Devapriyaji - True History Analaysed

Members Login
Username 
 
Password 
    Remember Me  
Post Info TOPIC: 112 நலம்புனைந்துரைத்தல் அதிகாரப் பாடல்களின் சாரம்


Guru

Status: Offline
Posts: 7468
Date:
112 நலம்புனைந்துரைத்தல் அதிகாரப் பாடல்களின் சாரம்
Permalink  
 


அதிகார விளக்கம் 
நலம்புனைந்துரைத்தல் 
காதலியின் முகம்போல் ஒளிவிட வல்லதா மதி?
குறள் திறன்-1111 குறள் திறன்-1112 குறள் திறன்-1113 குறள் திறன்-1114 குறள் திறன்-1101
குறள் திறன்-1116 குறள் திறன்-1117 குறள் திறன்-1118 குறள் திறன்-1119 குறள் திறன்-1120

openQuotes.jpgஅவளுடைய வடிவழகு அவனுடைய மனத்தில் ஆழப்பதிந்து விட்டது. அதன் சிறப்பைப் பலவாறு அவன் போற்றிப் பாராட்டுகிறான். அவளுடைய உடல் உறுப்புகளின் எழிலையும் ஏற்றத்தையும், மென்மையையும் மேன்மையையும் நேரில் தலைவன் கண்டு மகிழ்ந்தான். தன் காதலியின் அழகு எல்லையற்றது என்று அவன் உணர்ந்தான். அதனால், அதை வியந்து பாராட்டுகிறான்.
- க த திருநாவுக்கரசு

 

பெண்ணின் அழகைக் கற்பனை கலந்து மிகைப்படுத்திப் பேசுவது நலம் புனைந்துரைத்தலாகும். புணர்ச்சியின்பம் பெற்றதால் அளவில்லா மகிழ்ச்சியடைந்த தலைவனுக்குத், தான் நெருக்கமாக உணர்ந்த, காதலுக்குரியவளின் உறுப்பு நலன்கள் அவனது உள்ளத்தில் மேலோங்கி நிற்கின்றன. உணர்ச்சிப் பெருக்கோடு, தன் நெஞ்சோடு பேசுவது போலவும், மலர், நிலவு இவற்றை விளித்து அவற்றுடன் விளையாட்டாக உரையாடுவது போலவும், அவளது அழகைக் கொண்டாடுகிறான்.

நலம்புனைந்துரைத்தல்

கற்பனைஉரை என்று இன்று நாம் புரிந்து கொள்வதே புனைந்துரைத்தல் ஆகும். ஒரு பொருளை மிகைபடுத்திச் சொல்வதை 'புனைந்துரைத்தல்' என்று கூறுவது இலக்கிய மரபு. இங்கு காதலியின் நலன்களைத் தலைவன் புனைந்துரைத்துப் பாராட்டுவதால் நலம்புனைந்துரைத்தல் ஆயிற்று. 'புனைந்துரை' எனும் சொல், தானாகச் சில பண்புகளைக் கற்பித்துப் பாராட்டுவதை உணர்த்தும்.

தன் காதலியிடம் உள்ள நலன்களில் அவனுக்கு அவளுடைய மென்மைத் தன்மையே மிகையாகத் தாக்கம் ஏற்படுத்தியது எனத் தோன்றுகிறது. அதிகாரத்து முதல் குறளிலும் இறுதிப் பாடலிலும் அதை எண்ணி மகிழ்கிறான்.

பெண்ணின் கண் அழகு எப்போழுதுமே வள்ளுவருக்கு ஈர்ப்பு தருவது. எந்த மலரைப் பார்த்தாலும் காதலியின் கண் நினைவுக்கு வருவதாகவும் அவளது கண் வேல்வடிவம் கொண்டது என்றும் குவளை மலரையே வெட்கப்படச் செய்வது அவளது கண் அழகு என்றும் மூன்று செய்யுள்களில் கண்ணழகு பாராட்டப்படுகிறது.

பெண்ணின் இடையை இந்த அளவு உயர்வாக்கம் தந்து எந்தக் கவிஞரும் பாடியதில்லை என்னும் அளவு சிற்றிடையைப் புகழ்கிறது ஒரு பாடல்.

அவளது முக அழகை நிலவுக்கு ஒப்பிட்டுத் திங்களினும் காதலியின் முகம் ஒளிவீசக் கூடியது என்ற பொருளில் மூன்று கவிதைகள் பாடப்பெற்றுள்ளன.

பெண்ணின் நிறம், சிரிப்பு, நறுமணம், தோள்வனப்பு இவற்றைப் பற்றியும் பேசுகிறது இவ்வதிகாரம்.

ஒரு பெண்ணுக்குப் புற அழகுடன் அக அழகும் சேர்ந்திருப்பதுதான் விரும்பத்தக்கது என்று வள்ளுவர் கருதுவதால் காதலி கொண்ட நாணமே அவளுக்குத் திங்களைவிட ஒளிவீச்க்கூடிய முகப் பொலிவு தருகிறது என்ற பொருளில் ஒரு பாடலை அமைத்துள்ளார்.

நலம்புனைந்துரைத்தல் அதிகாரப் பாடல்களின் சாரம்:

 

  • 1111 ஆம்குறள் எல்லா மலரினும் மெல்லிய இயல்புடையவள் என் காதலி என்று கூறுவது.
  • 1112 ஆம்குறள் எந்த மலரைப் பார்த்தாலும் காதலியின் கண்ணே அவனது மனதில் தோன்றுகிறது என்கிறது.
  • 1113 ஆம்குறள் அவளது நிறம், சிரிப்பு, நறுமணம், கண்வடிவம், தோள்வனப்பு பாராட்டியது.
  • 1114 ஆம்குறள் குவளை மலரை மிஞ்சியது தன் காதலியின் கண் அழகு என்று அவன் பெருமைப்படுவதைச் சொல்வது.
  • 1115 ஆம்குறள் தனது காதலியின் இடை ஒடிந்து விழும் அளவு சிறுத்து அழகு தருவது என்பதைத் தெரிவிப்பது.
  • 1116 ஆம்குறள் விண்மீன்களையும் சிமிட்டவைத்த தலைவியின் முகநலம் புனைந்துரைக்கும் கவிதை.
  • 1117 ஆம்குறள் என் காதலிக்குக் களங்கமற்ற முகம் என்று முகநலம் புனைந்துரைப்பது.
  • 1118 ஆம்குறள் என் காதலியின் முகத்தின் ஒளிதிகழ்வுக்குத் திங்கள்கூட இணையில்லை என்று அவன் சொல்வது.
  • 1119 ஆம்குறள் காதலி பூண்ட நாண் நலமே அவளுக்குத் திங்கள்போல் ஒளி தருகிறது எனப் பாடுகிறது.
  • 1120 ஆவதுகுறள் காதலியின் அடி மென்மையினும் மென்மையானது என்பதாகக் காதலன் போற்றுவது.

 

நலம்புனைந்துரைத்தல் அதிகாரச் சிறப்பியல்புகள்:

காமத்துப் பால் முழுவதும் கவிதை நயம் மிகுந்ததே. நலம்புனைந்துரைத்தல் அதிகாரத்துப் பாடல்களில் கவிதை நயத்துடன் கற்பனை வீச்சு மேம்பட்டதாக உள்ளது.

மதியும் மடந்தை முகனும் அறியா பதியின் கலங்கிய மீன் என்ற கற்பனை எப்பொழுதும் படித்து மகிழத்தக்கது.

அனிச்சமலரும் அன்னத்தின் தூவியும் பெண்ணின் அடிக்கு முள்ளாகக் குத்தும் என்பதும் கற்பனை நலத்துக்கு நல்ல எடுத்துக்காட்டு.

ஒரு பூவின் காம்பின் பாரம் தாங்கமுடியாமல் பெண்ணின் இடை முறிந்தது என்னும் செய்யுள் உயர்வு நவிற்சியாய் அமைந்தாலும் படிப்போர்க்கு இன்பம் பயப்பது.

முறிமேனி முத்தம் முறுவல் வெறிநாற்றம் வேல்உண்கண் வேய்த்தோள் அவட்கு என்னும் பாடல் உருவகச் சொல்நடை ஓவியமாகத் திகழ்கிறது என்று கூறி பல்வேறு பக்கங்களில் அழகிய வருணனையாகச் சொல்ல வேண்டிய ஒரு காட்சியை உருவக நடை எத்துணைச் செறிவுடன் தருகின்றது என்பதற்கு இக்குறளே அழகிய சான்றாக ஒளிர்கிறது எனலாம் என்கிறார் இ சுந்தரமூர்த்தி.

மலர், திங்கள், தளிர், முத்து, வேல், மூங்கில் என்றவற்றைக் காதலியின் உறுப்புகளோடு ஒப்பிட்டுப் பேசியவன் அவளது நாண் நலமே நிலவினும் கூடிய முகப்பொலிவுக்குக் காரணம் என்று அவளது பண்பு நலன் ஒன்றையும் சேர்த்து இத்தொகுப்பில் கூறியது அக அழகே மேலானது என்பதைக் குறிப்பால் உணர்த்துவதாகும்.



__________________
Page 1 of 1  sorted by
 
Quick Reply

Please log in to post quick replies.



Create your own FREE Forum
Report Abuse
Powered by ActiveBoard