Devapriyaji - True History Analaysed

Members Login
Username 
 
Password 
    Remember Me  
Post Info TOPIC: 133 ஊடலுவகை அதிகாரப் பாடல்களின் சாரம்


Guru

Status: Offline
Posts: 7602
Date:
133 ஊடலுவகை அதிகாரப் பாடல்களின் சாரம்
Permalink  
 


அதிகார விளக்கம் 
ஊடலுவகை 
ஊடுதல் காமத்திற்கு இன்பம்.
குறள் திறன்-1321 குறள் திறன்-1322 குறள் திறன்-1323 குறள் திறன்-1324 குறள் திறன்-1325
குறள் திறன்-1326 குறள் திறன்-1327 குறள் திறன்-1328 குறள் திறன்-1329 குறள் திறன்-1330

openQuotes.jpgஅதாவது 'ஊடலால் ஏற்படும் மகிழ்ச்சி'. ஒருவருக்கு ஒருவர் புரிந்து கொள்வதும், ஒருவர் மற்றவரை ஆழமாக அறிந்து கொள்வதும், காதலர்கள் அவற்றை அடையாளம் கண்டதால் பெறும் பேரின்பம் ஆகும். அதனால் முழுமை அடையும் உள்ளொளி பெறுகின்றனர்.
- தெ பொ மீனாட்சி சுந்தரம்

 

ஊடல் உவகை என்பது ஊடல் கொள்வதில் மகிழ்ச்சி அடைதலைக் குறிக்கும். இருவர் பூசலிடும்போது மகிழ்ச்சி எப்படி உண்டாகும்? ஊடலுக்குப் பின் கூடினால் இன்பம் மிகும் என்பதை அவர்கள் அறிந்தவர்களாதலால் ஊடலில் ஈடுபட்டு இன்பம் காண்கின்றனர். பொதுமையான ஒரு ஊடற்காட்சியில் காமம் மிகக்கூடிய தலைவன் காதலியைத் தழுவ நெருங்கும்போது அவள் அகன்று நிற்பாள். அப்பொழுது அவன் படும் ஏக்கத் துயரத்தைக் கண்டு அவள் மகிழ்வாள். பின் அவள் பொய்க்காரணம் கற்பித்து அவன்மேல் சினம் கொண்டவள்போல் நடிப்பாள். அப்பொழுது உள்ளுக்குள் நகைத்து உவகை கொள்வாள் தலைவி கொள்ளும் ஊடலைத் தீர்க்கத் தலைவன் பணிந்து இன்மொழி கூறுவான். அது தலைவிக்கு வேடிக்கையாகத் தோன்றும். ஆனால் அதை வெளிகாட்டாமல் ஊடிக்கொண்டிருப்பாள். அதுபோலவே தலைவனும் சில சமயங்களில் ஊடலைத் தொடங்கி வைப்பான். இந்த விளையாட்டு இரவு முழுவதும் நீடிக்க வேண்டும் என இருவரும் விரும்புவர்.

ஊடலுவகை

புலவியும் ஊடலும் காம இன்பத்திற்குச் சிறந்தவை எனத் தொல்காப்பியம் கூறும், அக்கருத்தின் அடிப்படையில் காமத்துப்பால் இறுதியில் புலவி, புலவி நுணுக்கம், ஊடலுவகை என்னும் மூன்றதிகாரங்களைப் படைத்தார் வள்ளுவர். இவை தலைமக்களின் நிறைந்த அன்பினை வெளிப்படுத்துவதாக அமைந்தன. புலவி என்பது பிணங்குவதின் தொடக்கநிலை அது ஊடல் என்ற அடுத்த நிலைக்குச் செல்வதையும் கூடுவதையும் அதிலே பெறும் இன்பத்தையும் காட்டுகிறது இவ்வதிகாரப் பாடல்கள். உணவிற்கு உப்பு அமைந்தாற்போல மிகாமலும் குறையாமலும் தகுந்த அளவிலே ஊடல் நடக்கும். அதற்கு அடுத்த துனி என்ற நிலைக்குச் செல்லாமல் அவர்கள் காத்துக் கொள்வர். ஊடலானது தலைவன் தலைவி ஆகிய இருவர்க்கும் உரியது என்றாலும் பெரும்பாலும் ஊடற்பூசலை அவளே தொடங்குவாள். ஊடுதலைத் தலைவனும் விரும்புவான். இதனை 'இவள் இன்னும் ஊடுவாளாக; யாம் கெஞ்சி வேண்ட, இந்த இரவு நேரம் நீள்வதாக ஊடுக' என்ற குறட்பாவில் (1329) தலைவன் சொல்வதன் மூலம் அறியலாம்.

நீண்ட இடைவெளிக்குப் பின், பிரிவிற் சென்று திரும்பியுள்ள தலைவன் இப்பொழுது படுக்கையறையில் தலைவியுடன் இருக்கிறான். அவன் காமமிகுதி கொண்டிருப்பான் என அறிந்தும் தலைவி அவனுடன் உடனே கலவாமல் அவன்மேல் பொய்யாகக் குற்றங்களைச் சொல்லி ஊடிக்கொண்டிருக்கிறாள். இதற்கு முந்தைய 'புலவி நுணுக்கம்' அதிகாரத்தில் பிறமகளிரைத் தலைவனோடு தொடர்புபடுத்தி வெளிப்படையாகத் தலைவி நிறையப் பேசினாள்; அவையனைத்தும் பொய் என்பதனை தலைவியே 'அவரிடம் ஒரு தவறும் இ்ல்லையாயினும், ஊடலால் அவருடைய பேரன்பை முழுதுமாகப் பெற முடிகிறது. அதனால்தான் ஊடுகிறேன்' என்று தன்னிலை விளக்கமாக இங்கு கூறுகிறாள். ஊடற்பூசலால் வெறுப்புற்று, காதலரது நல்லன்பு குறையவும் வாய்ப்புண்டு என்பதை தலைவி அறிந்திருந்தாலும், அச்சிறு சண்டை, இரசிக்கத்தக்கதாக உள்ளது எனவும் அவள் கூறுகிறாள். ஊடுதலைவிட மேலுலகம் இன்பம் தரவல்லதோ? என வினவும் அளவு ஊடலை இன்புற்று மகிழ்கிறாள் காதலி. தழுவவரும் காதலனை விலகிச் செல்கிறாள்; ஆயினும் அவன் தொட்டுச் சென்ற அந்தச் சிறுகணத்தில் ஊடல் கொள்வோம் என்ற அவளது மன உறுதி காமநோய்த் தாக்கத்தால் உடைந்து நொறுங்கிப் போவதாக உணர்கிறாள்.
தலைவி நிலை இப்படியிருக்க காதலன் நிலை என்ன? தழுவச் சென்ற அவனை நெருங்கவிடாமல் படுக்கையில் அவள் தள்ளிச்செல்கிறாள் என்றாலும் அச்சிறு நேரம் அவளைத் தீண்டியதுவே அவனுக்கு இன்பமே தருகிறது என்கிறான் தலைவன். உண்டது செரிமானம் ஆகும்வரை காத்திருந்து அடுத்த உணவு உண்பதுபோல் இந்த ஊடல் நீடிப்பு நல்லதுதான் செய்யப்போகிறது என்ற எண்ணம் இப்பொழுது அவனிடம் மேலிடுகிறது. அவள் என்னைத் தொடவிடாமல் தள்ளிப் போகிறாளே, இப்பொழுது நான் தோற்றேனா இல்லை அவள் தோற்றாளா? யார் தோற்றார் என்பது கூடுதலின் போது எழும் வேகத்தில் தெரிந்துகொள்வோம் என அவன் எண்ண ஓட்டம் தொடர்கின்றது. ஊடல் உணர்தலுக்குப்பின் இனிமையான அணைப்பும், அதைத் தொடர்ந்து இருவரும் கலந்து ஒருவருக்கு ஒருவர் அன்பளிப்பாகின்றனர். முடிவில் இருவருமே வென்றவர்களாகின்றனர் என்று குறள் சொல்லவில்லையானாலும் அதுதான் நடந்திருக்கும் என எளிதாக ஊகித்தறியலாம்- கூடிய வேகத்தில் அவள் வியர்த்திருக்கிறாள். போட்டியில் பங்குபெற்ற அவனும்தான் ஆவேசத்தில் உடல் வியர்த்திருக்க வேண்டும் என்பது உய்த்துணரப்படும்.
அந்த இன்ப அனுபவத்தை மீண்டும் பெற இன்னுமொருமுறை ஊடலாமா என மனதுள் நினைத்துக் கொள்கிறான். அவள் ஊடட்டும்; இரவு நீளட்டும்; நான் கெஞ்சி, கொஞ்சி மறுபடி அவள் ஊடலைத் தீர்க்கட்டும் என மகிழ்ச்சிக் குரலை மனத்துள் எழுப்புகிறான். 'காமத்திற்கு இன்பமாவது ஊடுதல்; அவ்வூடுதலுக்கு இன்பமாம் கூடுதலைப் பெறுதல்' என்பதை அறிந்தவர்களாக இருவரும் இன்ப வெள்ளத்தில் நீந்துகின்றனர்.
இவ்வாறு காமத்துப்பாலின் இறுதி அதிகாரத்தில் ஊடல் இன்பத்தையும் அதற்கு இன்பமாகும் கூடல் இன்பத்தையும் சொல்லோவியமாக வள்ளுவர் தீட்டிக் காட்டுகிறார்.

ஊடலுவகை அதிகாரப் பாடல்களின் சாரம்

 

  • 1321 ஆம்குறள் அவரிடம் ஒரு தவறு இல்லையானாலும், ஊடுதல் அவர் நம்மீது பேரன்பை விளைவிக்க வல்லது எனத் தலைவி கூறுவதைச் சொல்கிறது.
  • 1322 ஆம்குறள் ஊடலால் சிறுபொழுது தோன்றும் பூசலால், காதலரது நல்லன்பு குறையினும், உணர்ந்து மகிழத்தக்கது எனக் காதலி சொல்வதைக் கூறுகிறது.
  • 1323 ஆம்குறள் நிலத்தோடு நீர் கலந்தாற்போன்ற காதலரிடம் ஊடுதலைவிட இன்பமான மேலுலகம் உளதோ? எனத் தலைவி சொல்வதைக் கூறுகிறது.
  • 1324 ஆம்குறள் காதலரைத் தழுவிவிடாத ஊடலில் என்உள்ள உறுதியை உடைக்கும் கருவி தோன்றுகிறது எனத் தலைவி சொல்வதைக் கூறுகிறது.
  • 1325 ஆம்குறள் தவறில்லாதவரானாலும் ஊடப்பட்டாராகத் தமது காதலியின் மெல்லிய தோள்களை நீங்குதலில், அங்கேயும் ஓர் இன்பம் உண்டு எனத் தலைவன் கூறுவதைச் சொல்கிறது.
  • 1326 ஆம்குறள் உண்பதைவிட உண்டது செரித்தல் இன்பமாகும்; காமஇன்பத்திற்குப் புணர்தலைவிட ஊடுதல் நன்றாகின்றது எனச் சொல்கிறது.
  • 1327 ஆம்குறள் காதலர் இருவருள் ஊடலிலே தோற்றவர் வென்றவராவர்; அது பின்னர் கூடும்பொழுது தெரியும் எனக் கூறுகிறது.
  • 1328 ஆம்குறள் நெற்றி வேர்க்கச் செய்த புணர்ச்சியில் உண்டான இனிமையை இன்னும் ஊடிப் பெறுவோமோ? என்பதைக் கூறுகிறது.
  • 1329 ஆம்குறள் ஒளிரும் அணிகளை உடையவள் இன்னும் ஊடுவாளாக; யாம் கெஞ்சி வேண்ட, இந்த இரவு நேரம் நீள்வதாக எனத் தலைவன் கூறுவதைச் சொல்கிறது.
  • 1330 ஆம் குறள் காமத்திற்கு இன்பமாவது ஊடுதல் ஆகும்; அவ்வூடுதற்கு இன்பமாம் கூடுதலைப் பெறுதல் எனக் கூறுகிறது.

 

ஊடலுவகை அதிகாரச் சிறப்பியல்புகள்

காதல் இன்பத்தை ஊடலிலும் ஊடல் இன்பத்தைக் கூடலில் காணலாம் என்பதைச் சொல்ல வருகிறது இவ்வதிகாரப் பாடல்கள். பேரின்பம் தந்த கூடல் பேற்றிற்குக் காரணமாகிய ஊடலைப் போற்றும் ஊடல் உவகைப் பாக்கள் தலைவன், தலைவி ஆகிய இருவர் வாயினின்றும் வெளிப்படுகின்றன. ஊடலுக்கும் கூடலுக்கும் இன்பத்தில் வேறுபாடுண்டு என்று சொல்லப்பட்டாலும் சிறந்த காமத்திற்கு அவ்விரண்டும் இன்றியமையாதன என்பதை வலியுறுத்துகின்றது இவ்வதிகாரம். காமத்தின் சிறந்த கூறு புணர்ச்சியன்று; ஊடல் ஆகும்; ஊடல் புணர்வுபோல் சிறிதளவே நிற்காமல் நீண்ட நேரம் அமையவேண்டும் என்று குறள் விரும்பும். ஊடலின் உண்டாங்கோர் துன்பம் புணர்வது நீடுவது அன்றுகொல் என்று(புலவி குறள் எண்:1307 பொருள்: புணர்ச்சி நீட்டியாதோ என்று நினைத்தலால் ஊடலிலும் ஒரு துன்பம் உண்டு) என ஊடலிலும் துன்பம் உண்டு என்று முன் அதிகாரத்தில் குறள் கூறியது. ஊடலால் சிறுது வருத்தம் கொள்ள நேரிடினும் ஊடலின் முடிவு கூடலாய் அமைதலின் ஊடலால் மகிழ்ச்சியடைகின்றனர்.
ஊடல் காதலர் நெருக்கத்துக்கு வழி வகுக்கும். ஊடலால் பெறும் இன்பம் வானுலகத்திலும் கிடைக்காது; ஊடலில் தோற்பது வெற்றி பெறுவது போன்றது. இரவு நீட்டிக்கட்டும். நாங்கள் ஊடிக் கொண்டிருக்க வேண்டும் என்றவாறு சொல்லி ஊடல் உவகையில் மிதக்கின்றனர் காதலர்கள். ஊடல் காதலைக் கவர்ச்சியுடையதாக ஆக்குகிறது என்பதைச் சொல்லுகிறது இவ்வதிகாரம்.

இன்பம் மட்டுமே உள்ள உலகம் புத்தேள்நாடு அதாவது மேலுலகம் என்று தொன்மங்கள் கூறும். ஊடலில் பெறப்படும் இன்பங்கள் அங்கு கிடைக்குமா? என்று கேட்கிறது புலத்தலின் புத்தேள்நாடு உண்டோ நிலத்தொடு நீரியைந் தன்னார் அகத்து (குறள் 1323) என்ற பாடல். வானுலகை விட மகிழ்ச்சி தரக்கூடியது ஊடல் உவகை எனச் சொல்கிறது இது.

உயிர்களை இயக்குவன உணவு தேடுதலும் துணை நாடுதலும் ஆகும் இவையிரண்டையும் அளவோடு துய்த்தால் நலம் பெறலாம். உணலையும் காமத்தையும் ஒருங்கு இணைத்து யாக்கப்பட்டது உணலினும் உண்டது அறல்இனிது காமம் புணர்தலின் ஊடல் இனிது(குறள் 1326) என்ற பாடல். காதல் வேட்கை, உடற்பசி போல இயற்கையான உயிர்ப்பசியாகும்; உணவுப்பசி நீங்குவதற்கு ஓர் ஒழுங்கு வேண்டுவது போலக் காமப்பசி தீர்வதற்கும் ஓர் ஒழுங்கு வேண்டும் என்பதை வலியுறுத்துவது இப்பாடல்.

ஊடலின் போது, மனைவி உயர்ந்தவளாகிறாள்; கணவன் பணிந்து, அவள் ஊடலைத் தீர்க்கவேண்டும் என்பது தொல்காப்பியம் வகுத்த விதி. ஊடலில் தோற்றவர்தான் வென்றவர்; அந்த வெற்றியைக் கூடலின்போது கண்டுகொள்ளலாம் என்பதை உளவியல் மொழியாக ஊடலில் தோற்றவர் வென்றார் அதுமன்னும் கூடலில் காணப் படும்(குறள் 1327) என்ற பாடல் வழங்குகிறது. காமத்திற்குப் புணர்தலைவிட ஊடல் இனிதாகின்றது என்பதை உணர்ந்த காதலர், ஊடலில் உண்டாகும் வெற்றிதோல்விகளைப் பற்றி எண்ணி தோல்வியே சிறந்தது என்ற முடிவுக்கு வருகின்றனர். 'எவர் ஊடலில் தோல்வி அடைகிறாரோ அவரே வெற்றிபெற்றவர்; அதனை கூடலில் தெரிந்துகொண்டுவிடலாம்' என்று சொல்கின்றனர். காதலர் உறவில் வெற்றி தோல்வி என்பது இல்லை. ஊடலில் தோற்றவர் கூடலில் வென்றவர் என்பது இருவரும் வென்றவரே என்பதாகிறது.

ஊடல் கொள்வதற்கு அடிப்படையான காரணம் காதலர் ஒருவர்க்கொருவர் அன்பு நிறைவையுடையராதல் வேண்டும் என்ற நோக்கத்திலேயேயாம். இவ்வாற்றால், ஒருவர் மற்றவர் மீதான அன்பை நிலைநாட்டி நிலைத்த ஊடல்/கூடல் இன்பம் பெறுகின்றனர் என்பதை ஊடுதல் காமத்திற்கு இன்பம் அதற்குஇன்பம் கூடி முயங்கப் பெறின் (குறள் 1330) என்ற பாடல் உணர்த்துகின்றது.
இக்குறள் 'காமத்திற்கு இன்பம்' என்று குறிப்பிடுவதால் காமம் என்ற சொல்லுக்கும் இன்பம் என்ற சொல்லுக்கும் காரண காரியமான வேறுபாடுள்ளதை அறியலாம். காமம் என்பது இன்ப அன்பு; அக்காமத்தின் பயன் இன்பம் எனத் தெளிவுபடுத்துகின்றது இப்பாடல்.



__________________
Page 1 of 1  sorted by
 
Quick Reply

Please log in to post quick replies.



Create your own FREE Forum
Report Abuse
Powered by ActiveBoard