Devapriyaji - True History Analaysed

Members Login
Username 
 
Password 
    Remember Me  
Post Info TOPIC: 086 இகல் அதிகாரப் பாடல்களின் சாரம்


Guru

Status: Offline
Posts: 7468
Date:
086 இகல் அதிகாரப் பாடல்களின் சாரம்
Permalink  
 


அதிகார விளக்கம் 
இகல் 
மாறுபாட்டால் உண்டாகும் பகையுணர்வு.
குறள் திறன்-0851 குறள் திறன்-0852 குறள் திறன்-0853 குறள் திறன்-0854 குறள் திறன்-0855
குறள் திறன்-0856 குறள் திறன்-0857 குறள் திறன்-0858 குறள் திறன்-0859 குறள் திறன்-0860

openQuotes.jpgஒருவரை ஒருவர் பகைத்தற்குத் தொடக்கமாக, மனம் மாறுபடுதல். முதலில் மனத்தில் தோன்றும் வெறுப்புணர்ச்சி, கருத்து மாறுபாட்டுணர்ச்சிகளே 'இகல்' எனப்படும். மனத்தினுள் தழல்போல் கிடந்து கொதிக்கும் இதுவே பகைத்தீயாய்ப் பிறகு கொழுந்துவிட்டெரியுமாதலால் 'இகல்' தவிர்க என்பது இது.
- தமிழண்ணல்

 

எல்லா உயிர்களுக்கும் இகல்தான் வெறுப்பு, பிரிவு, மனக்குறை போன்ற பண்பற்ற குணங்களை வளர்ப்பது. இகல் என்பது இருவர் தம்முள் மனவேறுபாடு கொண்டு வலிமை கெடுதற்கு ஏதுவாய மாறுபாடு. மாறுபாட்டிற்குக் காரணமான வெறுப்பு எண்ணத்தளவில் நிற்பதாகும். இகலைத் தொழுநோய் போன்ற கொடிய நோய் (எவ்வநோய்) என வள்ளுவர் குறிக்கிறார். பகை, மாறுபாடு, வெறுப்பு, குரோதம், சண்டை என்பன இகல் என்னும் சொல்லில் அடங்கும். இகல்‌ என்னும்‌ அதிகாரப்பெயர்‌ இவ்வதிகாரத்துள்‌ வரும்‌ எல்லாப்‌ பாடல்களிலும்‌ பயின்றுவருகின்றது. மாறுபடுதலையும் மாறுபாட்டின்வழி சண்டையிடுதலையும் தவிர்க்கும்படி அறிவுறுத்துகின்றது இவ்வதிகாரம்.

இகல்

எல்லா உயிர்களுக்கிடையேயும் இகல் உண்டாகும். மனவேற்றுமை இகல் எனப்படும். மாந்தர் ஊடாடும் இடங்களில் எல்லாம் -குடும்பம், கல்விக்கூடம், பணியிடம் போன்றவற்றில்- இகல் முளைக்கும். மனித உறவுகளுக்கிடையே பொருளாசையாலும், கருத்துமாற்றத்தாலும் ஏற்படும் உராய்வுகள் இகலாக மாறும். அது வளரும்போது பகைமை உருவாகிறது. தாக்குவோனுக்கும் தற்காப்போனுக்கும் பொதுவான மாறுபாட்டுக் குணமிது. கூடிவாழ இயலாமையைச் சொல்கிறது. இகல் மாறுபாட்டினை விளைக்கும் நோய் எனக் குறிக்கப் பெறுவதால் வள்ளுவர் இகல் காரணமாக விளையும் காரியம் மாறுபாடு என்கிறார். இருவர் தம்முள் மாறுபட்டு ஒருவரோடு ஒருவர் போரிட்டு வலி அழிந்து போவதை வள்ளுவர் விரும்பவில்லை என்பதை இவ்வதிகாரப் பாடல்கள் தெரிவிக்கின்றன.

'உலகத்தில் நாடுகளும் குடும்பங்களும் பிரிந்து மாறுபட்டு நிற்பதற்கெல்லாம் அடிப்படைக் காரணம் ஒற்றுமைப் பகுதியைக் காணாமல், வேற்றுமைப் பகுதியைக் கண்டு கண்டு அதை வளர்ப்பதையே கலையாகப் போற்றுவதாகும்' என்பார் மு வரதராசன். மற்றவர்களோடு மாறுபட்டு நிற்பதனால் மேம்பாடு உண்டாகும் என்றும், அந்த மேம்பாடே இனியது, என்றும் ஒருவன் கருதி மாறுபாட்டை வளர்த்து வரலாம்; அவனுடைய வாழ்க்கை தவறுவதும் அடியோடு அழிவதும் விரைவில் நிகழ்ந்துவிடும்: வன்மம் பாராட்டல் ஒரு பெருநோய். இது குணமாகும்போதுதான் புகழ் வரும். இது துன்பங்களில் துன்பம் ஆனது. வெறுப்பு துன்பங்களுக்கு இட்டுச் செல்லும். இந்தத் துன்பம் நீங்கினால் இன்பத்தில் பெரிய இன்பம் உண்டாகும். நட்பு நன்மைக்கு இட்டுச் செல்லும். இகலால் வலிமை கெடும்.

மற்றவர்கள் நம்மேல் இகல் கொண்டால் நாம் என்ன செய்ய வேண்டும் என்பதற்கும் வழி சொல்லப்படுகிறது. தம்மோடு சேராமையை விரும்பி ஒருவன் வெறுப்பனவற்றைச் செய்வானாயினும், அவனோடு மாறுபாடு கொண்டு அவனுக்குத் துன்பங்கள் செய்யாதிருத்தல் உயர்ந்தது. மாறுபாட்டுக்கு எதிரே மாறுபாடே காட்டி நிற்காமல் இயைந்து நடப்பதே நன்மையாகும்; அதைப் பொருட்படுத்தி வெல்லக் கருதினால் கேடு மிகுந்து வரும். மாறுபட்டு நடப்பதால் துன்பம் எல்லாம் உண்டாகும்; நட்புக்கொண்டு வாழ்வதனால் நல்ல இன்ப வாழ்வு என்னும் பெருமையான நிலை ஏற்படும்: இகல் உண்டாகும் இடத்திலேயே நாணல்போல் வளைந்து கொடுப்பது அதாவது விட்டுக்கொடுத்துப் போவது, நட்புணர்வை ஏற்படுத்தி பகையை வளர்த்துக் கொள்ளாது இருக்கச்செய்து பல நன்மைகளையும் விளைவிக்கும். இது பகையைத் தணியச் செய்து, இருவருமே வெற்றி கொண்ட எண்ணத்துடன், அமைதிகாக்கப் பிரிந்து செல்லச் செய்யும். இந்த நிலையை எய்தச் செய்வாரைச் சாய்ந்தொழுக வல்லார் என அழைக்கிறார் வள்ளுவர். இகலை மிகலூக்கினால் அதாவது மிகுதிப்படுத்தினால் அது கேட்டைத்தான் பெரிதாக விளைவிக்கும்.

இருவர் தம்முள் மாறுபட்டுப் போர் செய்வாராயின் வெல்வார், தோற்பார் ஆகிய இருவருக்கும் வலி தொலைதலும் பொருட்கேடும், அழிவும் ஏற்படுவது திண்ணமாதலின் இகலைத் தவிர்த்தலே அறிவுடைமை ஆகும். இகல் இல்லாமை ஒருவனது ஆக்கத்திற்கு வழிவகுக்கும்; கேடு செய்து கொள்ளுமாறிருந்தால் அவன் மாறுபாட்டுணர்வில் முனைந்து நிற்பான். மாறுபடுதலினாலே ஒருவனுக்குத் தீயவையெல்லாம் உண்டாகும். அதற்கு எதிரான நட்பினால் பெருமித நிலை ஏற்படும். பிறரோடு பகையை விலக்கினால் நட்பு விளைவிக்கும் இன்பங்களும் உண்டாகும்.

இகல் அதிகாரப் பாடல்களின் சாரம்

 

  • 851ஆம் குறள் உயிர்களுக்குள் பிரிவினை என்னும் தீய பண்பைப் பரப்பும் நோயை இகல் என்று சொல்வர் என்கிறது.
  • 852ஆம் குறள் தன்னோடு வேறுபடும் நோக்கத்தில் ஒருவன் வெறுப்பன செய்தாலும் மாறுபாடு விளையாமை கருதி அவனுக்குத் துன்பம் செய்யாதிருத்தல் உயர்ந்தது எனச் சொல்கிறது.
  • 853ஆம் குறள் மாறுபாடு என்று சொல்லப்படுகின்ற கொடிய துன்பத்தைச் செய்யும் நோயை ஒருவன் மனத்தினின்றும் நீக்கிவிட்டால் அது தவறாமல் அவனுக்கு அழிவற்ற உள்ளொளி உண்டாக்கும் எனக் கூறுகிறது.
  • 854ஆம் குறள் துன்பங்கள் எல்லாவற்றிலும் மிக்க துன்பமாகிய மாறுபாடு என்று சொல்லப்படுவது கெட்டால் அது இன்பங்கள் எல்லாவற்றினும் மிக்க இன்பத்தைத் தரும் என்கிறது.
  • 855ஆம் குறள் மாறுபாட்டுக்கு எதிர்த்து நிற்காமல் வளைந்துகொடுக்கும் ஆற்றல் படைத்தவரை இகலுணர்வில் மிகுமாறு தூண்ட யாரால் இயலும் எனச் சொல்கிறது.
  • 856ஆம் குறள் மாறுபாட்டின்கண் முனைந்து நிற்றல் இனிதென்று கூறுபவனது வாழ்க்கை சிதைதலும் முற்றிலும் அழிந்து போய்விடுதலும் விரைவில் உண்டாகும் என்கிறது.
  • 857ஆம் குறள் மாறுபாட்டை விரும்பும் கொடிய அறிவினர் மிகுதலைப் பொருந்துவதால் உண்மைப் பொருளைக் காணமாட்டார் எனச் சொல்கிறது.
  • 858ஆம் குறள் மாறுபாட்டுக்கு எதிராது விலகிப்போதல் உயர்வுதரும்; இகலை மிகுதியாக மேற்கொண்டால் கேடும் அவனிடத்து வருவதில் முனையும் என்கிறது.
  • 859ஆம் குறள் தனக்கு உயர்வுண்டாகும்போது மாறுபாட்டைப் பாராட்டமாட்டான்; தனக்குக் கேடு செய்து கொள்ளுமாறிருந்தால் மாறுபாட்டுணர்வில் முனைந்து நிற்பான் என்கிறது.
  • 860ஆவது குறள் மாறுபாட்டினாலே எல்லாத் துன்பமும் உண்டாகும்; முகமலர்ந்து நட்புடன் ஒழுகினால் மிகுந்த நன்மை என்னும் பெருமிதம் உண்டாகும் என்கிறது.

 

இகல் அதிகாரச் சிறப்பியல்புகள்

மற்றவர்கள் நம்மேல் இகல் கொண்டால் நாம் என்ன செய்வது? என்ற கேள்விக்குப் பதிலிறுக்குமாறு இகலெதிர் சாய்ந்தொழுக வல்லாரை யாரே மிகலூக்கும் தன்மை யவர்(855) என்ற பாடல் அமைந்துள்ளது. இகலை எதிர்த்து நிற்காது ஒதுங்கிப் போகச் சொல்கிறது இது. பகையைத் தணிக்கச் செய்யும் முயற்சியாகக் கூறப்படுவது.

சிலருக்கு இகலை எதிர்கொள்வதற்கு இகல் வழிதான் சிறந்தது என்பது கருத்து. இன்னும் சிலர் மிகல் அதாவது தன்னோடு மாறுபடுபவனை எதிர்த்து அவனினும் மிகுதியாக நிற்றலே இனியது என்று எண்ணுவார்கள். ஆனால் அவர்கள் அறியாதது பொருட்கேடும் உயிர்க்கேடும் பின்னாலேயே நெருங்கி வந்துகொண்டிருக்கிறது என்பது. இகலின் மிகல்இனிது என்பவன் வாழ்க்கை தவலும் கெடலும் நணித்து (856) என்ற பாடலும் அக்கருத்துக் கொண்டிருப்பவன் மிகவும் கேடான விளைவுகளையே எதிர்கொள்வான் எனச் சொல்லிப் பகையைத் தணியச் செய்ய அறிவுறுத்துகிறது.

இகலானாம் இன்னாத எல்லாம் நகலானாம் நன்னயம் என்னும் செருக்கு (860) என்ற பாடல் இகலால் எல்லாத் துன்பங்களும் வந்து சேரும்; முகமலர்ந்து சிரித்து பகையை எதிர்கொண்டால் பெருஞ்செல்வத்துடன் பெருமிதமாக நடக்கும் நிலை வந்து சேரும் என்கிறது. இகலுக்கு எதிர்ச் சொல்லாக நட்பு என்னும் பொருள்படும்படியான நகல் என்ற சொல் ஆளப்பட்டது நோக்கத்தக்கது.



__________________
Page 1 of 1  sorted by
 
Quick Reply

Please log in to post quick replies.



Create your own FREE Forum
Report Abuse
Powered by ActiveBoard