Devapriyaji - True History Analaysed

Members Login
Username 
 
Password 
    Remember Me  
Post Info TOPIC: மணக்குடவர்


Guru

Status: Offline
Posts: 7602
Date:
மணக்குடவர்
Permalink  
 


மணக்குடவர்
1.1 திருக்குறள் உரையாசிரியர்கள் https://banukumar_r.blogspot.com/2012/08/1.html

தமிழ் இலக்கியத்தின் ஒப்பற்ற இரத்தினமாய்த் திகழும் திருக்குறளுக்கு எழுந்த உரைகள் பல. அவற்றுள் தொன்மையான உரைகள் மொத்தம் பத்து. அந்த பத்து உரைகளில் தற்போது கிடைத்திருப்பதோ பரிமேலழகர், மணக்குடவர், பரிதி, பரிப்பெருமாள், காலிங்கர் ஆகிய ஐந்து உரைகள்தான். மற்ற உரைகள் மறைந்துவிட்டன. திருக்குறளின் முதல் உரையான தருமர் உரை கிடைத்தும், அச்சில் ஏறாமல் மறைந்துவிட்டது. குறளின் பழைய பத்து உரையாசிரியர்களைப் பற்றி ஒரு தனிப் பாடல்,

தருமர், மணக்குடவர், தாமத்தர், நச்சர்
பரிமேலழகர், பருதி, திருமலையர்,
மல்லர், பரிப்பெருமாள், காளிங்கர், வள்ளுவர் நூற்கு
எல்லை உரை செய்தார் இவர்

கூறுவதன் மூலம் பழைய உரையாசிரியர்களைப் பற்றி நமக்கு தெரியவருகிறது. கிடைக்கப் பெற்ற உரையாசிரியர்களில் மணக்குடவரே காலத்தால் முந்தியவர். இவருக்கும் முந்தியவரான தருமரின் உரை மறைந்தொழிந்து விட்டது. இந்த தருமரே நாலடியாருக்கு உரைசெய்தவர் என்பது பல அறிஞர்களின் கருத்து.

1.1.2 தருமர்

அபிதானகோசம் என்னும் நூல் தருமரைப் பற்றி இவ்வாறு கூறுகிறது.

“வள்ளுவருக்கு உரை செய்த பதின்மருள் முற்பட்டவராகிய தருமர் (தரும
சேனர்^) உரையில் ஆருகத* மதக் கொள்கைகளே பிரசங்கிக்கப்பட்டன”

(* ஆருகதம் என்றால் சமணம்/ ஜைனம், ^ அப்பர் பெருமான் தருமசேனராகயிருந்தபோது திருக்குறளுக்கு உரைசெய்திருக்கலாம் என சில அறிஞர்கள் கருதுகிறார்கள். இது பொருந்தும்படியில்லை, எங்ஙனமெனில், கி.பி. பத்தாம் நூற்றாண்டிற்கு முன் உரைநடையில் உரைகள் தோன்றவில்லை என்பதை நினைக்கின் இக்கூற்றின் உண்மை விளங்கும்)

இக்குறிப்புகளை தவிர தருமரைப் பற்றிய யாதொருக் குறிப்புகளும் கிடைக்கவில்லை. திருக்குறளின் கடவுள் வாழ்த்தின் இரண்டு குறள்களின் உரைகள் மற்றும் கிடைத்திருப்பதாக சொல்லப்படுகிறது. அவற்றின் நம்பகத்தன்மை கேள்விக்கு உரியதே. மணக்குடவர் தம் உரையில் தமக்கு முந்திய உரைகளை குறித்திருப்பதால் அது தருமர் உரையாகயிருக்கலாம் என ஊகிப்பதில் தவறில்லை.

2.1 மணக்குடி

இவரைப்பற்றி அறிந்து கொள்ள எந்த ஒரு குறிப்பும் இல்லை. பொதுவாக உரையாசிரியர் உரைக்கு முன்னால் உரைச் சிறப்புப் பாயிரம் இருக்கும். ஆனால், இவருரைக்கு முன்னால் எந்த உரைப் பாயிரமோக் காணப்படவில்லை என்பதால் இவரைப் பற்றியறியக் கூடவில்லை.
அற்றை நாளில் தாம் பிறந்த ஊரின் பெயரைக் கொண்டு ஆசிரியர்களை அழைக்கும் பழக்கமுண்டு. காட்டாக, அறநெறிச் சாரம் என்ற நீதிநூலை செய்தவர் முனைப்பாடியார் என்றழைக்கப்படுகிறார். அவரின் இயர்பெயர்த் தெரியவில்லை. முனைப்பாடி என்ற ஊரில் பிறந்தவராதலால் ஆர் விகுதி சேர்த்து முனைப்பாடியார் என்று அழைக்கப்பட்டார். அதேபோல், மணக்குடி என்ற ஊரில் பிறந்து வாழ்ந்ததால் இவரும் மணக்குடியர் என்று அழைக்கப் பெற்றிருக்கலாம்.

மணக்குடியர் என்று பெயர் பின்னாளில் மருவி மணக்குடவர் என்று ஆகியிருக்கலாம். தமிழகத்தில் மணக்குடி என்ற பெயரில் பல ஊர்கள் இருப்பதால் எந்த பகுதியில் வாழ்ந்தார் என்று ஊகிப்பது கடினம். சில அறிஞர்கள் மணக்குடி என்பது இவர் பிறந்த குடியின் பெயராகயிருக்கலாம் என்றும் கூறுவர்.

2.1.2 மணக்குடவர் சமயம்

இவருடைய உரை பொதுப்பட அமைந்திருப்பினும் ஆங்காங்கே தம் சமயக் கருத்துக்களை தூவி சென்று இருக்கிறார். அவற்றை சிறிதுப் பார்ப்போம்.

‘ஆதிபகவன்’ என்பதற்கு ஆதியாகிய பகவன் என்றுக் குறிப்பதையும், ‘மலர்மிசை ஏகினான்’ என்பதற்கு மலரின் மேல் நடந்தான் என்றுக் குறிப்பதையும், ‘தாமரைக் கண்ணான்’ என்பதற்கு இந்திரன் என்றுப் பொருள் கொள்வதையும், ‘தன்னுயிர் தானறப் பெற்றானை’ என்பதற்கு “உயிர் என்றது சலிப்பற்ற அறிவை; தான் என்றது சீவனாகி நிற்கின்ற நிலைமையை; தானறுதலாவது அகங்காரம் அறுதல்” என்றுக் குறிப்பதையும், ‘வகுத்தான் வகுத்த வகை’ என்பதற்கு விதானம் பண்ணினவன் விதானம் பண்ணின வகை என்றுக் குறிப்பதையும் நோக்க அவருடைய சமயம் யாது என்பது தெற்றென விளங்கும்.

2.1.3 மணக்குடவர் உரைச் சிறப்பு

பரிமேலழகரின் உரைக்கு பின் பதிப்பிக்கப்பட்டு அறிஞர்களிடத்தில் பரவி வழங்கி வருவது இவருரை தான். இவருடைய உரையின் சிறப்பை, திரு.மு.வை.அரவிந்தன் தன் “உரையாசிரியர்கள்” என்ற நூலில் இவ்வாறு எழுதுகிறார்.

”பரிமேலழகர் உரையை மறுப்பவர்களும் அவரது கருத்தை ஏற்காதவர்களும் மணக்குடவர் உரையையே நோக்குவது பல ஆண்டுகளாக இருந்து வரும் வழக்கமாகும். மணக்குடவருடைய உரை, தெள்ளிய தமிழில் எளிய நடையில் அமைந்துள்ளது. பொழிப்புரையும், சில இடங்களில் விளக்கமும் உள்ளன. தமிழ்ப் பண்பாடு தழுவி எழுதப்பட்ட தெளிவுரை என்று இவரது உரையைப் போற்றுவர். பிற உரையாசிரியர்களைப்போல வட நூற் கருத்தைத் தம் உரையில் புகுத்துவதில்லை. புதிய பாடங்களைக் கொண்டு. சொற்களைப் பிரிக்கும் முறையில் புதுமை கையாண்டு சிறப்பாக உரை எழுதிச் செல்வது இவரது பண்பாகும்.
இவரிடம் ஆரவாரமோ புலமைச் செருக்கோ காணப்படவில்லை. கற்று அறிந்து அடங்கிய அறிஞராக இவர் காணப்படுகின்றார். தமக்கு ஐயப்பாடாக உள்ள கருத்தினைத் தயக்கத்துடனே எழுதுகின்றார். வான்சிறப்பு என்ற அதிகாரத்திற்கு விளக்கம் எழுதும் இடத்தில், “இது கடவுட் செய்கைத்தாதலால் அதன்பின் கூறப்பட்டது. இஃது ஈண்டுக் கூறியது என்னை எனின், பின் உரைக்கப்படுகின்ற இல்லறமும் துறவறமும் இனிது நடப்பது மழை உண்டாயின் என்றற்குப் போலும், அன்றியும் காலத்தின் பொருட்டுக் கூறினார் எனினும் அமையும்’ என்று எழுதுவது இங்கே நினைக்கத்தக்கதாகும்..”

மேலும், குறளாசிரியரின் கருத்தை முன்பின் முரணாகக் கூறாமலும், கொண்டுக் கூட்டிப் பொருள் கொள்ளாமலும் இவர் தன் உரையைச் செய்திருப்பது ஈண்டு நினைக்கத்தகும். மணக்குடவரின் உரைச் சிறப்புப் பண்புகளை மேலும் விரித்துக் கீழ் வருமாறு எழுதுகிறார்,
திரு.மு.வை.அரவிந்தன்:

”மணக்குடவர் உரையின் சிறப்பியல்புகள் கற்போரை மகிழச் செய்பவை. அவை, மணக்குடவரின் உரைத் திறனுக்குச் சான்று பகர்பவை. இவரது உரை பொழிப்புரையாக உள்ளது; தேவையான இடங்களில் மிகச் சுருக்கமாக விளக்கம் எழுதுகின்றார். குறளின் கருத்து இது என்று கூறுகின்றார். திருக்குறள் இருக்கும் அமைப்பிலேயே பொருள் உரைக்கின்றார். எழுவாய், பயனிலை, செயப்படு பொருள் இவற்றை நன்கு ஆராய்ந்து முன்பின் மாற்றி அமைத்து, கொண்டு கூட்டிப் பொருள் எழுதுவதி்ல்லை.

முகத்தின் முதுக்குறைந்த துண்டோ உவப்பினும்
காயினும் தான்முந் துறும். (707)

என்ற குறளுக்குப் பரிமேலழகர் உரையும் மணக்குடவர் உரையும் ஒப்பிட்டு
நோக்கின் மணக்குடவர் குறள் கிடந்தவாறே பொருள் உரைப்பது புலனாகும்” என்பதையும் நோக்குக!



__________________


Guru

Status: Offline
Posts: 7602
Date:
Permalink  
 

3.1 மணக்குடவர் பதிப்பு வரலாறு


திருக்குறள் உரைகளில் தருமர் உரையே காலத்தால் முந்தியது என்றாலும், அவர் உரைக் கிடைக்காததால், மணக்குடவர் உரையே முதலாவதாகக் கொள்ளப்படுகிறது. இவருக்கு பின்னரே மற்ற உரைகள் தோன்றின. இந்த பத்து உரைகளில் கடைசியாகத் தோன்றியது பரிமேலழகர் உரை. ஆனால் திருக்குறள் உரைப் பதிப்புகளை நோக்கினால், பரிமேலழகர் உரையே முதன் முதல் அச்சிடப்பட்டு தமிழ்க்கூறும் நல்லுலகிற்கு வெளியிடப்பட்டது. இவருரையை முதன் முதல் கி.பி.1840 ஆண்டு, முகவை இராமானுஜ கவிராயர் என்பவரால் பதிப்பிக்கப்பட்டு வெளியிடப்பட்டது. பரிமேலழகர் உரை வெளியிடப்பட்டு சற்றொப்ப 80 ஆண்டுகள் கழித்தே மணக்குடவர் உரை வெளியிடப்பட்டது. மணக்குடவர் உரை அச்சேறிய ஆண்டு கி.பி.1917, அதுவும் அறத்துப்பால் மட்டும் வெளியிடப்பட்டது. அச்சிட்டு பதிப்பித்தவர் திருவாளர். வ.உ.சிதம்பரம் பிள்ளை. மணக்குடவரின் முழு உரையும் அச்சான ஆண்டு கி.பி.1925!
3.1.2 உரை தாமதம்
இதனால், மணக்குடவர் உரை தமிழறிஞர் உலககிற்கு மிக தாமதமாகத்தான் அறிமுகமாகிறது. முதல் உரையாகத் தோன்றிய மணக்குடவர் உரை, பரிமேலழகர் உரைக்குப் பின்னே அச்சேற்றி வெளிவருகிறது. இடைப்பட்ட காலமான 80 ஆண்டுகள் என்பது மிக பெரிய இடைவெளி. இக்கால இடைவெளிக்குள் பரிமேலழகர் உரையையே கற்றோராலும், மற்றோராலும் பெரிதும் பேணும்படியாகிவிட்டது. பரிமேலழகர் திருக்குறளுக்கு தான் சார்ந்த சமயச் சாயம் பூசியதோடு மட்டுமல்லாமல் வலிந்து இந்து சமயச் சார்பாகவும் உரையெழுதியிருந்தமையாலும், பெரும்பான்மையினர் இந்துக்களாகயிருந்ததனாலும், அனைவராலும் அவருரையே பின்பற்ற வேண்டியதாயிற்று. இதனால், பரிமேலழகர் எழுத்தே, அவர் சொல்லே, அவர் அதிகார வைப்பு முறையே, சொற்மாற்று முறையே, அதிகார அமைப்பு முறையே “பெரும்பாலோர்” சமூகம் ஏற்றுக் கொள்ளவேண்டியதாகிற்று.

3.1 மணக்குடவர் உரையும் வ.உ.சியும்

மணக்குடவரின் அறத்துப்பாலை முதன் முதல் பதிப்பித்த திரு.வ.உ.சிதம்பரனார், தம் முன்னுரையில் இவ்வாறு எழுதுகிறார்.

“முந்திய உரைகளிற் காணும் அதிகாரங்கள் சிலவற்றின் தலைப்புப் பெயர்களும், குறள்கள் சிலவற்றின் மூல பாடங்களிலும் சிற்சில எழுத்துகளும் சொற்களும் ஏடு பெயர்த்தெழுதியோர்களால் நேர்ந்த பிழைகள் என யான் கருதுகின்றமையால் அவற்றைத் திருத்தியுள்ளேன்”

மேலும்,

திருக்குறள் மூலச் சுவடிகளில் காணப்படும் முதல் மூன்று அதிகாரங்களான கடவுள் வாழ்த்து, வான்சிறப்பு மற்றும் நீத்தார் பெருமை ஆகிய அதிகாரங்கள் இடைச்செருகல் என்கிறார். அதற்கு அவர் கூறும் காரணம் விந்தையாவிருக்கிறது. இந்த மூன்று அதிகாரப்பாக்களும் குறளாசிரியரால் எழுதப்படவில்லையாம்! எவ்வாறெனின் அதை அவர் எழுத்திலேயேப் பார்க்கலாம்.

அவ்வாறு யான் கருதுவதற்குரிய காரணங்களிற் சில:
1. இம்மூன்று அதிகாரங்களிலும் காணப்படும் பாக்கள் நூலின் பாக்களைப்போல, சொற்செறிவும் பொருட் செறிவும் உடையன அல்ல.
2. இப் பாக்களில், பலவற்றின் பொருள்கள் பல தடைகளுக்கு இடம் கொடுக்கின்றன.
3. மெய்யுணர்தல், துறவு என்றும் அதிகாரங்கள் நூலின்கண் இருக்கின்றமையால், கடவுள் வாழ்த்து, நீத்தார் பெருமை என்னும் அதிகாரங்களைப் பாயிரத்தில் கூற வேண்டுவதில்லை.
4. மெய்யுணர்தலில் கடவுளுக்குக் கூறியுள்ள இலக்கணங்களையும் கடவுள் வாழ்த்தில் கடவுளுக்குக் கூறியுள்ள இலக்கணங்களையும் இயற்றியவர் ஒருவர் அல்லர் என்பது நன்றாக விளங்கும்.
5. அவ்வாறே துறவின் பாக்களையும் நீத்தார் பெருமையின் பாக்களையும் ஒப்பிட்டுப் பார்த்தால், அவ்விரண்டு அதிகாரங்களையும் இயற்றியவர் ஒருவர் அல்லர் என்பது நன்றாக விளங்கும்.
6. மழையை, ‘சிறப்பின் தணிப்பாரும் இல்லை; வறப்பின் தருவாரும் இல்’ ஆகையால் வான் சிறப்பைக் கூறுதலால் பயன் ஒன்றும் இல்லை.”

(வ.உ.சி: திருக்குறள் அறத்துப்பால்- விருத்தியுரை – முன்னுரை - 1935)


இதற்கு திரு.முனைவர். துளசி.இராமசாமி, தன் ”சமண முனிவர்கள் எழுதியது திருக்குறள்” என்ற நூலில் தக்க சமாதானம் கூறுகிறார்.

”வ.உ.சி, முதல் மூன்று அதிகாரங்கள் திருக்குறள் ஆசிரியர் பாடாதவை என்கிறார். இவர் அரசியலில் சரியானவர்; நேர்மையானவர்; நாட்டுப் பற்றுள்ளவர். நாட்டுக்காகவே உழைத்தவர்; ஆனால் மதப்பற்றும் கொண்டவர்; சைவப் பற்றாளர். தூத்துக்குடியில் சைவச் சமயச் சொற்பொழிவுக்கு ஏற்பாடு செய்து சைவத் தமிழை வளர்த்தவர். இதனால் திருக்குறளில் முதல் மூன்று அதிகாரங்கள், கடவுள் வாழ்த்து, அறன்வலியுறுத்தல், நீத்தார் பெருமை முழுவதும் வெளிப்படையாகத் தெரியுமளவுக்குச் சமண சமயக் கருத்துக்களைத் தூக்கிப் பிடித்ததால் அவருக்குப் பிடிக்கவில்லை; இது இடைச்செருகல் என்கிறார். இதனால் இவர் வேண்டுமென்றே வெறுப்புக்கொண்டு பல பாடவேறுபாடுகள் தோன்ற வழி வகுத்திருக்கிறார்.”

இவர் கூற்றை நாம் கருத்தில் கொள்ளவேண்டும்!

இதனால் மணக்குடவரின் தற்போதைய உரை அவருடையது உண்மையான உரைத் தானா என்பது சந்தேகம்தான். “தாமரைக் கண்ணான்” என்பதற்கு மிகவும் சரியாக உரை செய்த இவரா? அறவாழி அந்தணன் என்பதற்கு அறக்கடல் என்று பொருட் குற்றமுடன் உரை செய்திருப்பார் என்று நினைக்கத் தோன்றுகிறது.

திரு.வ.உ.சியார் திருக்குறள் சமண நூல் என்பதை ஏற்றுக் கொள்ள மனம் இடம் தராததால்தான் அவ்வாறு எழுதினார் என்பதற்கு மேலும் சில தரவுகளைப் பார்ப்போம்.



__________________


Guru

Status: Offline
Posts: 7602
Date:
Permalink  
 

4.1 சமணப் பாயிரம்

திரு. ந.சி.கந்தையா பிள்ளை தன் “திருவள்ளுவர் என்ற நூலில் (1953, பக்கம் 15) இவ்வாறு எழுதுகிறார்:

“அருகக் கடவுளுக்கு உரிய மலர் மிசை ஏகினான், அறவாழி அந்தணன் முதலிய பெயர்கள் காணப்படுதலாலும்; கடவுள் வாழ்த்து முதலிய நான்கு அதிகாரங்களும் அருக சரணம் முதலிய நான்கு சரணங்களைக் குறிக்க எழுந்தனபோல் நிற்றலாலும்; அருகர் இயற்றிய நூல்களுள்
திருக்குறளினின்றும் மேற்கோள்கள் எடுத்து வழங்கப்பட்டமையாலும் திருக்குறள் ஆசிரியர் சைனர் என்று உரைப்பர் சிலர்’

மேலும், திரு. சுப. இராமநாதன் தன் “இலக்கியச் சிந்தனைகள்” (பக்கம்-85) என்ற நூலில் கீழ்வருமாறு கூறுகிறார்.

“இந்நான்கு அதிகாரங்களையும் கடவுள் வாழ்த்தாகக் கொள்வதே பொருந்துவதாகும். திருவள்ளுவர், சமண சமயத்தவராய் இருக்கலாம் என்பதே பெரும்பான்மையோர் கருத்தாகும். சமணர்கள், அருக சரணம், சித்த சரணம், சாது சரணம், தன்ம சரணம் என்ற நால்வகைச் சரணங்களைக் கூறுபவர்கள் குறளின் முதலாவது அதிகாரம், கடவுள் வாழ்த்து - அருகசரணமாகவும், மூன்றாவது அதிகாரம், நீத்தார் பெருமை - சாது சரணமாகவும், நான்காவது அதிகாரம், அறன் வலியுறுத்தல் - தன்ம சரணமாகவும் கொள்ளப் பொருத்தமாய் உள்ளன.
வான் சிறப்பு என்ற அதிகாரத்தைச் சித்த சரணத்திற்குப் பொருந்தக் கூடியதாகக் கொள்வோமானால் இந்த நான்கு அதிகாரங்களாலும் கடவுள் வாழ்த்துக் கூறப்பெற்றதாக அமையும்.சமணர்கள் இந் நால்வகைச் சரணங்களையும் கடவுள் வாழ்த்தாகக் கூறுவதனைச் சிந்தாமணிக் கடவுள் வாழ்த்துப் பகுதியில் காணலாம்.”

5.1 உரை பித்தலாட்டம்

18 – 19 நூற்றாண்டுகளில்தான் பெரும்பாலான தமிழ் இலக்கியங்கள் தமிழ்க்கூறும் நல்லுலகத்திற்கு வெளிப்படலாயிற்று. தமிழ்த் தாத்தா என்றழைக்கப்படும் திரு.உ.வே.சாமிநாதர் அவர்கள் காலத்தில் கூட நிறையத் தமிழ் இலக்கியங்கள் வெளிப்படவில்லை. ஓலைச் சுவடி நிலையிலேயே இருந்தன. திரு.சேலம். இராமசாமி முதலியாரை சந்திக்கும் வரையில் சமண, பெளத்த இலக்கியங்களைப் பற்றி திரு.உ.வே.சா அவர்கள் அறிந்திருக்கவில்லை என்பதை நோக்க அந்நூற்றாண்டுகளின் உண்மை நிலைமை நமக்குத் தெரியவரும். சைவ மடங்களின் ஆதிக்கத்தினால், புறசமயிகளின் இலக்கியங்களைப் படிக்கக்கூடாது என்று தடைவிதித்திருந்தன. அவற்றை புறம் தள்ளி, நடுநிலைமையாக அலைந்துத் திரிந்து நாடு முழுதும் சுற்றி ஓலைச்சுவடிகளை சேகரித்து, பதிப்பித்தப் பெருமை தமிழ்த் தாத்தா அவர்களையேச் சாரும். சமயக் காழ்ப்பினால் ஐம்பெரும் காப்பியங்களில் ஒன்றான “வளையாபதி” என்றச் சமணக் காப்பியம் அழிந்தது, தமிழ்த் தாத்தா அவர்களின் “என் சரித்திரம்” என்ற நூல் மூலம் நமக்குத் தெரியவரும் செய்தி. சமயக் காழ்ப்புக் கொண்டால் இலக்கியங்களுக்கு என்னவாகும் என்பதை மணக்குடவர் உரைக்கு நேர்ந்தக் கதியின் மூலம் நாம் உணரலாம்.


திரு.மு.வை.அரவிந்தன் தன் “உரையாசிரியர்கள்’ என்ற நூலில்,

”மணக்குடவர் காமத்துப் பாலில் உள்ள இருபத்தைந்து அதிகாரங்களையும் குறிஞ்சி பாலை முல்லை நெய்தல் மருதம் என்ற வரிசைப்படி, ஒவ்வொரு திணைக்கும் ஐந்து அதிகாரங்கள் அமைத்துள்ளதாக, ‘திருவள்ளுவர்’ என்ற நூலில் (பக்கம் 29) தமிழ்ப் பெரியார் செல்வக் கேசவராய முதலியார் கூறுகின்றார். அப்பெரியார் மணக்குடவர் உரையாகப் பின்வரும் பகுதியைத் தந்துள்ளார்:
“காமத்துப்பால் கூறுவார்: குறிஞ்சி பாலை முல்லை நெய்தல் மருதம் என்னும் ஐந்திணையும் முதல் கரு உரிப்பொருள் என்ற மூன்றனுள், பெரும்பான்மையும் உரிப்பொருள் பற்றிப் புணர்தலும் புணர்தல் நிமித்தமும் குறிஞ்சி எனவும், பிரிதலும் பிரிதல் நிமித்தமும் பாலை எனவும், இருத்தலும்
இருத்தல் நிமித்தமும் முல்லை எனவும், இரங்கலும் இரங்கல் நிமித்தமும் நெய்தல் எனவும், ஊடலும் ஊடல் நிமித்தமும் மருதம் எனவும் ஒரே நிலம் ஐந்து அதிகாரமாக இருபத்து ஐந்து அதிகாரத்தால் கூறி...”
இன்று அச்சாகியுள்ள மணக்குடவர் உரையில் இப்பகுதி காணப்படவில்லை. காமத்துப் பாலுக்குப் பரிப்பெருமாள் மேற்கொண்ட இயல் பிரிவுகளே மணக்குடவர் உரையிலும் உள்ளது. இதனை மேலும் ஆராய்தல் வேண்டும். சோழவந்தான் அரசன் சண்முகனார் காமத்துப் பாலை மேலே
கூறியவாறு ஐந்தாகப் பிரிப்பதுண்டு என்று குறிப்பிடுகின்றார். (செந்தமிழ் - 6, பக். 208)


5.2 அதிகார வரிசை மாற்று

மணக்குடவர் உரைக் கிடைக்காதவற்றிற்கு பரிதியார், பரிமேலழகர் உரைக் கொண்டு நிரப்பியதுபோல், அவர் கொண்ட அதிகார வரிசைகளையும் மாற்றியிருக்கிறார்கள். இதனால் குறளாசிரியரின் உண்மை நிலைப்பாட்டுக்கு எவ்வாறு பாதகம் வரும் என்பதையும் சிறிதுப் பார்ப்போம்.

திரு.மு.வை.அரவிந்தன் தன் “உரையாசிரியர்கள்” என்ற நூலில், பின்வருமாறு எழுதுகிறார்.

”குறட்பாக்கள் அதிகாரம் விட்டு அதிகாரம் மாறிய தோடு, அதிகாரங்களும் இயல் விட்டு இயல் மாறி அமைந்துள்ளன. கப்பலோட்டிய தமிழர் வ.உ.சி. பதிப்பித்த மணக்குடவர் உரையில் அறத்துப்பாலில்
இத்தகைய மாற்றம் உள்ளது. தமக்குக் கிடைத்த ஒரே ஒரு ஏட்டுச் சுவடியில் மட்டும் இத்தகைய மாற்றம் இருந்ததாய் அவர் குறிப்பிட்டுள்ளார்.
மணக்குடவர் உரையில் இல்லற இயலில் பின்வரும் அதிகாரங்கள் உள்ளன.

5. இல்வாழ்க்கை, 6.வாழ்க்கைத் துணைநலம், 7.மக்கட்பேறு, 8.அன்புடைமை, 9.விருந்தோம்பல், 10.வாய்மையுடைமை, 11.செய்ந்நன்றியறிதல், 12.நடுவுநிலைமை, 13.பொறையுடைமை, 14. ஒழுக்கமுடைமை, 15.பிறனில் விழையாமை, 16.வெகுளாமை, 17.இன்னா செய்யாமை, 18. கொல்லாமை, 19.புலால் மறுத்தல், 20.கள்ளாமை, 21.தீவினையச்சம், 22.ஒப்புரவறிதல், 23.ஈகையுடைமை, 24.புகழுடைமை

துறவற இயலில் பின்வரும் அதிகாரங்கள் உள்ளன:

25.அருளுடைமை, 26.இனியவை கூறல், 27.அடக்கமுடைமை, 28.தவமுடைமை, 29.கூடாவொழுக்கம், 30.அழுக்காறாமை, 31.வெஃகாமை, 32.புறங்கூறாமை, 33.பயினில சொல்லாமை, 34.நிலையாமை, 35.துறவுடைமை, 36.மெய்யுணர்தல், 37.அவாவறுத்தல்

பரிமேலழகர் உரையில் உள்ள இயல்களில் அதிகார அமைப்பு, பின்வருமாறு உள்ளது.

இல்லற இயல் – 5.இல்வாழ்க்கை, 6.வாழ்க்கைத் துணைநலம், 7.புதல்வரைப் பெறுதல், 8.அன்புடைமை, 9.விருந்தோம்பல், 10.இனியவை கூறல், 11.செய்நன்றியறிதல், 12.நடுவுநிலைமை, 13.அடக்கமுடைமை, 14.ஒழுக்கமுடைமை, 15.பிறனில் விழையாமை, 16.பொறையுடைமை, 17.அழுக்காறாமை, 18.வெஃகாமை, 19.புறங்கூறாமை, 20.பயனில சொல்லாமை, 21.தீவினையச்சம், 22.ஒப்புரவறிதல், 23.ஈகை, 24.புகழ்

துறவற இயல் – 25.அருளுடைமை, 26.புலான் மறுத்தல், 27.தவம், 28.கூடாவொழுக்கம், 29.கள்ளாமை, 30. வாய்மை, 31.வெகுளாமை, 32.இன்னா செய்யாமை, 33.கொல்லாமை, 34.நிலையாமை, 35.துறவு, 36.மெய்யுணர்தல், 37.அவா அறுத்தல்.

அதிகார வரிசை, அதிகார பெயர் மாற்றம் குறித்து மேலும் அறியக் கீழ்க் காணும் சுட்டியைச் சொடுக்குக!

www.tamilvu.org/slet/lA100/lA100pd1.jsp?bookid=215&pno=346

www.tamilvu.org/slet/lA100/lA100pd1.jsp?bookid=215&pno=347
6.1 கவனத்தில் கொள்ளவேண்டியவை

மணக்குடவர் உரையென்று நாம் பயன்படுத்திக் கொண்டிருக்கும் உரை முழுதும் மணக்குடவர் எழுதியதில்லை என்பதும், சமயக் காழ்ப்பினால், உண்மை உரைகள் வெளிப்படவில்லை என்பதை எளிதில் உள்ளலாம். மணக்குடவர் அதிகார வரிசை மாற்றத்தினால் நேரும் பொருள் குழப்பத்தை இங்குக் கூறி இக்கட்டுரையை முடிப்போம்.

சமண இல்லறத்தாரும், துறவறத்தாரும் புலால் உணவு மறுத்தவர்கள். மணக்குடவர் இல்லற இயலில் புலால் மறுத்தலை சரியாகவே கொடுத்திருக்கிறார். ஆனால், பின்னாளில் பரிமேலழகர் தன் உரையில் புலால் மறுத்தல் என்ற அதிகாரத்தை “துறவற இயலில்” சொருகியிருக்கிறார்.

இவ்வாறு குறள் வரிசையை மாற்றுவதால், உண்டாகும் பொருள் குழப்பத்திற்குச் சான்றாக கீழே உள்ள சுட்டியைச் சொடுக்கவும். அதிலும் குறிப்பாக 10ஆவது பாயிண்டாக....


jataayu.blogspot.in/2008/02/blog-post_22.html
..............
10. இறுதியாய் ஒன்று. அஹிம்சை என்பது சமணர்க்கு மட்டுமே குறிக்கோள், ஆதாரக்கோட்பாடு என்பதும் பிழை. யோகமார்க்கத்தில் அஹிம்சையை இந்துசமய நூல்கள் அனைத்துமே வலியுறுத்துகின்றன. ஆயின் சமணத்தைப் போலன்றி அதை முக்திக்கு ஒரே வழியாக வைக்கவில்லை. 'யோகியர் பெறும் பேற்றினையே சாங்கியரும் பெறுவர்' என்ற கண்ணபிரானின் கீதைப்பேருரைக்குச் சான்றாய் வேடர் கண்ணப்பரையும், மீனவர் அதிபத்தரையும் அவர் போன்ற எண்ணற்ற மகான்களையும் காண்கிறோம். வள்ளுவரும் புலால் மறுத்தலை அனைவருக்கும் வலியுறுத்திச் சொல்ல்லவில்லை.

புலால் மறுத்தலை வலியுறுத்துவது யாரிடம்?

'துறவியலில்', யோகத்திலாழ்ந்து தவம் மேற்கொள்வோர்க்கு, நோற்பார்க்கு மட்டுமே. அது அமணர்க்கு மட்டுமின்றி அனைவர்க்கும் பொதுவானது. 'சமாதி'யில் (semedi) அமைய வேண்டி, ஒரு மண்டலம் நோன்பிருக்கும், மரக்கறி உணவே பழகாத ஜாவானியர் கூட அந்த நாற்பது நாள்களில் புலால் (முட்டை கூட) உண்பதில்லை.

புலால் மறுத்தலை வேறெங்காவது சொல்கிறாரா?
குடியியலில் ஓரிடத்தில் சுட்டுகிறார்.

கொல்லா நலத்தது நோன்மை பிறர்தீமை சொல்லா நலத்தது சால்பு. (984)

ஆக, கொல்லாமை என்பது நோற்பார் மட்டுமே கொளத்தகும். ஆயின் அவர் பெரும்பான்மையினரா? என்றுமில்லை. அவரே சொல்கிறார்:

இலர்பல ராகிய காரணம் நோற்பார் சிலர்பலர் நோலா தவர். (270)

வள்ளுவம் சமணத்தை அடிப்படையாகக் கொண்டிருந்தால் 'கொல்லாவிரதம்' அனைத்துத் தரப்பினர்க்கும், 'துறவியல்' மட்டுமின்றி பிற அதிகாரங்களிலும் எங்காவது ஓரிடத்திலாவது வலியுறுத்தப் பட்டிருக்கும்.
அப்படி அமையவில்லை என்பதை ஓர்க!

இவ்வாறு வாதிடுவது எதனால், பரிமேலழகரின் அதிகார வரிசை மாற்றத்தினால் என்பது புலனாகும். இச்சான்று ஒன்றே போதும், பரிமேலழகர் உரையின் இலட்சணத்தையறிய!

பரிமேலழகரை யான் குறை சொல்கிறேன் என்று கருதவேண்டாம். பரிமேலழகர் உரை சிறந்தது. இதில் யாதொரு கருத்து வேறுபாடும் சொல்லமுடியாது. ஆயின், இங்கே அவருரையில் சில முக்கிய குறள் உரைகளில், குறள் கருத்தை மறைத்து, வலிந்துப் பொருள் கொண்டியிருக்கிறார் என்பதை சுட்டவே பரியைப் பற்றி எழுதுவதாகிற்று!

சுபம்!
இரா.பானுகுமார்,
சென்னை

துணைநின்ற நூல்கள்
1. பத்தொன்பதான் நூற்றாண்டில் தமிழ் இலக்கியம் – மயிலை.சீனி.வேங்கடசாமி
2. உரையாசிரியர்கள் – மு.வை.அரவிந்தன்
3. சமண முனிவர்கள் எழுதியது திருக்குறள் – முனைவர். துளசி.இராமசாமி
4. வள்ளுவரின் மெய்யியல் – கு.ச.ஆனந்தன்
5. திருக்குறள் செம்ப்பதிப்பு – திரு.அ.மா.சாமி
6. சமணத் தமிழ் இலக்கிய வரலாறு – தெ.பொ.மீனாட்சி சுந்தரனார்
7. Philosophy of Thiruvalluvar – Mr.T.P.Meenakshisundram
8. திருக்குறள் மூலமும் தேவருரை அல்லது மணக்குடவருரையும் – புலவர்.தி.இராசகோபாலன்
9. திருக்குறள் ஆராய்ச்சியும் ஜைந சமய சித்தாந்தமும் – தி.அனந்தநாத நயினார்
10. என் சரித்திரம் - தமிழ்த் தாத்தா. உ.வே.சாமிநாத ஐயர்



__________________


Guru

Status: Offline
Posts: 7602
Date:
Permalink  
 

மணக்குடவர் (திருக்குறள் உரையாசிரியர்)

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
 
 
Jump to navigationJump to search

மணக்குடவர் திருக்குறளுக்கு உரை எழுதிய பழைய உரை ஆசிரியர்களுள் ஒருவர். இவர் மணக்குடி என்ற ஊரில் பிறந்தவர் என்றும் மணக்குடியர் என்பது பின்னாளில் மணக்குடவர் என்று மருவிற்று என்றும் கருதப்படுகிறது.

திருக்குறள் பழைய உரைகளில் காலத்தால் முந்தியது மணக்குடவர் உரை. இதன் காலம் 10 ஆம் நூற்றாண்டு. [1] வடமொழிக் கருத்தைப் புகுத்தாது தமிழ் முறைப்படி உரை எழுதியவர் என்று இவர் புகழப்படுகிறார்.[2]

உரைப்பாங்கு [3][தொகு]

  • இவரது உரை திருக்குறளில் உள்ள ஒவ்வொரு சொல்லுக்கும் பொருள் விளங்குமாறு எழுதப்பட்டுள்ளது.
  • அதிகாரங்களின் கருத்துரையாக 'அருளுடைமை வேண்டும்', 'நடுவுநிலைமை வேண்டும்' என்பது போன்ற தொடர்களைத் தருகிறார்.
  • அதிகாரத் தொகுப்புரை தருகிறார். 'கயமை' என்னும் அதிகாரத்துக்குத் தரப்பட்டுள்ள தொகுப்புரை இது.
உறுப்பு ஒத்துப் குணம் ஒவ்வாமையின் கயவர் மக்கள் அல்லர் ஆயினார். வேண்டியன செய்வார். தாம் அறியார். இயல்பான ஒழுக்கம் இலர். நிறை இலர். அடக்கம் இலர். அழுக்காறு உடையர். இரப்பார்க்குக் கொடார். ஒறுப்பார்க்குப் கொடுப்பர். நிலை இலர். - இவற்றில் ஒவ்வொரு குறளின் கருத்தும் இரண்டே சொற்களால் கூறப்பட்டுள்ளன.
  • 'மடல் ஏறாப் பெண்ணின் பெருந்தக்கது இல்' என்னும் தொடரை இவர் தோழி கூற்று என்கிறார். [4] இதற்கு இவர் தரும் விளக்கம்
நும்மால் (தலைவனால்) காதலிக்கப்பட்டாள் தனக்கும் இவ் வருத்தம் ஒக்கும். பெண்டிற்கு இப் பெண்மையாகிய மடல் ஏறாததே குறை என்று தலைமகன் ஆற்றாமை நீங்குதற் பொருட்டுத் தோழி கூறியது.
  • அதிகாரத்தில் உள்ள குறள்களின் கருத்தைச் தொகுத்துச் சுட்டுகிறார். 'ஒற்றாடல்' அதிகாரத்தில் இவர் தொகுத்துக் காட்டியவை.
இது ஒற்று வேண்டும் என்றது. இவை மூன்றும் ஒற்றிலக்கணம் கூறின. இவை இரண்டும் ஒற்று வேண்டுமிடம் கூறின. இவை இரண்டும் ஒற்றரை ஆளும் திறம் கூறின. இது பிறர் அறியாமல் சிறப்புச் செய்யவேண்டும் என்பது. இது ஒற்று இன்மையால் வரும் குற்றம் கூறியது.
  • இவர் கூறும் சில மருத்துவ வழக்காறுகள்
நெய்யும் தேனும் இனியவாயினும் தம்மில் அளவு ஒக்குமாயின் கொல்லும். [5]
பலாப்பழம் தின்று பின் சுக்குத் தின்றால் தன் உயிர்க்கு வரும் இடையூறுஇ இல்லை [6]
  • தெண்ணீர் அடுபுற்கை - மோரினும் காடியினுப் அடப்பெறாதும் தெளிந்த தீரினாலே அட்ட புற்கை [7]
  • மருந்து என்னும் அதிகாரத்தில் 'கற்றான்' என்பதற்கு ஆயுள் வேதம் கற்றான் என உரை எழுதியுள்ளார்.
  • இவர் காட்டியுள்ள புராணக் கதைகளில் சில
அருச்சுணன் தவம் மறந்து அல்லவை செய்தான்
வெகுளியால் நகுஷன் பெரும்பாம்பு ஆயினான்
நோற்றலால் மார்க்கண்டேயன் கூற்றத்தைத் [8] தப்பினான்.
ஐந்து அவித்தான் ஆற்றல் - இவ்வளவில் கண் மிக்க தவம் செய்வார் உளரானால் இந்திரன் தன் பதம் இழக்கின்றானாக நடுங்கும்.
  • உரையில் காணப்படும் சில அருஞ்சொற்கள்
அட்டாலம் = அட்டால மண்டபம்
நெத்தம் = கறவாடு பலகை

மேற்கோள்[தொகு]

  1.  மு. அருணாசலம் (முதல் பதிப்பு 1972, திருத்தப்பட்ட பதிப்பு 2005). தமிழ் இலக்கிய வரலாறு, பத்தாம் நூற்றாண்டு,. சென்னை: தி பார்க்கர், தமிழியல் ஆய்வு மற்றும் வெளியீட்டு நிறுவனம், 291 அகமது வணிக வளாகம், இராயப்பேட்டை, சென்னை 600 014. பக். 95.
  2.  தமிழ் இணையக் கல்விக்கழகப் பாடப்பகுதி
  3.  அதிகாரத்தில் குறள் வைக்கப்பட்டுள்ள வரிசைமுறை பிற்காலப் பரிமேலழகர் வைப்புமுறையிலிருந்து மாறுபட்டது என்னும் செய்தியை உள்ளத்தில் கொண்டு இவரது உரையை அணுகவேண்டும்
  4.  பரிமேலழகர் தலைவன் கூற்று என்கிறார்
  5.  திருக்குறள் 943
  6.  திருக்குறள் 944
  7.  செறிவு இன்றித் தெண்ணீர் போன்ற கூழ் என்றும், பசை பெறாப் புற்கை அன்றி வெறும் தெண்ணீர் புற்கை என்றும் பிறர் உரை கண்டுள்ளனர்
  8.  கூற்றத்தின் பிடியிலிருந்து


__________________
Page 1 of 1  sorted by
 
Quick Reply

Please log in to post quick replies.



Create your own FREE Forum
Report Abuse
Powered by ActiveBoard