பற்றுக பற்றற்றான் பற்றினை அப்பற்றைப் பற்றுக பற்று விடற்கு. (அதிகாரம்:துறவு குறள் எண்:350 மணக்குடவர் உரை: பற்றறுத்தானது பற்றினைப் பற்றுக; அதனைப் பற்றுங்கால் பயன் கருதிப் பற்றாது பற்று விடுதற்காகப் பற்றுக. பற்றற்றான் பற்றாவது தியான சமாதி. பின் மெய்யுணர்தல் கூறுதலான், இது பிற்படக் கூறப்பட்டது. பதவுரை: பற்றுக-மனத்துக் கொள்க; பற்றற்றான்-பற்று இல்லாதவனது; பற்றினை-பற்றப் படுவதாகிய(கடவுட்) பற்றினை; அப்பற்றைப்-(விரும்ப வேண்டிய)உபாயத்தை; பற்றுக-(தொடர்ந்து) பற்றிக்கொண்டிருக்க, பிடித்துக்கொண்டிருக்க; பற்று-(உலகப்பொருள்கள் மீதான) பற்று; விடற்கு-நீங்குதற்காக. இப்பகுதிக்குத் தொல்லாசிரியர்கள் உரைகள்: மணக்குடவர்: பற்றறுத்தானது பற்றினைப் பற்றுக; மணக்குடவர் குறிப்புரை: பற்றற்றான் பற்றாவது தியான சமாதி. பின் மெய்யுணர்தல் கூறுதலான், இது பிற்படக் கூறப்பட்டது. [தியானம் - கடவுளிடத்து விட்டு விட்டுச் செல்லும் மன முதலிய அகக் கருவிகளின் ஓட்டம்; சமாதி - மனம் முதலியன ஒருமுகப்படுதல்.] பரிப்பெருமாள்: பற்றறுத்தான் பற்றினவதனைப் பற்றுக; பரிப்பெருமாள் குறிப்புரை: பற்றற்றான் பற்றாவது தியான சமாதி. பின் மெய்யுணர்தல் கூறுதலான், இது பிற்கூறப்பட்டது. பரிதி: காரணவுபாதி எழுகாரியத்தில் பற்றற்றான் ஸ்ரீபாதத்தைப் பற்றுக; காலிங்கர்: ஒருவர் தமதுள்ளத்தால் பற்றுடையராக வேண்டும்; மற்று யாதினை எனின் முன்னஞ் சொன்ன முறைமையின் எப்பற்றும் அற்றேன் யாதோர் இன்பத்தைப் பற்றி நின்றான்; மற்று அதனைத் தானும் உறுதற்கு மற்று இனி முன்னம் தனது உள்ளத்தினால் முயல்வதாக வந்து பற்றினானன்றே; பரிமேலழகர்: எல்லாப் பொருளையும் பற்றி நின்றே பற்றற்ற இறைவன் ஓதிய வீட்டு நெறியை இதுவே நன்னெறி என்று மனத்துக் கொள்க; பரிமேலழகர் குறிப்புரை: கடவுள் வாழ்த்திற்கு ஏற்ப ஈண்டும் பொதுவகையால் பற்றற்றான் என்றார். பற்று அற்றான் பற்று என்புழி ஆறாவது செய்யுட் கிழமைக்கண் வந்தது. ஆண்டுப் பற்று என்றது, பற்றப்படுவதனை. அதன்கண் உபாயம் என்றது, தியான சமாதிகளை. 'விடாது வந்த பற்று' என்பது அநாதியாய் வரும் உடம்பின் பற்றினை. அப்பற்று விடுதற்கு உபாயம் இதனால் கூறப்பட்டது.
'பற்றறுத்தானது பற்றினைப் பற்றுக' என்ற பொருளில் பழம் ஆசிரியர்கள் இப்பகுதிக்கு உரை நல்கினர். பரிதி பற்றற்றான் என்றது இறைவனைக் குறித்ததாகக் கொள்கிறார். இதைப் பரிமேலழகர் 'பற்றற்ற இறைவன்' என விளக்குவார். இன்றைய ஆசிரியர்கள் 'பற்றில்லாத இறைவனைப் பற்றிக் கொள்க', 'அவ்வகைப் பற்று இல்லாதவனாகிய இறைவனை இறுகப் பற்றிக் கொள்க', 'ஆசைகளினின்று விடுபடுவதற்கு ஆசைகளே இல்லாதவனாகிய பகவானுடைய தொடர்பைப் பிடித்துக் கொள்க', 'ஒரு பொருளிலும் பற்றில்லாத முதல்வனை அடைதற்குரிய அன்பினை மேற்கொள்ளுக' என்றபடி இப்பகுதிக்கு உரை தந்தனர்.
யாதொரு பற்றும் இல்லாத இறைவனைப் பற்றிக் கொள்க என்பது இப்பகுதியின் பொருள்.
வகுத்தான் வகுத்த வகையல்லால் கோடி தொகுத்தார்க்கும் துய்த்தல் அரிது (அதிகாரம்:ஊழ் குறள் எண்:377) மணக்குடவர் உரை: விதானம் பண்ணினவன் விதானம் பண்ணின வகையினானல்லது கோடி பொருளை யீட்டினவர்க்கும் அதனால் வரும் பயன்கோடல் அருமையுடைத்து. இது பொருள் பெற்றாலும் நுகர்தற்கு ஊழ்வேண்டுமென்றது. பதவுரை: வகுத்தான்-வகைசெய்தவன். ஊழை வகுத்தவன், கடவுள்; வகுத்த-திட்டம் செய்த; வகை-கூறுபாடு; அல்லால்-அன்றி; கோடி-கோடி, நூறு நூறாயிரம்; தொகுத்தார்க்கும்-திரட்டினவர்க்கும்; துய்த்தல்-நுகர்தல்; அரிது-அருமையானது, உண்டாகாது. மணக்குடவர்: விதானம் பண்ணினவன் விதானம் பண்ணின வகையினானல்லது; பரிப்பெருமாள்: தானம் பண்ணினவன் தானம் பண்ணின வகையினானல்லது; பரிப்பெருமாள் குறிப்புரை: வகுத்தான் என்பதை யூழ்வினைக் கிழவன் என்பாருமுளர். பரிதி: இவனுக்குப் பொசிப்பாகிய ஆகிறஊழ், அழிகிறஊழ் என்னும் முறைமையிலே இவன் பொசிப்பதன்றியிலே; காலிங்கர்: அதனால் முன்னஞ் செய்தார் செய்தவினை வகையால் துய்த்தவல்லது; பரிமேலழகர்: தெய்வம் வகுத்த வகையான் அல்லது; பரிமேலழகர் குறிப்புரை: ஓர் உயிர் செய்த வினையின் பயன் பிறிதோர் உயிரின்கண் செல்லாமல் அவ்வுயிர்க்கே வகுத்தலின், வகுத்தான் என்றார். 'இசைத்தலும் உரிய வேறிடத்தான' (தொல்.சொல் 59) என்பதனான் உயர்திணையாயிற்று. 'விதானம் பண்ணினவன்/முன்னஞ் செய்தார்/தெய்வம் வகுத்த வகையான் அல்லது' என்ற பொருளில் பழம் ஆசிரியர்கள் இப்பகுதிக்கு உரை நல்கினர். இன்றைய ஆசிரியர்கள் 'அமைத்தவன் அமைத்த நெறிப்படி யல்லது', 'ஊழ் வகுத்த முறைப்படி பொருள்களை நுகரலாமே யன்றி', 'விதிக்கக்கூடிய (தெய்வமாகிய) ஊழ்வினை விதிக்கிற அளவுக்கும் விதத்துக்கும் அதிகமாக', 'கடவுள் விதித்த வகையால் அல்லாமல்' என்றபடி இப்பகுதிக்கு உரை தந்தனர்.
ஊழை வகுத்தவன் அமைத்த முறைப்படியன்றி என்பது இப்பகுதியின் பொருள்.
இரந்தும் உயிர்வாழ்தல் வேண்டின் பரந்து கெடுக உலகியற்றி யான் (அதிகாரம்:இரவு அச்சம் குறள் எண்:1062) பொழிப்பு: உலகத்தைப் படைத்தவன் உலகில் சிலர் இரந்தும் உயிர்வாழுமாறு ஏற்படுத்தியிருந்தால், அவன் இரப்பவரைப் போல் எங்கும் அலைந்து கெடுவானாக! மணக்குடவர் உரை: துப்புரவு இல்லாக்கால் இறந்துபடாதே பிறர்மாட்டு இரந்து கொண்டும் உயிர் வாழ்தல் வேண்டுமாயின், உலக நடையை இவ்வாறாகக் கற்பித்த முதல்வன் மிகக் கெடுவானாக வேண்டும். இஃது இரக்குமதனின் இறத்தல் அமையு மென்றது. பரந்து கெடுக உலகியற்றி யான்: பதவுரை: பரந்து-எங்கும் அலமந்து; கெடுக-அழிவானாக; உலகு-உலகம்; இயற்றியான்-படைத்தவன். பொருள்: உலகத்தைப் படைத்தவன் மிகக் கெட்டு அலைவானாக.
'உலக நடையை இவ்வாறாகக் கற்பித்த முதல்வன் மிகக் கெடுவானாக வேண்டும்' என்று மணக்குடவர் இத்தொடர்க்கு உரை தந்தார். பரிதியார் 'பிரமன் திரிந்து கெடுக' என்கிறார். காலிங்கர் 'இவ்வுலகினைப் படைத்தோன் தான் உயிர் வாழாது பரந்துகெட்டு விடுக' என்று உரை பகன்றார். பரிமேலழகர் 'இவ்வுலகத்தைப் படைத்த அக்கொடியோன் தானும் அவரைப் போன்று எங்கும் அலமந்து கெடுவானாக' எனச் சொல்லி படைத்தவனும் அத்தீவினையால் அத்துன்பமுறல் வேண்டும் என்று விளக்கமும் தருகிறார். பதவுரை: இரந்தும்-பிச்சையெடுத்தும்; உயிர்வாழ்தல்-உயிரோடி இருத்தல்; வேண்டின்-விரும்பினால். பரந்து-எங்கும் அலமந்து; கெடுக-அழிவானாக; உலகு-உலகம்; இயற்றியான்-படைத்தவன். இயற்றியான் யார்? இயற்றியான் என்றது கடவுளையே குறித்ததாகப் பெரும்பான்மையோர் கூறினர். அவர்கள் நற்றிணை, புறநானூற்றுப் பாடல்களில் உலகைப் படைத்தவனைப் பழித்துக் கூறும் வரிகள மேற்கோள் காட்டுவர்: ஐதேகு அம்ம இவ் உலகு படைத்தோனே (நற்றிணை 240) "என் முயக்கத்தை வெறுத்துச் செல்லுதலால் என்னுடம்பு துயில் கொள்ளாது இடையீடுபடுவதாயினும் அவர் சென்ற காடு மலைபோல அச்சத்தைத் தாரா நின்றது; அதனைப் படைத்த கொடியோன்றானும் அதன் கண்ணே சென்று மிகுந்த துன்புற்று வருந்துவானாக" என்று பிரிவின்கண் மெலிவுற்ற தலைமகள் நொந்து கூறிய பாடலில் படைத்தவன் சபிக்கப்படுகிறான். உலகு படைத்தவனைப் பழித்துப்பாடும் இன்னொரு சங்கப்பாடல்: ஓர் இல் நெய்தல் கறங்க, ஓர் இல் ஈர்ந் தண் முழவின் பாணி ததும்ப, புணர்ந்தோர் பூ அணி அணிய, பிரிந்தோர் பைதல் உண்கண் பனி வார்பு உறைப்ப, படைத்தோன் மன்ற, அப் பண்பிலாளன்! இன்னாது அம்ம, இவ் உலகம்; இனிய காண்க, இதன் இயல்பு உணர்ந்தோரே.(புறம், 194:5) (பொருள்: .ஒருமனையின்கண்ணேசாக்காட்டுப்பறை ஒலிப்ப ஒரு மனையின் கண்ணே மணத்திற்குக்கொட்டும் மிகக்குளிர்ந்த முழவினது ஓசை மிக ஒலிப்பக் காதலரோடு கூடின மகளிர் பூவணியை யணியப்பிரிந்த மகளிரது வருத்தத்தையுடைய உண்கண்கள் நீர்வார்ந்து துளிப்ப இப்பரிசு ஒத்து ஒவ்வாமைப்படப் படைத்தான் நிச்சிதமாக, அப்பண்பில்லாதோனாகியவன்; )
மெய் வருத்த கூலி தரும் - குறள் 619 ஆள்வினையுடைமை மணக்குடவர் உரை: புண்ணியம் இன்மையால் ஆக்கம் இல்லையாயினும் ஒருவினையின் கண்ணே முயல்வானாயின் முயற்சி தன்னுடம்பினால் வருந்திய வருத்தத்தின் அளவு பயன் கொடுக்கும். இது புண்ணியமில்லையாயினும் பயன் கொடுக்கும் என்றது. மு. கருணாநிதி உரை: கடவுளே என்று கூவி அழைப்பதால் நடக்காத காரியம் ஒருவர் முயற்சியுடன் உழைக்கும் போது அந்த உழைப்புக் கேற்ற வெற்றியைத் தரும். சாலமன் பாப்பையா உரை:விதி நமக்கு உதவ முடியாது போனாலும், முயற்சி நம் உடல் உழைப்பிற்கு ஏற்ற பலனைத் தரும்.
வையத்துள் வாழ்வாங்கு வாழ்பவன் வான் உறையும் தெய்வத்துள் வைக்கப்படும் - குறள் 50 இல்வாழ்க்கை மணக்குடவர் உரை: இல்வாழ்க்கை வாழும்படியிலே வாழுமவன் உலகத்திலே தேவருள் ஒருவனாக மதிக்கப்படுவன். இவன் எல்லாராலும் நன்கு மதிக்கப்படுவ னென்றவாறு. கலைஞர் உரை: தெய்வத்துக்கென எத்தனையோ அருங்குணங்கள் கூறப்படுகின்றன. உலகில் வாழ வேண்டிய அறநெறியில் நின்று வாழ்கிறவன் வானில் வாழ்வதாகச் சொல்லப்படும் தெய்வத்துக்கு இணையாக வைத்து மதிக்கப்படுவான். சாலமன் பாப்பையா உரை:மனைவியுடன் வாழும் வாழ்க்கையைச் சிறப்பாக வாழ்பவன், பூமியில் வாழ்ந்தாலும், வானத்துள் வாழும் தேவருள் ஒருவனாகவே மதிக்கப்படுவான்
தென்புலத்தார் தெய்வம் விருந்து ஒக்கல் தான் என்று ஆங்கு ஐம்புலத்து ஆறு ஓம்பல் தலை - குறள் 43 இல்வாழ்க்கை மணக்குடவர் உரை: பிதிரர், தேவர், புதியராய் வந்தார், சுற்றத்தார், தானென்னு மைந்திடமாகிய நெறியைக் கெடாம லோம்புதல் தலையான இல்வாழ்க்கை. தனக்குண்டான பொருளை ஆறு கூறாக்கி ஒருகூறு அரசற்குக் கொடுத்து ஒழிந்தவைந்து கூறினுந் தான் கொள்வது ஒரு கூறென்றற்குத் தன்னையு மெண்ணினார். இது தலையான இல்வாழ்க்கை வாழும் வாழ்வு கூறிற்று: என்னை? இவையெல்லா மொருங்கு செய்யப்படுதலின் மேற்கூறிய அறுவரும் விருந்தினது வகையினரென்று கொள்ளப்படுவர். சாலமன் பாப்பையா உரை:இறந்து தென்திசையில் வாழ்பவர், தேவர்கள், விருந்தினர், சுற்றத்தார், தான் என்னும் ஐந்து பேருக்கும் செய்ய வேண்டிய அறத்தைத் தவறாமல் செய்வது சிறப்பு.
தெய்வம் தொழாஅள் கொழுநன் தொழுது எழுவாள் பெய் என பெய்யும் மழை - குறள் 55 வாழ்க்கைத் துணைநலம் மணக்குடவர் உரை: தெய்வத்தைத் தெய்வமென்று தொழாளாய், எல்லாத் தெய்வமுந் தன்கணவனென்றே கருதி, அவனை நாடோறுந் தொழுதெழுமவள் பெய்யென்று சொல்ல மழை பெய்யும். சாலமன் பாப்பையா உரை:பிற தெய்வங்களைத் தொழாமல் கணவனையே தெய்வமாகத் தொழுது வாழும் மனைவி, பெய் என்று சொன்னால் மழை பெய்யும்.
குடி செய்வல் என்னும் ஒருவற்கு தெய்வம் மடி தற்று தான் முந்துறும் - குறள் 1023 குடிசெயல்வகை மணக்குடவர் உரை:குடியை யோம்புவனென்று கருதி முயலுமவனுக்குத் தெய்வம் மடிதற்றுக் கொண்டு தான் முற்பட்டு முயலும். மடிதற்றல் - தொழில்செய்வார் ஆடையை இறுக உடுத்தல்.
திருக்குறள், சங்ககாலம், அகம், புறம் மற்றும் எல்லா இலக்கியக் காலங்களுக்கு முன்பே தமிழர் வாழ்வில் இந்துமதம் தோன்றியது சங்க இலக்கியங்களில் இறைமையின் இருப்பு நிலை!
1.இறைமையும் அறமும்
அறத்தினை இறைவனாக உருவகப்படுத்திக் கூறுவது உலகின் பல்வேறு நாடுகளிலும் இருந்து வரும் வழக்கமாகும். பண்டைத் தமிழரும் இம்மரபினைப் போற்றியுள்ளனர்.
• பண்டைய இலக்கியங்களும் அறக்கடவுளும்
தொல்காப்பியத்திலும் அறக்கடவுள் பற்றிய குறிப்பு இடம்பெற்றுள்ளது .
அறன் அழித்துரைத்தல் ஆங்கு நெஞ்சு அழிதல் (தொல். பொருள்: 270) என்பதில் அறக் கடவுளைப் பற்றித் தொல்காப்பியர் குறிப்பிடுகிறார்.
புறநானூற்றிலும் அறக்கடவுள் பற்றிய செய்தி உள்ளது. வெள்ளைக்குடி நாகனார் என்னும் புலவர் கிள்ளிவளவன் என்னும் மன்னனை அறக்கடவுள் போல், நீதி வழங்குவாயாக என்று வேண்டுவதாக ஒரு பாடல் இடம் பெற்று உள்ளது.
அறம் புரிந்தன்ன செங்கோல் நாட்டத்து (புறம்: 35)
(அன்ன = போல, நாட்டத்து =ஆராய்ந்தால்)
என்ற பாடல் வரி இதை மெய்ப்பிக்கிறது. வள்ளுவரும் அறத்தை இறைவனாக உருவகப்படுத்தியுள்ளார்.
2.இன்பமும் அறமும்
பண்டைத் தமிழர் அறம் என்பதை ஒரு வாழ்க்கை நெறியாகவே கருதிப் போற்றினர். ஒழுக்க நெறிக்கு உரிய விதிமுறைகளின் தொகுப்பாகவே அறம் கொள்ளப்பட்டது. இத்தகைய மரபில் வந்தவர் வள்ளுவர்.
அறத்தோடு வாழ்ந்தால் இன்பம் கிடைக்கும். அந்த இன்பம் நிலையான இன்பம். உண்மையான இன்பம். அறத்திற்குப் புறம்பான வகையில் வரும் இன்பம் உண்மையானது அல்ல. தற்காலிகமானது. எனவே இன்பம், பேரின்பம் என்பது அறத்தால்தான் வரும் என்கிறார் வள்ளுவர். இதனை
அறத்தான் வருவதே இன்பம்மற்று எல்லாம் புறத்த புகழும் இல (குறள்:39)
(மற்று = பிற, புறத்த = புறம்பானவை) என்ற குறள் மூலம் குறிப்பிடுகிறார்.
மேற்குறிப்பிட்ட குறளுக்குப் பொருள் கூறும் சிலர், வள்ளுவரால் இங்குக் குறிக்கப்படும் இன்பம் சிற்றின்பமே என்பர். இந்த உலகத்தில் வாழும் இல்லற வாழ்க்கையிலேயே வாழவேண்டிய அறநெறியில் வாழ்ந்தால் தெய்வத்தோடு வைத்து எண்ணக்கூடிய சிறப்பைப் பெறலாம் என்று இன்னொரு குறளில் (குறள்: 50) குறிப்பிடுகிறார். எனவே, இங்கு, இக்குறளில் இன்பம் என்பது இரண்டு வகையான இன்பத்தையுமே சுட்டுகிறார் என்று கொள்ளலாம்.
இன்பத்தைச் சிற்றின்பம், பேரின்பம் என பாகுபாடு செய்வர். இவற்றில் சிற்றின்பம் என்பது இல்லற வாழ்க்கையில் கிடைப்பது என்றும், பேரின்பம் என்பது வீடு (heaven) பேற்றில் கிட்டுவது என்றும் பொதுவாகச் சமயச் சார்புடையவர்கள் குறிப்பிடுவர்.
அறத்தோடு வாழுங்கள். அவ்வாறு வாழ்ந்தால், இவ்வுலக இன்பத்தை மட்டும் அல்லாமல், மேல் உலக இன்பத்தை, அதாவது வீடுபேற்றில் பெறும் பேரின்பத்தையும் அடையலாம் என்கிறார் வள்ளுவர்.
அறத்தோடு வாழச் சொல்வது சரி. ஆனால், ஆமாம், அறன் என்றால் என்ன? இதோ வள்ளுவரின் விளக்கம்:
வள்ளுவர் அறத்துக்குக் கூறும் விளக்கம் புரிகிறதா? இந்த நோக்கில் மேற்கண்ட பகுதியில் உள்ள குறளின் பொருளை எண்ணிப் பாருங்கள்.
3.கேடும் அறமும்
பிற உயிர்களுக்கு எத்தகைய சூழலிலும் தீங்கு விளைவிக்கக் கூடாது என்ற கொள்கை வள்ளுவருக்கு உண்டு. ‘புலால் உண்ணாமை’ என்ற அதிகாரம் அமைத்ததற்கு அடிப்படை வள்ளுவரின் இத்தகைய உணர்வே என்பர். இந்த இயல்பைச் சுட்டிக்காட்டி, இவரைச் சமண சமயத்தைச் சார்ந்தவர் என்று கூறுவதும் உண்டு.
பிறருக்குக் கேட்டைத் தருகின்ற தீமையான செயல்களை, ஒருவன் மறந்தும் மனத்தளவில் கூட எண்ணக் கூடாது. அவ்வாறு எண்ணினால், அவனுக்குக் கேடு வருமாறு அறக்கடவுள் எண்ணும் என்று எச்சரிக்கிறார் வள்ளுவர்.
ஒருவனது எண்ணமே, அவனது செயலுக்குக் காரணமாக அமையும். நல்லதை எண்ணினால் நல்ல செயல்களைச் செய்வான். தீயவற்றை எண்ணுபவன் தீமையையே செய்வான். எனவே, ஒருவன் தன் மறதியில் கூட தீயவற்றை எண்ணக்கூடாது என்று குறிப்பிடுகிறார் வள்ளுவர். ஒருவனது எண்ணமே ஒருவனை அழித்துவிடும். ‘மனசாட்சி படி நட’ ‘மனசாட்சி அதற்கு இடம் கொடுக்கவில்லை’ ‘இவனுக்கு மனசாட்சியே இல்லை’ என்று அடிக்கடி மனசாட்சியைப் பற்றி நம் அன்றாட வாழ்க்கையில் குறிப்பிடுகின்றோம். இதற்கு என்ன காரணம்? நம் மனம் நடுநிலைமையானது, அறவயப்பட்டது. நன்மை எது தீயது எது என்பதை அறியும் ஆற்றல் வாய்ந்த ஒன்று. அதற்கு மாறுபட்டு நடக்கின்ற பொழுதுதான் அடிக்கடி மனசாட்சியைப் பற்றிக் குறிப்பிடுகின்றோம். இந்த மனசாட்சியையே, வள்ளுவர் அறம் என்றும் அறக்கடவுள் என்றும் சுட்டுகிறார்.
அறவயப்பட்ட மனத்திற்கு மாறுபாடான ஒன்றை, அறத்திற்குப் புறம்பான ஒரு செயலை ஒருவன் செய்வானானால், அவன் மனசாட்சியே அவனைத் தண்டிக்கும். மனம் நம் உள் உணர்வுகளை வெளிப்படுத்தும். நம் செயல்களையும் அடிக்கடி நினைத்துக் கொள்ளும்.
நம்மை முழுமையாக நம்பி இருந்த நண்பனுக்குத் துரோகம் செய்தால், அந்தத் துரோகச் செயல் அடிக்கடி நம் மனக் கண் முன்னால் வந்து நம்மைத் துன்புறுத்தும். அதை மறக்க பலமுறை முயன்றாலும் நம்மால் அதை மறக்க முடியாது நெஞ்சில் ஒரு முள்ளாகக் குத்திக் கொண்டே இருக்கும். நம் மன நிலையே நமக்கு நரகமாக அமையும்.
தன் செயலுக்குத் தண்டனை அனுபவிக்க வேறு எங்கும் செல்ல வேண்டியதில்லை. அவன் மனமே அவனுக்குத் தண்டனை வழங்குகிறது. எனவேதான் வள்ளுவர் மறந்தும் பிறருக்குத் தீங்கு நினைக்காதே, அவ்வாறு நினைத்தால், அறவயப்பட்ட உன் மனசாட்சி உனக்குத் தீங்கு கொடுக்கும் என்று எச்சரிக்கிறார்.
மனசாட்சியின் உருவில் அறக்கடவுள் அமைந்துள்ளது என்பதுவும் வள்ளுவரின் இறைமைக் கோட்பாட்டில் ஒன்று.
சிலப்பதிகாரத்தில் ஆய்ச்சியர் குரவை என்னும் காதை திருமால் வழிபாட்டை எடுத்துரைக்கிறது. குன்றக்குரவை முருக வழிபாட்டைப் பேசுகிறது. வேட்டுவவரி கொற்றவை வழிபாட்டைச் சிறப்பிக்கிறது. மாதவி, மணிமேகலை துறவு மூலம் பௌத்தக்கோட்பாடுகள் சிறப்பிக்கப்படுகின்றன. இவை தவிர இந்திரவிகாரம், மணிவண்ணன் கோட்டம், இலகொளிச் சிலாதலம், நிக்கந்தக் கோட்டம், நிலாக்கோட்டம், ஊர்க்கோட்டம் எனப் பல கோவில்கள் இருந்ததைச் சிலம்பு சுட்டுகிறது.
பிறவா யாக்கைப் பெரியோன்
இந்திரவிழவூர் எடுத்தகாதையில்,
”பிறவா யாக்கைப் பெரியோன்” (170-வது வரி)
என்று சிவனைச் சிலப்பதிகாரம் குறிக்கிறது. இதற்கு அரும்பதவுரையாசிரியர்,
‘‘பிறவா யாக்கை – ஒருதாய் வயிற்றில் கருவாகி உருவாகி ஏனை உயிரினங்கள் பிறக்குமாறு போலப் பிறவாத உடம்பு. அஃதாவது யாதானுமொரு காரணம்பற்றி நினைப்பளவிலே தானே தனக்குத் தோற்றுவித்துக் கொள்ளும் உடம்பு. இத்தகைய உடம்பினைச் சைவசமயத்தவர் உருவத்திருமேனி என்பர். இதனை,
‘‘குறித்ததொன் றாக மாட்டாக் குறைவிலன் ஆக லானும் நெறிப்பட நிறைந்த ஞானத் தொழிலுடை நிலைமை யானும் வெறுப்பொடு விருப்புத் தன்பால் மேவுதல் இலாமை யாலும் நிறுத்திடும் நினைந்த மேனி நின்மலன் அருளி னாலே’’
மற்றும் திருமால் முதலிய கடவுளர் தாயர் வயிற்றில் கருவிருந்து யாக்கை கோடலான் திருவருளாலே நினைந்தவுடன் திருமேனி கொள்பவன் ஆதலிற் பிறவா யாக்கைப் பெரியோன் என்றார். மேலும், இவனே முழுமுதல்வன் என்பதுபற்றிப் பெரியோன் என்றும் விதந்தார். மகாதேவன் என அரும்பதவுரையாசிரியர் கூறியதும், அடியார்க்கு நல்லார் இறைவன் என்றதூஉம் இக்கருத்துடையனவே யாகும்.
சிவந்த சடையினை உடைய சிவபெருமான் திருவருளினாலே வஞ்சிப்பதி விளங்குமாறு உதித்த சேரன் என்று சேரன் செங்குட்டுவனை,
‘‘செஞ்சடை வானவன் அருளின் விளங்க
வஞ்சித் தோன்றிய வானவன்’’ (கால்கோள்காதை: 98-99)
என்ற வரிகள் தெளிவாக உணர்த்துகின்றன.
சிவ வழிபாடு
சிவ வழிபாடு என்பது சிவநெறி ஆகும். இதனைச் சைவநெறி என்றும் கூறலாம். சைவம் என்ற தொடர் சிவனோடு தொடர்புடையது என்னும் பொருளைத் தரும். ”சைவம் சிவனுடன் சம்பந்தமாவது” (திருமந்திரம், 1486) என்று திருமூலர் கூறுகிறார். எனவேதான் சிவநெறியை சைவநெறி என்றும் சைவ சமயம் என்றும் சுருக்கமாகச் சைவம் என்றும் குறிப்பிடுகிறோம்.
சேரன் செங்குட்டுவன் வடநாட்டுப் படையெடுப்பை மேற்கொண்டு புறப்படுகிறான். எல்லாப் பணிகளையும் முடித்தபிறகு வஞ்சி மாநகரில் எழுந்தருளியுள்ள சிவன் கோயிலுக்குச் சென்று யாருக்கும் வணங்காத தன் முடியைத் தாழ்த்தி வணங்கிவிட்டு யானைமேல் ஏறுகிறான். அந்த நிலையில் ஆடகமாடத்து அறிதுயில் அமர்ந்த திருமாலை வழிபடவேண்டும் என்று அவன் நினைக்கவில்லை.
யானைமேல் ஏறிவிட்ட பிறகு திருமால் கோயில் பிரசாதத்தைச் சிலர் ஏந்தி வருகின்றனர். அதைப் பெற்றுக் கொண்ட அவன் சிவபெருமானுடைய திருவடிகளின் அடையாளமான வில்வத்தைத் தன் உச்சந்தலையில் தரித்திருப்பதால் திருமால் பிரசாதத்தை வாங்கித் தன் தோளில் தரித்துக் கொண்டான் என்பதை,
‘‘நிலவுக்கதிர் முடித்த நீளிருஞ் சென்னி
உலகுபொதி யுருவத் துயர்ந்தோன் சேவடி
மறஞ்சேர் வஞ்சி மாலையொடு புனைந்து
இறைஞ்சாச் சென்னி இறைஞ்சி வலங்கொண்டு’’
(கால்கோள்காதை: 54-57 )
—————————————————————————
—————————————————————————
கடக்களிறு யானைப் பிடர்த்தலை யேறினன்
குடக்கோக் குட்டுவன் கொற்றங் கொள்கென
ஆடக மாடத் தறிதுயிலமர்ந்தோன்
சேடங்கொண்டு சிலர்நின் றேத்தத்
தெண்ணீர் கரந்த செஞ்சடைக் கடவுள்
வண்ணச் சேவடி மணிமுடி வைத்தலின்
ஆங்கது வாங்கி யணிமணிப் புயத்துத்
தாங்கினனாகி—–’’ (கால்கோள்காதை, 60-67)
என்று இளங்கோவடிகள் குறிப்பிடுகின்றார். இதில் சேரன் செங்குட்டுவன் சிறந்த சிவபக்தனாக விளங்குவதையும் அவனது சிவவழிபாடு குறித்தும் ஆசிரியர் தெளிவுறுத்தியிருப்பது குறிப்பிடத்தக்கது.
இதில் சேரன் சிவபெருமான் கோயிலுக்குச் சென்று வழிபட்டுவிட்டு, யானைமேல் ஏறினான் என்றும் மட்டும் இளங்கோ பாடியிருப்பின் அது பொருத்தமுடையதாக இருந்திருக்கும். திருமால் கோயிலுக்கு அரசன் செல்லவில்லை என்பதே அவன் திருமால் வழிபாட்டில் நாட்டம் செலுத்தவில்லை என்பதை அறிவிக்கின்றது. அவ்வாறு இருந்தும் திருமால் பிரசாதத்தை ஒரு சிலர் கொண்டு சென்று யானை மேல் இருப்பவனுக்குக் கொடுத்தார்கள் என்று கூறாது நீட்டினார்கள் வாங்கிக் கொண்டான் என்று கூறுவது ஏன் என்பது சிந்தித்தற்குரியதாகும்.
அதோடு மட்டுமல்லாது சிவபெருமான் திருவடி தலைமேல் இருப்பதால் இப்பிரசாதத்தை வாங்கிக் தோளில் தரித்துக் கொண்டான் என்று ஆசிரியர் பாடுவது சிவபெருமானின் சிறப்பை மிகுத்துக் கூறவேண்டும் என்பதற்காகவும், ஆசிரியருடைய ஆழ்மனத்தில் சிவபெருமான் மீதிருந்த உள்ளார்ந்த சிறப்பை எடுத்துக் கூறுவதற்கும் இதனை ஒரு வாய்ப்பாகப் பயன்படுத்திக் கொண்டார் எனலாம்.
பெரியோன் தந்த திருநுதல்
சிலப்பதிகாரம் சிவபெருமானை பிறவா யாக்கைப் பெரியோன் என்றும், செஞ்சடை வானவன் என்று குறிப்பிடுகின்றது. மனையறம் படுத்த காதையில் கண்ணகியை வருணிக்கும் கோவலன் கண்ணகிக்கு,
‘‘குழவித் திங்கள் இமையவர் ஏத்த அழகொடு முடித்த அருமைத்து ஆயினும் உரிதின் நின்னோடு உடன்பிறப்பு உண்மையின்
பெரியோன் தருக திருநுதல் ஆகஎன,’’ (39-41வரிகள்)
எனச் சிவபெருமான் திங்களை நுதலாகக் கொடுத்ததாகப் பாராட்டுகின்றான். இக்காதையில் பெரியோன் என்று சிவபெருமான் குறிக்கப்படுவது நோக்கத்தக்கது.
திரிபுரம் எரித்ததும் கொடுகொட்டிக் கூத்து ஆடியதும்
தேவர்கள் தமக்கின்னல் செய்கின்ற அசுரருடைய முப்புரமும் எரியும்படி வேண்டினர். சிவபெருமான் அவர்களுடைய வேண்டுகோளுக்கு இணங்கி, வடவைத் தீயை நுனியிலுடைய பெரிய அம்பில் வைத்து ஏவி அசுரரை அழித்து முடித்தமையாலே; (அசுரர் வெந்து விழுந்தனர். இதனைக் கண்டு பைரவி ஆடியதனால் பாரதியரங்கம் என்னும் பெயர் பெற்ற சுடுகாட்டின் கண்; தனது ஒரு கூற்றிலே நின்று உமையன்னை பாணிதூக்குச் சீர் என்னும் தாளங்களைச் செலுத்த; தேவர்கள் யாரினும் உயர்ந்த தேவனாகிய இறைவன்; வெற்றிக் களிப்பாலே ஆடியருளிய கொடுகொட்டி என்னும் ஆடல் ஆகும். இதனை,
‘‘சீர்இயல் பொலிய நீர்அல நீங்கப் பாரதி ஆடிய பாரதி அரங்கத்துத் திரிபுரம் எரியத் தேவர் வேண்ட
என்ற கடலாடுகாதையில் சிலப்பதிகாரம் குறிப்பிடுகின்றது. திரிபுரம் தீமடுத்தெரியக் கண்டு இரங்காது கைகொட்டி நின்று ஆடிய கொடுமையுடைத்தாகலின் கொடுங்கொட்டி என்பது பெயராயிற்று. கொடுங்கொட்டி கொடுகொட்டி என விகாரமெய்தி நின்றது அரும்பத உரையாசிரியர் குறிப்பிடுவது சிறப்பிற்குரியதாக அமைந்துள்ளது.
சிவன் கொடுகொட்டிக் கூத்தினை ஆடிய முறையினை,
‘‘திரு நிலைச் சேவடிச் சிலம்பு வாய் புலம்பவும், பரிதரு செங் கையில் படு பறை ஆர்ப்பவும், செங் கண் ஆயிரம் திருக் குறிப்பு அருளவும், செஞ் சடை சென்று திசைமுகம் அலம்பவும்;
பாடகம் பதையாது, சூடகம் துளங்காது, மேகலை ஒலியாது, மென் முலை அசையாது, வார் குழை ஆடாது, மணிக்குழல் அவிழாது, உமையவள் ஒரு திறன் ஆக, ஓங்கிய இமையவன் ஆடிய கொட்டிச் சேதம்’’ (நடுகற்காதை,67-75வரிகள்)
என்று இளங்கோவடிகள் குறிப்பிடுகின்றார்.
அழகு நிலைபெற்றிருக்கின்ற சிவந்த அடியின்கண் அணிந்துள்ள சிலம்பு வாய்விட்டு முரலாநிற்பவும்; சிவந்த கையிலே ஏந்திய ஒலிபடுகின்ற துடிமுழங்கவும்; சிவந்த கண்கள் எண்ணிறந்த கருத்துகளை வெளியிட்டருளவும் சிவந்த சடை பரந்து சென்று எட்டுத் திசைகளையும் துழாவவும்; தனது ஒரு கூற்றிலமைந்த தேவியின் உருவின்கண் உள்ள சிலம்பு அசையாமலும் வளையல் குலுங்காமலும் மேகலை ஒலியாமலும் மெல்லிய முலை அசையாமலும் நீண்ட காதணியாகிய தோடு ஆடாமலும் நீலமணிபோன்ற நிறமுடைய கூந்தல் அவிழாமலும் இறைவி தனது ஒரு கூற்றிலே அமைந்திருப்ப; ஏனைக் கடவுளரினும் உயர்ந்த கடவுளாகிய பிறவா யாக்கையின் பெரியோன் ஆடி யருனிய கொட்டிச்சேதம் என்னும் கூத்தின் ஆடிக் காட்டுதலாலே கூத்தச் சாக்கையன் அரசனிடம் பரிசில் பெற்று மகிழ்வுடன் சென்றான் என்று கொடிகொட்டிக் கூத்து ஆடிய முறை பற்றிய செய்தியானது நடுகற்காதையில் விரிவாகக் கூறப்பட்டுள்ளது.
சிவனின் மகன் முருகன்
சிவனின் மகன் முருகன். இதனை,
‘‘கயிலை நல் மலை இறை மகனை! நின் மதி நுதல் மயில் இயல் மடவரல் மலையர்-தம் மகளார், செயலைய மலர் புரை திருவடி தொழுதேம் அயல்-மணம் ஒழி; அருள், அவர் மணம் எனவே’’
(வஞ்சிக்காண்டம், குன்றக்குரவை, 12 – 15 வரிகள்)
என்ற வரிகள் குறிப்பிடுகின்றன. இதில் கயிலாயம் என்னும் அழகிய மலையின்கண் எழுந்தருளியிருக்கின்ற இறைவனுடைய மகனாகிய முருகப் பெருமானே என்று குறிப்பிடப்படுவதிலிருந்து இதனை அறியலாம். ஆனால் “செங்குட்டுவன் சைவன்” என்பதை இளங்கோவடிகளே கூறியுள்ளமையைச் சுட்டிச் செங்குட்டுவன் தம்பியாகிய இளங்கோவடிகளும் சைவரே என்று தோன்றுகிறது என்பார் ஒளவை சு.துரைசாமிப்பிள்ளை.
கொற்றவையும் உமையம்மையும்
வேட்டுவ வரியில் கொற்றவையை தனிப்பட்ட சொற்களால் இளங்கோ புகழ்வதும், உமையம்மையைப் புகழ்வது போன்று உள்ளது. காடுகாண் காதையில் வசந்தமாலை வடிவில் வந்த சிறுதெய்வத்தை வெருட்டக் கோவலன் பாய்கலைப் பாவை மந்திரத்தைப் பயன்படுத்துகின்றான். இங்கு இளங்கோ குறிப்பிடும் பாய்கலைப்பாலை கொற்றவையாகும். சங்க இலக்கியங்களில் வரும் காடுகிழாள் என்றும் கொற்றவை என்றும் வரும் தெய்வம் போரில் ஈடுபடுபவர்க்கு வெற்றி வாய்ப்புத் தரும் தெய்வமாகவே பேசப்படுகின்றது என்பது குறிப்பிடத்தக்கது.
இளங்கோவடிகள் குறிக்கும் கொற்றவை சிவபெருமானின் இடப்பக்கம் உறைபவளாகவும், உமையம்மையின் இலக்கணங்களைப் பெற்றவளாகவும் பேசப்படுவது நோக்கத்தக்கது. அடிகள் கூறும் மதுராபதித்தெய்வமும் உமையொரு பாக வடிவத்தையே வருணிப்பதாக உள்ளது. இவை அனைத்தும் சைவ சமய வழிபாட்டின் கூறுகளாகக் கொள்ளலாம்.
சிலம்பில் செஞ்சடைக்கடவுளான சிவபெருமானும் செஞ்சடை வானவன், பிறவாயாக்கைப் பெரியோன், நிலவுக்கதிர் முடித்த நீலிருஞ்சென்னி, உலகுபொதி உருவத்து உயர்ந்தோன் என்றெல்லாம் குறிக்கப்பட்டு அவன் ஆடுகின்ற கொடுகொட்டி, கூத்து வகைகளும், மதியினைப் சூடியமை நஞ்சுண்டகண்டம் கருத்தமை, சூலாயுதம் ஏந்தியமை போன்ற தோற்றப் பொலிவுகளும் சிவபெருமானைப் பற்றிய குறிப்புகளாகச் சிலம்பில் காணப்படுகின்றன. சேரன் செங்குட்டுவன், மிகச் சிறந்த சைவ பக்தனாக விளங்கியது சிறப்பிற்குரிய ஒன்றாகும். சைவ சமயத்தின் வினைக் கோட்பாடும் சிலப்பதிகாரத்தில் இடம்பெற்றிருப்பது நோக்கத்தக்கது.