Devapriyaji - True History Analaysed

Members Login
Username 
 
Password 
    Remember Me  
Post Info TOPIC: 063 இடுக்கணழியாமை அதிகாரப் பாடல்களின் சாரம்


Guru

Status: Offline
Posts: 7602
Date:
063 இடுக்கணழியாமை அதிகாரப் பாடல்களின் சாரம்
Permalink  
 


அதிகார விளக்கம் 
இடுக்கணழியாமை 
இடுக்கண் வருங்கால் நகுக.
குறள் திறன்-0621 குறள் திறன்-0622 குறள் திறன்-0623 குறள் திறன்-0624 குறள் திறன்-0625
குறள் திறன்-0626 குறள் திறன்-0627 குறள் திறன்-0628 குறள் திறன்-0629 குறள் திறன்-0630

openQuotes.jpgஇடுக்கண் என்பது 'இடையூறு'. 'அழியாமை' என்பது 'மனம் வலிமை அழிந்து போகாமை'. 'இடுக்கணழியாமை' என்பது மனித வாழ்க்கையில் நேரிடுகின்ற பல இடையூறுகளால் துன்புற்று மனமுடைந்து போகாதிருக்கும் உறுதி. இது எல்லாருக்கும் பொது.
- நாமக்கல் இராமலிங்கம்

 

இடுக்கணழியாமை என்பது முயற்சியில் பொருளிழப்பு, மெய் வருத்தம், தோல்வி போன்ற துன்பங்கள் வந்த பொழுது, அதற்கு மனங்கலங்காமையைக் குறிக்கும். இடுக்கண் என்ற சொல் துன்பம், இடையூறு என்ற இரு பொருளிலும் ஒன்றுக்கொன்று மாற்றிக் கொள்ளுமாறு இவ்வதிகாரத்தில் ஆளப்பட்டுள்ளதாக உள்ளது. அதிகார முறைமையைப் பார்க்கும்போது இதன் நோக்கம் முயற்சி மேற்கொண்டபோது நேரும் இடுக்கண்களுக்குக் கலங்காமை என்பதாக உள்ளது. ஆனால் ஒருவரது வாழ்க்கையில் உண்டாகும் எல்லாவகையான இடையூறுகளுக்கும் அழியாமை என்பதற்குப் பொருந்தி வருவதால், இன்பம்-துன்பம் ஆகிய உயிர்க்குணங்கள் பற்றிய ஆழ்ந்த கருத்தாடலாக இவ்வதிகாரம் அமைகிறது.

இடுக்கணழியாமை

'இடும்பை' என்ற சொல் உடம்பின் துன்பத்தை காட்டுகிறது என்றும் 'இடுக்கண்' என்ற சொல் இடையூறு, அல்லது 'உள்ள உடற்சிக்கல்' ஆகியவற்றைச் சுட்டுகிறது எனவும் கூறுவர். அழியாமை என்ற சொல் இங்கு மனவலி அழியாமையைக் குறிக்கிறது. எனவே இடுக்கணழியாமை என்பது துன்பம், இடையூறு இவை உண்டாக்கும் வலிக்குக் கலங்காமையைக் குறிக்கும்.
கடின உழைப்பு பற்றி இதற்கு முந்தைய அதிகாரமான ஆள்வினையுடைமை கூறிற்று. அதற்கு அடுத்து அதன் வெற்றி தோல்விகளை எப்படி எதிர்கொள்ளவேண்டும் என்று இங்கு சொல்லப்படுகிறது. எப்படி ஊக்கமுடைமை, ஆள்வினையுடைமை ஆகிய அதிகாரங்கள் முயற்சியின் வெற்றியை உடன்பாடாகச் சொல்லுகின்றனவோ அப்படி ‘மடியின்மை’, ‘இடுக்கண் அழியாமை’ என்ற அதிகாரங்கள் எதிர்மறையாக மனித முயற்சியைப் போற்றுகின்றன. இப்பண்புகளே செல்வப் பெருக்கத்துக்கு அடிப்படையாவனவாகின்றன. தொழிற்கண் துன்பம் நேரினும், மனம்கலங்காது, வென்று நின்று, இன்புற்று வாழும் திறன் பற்றியது இவ்வதிகாரம்.

எல்லா முயற்சிகளும் போராட்டங்கள்தாம். அவற்றில் வெல்லுதற்கேற்ற வன்மையை நாம் பெற்றிருத்தல் வேண்டும். சிலபல காரணங்களால் முயற்சியில் தடைகள் ஏற்படலாம். தடைகளைக் கடந்து வெற்றி எய்துதற்குத் தக்க உரம் பெற்றிருக்க வேண்டும். எத்தகைய மேடு பள்ளங்கள் நிறைந்த பாதைகளிலும் கற்களும் முட்களும் நிறைந்த வழிகளிலும் வண்டியை இழுத்துச் செல்லும் காளையைப் போன்று விடாமுயற்சியுடையவன், அடுக்கிவரும் இடுக்கண்களைக் கண்டு கலங்காமலும் அவற்றிற்கு அழியாமலும் இருப்பான், இடுக்கண் ஏற்படுங்கால் அது பொருட்டுக் கலங்குதல் ஆகாது அதற்கு மாறாகச் சிரித்தல் வேண்டும் என்கிறார் வள்ளுவர். அவ்வாறு சிரித்தலே அவ்விடுக்கணை வெல்வதற்கு வழியாம்.

துன்பமும் இன்பமும் எல்லா உயிர்களுக்குமுள்ள இயல்பான குணங்கள்; ஒன்று மாற்றி ஒன்று தோன்றும் தன்மையன. இன்பத்தையும் துன்பத்தையும் சமமாகக் கருத வேண்டும் என்றும், 'துன்பங்கள் இயற்கையானவை என்று எண்ணினால், ஒருவன் அவற்றால் துயரப்படுவதில்லை' என்றும் கூறுவதோடு 'துன்பத்தையே ஒருவன் இன்பமாகக் கருதிச் செயல்பட்டால், போட்டியாளரும் அவனை விரும்பிப் போற்றுவர்' எனவும் இவ்வதிகாரப் பாடல்கள் கூறுகின்றன.
அதிகாரத்து இன்ப-துன்பக் கருத்துக்கள் கிரேக்கரின் இன்பதுன்ப நடுநிலைக் கொள்கையை (Stoicism) அதாவது துன்பத்துக்கு வருந்தாது இன்பத்தையும் துன்பத்தையும் சமநோக்குடன் ஏற்றுக்கொள்ளச் சொல்வதை ஒப்பதாக உள்ளது. மேலும் துன்ப நீக்கத்திற்கும் இன்பம் எய்துவதற்கும் குறள் கூறும் வழிகள் எபிகூரியக் கொள்கை (Epicureanism)யுடனும் ஒப்பிடத் தக்கனவாக இருக்கின்றன.

இடுக்கணழியாமை அதிகாரப் பாடல்களின் சாரம்

 

  • 621ஆம் குறள் துன்பம் வந்த காலத்து அதைச் சிரித்து ஒதுக்கிவிடுக; அத்துன்பத்தை மேன்மேலும் நெருக்கிப் போராட வல்லது அந்நகுதல் போல்வது பிறிதில்லை என்கிறது.
  • 622ஆம் குறள் வெள்ளம்போலக் கரையில்லாத் துன்பங்கள், அறிவுடையான் உள்ளத்தில் உரத்தோடு நினைக்க மறைந்துவிடும் எனக் கூறுகிறது.
  • 623ஆம் குறள் துன்பத்திற்குத் இடையூறு உண்டு பண்ணுவர் இடையூற்றிற்குத் துன்பப் படாதவர் எனச் சொல்கிறது.
  • 624ஆம் குறள் தடையாய இடங்களில் எல்லாம் முனைந்து இழுக்கும் காளை போன்றவனுக்கு வந்த இடையூறு துன்பப்படும் என்கிறது.
  • 625ஆம் குறள் அடுத்து அடுத்து பெருகிவரினும் மனம் அழியாதவன் எய்திய துன்பம் துயரப்படும் எனத் தெரிவிக்கிறது.
  • 626ஆம் குறள் பெற்றபோது ஒருபொருளில் பற்றற்று இருப்பவர் அதை இழந்துவிட்டோமே என்று துன்பமுறுவார்களா? எனக் கேட்கிறது.
  • 627ஆம் குறள் உடம்பு துன்பத்திற்கு இலக்கானது என்று உணர்ந்து, துன்பம் வருகிறபோது செயலற்ற தன்மையாகக் கொள்ளாதிருப்பது மேலானது எனச் சொல்கிறது.
  • 628ஆம் குறள் இன்பத்தை நாடிச் செல்லாதவனாய்த் துன்பத்தை வாழ்க்கையின் இயல்பு என்று தெளிந்தவன், தன் முயற்சிக்கு வரும் இடையூற்றால் துயரடைய மாட்டான் என்கிறது.
  • 629ஆம் குறள் மேலும் மேலும் இன்பம் நாடிச் சொல்லாதிருப்பவன், துன்பம் வந்த காலத்தில் துன்பம் அடையான் எனக் கூறுகிறது.
  • 630ஆவது குறள் துன்பத்தையே இன்பம் என்று ஏற்றுக் கொண்டான் எனின், தன் போட்டியாளரும் விரும்பத்தக்க சிறப்பு ஆகும் என்கிறது.

 

இடுக்கணழியாமை அதிகாரச் சிறப்பியல்புகள்

துன்பம் வருவது இயற்கை என்றும் இன்பமும் துன்பமும் அவரவர் செயலால் வருவன என்றும் ஆற்று வெள்ளத்தில் அடித்துச் செல்லப்படும் தெப்பம் போல விதிவழியே உயிர் அடித்துச் செல்லப்படும் என்றும் முன்னர் சொல்லப்பட்டது. பின்னர் இந்த உலகம் துன்பத்தால் சூழப்பட்டதுதான். இவ்வுண்மையை உணர்ந்தவர்கள் துன்பத்தை விலக்கி வாழக்கையை இன்பமயமாக மாற்றிக்கொள்ளுவர் என்ற கருத்தியல் வளர்ந்தது.
பக்குடுக்கைநன்கணியார் பாடிய புறப்பாடல் ஒன்று:
ஓர் இல் நெய்தல் கறங்க, ஓர் இல்
ஈர்ந் தண் முழவின் பாணி ததும்ப,
புணர்ந்தோர் பூ அணி அணிய, பிரிந்தோர்
பைதல் உண்கண் பனி வார்பு உறைப்ப,
படைத்தோன் மன்ற, அப் பண்பிலாளன்!
இன்னாது அம்ம, இவ் உலகம்;
இனிய காண்க, இதன் இயல்பு உணர்ந்தோரே. 
(புறநானூறு:194 பொருள்: ஒரு வீட்டில் சாக்காட்டுப்பறை ஒலிப்ப ஒரு மனையின் கண்ணே மணத்திற்குக்கொட்டும் மிகக்குளிர்ந்த முழவினது ஓசை மிக ஒலிப்பக் காதலரைக் கூடின மகளிர் பூவணியை யணிய, பிரிந்த மகளிரது வருத்தத்தையுடைய உண்கண்கள் நீர்வார்ந்து துளிப்ப இப்பரிசு ஒத்து ஒவ்வாமைப்படப் படைத்தான் நிச்சிதமாக, அப்பண்பில்லாதோன்; கொடிது இவ்வுலகினது இயற்கை; ஆதலான், இவ்வுலகினது தன்மையறிந்தோர் நல்லசெய்கைகளை அறிந்து செய்க) உலகினைப் படைத்த முதல்வன் இப்படி ஒன்றையொன்று ஒத்துவராத துன்பம் இன்பம் என்று வெவ்வேறு மாறுபட்ட இயல்புகளை ஒன்றாக நிகழும் வண்ணம் அமைத்திருக்கிறானே என்கிறது. இன்னாமையை இனியவாகச் செய்து கொள்ளுக என்பது இப்பாடலின் உள்ளுறை.
இவ்வதிகாரப் பாடல்கள் உயிருக்கு இன்பம் துன்பம் இவை இரண்டும் இயல்பே என்று எண்ணி அமைபவனே வாழ்க்கையில் வெற்று பெறுவான் என்கின்றன. துன்பத்தை இன்பமாக்கிக் கொள்; உம் பகைவரும் உன்னை விரும்புவர், துன்பம் வந்தால் சிரித்துவிடு போன்ற உளவியல் பயிற்சி முறைகளையும் இன்ப-துன்பங்களை எதிர்கொள்வதற்கான வழிமுறைகளையும் இத்தொகுப்பு சொல்கின்றது.

இடுக்கண் வருங்கால் நகுக அதனை அடுத்தூர்வது அஃதொப்பது இல் (குறள் 621) என்ற பாடல் இடையூறு நேரும்போது அதன்பொருட்டுத் வருந்தாது சிரித்துவிடுக; இடையூறுகளை நெருக்கிப் போராடக்கூடியது சிரிப்பதைப் போன்று வேறில்லை. மலந்த முகத்துடன் இடையூறுகளை எதிர்கொள்ளும்போது மனத்தளர்ச்சி குறைகின்றது; தடையுற்ற தொழிலைச் செய்து வெற்றி பெறுவதற்கும் வழி ஏற்படுகின்றது. 'இடுக்கண் வருங்கால் நகுக' என்றது பழமொழியாய் விட்டது.

பெருஞ்சுமையை வண்டியுடன் இழுத்துச் செல்லும் காளை வழியில் எதிர்ப்படும் தடைகளைக் கண்டு கலங்காமல் தன் கால்களை அழுத்தமாக ஊன்றி முன்னோக்கிச் செல்லும். நிலத்தை நோக்கி முகத்தைத் தாழ்த்தியும் முழங்காலினை மடித்தும் விடாமுயற்சியுடன் பாரத்தை இழுத்துக் கொண்டு சேர்க்கும். அதுபோல முயற்சியில் உள்ள ஒருவன் இடையூறுகளைக் கண்டு தளராமல் விடாப்பிடியாக நின்று வெற்றி காணவேண்டும் என்று மடுத்தவாய் எல்லாம் பகடன்னான் உற்ற இடுக்கண் இடர்ப்பாடு உடைத்து (குறள் 624) என்னும் பாடல் கூறுகிறது. மேடு பள்ளமான வழி, மணல் நிலம், சேற்று நிலம் போன்றவற்றில் முயன்று காளை வண்டியை இழுத்துச் செல்லும் காட்சி மனத்தில் தோன்றினாலே ஒருவர்க்கு முன்னேறிச் செல்வதற்கான நல்ல உந்துதல் கிடைக்கும்.

துன்பம்-இன்பம் பற்றி சற்று விரிவாகவே இவ்வதிகாரம் கருத்தாடல் செய்கின்றது. ஒன்றை ஒன்றை தொடர்ந்து வந்தாலும், வெள்ளம்போல கரையின்றி வந்தாலும் மனங்கலங்காதார் துன்பத்திற்குத் துயரம் செய்வர் என்றும் துன்பத்தின் குறி உடல்தான், துன்பம் இயல்பென்று உணரவேண்டும், இன்பத்தின் மேல் இன்பம் நாடவேண்டாம் என்பனவற்றைக் கூறியபின் துன்பத்தையே இன்பமாகக் கருதிக்கொள்க என்று இன்னாமை இன்பம் எனக்கொளின் ஆகும்தன் ஒன்னார் விழையும் சிறப்பு (குறள் 624) என்ற பாடல் அறிவுறுத்துகிறது.



__________________
Page 1 of 1  sorted by
 
Quick Reply

Please log in to post quick replies.



Create your own FREE Forum
Report Abuse
Powered by ActiveBoard