அரசன் அதிகாரத்தைச் செலுத்தும் பொழுது, மக்களும் சுற்றமும் துணுக்குற்று அஞ்சும்படியான செயல்களைச் செய்யாமை. - தமிழண்ணல்
முறைசெய்தலை 'செங்கோன்மை'யிலும் முறைசெய்யா ஆட்சியைக் 'கொடுங்கோன்மை'யிலும் கூறிய பின் குடிகள் அஞ்சும் செயல்களை ஆட்சித்தலவன் செய்யலாகாது என்பது பற்றி 'வெருவந்த செய்யாமை' என்ற தலைப்பில் தொகுத்துக் கூறுகிறது இவ்வதிகாரம். குற்றத்திற்கு மிகையான ஒறுத்தல், குடிகளை நடுக்குறச் செய்து 'ஆள்பவன் கொடியன்' என உரைக்கவைப்பது, காணுதற்கு அரியவனாயிருப்பது, கடுமையான முகம் காட்டுவது, கடுஞ்சொல் கூறுவது, இரக்கம் காட்டாதிருப்பது, அரசியல் சுற்றத்தொடு கலந்தெண்ணாமல் தன்விருப்பம்போல் முடிவு எடுப்பது, வறிதே சினம் கொண்டுசீறிப் பாய்வது, பண்பிலாதார் சூழ்ந்திருப்பதை ஏற்பது ஆகியன ஆட்சித்தலைவனது அஞசத்தக்க செயல்களாகச் சொல்லப்படுகின்றன. குடிகள் திடுக்கிடும்படியான செயல்கள் செய்பவனது செல்வம் பயன் தராது; விரைந்து கரையும் எனத் திரும்பத் திரும்பக் கூறப்படுகிறது. வெருவந்த செய்யும் நாட்டுத் தலைவனை வெங்கோலன் என அழைக்கிறார் வள்ளுவர்.
வெருவந்த செய்யாமை
வெங்கோலன் என்பவன் கொடுங்கோலனே என்றாலும் எப்பொழுதும் குடிகளை அச்சப்படுத்தியே வாழும் நாட்டுத்தலைவனை அப்பெயர் இட்டு அழைத்துக் குடிகள் அஞ்சும் செயல்களைச் செய்யலாகாது என்பதைச் சொல்வதற்காக ஒரு தனி அதிகாரம் படைக்கப்பட்டது போல் தோன்றுகிறது. செங்கோன்மை, கொடுங்கோன்மைக்கு அடுத்து இது வெம்மையை உணர்த்தும் ஆட்சியைப் பற்றியதாக வெங்கோன்மை அதிகாரம் எனலாம். குடிகள் அஞ்சத்தக்க செயல்களை ஆட்சியாளர் செய்யாமை வெருவந்த செய்யாமை என்பட்டது. வெரு என்ற சொல் அச்சத்தைக் குறிப்பது; வெருவருதல் என்பது அஞ்சுதல் எனப் பொருள் தரும். அச்சப்படுவதற்கும் வெரூஉதலுக்கும் நுண்ணிய வேறுபாடு உள்ளது என்பர். அச்சம் நீடுநிற்பது; வெரூஉதல் கதுமெனத் தோன்றி மறைவது எனபர். வெரூஉதல் என்பதற்குத் திடுக்கிடுதல் அல்லது துணுக்குறுதலதெனப் பொருள் கூறி வேறுபாடு காட்டுவர். கொடிய விலங்கினைக் கண்ட மான் வெருவும் காட்சியை நினைத்துக் கொள்ளலாம். பிறர் அஞ்சுதலையும் வெருவந்த செய்தலின் தீமைகளையும் சொல்லும் இவ்வதிகாரத்தில் செருவந்த போழ்தில்.... (569) என்ற குறளில் ஆள்பவன் தான் வெருவந்த செய்தல் சொல்லப்பட்டுள்ளதாக அனைத்து உரையாசிரியர்களும் உரை செய்வர். இக்குறளின் பொருள் வருமுன் காப்பது பற்றிச் சொல்வதாக அமைந்துள்ளது; ஆனால் ஆள்வோன் அப்படிக் காவாமல் வந்தபின் அச்சம் கொள்வது என்ற பொருளில் எடுத்துக் கொள்ளப்பட்டது. அதனால் 'பிறரும்-தானும் அஞ்சும் செயல்களைச் செய்யாமை' என்றும் வெருவந்த செய்யாமை என்றதற்குப் பொருள் கொள்வர்.
குற்றம் என்பது அரசின்/சமுதாயத்தின் சட்டத்தைப் புறக்கணித்துச் செய்யும் செயலைக் குறிப்பது. மாந்தரின் தன்னலமிக்க செயலே குற்றமாகிறது. குற்றங்களுக்கு அரசு தண்டனை வழங்கும். ஒருவனுக்குத் தண்டனை வழங்குவது அவன் மீண்டும் குற்றம் செய்வதைத் தடுத்து சமுதாயத்தைக் காப்பதையும் நாட்டில் அமைதி நிலவச் செய்வதையும் குற்றங்கள் குறைப்பதையும் நோக்கமாகக் கொண்டது. குற்றத்திற்கு ஏற்ற தண்டனை தராத அரசு கொடுங்கோல் அரசு என அறியப்படும். நேர்மையான தண்டனை வழங்கப்படும்போது அது அச்சம் தருவதாக இருக்காது. தண்டனையின் நோக்கம் ஒருவன் தொடர்ந்து குற்றங்கள் செய்வதில் இருந்து தடுக்க அச்சமூட்டுவதாக இருக்க வேண்டும். தண்டனை மிகுதியாகத் தோன்றி உண்மையில் அவ்வாறு இல்லாமல் இருந்தால் அது ஆறுதல் அளிக்கும். இதுவே அச்சந் தருவதற்குப் போதுமானதாகும். இந்தத் தண்டனை வழங்குமுறையில் நடுநிலை, திருத்தம், குற்றத்தடுப்பு ஆகிய கொள்கைகள் நிலைநிறுத்தப்படும்.
கடுமுகம் காட்டியும் கடுஞ்சொல் கூறியும் ஆளாமல் குடிகளை அன்பு வழியாலும் அறவழியாலும் ஆளுதல் வேண்டும். அச்சம் காட்டி ஆண்டால் அவ்வரசியல் கல்லாதாரைத்தான் ஈர்க்கும். எனவே கயவர் அல்லாதாருக்கு, அரசு தான் செய்வதே நல்லதென அறிவு வாயிலாக எடுத்துக்காட்ட, அவர்களும் அன்போடு அதனை ஒப்ப, அந்நிலையில் அவர்களோடு ஒன்றி வாழ்வதே சிறந்த அரசாட்சியாகும்.
வெருவந்த செய்யாமை அதிகாரப் பாடல்களின் சாரம்:
561ஆம் குறள் குற்றத்தை முறைப்படி ஆராய்ந்து, ஒறுக்கப்பட்டவன் மேலும் குற்றத்தைச் செய்யாமல் இருக்குமாறு, உலகோர் ஒப்பத் தண்டிப்பது அரசு என்கிறது.
562ஆம் குறள் நெடுங்கால மேம்பாடு நீங்காமல் இருக்க விரும்புபவர், கடிது செய்வார்போல் காட்டிப் பின் மெல்லெனச் செய்க எனக் கூறுவது.
564ஆம் குறள் 'ஆட்சித் தலைவன் கொடியவன்' என்று குடிகள் வசைகூறத் தொடங்கினால் அவன் உறையும் இடம் இழந்து விரைந்து அழிவான் என்கிறது.
565ஆம் குறள் எளிதில் காண முடியாதவனாகவும் காணும் போது கடுமைகாட்டும் முகம்கொண்டவனாகவும் உள்ள ஆட்சித்தலைவனின் பெருஞ் செல்வம் பேயிடம் அகப்பட்டது போன்றது எனக் கூறுவது.
566ஆம் குறள் குடிகளிடம் கடுஞ்சொல் கூறுபவனாகவும் இரக்கம் இல்லாதவனாகவும் ஆட்சியாளர் இருப்பின் தொன்றுதொட்டு வரும் செல்வம் நீடித்திராமல் அப்பொழுதே அழியும் என்கிறது.
567ஆம் குறள் கடுஞ்சொல்லும் முறையற்ற தண்டனை அளித்தலும் பகையை வெல்லும் ஆட்சியாளரது வலிமையை அறுக்கும் அரமாகும் எனச் சொல்கிறது.
568ஆம் குறள் அரசியல் சுற்றத்தோடு கலந்து செய்யாத ஆட்சித்தலைவன் வறிதே சினம் கொண்டுசீறிச் செயல்படுவானாயின் ஆட்சிச்செல்வம் சுருங்கும் என்கிறது.
569ஆம் குறள் போர்க்காலத்து காவாத ஆட்சித்தலைவன் அச்சமுற்று வெம்மையால் அழிவான் எனக் கூறுகிறது.
570ஆவது குறள் கடுங்கோல் ஆட்சி அறிவில்லாதாரை ஈர்க்கும்; பூமிக்குச் சுமையாவது அதுவன்றி வேறொன்று இல்லை என்கிறது.
வெருவந்த செய்யாமை அதிகாரச் சிறப்பியல்புகள்
பிற பண்பாடுகளில் பிறப்பு வகையால் ஆட்சித்தலைவனைத் தெய்வமாக்கித் தொழுதலும் அங்ஙனம் சொல்லுதலும் வழக்கு. ஆனால் வள்ளுவர் வெருவந்த செய்தொழுகும் ஆட்சியரை 'இறைகடியன்' (564), 'அருஞ் செவ்வி இன்னா முகத்தான்' (565), 'வெருவந்த செய்தொழுகும் வெங்கோலன்' (563) என இழித்துரைக்கிறார்.
தண்டனை வழ்ங்கும் முறையையும் அத்தண்டனயை எவ்வாறு நிறைவேற்ற வேண்டும் என்பதையும் தக்காங்கு நாடித் தலைச்செல்லா வண்ணத்தால் ஒத்தாங்கு ஒறுப்பது வேந்து(குறள் 561) கடிதோச்சி மெல்ல எறிக நெடிதுஆக்கம் நீங்காமை வேண்டு பவர் (குறள் 562) என்ற பாடல்கள் சொல்கின்றன. மற்ற குடியினர் அஞ்சும்படி அளவிறந்து தண்டிக்கக்கூடாது. ஒறுத்தல் என்பது குற்றம் செய்தவரை அழித்தற்கல்ல; அது திருத்தப்பாட்டினையே நோக்கமாகக் கொண்டதாக இருக்கவேண்டும் என்பதை அழகுறச் சொல்கிறது இப்பாடல்கள். தண்டனையென்னும் கோலைக் கடுமையாக ஓச்சுவதுபோலக் காட்டி லேசாகத் தண்டித்து, குற்றவாளியைத் திருத்த முயலவேண்டும் என்பது கருத்து. 'தக்காங்கு..' என்னும் குறள் 561 'நீடு நினைந்து மிக்க விழிப்போடு யாத்த பா' என்று கூறி அதன் 'சொற்றோறும் அன்பு ஓடுதல் காண்க' என்கிறார் வ சுப மாணிக்கம்.
நாட்டின் நிதி ஆதாரங்கள் கொடுங்கோல் ஆட்சியிடம் சிக்கும்போது அது பேய் காக்கும் செல்வம் போல் யாருக்கும் பயனின்றிப் போகும் என்று அருஞ்செவ்வி இன்னா முகத்தான் பெருஞ்செல்வம் பேஎய்கண் டன்னது உடைத்து (குறள் 565) என்ற பாடல் வழி சொல்லப்பட்டது. பேய்க்கும், பெருஞ்சினம் கொண்ட ஆட்சியாளனுக்கும் பொருந்த ஒப்புமை கூறப்பட்டது.
வெருவந்த செய்யும் ஆட்சித்தலைவனால் அறிவற்றவர்களே ஈர்க்கப்படுவர். வெங்கோலனுடன் சேர்ந்த இந்தப் பண்பில்லா கயவ்ர் கூட்டணி நாட்டுக்குக் கடுங்கோல்ஆட்சியையே தரும். அக்கொடுங்கோலாட்சி நாட்டுக்குச் சுமையாகவே அமையும் என்ற பொருளில் கல்லார்ப் பிணிக்கும் கடுங்கோல் அதுவல்லது இல்லை நிலக்குப் பொறை என்று கூறும் குறள் 570 இவ்வதிகாரத்தின்கண் உள்ளது.