெடுக்கும் முறைகளைக் கூறும் அதிகாரம் இது. ஆராய்ந்த பின்னரே அவர்கள் தேர்ந்தெடுக்கப்பட வேண்டும் என்பது பலமுறை வற்புறுத்தப்பட்டுள்ளது. ஆய்ந்து தேர்ந்தபின் அவர்களிடம் முழு நம்பிக்கை வைக்க வேண்டும் எனவும் கூறப்படுகிறது.

தெரிந்து தெளிதல்

தெரிந்து தெளிதல் என்றதற்கு ஆராய்ந்து தெளிவுறுதல், ஆராய்ந்து நம்புதல், ஆராய்ந்து தேர்ந்தெடுத்தல், ஆராய்ந்து தெளிவடைதல் என விளக்கம் தருவர். தெரிந்து என்ற சொல் ஆராய்ந்து எனப் பொருள் தருகிறது என்பதில் அனைவரும் ஒத்தவர். ஆனால் தெளிதல் என்பதற்குத் தேர்ந்தெடுத்தல், நம்புதல், தெளிவுறல் என்று வேறுவேறாகப் பொருள் தருகின்றனர். அதிகாரப் பொருண்மையிலிருந்து இவை வெகுவாக வேறுபடுவதில்லையாதலால் அனைத்தும் பொருந்தி வருகின்றன.
தேர்வுக்கு உள்ளாவர்தம் குடிப்பிறப்பு, நூற்கல்வியறிவு, உலக வியற்கை, அறிவாற்றல், தொழில்திறன், அனுபவம், உள்ளார்ந்த ஈடுபாடு ஆகியன பற்றி நன்றாகத் தெரிந்து, நற்குண நற்செய்கையறிந்து, தெளிந்து அனைத்திலும் தகுதியுடையோரைத் தேர்ந்தெடுக்க வேண்டும்.
ஆய்ந்து என்றதற்கு மல்லர் என்ற பழம் உரையாசிரியர் தரும் விளக்கம் சுவையாக உள்ளது: 'அவனவனுடைய கண்களை ஆராய்ந்து பாத்து சந்தேகம் எல்லாம் ஒழிந்ததுக்குப் பிறகு மந்திரிகளுக்கு உத்தியோகம் கொடுக்கிறது' என்கிறார் மல்லர். இன்றும் முடிவெடுக்கும் நிலையில் உள்ளவர்களில் சிலர் இந்த உத்தியை வெற்றிகரமாகக் கையாளுகிறார்கள் என்பது உண்மை.
ஒருவரது செயற்பாடுகளே அவரது சிறப்பைச் சொல்லும். ஆழ்ந்த ஆய்வுக்குப் பின் அவர்கள் தேர்ந்தெடுக்கப்படுவர். தேர்ந்தபின் அவர்மீது எவ்வித ஐயப்பாடும் கொள்ளலாகாது என்ற அளவில் ஆய்வு செய்யப்படவேண்டும். தேறும் பொருள் அறிந்தபின் அத்துறைக்கு அமர்த்தப்படுவர். அன்புடைமைக்காகவும் உறவுமுறைக்காகவும் யாரையும் தேர்ந்தெடுக்கக் கூடாது.
இவ்வதிகாரம் ஆள்பவர்களுக்கு மட்டுமன்றி தேறுதல் பொறுப்புள்ள அனைவருக்கும் பொருந்தும்.

'தெரிந்து செயல்வகை' என்னும் முந்தைய அதிகாரம் உரிமையாளரே செயல் மேற்கொள்ளும்போது ஆராய்ந்து செய்க எனச் சொல்வது. இவ்வதிகாரம் அவர்க்காகப் பணிபுரியப்போகும் துணைவர்களைத் தேர்ந்து எடுக்கும் முறைகளையும் அவர்கள் தேர்ந்தாராயின் அவர்களைத் தெளிக என்பதைக் கூறுவது. அடுத்த அதிகாரமான 'தெரிந்து வினையாடல்' தெளியப்பட்டாரை செயலில் ஈடுபடுத்தி, அவர்களை ஆள்வது பற்றியது.

தெரிந்து தெளிதல் அதிகாரப் பாடல்களின் சாரம்:

 

  • 501ஆம் குறள் அறம், பொருள், இன்பம், உயிர்அச்சம் நான்கிலும் உள ஆய்வு வழி, அறிந்த பின்னர் தேர்வு செய்யப்பட வேண்டும் எனச் சொல்கிறது.
  • 502 ஆம்குறள் நற்குடிப் பிறப்புள்ள, குற்றப் பின்னணி இல்லாத, பழி கண்டு இரங்கும், தவறானவற்றிற்கு வெட்கப்படுபவன் மீது நம்பிக்கை கொள்ளலாம் என்கிறது.
  • 503ஆம் குறள் சிறந்த கல்வி பெற்று ஐயந்திரிபு நீக்கியவராக இருந்தாலும், அவரிடத்தும் அறியாமை இருக்கத்தான் செய்யும் எனச் சொல்வது.
  • 504ஆம் குறள் ஒருவரது நிறை குறைகளை ஆராய்ந்து அவற்றுள் எவை மிகுந்து காணப்படுகிறதோ அதன் அடிப்படையில் அவரைத் தேர்வு செய்யவேண்டும்.
  • 505ஆம் குறள் ஒருவர் செய்யும் செயல்முறை கொண்டுதான் ஒருவரை நிறையுடையவரா அல்லது சிறப்பற்றவரா என்று தெளிதல் வேண்டும் எனச் சொல்கிறது..
  • 506ஆம் குறள் உலகவாழ்வில் பிடிப்புக் காட்டாதவரைத் தேறற்க; அவர்களுக்கு பற்று இல்லை. பழியும் நாணமாட்டார் என்கிறது.
  • 507ஆம் குறள் நட்பு பாசம் மட்டும் கருதி, தொழில் அறிவு இல்லாத ஒருவரைத் தேர்ந்தெடுத்தால் அது மடமையையே விளைவிக்கும் என்கிறது.
  • 508ஆம் குறள் ஆராயாமலே அயலான் ஒருவனைத் தேர்வு செய்தால் நம்பியவன் மரபினர்க்கும் நீங்காத் துயர் உண்டாகும் என்பதைச் சொல்வது.
  • 509ஆம் குறள் ஆராயாமல் எவரையும் ஒரு செயலுக்குத் தேர்வு செய்யற்க; தேர்ந்தபின் அவர்க்கேற்ற துறையைத் தேர்ந்து ஒப்படைக்க எனக் கூறுவது.
  • 510ஆவது குறள் செயலுக்கு உரியாரை ஆராயாது விரைந்து தேர்ந்தெடுப்பதும், ஆய்ந்து தேர்ந்தெடுக்கப்பட்டவரை ஐயப்படுதலும் நீங்காத துன்பம் தரும் என்கிறது.

 

தெரிந்து தெளிதல் அதிகாரச் சிறப்பியல்புகள்

மற்ற பொருள் நூல்கள் குற்றமில்லை என்று சொன்னவற்றை அவை குற்றங்களே என்று கூறி மறுத்த கூற்றுக்கள் இவ்வதிகாரத்தில் சில உள்ளன. அவை:
அரியகற்று ஆசுஅற்றார் கண்ணும் தெரியுங்கால்.....(குறள் 503: சிறந்த நூல்கள் கற்றவர் என்பதற்காக மட்டும் தெளிய வேண்டாம்.) அற்றாரைத் தேறுதல் ஓம்புக....... (குறள் 506: குற்றம் மறைப்பாரைத் தேர்வு செய்யவேண்டாம்.) காதன்மை கந்தா அறிவறியார்த் தேறுதல்......(குறள் 507: உறவின்முறையார் என்பதற்காகத் தேறுதல் வேண்டாம்.) தேரான் பிறனைத் தெளிந்தான்......... (குறள் 508: குலத்தின் உள்ளார் என்பதற்காக ஆராயமல் நம்ப வேண்டாம்) தேரான் தெளிவும் தெளிந்தான்கண் ஐயுறவும்........(குறள் 510: வறியவர் என்பதற்காக முன் அனுபவம் இல்லாதரைத் தெளிய வேண்டாம்.)

குறைபாடு இல்லாத மாந்தரை மட்டுமே தேர்ந்தெடுப்பது என்பது இயலாது. குறைகளுக்கும் நிறைகளுக்கும் இடையில் நிறைமிக்கவர்கள் தேர்ந்தெடுக்கப்படுவர் என்னும் கருத்துத் தரும் குணம்நாடிக் குற்றமும் நாடி அவற்றுள் மிகைநாடி மிக்க கொளல் (குறள் 504) என்ற பாடல் இங்குதான் உள்ளது. இப்பாடலை மனிதவளத் துறைக்கு மட்டுமல்லாமல் திறனாய்வு செய்தல் போன்ற மற்றவற்றிற்கும் மேற்கோள் காட்டுவர்.

ஒருவரது தொழில் திறமை பற்றிய பெருமைக்கும் ஏனைச் சிறுமைக்கும் தத்தம் கருமமே கட்டளைக் கல் (குறள் 505) என்ற கருத்துச் செறிவான பாடல் இவ்வதிகாரத்தில்தான் உள்ளது. இக்குறள் பெருமை அதிகாரத்தில் பேசப்படும் பெருமை பற்றியதாகக் கொண்டு செய்தொழிலால் உயர்வு/இழிவு இக்குறளில் பேசப்படுவதாக சிலர் உரை செய்தனர். தொழில் செய்முறையையே இக்குறள் பேசுகிறது; தொழிலின் தன்மை பற்றியல்ல என்பது அறியப்பட வேண்டியது.



__________________
Page 1 of 1  sorted by
 
Quick Reply

Please log in to post quick replies.



Create your own FREE Forum
Report Abuse
Powered by ActiveBoard