Devapriyaji - True History Analaysed

Members Login
Username 
 
Password 
    Remember Me  
Post Info TOPIC: திருக்குறள் மணக்குடவர் உரை


Guru

Status: Offline
Posts: 7602
Date:
திருக்குறள் மணக்குடவர் உரை
Permalink  
 


திருக்குறள் மணக்குடவர் உரை

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
 
 
Jump to navigationJump to search

திருக்குறள் மணக்குடவர் உரை என்பது திருக்குறளுக்கு உரை எழுதிய பண்டைய உரையாசிரியர்களுள் காலத்தால் முற்பட்டவரும், பரிமேலழகருக்கு உரை வழிகாட்டியாக விளங்கியவருமான மணக்குடவர் என்பவர் திருக்குறளுக்கு எழுதிய உரையைக் குறிக்கும்[1].

இந்த உரையின் தனித்தன்மையையும் சிறப்பியல்புகளையும் ஆய்ந்து, கு. மோகனராசு போன்ற அறிஞர்கள் வெளியிட்டுள்ள முடிவுகளின் அடிப்படையில் சில தகவல்கள் இங்கே தொகுக்கப்படுகின்றன.

பரிமேலழகர் உரைக்கு வழிகாட்டி[தொகு]

"உரையாசிரியர்கள்" என்னும் நூலை எழுதிய மு.வை. அரவிந்தன் என்பவர் பின்வருமாறு கூறிகின்றார்:

திருக்குறள் உரைகளில், பரிமேலழகர் உரைக்கு அடுத்தபடியாக அச்சேறி மக்களிடத்தில் பரவிச் செல்வாக்குப் பெற்ற பெருமை, மணக்குடவர் உரைக்கு உண்டு. பரிமேலழகர் உரையை மறுப்பவர்களும் அவரது கருத்தை ஏற்காதவர்களும் மணக்குடவர் உரையையே நோக்குவது பல ஆண்டுகளாக இருந்து வரும் வழக்கமாகும்...

பரிமேலழகருக்குச் சிறந்த வழிகாட்டியாய் இருந்தவர் மணக்குடவரே. இவர் அமைத்துச் செப்பனிட்ட பாதையிலேயே பரிமேலழகர் முன்னேறிச் செல்கிறார். அதிகாரந் தோறும் அமைந்துள்ள குறட்பாக்களை, கருத்து இயைபு நோக்கிப் பிரித்துப் பொருள்கூறும் முறையைப் பரிமேலழகர் மணக்குடவரிடமிருந்தே பெற்றுள்ளார். பல குறட்பாக்களின் உரையும் விளக்கமும்கூடப் பரிமேலழகர் மணக்குடவரைத் தழுவியே உரைக்கின்றார். "அறத்தாறு இதுவென" என்ற குறளின் (37) விளக்கவுரையில் மணக்குடவர், "இது பொன்றினாலும் துணையாகுமோ என்றார்க்குத் துணையாயினவாறு காட்டிற்று" என்கிறார். பரிமேலழகர் அவர் கருத்தைத் தழுவி, "இதனாற் பொன்றாத் துணையாதல் தெளிவிக்கப்பட்டது" என்று உரைக்கின்றார்.

"செவிக்குணவு" என்ற குறளின் (412) உரையில் மணக்குடவர், "பெருக உண்ணின் கேள்வியை விரும்பாது காம நுகர்ச்சியை விரும்பும் ஆதலான், 'சிறிது' என்றார்" என்று கூறுகின்றார். பரிமேலழகர் அவர் கருத்தை மேற்கொண்டு "நோயும் காமமும் பெருகுதலால் 'சிறிது' என்றும் கூறினார்" என்று உரைக்கின்றார்.

"உலகம் தழீஇயது" என்ற குறளின் (425) உரையில் மணக்குடவர், "நீர்ப்பூப்போல மலர்தலும் குவிதலும் இன்றி, ஒரு தன்மையாகச் செலுத்துதல் அறிவு" என்று கூறுகிறார். பரிமேலழகர் அக்குறளின் விளக்கவுரையில், "கயப்பூப் போல வேறுபடாது கோட்டுப் பூப்போல ஒரு நிலையே நட்பாயினான் எல்லா இன்பமும் எய்தும் ஆகலின், அதனை அறிவு என்றார்" என்று மணக்குடவர் கருத்தைத் தழுவி எழுதுகின்றார்.

வேறு சில இடங்களில் பரிமேலழகர், மணக்குடவரைப் பெரிதும் மதித்து அவர் உரையையும் கருத்தையும் சுட்டிச் செல்லுகின்றார். அவர் கருத்துப் பொருந்தா இடங்களைக் காரணங்கூறி மறுக்கின்றார். (மேற்குறிப்பு, பக்கங்கள்: 3;6).

மணக்குடவர் உரை அச்சேறிய வரலாறு[தொகு]

முதன்முதல் மணக்குடவர் உரையில் ஒரு பகுதியாகிய அறத்துப்பால் உரையை வெளியிட்ட பெருமை வ.உ. சிதம்பரனாரைச் சாரும். இந்த உரை 1917இல் வெளிவந்தது. 1925இல், மணக்குடவரின் உரை முழுவதையும் கா. பொன்னுசாமி நாட்டார் வெளியிட்டார்.

முதன்முதலாக, பரிமேலழகர் உரை முழுவதும் 1849இல் சென்னையில் எம். வீராசாமியால் பதிப்பிக்கப்பட்டது என்பதைக் கருதும்போது, 19ஆம் நூற்றாண்டின் நடுப்பகுதியிலிருந்து 20ஆம் நூற்றாண்டின் முற்பகுதி வரை மணக்குடவர் உரை பொதுமக்களின் கவனத்திற்கு வராமலே இருந்தது என்பது தெரியவருகிறது.

திருக்குறள் உரை என்றாலே அது பரிமேலழகர் உரைதான் என்னும் உயர்வு நிலையில் - உணர்வு நிலையில் பரிமேலழகரின் உரை தமிழறிந்தார் மனத்தில் ஆட்சி செலுத்தியது. பரிமேலழகர் உரை வைதிக சிந்தனையை உள்ளடக்கியிருந்ததும் இலக்கண நுட்பம் செறிந்ததுமாக விளங்கியது இதற்கு முக்கிய காரணம்.

உரை ஒற்றுமை வேற்றுமைகள்[தொகு]

ச. தண்டபாணி தேசிகர் எழுதிய "திருக்குறள் உரை வளம்" (பின்னர் ஏழு தொகுதிகளாய் அமைந்த "திருக்குறள் உரைக்களஞ்சியம்"), இரா. சாரங்கபாணி எழுதிய "திருக்குறள் உரை வேற்றுமைகள்" (பின்னர், மூன்று தொகுதிகள்), திருப்பனந்தாள் காசிமடம் வெளியிட்ட "திருக்குறள் உரைக் கொத்து", கி.வா. ஜகந்நாதன் வெளியிட்ட "திருக்குறள் ஆராய்ச்சிப் பதிப்பு" போன்றவை 1970-80களில் வெளிவந்தன. இந்நூல்களில் பண்டைய உரையாசிரியர்கள் மற்றும் புதிய உரையாசிரியர்கள் ஆகியோரின் திருக்குறள் உரைகளும் விளக்கங்களும் ஒற்றுமை வேற்றுமை காட்டி வழங்கப்பட்டன.

இவ்வாறு பரிமேலழகர் உரை மட்டுமே ஏற்புடையது என்ற நிலை மாறி, மற்ற உரையாசிரியர்களின் உரைத்திறனும் வளமையும் தெரிய வந்தன. இதனால் மணக்குடவரின் உரையும் அறியப்படலாயிற்று.

மணக்குடவரின் திருக்குறள் அமைப்பு[தொகு]

மணக்குடவர் திருக்குறளை மூன்று பால்களாகக் காண்கின்றார். அறத்துப்ப்பால், பொருட்பால், காமத்துப்பால் என்பன அந்த மூன்று பால்கள் என்னும் பகுதிகள். மணக்குடவரிடம் காணப்படும் அந்த முப்பால் பகுப்பு, அவருக்குப் பின் வந்த பரிப்பெருமாள், பரிதியார், காலிங்கர், பரிமேலழகர் ஆகிய பழைய உரையாசிரியர்களின் உரைகளிலும் காணப்படுகின்றது.

இந்த முப்பால் பகுப்பு, எல்லா உரைகளிலும் ஒன்றாக இருப்பதாலும், திருக்குறளுக்கு முப்பால் என்பதே முதற்பெயராக இருந்துள்ளதாலும், வாழ்க்கையின் உறுதிப் பொருள்களாகத் தமிழர்கள் இந்த மூன்றையே இலக்கண இலக்கியங்களில் வெளிப்படுத்தியிருப்பதாலும், மரபு வழியாக - வழிவழியாக - திருக்குறளில் இந்த முப்பால் பகுப்பே இருந்துள்ளது எனக் கொள்ளலாம்.

வேறு சான்றாதாரங்கள் கிடைக்கும் வரை, அறத்துப்பால், பொருட்பால், காமத்துப்பால் என்னும் முப்பால் பகுப்பைத் திருவள்ளுவரே செய்திருப்பார் என்றும் கொள்ளலாம்[2].

முப்பாலுக்குள் நாற்பால் காணும் முயற்சி[தொகு]

திருக்குறள் அறம், பொருள், காமம் என்னும் முப்பால் பிரிவைக் கொண்டதாயினும், அப்பால்களுக்குள் நான்காவது பாலாக "வீடு" என்பதைக் காணும் முயற்சி பழைய உரையாசிரியர்களிடம் தெரிகிறது. இதைப் பரிமேலழகர் செய்வதற்கு முன்னரே மணக்குடவர் செய்துள்ளார். அவரது உரையில்,

புருடார்த்தமாகிய தன்மார்த்த காம மோட்சங்களுள் முதன் மூன்றனையும் வழுவாதொழுகவே மோட்சம் எய்தலான், அதற்கு வேறு வகுத்துக் கூற வேண்டுவது இன்மையின், அஃது ஒழித்துத் தன்மார்த்த காமப் பகுதிகளை அறத்துப்பால், பொருட்பால், காமத்துப்பால் என்று பெயர் கூறுவார்...

என்று மணக்குடவர் விளக்குகிறார்.

அதுபோலவே பழைய உரையாசிரியர் பரிப்பெருமாளும் கூறுகின்றார்.

திருக்குறளைப் புருடார்த்த வரையறைக்குள் கொண்டு வருகின்ற பரிமேலழகர் கூற்று[3] யாவரும் அறிந்ததே:

இந்திரன் முதலிய இறையவர் பதங்களும், அந்தம் இல் இன்பத்து அழிவில் வீடும் நெறியறிந்து எய்துதற்குரிய மாந்தர்க்கு உறுதி என உயர்ந்தோரால் எடுக்கப்பட்ட பொருள் நான்கு. அவை, அறம், பொருள், இன்பம், வீடு என்பன. அவற்றுள் வீடு என்பது சிந்தையும் மொழியும் செல்லா நிலைமைத்து ஆதலில், துறவறமாகிய காரண வகையாற் கூறப்படுவது அல்லது இலக்கண வகையாற் கூறப்படாமையின் நூற்களாற் கூறப்படுவன ஏனை மூன்றுமேயாம்.

இப்பார்வை, திருவள்ளுவரை ஒரு "தெய்வ" நிலைக்கு உயர்த்தும் முயற்சி இருந்ததையே சுட்டுகிறது.

முப்பால்களில் இயல் பகுக்கும் முறையில் வேற்றுமை[தொகு]

திருக்குறளின் அடிப்படைப் பிரிவாகிய அறத்துப்பால், பொருட்பால், காமத்துப்பால் என்னும் பிரிவு முறை வள்ளுவராலேயே செய்யப்பட்டது என்று கொண்டாலும், அந்த மூன்று பால்களின் உட்பிரிவாகிய "இயல்"கள் எவ்வாறு பிரிக்கப்படுகின்றன என்னும் போது பழைய உரையாசிரியர்கள் நடுவில் கூட பல வேற்றுமைகள் உள்ளன.

மணக்குடவர் அறத்துப்பாலைப் பிரிக்கும் முறை[தொகு]

பண்டைய திருக்குறள் உரையாசிரியர்களுள் காலத்தால் முந்தியவரான மணக்குடவர் அறத்துப்பாலைப் பாயிரவியல், இல்லறவியல், துறவறவியல், ஊழியல் என்று நான்காகப் பகுத்துள்ளார்.

அதே முறையைப் பரிப்பெருமாள், பரிதியார், காலிங்கர் மற்றும் பரிமேலழகர் பின்பற்றுகின்றனர்.

இவ்வாறு அறத்துப்பாலைப் பாயிரவியல், இல்லறவியல், துறவறவியல், ஊழியல் என நான்காகப் பகுத்துக் காணும் போக்கு மணக்குடவருக்கு முன் அல்லது அவரது காலத்தில் உருவாக்கம் பெற்றுவிட்டதைக் காண முடிகின்றது. இந்தப் பகுப்பை மணக்குடவரே உருவாக்கியிருக்கவும் கூடும். ஆனால் அதற்கான உறுதியான சான்றுகள் இல்லை.

பழைய உரையாசிரியர்கள் காலமான 300 ஆண்டுக் காலமும் இந்த மரபே தொடர்ந்துள்ளது. அதன் பின்னரும் பத்தொன்பதாம் நூற்றாண்டின் இறுதிக் காலத்தில் சுகாத்தியர் உரை வரும் வரையிலும் (1889) இந்த மரபே தொடர்ந்துள்ளது.

இங்கே பரிமேலழகர் ஒரு உட்பிரிவைப் புகுத்தியுள்ளார். அதாவது, அறப்பாலின் நான்காம் இயலாகிய துறவறவியலை இவர் விரதம், ஞானம் என இரண்டாகப் பகுத்துக் கொள்கிறார். இந்த மாற்றம் மற்ற பழைய உரையாசிரியர்களிடம் காணப்படாத ஒன்று ஆகும்.

மணக்குடவர் பொருட்பாலைப் பிரிக்கும் முறை[தொகு]

பொருட்பாலை மணக்குடவர் பின்வருமாறு பகுக்கின்றார்:

இயல் பெயர்அதிகாரங்கள் அமைப்பு
அரசியல்39 முதல் 63 முடிய
அமைச்சியல்64 முதல் 73 முடிய
பொருளியல்74 முதல் 78 முடிய
நட்பியல்79 முதல் 83 முடிய
துன்பவியல்84 முதல் 95 முடிய
குடியியல்96 முதல் 108 முடிய

இந்தப் பாகுபாட்டைப் பரிப்பெருமாள் அப்படியே பின்பற்றுகின்றார். ஆனால், காலிங்கள் இவர்களிலிருந்து மாறுபட்டு,

அரசியல் - 38 முதல் 63 அதிகாரங்கள்
அமைச்சியல் - 64 முதல் 108 அதிகாரங்கள்

என்று இரு இயல்களாக மட்டுமே பகுக்கின்றார். இவ்வாறு, பரிப்பெருமாள் அமைச்சியல் என்பதில் மணக்குடவர் சுட்டும் ஐந்து பகுப்புகளை ஒன்றாக்கிக் கொள்கின்றார்.

பரிமேலழகர் மேற்கூறிய இரண்டு பாகுபாட்டு முறைகளிலிருந்து வேறுபட்டுப் புதியதொரு பகுப்பு முறையை உண்டாக்கிக் கொள்கிறார். அப்பகுப்பு முறை வருமாறு:

இயல் பெயர்அதிகாரங்கள் அமைப்பு
அரசியல்39 முதல் 63 முடிய
அமைச்சியல் (அங்கவியல்)64 முதல் 95 முடிய
ஒழிபியல்96 முதல் 108 முடிய

மணக்குடவரின் பகுப்பு முறையிலிருந்து காலிங்கரும் பரிமேலழகரும் வேறுபடுகின்றார்கள் என்றாலும், அவர்கள் அதிகார வைப்பு முறைகளை மாற்றிவிடவில்லை. அதிகார வைப்பு முறைகளை அப்படியே வைத்துக்கொண்டு, பகுப்பதில் தான் வேறுபடுகின்றார்கள்.

இவர்களை அடுத்து வரும் திருவள்ளுவமாலைப் புலவர் போக்கியார், பொருட்பாலைப் பின்வருமாறு ஏழாகப் பகுப்பதைக் காண முடிகின்றது: அரசியல்
அமைச்சியல்
அரணியல்
பொருளியல்
படையியல்
நட்பியல்
குடியியல்

இந்த அமைப்பு முறை, பொருட்பாலில் வரும் முதல் அதிகாரத்தோடு பொருந்த வருகின்றது. இந்தப் பகுப்பே இன்று பெரிதும் பின்பற்றப்படுகின்றது.

 



__________________


Guru

Status: Offline
Posts: 7602
Date:
Permalink  
 

மணக்குடவர் காமத்துப்பாலைப் பிரிக்கும் முறை[தொகு]

காமத்துப்ப்பால் இயல் பகுப்பில் உரையாசிரியர்களிடையே பெருத்த வேறுபாடு காணப்படுகின்றது. மணக்குடவர் காமத்துப்பாலைக் குறிஞ்சி, பாலை, முல்லை, நெய்தல், மருதம் எனப் பகுத்து ஒவ்வோர் இயலுக்கும் ஐந்தைந்து அதிகாரங்களாகக் கொண்டுள்ளார் என்பர். இதை,

காமத்துப்பால் கூறுவார் குறிஞ்சி, பாலை, முல்லை, நெய்தல், மருதம் என்னும் ஐந்திணையும் முதல் கரு உரிப்பொருள் பற்றிப் புணர்தலும் புணர்தல் நிமித்தமும் குறிஞ்சி எனவும், பிரிதலும் பிரிதல் நிமித்தமும் பாலை எனவும், இருத்தலும் இருத்தல் நிமித்தமும் முல்லை எனவும், இரங்கலும் இரங்கல் நிமித்தமும் நெய்தல் எனவும், ஊடலும் ஊடல் நிமித்தமும் மருதம் எனவும் ஒரோ ஒரு நிலம் ஐந்து அதிகாரமாக இருபத்தைந்து அதிகாரத்தான் கூறி

என வரும் மணக்குடவர் கூற்றுவழி அறிய முடிகின்றது.

காலிங்கரும் பரிமேலழகரும் வேறு வகையில் காமத்துப்பாலின் இயல்களைப் பிரிக்கின்றனர்.

மணக்குடவர் அமைப்புப்படி இயலுக்குள் வரும் அதிகார வைப்பு முறை[தொகு]

திருக்குறளின் இயல்களில் வரும் அதிகார வைப்புகளிலும், அதிகார முறை வைப்புகளிலும் மணக்குடவர் போக்குக்கும் பிற பழைய உரையாசிரியர்களின் போக்குக்கும் வேறுபாடுகள் உள்ளன.

இனியவை கூறல்
அடக்கமுடைமை
அழுக்காறாமை
வெஃகாமை
புறங்கூறாமை

ஆகிய ஐந்து அதிகாரங்களைத் துறவறவியலுள் முறையே 26, 27, 30, 31, 32 -ஆவது அதிகாரங்களாக மணக்குடவர் அமைத்துள்ளார்.

ஆனால், ஏனைய உரையாசிரியர்கள் இந்த அமைப்பு முறையை மாற்றி, இவற்றை இல்லறவியலில் முறையே 10, 13, 17, 18, 19 - ஆம் அதிகாரங்களாக அமைத்துள்ளார்கள்.

அதேபோல், மணக்குடவர் இல்லறவியலில் வாய்மை, வெகுளாமை, இன்னா செய்யாமை, கொல்லாமை, புலால் மறுத்தல், கள்ளாமை என்னும் அதிகாரங்களை முறையே 10, 16, 17, 18, 19, 20 ஆம் அதிகாரங்களாக அமைத்திருக்க, ஏனைய உரையாசிரியர்கள் அவற்றை மாற்றி, துறவறவியலில் முறையே 30, 31, 32, 33, 26, 29 -ஆம் அதிகாரங்களாக அமைத்துள்ளார்கள்.

மணக்குடவரின் குறள் வைப்பு முறை[தொகு]

அதிகாரங்களுக்குள் வரும் குறள்களை வரிசைப்படுத்தி வைப்பதில் மணக்குடவர் ஒரு முறையைக் கையாளுகின்றார். ஆனால் பிற பழைய உரையாசிரியர்கள் ஒவ்வொருவரும் அவரவர் எண்ணப்படி குறள் வைப்பு வரிசைமுறையை மாற்றியுள்ளார்கள்.

திருக்குறளின் முதல் அதிகாரத்தை எடுத்துக்காட்டாகப் பார்க்கலாம்:

திருக்குறள் முதல் அதிகாரத்தில் வரும் குறள்களின் முதல் சீர்கள்மணக்குடவர் வைப்பு முறைபரிப்பெருமாள் வைப்பு முறைபரிதியார் வைப்பு முறைகாலிங்கர் வைப்பு முறைபரிமேலழகர் வைப்பு முறை
அகர முதல எழுத்தெல்லாம்11111
கற்றதனால் ஆய பயன் என்கொல்22222
மலர்மிசை ஏகினான் மாணடி சேர்ந்தார்33333
வேண்டுதல் வேண்டாமை இலான் அடி சேர்ந்தார்க்கு66574
இருள் சேர் இருவினையும் சேரா77665
பொறிவாயில் ஐந்தவித்தான் பொய்தீர் ஒழுக்க88776
தனக்கு உவமை இல்லாதான் தாள் சேர்ந்தார்க்கு44647
அற ஆழி அந்தணன் தாள் சேர்ந்தார்க்கு551098
கோளில் பொறியில் குணமிலவே1010859
பிறவிப் பெருங்கடல் நீந்துவர்9991010

மணக்குடவர் கொள்ளும் திருக்குறள் பாடமும் வேறுபாடுகளும்[தொகு]

தலைமுறை தலைமுறையாக ஓலைச் சுவடிகளில் எழுதப்பட்டு வந்த திருக்குறளின் படிகள் பல பாட வேறுபாடுகளைக் கொண்டிருப்பதில் வியப்பில்லை.

என்றாலும், மணக்குடவர் திருக்குறளின் முதல் உரையாசிரியராக விளங்குவதால் அவர் கையாளுகின்ற மூல பாடத்தை அடிப்படையாகக் கொண்டு பார்த்தால் அவருடைய மூல பாடத்திலிருந்து, பின் வந்த பழைய உரையாசிரியர்கள் பின்வரும் எண்ணிக்கையில் வேறுபடுவதை அறிய முடிகிறது:

மணக்குடவர் குறள் பாடத்திலிருந்து வேறுபாடுகள்

உரையாசிரியர்குறள் பாட வேறுபாடுகளின் எண்ணிக்கை
பரிப்பெருமாள்16
பரிதியார்20
காலிங்கர்171
பரிமேலழகர்120

மேலே காட்டிய பட்டியலிலிருந்து காலிங்கரும் பரிமேலழகரும் தாம் விரும்பியவாறு பாடங்களை மாற்றியுள்ளனர் என அறிய முடிகின்றது. இந்தப் பாட வேறுபாடுகளுக்கு ஒருவேளை அவர்களுக்குக் கிடைத்த சுவடிகளும் காரணமாக இருக்கலாம்.

மணக்குடவர் ஆய்வின் பயன்[தொகு]

எனவே, திருக்குறளின் பால் பகுப்பில் (அறம், பொருள், காமம்) பழைய உரையாசிரியர்கள் ஒத்த கருத்துடையவர்களாய் இருப்பது தெளிவு. பால் பகுப்பைத் திருவள்ளுவரே செய்திருப்பார் என்று நம்ப இடமிருக்கிறது.

ஆனால், இயல், அதிகாரம், அதிகாரங்களில் வரும் குறட்பாக்கள் ஆகிய இவற்றின் வைப்பு முறையில் பழைய உரையாசிரியர்கள் வேறுபடுகின்றனர். அதுபோலவே, அவர்களிடையே பாட வேறுபாடுகளும் பல காணப்படுகின்றன.

இதிலிருந்து, பிற்காலத்தில் திருக்குறளுக்கு முறை மாறிய உரைகள் எழுந்ததற்கு வித்திட்டவர்கள் பழைய உரையாசிரியர்களே என்பது தெளிவாகிறது.

மேலும் காண்க[தொகு]

மணக்குடவர் (திருக்குறள் உரையாசிரியர்)
திருக்குறள் பழைய உரைகள்
திருக்குறள் வைப்புமுறை
திருக்குறள் அமைப்பும் முறையும் (நூல்)

ஆதாரங்கள்[தொகு]

  1.  திருக்குறள் மணக்குடவர் உரை (பதிப்பாசிரியர்: ச. மெய்யப்பன்), மணிவாசகர் பதிப்பகம், சென்னை, 2003, பக்கங்கள்: 370.
  2.  கு. மோகனராசு, முறை மாறிய திருக்குறள் உரைகள், மணிவாசகர் பதிப்பகம், 2005, பக். 12-13.
  3.  முனைவர் இரா. சாரங்கபாணி, திருக்குறள் பரிமேலழகர் உரை, தொகுதி 1 அறத்துப்பால், மணிவாசகர் பதிப்பகம், சென்னை, இரண்டாம் பதிப்பு, 2003, பக். 33).


__________________
Page 1 of 1  sorted by
 
Quick Reply

Please log in to post quick replies.



Create your own FREE Forum
Report Abuse
Powered by ActiveBoard