Devapriyaji - True History Analaysed

Members Login
Username 
 
Password 
    Remember Me  
Post Info TOPIC: 090 பெரியாரைப் பிழையாமை அதிகாரப் பாடல்களின் சாரம்


Guru

Status: Offline
Posts: 7468
Date:
090 பெரியாரைப் பிழையாமை அதிகாரப் பாடல்களின் சாரம்
Permalink  
 


அதிகார விளக்கம் 
பெரியாரைப் பிழையாமை 
ஆற்றல்மிக்காரைப் பகைக்காதிருத்தல்.
குறள் திறன்-0891 குறள் திறன்-0892 குறள் திறன்-0893 குறள் திறன்-0894 குறள் திறன்-0895
குறள் திறன்-0896 குறள் திறன்-0897 குறள் திறன்-0898 குறள் திறன்-0899 குறள் திறன்-0900

openQuotes.jpgஅறிவு ஆற்றல் பண்பு நிறைந்த உயர்ந்தோர்க்குக் குற்றம் செய்யாமல் இருத்தல். படை பொருள் முதலியவற்றால் சிறந்த அரசரும், அறிவு ஒழுக்கங்களால் நிறைந்த பெரியோரும் என உயர்ந்தோர் இருவகையினர். .. இருதிறத்தாருக்கும் குற்றம் செய்யாதிருத்தலைப்பற்றி இந்த அதிகாரத்தில் கூறுகிறார்.
- ஜி வரதராஜன்

 

பெரியார் என்ற சொல் இங்கு மிக வலிமை கொண்ட ஆட்சித்தலைவனையும் அதன் அங்கங்களையும் பேராற்றல் உடைய அறிஞர்களையும் குறிக்கும். அவர்களுடன் மோதல் போக்கு கொண்டால் அழிவு உறுதி என்கிறது அதிகாரப் பாடல்கள். இப்பெரியார்களைப் பிழைத்தால் துன்பம் நேரும் எனச் சொல்லி நம்மைப் பாதுகாத்துக் கொள்ளச் சொல்கின்றன அவை. பெரியார்பகை மற்றப் பகையினும் கொடியதாதலால், அது உட்பகை போன்ற பிற பகைகள் கூறும் அதிகாரங்களின் பின் வைக்கப்பட்டது.

பெரியாரைப் பிழையாமை

பெரியாரின் ஆற்றலைச் சொல்லி அவரைப் பிழைக்க வேண்டாம் எனக் கூறப்படுவதால், பெரியார் நல்லவராக அமைவராவார். நற்பண்புகள் நிறைந்தவர்களாக, நன்மை நாடிக் கடைப்பிடிப்பவராக இவரைக் கொள்ளலாம். அவரை எதிர்த்தால் துன்பம் வரும் என்பது சொல்லப்படுகிறது.

பெரியார் யார்? நாட்டுத் தலைவன் (அல்லது அரசுஅங்கங்கள்), ஆற்றல்பல கொண்ட அறிஞர் இவர்களைப் பெரியார் எனச் சொல்கிறது இவ்வதிகாரம். இறையாண்மை (sovereign power)யை எதிர்க்கப்படுவதும், தற்சிந்தனையாற்றலுடைய அறிஞர்களை ஆட்சியாளர் பகைப்பதும் பேசப்படுகின்றன.
பெரியார் இவ்வதிகாரத்தில், ஆற்றுபவர், வெந்துப்பின் வேந்து, குன்றன்னார், தகைமாண்ட தக்கார், ஏந்திய கொள்கையார், சிறந்தமைந்த சீரார் என்னும்‌ தொடர்ப்‌ பெயர்களால்‌ குறிப்பிடப்படுகிறார்‌.
உலகில் ஆட்சியில் இருப்பவர்கள் அதிகாரம் பலம் மிக்கவர்களாக இருக்கின்றார்கள். அரசாட்சி மக்கள் நலனுக்காக உண்டாவது. அதை இகழ்ந்து பிழை செய்வதால் வரும் இடரும் அழிவும் தாங்க முடியாதனவாக இருக்கும். ஆகையால் தற்காப்புத் தேடுவார் செய்யும் காவல் முறைகளில் தலையானது எது என்றால், ஆற்றல் உடையவர்களின் ஆற்றலை மதித்து நடப்பதே ஆகும். மீறி நடந்தால் ஆள்வோரால் நீங்காத துன்பம் வரும் என அரசாட்சியின் ஆற்றல் கூறப்படுகிறது. 'அடல் வேண்டின் ஆற்றுபவர்' (893), 'வெந்துப்பின் வேந்து' (895) குன்றன்னார்..நிலத்து (898) போன்ற தொடர்கள் நாட்டுத் தலைவனையே குறிப்பது தெளிவு. இத்தகு பண்பு விளக்கங்கட்கு மேல் சில செயல் விளக்கமும் இவர்க்குப் பொருந்துகின்றது. 'ஆற்றுவார்- ஆற்றுபவர்' (891, 893) என்பது அவற்றுள் ஒன்று.
அடுத்து அறிவிலும் திறமையிலும் ஆற்றலிலும் தன்னலம் இல்லாமல் பொதுத்தொண்டு செய்ய முற்பட்ட அறிஞர் பெருமக்கள். 'தகைமாண்ட தக்கார்' (897), 'ஏந்திய கொள்கையார்' (899), 'சிறந்தமைந்த சீரார்' (900) என்ற தொடர்கள் இவ்வறிஞர்களையே குறிப்பனவாகவே தோன்றும். ஏந்திய கொள்கையர் சீறின் வேந்தனும் தன் சிறப்பையிழந்து கெடுவான் எனக் கூறப்படுவதால் பல்வகைத் திறம் பெற்ற அறிஞரின் ஆற்றலுக்கு எதிர் நிற்க மாட்டாது அரசு என்பது கருத்தாதல் வேண்டும். இவர்களுக்கு ஆற்றல் மிகுதி; மக்களின் நல்லெண்ணமும் அவர்களின் சார்பிலேயே திரளும். எப்பொழுதெல்லாம் அரசு அறம் பிறழ்ந்து ஆட்சி செய்கின்றதோ அப்பொழுதெல்லாம் இவர்கள் எழுச்சி கொண்டு அரசைக் கண்டிப்பர். ஆகையால் அவர்கள் சீறி எழும்வகையில் அரசு தவறாக நடந்து கொள்ளக்கூடாது.
இவ்வாறாக அரசிடம் பிழைக்கக் கூடாது என்று சொல்லும் அதே வேளையில் அரசும் தவறான பாதையில் சென்றால் பெரியார் வீறுகொண்டு எழுந்து வருவர் என்பதும் சொல்லப்படுகிறது. அரசை மற்றவர்கள் பிழையாமையும், பெரியாரை அரசு பிழையாமையும், பெரியாரைப் பிழையாமை என்ற அதிகாரப் பெயரில் தொகுத்துக் கூறப்பட்டது.

பெரியவர்களைப் புறக்கணித்து கலந்தெண்ணாமல் செய்தல், அவர்களுக்குத் துன்பம் தருதல், அவர்களைச் சினப்படுத்துதல், செல்வச் செருக்கால் அவர்களைப் பகைத்துக் கொள்ளல், அவர்களைக் குறைவாக மதித்தல், அறிவுடையாரைப் பகைத்துக்கொள்ளல், நுண்ணறிவாளர் சீறுமளவு நடந்து கொள்ளுதல் இவை பெரியாரைப் பிழைக்கும் செயல்களாகக் கருதப்படுவன.

 

பெரியாரைப் பிழையாமை அதிகாரப் பாடல்களின் சாரம்

 

  • 891ஆம் குறள் மேற்கொண்ட செயல்களை முடிக்கும் திறமையை இகழாதிருத்தல் தமக்குத் தீங்கு வராமல் காப்பார் செய்யும் காவல்கள் எல்லாவற்றினும் முதன்மையானது என்கிறது.
  • 892ஆம் குறள் திறமைமிக்கவர்களை விரும்பாது இகழ்ந்து நடந்தால் அவ்வொழுக்கம் பெரியாராலும் பேணிக்கொள்ள முடியாத இடும்பையைத் தரும் எனச் சொல்கிறது.
  • 893ஆம் குறள் தான் கெட விரும்பினானாயின் பெரியாரைக் கலக்காது செய்க; விரும்பியபொழுது கொல்லவல்ல அவரிடத்துக் குற்றம் செய்க எனக் கூறுகிறது.
  • 894ஆம் குறள் வலியில்லாதார் வலியுடையாரைச் சீண்டிப் பார்த்தல் கூற்றுவனைக் கூற்றுவனைக் கைகாட்டி அழைப்பது போலாகும் என்கிறது.
  • 895ஆம் குறள் விரும்பத்தக்க வலிமை மிக்க அரசால் சினக்கப்பட்டவர் எங்கே சென்றாலும் எக்காலத்தும் அவர் வாழ முடியாதவராவார் எனச் சொல்கிறது.
  • 896ஆம் குறள் தீயினால் சுடப்பட்டாலும் தப்பித்துப் பிழைக்கலாம் பெரியாரிடத்துத் தீமை செய்து நடப்பவர் பிழைத்தலில்லை என்கிறது.
  • 897ஆம் குறள் பெருமைகளால் மாட்சிமைப்பட்ட பெரியவர் சினந்தால் பலவகைச் சிறப்புடைய வாழ்க்கையும் பெருஞ் செல்வமும் இருந்து என்ன ஆகும்? எனச் சொல்கிறது.
  • 898ஆம் குறள் மலைபோன்ற வலியுடையாரைக் குறைவாக எண்ணினால், இவ்வுலகில் நிலைத்து இருப்பார்போல் உள்ளவரும் தம் குடும்பத்தோடு அழிவர் என்கிறது.
  • 899ஆம் குறள் உயர்ந்த கொள்கைகளை உடையவர் சினந்தால் ஆட்சித்தலைவனும் தம் ஆட்சியின் நடுவே அரசாட்சியை இழந்து அழிவான் என்கிறது.
  • 900ஆவது சிறப்புற்றுப் பொருந்திய பெருமையை யுடையவர் சீறினால் அளவுகடந்த துணைகளை உடையார் ஆயினும் தப்பிப் பிழைக்க முடியாது என்கிறது.

 

பெரியாரைப் பிழையாமை அதிகாரச் சிறப்பியல்புகள்

ஏந்திய கொள்கையார் சீறின் இடைமுரிந்து வேந்தனும் வேந்து கெடும் (899) என்ற குறள் கொள்கைப் பிடிப்புள்ள பெரியார்கள் சினம் கொள்ளும்படி அரசு நடந்தால் அவனுடைய ஆட்சியே பறிபோகும்படி ஆகிவிடும் என்கிறது. ஆட்சியை இழக்கச் செய்யும் அளவு ஆற்றல் மிக்கவர்களாக இப்பெரியவர்கள் உள்ளனர் என்பது உளம் கொளத்தக்கது.

ஆட்சியாளன் அளவுகடந்து துணைகளைப் பெற்றிருந்தாலும் அறம் பிழந்து ஆட்சி செலுத்தினால் எல்லா வகையிலும் சிறந்த பெருமை கொண்ட அறிஞரானவர் மக்களின் நல்லெண்ணத்தைத் திரட்டி ஒன்று சேர்த்து அவனைத் தப்பவிடாமல் செய்வார் என்னும் கருத்தமைந்த பாடல் இறந்துஅமைந்த சார்புஉடையர் ஆயினும் உய்யார் சிறந்துஅமைந்த சீரார் செறின் என்பது. கற்றறிந்தோர் சினம் கொண்டால், முறை தவறிய ஆட்சி நடாத்தும் கொடுங்கோலன் உய்யமுடியாது என்பது தெளிவாகச் சொல்லப்படுகிறது இக்குறளில்.



__________________
Page 1 of 1  sorted by
 
Quick Reply

Please log in to post quick replies.



Create your own FREE Forum
Report Abuse
Powered by ActiveBoard