மதுரையில் இருந்து 20 கி.மீ தூரத்தில் உள்ள ஒரு அழகிய கிராமம்தான் அரிட்டாபட்டி.
ஒவ்வொரு முறையும் அரிட்டாபட்டி போகும்போது எனக்கு “ என்ன வளம் இல்லை இந்தத் திரு நாட்டில் ? ஏன் கையை ஏந்த வேண்டும் வெளி நாட்டில் ? “ என்ற மருதகாசியின் பாடல்வரிகள்தான் ஞாபகத்திற்கு வரும்.
அந்த அளவிற்கு அழகை வாரி இறைத்திருக்கிறாள் இயற்கை அன்னை.
திரும்பிய பக்கமெல்லாம், விவசாய நிலங்கள், குளங்கள் , கன்மாய், குன்றுகள், நீரோடைகள், 250 க்கும் மேற்பட்ட பறவை இனங்கள் என்று வஞ்சகமில்லாமல் இயற்கை தாறுமாறாக இறைந்திருக்கிறது இந்த அழகிய கிராமத்தில்.
அரிட்டாபட்டியைச் சுற்றி ஒரு சிறிய மலைத் தொடர் உள்ளது. அதில் கழிஞ்சமலை, நாட்டார் மலை, ராமாயி மலை, கழுகுமலை, தேன்கூடு மலை, கூகை கத்தி மலை என்று ஆறு சிறிய மலைகள் உள்ளன. ஆறும் கிரானைட் சுரங்கங்கள்.
சில வருடங்களுக்கு முன்னர், இந்த கிரானைட் சுரங்கத்தைச் சுரண்ட ஒரு கும்பல் வந்துள்ளது. அதை இந்த ஊர் மக்களே போராட்டம் நடத்தி விரட்டியுள்ளனர்.
இங்கு லகடு வல்லூறு, ராஜாளி கழுகு, சிவப்பு வல்லூறு, செந்தழை வல்லூறு, குட்டைக் கால் பாம்பு திண்ணிக் கழுகு , தேன் பருந்து , கொம்பன் ஆந்தை , கரும்பருந்து என்று 160 க்கும் மேற்பட்ட பறவையினங்கலும், புள்ளி மான், மினா மான், தேவாங்கு, மலைப் பாம்பு என்று மற்ற உயிரினங்களும் இருக்கின்றன.
கானுயிர் புகைப்படக் கலைஞர்களுக்கு செம விருந்து இந்த ஊர்.
சைவத்தின் ஒரு பிரிவான பாசுவதத்தைத் தோற்றுவித்த லகுலீசருக்கு இங்கு ஒரு குடைவரைக் கோயில் உள்ளது.
இது கி.பி. 7 அல்லது 8ம் நூற்றாண்டில் முற்காலப் பாண்டியரால் செய்விக்கப்பட்டது என்று தொல்லியல் துறையால் ஒரு போர்டு வைக்கப்பட்டிருக்கிறது. இன்றி இந்த இடத்தை “இடைச்சி மண்டபம்” என்கிறார்கள் கிராமத்து மக்கள்.
18 சித்தர்களில் ஒருவரான ராமதேவர் தனது கடைசி காலத்தில் இந்த அரிட்டாபட்டியில்தான் வந்து தவம் செய்ததாக கூறப்படுகிறது.
கோயிலுக்கு நேர் எதிரில் உள்ள ஒரு குன்றின் மீது உட்கார்ந்தால் ஈசனின் சிலையை தரிசனம் செய்ய முடியும். அங்குதான் அவர் அமர்ந்து தவம் செய்ததாத இந்த ஊர் மக்கள் நம்புகிறார்கள்
ஆனால், அவர் ஜீவ சமாதி அடைந்தது இங்கில்லை. அழகர்மலை என்று சிலரும், திருவண்ணாமலை என்று சிலரும் கூறுகிறார்கள். உண்மை தெரியவில்லை.
சித்தர் மலை, சதுரகிரி மலை, பர்வத மலை போலவே இங்கும் சித்தர் நடமாட்டம் இருப்பதாக இந்த கிராம மக்கள் உறுதியாக நம்புகிறார்கள்.
ஊரின் இன்னொரு பக்கத்தில், ஒரு பெரிய குகைத் தளமும், அதன் முகப்பில் ஒரு நீண்ட நீர் வடி விளிம்பும் உள்ளன. அந்த குகை விளிம்பின் கீழ்ப்புறம் ஒன்றும், மேல்புறம் ஒன்றுமாக இரண்டு தமிழிக் கல்வெட்டுக்கள் உள்ளன. குகையின் உள்ளே சில ஆசீவகப் படுக்கைகள் உள்ள.
நீர் வடி வளிம்பின் கீழே உள்ள முதல் தமிழிக் கல்வெட்டு வாசகம்:
நெல்வெளியைச் சேர்ந்த சிழிவன் அதினன் வெளியன் என்பவன் இந்தக் குகைத் தளத்தை செய்து கொடுத்துள்ளான் என்பது பொருள்.
இதில் உள்ள “சிழிவன்” என்பது செழியன் என்னும் பாண்டியனின் குடிப் பெயர் என்கிறது நமது தொல்லியல் துறை. அது உண்மையாய் இருக்கும் பட்சத்தில் இது ஒரு சங்க காலப் பாண்டிய மன்னன் செய்வித்த குகைத் தளம். இதன் காலம் கி.மு.இரண்டாம் நூற்றாண்டு.
அதேபோல், இதில் உள்ள நெல்வெளி என்னும் ஊர் இன்றைய திருநெல்வேலியாக இருப்பதற்கு வாய்ப்பு இருக்கிறது என்பது நமது தொல்லியல் அறிஞர்களின் கணிப்பு.
நீர் வடி விளிம்பின் மேலாக இரண்டாவது கல்வெட்டு மிகவும் அழிந்த நிலையில் உள்ளது. வாசிப்பது மிகவும் கடினம்.
அதன் வாசகங்கள்:
இலஞ்சிய் எளம் பேரா அதன் மகன் எமயவன்
இவ்முழ உகைய் கொடுபிதவன்
அர்த்தம்: இலஞ்சி என்னும் ஊரைச் சேர்ந்த இளம்பேராதன் மகன் இமயவன் என்பவன் இந்த குகைத் தளத்தை செய்து கொடுத்தான்.
இதில் குகைத்தளம் என்னும் அர்த்தத்தில் வரும் “முழாகை” என்னும் சொல் “முழாகை” என்று கூட்டெழுத்தாக இல்லாமல் “முழ உகைய்” என்று பிரித்து எழுதப்பட்டிருப்பதால் இது முந்தைய கல்வெட்டை விடக் காலத்தால் முற்பட்டதாக இருக்கலாம் என்று கருதப்படுகிறது. கி.மு.3 அல்லது 4 ம் நூற்றாண்டாக இருப்பதற்கு வாய்ப்புகள் உள்ளன.
இந்தக் குகைத்தளத்திலிருந்து சில அடிகள் தூரத்தில் மகாவீரரின் ஒரு புடைப்புச் சிற்பமும், அதன் கீழ் ஒரு வட்டெழுத்துக் கல்வெட்டும் உள்ளன. இது கி.பி.9 அல்லது 10ம் நூற்றாண்டில் ஜெயினத் துறவி அச்சணந்தி முனிவரால் செய்விக்கப்பட்டது.
திருப்பிணையன்மலையில் இருந்த பொற்கோட்டுக்கரணத்தார் பெயரால் செய்யப்பட்ட இத்திருமேனிக்குப் பாதிரிக்குடி ஊரவையினர் காவலாக இருந்துள்ள செய்தியை இந்தக் கல்வெட்டு தெரிவிக்கிறது.
இதில் குறிப்பிடப்படும் பாதிரிக்குடிதான் இன்றைக்கு குன்றக்குடிக்கு அருகில் உள்ள பாதரக்குடியாக இருக்க வேண்டும்.
மற்ற குகைத் தளங்களில் உள்ளது போலவே, இங்கும் மருந்தரைக்கும் குழிகள் சிலவற்றை இன்றும் காண முடிகிறது. இதிலிருந்து, இங்குள்ள துறவிகள் மருத்துவ சேவைகளும் செய்துள்ளது தெளிவாகிறது.
டிப்ஸ் :
மதுரையிலிருந்து மேலூர் செல்லும் ரோட்டில் வரும் முதல் டோல்கேட் தாண்டி ஒரு ஐந்தாறு கிலோமீட்டரில்நரசிங்கம்பட்டி என்னும் ஊர் ஒன்று வரும். அந்த இடத்தில், இடது கைப்பக்கம் திரும்பி, ஒரு நாலு கிலோ மீட்டர் தூரத்தில் வரும் ஊர்தான் அரிட்டாபட்டி.
சிறிய கிராமம். தண்ணீர், பிஸ்கெட், டீ கிடைக்கும். சாப்பாட்டிற்கு, நீங்கள் கடந்து சென்ற டோல்கேட்டிற்குத்தான் திரும்ப வர வேண்டும். அங்கு டெம்பிள் சிட்டி ஹோட்டல் ஒன்றும், A2B ஹோட்டல் ஒன்றும் உள்ளன.
உங்களுக்கு அங்கு உதவி ஏதும் வேண்டுமென்றால் அரிட்டாபட்டியைச் சேர்ந்த திரு.அழகு ரவிச்சந்திரன் என்னும் சமூக ஆர்வலரை அணுகவும். மிகவும் இனிய மனிதர். அவர் சமூக ஆர்வலர் மட்டுமல்லர், பறவை ரசிகரும் கூட. உங்கள் கூடவே வந்து வித விதமான பறவைகளையும், மேற்சொன்ன வரலாற்றுத் தலங்களையும் காட்டுவார்.
அவருடைய எண் : 9047270933
என்ன யோசிக்கிறீங்க ? கிளம்பி வாங்க மக்கா.
வெ.பாலமுரளி
நன்றி : தமிழ்நாடு தொல்லியல் துறை வெளியிட்ட “ தமிழ் பிராமி கல்வெட்டுக்கள்”