மதுரையிலிருந்து சரியாக 45 கி.மீ. தூரத்தில், மேலூரிலிருந்து திருப்பத்தூர் செல்லும் சாலையில் இருக்கும் ஒரு சிறு கிராமம்தான் கீழவளவு.
கீழவளவு கிராமத்திற்கு சரியாக மூன்று கி.மீ.தூரத்திறு முன்னால் இடது கைப்பக்கம் ஒரு சிறு குன்றும் நிறைய பெரிய பெரிய பாறைகளும் இருக்கும் இடத்தில்தான் ஒரு சிறிய வரலாற்றுக் குவியல் உள்ளது.
சில மாதத்திற்கு முன்னர் வரை நமது புனே ஜெயின் சங்கத்தின் மஞ்சள் போர்டு மெயின் ரோட்டில் இருந்தது. ஆனால், சமீபத்தில் நடந்த ரோடு வேலையின் காரணமாக அந்த போர்டு தற்காலிகமாக எடுக்கப்பட்டு குன்றுக்குச் செல்லும் சிறு சாலையில் வைக்கப்பட்டுள்ளது.
மெயின் ரோட்டிலிருந்து இடது கைப்பக்கம் திரும்பி ஒரு நூறு மீட்டர் தூரம் நடந்தால் அந்தக் குன்றின் அடிவாரத்தை அடைந்து விடலாம்.
குன்றின் இடது புறத்தில் அடிவாரத்தின் சம தளத்திலேயே பெரிய பெரிய பாறைகள் உள்ளன. அதன் ஊடே நடந்தால் நிறைய கற்படுக்கைகளைக் காண முடிகிறது. ஆனால், அங்கே கல்வெட்டோ, பாறை ஓவியங்களோ ஏதுமில்லை. அதாவது...எங்களால் ( என்னாலும் தம்பி அனந்தகுமரனாலும்) ஏதும் கண்டு பிடிக்க இயலவில்லை.
திரும்ப வந்து குன்றின் மேலே ஏற வேண்டும். ஏறுவதற்கு ஆங்காங்கே படிக்கட்டுகள் செதுக்கப்பட்டிருப்பதால், ஒரு ஐந்து நிமிடத்தில் குன்றின் மேலே ஏறி விடலாம். சிறிய குன்றுதான்.
குன்றின் மீது பிரமாண்டமான பாறை ஒன்று தன்னுடைய சிறிய அடித்தளத்தின் மீது நின்று கொண்டிருப்பதைக் காண முடியும். அதன் முகப்பில் மிகவும் உயரமான இரண்டு தூண்கள் உள்ளன. இவை சமீபத்தில் நமது தொல்லியல் துறை இந்த இடத்தைப் பாதுகாப்பதற்காக ஏதோ செய்ய நினைத்து பாதியிலேயே நிறுத்தி விட்டது போல் தெரிகிறது.
இந்தத் தூணிற்கு நேர் பின்னால்தான் கி.மு. இரண்டாம் நூற்றாண்டைச் சேர்ந்த ஒரு தமிழிக் கல்வெட்டு உள்ளது. இது கி.மு. மூன்று அல்லது கி.மு.நான்காம் நூற்றாண்டைச் சேர்ந்ததாகவும் இருப்பதற்கு வாய்ப்புகள் உள்ளன.
மிகவும் ஆச்சரியமாக இந்தக் கல்வெட்டு வலது பக்கத்திலிருந்து இடது பக்கமாக பொறிக்கப்பட்டுள்ளது. அதிலும், சில எழுத்துக்கள் தலைகீழாக வெட்டப்பட்டுள்ளது. இதன் காரணம் புரியவில்லை. குன்றக்குடி கல்வெட்டும் இதேபோல்தான் உள்ளது.
அதை நேராக்கி, இடதிலிருந்து வலதாக மாற்றி வைத்துப் படித்தால்
“ உபச அன் தொண்டில வோன்கொடு பளிஇ” என்று உள்ளது.
இதற்கு “ உபசன் தொண்டி இல்லவோன் கொடுத்த பள்ளி “ என்று நமது தொல்லியல் துறை விளக்கம் கொடுத்துள்ளது.
உபசன் என்றால் சமய ஆசிரியர் என்றும், பளிஇ என்றால் பள்ளி என்றும் உள் விளக்கமும் கொடுத்துள்ளது. இது மறு ஆய்வுக்குட்பட்டது. “பளிஇ” என்ற சொல்லை பாளி அல்லது பாழி என்றும் எடுத்துக் கொள்ளலாம். அப்படி எடுத்துக் கொண்டால் இது ஆசீவகர்களின் இருப்பிடம் என்றாகிவிடும். உபசன் என்ற சொல்லும் பல அர்த்தங்களுடையது.
இந்தத் தமிழிக் கல்வெட்டுக்கு சற்று மேலே மகாவீரரின் இரண்டு புடைப்புச் சிற்பங்களும் உள்ளன. இவை கி.பி. ஒன்பது அல்லது கி.பி. பத்தாம் நூற்றாண்டில் ஜெயின சமயத்தைச் சேர்ந்த அச்சணந்தி முனிவரால் செய்விக்கப்பட்டிருக்கிறது.
பாறையின் அடிப்பகுதியில் ஏராளமான கற்படுக்கைகளும், நீர் வடிகால்களும் மிகவும் நேர்த்தியாகவும், வழுவழுப்பாகவும் செதுக்கப்பட்டுள்ளன. உள்ளே செல்லச் செல்ல தவழ்ந்துதான் போக வேண்டும். கடைசியில் ஒரு இடத்தில் மட்டும் ஒரு ஆள் உட்காரும் அளவிற்கு இடைவெளி உள்ளது.
( நான் உள்ளே சென்று புகைப்படம் எடுப்பதற்காக தவழ்ந்து, உருண்டு உள்ளே சென்றால், ஒரு ஆள், மேல் சட்டையேதும் போடாமல் தியானத்தில் இருப்பதைக் கண்டு ஒரு வினாடி ‘பக்” கென்று போய் விட்டது. லேசாக வியர்த்து ஊற்ற, அதைக் காண்பித்துக் கொள்ளாமல் அவரை ஒரே ஒரு படம் மட்டும் எடுத்து விட்டு விருட்டென்று வெளியில் வந்து விட்டேன். ஹி...ஹி..ஹி...).
அதன் இடது கைப்பக்கத்தில் ஒரு நாலைந்து படிக்கட்டுகள் தென்படும். அதில் ஏறிச் சென்றால், பாகுபலி, மகாவீரர் என்று நாலைந்து தீர்த்தங்கரர்களின் புடைப்புச் சிற்பங்கள் உள்ளன. இவையும் அச்சணந்தி முனிவரின் கைவண்ணம் – கி.பி. ஒன்பது அல்லது கி.பி. பத்தாம் நூற்றாண்டு. அதிலும், ஒரு தீர்த்தங்கரரைச் சுற்றி தீட்டிய வண்ணங்களை, ஆயிரம் ஆண்டுகளைக் கடந்து இன்றும் காண முடிவது அற்புதம்.
நான் மேலே சொன்ன இரண்டு தூண்களில் இருந்து நேரே ஒரு 100 அடி நடந்து சென்றால், குன்றின் ஒரு சரிவில் ஒரு பெரிய பாறை ஒன்று தொக்கிக் கொண்டு நிற்கிறது. அதன் மறுபுறத்தில் செங்காவி நிறத்தில் நிறைய குறியீடுகள் பாறை ஓவியங்களாகத் தீட்டப்பட்டுள்ளன.
இவற்றின் அர்த்தமும், காலமும் சரியாகத் தெரியவில்லை. இவை ஏதோ ஒரு சமயம் சார்ந்த ஆன்மீகக் குறியீடுகளாக இருக்க வேண்டும் என்கிறார், பாறை ஓவியங்களை ஆராய்ந்து வரும் நண்பர் பாலா பாரதி அவர்கள். அதன் படத்தை இத்துடன் இணைத்துள்ளேன்.
இந்தப் பாறைக்கும், தமிழிக் கல்வெட்டிற்கும் நடுவில் நாம் நடக்கும் பாதையில் சிறிதாக ஒரு கிரந்தக் கல்வெட்டும் உள்ளது. இதன் காலம் கி.பி. எட்டு அல்லது ஒன்பதாம் நூற்றாண்டாக இருக்க வேண்டும். அதன் அருகில் மருந்து அரைக்கும் குழி ஒன்றும் உள்ளது.
மொத்தத்தில் கீழவளவு வரலாற்று ஆர்வலர்களுக்கு அற்புதமான ஒரு இடம் என்பதில் எந்த சந்தேகமுமில்லை.
வெ.பாலமுரளி.
நன்றி: தமிழ் நாடு தொல்லியல் துறையின் " தமிழ் பிராமி கல்வெட்டுகள்"