Devapriyaji - True History Analaysed

Members Login
Username 
 
Password 
    Remember Me  
Post Info TOPIC: 074 நாடு அதிகாரப் பாடல்களின் சாரம்


Guru

Status: Offline
Posts: 7602
Date:
074 நாடு அதிகாரப் பாடல்களின் சாரம்
Permalink  
 


அதிகார விளக்கம் 
நாடு 
நாடா வளத்தன.
குறள் திறன்-0731 குறள் திறன்-0732 குறள் திறன்-0733 குறள் திறன்-0734 குறள் திறன்-0735
குறள் திறன்-0736 குறள் திறன்-0737 குறள் திறன்-0738 குறள் திறன்-0739 குறள் திறன்-0740

openQuotes.jpgவாழும் மக்களுக்கு வேண்டிய உணவு உடை முதலிய எல்லாவற்றையும் தருவதாகவும் கவலையற்று அமைதியாக வாழ்ந்து இன்புறுவதற்கு ஏற்றதாகவும் நாடு இருக்கவேண்டும். இல்லையானால் அந்த நாட்டில் நல்லரசு அமையாது; மக்கள் கூடி வாழும் வாழ்க்கை நிரம்பாது. ஆகையால் நாட்டின் இயல்பைத் திருவள்ளுவர் தனியே ஓர் அதிகாரத்தில் கூறுகின்றார்.
- மு வரதராசன்

 

எல்லா நாடுமே வசிக்கத்தகுந்தது என்றாலும் வளமான நாடே மக்களால் விரும்பப்படுவது. வளமான நாடு எது என்பது இவ்வதிகாரத்தில் விளக்கப்படுகிறது. இயற்கை வளமும் மக்கள் வளமும் சேர்ந்து அமைவது ஒரு வளமான நாடாகும் எனச் சொல்லப்படுகிறது. நாடென்ப நாடா வளத்தன என்று இவ்வதிகாரப் பாடல் ஒன்று குறு விளக்கம் செய்கிறது. இது ஒரு நாடு என்பது தன்னிறைவு பெற்றதாக விளங்கவேண்டும் என்ற கருத்தை நல்குவது; தம் நாட்டில் இல்லாதவற்றைப் பிற நாடுகளிலிருந்து எளிதே பெறக்கூடிய நிலையில் இருப்பதையும் இது குறிக்கும்.

நாடு

நாடு என்ற சொல்லுக்கு விரும்பு என்ற பொருளும் உண்டு. மக்கள் விரும்பி வாழுமிடம் என்றதால் அது நாடு எனப்பட்டது போலும் (சி இலக்குவனார்). ஒரு குறிப்பிட்ட எல்லைக்குள் சட்டங்களை அமைத்துக்கொண்டு, பாதுகாவல், நீதி நிர்வாகம், நிதி மேலாண்மை போன்ற தேவையான நிறுவனங்களை அமைத்துக் கட்டுப்பாடுடன் வாழ்ந்து, வளர்ந்து, வளம் பெறும் மக்களைக் கொண்ட அமைப்பு நாடு என்று அழைக்கப்படும். அதற்கு ஒரு தலைவன் இருக்க வேண்டும். மக்களின் வாழ்வியல் நாட்டில் நடைபெறுவதால் நாட்டின் இயல்புணர்த்தும் அதிகாரமாக உள்ளது இது. நாடு என்று இவ்வதிகாரத்துப் பெயர் இருந்தாலும் இயற்கை அமைவுகள் மட்டுமின்றி நாட்டில் வாழும் மக்களின் இயல்புகளும் எடுத்துக் கூறப்பெறுகின்றன. நாடு என்பதை நாடு ௭ன்றும் தேசம் (......எண்ணிய தேயத்துச் சென்று (753)) என்றும், உலகம் என்றும் வள்ளுவர் குறளில் குறிப்பிடுவார்.

நாடானது காடுகொன்று விரும்பி உண்டாக்கப்படலாம் அல்லது அது இயல்பாய் அமைந்ததாகவும் இருக்கலாம். இயற்கையாய் உள்ளது காடு. செயற்கையால் உண்டாவது நாடு. பேரிருளாய்க் கடுமையாய் அஞ்சத்தக்கது காடு; நாடவிளைவது நாடு. ஒரு நாட்டில் 'இவை இவை இருக்கவேண்டும்' என உடன்பாட்டு முறையாகவும் 'இவை இவை இருத்தலாகாது' என்று எதிர்மறை முறையாகவும் இவ்வதிகாரம் தெளிவுபடுத்துகின்றது. விளைநிலமும், எண்ணெய், கனிமம் முதலியன தருகிற சுரங்கமும், பிற மூலப் பொருள்களும் என்றிவை எல்லாம் அடங்கியதே இயற்கை வளங்களாம். இவை மனிதனது முயற்சியின்றி இயற்கையாகக் கிடைக்கும் பொருள்களாகும். அவற்றைப் பயன்படுத்தித்தான் விளைவு உண்டாக்கப்படுகிறது; விளைவுகளால் செல்வம் உருவாக்கப்படுகிறது. அச்செல்வம் உயிர்களின் உடல்நலம் பேணவும் இன்பநலனுக்கும் பயன்படுத்தப்படும். இவையெல்லாம் ஒழுங்குற நடைபெற நல்ல பாதுகாவல் வேண்டும். எல்லாவற்றிற்கும் மேலாக நாட்டில் நல்லாட்சி அமையவேண்டும்.

ஒரு பரந்த நிலப்பரப்பில் உள்ள மக்கள் பெருமையும், பாதுகாப்பும் கொண்டு, இணைந்து வாழ்வது நாடு எனப்படும். அது இப்படி இருக்கவேண்டும் என வள்ளுவர் சொல்லுகிறார்:
குறையாது விளைவிக்கும் உழவர்களும், நடுநிலையாளர்களும், சோர்விலாத வணிகரும் கூடிப் பொருந்தியுள்ள இடமே நாடாகும்; நாட்டுப் பற்று கொண்ட மக்கள் என்ன சுமை வந்தாலும் அரசு கேட்கும் வரியைக் கொடுக்கத் தயங்கமாட்டார்கள்; பெரும்பொருள் கொண்டு, கெடுதி குறைந்த நாடு எனப் பெயர்பெற்று பலரால் விரும்பப்படுவது நாடு; அங்கு பசி, பிணி, பகை இல்லை; ஒன்றுக்கொன்று பகைத்திருக்கும் குழுக்கள், உட்பகை, அரசை அலைக்கழிக்கும் கொலைக்கும்பல் இவற்றைக் காணமுடியாது; என்ன கேடு நேர்ந்தாலும் உடன் சீரமைப்புச் செய்துகொள்ளும் அமைப்பு கொண்டது அது; நீர்வளம், மலைவளம், வல்லரண் இவற்றை வழங்கி இயற்கை அருள் செய்யும் இடம் அது; நோயறியா, செல்வம், விளைச்சல் மிகுந்த, கேளிக்கைகள் நிறைந்த, நல்ல காவல் பொருந்திய உலகம் அது; பிற நாட்டைச் சாராமல் தன் தேவைகளை நிறைவு செய்துகொள்ளும் அந்நாடு; செம்மையான அரசமைப்பு கொண்டது.

 

 

நாடு அதிகாரப் பாடல்களின் சாரம்

 

  • 731ஆம் குறையாத விளைச்சலும், நடுநிலைமையாளரும், முயற்சியில் தாழ்வில்லாத ஆள்வினைச் செல்வரும் கூடிப் பொருந்தியுள்ள இடமே நாடாகும் என்கிறது.
  • 732ஆம் குறள் மிகுந்த பொருள் வளத்தால் விரும்பத் தக்கதாய் கேடின்றி மிக விளைவதே நாடு எனக் கூறுகிறது.
  • 733ஆம் குறள் பாரம் ஒருங்கே தங்கள் மேல் வந்த காலத்தும் அதனைப் பொறுத்தும் அரசுக்குரிய வரிப்பொருள் முழுவதும் உடம்பட்டுத் தருவது நாடு எனச் சொல்கிறது.
  • 734ஆம் குறள் மிக்க பசியும், நீங்காத நோயும், நெருங்கி நிற்கும் பகையும் இல்லாது விளங்குவதே நாடாகும் என்கிறது.
  • 735ஆம் குறள் பல மாறுபட்ட கருத்துக்களையுடைய கூட்டங்களும், அழிவினை உண்டாக்கக்கூடிய உட்பகையும், அரசுக்குத் துன்பம் தரும் கொலைத் தொழிலையுடைய வன்முறையாளரும் இல்லாததே நாடு எனச் சொல்கிறது.
  • 736ஆம் குறள் கெடுதலை யறியாது, கேடு வரினும் வளங் குறையாத நாட்டினை எல்லா நாடுகளிலும் சிறந்த நாடு என்று சொல்வர் என்கிறது.
  • 737ஆம் குறள் ஊற்றுநீர், மழைநீர் என்னும் இருவகை நீர்வளமும் வாய்ப்புடைத்தாக அமைந்த மலையும் ஆறும் வலிமையான அரணும் நாட்டிற்கு உறுப்புக்களாம் எனச் சொல்கிறது.
  • 738ஆம் குறள் நோயில்லாமை, செல்வமுடைமை, விளைவுடைமை, இன்பம் உடைமை, காவலுடைமை இவை ஐந்தும் நாட்டிற்கு அழகு என்பர் என்கிறது.
  • 739ஆம் குறள் தேடவேண்டாமல் வளம் உடைத்தாயிருப்பது நாடு என்பர்; பிற நாடுகளை எதிர்பார்த்து வளம் தரும் நாடு நாடல்ல எனக் கூறுகிறது.
  • 740ஆவது குறள் மேலே சொல்லப்பட்ட வளங்களெல்லாம் அமைந்தபோதிலும் பயனில்லை நல்லரசு அமையாத நாட்டிற்கு என்கிறது.

 

நாடு அதிகாரச் சிறப்பியல்புகள்

நாடு மக்களின் நலனுக்குக்காகத்தான் உள்ளது என்பதை நன்குணர்ந்தவராதலால், வள்ளுவர், இவ்வதிகாரத்தில், நாட்டு இயல்பைக் கூறினாராயினும் குடிகளைப் பற்றியும் கூறாமலில்லை. ஆளப்படுவன குடிகளே அன்றி நாடன்று. இவ்வதிகாரத்து முதற் குறளில், தள்ளா விளையுளும் தக்காரும் தாழ்விலாச் செல்வரும் சேர்வது நாடு (731) என்றது நாட்டுக்குக் குடிகள் இன்றியமையாதன என்பதை வற்புறுத்துகிறது.

இருபுனலும் வாய்ந்த மலையும் வருபுனலும் வல்லரணும் நாட்டிற்கு உறுப்பு (737) என்ற பாடல் நாட்டிற்குத் தேவையான இயற்கை வளங்களை அழகுற விளக்குகிறது. ஊற்றுநீரும் மழைநீரும் ஓங்கி உயர்ந்த வளமான மலையும் அதிலிருந்து வழிந்தோடும் ஆற்றுநீரும் வலிமையான அரண்களும் கொண்டதே நல்ல நாடு என்கிறது பாடல். இது கூறும் நீர்வளமும் காடுகள் நிறைந்த மலைவளமும் ஆறுகளும் இயற்கை அரண்களாக அமைந்த காட்சி நம் கண்முன் தோன்றி இன்பமூட்டுகிறது. அத்தகையதொரு நாட்டின் சூழ்நிலையில் மனிதர்கள் மட்டுமல்ல நீர்வாழ்வன நிலவாழ்வன ஊர்வன மற்றும் பறப்பன என அனைத்து உயிரினங்களும் நலமுடன் வாழும் ஒரு சிறந்த உயிர்ச்சூழல் அமைவு காட்டப்பட்டது.

நாடென்ப நாடா வளத்தன நாடல்ல நாட வளந்தரும் நாடு (739) என்று தன்னிறைவு பெற்ற நாடுதான் நாடு என்று நாட்டிற்கு வரையறை செய்கிறார் வள்ளுவர். நாடு என்பதற்கு வரையறை மட்டுமன்றி இப்பாடல் உலகப் பொருளியல் எவ்விதம் இயங்கவேண்டும் என்பதையும் கோடிட்டுக் காட்டுவதாம்.

இயற்கையோ செயற்கையோ எந்த வளங்கள் எவ்வளவு இருந்தாலும் அவற்றையெல்லாம் முறையாக பயன்படுத்ததற்குரிய அரசமைப்பு இல்லையென்றால் அனைத்து வளங்களும் வீண்தான் என்கிறது ஆங்கமைவு எய்தியக் கண்ணும் பயம்இன்றே வேந்தமைவு இல்லாத நாடு (740) என்ற இவ்வதிகாரத்து இறுதிக் குறள். இது எக்காலத்துக்கும் பொருந்துவதான வள்ளுவரின் தெளிவான பார்வையைச் சொல்கிறது.



__________________
Page 1 of 1  sorted by
 
Quick Reply

Please log in to post quick replies.



Create your own FREE Forum
Report Abuse
Powered by ActiveBoard