Devapriyaji - True History Analaysed

Members Login
Username 
 
Password 
    Remember Me  
Post Info TOPIC: 127 அவர்வயின் விதும்பல் அதிகாரப் பாடல்களின் சாரம்


Guru

Status: Offline
Posts: 7602
Date:
127 அவர்வயின் விதும்பல் அதிகாரப் பாடல்களின் சாரம்
Permalink  
 


அதிகார விளக்கம் 
அவர்வயின் விதும்பல் 
கொண்கனைக் கண்ணாரக் காணவேண்டும்.
குறள் திறன்-1261 குறள் திறன்-1262 குறள் திறன்-1263 குறள் திறன்-1264 குறள் திறன்-1265
குறள் திறன்-1266 குறள் திறன்-1267 குறள் திறன்-1268 குறள் திறன்-1269 குறள் திறன்-1270

openQuotes.jpgஅவர்வயின்விதும்பலாவது அவர் வரவின் கண்ணே துக்கம் உறுதல்; காதலர் வரவு வேட்டிருத்தல் என்றது. இவையெல்லாம் தோழிக்குக் கூறியவாகக் கொள்க. நிறையழிந்தார் அப்பொழுது காதலர் வரவிற்கு ஆசையுற்றிருப்பார் ஆதலான், அதன் பின் இது கூறப்பட்டது.
- பரிப்பெருமாள்

 

பிரிவின்கண் தொலைவு சென்ற தலைவன் திரும்பிவரும் நேரமிது. தாங்கமுடியாத துயரத்திலிருந்த தலைவிக்கு அவனை விரைவில் காண வேண்டும் அவனுடன் உறைந்திருக்க வேண்டும் என்ற ஆசை மிகுந்து காணப்படுகின்றது. அவன் வந்தால் ஊடுவேனா? தழுவிக் கொள்வேனோ? அல்லது ஒன்றாய்க் கலந்து விடுவேனோ? என வேட்கையால் பரபரப்புடன் காணப்படுகிறாள் தலைவி.

அவர்வயின் விதும்பல்

அவர்வயின் விதும்பல் என்பது 'அவரிடம் விரைவது' என்ற பொருள் தரும். இதைக் காதலி தலைவனைக் காண மனதால் விரைவது என விளக்குவர். பரிப்பெருமாள் 'அவர் வரவின் கண்ணே துக்கம் உறுதல்; காதலர் வரவு வேட்டிருத்தல்' எனப் பொருள் கூறுவார். பரிமேலழகர் உட்பட்ட சில உரையாசிரியரகள் அவர்வயின் விதும்பல் என்பதிலுள்ள அவர் என்பதைப் பன்மைச் சொல்லாகக் கொண்டு ஒருவர் மனம் ஒருவரிடத்தில் விரைவது என உரைப்பர். காதலிக்கு காம ஆசை அதிகப்பட்டு மனம் தலைவனிடம் விரைவதும், காதலனுக்குக் காம நினைவு வந்து மனம் தலைவியிடம் விரைவதும் என இவர்கள் அதிகாரத் தலைப்பை விளக்குவர். ஆனால் இவ்வதிகாரத்து பாடல்கள் அனைத்துமே காதலி கூற்றாகக் கருத இடம் உள்ளது.
நெடுந்தொலைவு சென்ற காதலன் திரும்பி வரும் காலம் நெருங்கிக் கொண்டிருக்கிறது. அவன் இன்னும் வரவில்லை; இப்பொழுது குறளின் காமத்துப்பால் கற்பியலில் இதுகாறும் நடந்தவற்றை சற்றே பின்னோக்கிக் காணலாம். பிரிவு வகையுள் ஏதோ ஒன்றை மேற்கொண்டுத் தலைவன் காதலியிடம் விடைபெற்றுச் சென்றான். இப்பிரிவு இடத்தாலும் பொழுதாலும் பெரியது. பிரிவாற்றாமை அதிகாரத்தில் பிரிவின்கண் தலைவியின் நிலையையும் அவள் எண்ணங்கள், உணர்ச்சிகள் இவை மொழியப்பட்டன. பிரிந்து போன பின்னர், படர்மெலிந்துஇரங்கல் அதிகாரம் முதலாக, இவ்வதிகாரமான அவர்வயின் விதும்பல் முடியத் தலைவியின் பிரிவுத் துன்ப நிலைகள் விரித்து உரைக்கப்பட்டன. பிரிவுக் காலத்தில் தலைவிக்கு அவனைக் காணவேண்டும் என்ற வேட்கை உளத்துள் நீண்டுகொண்டே இருந்தது. நிணந்தீயில் இட்ட நெஞ்சினளாக உருகி நின்ற பிரிவுத் துன்பநிலை முடிவுக்கு வரப்போகிறது. எப்பொழுது வேண்டுமானாலும் தலைவன் வீடு வந்து சேர்வான் என்ற காலநிலையில் இவ்வதிகாரத்து காட்சிகள் உள்ளன.
விரல்கள் தேய எண்ணிக் கொண்டிருந்த அந்த வருநாள் இதோ வரப்போகிறது; கண்களின் ஒளி மழுங்கும் வரை வழியைப் பார்த்துப் பார்த்து நிற்கவேண்டிய தேவை இனியில்லை; 'வெற்றியே விருப்பமாய் ஊக்கமே துணையாய் நம்மைப் பிரிந்து சென்ற காதலரின் வருகைக்காவே இன்னும் உயிரோடு இருக்கிறேன். அவரைக் கண்ணாரக் காண வேண்டும். வந்தபின் என் துன்பம் எல்லாம் கெட அவரைப் பருகி மகிழ்வேனாக என்று பலவாறு எண்ணிக்கொண்டு காதலனின் வரவை எதிர்கொள்ள ஆயத்தமாய் இருக்கின்றாள். காதலன் வரவை விரைந்து பார்க்கக் கிளைகள் பிடித்து மரம் ஏறி நிற்கிறது தலைவியின் மனம்.

அவர்வயின் விதும்பல் அதிகாரப் பாடல்களின் சாரம்:

 

  • 1261 ஆம்குறள் காதலர் வரும் வழிபார்த்துக் கண்களும ஒளியிழந்து பொலிவு குறைந்தன; அவர் போன நாட்களைச் சுவரில் தொட்டு எண்ணியெண்ணி விரல்கள் தேய்ந்தன என்று தலைவி கூறுவதைச் சொல்கிறது.
  • 1262 ஆம்குறள் விளங்கும் அணியணிந்த தோழீ! காதலரை இன்று மறப்பேன் ஆயின், என் அழகு கெட்டுத் தோள்களில் உள்ள அணிகலன்களும் நீங்கும் என்று தலைவி கூறுவதைச் சொல்வது.
  • 1263 ஆம்குறள் வெல்லுதற்குரிய வலிமையை விரும்பித் தம் ஊக்கத்தைத் துணையாகச் சென்றார், திரும்பி வருதலை நம்பி இன்னும் உயிரோடு உளேன் என்று தலைவி சொல்வதைக் கூறுவது.
  • 1264 ஆம்குறள் மிகுந்த காதலுடன் பிரிந்தவர் வரவை நினைந்து என் உள்ளம் மரத்தின் கிளைகள் தோறும் ஏறும் என்று சொல்லும் தலைவியின் ஆவலைக் கூறுகிறது.
  • 1265 ஆம்குறள் கணவனை என் கண்கள் நிறைவுபெறும் வகை காணவேண்டும்; கண்ட பின்பு எனது மெல்லிய தோளில் படர்ந்த பசலை நீங்கும் எனத் தலைவி சொல்வதைக் கூறுவது.
  • 1266 ஆம்குறள் கணவன் சிலநாளில் வரத்தான் போகிறான்; வரும்நாளில் துன்பம் தரும் நோய்கள் எல்லாம் தீர அவனை ஆரத் துய்ப்பேன் எனத் தலைவி சொல்வதைக் கூறுகிறது.
  • 1267 ஆம்குறள் என் கண்போன்ற காதலர் திரும்பிவரும்பொழுது ஊடுவேனோ? தழுவுவேனோ? இரண்டறக் கலந்து விடுவேனோ? என்று தலைவி பரபரப்படைவதைக் கூறுகிறது.
  • 1268 ஆம்குறள் வேந்தன் வினை செய்தலைப் புரிந்து வெல்வானாக; வீட்டில் ஒன்றாகக் கலந்து மாலைப் பொழுதில் விருந்துண்போம் எனத் தலைவி சொல்வதைக் கூறுவது.
  • 1269 ஆம்குறள் தொலைவிற் சென்ற காதலர் திரும்பிவருகின்ற நாளை எதிர்நோக்கி ஏங்குபவர்களுக்கு ஒருநாள் பலநாள் போல நெடிதாகத் தோன்றும் எனத் தலைவி வருந்துவதைக் கூறுவது.
  • 1270 ஆவதுகுறள் உள்ளம் உடைந்து சிதறியபின் அவனைப் பெற்றால் என்ன ஆகப் போகிறது? முன்னர் பெற்றதனாலும் என்ன பயன்? மெய்யுறத் தழுவிக்கொண்டாலும் என்ன ஆகிவிடும்? எனத் தலைவி துவள்வதைச் சொல்வது.

 

அவர்வயின் விதும்பல் அதிகாரச் சிறப்பியல்புகள்:

அவர்வயின் விதும்பல் என்ற இத்தொகுப்புக்கு அடுத்து வரும் அதிகாரங்கள் காதலர்கள் பிரிவுக்குப் பின் இணையும் காட்சிகளை விளக்குவன. காதலர்கள் கூடுவதற்கு முன்பாக இத்தொகுதி படிப்போர்க்கு விறுவிறுப்பு கூட்டுவதாகவும் ஆவலை உண்டாக்கும் வகையிலும் அமைந்துள்ளது.

கண்ணுக்கு எட்டாத தொலைவில் உள்ளதை நோக்க மரமேறிப் பார்த்தல் உண்டு. காதலனைப் பார்ப்பதில் பொறுமை காட்ட மாட்டாமல், திரும்பி வரும் காதலனை முதலில் காண்பவள் தானாகத்தான் இருக்க வேண்டுமென்ற எண்ணத்தில், உயர்ந்த மரத்தின்மேல் ஏறினால் தூரத்தே வருவாரைக் காணலாமென்று நினைத்து அதில் ஏறி நின்று பார்க்கிறாள் தலைவி என்று கூடிய காமம் பிரிந்தார் வரவுள்ளிக் கோடுகொடு ஏறும்என் நெஞ்சு (1264) என்ற பாடல் சொல்லும். தலைவியின் ஆவலை நன்கு வெளிப்படுத்தியது இது.

காதலனைக் கண் நிறையும்படி காண வேண்டும் என்றும் கண்டபின் அவனை அள்ளிப் பருகுவது போல் துய்த்து இதுகாறும் அனுபவித்த் துன்ப நோய்கள் தீருமாறு செய்வேன் என்று கட்டுகடங்கா தன் காதல் ஆசைகளை காண்கமன் கொண்கனைக் கண்ணாரக் கண்டபின் நீங்கும் என் மென்தோள் பசப்பு(1265), வருகமன் கொண்கன் ஒருநாள் பருகுவன் பைதல்நோய் எல்லாம் கெட (1266) என வெளிப்படுத்துகிறாள் தலைவி.

திரும்பி வரும் காதலரிடம் எப்படி நடந்துகொண்டால் உகந்ததாக இருக்கும் என்று எண்ணுகிறாள் தலைவி. அப்படி நடந்து கொள்ளலாமா? இல்லை இப்படி நடந்து கொள்ளலாமா? சே சே இவ்வாறு தான் நடக்க வேண்டும் என்று வேகமாகப் பலபட எண்ணுகிறாள். இதனை ஒரு குறள் வழி காட்சிப்படுத்துகிறார் வள்ளுவர். தலைவியின் எண்ண ஓட்டங்களை புலப்பேன்கொல் புல்லுவேன் கொல்லோ கலப்பேன்கொல் கண்அன்ன கேளிர் வரின்(1267)என்ற குறுவாக்கியங்கள் கொண்ட பாடல் வரிகள் மூலம் அதைச் சுவைபடச் சொல்கிறார்.

கூடியிருக்குப்போது பலநாள் ஒருநாள்போல் ஓடிவிடும்; பிரிந்திருக்கும்போது ஒருநாள் பலநாள்போல் நீண்டு கொண்டேயிருக்கும் என்று பொருள்படும் ஒருநாள் எழுநாள்போல் செல்லும்சேண் சென்றார் வருநாள் வைத்து ஏங்குபவர்க்கு (1269) என்ற பாடல் தலைவியின் உளநிலையை நன்கு விளக்கும்.

காதலன் குறித்த காலத்தில்தான் வருகிறான். ஆனால் அவன்வரவு நீட்டிப்பது போல் தோன்றுகிறது அவளுக்கு. அவனுக்காகக் காத்துக் காத்து சோர்வும் மன அழிவும் உள்ள நிலையில் இருக்கின்றாள் தலைவி. சலிப்பு மேலிட்ட குரலில் அவள் பெறின்என்னாம் பெற்றக்கால் என்னாம் உறின்என்னாம் உள்ளம் உடைந்துஉக்கக் கால் (1270) எனக் கூறுகின்றாள். உள்ளம் தான் உடைந்து சிதைந்து சிதறிப்போயிற்றே! இனி அவர் வந்துதான் என்ன? வராவிட்டால்தான் என்ன? அவரைக் கலந்துதான என்ன? என்று அடுக்கிக் கூறுகிறாள் தலைவி இக்கவிதையில்.



__________________
Page 1 of 1  sorted by
 
Quick Reply

Please log in to post quick replies.



Create your own FREE Forum
Report Abuse
Powered by ActiveBoard