Devapriyaji - True History Analaysed

Members Login
Username 
 
Password 
    Remember Me  
Post Info TOPIC: 064 அமைச்சு அதிகாரப் பாடல்களின் சாரம்


Guru

Status: Offline
Posts: 7602
Date:
064 அமைச்சு அதிகாரப் பாடல்களின் சாரம்
Permalink  
 


அதிகார விளக்கம் 
அமைச்சு 
அமைச்சரது இயல்பு
குறள் திறன்-0631 குறள் திறன்-0632 குறள் திறன்-0633 குறள் திறன்-0634 குறள் திறன்-0635
குறள் திறன்-0636 குறள் திறன்-0637 குறள் திறன்-0638 குறள் திறன்-0639 குறள் திறன்-0640

openQuotes.jpgஅமைச்சர்தான் ஏனைய அங்கங்களை நடத்திச் செல்லவும், அரசனுக்குத் துணை புரியவும் கூடியவராக இருப்பதால் 'அமைச்சு' என்ற அதிகாரம் முதலில் வைக்கப்பட்டது. அமைச்சராவார் அரசனுக்கு அண்மையில் இருந்து அரசன் ஆணைகளை நிறைவேற்றவும், அரசனுக்கு ஆலோசனை கூறவும் அமைந்த அறிவுடைச் செயலாளர் என்பது பொருள்.
- ஜி வரதராஜன்

 

ஆட்சிக்கு இன்றியமையாத் துணையும் ஆட்சித்தலைவனுக்கு அடுத்தபடியாகச் சிறப்பு வாய்ந்தவனுமான அமைச்சன் இலக்கணம் கூறப்படுகிறது. எந்தவகையான ஆட்சிமுறையாக இருந்தாலும் அமைச்சரவை இன்றியமையாதது. ஆட்சித்தலைவன் அறிவாலும் ஆற்றலாலும் சிறந்தவனாக இருந்தபோதிலும் தனியனாக அரசாட்சியைத் திறம்பட நடத்தமுடியாது என்பதால் அவனுக்குத் துணையாக அறிவுரை வழங்க அமைச்சரவை ஏற்பட்டது. மக்களுக்கும் ஆட்சித்தலைவனுக்கும் நெருங்கிய தொடர்புடையவன் அமைச்சன். அமைச்சர் தம் தகுதிகள், பண்புகள், ஆளுமைத் திறன்கள். செயற்பாடுகள் தொகுப்பாக இவ்வதிகாரத்தில் கூறப்படுகிறது. எப்படி இறைமாட்சியில் அரசனின் தன்மைகள் விரிந்து பின் வரும் அதிகாரங்களில் சொல்லப்பட்டதோ அதுபோல அமைச்சனின் இயலும் செயலும் தொடரும் பத்து அதிகாரங்களில் கூறப்படுகின்றன. அவற்றில் முதல் அதிகாரம் 'அமைச்சு' என்னும் பெயரில் அமைந்த இத்தொகுதி,

அமைச்சு

அமைச்சனது இலக்கணத்தையும், அவர்தம் ஆட்சித் திறன்களையும் விளக்கும் பகுதி அமைச்சு. அமைச்சு என்ற சொல் ஒருமையைக் குறிக்காமல் பன்மையாய் அமைச்சர் குழுவை (Council of Ministers)ச் சுட்டுவதாகலாம். அமைச்சு என்றால் ஆலோசனை சொல்லும் அமைச்சர்கள் பலர் சேர்ந்தது என்பதாகத் தோன்றுகிறது.
அமைச்சராவார் ஆட்சித்தலைவனுக்குப் பக்கத்தில் இருந்து அரசுச் செயல்களை நிறைவேற்றவும், அவனுக்கு ஆலோசனை கூறவும் அவனைச் சூழ நிற்பவர் ஆவார். ஆட்சிக்கு அமைச்சரவை இன்றியமையாததாய் உள்ளது. ஏன்? தனிமனிதனாக நாட்டுத்தலைவன், எவ்வளவுதான் நுண்ணறிவுடையவனாகவும் செயல்திறன் மிக்கவனாகவும் இருந்தாலும் ஆட்சியின் பல்வேறு துறைகளை அணுகி ஆராய்ந்தறிய, பல்வேறு பொறுப்புகளை கடமைகளை நிறைவேற்ற, ஆட்சியை எதிர்நோக்கிவரும் சிக்கல்களுக்குத் தீர்வுகாண துணைவர்கள் தேவை, ஒரே நேரத்தில் பலதுறைச் சிந்தனையும் பன்முகப் பணியும் நடைபெற அமைச்சரவை ஆட்சியாளருக்கு உதவுகிறது. என்ன செய்யவேண்டும் என்பதை அமைச்சுடன் கலந்து எண்ணி தலைவன் துணிகிறான். அதை எப்படிச் செய்வது என்ற பொறுப்பு அமைச்சருடையது.

அமைச்சர் என்பவர் நாட்டை ஆளும் அரசருக்கு ஆலோசனை கூறி, நாட்டு மக்களுக்கு நலன் பயக்கும் வகையில் அவருடைய எண்ணங்களையும் திட்டங்களையும் ஆட்சியின் நோக்கங்களை நிறைவேற்றும் பொருட்டுக் கொள்கைகளையும் திட்டங்களையும் வகுத்து, அவற்றைச் செயல்படுத்தும் நிலையில் உள்ளவர். அவ்வாறு அவர் செயலாற்றும் பொழுது அவர்களது செயல்கள் சிறப்பாக அமைந்திடவும், ஆட்சியின் நோக்கங்கள் எளிதில் நிறைவேறிடவும் பல்வேறு உத்திகளையும் நுட்பங்களையும் கடைபிடிக்க வேண்டியவராய் இருக்கிறார். அமைச்சு அதிகாரத்தில் அமைச்சர்க்கு உரிய இலக்கணமாக காலம் மற்றும் செயலை அறிவதிலும் நடைமுறைப்படுத்துவதிலும் தேர்ச்சி பெற்றவராக இருப்பார் எனச் சொல்லப்படுகிறது. வன்கண், குடிகாத்தல், கற்றறிதல், முயற்சி உடையனாதல், பன்னாட்டு அரசியலில் அவர் தாம் விரும்புகின்றவற்றைக் கூட்டுகிறவாரகவும் பிரிக்கிறவராகவும் இருத்தல், ஆராய்ந்து எதனையும் இயற்றுதல், செய்யப்படுவனவற்றை அறிந்து செய்தல், சொல்வனவற்றை உறுதியாகச் சொல்லுதல், அரசியல் அறங்களை அறிந்து நிறைவான அறிவுடன் அடங்கிய சொல்லையுடையவராக இருத்தல், செயற்கை அறிவுடன் உள்ளுணர்வு சார்ந்த அறிவியல் நுணுக்கம் கொண்டு செயல்படுதல், உலக இயற்கை அறிந்து செய்தல், ஆட்சியாள்ன் அறியானாயினும் நன்மையைச் சொல்லுதல், அடுத்துக் கெடுக்காமை, அரசியல் திறம் காட்டி எதனையும் தீர எண்ணி முடிவு போகச் செய்தல் ஆகியவை இங்கு கூறப்படுகின்றன. இவை பின் வரும் பத்து அதிகாரங்களிலும் விரித்தும் சொல்லப்படும்.

அமைச்சு அதிகாரப் பாடல்களின் சாரம்

 

  • 631ஆம் குறள் செய்யப்படப்போகும் அரிய வினையையும், வினை செய்வதற்கு வேண்டும் கருவிகளையும், வினைக்கு உற்ற காலத்தையும், வினை செயல்முறைகளையும் பொருந்த எண்ண வல்லவனே அமைச்சன் என்கிறது.
  • 632ஆம் குறள் செயலுறுதி, குடிகாத்தல், கல்வி, அறிவுடைமை, முயற்சியோடு ஐந்தும் பொருந்தப் பெற்றிருப்பவனே அமைச்சனாவான் எனக் கூறுகிறது.
  • 633ஆம் குறள் பகைவர்க்குத் துணையானவரைப் பிரித்தலும், தமக்குத் துணையாயினாரைப் பிரியாமல் காத்துக் கொள்ளுதலும், தம்மிடமிருந்து பிரிந்தாரை மீண்டும் சேர்த்துக் கொள்ளுதலும் செய்ய வல்லவன் அமைச்சன் என்பதைச் சொல்கிறது.
  • 634ஆம் குறள் செயலை ஆராய்தலும், கைகூடும் திறனை நாடித் தெரிவு செய்தலும், செயல்பற்றிய கருத்துக்களைத் துணிந்து சொல்லுதலும் வல்லவன் அமைச்சன் என்கிறது.
  • 635ஆம் குறள் அரசியல் அறனை நன்கு அறிந்து, அறிவு நிறைந்து அமைந்த சொல்லை உடையனாய், எப்பொழுதும் செயல் ஆற்றும் திறங்களைத் தெரிந்து வைத்திருப்பவன் அரசாள்வோர்க்கு கலந்து ஆலோசிப்பதற்குத் தக்க துணையாவான் என்பதைத் தெரிவிக்கிறது.
  • 636ஆம் குறள் இயற்கை அறிவுடன் நூலறிவும் பெற்றுள்ளவர்க்கு மிக்க நுட்பத்தை உடையனவாய் எதிர் நிற்க வல்லன யாவை? எனக் கேட்கிறது.
  • 637ஆம் குறள் செய்யும் திறன் பெற்றிருந்தபோதிலும் உலக நடை அறிந்து செய்க எனச் சொல்கிறது.
  • 638ஆம் குறள் அறிந்து சொன்னதை ஏற்காமல் தானும் அறியான் என்றாலும் உறுதியானவற்றை அரசனுக்கு எடுத்துக் கூறுதல், அவன் பக்கத்திலிருக்கும் அமைச்சனின் கடமை என்கிறது.
  • 639ஆம் குறள் பக்கத்திலே இருந்து குற்றப்பட நினைக்கும் அமைச்சனைவிட எழுபது கோடி பகைவர் நல்லவர் எனக் கூறுகிறது.
  • 640ஆவது குறள் செயலை முறைப்படி எண்ணினாலும் முடிவு இல்லாமல் செய்து கொண்டிருப்பர் அரசியல் திறப்பாடு இல்லாதவர் என்கிறது.

 

அமைச்சு அதிகாரச் சிறப்பியல்புகள்

இவ்வதிகாரம் சிறப்பாக நாட்டுத்தலைவனுக்கு இன்றியமையாத அமைச்சர்களின் செயல்திறன்கள் பற்றியது என்றாலும் ஆலோசனை வழங்கும் நிலையிலுள்ள எல்லாரும் படித்துப் பயன்பெறலாம். இன்றைய நாட்களில் பெரும் நிறுவனங்களை நடத்திச் செல்லும் இயக்குனர்களுக்கும் அதிகாரக் கருத்துக்கள் பொருந்திவரும்.

செயல்முறைகளை பாடநூல் அறிவு, கேள்வியறிவு இவற்றால் நிரம்பப் பெற்றிருந்தாலும் அவை மட்டும் செயல்முடிக்க உதவா. அப்பொழுதைய செயல்நிலைக்கு ஒத்த நடைமுறைகளைப் பின்பற்றினால்தான் திட்டம் முழுமையாக நிறைவேறும். இதை செயற்கை யறிந்தக் கடைத்தும் உலகத்து இயற்கை அறிந்து செயல் (637) என்ற பாடல் சொல்கிறது. ஒரு பணியைத் தொடங்குமுன் அதற்கான செய்முறை அறிவைத் தெரிந்து கொண்டபின்னர், உலகத்தோடு ஒத்த நடை எய்தும்படி செய்து முடிக்க என்னும் சிறந்த வழிகாட்டுக் குறிப்புக் கொண்டது இது.

நாட்டுத்தலைவனுக்கு நெருக்கமாக இருந்துகொண்டு அவனுக்குத் தீங்கினை நினைக்கும் ஓர் அமைச்சனைக் காட்டிலும் அவனது பலகோடிப் பகைவர்கள் நல்லவர்கள் என்று பழுதெண்ணும் மந்திரியின் பக்கத்துள் தெவ்வோர் எழுபது கோடி உறும் (639) என்னும் பாடல் விளக்குகிறது. இதில் சொல்லப்படும் உவமை தீங்கின் தன்மையையும் அளவையும் தெள்ளிதின் உணர்த்துகிறது.

நிறைய திட்டங்கள் பெரும் செலவுகள் செய்தபின் கைவிடப்படுகின்றனவே ஏன்? அது திறமை இல்லாத அமைச்சன் அவற்றைக் கையாண்டதால்தான் என்ற உண்மையை முறைப்படச் சூழ்ந்தும் முடிவிலவே செய்வர் திறப்பாடு இலாஅ தவர் (640) என்ற பாடல் தெரிவிக்கிறது. இங்கு சொல்லப்பட்ட திறப்பாடு அரசியல் திறன் கொண்டு செயல் முடிக்கும் ஆற்றலாகும்.



__________________
Page 1 of 1  sorted by
 
Quick Reply

Please log in to post quick replies.



Create your own FREE Forum
Report Abuse
Powered by ActiveBoard